Saturday, July 24, 2010

கோழிக்கறி குழம்பும் பிளஸ் ஒன்னும்...

பாராவின் பிளஸ் ஒன்னுக்கு நான் எழுதிய பின்னூட்டம் இது. 

என் அப்பாவுக்கு குடிப்பழக்கம் கிடையாது... எப்போதாவது என்னோட பெரியப்பா மிலிடரி சரக்கு கிடைச்சிருக்கு வெங்கிடசாமி, உங்க வீட்டுல கோழி அடிக்க சொல்லுங்க... சுள்ளுன்னு ஏத்திக்கிட்டு நல்லா தின்னுட்டு குப்புற படுத்து தூங்கலாம் என்பார்... அய்யய்யோ வேணாம் சாமி என்பார் அப்பா... பித்த உடம்புங்க எனக்கு ஒத்துக்காது... அட பரவாயில்லைங்க... குடிக்கலாம் இன்னைக்கு ஒரு நாளைக்கு தினமுமா குடிக்க போறோம்... ஒரு XXX ரம் பாட்டில் நம்ம மிலிடரி பெருமாள் கொண்டு வந்திருக்கார் , குதிரைக்கு ஊத்தறது சும்மா உடம்பெல்லாம் உலுக்கு எடுத்த மாதிரி சுகமா தூங்கலாம் என்று வற்புறுத்துவார்... அப்பா சந்தையில போய் நல்ல விடககோழியா பிடிச்சிட்டு வருவார்... குடிக்கிறாரோ இல்லையோ அப்பா நல்லா சாப்பிடுவார்...


புழக்கடையில உட்கார்ந்து என் அம்மாவும் பெரியம்மாவும், கோழியின் கால்களை பிடித்துக் கொண்டு அறுத்து, அதன் துடிப்பு அடங்கும் வரை காத்திருந்து, கோழியின் மயிறு பிடுங்குவார்கள்... மொத்தமா மழிக்கப்பட்ட கோழி தன் அடையாளங்களை இழந்து பரிதாபமாய் கிடக்கும்...லேசாய் துடிக்கும் இரப்பை பகுதியும் கொஞ்சம் கொஞ்சமாய் அடங்கும். உரித்த கோழியின் மேல் அரைத்த மஞ்சளை தடவி, பொறுக்கி எடுத்த காய்ஞ்ச சுள்ளிகளை எரித்து வாட்டுவார்கள்... கோழியின் உடம்பில் சிறு சிறு வெடிப்பு ஏற்பட்டு எண்ணெய் மாதிரி வழியும்... ஒரு விதமான மகோன்னதமான வாசம்அடிக்கும்...ஒரு பக்கம் பூண்டு உரித்துக் கொண்டும், சிறு வெங்காயம் உரித்து கொண்டும் நாங்களும் எங்கள் கிழவியும் கதை பேசிக் கொண்டிருப்போம், கிழவி எங்க பெரியப்பாவை திட்டி கொண்டிருப்பாள், உங்கப்பனையும் கெடுக்கறாரு இந்த பேங்க்காரரு... அவருக்கு தான் உடம்புக்கு ஆகாதுல்ல... சொல்லாகூடாதா என்பாள்... அந்த மனுஷன் கேட்கிற ஜாதியா என்ன... எனக்குன்னு பிடிச்சு கட்டி வச்சியே... குமாரி புருஷன மாதிரியே இருந்துட்டா எந்த பிரச்சினை இல்லை என்பாள் என் பெரியம்மா... என் அம்மாவுக்கு பெருமை தாங்காது... என்க்க உன் வீட்டுக்காரரு பாங்க்ல வேலை பார்க்காறு, கை நிறைய சம்பாதிக்கிறாரு... உனக்கென்னா. என்பாள் அம்மா...காய்ந்த மிளகாய் வத்தலையும், மல்லியையும் லேசா எண்ணெய் போடாம வறுத்து... மை போல அரைச்சு... தனியா எடுத்து வச்சுடுவா பின்னி... தேங்காய் அரைக்க, நான் தான் தேங்காய் உரிச்சு... நாரெல்லாம் பக்குவமா பிரிச்சு தரனும்... தேங்காய் உடைக்க ஆரம்பிப்பேன்... சத்தம் கேட்டாலே வந்துடுவாங்க... தம்பியும், ஜெயந்தியும்... தேங்காத்தண்ணி குடிக்க... உடைச்ச தேங்காயில சில்லு போட்டு, பின்னிக்கு குடுக்க அலுத்து கொண்டே அரிவாள் பின்னி... அவள் அம்மி குலவிய உருட்டுற அழகே தனிதான், அதிலும் அரைச்ச தேங்காய வழிக்கும் போது அவளோட லாவகம் வேற யாருக்கும் வராது...

இதுக்குள்ள சிவத்தம்மா, கோழி அறுக்கன்னு இருக்கிற அருவாமனைய எடுத்துட்டு கோழியின் எழும்ப நொறுக்காம துண்டு பொதுவா... கொஞ்சம் பெருசாவே போடுதே... கோழி ரொம்ப இளசா இருக்கு... எலும்பு நொறுங்கினா... குடிச்சிட்டு கண்ணு மண்ணு தெரியாம சாப்பிடும் உங்க அய்யா தொண்டையில மாட்டிக்க போகுது என்பாள் கிழவி...சரித்தா..என்பாள்..அடுக்களையில வச்சு அறுக்காம அங்கனகுழிக்கிட்ட வச்சு தான் அறுக்கணும்... கவிச்சு அடுக்களைக்குள்ள அறுக்கப்பிடாதாம்...

உரிச்ச வெள்ளைபூடை கொஞ்சம் நசபுசன்னு நகட்டிக்கா, கொஞ்சம் இஞ்சியைவும் தட்டிக்க தாயி... என்பாள் சின்ன மகளிடம் அவ்வளவு பிரியம், எனக்கும் திலகம் பின்னிய ரொம்ப பிடிக்கும், அவ்வளவு அழகா இருப்பா பின்னி.

மையா அறைச்சுபுடாதா... குழம்பு கெட்டி படாதமாதிரி ஆயிடும் என்பாள் கிழவி... கிழவியின் பக்குவம் அம்மா பெரியம்மாவின் கைகளில் மணக்கும்... எல்லா சமையலிலும்... நல்லெண்ணெய் விட்டு அரிந்து வைத்திருக்கும் சிறுவெங்காயத்தை போட்டு வதக்குவாள் அம்மா... நல்லெண்ணையும், வெங்காயத்தின் மனமும் கிறங்க வைக்கும் யாரையும்... இதுக்கிடையே மணிப்பய வந்து ஆச்சான்னு பெரியப்பா கேட்க சொன்னாரு என்பான்... கோழி அறுத்து வச்சிருக்கு பச்சைய திங்குறாரான்னு கேளு உங்கபெரியாப்பாவ...கோழி இன்னும் கூப்பிட்டு அடங்கலை அதுக்குள்ளா கொண்டான்ன எங்க போறது, பொறுக்க சொல்லு... என்றவுடன்... டவுசரை ஒரு கையில பிடிச்சிக்கிட்டே ஓடுவான்... மணிப்பய... அவனுக்கு அடுப்படி வேலையே பிடிக்காது...

வெங்காயம் வதங்கியதும் அரைச்ச மசாலாவையும், தட்டி வைத்துள்ள வெள்ளைப்பூடையும், இஞ்சியையும் ஒன்னா போட்டு, கொஞ்சம் தட்டி வச்ச மிளகையும், சீரகத்தையும் போட்டு கொதிக்க வைப்பாள் அம்மா... ஒரே ஒரு நாட்டு தக்காளி மாத்திரம் சேத்துக்குவாள் அம்மா... பெரியம்மாவுக்கு... மூக்கு விடைச்சிக்கிட்டு... குமாரி நல்லா வாசனையாத்தான் இருக்கு... சிவத்தம்மா ஆத்தா... கோழி வயத்துக்குள்ள ஆரஞ்சு கலருல.. முட்டை மாதிரி இருக்கே அத என்னத்த பண்றது என்பாள்... அடி கூறு கெட்டவளே அது தாண்டி ரெண்டு நாளைக்கப்புறமா வரபோற முட்டை... இது தெரியாத உனக்கு... எனக்கு அந்த முட்டை ரொம்ப பிடிக்கும்... அவ்வா அது எனக்கு வெந்தவுடனே குடு அவ்வா... இவ்வளவு வேலை செய்யிற எங்களுக்கு... உனக்கில்லாமையா... வாங்கிக்கோ... அவங்களுக்கு... கறிய அனுப்பிட்டு உனக்கு.. இதை கொடுத்துடறேன்... யாருக்கும் சொல்லக்கூடாது என்பாள் கிழவி...நல்லெண்ணையில் அறுத்த கோழி துண்டுகளை போட்டு கொஞ்சம் தனியா வதக்கி கொள்வாள் அம்மா, அப்பா தான் வாசனையா இருக்குமாம்... வதக்கின கோழி துண்டுகளை இப்போ கொதிக்கிற குழம்புல போட்டு மொத்தமா கூட்டி வைப்பா... கல்லு உப்பை போட்டு கரைத்து உப்பு பார்க்க நான் தான் எப்போதும்... இவனுக்கு தான் நாக்கு நீளம் சரியாய் சொல்லிபுடுவான்... இங்க வாடா ராசா இதுல உப்பு இருக்கா பாரு என்று கரண்டியில் எடுத்த குழம்பை உள்ளங்கையில் ஊதி ஊதி ஊத்துவாள், நக்கி பார்த்து சரியாயிருக்கு அவ்வா என்றவுடன்... ஆத்தா இவனுக்கு ஒரு வட்டையில கொழம்பு கொதிக்கையில கொஞ்சம் எடுத்து நல்லெண்ணெய் ஊத்தி கொடு சூப்பு மாதிரி குடிக்கட்டும்... நெஞ்சு சளிக்கு நல்லது... ராத்திரி எல்லாம் கர்புர்ருன்னுஇருமுறான்...வட்டியில் வரும் குழம்பில் மிதக்கும் நல்லெண்ணெய் துளிகளில் என் முகம் தெரியா குடிப்பேன் சந்தோசமாய்... கொதித்த கோழிகுழம்பு திரும்பவும் ஆட்களை இழுத்து வரும் என்ன ஆயிடுச்சா... என்று பெரியப்பாவே வருவார்... இந்தாங்க என்று பெரிய துண்டங்களாய் பார்த்து எடுத்து கொடுப்பாள் பெரியம்மா... வாங்கி கொண்டு வெங்கிடசாமி... வாங்க... கிளாசுல ஊத்துங்க... என்பார் பெரியப்பா..

அப்பா அநியாயத்திற்கு கூச்சபடுவார்... எனக்கு இந்த அளவெல்லாம் தெரியாதுங்க... நீங்களே ஊத்துங்க என்றவுடன் நான் ஊத்தவாப்பா என்ற என்னை முறைத்து போடா பெரியவங்க மருந்து சாப்பிடும் போது நீங்கெல்லாம் வரக்கூடாது...

இது மருந்தில்ல எனக்கு தெரியும்... இது குடிச்சா நீங்க நிறைய பேசுவீங்க... வேட்டி விலகுனது கூட தெரியாம தூங்குவீங்கன்னு... பெரியம்மா சொன்னாங்க... என்றால் போடா கீரை இது மருந்து தாண்டா... என்று கதவை மூடி கொள்வார்கள்... அப்புறம் கொஞ்சம் சத்தம் கேட்கும்... சிரிப்பார்கள்... யாரையோ திட்டினார் பெரியப்பா கெட்ட வார்த்தையில... அதன் பிறகு... அப்பா வேப்பை மரத்த பிடிச்சிக்கிட்டு வாந்தி எடுத்தார்... என்ன குமாரி உங்க வீட்டுக்காரரு மூடியில தான் ஊத்தி கொடுத்தேன்... அதுக்கே பிரட்டுதுன்னு போய் வாந்தி எடுத்துக்கிட்டு இருக்காரே... என்பார்...

அப்பா கண்கள் கலங்கி, சிவந்து போய் வருவார் எனக்கு சோத்தப்போடு சாப்பிட்டுட்டு தூங்குறேன்... என்றவர் சாப்பிட்டுவிட்டு அசந்து தூங்கி விடுவார்... சாயந்தரம் வரக்காப்பிக்கு தலைய பிடிச்சிக்கிட்டு அடுப்படிக்கு வரவரு... இனிமே இவர் என்ன சொன்னாலும் குடிக்க கூடாது என்பார்... அப்பா சாகும் வரை ரம் என்றாலோ அல்லது எந்த லாகிரி வஸ்துவின் பெயர் சொன்னாலும் ஒங்கரிப்பார்...

நமக்கு எல்லாகாரண காரியங்களுக்கும் போதுவான நியாயங்கள் இருக்கிறது... நியாயங்கள் தீரும் வரை குடிக்கலாம், வாந்தியும் எடுக்கலாம்... உமாவின் (அல்லது உமா மாதிரியானவர்களின்) புறக்கணிப்பை நினைத்து புலம்பலாம்... என் போன்றவர்கள் எப்பவுமே நிதானத்தில் இருப்பதில்லை என்பதால் தனியாக செலவழித்துகுடிப்பதில்லை...

5 comments:

'பரிவை' சே.குமார் said...

நல்லா சொல்லியிருக்கீங்க ராகவன்...

கிராமத்தில மிளகாயை அம்மியில் அரைத்து குழப்பு வைக்கும் அழகையும் அழகாய் கோழிக்கறி வைப்பது எப்படி என்ற சமையல் குறிப்புடன் சொல்லிய விதம் அருமை....

காமராஜ் said...

ஹலோ...
ஹலோ...
இதென்ன சரக்கு ?

நீதியா.. நியதியா.

எங்கெங்கோ அடிப்பிடிக்கி.

நிதானமா பேசலாம் அலைபேசியில்/

☼ வெயிலான் said...

புழக்கடை, அங்கனக்குழி, வட்டகை, ஓங்கரிப்பு

ராகவன்! உங்களால் தான் முடிகிறது, வார்த்தைகளோடு, வாழ்க்கையையும் மீட்டெடுக்கும் வித்தை.

பனித்துளி சங்கர் said...

அந்த அம்மியில் அறைத்து வாய்த்த கோழிக் குழம்பும் . அன்னையின் அன்பும் மீண்டும் அருகில் இருப்பதுபோல் உணர்கிறேன் உங்களின் பதிவில், அருமை நண்பரே . பகிர்வுக்கு நன்றி

ரிஷபன் said...

என் போன்றவர்கள் எப்பவுமே நிதானத்தில் இருப்பதில்லை என்பதால் தனியாக செலவழித்துகுடிப்பதில்லை...
ஹா..ஹா.. ரசித்தேன்..
பதிவு முழுவதும் ச ’மையல்’ தெரிந்தது.. கோழிக்கறி குழம்பின் மீது