தெருவுக்குள் நுழையும்போதே தெரு அடைசலாய் இருப்பது போல பட்டது ராமருக்கு. தங்கையா கடையை தாண்டி, சீனு வீட்டை கடக்கும் போதே, தெரிந்து விட்டது கும்பல் சேரத் தொடங்கிவிட்டது என்று. தெருவின் அடுத்த கோடிக்கு விரைந்து கொண்டிருந்தார்கள் அடையாளம் தெரியாதவர்கள். அதை தெரு என்று சொல்ல முடியாது... ஒரு சந்து தான் ஆனாலும் அதற்குள்ளே ஐம்பது, அறுபது வீடுகள் இருக்கும். ராமரின் முதலாளி வீடும் இந்த தெருவில் தான் இருக்கிறது. இந்த தெருவிலேயே கடைசி வீடு, அவர் வீடு. அவர் வீட்டின் கொல்லைப்புற சுவரைத் தாண்டினால் பாஞ்சாலி கோயிலில் விழலாம். மிகச்சரியாக திருவிழாச் சமயங்களில் பூக்குழி இறங்கும் நவ்வா மரத்திற்கும் ஒரு புளிய மரத்திற்கும் இடையே உள்ள பொட்டலில் குதிக்கமுடியும். இன்று தெருவின் இருபக்கமும் சாக்கில் பரப்பி ஒட்டி உலர வைத்திருக்கும் தீப்பெட்டிகளின் உள்பெட்டிகளை காணவில்லை. தெருவின் முகமே மாறியிருந்தது மாதிரி தோன்றியது ராமருக்கு. ஒரு பக்கம் தென்னங்கிடுகு அடுக்கி வைக்கப்பட்டிருந்தது இன்னொரு பக்கம் மூங்கில் கம்புகள் சாத்தி வைக்கப்பட்டிருந்தன.
இந்த தெரு முழுக்க சிமின்ட் சிலாப் போடப்பட்டிருக்கும், அதில் குழி பறித்து மூங்கில் நடமுடியாததால், ஒரு பக்கம் வாய்க்காலுக்குள் மூங்கில்களை நிறுத்தியும் , இன்னொரு பக்கம் டின்னில் ஆத்து மணல் கொட்டியும் நிறுத்தியும் வைக்க பட்டிருந்தது. அப்போது தான் புத்தாசெல்வராஜ் அண்ணன், தள்ளு வண்டியில இருந்து சேரெல்லாம் இறக்கி கொண்டிருந்தது. தண்ணீர் டிரம் ஏற்கனவே நிரப்பி கோவில்பட்டியான் வீட்டின் முகப்புத்திண்ணையில் வைக்கப்பட்டிருந்தது. முதலாளி அண்ணனின் வீட்டின் முன்னால் அதற்குள் கிடுகு வேய்ந்திருந்தார்கள், வெளிச்சத்தை அடைத்த கிடுகுப்பந்தலில் ஒரு தற்காலிக சல்லாத்துணி இருட்டு போர்த்தியிருந்தது. பக்கத்து வீடுகளில் இருந்து வாங்கிய பெஞ்சுகளும், கொஞ்சம் மரச்சேர்களும் வீட்டின் முன்னால் கிடந்ததில், அங்கொன்றும் இங்கொன்றுமாக ஆட்கள் உட்கார்ந்திருந்தார்கள். வீட்டை நெருங்க நெருங்க, அழுகைச்சத்தம் பலமாய் கேட்க ஆரம்பித்தது. இதே தெருவில் குடியிருப்பவர்களும், அருகிலேயே இருக்கும் உறவுக்காரர்க்களுமாய் நிறைந்திருந்தது முதலாளியின் வீடு. வெளியூர்களில் இருந்து வருபவர்கள் இன்று பூராவும் வந்து கொண்டே இருப்பார்கள்.
காலையில் கொட்டாப்புளி அண்ணந்தான் வீட்டிற்கு வந்து தகவல் சொன்னது இவனுக்கு. முதலாளி அண்ணனின் அம்மா தவறிப்போனது பற்றி. முதலாளி அண்ணனின் அம்மா இவனுக்கு தெரிந்து ஒரு ஆறு மாச காலமா படுத்த படுக்கையாத்தான் இருக்கு. சாப்பாடும், பீயும், மூத்திரமும் அதே படுக்கையில் தான், இவன் ஏதாவது வேலை விஷயமா முதலாளி வீட்டுக்கு வரும்போதெல்லாம், முன் நடையில ஒரு கயித்து கட்டிலில் சாக்கும், அதற்கு மேலே பழைய சீலைத்துணியும், ஒரு போர்வையும் விரித்து அதன் மேல் தான் படுத்திருக்கும் அல்லது கிடத்தப்பட்டிருக்கும் ஆண்டாளம்மா. வீட்டுக்குள்ள நுழையும் போதே ஒரு மாதிரி கெவுலு வாடை அடிக்கும், மூத்திரமும், மீந்த சாப்பாடும் கலந்து படுக்கையிலயெ கிடந்து புன்னாப்போன உடம்போட நாத்தமும். இவனுக்கு கொமட்டிட்டு வரும் ஆனாலும் அதை வெளியே காட்டிக்காமல் அடக்கிக் கொள்வான். எப்படித்தான் இப்படி வச்சிருக்காங்களோன்னு தோணும் இவனுக்கு.
இவன் முன்நடை நாகத்தகடுக் கதவத் திறந்து உள்ள நுழையும்போதே தலைய மட்டும் தூக்கிட்டு, ஆருலே அது! சின்னத்தாயி மவன்தானே... ஏலே! கொஞ்சம் காராசேவு மட்டும் வாங்கிட்டு வாலே, காசு என் மவன் வந்ததும் தரச்சொல்லுதேன்... உனக்கு புண்ணியமா போட்டும்... வாய் என்னமோ நம நமன்னு கிடக்கு என்பாள், இன்னொரு நாள், ஏலே ராசு, சுப்புத்தாயி இந்நேரத்துக்கு காரவடை போட்டிருப்பா... ஜூடா... நான் கேட்டேன்னு போயி வாங்கியா ராசு! என்பாள். அக்காவக்கேளு ஆத்தா! அவுக சொன்னா வாங்கியாரேன்! என்றவுடன் சத்தமே இடாமல் திரும்பி கொள்வாள் ஆண்டாளம்மா. இவன் கிட்டப் போகாம தூரமாவே நின்று கொண்டு, உள்ளுக்கு குரல் கொடுப்பான் பாலாமணியக்கா!, ராமரு வந்திருக்கேன்! அக்கா வருவாள் எப்போதும், கையில் இருக்கும் வேலையின் மிச்சத்தோட... கரண்டியோ... சொளகோ... அல்லது குண்டாஞ்சட்டியோ இருக்கும் எப்போதும் கையில். வந்தவளிடம், ஆண்டாளம்மா கேட்டதைச் சொன்னால்,
அத்தே! காராவடையா கேட்டீஹ? இல்லையே.. இவஞ்சொன்னானா? ஏலேய்... நான் என்ன காராவடையா கேட்டேன்... என்று ராமர் பக்கம் தலையத் திருப்பி கேட்டுவிட்டு... இல்லே தாயீ! இவன்கிட்ட நேத்து சுப்புத்தாயி வந்துட்டுப் போனாளா என்னைப் பாக்க, அதப்பத்தி தான் சொல்லிட்டிருந்தேன்...வட கேட்டனாம்ல வட...பொய்க்காரப்பய என்று அப்படியே மாற்றி விடுவாள் ஆண்டாளம்மா. பாலாமணியக்காவுக்கு இதெல்லாம் தெரியும், நீ வாடா உள்ள என்று வந்த வேலையைப்பற்றி கேட்பாள்
ஆண்டாளம்மாவோட படுக்கை பட்டாசால் ஜன்னலை ஒட்டி கிடக்கும், அந்த ஜன்னல் திண்டுல என்னென்னமோ குப்பி குப்பியா மருந்து இருக்கும். ஆனா, அதை ஆண்டாளம்மா சாப்ட்டு இவன் என்னைக்கும் பாத்ததில்ல. மாசத்துக்கு ஒரு தரம், கிருஷ்ணன் கோவில்ல இருந்து ஒரு ஹோமியோபதி வைத்தியர் வருவாரு, வெள்ளை பேண்ட், வெள்ளை சட்டை போட்டுக்கிட்டு. அவரு தான் மாத்தி மாத்தி மருந்தா கொடுத்துட்டு வர்றாரு... வந்துட்டு போற பஸ் காசு, அப்புறம் ஒரு பத்து ரூவா அது தான் வைத்திய செலவு.
மதுரை கொண்டு போனா சரியாக்கிபுடலாம் என்று முதலாளியோட பிரண்டு சொல்ல, அதெல்லாம் தோது படாது பங்காளி! ஆராவது கூட இருந்து பாத்துக்கிடனும்லா? நம்ம சோலிக்கு அதெல்லாம் லாயக்கு படுமா? கூட பிறந்த எவனும் இதைப்பத்தி யோசிக்கிறதில்லே! என்ன மட்டுந்தான் பெத்தா மாதிரி அவனுங்களுக்கு நினப்பு! அவனுங்க போக்கே ஒண்ணும் பிடிபடலை பங்காளி! நானும், என் பொண்டாட்டியும் பாத்துக்கிட போயி, இது மணத்து போயி கிடக்கு... இல்லேன்னா நாறிடாது நாட்டாமை குடும்பமானம்? என்று சொல்ல கேட்டிருக்கான் ராமர்.
ராமர் முதலாளி வீட்டுக்குள்ள நுழைஞ்சதும், இவனுக்காகவே காத்து இருந்தார் போல, ஏலேய்! என்னலே இவ்வளோ நேரம் வாரதுக்கு? வெரசா வந்து கூடமாட ஒத்தாசையா இருக்க வேண்டாமா? இல்லேண்ணே, இப்பத்தான் கொட்டாப்புளி அண்ணே வந்து சொன்னாரு! உடனே கிளம்பி வாரேன்! நான் போயி சேரெல்லாம் அடுக்கி வைக்கவா அண்ணே? என்றவனிடம் வேற ஒரு சோலி மயிரும் நீ பண்ண வேண்டாம்! நாஞ்சொல்றத மட்டும் செய்துட்டு வா! முதல்ல போயி, கடைய திறந்து வரவு சீட்டு எல்லாம் எடுத்துக்கிட்டு, பெரிய அய்யா கிட்ட நேத்து திருப்பி கொடுத்த நகையெல்லாம் போயி வரவு வச்சுக்கிடு... அவர்ட்டயும், சின்ன அய்யாகிட்டயும் அம்மா இறந்த தகவல் சொல்லிப்புடு,
இன்னைக்கே எடுத்துடுவோம்னும்... என்ன? அப்படியே, சின்னக்கடை பஜார் போயி, கொஞ்சம் மரிக்கொழுந்து செண்டும், பொரியும், ரெண்டு பெரிய மாலையும் வாங்கிட்டு, வேற ஏதாவது வாங்கணுமான்னு, பெரிய மாமா தெரியும்ல? அவருகிட்ட கேட்டுக்கிடு, அப்படியே அதையும் வாங்கிட்டு வந்துரு... துட்ட முருகன்கிட்ட வாங்கிக்கிடு... நேத்து வாங்கிட்டு வந்த கடைப்பணம் சேஃப்ல இருக்குன்னு சொல்லி வாங்கிக்கோ! கொட்டாப்புளிய பாத்தியாலே... அவன இன்னும் காணோம்... சதகளவானிப்பய...! அவனப்பாத்தா உடனே இங்கே அணுப்பு... வெரசா கிளம்பு... என்று முடுக்கினார் முதலாளி.
எப்பவும் வாங்குகிற வாத்துமானம் தான் இது. வாத்துமானம் எவ்வளவுன்னாலும் வாங்கிக்கிடலாம், ஆனா அடி வாங்குறது தான் தாங்க முடியாது சில சமயம். வேலை சரியா செய்யலே, இல்லே ஏதாவது தப்பாயிப் போச்சுன்னா அவ்வளவுதான், கையில் இருக்கிய சுத்தியல், கம்பிச்சட்டம், மட்டக்கோபுரம்னு பறக்கும். சில சமயம் அடிபடாம விலகிட்டாலும், பல தடவை சரியா மேல விழுந்துடும். ராமருக்கு ஏன்டா வேலைக்கு வந்தோம்னு இருக்கும்? ஆனாலும் வாரத்துக்கு கிடைக்கிற தொன்னூறு ரூபா சம்பளமும், அப்பப்போ வாங்கித்தர்ற பரோட்டாவும் தான் இவனை இதையெல்லாம் சகிச்சுக்க வைக்குது. வேற பட்டறைக்குப் போனா இங்க போல வேல கத்துக்க முடியாது. இவன் முதலாளி நல்லா வேலை வாங்குனாலும், நிறைய கத்துக் கொடுப்பாரு. முதலாளிட்ட வேலை பாத்த திருப்பதியெல்லாம் தனியாப் பட்டற வச்சு, நிறைய சம்பாதிக்கிறது இவனுக்கேத் தெரியும். அதனால், வலியும், வேதனையும் கொஞ்ச நேரத்துல சரியாகிடும். அடிய விட வசவும், வாத்துமானமும் இவனுக்கு பெரிசில்லை என்று தோன்றியது.
வாங்க வேண்டிய வசவ எல்லாம் வாங்கிக்கொண்டு முருகனைத் தேடினான் அந்த கூட்டத்தில், முருகன் அண்ணன் அவங்க அத்தை பக்காத்தால ஒக்காந்து அழுது கொண்டிருந்தது, மூக்கச் சீந்திக்கிட்டு. ஆண்டாளம்மா, உடம்புக்கு முடியாம படுத்துக்கிடந்தப்போ, எழுந்திருக்கவே முடியாது அதுனால. இப்போ, எப்படியோ ஆண்டாளம்மாளை நிமிர்த்தி மடக்கி, ஒரு பழைய நாற்காலியில் உட்கார வைத்திருந்தார்கள்.
தெறித்து வந்து விடும் நரம்புகளும், வெளுத்துப் போன நகக்கண்களும் இருந்த சூம்பிப் போன கைகளை நாற்காலியின் கைகளில் சேர்த்துக் கட்டியிருந்தார்கள். சுவத்தில் இரண்டு பக்கமும் ஆணியடித்து நாடியோடு சேர்த்து வெள்ளைத்துணியில் கட்டியிருந்தார்கள். மூஞ்சி முழுக்க மஞ்சப்பூசி பெரிய பொட்டா வச்சு, அதுல எட்டணா ஒட்டவைத்திருந்தார்கள். முருகன் அண்ணே மூஞ்சி அழுது அழுது வீங்கியிருந்தது. முருகன் அண்ணனுக்கும், முதலாளிக்கும் ரெண்டு வயசுதான் வித்யாசம், ஆனா அப்படித் தெரியவே தெரியாது. முதலாளி பெரிய மனுஷன் மாதிரி ஜம்முன்னு இருப்பாரு, முருகன் அண்ணே சின்ன பையனப் போல இருப்பாரு.
சுற்றி உட்கார்ந்து அழுது கொண்டிருந்தவர்களை, தள்ளச்சொல்லி முருகனின் அருகே போயி தோளைத்தொட்டு, முருகன் அண்ணே! முருகன் அண்ணே என்று உலுப்ப, என்ன என்பது போல திரும்பி பார்த்தார் முருகன் அண்ணன். ராமர், இங்க வாங்க என்று கிசுகிசுப்பா சைகையிலேயும் சொல்ல, வாயில் வைத்திருந்த துண்டை தோளில் போட்டுக் கொண்டு முருகன் அண்ணன் வெளியே வந்தார்.
அண்ணே! முதலாளி கொஞ்சம் சாமானெல்லாம் வாங்கியாரச் சொன்னாரு... காசு குடுக்கீயலா!
காசு எங்கிட்ட எங்கலே இருக்கு...
சேஃப்ல இருக்குண்ணு சொன்னாரு, முதலாளி!
சரி வாரேன்! என்று குட்டி மச்சில் தடவித் தடவி சாவிய எடுத்து, சாமி ரூம்கிட்ட இருந்த சேஃப்பை திறக்க சாவியை செருகி வலது பக்கம் திருப்பி, சின்ன குறி போல இருந்த குமிழை மூன்று ஏதேதோ எண்கள் இருக்கும் இடத்தில் திருப்பினார். கனமான கதவை, கை மாதிரி இருந்த கைப்பிடியைப் பிடித்து இழுத்து திறந்தார். ஒரு ஐம்பது ரூபா கட்டெடுத்து, ரப்பர் பேண்டை பிரிச்சு, ரெண்டாயிரம் ரூபா எண்ணிக் இவனிடம் கொடுத்தார் முருகன் அண்ணன். மிச்சத்தை திரும்பவும் எடுத்து எண்ணிவிட்டு உள்ளே வைத்தார். இவன் அப்பப்போ பாக்கிறானா என்றும் பார்த்துக் கொண்டார்.
திரும்பவும் இவனை அணுப்பிவிட்டு, அழுவதற்கு போய் அவங்க அத்தைப் பக்கத்துல உட்கார்ந்து கொண்டார். எல்லோரையும் தாண்டி கிளம்பி வெளியே வந்தவன், வெளிச்சுவரில் சாத்தி வைத்திருந்த டிவிஎஸ் 50 ஐ எடுத்துக் கொண்டு உருட்டிய படியே கூட்டத்தை கடந்தான். பந்தல் முழுதும் போட்டிருந்தார்கள் இப்போது. செகண்டி அடித்துக் கொண்டு சங்கு ஊதுற ஆள் வந்திருந்தான். தெரு முனைக்கு வந்ததும், வேஷ்டிய மடிச்சு கட்டிட்டு, வண்டியை ஸ்டார்ட் செய்து பஜாருக்கு விரட்டினான். முதலில் பெரிய அய்யாவிடம் போய் நேத்து வாங்குன நகைக்கு வரவு வச்சுக்கணும். அப்புறம், சின்ன அய்யாவிடமும் தகவல் சொல்லிவிடவேண்டும். அதுக்கப்புறம் நேரா சின்னக்கடைபஜாரு தான். பெரிய அய்யாவ பாக்கப்போகும் போது சங்கர் ரெடிமேட்டுக்கும் போயி, வனஜாவ பாத்துட்டு வரணும், தண்ணி குடிக்கிறத சாக்கா வச்சுக்கிட்டு என்று தனக்குள்ளே சொல்லிக் கொண்டான் ராமர்.
வனஜாவ பாத்து ரொம்ப நாளான மாதிரி இருந்தது அவனுக்கு. இவங்க பட்டறை பெரியகடை பஜார் கொட்டகைக்குள் இருந்த போது, எதிரில் இருந்த கடை, சங்கர் ரெடிமேட் ஸ்டோர். முதல்ல தாட்டி சூப்பரா இருக்காலே... ஒன்னயவே பாத்துக்கிட்டு இருக்கா, என்று முருகன் அண்ணே ஏத்திவிட, பத்திக் கொண்டது. நாய்க்கமாரு பொண்ணு அது, அவுக அப்பா ஆட்டோ ஓட்டுதாரு. லெட்டர் கொடுத்து, மடவார்வளாகம் தெப்பத்தில சந்திப்பெல்லாம் ஆயி ஒரு வழியா ராமருக்கு செட்டாயிட்டது. பட்டறைய கோதாவிலாசம் பிரஸ் கிட்ட மாற்றின பின்னால, அவள அடிக்கடி பாக்க முடியலங்கிறது பெரிய வருத்தம் ராமருக்கு. இன்னைக்கு எப்படியாவது அவளப்பாத்திடணும், அங்க செட்டியார் அண்ணாச்சி இருந்தா போச்சு, அவ கூட ஒரு வார்த்த பேச முடியாது, என்னலே இங்கிட்டு லாத்துற...இங்க உனக்கு என்னலே சோலிம்பாரு, அவரு இருக்கக் கூடாது என்று ராமர் மனசுக்குள் வேண்டிக் கொண்டான்.
பையில் இருக்கும் சிட்டையை கையில் எடுத்துக் கொண்டு, முதலில் பெரிய அய்யாவின் கடைக்குப் போனான். நிறைய கிராக்கிகள் வந்திருந்தார்கள் கடை நிறைய, இன்னைக்கு முகூர்த்த நாளு போல, பெரிய அய்யா ரொம்ப பிஸியா இருந்தாரு, சின்ன அய்யாவ காணல, அவரு எப்பவும் இருக்கிற எடத்துல! என்ன பண்ணலாம்? பேசாம சாந்தி ரெடிமேட்டுக்கு போயிடலாமா முதல்ல? என்று யோசித்துக்கொண்டே திரும்பும்போது சுப்பையா அண்ணாச்சி நின்று கொண்டிருந்தார், பக்கவாட்ல உரசிக் கொண்டே!
என்னலே! உங்க முதலாளி அம்மா இறந்து போயிட்டாகலாமில்ல? எப்பலே ஆச்சு, ரெண்டு நாளு முன்னாடி வீட்டுக்கு போயிருந்தேன் அப்பக்கூட, ஆரு சுப்பையாவா?ன்னு கேட்டுச்சேப்பா, அவுக அம்மா? என்றார்.
ஆண்டாளம்மாவுக்கு ராமரையே அடையாளம் தெரியாது, ஒவ்வொரு தடவையும் புதுப்பேரு சொல்லும், இவரப் பாத்து சுப்பய்யான்னுச்சாம்... நம்மகிட்டயே சரடு விடுதாரு.... என்று நினைத்துக் கொண்டு.... அப்படியா அண்ணே! வாரேன், பெரிய அய்யாவ பாத்து சிட்டைய முடிக்கணும், சோலி கிடக்கு! என்று நகர்ந்தான். பெரிய அய்யா பார்த்துவிட்டார்... பார்த்தவுடனே கூப்பிடமாட்டாரு... கவுரவம் என்னாகிறது... கொஞ்ச நேரம் கிடையாக் கிடக்கணும்... அவரு பார்வையில படுறாமாதிரி!
என்றா வெண்ட்ரூ! என்ன விஷயம்... வரவு வைக்கணும் பெரிய்யா!.. கொண்டா சிட்டைய! என்று கையில் இருந்த சிட்டைய வாங்கிக் கொண்டு இறங்கிக் கொண்டிருக்கும் தங்கபிரேம் கண்ணாடியை ஏற்றிக் கொண்டே... சிட்டையில் வரவு வைத்தார்... முதலாளி அம்மாவ எப்ப எடுக்கிறாங்க என்ற தகவலை சொல்லிவிட்டு பறந்தான்... பெரியகடை சங்கர் ரெடிமேட்டுக்கு... வனஜா... கொட்டகைக்குள்ள நுழையும் போதே சிவாஜி சேட் பார்த்துவிட்டான்... ஏ பாபு! உங்க முத்லாளி... மூசு போட கொஞ்சம் தங்கம் கொடுத்தாரு... வேலயாயிடுச்சி... போயி கொடுத்துடறியா? என்று தமிழை கடைவாயில் போட்டு மென்று துப்பினான்...அவனுக்கு எல்லாருமே பாபு தான் அது என்ன கணக்கோ? சரிங்க சேட்! என்று நியூஸ் பேப்பர் சுத்திய ஒரு பொட்டலத்தைக் கொடுக்க, அதனுடைய கனத்தில் வாங்கிய கை இறங்கியது போல இருந்தது எப்படியும் ஒன்றரைக்கிலோ இருக்கும்...என்று தோன்றியது. கையில் வாங்கியதை எடவார்ப்பையில் வைத்து கட்டிக்கொண்டு, வனஜாவைப் பார்க்க சங்கர் ரெடிமேட்டுக்கு விரைந்தான்.
கொட்டகைக்குள் நுழைந்தவுடன் பாவா லண்டன் ஷாப்பு கடையத்தாண்டியதும் இடது பக்கம் தெரியும், சங்கர் ரெடிமெட் ஸ்டோர்... கிருஷ்ணமூர்த்தி செட்டியாரின் தாத்தன் வழிச் சொத்தின் பங்கு கடை, அடுத்த கடை அவங்க அண்ணன் சேதுராமன் செட்டியார் நகைக்கடை என்று அடுத்தடுத்து இருக்கும். வெயிலில் இருந்து கொட்டகைக்குள் நுழைந்ததும் இருந்த கொட்டகை இருட்டில் ஒன்னும் தெரியவில்லை கொஞ்சம் முன்னுக்குப் போனதும் ஒவ்வொண்ணா புலப்பட, சங்கர் ரெடிமேட் ஸ்டோர் வாசலில் வனஜா நிற்பது தெரிந்தது. பக்கத்தில் போய், அவளைப் பார்த்து ஜாடையாய் என்ன என்று கேட்டான் ராமர். இவனைப்பார்த்ததும் வனஜா மேலும் அழுதாள். கடையின் முன்வாசலைத் தாண்டி இவனை நோக்கி வந்து, செட்டியார் அண்ணாச்சி இவளைத்திட்டி, வேலைய விட்டு நிப்பாட்டிட்டதாகவும் சொல்ல, இவனுக்கு ஆத்திரமா வந்தது. ராமர், எனக்கு இங்க இருக்கவே பிடிக்கலை ராமர், எங்கயாவது போயி சாகலாமான்னு வருது! கடையில் ரெண்டு பிராத்துணிய காணலையாம்... நாந்தான் எடுத்தேன்னு கலைவாணி சொல்லிட்டான்னு நினைக்கிறேன்... ஆனா நான் சத்தியமா எடுக்கலை ராமர்... எங்க வீட்டுக்குப் போனா எங்க நைனா என்னையே கொன்னே புடுவாரு... எனக்கு என்ன பண்றதுன்னே தெரியலை என்று மேலும் அழுதாள்.
வனஜாவின் கையப்பிடித்துக் கொண்டு என்னோட வா... இந்த வேலை மயிரு போச்சுன்னா பரவாயில்லை... என்று இழுத்துக் கொண்டு விரைந்தான் ராமர், வனஜாவும் பதில் ஏதும் சொல்லத் தோன்றாமல் உடன் சென்றாள். அவனை யாரோ வனஜாவுடன் மதுரை பஸ்ஸில் ஏறியதைப் பார்த்ததாக, ராமரின் முதலாளி அண்ணனிடம் சொல்லிக்கொண்டிருந்தார்கள், மறுநாள் காலை பாலூத்த கிளம்பும்போது.
23 comments:
சூப்பர். நன்றாக எழுதி இருக்கீங்க சார்!
Wish You Happy New Year
http://sakthistudycentre.blogspot.com
என்னையும் கொஞ்சம் Follow பன்னுங்கப்பா...
அண்ணா பல வார்த்தைகள் எனக்கு புதுசா இருக்கு... முடிவு இப்படி இருக்கும்ன்னு யோசிக்கல.. :)
ராகவன், தேர்ந்த கதை சொல்லியாக பரிமளிக்கிறீர்கள்!
விவரணைகளும், டயலாக்குகளும் தத்ரூபம்! ராஜசுந்தரராஜன் அண்ணனும், மாதுவும், காமுவும், பார்த்தால் பூத்துப் போவார்கள்!
இன்னும் எவ்வளவு கதைகளை வைத்திருக்கிறீர்கள் இந்த பட்டரைகளிலும், உரை கல்லிலும்!
ரொம்ப சந்தோசமா இருக்கு ராகவன். சீக்கிரம் சிறுகதை தொகுப்பு வரவேணும்! வாழ்த்துகள்!
அண்ணே அருமைனே . ஒரு சாவு வீட்ட நேருல பாத்தா மாதிரி இருந்துச்சுனே.
கதை அருமையாக உள்ளது.கொஞ்சம் பாணியை மாற்றிக் கோள்.ளுங்கள்.நிருபரின் .reporting மாதிரி இல்லாமல் இருப்பது சிறப்பக இருக்கும்.வாழ்த்துக்கள்---காஸ்யபன்
அருமையான மொழி ராகவன்.. அசந்து போய் உட்காந்து இருக்கேன் ... நன்றி
ஒரு எழவு வீட்டுக்கே நேரில் போய் வந்தது போல் இருந்தது.
வாழ்த்துக்கள் நண்பரே.
-இளவரசு
நல்ல கதை... உங்க எழுத்து நடை வசீகரமா இருந்துச்சு...
ராகவன் அண்ணா....
எப்படி இப்படி ஒரு எழுத்து நடை வருகிறது உங்களுக்கு மட்டும்...
அருமையான விவரனையுடன் ஆர்ப்பாட்டமில்லாத நடையும் கை கோர்க்க அருமையான ஒரு வாழ்க்கையை அருகில் இருந்து பார்த்தது போல் காட்சிகள் விரிகின்றன.... ரொம்ப நல்லாயிருக்கு.
சூழல்களை நுட்பமாகவும் உளவியல் ரீதியாகவும் பார்க்கவும், பதிவு செய்யவும் முடிகிறது ராகவன் உங்களால். இதுதான் உங்களின் சிறப்பு போலும். எழுத்து நடை வழக்கம்போலவே சிறப்பாய் இருக்கிறது. கதையின் ஓட்டத்தில், எதோ ஒன்று பெரிதாய் விட்டுப் போனது போல இருக்கிறது. உங்கள் கதையின் தலைப்புக்கள் எப்போதுமே ஒரு கடினத்தோடு இருக்கிறது.எனக்குத்தான் இப்படித் தோன்றுகிறதோ, என்னவோ!
அன்பு சக்தி,
உங்கள் வாழ்த்துக்கும் அன்புக்கும் நன்றிகள் பல... உங்களைத் தொடர்கிறேன் இப்போது...
அன்புடன்
ராகவன்
அன்பு வினோ,
எல்லாமே ஸ்ரீவில்லிபுத்தூர், பழைய ராமநாதபுரம், மதுரையில் புழக்கத்தில் இருக்கும் வார்த்தைகளே... உங்களுக்கு புரியாத வார்த்தைகள் என்று எதுவும் இருக்காது... திரும்பவும் ஒருமுறை கதையின் ஓட்டத்தில் படித்துப் பாருங்கள் புரியலாம்... அப்படியே புரியவில்லை என்றாலும், அது ஒரு பெரிய பிரச்னை இல்லை... எனக்கு நாஞ்சில் நாடனின் சில சொல்லாடல்கள் இன்று வரை புரியவில்லை... ஆனாலும் என்னால் நாஞ்சில் நாடனை முழுதும் ரசிக்க முடிகிறது... உங்கள் புரியாமை கதையை புரிந்து கொள்ளத் தடையாய் இருந்தால், அது என் தவறாகவும் இருக்கலாம்.
வாழ்த்துக்கும் அன்புக்கும் நன்றிகள் பல.
ராகவன்.
அன்பு பாரா,
நீண்ட நாட்களுக்குப் பிறகு...உங்கள் பின்னூட்டம் எனக்கு சிலிர்ப்பான விஷயம்... அதுவும்... எழுத்துக் குறித்தான உங்கள் பாராட்டும் எனக்கு பெருமிதம் நிறைந்த பரிசுப்பொட்டலம், பத்திரமாய் வைத்துக் கொள்கிறேன்.
மாதுவுக்கு இதில் ஏதோ பொத்தல் இருப்பது போல அல்லது ஒரு வெற்றிடம் இருப்பது போல தோன்றுகிறது என்று அவரின் பின்னூட்டத்தில் இருந்து புரிந்து கொள்கிறேன்... எது என்று தெரிந்தால் இன்னும் வசதியாய் இருக்கும்... இட்டு நிரப்ப...
வாழ்த்துக்கு நன்றி மக்கா...
அன்புடன்
ராகவன்
அன்பு மணிவண்ணன் அவர்களுக்கு,
உங்கள் அன்புக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் பல... தொடர்ந்து வாசிக்கும் உங்களின் அன்பு எனக்கு உற்சாக விசில்...
அன்புடன்
ராகவன்
அன்பு காஸ்யபன் அய்யா அவர்களுக்கு,
உங்கள் கருத்துக்கு நன்றிகள் பல... உங்களுக்குத் தோன்றியது எனக்கும் நிறைய நேரங்களில் தோன்றியிருக்கிறது...ஒரு மூன்றாம் மனிதனாய், சிலரை சில விஷயங்களை பார்க்கும் போது என்னையே அறியாமல் இந்த ரிப்போர்டிங்க் பார்மட் வந்து விடுகிறது... பாணியை மாற்ற முயல்கிறேன்...
அன்புடன்
ராகவன்
அன்பு ராமசாமி கண்ணன்,
உங்கள் அன்புக்கும், வாழ்த்துக்கும் பதிலாய் அன்பும் நன்றிகளும்...
தொடர்ந்து நீங்கள் வாசிப்பது மகிழ்ச்சி...
அன்புடன்
ராகவன்
அன்பு இளவரசு,
உங்கள் கருத்துக்கும் அன்புக்கும் நன்றிகள் பல...
நான் எழவு வீட்டை இன்னும் சரியாக சொல்லவில்லை... ஒரு கடந்து போகக்கூடிய ஒரு இடமாகத் தான் சொல்ல முற்பட்டேன்... அது பிரதானமாய் மாறி, கதையின் தீவிரம் குறைந்திருந்தால், அது என் தவறே... மாற்றிக் கொள்கிறேன்...
இதெ கருத்தை மணிவண்ணனும் சொல்லியிருந்ததால்.. அதைப்பற்றி எழுதுகிறேன்...
அன்புடன்
ராகவன்
அன்பு பிரபாகரன்,
உங்கள் கருத்துக்கும், அன்பிற்கும் மனம் நிறைய அன்பும் நன்றிகளும்...
அன்புடன்
ராகவன்
அன்பு சே.குமார்,
ராகவன் அண்ணா, நல்லாயிருக்கு இப்படி அழைப்பது.
உங்கள் அன்புக்கு ஆயிரம் நன்றிகள் குமார்... தொடர்ந்து வாசித்து... எதிர் கருத்தாய் இருந்தாலும் சொல்லுங்கள்... என்னை செப்பனிட உதவும்...
அன்புடன்
ராகவன்
அன்பு மாதவராஜ்,
என் ஆசானின் கருத்து எனக்கு புரியவில்லை... ஏதோ பெரிதாய் விட்டுப்போனது போல தோன்றுகிறது என்று நீங்கள் சொல்லக்கூடாது... ஆய்ந்து தேர்ந்தவர்கள் இது தான் பிரச்னை என்று சொன்னால் தானே என்னைப் போன்ற மாணாக்கன் சரியாவான்... இது தான் குறை என்று கொஞ்சமும் தயங்காமல் சொல்லுங்கள் மாதவராஜ்...
உங்கள் அதீத அன்புக்கும் வழிகாட்டுதலுக்கும் அன்பு
அன்புடன்
ராகவன்
ராகவன்,
கதையை முதலிலேயே படித்து விட்டாலும், எழுத்து நடை அருமை என்று வழக்கம் போல சொல்லிப் போக மனமில்லாததால், மற்றவர்களின் பின்னூட்டத்திற்காக காத்திருந்தேன். மாதுஅண்ணன் சொன்னதைப் போல சூழ்நிலைகளை மிக நுட்பமாக அவதானிக்கவும், வார்த்தைகளில் வடிக்கவும் உங்களால் முடிகிறது. மாதுஅண்ணனுக்கு இன்று இட்டிருந்த பின்னூட்டத்திலும் தெரிகிறது.
கதையோட்டம் அருமையாக இருந்தாலும், நியூஸ்பேப்பர் சுத்திய பொட்டலத்தை வாங்கும்போதே முடிவை ஊகிக்க முடிந்தது. உங்கள் கதைகளை தொடர்ந்து படித்து வருவதனால் கூட இருக்கலாம்.
பாரா அண்ணன் சொல்வதைப் போல சிறுகதை தொகுப்பு வெளியிடலாமே!.
அன்பு அம்பிகா,
உங்கள் அன்புக்கும், கருத்துக்கும் நன்றிகள்... தொடர்ந்து உங்கள் வாசிப்பு எனக்கு பாக்யம். பொட்டலத்தை வாங்கும் போது முடிவை யூகிக்க முடிந்திருக்கலாம்...
சாத்தூர், தூத்துக்குடி, கோவில்பட்டி அப்புறம் ஆறுமுகனேரி எல்லாம் வரணும்... எல்லாரையும் பாக்கணும்கிற ஆசை இருக்க இருக்க பெரிசாகிட்டே வருது.
அன்புடன்
ராகவன்
எளவு வீடு ....நேரில் பார்த்ததுபோல் உள்ளது. ஆரம்பத்தில் கதையின் கரு எளவு வீடுதான் என்று தோன்றியது.பின்னர்தான் புரிந்தது முடிவு எதிர்பாராத விதமாக சட்டென முடிந்ததுபோல் உணர்கிறேன். எனது புரிதலின் குறையாகவும் இருக்கலாம். தாங்கள் கதையை எடுத்துசெல்லும் விதம் ஒரு சுகமான பயணம் போல...நன்றி.
Post a Comment