குற்றாலத் துண்டை ஈரத்தோடு கயிறு போல முறுக்கி துடைத்தபிறகு, முதுகில் ஒட்டியிருந்த பிசுபிசுப்பு குறைந்த மாதிரி இருந்தது. மேலுக்கு நல்லா சோப்பு போட்டு குளிச்சாலும், திருப்தி வர்றதில்லை. கைக்கு எட்டாத முதுகைத் தொட்டு அழுக்கு தேய்க்க ஆளு இருந்தாதான் தோதுப்படுது. மகராசி போயிட்டா சீக்கிரமே! என்று தனக்குள்ளெ புலம்பிக் கொண்டார் முத்தையா ஆசாரி என்கிற சவரிமுத்து. சுசீலா இறந்ததுக்கப்புறம், முதுகு பிசுக்கு போகவே இல்லை. என்ன தான் சுவத்துல தேய்ச்சாலும், காயமாகுதேக்கண்டி, பிசுக்கு விடறதா இல்லை. இரண்டு வேளை குளிச்சாகணும், முத்தையா ஆசாரிக்கு. அதுவும் வெயிலோ, மழையோ கிணத்துக்கு வந்து குளிச்சாத்தான் அவருக்கு குளிச்சா மாதிரி.
சுசீலா இருக்கும்போது அவளே வந்து கிணத்துல தண்ணி சேந்தி வச்சுடுவா, கயித்துல இவருக்கு குத்தால துண்டு, சோப்பு டப்பா, பீர்க்கங்கூடு எல்லாம் தயாரா இருக்கும். அய்யா துரகணக்கா வந்து குளிச்சாப் போதும். முதுகுக்கு கிட்ட வரும்போதே, ஏடீன்னு ஒரு சத்தம். இந்தா வந்துடுதேன்னு பதில் வர்றதுக்கு முன்னாடி முதுகுல சுசீலாவோட கையிருக்கும். ம்...ன்னு அவரே ஒரு பெருமூச்சு விட்டுக் கொண்டு வீட்டுக்குத் திரும்பினார். இடுப்பில கட்டின ஈரத்துண்டுக்குமேல வேஷ்டிய கட்டிட்டு, கால அகட்டி ஒரு மாதிரியா கட்டியிருந்த துண்ட உருவி எடுத்தார். கொடியிலே உதறி காயப்போட்டு விட்டு வீட்டிற்குள் நுழைந்தார்.
முத்தையா ஆசாரி குடியிருப்பது, பதினோரு வீடு இருக்கிற ஒரு காம்பவுண்டு. பெரும்பாலும் எல்லாரும் தெலுங்கு பேசும் நாய்க்கமாருங்க தான். இவரு ஒருத்தரும், எதிர் வீட்டுல இருக்கிற நல்லையாவும் தான் வேற ஆளுக்க! முத்தையா ஆசாரியின் மனைவி ரெண்டு வருஷம் முன்னாடி தான் செத்துப் போச்சு. கருப்பையில புத்துநோய் வந்து படாத பாடுபட்டு போயி சேந்துருச்சு, பெரியாஸ்பத்திரியிலேயே. சுசீலாவுக்கு கடவுள் பக்தி ரொம்ப ஜாஸ்தி, வாரமானா சர்ச்சுக்குப் போயாகணும். டவுன் ஹால் ரோடில இருக்கிற ரோசரி சர்ச் தான் சுசீலா எப்பவும் போறது. முத்தையா ஆசாரிக்கு இதுல அவ்வளவு நம்பிக்கையில்லை. எல்லாம் பொண்ணப் பெத்தவருக்கு எதுமேல தான் நம்பிக்கை வரும். ஒரு பய பிறந்திருந்தாலும், அணுசரனையா இருந்திருக்கும், குடிசை போட கத்துக் கொடுத்து அப்படியே நகட்டி நகட்டி தொழில கத்துக் கொடுத்துட்டு இந்த வயசுக்கு வேலை செய்யுற அவஸ்தையில்லாமல் இருந்திருக்கலாம். என்ன புலம்பி என்ன பண்ண, விதி! என்று புழுங்குவார் மனசுக்குள்ளேயே!
தெற்கு ஆவணி மூல வீதி முனையிலே இருக்கிற ரெண்டு மாடி கட்டிடம், தான் அப்பாவு செட்டியார் நகைக்கடை. அந்தக் கடைல கிடைக்கிற ஆர்டர் தான் செய்துகிட்டு இருந்தார் முத்தையா ஆசாரி. அப்பாவு செட்டியார் கடைக்குண்ணு தனியா பெரிய பட்டறையே இருக்கு இப்போ. ஒரு பத்து பேருக்கு மேல வேலை பாக்குறதுக்கு. பெரியவரு கடைய பார்த்துக்கிட்டு இருந்தப்போ, இவரப் போல கிராக்கி வேலை பாக்குற அஞ்சு ஆறு பேத்த வச்சுக்கிட்டு வேலையெல்லாம் கொடுத்துக் கொண்டிருந்தார். வேலை குறையாம இருக்கும், முத்தையா ஆசாரியும் நல்லா செழிம்பா இருந்தாரு. யாரு கண்ணு பட்டதோ, இப்போ பெரியவரு பையன் வந்து பொறுப்பு எடுத்தவுடன் நிலைமையே தலைகீழா மாறிப்போச்சு, கடை மாடியிலேயே பட்டறைப் போட்டு, பத்து ஆள வச்சு வேலை வாங்கலாம்ப்பா! நம்ம கண்ணு முன்னாடி வேலை நடந்தாத்தான் நமக்கு நல்லது! என்று சொல்ல, அவனோட அப்பாவும் ஒத்துக்கிட்டாரு.
வேலை பாக்கையிலே விழுகிற குப்பையெல்லாம் அவங்க எடுத்துக்குறதால, குப்பை அலசும்போது கிடைக்கிற எட்டு பத்து கிராமும் ஆசாரிகளுக்கு கிடைக்காம போயிடும். அதுபோக மெழுகுல உருட்டுற சன்னமும், பொடியும் தான் மிச்சமே. ஒரே லாபம், பங்குனி, மார்கழி மாசம் தவிர மத்த எல்லா நாள்லயும் வேலை இருக்கும். தொடர்ச்சியா சுனக்கம் இல்லாம வருமானம் வந்துக்கிட்டு இருக்கும். இங்கேயே வந்துடு முத்தையா நீயும்? என்று பெரிய முதலாளி சொன்னபோது, சரிதான் அண்ணாச்சி, கொஞ்சம் யோசிச்சு சொல்லுதேன் என்று அங்கிருந்து நகர்ந்து விட்டார். அது எப்படி முடியும்? கடைக்கு மேலேயே வேலை பாக்குறதுக்கு, ஒரு சுதந்தரம் இருக்காது ஒரு மண்ணும் இருக்காது. குப்பைல விழறது எல்லாம் அவனுக்கு கொடுக்கனுமனா, அது ஒரு அடிமை வாழ்க்கை மாதிரி ஆகிப்போயிடுமேன்னு அவருக்கு பயம். அதனால பதிலே சொல்லாமல் நழுவிட்டார்.
தனியா எப்பவும் போல வீட்டு பட்டறையிலேயே மெனக்கெட்டா கிராக்கி வேலை நிறைய கிடைக்கும். அது போதும் நமக்கு என்ற நம்பிக்கையில் வந்தவர், நினைத்த மாதிரி போதுமான அளவு வேலை வராததால், பெரியவ கல்யாணம் சின்னப் பிள்ளைக படிப்புச் செலவு, துணிமணி அது இதுன்னு சம்பாதிக்கிற காசெல்லாம், தூர் இல்லாத வாளில தண்ணி நிறைக்கிற மாதிரில்லா இருக்கு என்று மலைப்பாய்த் தோன்றியது முத்தையா ஆசாரிக்கு. பெரியவளுக்கு கல்யாணம் பண்ணியாச்சு ஒரு ஆளு குறையுதுன்னு நினச்சா, மாப்பிள்ளைக்கு சீரு மயிருண்ணு செய்றதுக்குள்ள தாவூ தீந்து போச்சு முத்தையா ஆசாரிக்கு. போனவ வாழ்க்கையும் பெரிசா மணத்துப் போயிடல. தொட்டுக்கோ தொடைச்சுக்கோன்னு இருக்கிற நிலைமையிலே என்ன பெருசா மானம் வேண்டிகிடக்கு நமக்கெல்லாம், திரும்பவும் அப்பாவுச் செட்டியார் கடைக்கே போயி ஏன் கேக்ககூடாதுன்னு என்று தோன்றியது முத்தையா ஆசாரிக்கு.
செட்டியார் இப்போல்லாம் கடைக்கு அவ்வளவா வருவதில்லை என்று உங்கரம் பால்ராஜ் சொன்னது ஞாபகம் வந்தது. அது தான் அவருக்கு கொஞ்சம் சங்கட்டமா இருந்தது. என்ன ஒரே கஷ்டம், செட்டியார் மகனைப் பாத்து பேசவேண்டியதிருக்கும், அவனுக்கு மனுஷங்களோட தராதரமே தெரியாத பொடிப்பய! சரி விதி விட்ட வழி.. போயித்தான் பார்ப்போம் என்று தனக்குத் தானே சமாதானம் சொல்லிக் கொண்டார்.
பெரிய மக சுட்டு வச்சிருந்த இட்லில ரெண்ட எடுத்து பிச்சுப் போட்டுக்கிட்டு, சட்டைய மாட்டிக்கிட்டு கிளம்பிட்டார். சட்டைப்பைய தடவி பாத்தவரு, ஒண்ணுமில்லை போலயே என்பது போல உதட்டை பிதுக்கினார். இவரையே பார்த்துக் கொண்டிருந்த ஸ்டெல்லாவிடம் காசு இருந்தது, ஆனா அவரிடம் கொடுக்க ஒரே யோசனையா இருந்தது. பிள்ளைகளோட சேர்ந்து சினிமாவுக்கு போவதற்காய் சேர்த்த காசு. தீக்குச்சி அடுக்குவதில் பெருசா காசு கிடைக்கலேன்னாலும், இது போல சினிமாவுக்குப் போக, பவுடர் வாங்க என்று ஒப்பேத்தலாம். இன்னைக்கு விட்டா அடுத்த வாரம்தான் கையில காசு பாக்க முடியும் என்று யோசித்தவள். என்ன நினைத்தாலோ பழைய ரெமி பவுடர் டப்பாவில் வைத்திருந்த, பத்து ரூவாய எடுத்து அப்பாவிடம் கொடுத்தாள்.
இந்தாங்க, இது தான் கடைசி! சின்னவளுக்கு ஜாமெட்ரி பாக்ஸ் வாங்குறதுக்கு வச்சிருந்தது! தேவையானா மட்டும் செலவு பண்ணுங்க! என்று ஸ்டெல்லா சொன்னதுக்குக் காரணமே சின்ன மக விஷயத்தில அவருக்கு எப்போதும் கூடுதல் கவனம் உண்டு, அதனால செலவு செய்யமாட்டாரு அவசியமில்லாம என்பதால் தான். இவருக்கு அதன் காரணம் தெரிந்தாலும், சரிம்மா! என்று ஓட்டுச்சாப்பில் எரவானத்துல சொருகியிருந்த செருப்பை கையில் எடுத்து பூபூ வென ஊதினார். தூசி நகர்ந்த பாடாய் இல்லை. ஸ்டெல்லா, பழைய வேஷ்டி கிழிசல் இருந்தா குடும்மா, செருப்பு ஒரே தூசியா இருக்கு என்றார், அப்படிச் சொன்னவருக்கு எல்லாம் வேஷ்டியிலும் கிழிசல் இருப்பது ஞாபகத்துக்கு வர, பதட்டமாய் இருந்தது, கொடியில தொங்குறத எடுத்துட்டு வந்துடுவாளோன்னு. வேஷ்டியில் இட்லித்துணிக்காய் கிழித்ததில், மிஞ்சியதை கொண்டு வந்து தந்தாள். அப்பா! இந்தாங்க... இனிமே கிழிக்க, உங்க வேஷ்டி தான்! என்று மிரட்டினாள்.
முத்தையா ஆசாரி செருப்பைத் துடைத்துவிட்டு, எரவானத்திலேயே மீண்டும் சொருகினார் துணியை. அப்பத்தான் செருப்ப எடுக்கும்போதே தொடைக்க ஞாபகம் வரும் என்று நினைத்துக் கொண்டே, வரேம்மா! முருகன் வந்து சீட்டுக்காசு கேட்டா அப்பா, சாயங்காலந்தான் வருவாருன்னு சொல்லிடு என்று வெயிலைப் பார்த்து கண்களை சுருக்கிக்கொண்டே கிளம்பினார். எல்லா வீடுகளையும் கடந்து, தெருவாசலில் காலை வைத்தவர், திரும்பி மகள் வாசலிலே இருக்கிறாளா? என்று பார்த்தார். ஸ்டெல்லா அங்கிருந்தபடியே கையை ஆட்டினாள். முத்தையா ஆசாரி கையை ஆட்டாது, தலையை பலமாய் ஆட்டிவிட்டு நடக்கத்தொடங்கினார்.
சுசீலா இறந்த மறுவருஷம் கொஞ்ச நஞ்சம் சேர்த்த காசெல்லாம் போட்டு இவளுக்கு ஒரு கல்யாணத்த முடிச்சாரு. எபினேசரோட மகன், எலிமெண்டிரி ஸ்கூல் வாத்தியாரா இருக்கான் சாயல்புரத்துல. நல்ல ’பய’ன்னு பாதிரி சொல்ல, அவனுக்குக் கட்டி வச்சாரு. அஞ்சு பவுன் நகையும், அஞ்சாயிரம் ரொக்கமும் போட்டு சிறப்பா நடத்தி வச்சாரு முத்தையா ஆசாரி. மூணு மாசத்துலயே அவங்கூட இருக்கமாட்டேன்னு வந்துட்டா, என்னமோ மனசுக்கு பிடிக்கல கேக்காதப்பா என்று அழுதவளை மேலும் ஏதும் கேக்க தோணலை அவருக்கு. புருஷங்காரன் வந்தான், மய்க்கா நாளே, அவளோட துணிமணியெல்லாம் கொடுத்துட்டு, இந்த மாதிரி ஓடுகாலி எல்லாம் எங்க வீட்டுக்கு ஆகாது! என்று சொல்லிட்டுப் போயிட்டான். வேதனையா இருந்தது அவருக்கு, ஒருவேளை சுசீலா இருந்து பண்ணி வச்சிருந்தா, நல்லாயிருந்திருக்குமோ? நம்ம தான் சரியா புத்திமதி சொல்லாம விட்டுட்டமோ என்று தோன்றியது முத்தையா ஆசாரிக்கு.
எம்.கே.புரம் ரயில்வே கிராஸ் தாண்டினப்புறம் இடது பக்கம் மாடுகளுக்கு லாடம் அடித்துக் கொண்டிருந்தார்கள். மாடு மல்லாக்க படுத்துக்குகொண்டு கிஸ்புஸ்ஸென்று வாயில் கொஞ்சம் நுரை தள்ளிக் கொண்டு கீழ் நோக்கி வெறித்துப் பாத்துக் கொண்டிருந்தது. பாவம் எத்தனை தான் தாங்குமது என்று நினைத்துக் கொண்டார். வண்டியில் பருத்திப்பால் பார்த்த போது, இவருக்கு பருத்திப் பால் குடிச்சு எத்தனை நாளாச்சு, குடிக்கணும்னு ஆசை வந்தது, நடக்கும்போதே கால்கள் அந்தப்பக்கமாய் இழுப்பதாய்த் தோன்றியது. அப்படி என்ன கேக்குது நாக்கு? இழுத்து வச்சு அறுக்காம? என்று தன்னையே கடிந்து கொண்டு அப்பாவு செட்டியார் கடையை நோக்கி நடந்தார். கான்சாமேட்டுத்தெருவை தாண்டும் போது, முக்கில இருந்த சின்ன மாதாக்கோயிலைப் பார்த்து நெற்றியில் சிலுவைப் போட்டுக் கொண்டு கடையின் முகப்புக்கு வந்தார்.
தயங்கி கொஞ்சம் நின்றவர், மளமளவென ஆறுபடி ஏறி, கடந்தவுடன் செருப்பை இடது பக்கம் விட்டார். காலை அழுத்தி தேங்காய் நார் மிதியில் துடைத்துவிட்டு கதவின் ஓரத்தில், கல்லாவில் இருக்கும் முதலாளியின் மகன் பார்ப்பது போல நின்று கொண்டார். வாசலில் நின்று கொண்டிருந்தவரை அவன் கண்டுகொள்ளவில்லை. ஏதோ மும்முரமா மேசையில கவுந்துகிட்டு முக்கிய ஜோலி பாக்குறா மாதிரி பாவ்லா பண்ணிக்கிட்டிருக்கான்! நமக்குத் தெரியாத இவன் பவுசியெல்லாம் என்று நினைத்துக் கொண்டே முகத்தை அப்பாவியாய் வைத்துக் கொண்டு நின்றார். கடையில் அவ்வளவு வியாபாரம் இல்லை அன்று. வந்த ஒண்ணு ரெண்டு கிராக்கியும் வெள்ளிச் சாமான் விக்கிற பகுதியில் தான் உட்கார்ந்து கொண்டிருந்தார்கள். வந்திருந்த கிராக்கிகள், உசிலம்பட்டி, தேனி பக்கம் மாதிரி தெரிந்தது. தெலுங்கு பேசுவது போல இருந்தது. நாயக்கமாருகளா இருக்கும், கருகமணியும், குண்டும் போட்டிருந்தார்கள்.
கடையில் வேலை பார்ப்பவர்களில் தெரிந்தவர்கள் அங்கங்கு இருந்தபடியே முத்தையா ஆசாரியைப் பார்த்து பரிச்சய சிரிப்பு சிரித்தார்கள். இன்னும் எவ்வளவு நேரம் ஆக்குவானோ என்று தோன்றியது. பசி வேறு வயத்தக்கிள்ளியது, ரெண்டு இட்லி சாப்பிட்டு வந்தது பத்தலை போல. கொஞ்சம் நீச்சத்தண்ணி குடிச்சிட்டு வந்திருக்கலாம், வெயிலுக்கு இதமா இருந்திருக்கும். சாப்பிட்ட ரெண்டு இட்லியும் நிறைய நடந்ததால் சீக்கிரம் ஜீரனம் ஆயிடுச்சு போல. வேலை ஏதாவது கொடுத்தான்னா, போகும்போது ஏதாவது சாப்பிட்டுட்டுப் போகலாம், அப்படியே பிள்ளைகளுக்கும் ஏதாவது வாங்கிகிடலாம். புதுக்கடைகளில் வேலை கேக்கலாம்தான், ஆனா தெரிந்த ஆள் இல்லாம நம்பி வேலை தரமாட்டார்கள். குறைஞ்சது நூறு கிராம் தங்கமாவது, ஓடமாட்டேங்கிற உத்திரவாதத்துக்கு கொடுக்கணும். வேலை கொடுக்குறதும், நூறு கிராமுக்கு மேல போகாம பாத்துக்குவானுங்க கடைக்காரனுங்க. நம்மளால அதெல்லாம் தோதுப்படாது என்பது அவருக்கு தெரியும். அதனால தான் இங்க வந்து காய்ஞ்சு கிடக்குறது எல்லாம் என்று தன் இயலாமையை நொந்து கொண்டார்.
பால்ஸ் வேலை இவரு நல்லா பார்ப்பாருன்னு முதலாளி மகனுக்குத் தெரியும். அதனால எப்பவாவது வர்ற ஆரம், பால் நெக்லஸ் மட்டும் இவருக்கு கொடுத்தா நல்லா இருக்கும் என்று நினைத்துக் கொண்டார். இருக்கும்! ஏதாவது கொடுப்பான்! அவன் அப்பாக்கு எத்தனை வருஷமா வேலை பார்த்திருக்காரு! அதுக்காகவாவது கொடுக்கமாட்டானா என்ன? என்று தன்னைத்தானே தேற்றிக் கொண்டார். நிமிர்ந்து பார்த்தவன், அவரைத்தாண்டி பின்னால் நின்று கொண்டிருந்த கடைப்பையனை அழைத்து, டேய்! போய் மாடர்ன் ரெஸ்டாரண்டில இருந்து ரோஸ்மில்க் வாங்கிட்டு வா! நிறைய ஐஸ் போட்டு! ரெண்டா வாங்கிக்கோ! என்றான். இவரை அப்போது தான் பார்ப்பது போல, என்ன முத்தையா ஆசாரி? எப்ப வந்தீரு? அதுவும் கொள்ளத்தூரம்? பேச்சில் எகத்தாளம் தெறித்தது, இவருக்கே தெரிந்தது. ஏலேய்! பால்ராஜூ, என்னவாம் முத்தையா ஆசாரிக்கு இந்தப் பக்கம் காத்தடிச்சிருக்கு? பால்ராஜு, இவரைப் பார்த்து விட்டு, பார்வையை கீழே இறக்கினான்.
சொல்லுமய்யா எதுக்கு வந்தீரு? சோலி கிடக்கு எனக்கு! என்றான். அவமானமாய் இருந்தது, இவருக்கு. ஒன்றும் சொல்லாமல், சுற்றுமுற்றும் பார்த்தார். கடையில இருக்குற ஆட்கள் எல்லாம், இவரையே பார்த்தார்கள், கிராக்கிகள் கூட திரும்பி பார்த்ததாய்ப் பட்டது. இல்ல தம்பி, அப்பாவ பாக்கலாம்னு வந்தேன், சொந்தமா கம்பிமெஷின் போட்டிருக்கேன். அதான் அப்பாக்கிட்ட சொல்லிட்டு, நம்ம பயககிட்டயும் சொல்லிட்டுப்போலாம்னு வந்தேன். நம்மகடைக்குன்னா கூலியக் கொஞ்சம் குறைச்சுக்கிடலாம்னு அப்பாக்கிட்ட சொல்லிடுங்க தம்பி! நான் இன்னொரு நாளு வந்து அப்பாவ பாக்குறேன்! என்று செருப்பை மாட்டிக் கொண்டு ஏதோ சாதித்தது போல படியிறங்கினார் முத்தையா ஆசாரி.
25 comments:
மற்றவருக்கு குனிந்து கூழைக் கும்பிடு போடாத மனசு, எப்போதும் பொன் தான்.
ஒரு காலத்தில் ஓஹோ என இருந்த வயதான நகைத்தொழிலாளியின் இன்றைய நிலை தெளிவாய்...!
கடைசி வரியில் மெல்லமாய் ஒரு சிரிப்பு வருகிறது..!
கடைசியில்... மிரட்டியது ஆசாரியின் தன்மானம்.... பாராட்டுக்கள்.
உங்களுக்கு என் பொங்கல் வாழ்த்துக்கள்.
அப்பா! இந்தாங்க... இனிமே கிழிக்க, உங்க வேஷ்டி தான்!//
ஹும்..
படித்து முடித்ததும் நிறைந்த மனது கூட சூம்பிவிடும்... :(
அருமையான பதிவு
ஆசாரியின் இன்றைய வாழ்க்கையை படம் பிடித்து இருக்கிறீர்கள். முடிவில் அவரது பசியோ, கஷ்டமோ அவரது கண்ணில் தெரியாமல் அவரின் தன்மானம் தனித்துத் தெரிகிறது.
கதையை அருமையாக கொண்டு சென்று அழகாக முடித்துள்ளீர்கள். பாராட்டுகள்.
ஏனோ நல்ல திறமையிருந்தும் தன்மானம் மிக்க பலரின் வாழ்க்கை இப்படித்தான் கஷ்டப்பட வேண்டியதாக உள்ளது.
வலி நிறைந்த இதயத்துடன்,
என்னத்த சொல்ல... இது தேவையில்லாத வீம்போன்னு கூட தோணுது... இருந்தாலும் சுயமரியாதைன்றது இல்லேன்னா , நம்மள நம்மளே மதிக்கலேன்னா யாரு நம்மள மதிக்க போறா... இருந்தாலும் சுயமரியாதைய இழந்துதான் நிக்க முடியது நிரைய இடத்துல... ஒன்னா இழந்தாதான் ஒன்ன பெற முடியுன்னு நம்மளக்கு நம்மளே சொல்லிபோம் .. அருமையான எழுத்து.. ஆனா முடிவு சரிதானான்னு சொல்ல முடியலண்ணா... ஏன் சொல்றேன்னா இன்னிக்கு வாழ்கையே survival of the fittest ன்னுதான் ஒடிட்டு இருக்குன்னா... புத்தியுள்ளவன் பொழச்சுக்காவ்ன்னு சொல்ல ஆரம்பிச்சுட்டோம்.. அந்த புத்தின்றது சுயமாரியாதைய இழந்துட்டு நிக்கிரது, மத்தவன்ன ஏமாத்தி பொழைக்கிரதுன்னு ஆயிடுச்சு இல்லயா...
அப்பாவுசெட்டியார் கடை,தெற்குஆவணி வீதி பிள்ளையார், பின்னால் இருக்கும் சந்தில் உள்ள பட்டறைகள்,சோலாப்பூர்,சாங்க்லியிலிருந்து வந்திருக்கும் மராட்டிய நகைத்தொழிலாளர்கள்,குஜராத்தி கல்யாண மண்டபம் எல்லாமே மனதில் நிழலாடுகிறது.அந்தப்பகுதி நகைத்தொழிலாளர்களோடு நான் பழகியிருக்கிறென்.நடப்புகள் மூலம் முத்தையா ஆசாரியின் வாழ்க்கையை,பாடுகளைச்சொன்னதுஅருமை.சபாஷ் ராகவன்!---காஸ்யபன்
Pongal nalvazhthukal Raghavan.
Pinnar vanthu padikkiren.
இனிய பொஙகல் வாழ்த்துக்கள்.
அண்ணே . மண்டியிடாத மானம் .வேறு என்ன சொல்லறதுன்னு தெரியல
எங்க சொந்தத்தில நிறைய பேர் இந்த தொழில் பார்க்கிறார்கள் . எனக்கு இந்த தொழில பத்தி ஒன்னும் தெரியாது
.அவர்களின் நிலைமையும் இப்படித்தான் இருக்கும் போல .
படித்து முடித்ததும் மனம் கனத்தது!
மனதைக் கணக்க செய்த கதை. என்றைக்கும் ஏழைகளாக இருந்தாலும் நேர்மையிலும் தன்மானத்திலும் தொழில் நுட்பத்திலும் காட்டில் உலவும் சிங்கத்தைப் போல கம்பீரம் குறையாதவர்கள் முத்தையா ஆசாரி போன்றவர்கள். இன்றைக்கும் முத்தையா ஆசாரிபோன்ற சிங்கங்கள் அதன் பெருமிதம் குறையாமல் நகரக் காடுகளில் உலவிக்கொண்டுதான் இருக்கின்றன.
//படியிறங்கினார் முத்தையா ஆசாரி//
ஆமாம், படியிறக்கம்தான். ஓர் அவலம் இது. இதை எண்ணி நோகவேண்டுமே அல்லாமல் பெருமைப் படுவதற்கு ஒன்றும் இல்லை. ஆனால் அடுத்தொரு வாக்கியம் 'மறுநாள், கடைத்தெரு மண்டியொன்றில் மூடை தூக்கிக்கொண்டிருந்தார் முத்தையா ஆசாரி' என்று வந்திருந்தால் இதில் பெருமைப்பட ஏதுவாகிறது.
//ஸ்டெல்லாவிடம் காசு இருந்தது, ஆனா... தீக்குச்சி அடுக்குவதில் பெருசா காசு கிடைக்கலேன்னாலும், ... யோசித்தவள் என்ன நினைத்தாலோ பழைய ரெமி பவுடர் டப்பாவில் வைத்திருந்த, பத்து ரூவாய எடுத்து அப்பாவிடம் கொடுத்தாள்.//
இந்தக் காட்சி என்னை மிகவும் துன்புறுத்துவதால் மேற்சொன்ன முடிவுக்கு வருகிறேன்.
பழைய விழுமியங்களைத் தூக்கிப் பிடிப்பதும் அவற்றை நிலைநிறுத்த ஏங்குவதும் romanticism இல்லை என்று கூடத் தோன்றலாம், ஆனால் corruption.
ரோஷமும் வீம்பும்தான் இப்படிப்பட்டவர்களுக்கான சொத்தாக இருக்கிறது. சங்கடப்பட வைக்கும் கதை.
good
இப்படிப்பட்டவர்கள் இன்னும் நம்மில் இருக்கத்தான் இருக்கிறார்கள் ராகவன்.
இவர்களின் நிலை மறுநாளில் மாறிவிடும்.மறுபடித் துயர் வரும்.பல்லைக் கடித்துக்கொண்டு தாங்குவார்கள்.
அல்லது அப்பாவுச் செட்டியார்கடை வாயில் வரை போவார்கள்.மகள் கண்டிப்பாய்க்கொடுத்த பத்து ரூபாயில் பருத்திப்பால் குடிக்காமல் இழுக்கும் காலை மிரட்டித் திருப்பி நடப்பார்கள்.
அருமையான-எதற்கும் வளைந்து கொடுக்காத மனங்கள் அருகிவிட்ட பொழுதில் இது அபாரம் ராகவன்.
அப்பாவுச் செட்டியார் கடைக்கு வந்திருக்கும் கிராக்கி கழுத்தில் கிடப்பது என்னவென்பது வரைக்கும் நீள்கிறது உங்கள் கழுகுப் பார்வை.
இப்போதெல்லாம் உங்கள் எழுத்தை சுவாசிக்கிறேன்.
இன்று ஆசாரிகளின் நிலைமை அப்படித்தான் இருக்கிறது. இப்போது மெஷின் கட்டிங் என்று சொல்வார்களே அதெல்லாம் வந்த பிறகு இவர்களுக்கு வேலையே இல்லாமல் போய்விட்டது.
நகைத் தொழில் செய்பவர்களின் நிலைமை இன்று வறுமையில் இருப்பதைக் கண்கூடாகவே பார்த்திருக்கிறேன் நான்.
அவர்கள் பிள்ளைகளைப் படிக்க வைத்துக் கொண்டு கொஞ்சம் மேலே வந்து கொண்டிருக்கிறார்கள்.
அருமையானக் கதை ராகவன் சார். மனதிற்கு கஷ்டமாகவும் இருக்கிறது. ஏனோ தெரியவில்லை..
மிகுந்த செய்நேர்த்தியுடனான கதை.அங்குலம் அங்குலமாக ஒரு வாழக்கையை செதுக்குகிற கை ராகவன்.
அருமை.எனக்கும் கூட அந்த ரெமிபவுடர் டப்பா சடீரென் அடிக்குது.கடுகு டப்பா,ஊதுபத்தி தகர உருளை, இப்படி வீட்டுக்கு வீடு பொருள் மாறும்.ஆனால் வலி ஒன்றுதான்.
ragavan,
The profesional touch!
go ahead ragavan!
Appappa. Kadaisi varigal padikkira varaikkum manasu kashtama patha pathaippa irunthathu. Romba nallaa mudichirukkeenga Raghavan.
அன்பு இளங்கோ,
உங்கள் கருத்துக்கு நன்றியும், அன்பும்.
அன்புட்ன
ராகவன்
அன்பு நண்பர்கள் எல்லோருக்கும்,
உங்கள் தொடர் வாசிப்புக்கும், உங்கள் வாழ்த்துக்கும், அன்புக்கும் என்னுடைய நன்றிகளும், அன்பும் எப்போதும்.
வேலைப் பளு அதிகமாய் இருக்கும் காரணத்தினால், என்னால் தனித்தனியாய் என் அன்பை சொல்ல முடியவில்லை.
அன்புடன்
ராகவன்
Post a Comment