Saturday, February 05, 2011

நனுபாலிம்ப...

அகண்ட தெருக்களில் உருளும் தேர்ச்சக்கரங்களின் மசி அப்பிய கடையாணிகளென தாங்கி நிற்கும் சப்தகதிகள் பதுமைகள் மேல் நின்று கொண்டிருக்கும் மண்டபத்தேர் தாண்டி நீண்டு கொண்டிருக்கும் ஒற்றைத் தந்தியின் ஸ்ருதி வளர்த்த வடம் பற்றி இழுக்க நகராமல் நின்ற தேர்சக்கரங்களின் மரக்கால்களில் துளிர்விட்ட இலைகளில் இருந்து உதிர்ந்த ஒற்றை சருகு அடியில் இருந்து அகற்ற நகர்ந்த கதையை பாடியவர்களின் பக்தியில் இல்லாத கடவுள், முயங்கி களைத்த நிமிடங்களின் ஆசுவாசத்திற்கு அழைக்கும் பாட்டில் மட்டும் உறைவானோ அல்லது முக்கண்ணனின் சிரம், கரம் பற்றிக் கொள்ள தன்னுள் சேர்த்துக் கொண்டவனை தன்னை ரட்சிக்க அழைத்தவனை ஆரத்தழுவி தேற்றுவானோ என்ற சந்தேகங்களின் ஈக்கள் மொய்க்கின்ற பறிக்கப்பட்ட தடாக மலர்களின் விழியில் இருந்து சொட்டுவது தண்டுகள் உறிஞ்சி வைத்து துப்பும் நீரா அல்லது தேனா என்று தெளிவதன் முன்னம் சிந்தை குளிர்ந்த கடவுள் இரங்கி அளித்த வரங்களில், சொல்ப குறைவுடன் முழுமை தந்த சுநாதங்களின் மாத்திரை அளவில் ஏறி இறங்கும் பயணங்களின் இறுதியில் அடைவது வைகுந்தனின் பாதகமலங்கள் தானோ.

கடவுளை மெய்பிக்க வந்த உண்மைகளில் பக்தியும், காதலும், காமமும் தெளிதாயின. அலங்கார கட்டுக்களில் இருந்து சற்றே விலகி, மோன நிலைச்சமன்கள் இட்டு நிரப்பிய கோப்பையில் வழியும் இசை சார்ந்த அளபெடைகளின் மேலே நகர்ந்தும் ஊர்ந்தும் செல்லும் சர்ப்பமென வளர்ந்து மின்னும் பளபளப்பில் கிறங்கி அதனுள் வழுக்கிச்செல்லும் 72 அடுக்கு மாளிகைகளுக்குள் எந்த அறையில் ஒளிந்து இருக்கும் பெயரறியா சப்தங்களும், மோனங்களும்? ஏறவும் இறங்கவும் ஆறு படிகளை கொண்ட பாதையில், தத்திச் செல்லவும், தாண்டிச் செல்லவும், ஓடிச்செல்லவும், எல்லாம் வகையிருக்கும் அதன் கைப்பிடிக்கட்டைகளின் 18 எண்ணம், தொட்டு தடவி உணர்ந்த விழியற்றவனின் தொடுபுணர்தலில் இருந்து ஜனித்த குழந்தை பேரழகியென குழிவயிறும், குவி ஸ்தனங்களும், கோபுர முலைகளுமாய் நெற்றித்தடத்தில் கீற்று நிலாவுமாய் சிறு நகை, பெருவிழி, துளை நாசியென தொன்மங்களின் படிம நிலைகள் கடந்து அதே சுகந்தத்தில் இழுவும் மயிற்பீலியின் வர்ணங்கள் இட்டு நிரப்பிய கிண்ணங்களில் நிறைந்து, வழிந்து, தெறிக்கும் சுத்த சப்தங்கள் முனகிச் செல்லும் பாட்டில் ஸ ரி க ப த ஸ வும் ஸ த ப க ரி ஸ வும் சீண்டிச் செல்லும் கம்பிகளில் விழுந்த காதல், இளையராஜாவின் கையில் பட்டு இப்படியானது. “ஒரு ராகம் பாடலோடு காதில்”

ஆனந்தராகம் படத்தில் அமைந்த இந்த இருகுரலிசையில் இருக்கும் குரல்கள், பிரபஞ்சம் பதுக்கி வைத்த பேரழகிகளின் மேல் கொண்ட காமமும், காதலும் இன்னும் மிச்சமிருக்கிற ஆத்ம மோகத்தில் இருந்து மீட்கப்பட்ட நரம்புகளினால் கட்டப்பட்ட வாத்தியங்களில் தோன்றிய மென்பரவல்கள் இந்த இசை. ஏசுதாஸின் குரலும், ஜானகியின் குரலும் ஓலைக்கொட்டானில் பொத்திவைத்த சில்லுக்கருப்பட்டியில், கொஞ்சம் தினைமாவும், கொம்புத் தேனும் கலந்தது போன்ற வழுக்கும், மயக்கும் மெட்டு. காதலும், மெல்லிய பாலாடை காமமும் மிதந்து பறக்கும் இறகென மனசுக்குள் வந்து அமரும் இடங்கள் அனேகம். மோஹனம் பக்தி, காதல் என்ற இரண்டும் சமநிலையில் நிறுத்த பிரகடனிக்கப்பட்ட முதல் தண்டோரா இந்த மோகனம். எல்லோரும் சுலபமாய் கையாண்ட ஒரு ராகம், எல்லோரையும் மயக்கிய ராகம்... கேவிஎம், எம்எஸ்வி என்று தேய்த்து தேய்த்து பார்க்க பூதங்களை அல்லாது தேவதைகளை பிரசவித்த விளக்கு இந்த மோகனம், அதனால் தானோ என்னவோ மோஹனத்தில் அமைந்த பாடல்கள் எல்லாம் காதலும், பக்தியும், காமமும் சங்கமிக்கும் திரிவேணியாய் இருக்கிறது எப்போதும்.

இளையராஜாவின் மிக இனிமையான பாடல்கள், அதன் ஸ்வரகட்டுமானங்களில் உள்ள நவீன கையாள்தலிலும், ஆர்க்கிடெக்சரிலும் தான் இருக்கிறது. பாடத் தெரிந்தவர்கள் அல்லது ஆசைப்படுபவர்கள்... ஒரு ராகம் பாடலைப் பாடி பார்க்கலாம்... அதன் சங்கிலித் தொடர் போல ஆரம்பிக்கும் பல்லவி நம்மை புதுவிதமான இசை அனுபவத்தைத் தரும். மெய்யாகவே சொல்கிறேன்... இந்த பாடலில் சிவக்குமாரின் சின்ன அசட்டுத்தனமும்... ராதாவின் அலட்சிய அழகும்... மீண்டும் மீண்டும் கேட்க, பார்க்கத் தூண்டிய பாடல்... பாலாவிற்கு மிகவும் பிடித்த இந்த பாடலை என்னை திரும்ப திரும்ப பாடச் சொல்லி மெருகேற்றுவாள் என் ரசனையை. ”நனுபாலிம்ப நடசி வொச்சிதீவோ” என்று ராமனை அழைத்த தியாகராஜரின் கதியில் இருந்து சற்றும் குறைவில்லாத ரசனையும், காதலும், மென்காமமும் நிறைந்த இந்த பாடல் மோஹனப் பந்தல் விரிக்கும் குளிர் நிழல்.

http://www.youtube.com/watch?v=GGekCjufNWY


8 comments:

இளங்கோ said...

பாடல் மயக்குவது உண்மை. பகிர்வுக்கு நன்றிகள் அண்ணா.

முதல் இரண்டு பத்தியில் முற்றுப் புள்ளியைத் தேடிக் கொண்டிருக்கிறேன் :)

காமராஜ் said...

எனக்கு ராதாவோடு சிவகுமாரை இணைத்துப்பார்க்கப்பிடிக்காது.இந்த தனுஷ்,சிம்பு மாதிரி உலக நாயகர்களோடு ஜோதிகாவையும் அப்படித்தான்.ஆனால் மனது மயக்கும் அந்தப்பாடல்களுக்காக இதை மறுதலிக்க நேரும்.எனக்குப்பிடித்த ஆயிரக்கணக்கான பாடல்களில் முதல்பத்துக்குள் இந்த பாடல் வரும்.நல்ல பாடல்.

சிவகுமாரன் said...

யப்பா... மூச்சிரைக்கிறது. உங்கள் பதிவைப் படிக்கவே நான் பிராணாயாமப் பயிற்சி எடுக்க வேண்டும் போல் உள்ளது.
பகிர்வுக்கு நன்றி

'பரிவை' சே.குமார் said...

அண்ணா...

ஒரு பாரா முழுவது முற்றுப் புள்ளி வைக்காமல் எழுதியிருப்பது அதுவும் இலக்கிய நயமான ஒரு எழுத்தில் வர்ணணைகளைக் கொண்டு வந்து அப்படியே படிப்பவர்களின் மனதுக்குள் புகுந்து வாசம் செய்யும்படியான உங்கள் உத்தி அற்புதம்.

அருமையான எழுத்து. நல்ல பாடலுக்கு அருமையான விளக்கம்.

sakthi said...

யோவ் அண்ணா கொன்னுட்டீர் ::))))

Unknown said...

Arputhamaana ezhuththu nadai. Nanri.

உயிரோடை said...

அருமையான பகிர்வு

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

இந்த இசையின் பயணத்தை ஒரு நகரும் தேருக்கு ஒப்பாகவும் பாடப்பட்டவைகளை உதிர்ந்த சருகுகளாகவும் முளைவிடும் ஸ்வரப் ப்ரஸ்தாபங்களை தேரை வடமிழுத்து நகரச் செய்யும் இயக்கியாகவும் நான் கண்டேன் ராகவன்.

இசையை வேறு யாரும் இப்படி எழுதிப் படித்ததில்லை ராகவன்.
எத்தனை அழகான தமிழ்!தொலைக்காட்சிகளிலும் பத்திரிகைகளிலும் என்றோ தொலைத்துவிட்ட தமிழ் உங்களின் எழுத்தில் மறுபடி மறுபடிப் பிறந்தவண்னம் இருக்கிறது ராகவன்.

முற்றுப்புள்ளியைத் துறந்த ஒரு ஏகாந்தம்.மொழியைத் துறந்த ஒரு பரவசம்.