Saturday, April 16, 2011

மருதாணி சித்திரங்கள் - 2எப்பவும் மெகாவாட் கணக்கில் இருக்கும் ரகுவின் பளீர் புன்னகை, இன்று சைக்கிளை நிறுத்திவிட்டு வந்த போது கிலோவாட் கணக்கில் தான் இருந்தது.  கொஞ்சம் சீக்கிரமே கூட வந்திருக்கிறான், வழக்கத்தை விட.  என்னிடம் ஏதோ முக்கியமான செய்தி சொல்ல துடிப்பவன் போல.

காய்கறிக்கார அம்மா போகும் வரையில் வேறு வழியில்லாமல் தான் பெருமாள் கோயில் யானையை பற்றி சொன்னாற்போல இருந்தது.  பாட்டி காய்கறியை உள்ளே எடுத்துப் போனதும், “மாலினி என்னைத்தான் கல்யாணம் செய்துப்பேன்னு சொல்றா வித்யா! என்றான் 

 மாலினி யார்? ரகு உன் நெற்றில விழற முடிக்கற்றைக்காக உயிரையே கொடுக்கலாம்னு சொன்ன மாடி வீட்டுப் பெண்ணா இல்லை, இவன் பாக்க ஓடி வந்து கால dislocate பண்ணிக்கிட்ட பக்கத்து வீட்டுக்காரப் பெண்ணின் அண்ணன் மகளான்னு கொஞ்சம் குழப்பம் ஏற்பட்டது.  அந்த இருவரில் யாராக இருந்தாலும் ரகு அடுத்து சொல்லப்போகும் வார்த்தைகள் ஒன்றே தான் என்று எனக்குத் தோன்றியது. அவனும் எப்படி solve பண்றதுன்னு யோசிச்சுட்டிருக்கேன் வித்யா என்றான்.

நீ இன்னும் வேலைக்கு போகலையே? அதனால குழப்பாம, அவங்க வேற ஜாதியா, உங்க அம்மா அப்பா ஒத்துக்கலையா போன்ற கேள்வியெல்லாம், ரகு விஷயத்தில் கொஞ்சம் அபத்தம் என்பதால், 'அடப்பாவி solve பண்றயா?  இப்படி unromantic-ஆ பேசற?' என்றேன் கொஞ்சம் சிரிப்புடன் தான். 

ரொம்பவே romantic-  தான் சொன்னா  மாடிப்படி வளைவுல கட்டிப் பிடிச்சு உன்னத்தான் கல்யாணம் பண்ணிப்பேன், இல்லேன்னா செத்து போப்போறேன்னு அழுதா வித்யா!. அவங்க வீட்டுல வேற மாப்பிள்ளை நிச்சயம் பண்ணிருக்காங்க, நல்ல வேலைல இருக்கான், நல்ல சம்பளமாம்!.
இவ இப்படி சொல்றா, என்றான் புருவத்தை சுருக்கியவாறே!

உன்னை விட better மாப்பிள்ளைங்கிறயா? என்றேன் கண் சிமிட்டலுடன்.
அதெப்படி? ஒருத்தனுக்கு வேலை இல்லை, சம்பாத்தியம் இல்லைங்கிறது ஒரு பிரச்னையா என்ன? ஒரு பொண்ணோட மனசப்புரிஞ்சுக்கு வேலைல இருக்கணுமா என்ன? என்றான் வரிசைப்பல் சிரிப்புடன்.

அவன் நெற்றியில் இருந்த குங்குமக்கீற்றும், கொஞ்சம் மஞ்சளும் கோயிலில் இருந்து நேராக இங்கு வந்தது போலத் தெரிந்தது. பெருமாள் கிட்ட என்ன வேண்டிக்கிட்ட, எப்படியாவது தப்பிக்க வச்சிருப்பான்னா? என்றேன் கொஞ்சம் சர்க்காஸ்டிக்கா! பையில் வைத்திருந்த துளசியை கிள்ளிக் கொண்டிருந்தவன், என்னை தடக்கென்று ஏறிட்டுப் பார்த்தான்

சே சே அவளுக்கு நல்ல புருஷனா கிடைக்கனும்னு வேண்டிக்கிட்டேன்  என்றான்.  உண்மைதான் அப்படித்தான் வேண்டிக்கொண்டிருப்பான். பாவனைகளிலேயே நிஜமாகிப் போனவன். சற்று நேரம் வேற ஏதேதோ பேசினாலும், அவன் கவனம் கொஞ்சம் சிதறியது நன்றாகவே தெரிந்தது. 

உன்னோட அழகு, அறிவு, படிப்பு எல்லாம் சேர்ந்து, உன்ன மாதிரி யோசிக்கிற, பேசுற, புரிஞ்சுக்குற ஒரு குழந்தை வேணும் ரகுன்னு சொல்றா! என்றான் நடுவே. அவனே நிறுத்தாமல், “எப்படி இருக்கும்னு யோசிச்சு பார்த்தியா வித்யா? கையப்பிடிச்சுக்கிட்டு ஒரு பொண்ணு, ரகு எனக்குச் சின்னதா வேணும்னு சொல்லும் போது!, எனக்கு அப்படியே கண்ணெல்லாம் கலங்கிடுச்சு தெரியுமா? அவளோட சோகமும், வருத்தமும், ஆசையும் எனக்கு புரியறது தான் பிரச்னையே! அது இங்க நிறைய பேர்ட்ட இல்லாதது தான் பிரச்னையே!

ரொம்ப சீக்கிரமா எல்லாம் நடந்த மாதிரி இருக்கு வித்யா!, அவளுக்கு என்னால ஒண்ணும் செய்யமுடியலை.

என்னை விட better ஆன  ஒரு பையன்னு வச்சுக்கோயேன், எனக்கு இத்தனை வருத்தம் இருக்காது! அது இல்லாமப் போனது தான் என் குழப்பத்துக்குக் காரணமே! மத்த பேச்சு வார்த்தை விஷயங்கள்லாம் ஒத்து வந்திட்டதா வேற அம்மா சொன்னாங்க என்றான் சற்று நேரம் கழித்து.

நல்ல தெளிச்சியா, குளிர்ச்சியா இருப்பா வித்யா! சொல்லியிருக்கேன்ல? என்றும் சொன்னான்.

இதில் எதிலுமே, அவளை திருமணம் செய்து கொண்டால் தான் என்ன என்கிற மாதிரி, ஏதாவது சாயல் தட்டுமோ தப்பித்தவறி? என்று காத்திருந்தேன்.  நான் எதிர்பார்த்தபடியே அப்படி ஏதும் தட்டுப்படவில்லை. 

மதியம் சாப்பாட்டு நேரம் ஆனதும் கிளம்பும் போது, க் இல்லாத இரும்பு குதிரைகளோட இந்த latest victim கதை என்ன ஆச்சுன்னு கடிதம் போடு என்று நான் சொன்னது எனக்கே கொஞ்சம் கல் நெஞ்சமான பேச்சாகப் பட்டது. இல்லை ரகுவினால் இந்த பெண்ணுக்கு சங்கடம் வராது என்ற நம்பிக்கையோ என்னவோ?

 செவ்வாய்க்கிழமை வந்த கடிதத்தில் அவள் ஓடிப்போன செய்தி இருந்தது.  பின்னர் வீட்டுக்கு கண்டு பிடித்து கூட்டி வந்தபோது அவள் அப்பா அவளை அடித்த அடியும். உன்ன அடிக்கமுடியாத கையாலாகாததனம் அவள அடிக்கிறேன் என்று சொல்லாமல் சொன்னது அந்த அடி. நெஞ்செல்லாம் ரத்தம் வழிந்தது என்று எழுதியிருந்ததை பார்க்கையில் பாவமாய் இருந்தது.

வியாழக்கிழமை கடிதம் மொட்டை மாடியில், தென்னங்கீத்தினூடே தெரிந்த பிறை நிலா இரவில், அவளுக்கு எல்லாவற்றையும் புரிய வைத்ததாகவும், எல்லாம் சரியாகிவிடும் என்றும் முடித்திருந்தான்.

ஒரு மாதம் கழித்து, ஒரு சனிக்கிழமை கையில் ஒரு போட்டோவுடன் வந்தான் போட்டோவில் இருந்த அந்த மணமகள் எனக்கென்னமோ சுமாராகத்தான் தெரிந்தாள். ஆனால் அவன் பக்கம் திரும்பி இவன் கையை பிடித்திருந்தது எனக்கு என்று மறக்காது என்று தோன்றியது.

தி.ஜாவோட மலர்மஞ்சம் பற்றி பேசிக்கொண்டிருந்தவனிடம், ‘அப்பாடா கல்யாணம் முடிஞ்சதுன்னு இருக்கோ என்றேன் கிண்டலாக.

இல்லை வித்யா, கவலையா இருக்கு. அவனப் பாத்தா இவளோட மெண்மையான உணர்ச்சிகள புரிஞ்சுப்பானான்னு தெரியவே இல்ல என்று கண்ணில் லேசான கலக்கத்தோட அவன் சொன்ன பதிலை, அவனை ஓரளவுக்கு புரிந்த நான் எதிர்பார்த்திருக்க வேண்டும்.

மெலிதாக தலையசைத்துப் புன்னகைத்தேன் பதிலுக்கு.


6 comments:

இராஜராஜேஸ்வரி said...

அப்பாடா கல்யாணம் முடிஞ்சதுன்னு இருக்கோ’ -காலம் காதலை வேறிடத்தில் உயிர்ப்பிக்கும்.

rajasundararajan said...

//அந்த இருவரில் யாராக இருந்தாலும் ரகு அடுத்து சொல்லப்போகும் வார்த்தைகள் ஒன்றே தான் என்று எனக்குத் தோன்றியது.// இது அசத்தல்!

//'இதில் எதிலுமே அவளைத் திருமணம் செய்து கொண்டால்தான் என்ன என்கிற மாதிரி ஏதாவது சாயல் தட்டுமோ, தப்பித்தவறி?' என்று காத்திருந்தேன். நான் எதிர்பார்த்தபடியே, அப்படி ஏதும் தட்டுப்படவில்லை.// இதுவும்!

அந்த வயதில், ஒரு பையன் - அப்படித்தான் இருப்பான், அதுவும் அவன்பால் ஈடுபாடு (அக்கறை?) கொண்ட (வித்யா போன்ற) ஒரு பெண்பார்வையில்.

தன்னைத் தவிர வேறு யாராலும், சம்பத்தப்பட்ட பெண்ணை/ பெண்களை நுணுக்கமாகப் புரிந்துகொள்ள முடியாது என்று எண்ணுவதும் அந்த வயதின் எல்லாப் பையன்களுக்கும் உள்ளதொரு பொதுக் கோளாறுதான்.

ரகுவுடைய குணவார்ப்பு சிறப்பாக உருவாகி வருகிறது. அதைத்தொட்டு விளிம்புகாட்டும் வித்யாவின் குணவார்ப்பும்: //நல்ல தெளிச்சியா, குளிர்ச்சியா இருப்பா//, //போட்டோவில் இருந்த அந்த மணமகள் எனக்கென்னமோ சுமாராகத்தான் தெரிந்தாள்.//

மாலினி குணவார்ப்புதான் இதில் அருமையானது, ஆனால் எழுத்துநடைக் குழப்பம் மாலினியை எழ ஒட்டாமல் அமுக்குகிறது: //ரகு எனக்குச் சின்னதா வேணும்னு..//, //மொட்டை மாடியில், தென்னங்கீத்தினூடே தெரிந்த பிறை நிலா இரவில், அவளுக்கு எல்லாவற்றையும் புரிய வைத்ததாகவும்,// இப்படி.

எழுத்தாளர்(கள்)நிறுத்தப் புள்ளிகள் இடப் பழகவில்லை என்பது இவ்வெழுத்து நெடுக இடறுகிறது:

//நீ இன்னும் வேலைக்கு போகலையே? அதனால குழப்பாம, அவங்க வேற ஜாதியா, உங்க அம்மா அப்பா ஒத்துக்கலையா போன்ற கேள்வியெல்லாம், ரகு விஷயத்தில் கொஞ்சம் அபத்தம்//

இது, /'நீ இன்னும் வேலைக்குப் போகலையே?', ' அவங்க வேற ஜாதியா?', 'உங்க அம்மா அப்பா ஒத்துக்கலையா?' போன்ற கேள்விகள் எல்லாம், ரகு விஷயத்தில், கொஞ்சம் அபத்தம்/ என்றிருந்தால் புரிவதற்கு எளிமையாக இருந்திருக்கும்.

மன ஓட்டங்களுக்கு ஒற்றை மேற்கோட் குறியும் ('...'), உரையாடலுக்கு இரட்டைக் குறியும் ("...") இடுவது நலம்.

//”உன்னத்தான் கல்யாணம் பண்ணிப்பேன், இல்லேன்னா செத்து போப்போறேன்னு” அழுதா வித்யா!.//

இதில் 'அழுதா'வுக்கும் 'விதயா'வுக்கும் இடையில், காற்புள்ளி (,) வரவேண்டும்; இல்லையென்றால் 'வித்யா அழுதாள்' என்னும் பொருள்தோன்றிக் குழப்பும் அல்லவா?

நிறுத்தக் குறி இலக்கணம், ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு எடுத்ததுதான். ஆங்கிலத்தில் எழுதி வருகிற (இதன் மூல) ஆசிரியருக்கு நான் உணர்த்த வேண்டுமா, என்ன?

தொடரட்டும். வாழ்த்துகள்!

ராகவன் said...

அன்பு அண்ணன் அவர்களுக்கு,

இதுக்குத் தானே நீங்க வேணும்னு வேண்டிக்கிறது...

யாருண்ணே சொல்வா? இத்தனை நுணுக்கமாக... இந்த காற்புள்ளி, அரைப்புள்ளி...மேற்கோடுகள் எல்லாம்... இதை எழுதியவரும் பார்ப்பார்.

மாலினி கேரக்டர் சரியாக வார்க்கப்படவில்லை என்பது உண்மை தான்... நான் தான் அவசரப்பட்டு போட்டுட்டேன்னு நினைக்கிறேன்...

நிறைய பேர்கள் வந்து பார்த்துவிட்டு போயிருக்கிறார்கள்... தளத்திற்கு விசிட் அடித்தவர்கள் முன்னூறு சொச்சம்... அதைப்பற்றி எழுதியவர்கள் யாருமே இல்லை...
எனக்கு ஆச்சரியமாய் இருந்தது... இது நிறைய பேரை ஈர்க்கவில்லை அல்லது... அவர்கள் தளத்தில் இயங்கவில்லை... அல்லது இந்த வடிவம் பிடிக்கவில்லை... இந்த வார்ப்பு பிடிக்கவில்லை என்றாவது வந்து எழுதலாம்...

ஆனா... இதுக்குத் தான்ணே காத்திருந்தேன்.

அன்புடன்
ராகவன்

sakthi said...

வழக்கமான தங்களின் பாணியிலிருந்து சற்றே மாறுபட்ட கதை தொடருங்கள்

அன்புடன் அருணா said...

அப்பாடா ,இந்தக் காற்புள்ளி,அரைப்புள்ளி அலசல்கள் அருமை.படிக்க நிறைய இருக்கிறது!

Anonymous said...

Dear Ragav,unable to understand, confusing....

Affectionately
shobana