Thursday, May 19, 2011

அற்றது பற்றெனின்...


வீட்டை வந்து அடைந்த போது இருட்டிவிட்டது.  கதவைத் திறந்து வீட்டினுள் நுழைய எதுவோ குறுக்கே ஓடுவது போல இருந்தது. அனேகமாய் எலியாய் இருக்கும்.  உடன் வாழ்வது ஏன் இன்னும் பழகாமல் இருக்கு என்று தோன்றும் அவருக்கு. கதவின் பின்னால் இருந்த ஸ்விட்சை போட்டவர், வெளிச்சத்தில் கண்களை சுருக்கி, வைத்தது வைத்த மாதிரி இருக்கா என்று பார்வையிட்டார். எல்லாம் அப்படியப்படியே இருந்தது.  எதை தேடி ஓடியிருக்கும் இந்த எலி என்று யோசித்துக் கொண்டே சட்டையைக் கழட்டினார், அங்கிருந்த ஆணியில் மாட்டிவிட்டு, வேட்டியைத் திரும்பவும் உதறிக் கட்டிக் கொண்டார்.  வெற்று உடம்பில் குளுகுளுன்னு காத்தடித்ததில், நெஞ்சில் இருந்த மயிரெல்லாம் சிலிர்த்தது மாதிரி இருந்தது அவருக்கு.

அங்கணக்குழி அருகே இருந்த பிளாஸ்டிக் வாளியையும்,  அலுமினிய போனியையும் எடுத்துக் கொண்டு கிணற்றடிக்குப் போய் குளிக்கக் கிளம்பினார்.  ஈரிழைத்துண்டை எடுத்து விரித்தவர், அதில் இருந்த கிழிசலைப் பார்த்த போது அவருக்கு சிரிப்பு வந்தது. இதை தைக்க அவருக்கு நேரம் வாய்க்கலை என்பது போல வீட்டின் மூலையில் இருந்த தையல் மெஷினைப் பார்த்தார். வேலை முடிந்து வீடு திரும்பியதும் போய் குளிக்கணும் சந்திரனுக்கு. அப்பத் தான் அவருக்கு கசகசப்பு போனது போல இருக்கும். தூக்கமும் வெரசா வரும். ஜன்னல் திண்டில் இருந்த தேய்ந்த சந்திரிகா சோப்பையும், பார் சோப்பையும் எடுத்துக் கொண்டு கிணற்று மேட்டுக்கு வந்து சேர்ந்தார். பிளாஸ்டிக் வாளி நிறைய நீரை இறைத்து நிரப்பி விட்டு, குளிக்க ஆரம்பித்தார்.  முதல் போனி தலையில் ஊற்றியவுடன் இருக்கிற சுகம் அவரை கண்ணை செருகி கிறங்க வச்சது போல இருந்தது. அணுபவித்துக் கொண்டே குளித்தார். இடையில் நிறுத்தி திரும்பவும் நீரிறைக்க ஆரம்பித்தார். வாளி நிறைந்ததும், போனியை எடுத்து, நீரைக் கோரி வைத்துக் கொண்டவர், உட்கார்ந்து சோப்பு போட ஆரம்பித்தார்.

கிணற்றடியில் பெரிதாய் வெளிச்சம் இருக்காது. ஒரே ஒரு குண்டு பல்பு தான் எரியும், கக்கூஸை ஒட்டி அதனால் வெளிச்சம் அதிகம் கிடையாது. அதனாலயே அவர், கொஞ்சம் இருட்டின பின்னாடி தான் வருவார். நல்லாத் தேய்ச்சு குளிக்கலாம் என்ற நினைப்பில். சோப்பைத் தேய்த்துக் கொண்டே வந்தவர், பொசுக்கென்று கம்மங்கூட்டில் சோப்பு காணாமல் போனது போல சிறுசாப் போனது. உடம்புக்கு சந்திரிகா சோப் போட்டுக்கிட்டவர் காலுக்குப் போட சோப்பு காங்கலையேன்னு யோசித்தார் சிறிது நேரம். துணிய அலசக் கொண்டு வந்த பார் சோப்பை கையில் எடுத்துட்டு சுத்துமுத்தும் பார்த்தார். யாரும் பார்க்கலைன்னு தெரிஞ்சதும், பார் சோப்பையே காலுக்கும் தேய்க்க ஆரம்பித்தார்.  பார் சோப்பு கரையாததைப் பார்த்தவுடன், இந்த மாதிரி ஏன் குளிக்கிற சோப்ப செய்ய மாட்டேங்கா எவனும்? என்று தனக்குத் தானே கேட்டுக் கொண்டார்.


குளித்து முடித்து, துணிகளை அலசியபின்னால் நன்றாக உதறியவர், அதன் சாரலில் மெய்மறந்தார்.  கிணற்று மேட்டில் இருக்கும் கொடியிலேயே காயப்போட்டுவிட்டு, வாளியையும், போனியையும் எடுத்துக் கொண்டு வீட்டுக்குள் நுழைந்தார். கிணற்றடியில் இருந்து வீட்டிற்கு நுழைவதற்குள் ஒட்டிய மண்ணை வாசலில் நின்ற படியே தட்டிவிட்டு உள்ளே நுழைந்தார். அது ஒரு சின்ன அறை, ஓட்டுசாப்பு இறக்கிய வீடு. அடுப்படி, படுக்கையறை, சாப்பாட்டு அறை என்று எல்லாமிருக்கும் அறை அது.  இவரோட சொத்து என்பது ஒரு ராமா தையல் மெஷின், ஒரு டிரங்கு பெட்டி, கொஞ்சம் தட்டுமுட்டு சாமான்கள் அப்புறம் ஒரு ஷோ கேஸ். ஷோ கேஸ், பிளைவுட் பலகையில் சி.எம். டெய்லர்ஸ் என்று எழுதியிருக்க, முன்னாடி கண்ணாடி வைத்த பெரிய சைஸ் டேபிள் அது.  துணியை வெட்டுவதற்கும், மார்க்கிங் பண்ணுவதற்கும் வசதியான டேபிள். 


முன்னாடி சின்னதா ஒரு கடை வச்சிருந்தார், ராமையா வீதியில். சி.எம். டெய்லர்ஸ்னு. அப்போ மதுரையில பேமஸா இருந்த ஜி.எம். டெய்லர்ஸ் மாதிரி இவரோடது சி.எம். டெய்லர்ஸ். அதே மாதிரி நாமளும் பெரிசா வரணும்ங்கிற ஆசையில் ஆரம்பிச்சது.  கடை இப்பவும் அங்கேயே தான் இருக்கு, பேரு தான் மாறிப்போய் விட்டது.

சந்திரனுக்கு சி அப்புறம் மரகதத்துக்கு எம். கடை ஆரம்பிக்க முதலு இல்லாத போது, கழுத்தில் போட்டிருந்த செயினை மரகதம் தான் கழட்டிக் கொடுத்தாள். கடை ஆரம்பிக்கும் போது மூணு மெஷினு இருந்தது அவரிடம். ரெண்டு தையல் மெஷினும் ஒரு ஓவர்லாக் மெஷினும்.  பெரும்பாலும் ஏதாவது ஒரு மெஷினுக்குத்தான் வேலை இருக்கும் எப்போதும். முருகனும் அவரும் ஒண்ணா இருந்த காலம் அது. இவரு கட்டிங்க்ல புலி, சும்மா வளைச்சு வளைச்சு கட் பண்ணுவார். அவ்வளவு நேர்த்தியா அவரு வெட்டுறதால, முருகனுக்கு அடிச்சு போடுறதில பிரச்னையே இருந்ததில்லை.  அதுவும், ஒரு ஆளை பார்த்த மாத்திரத்தில அளவு சொல்லிடுவாரு. சந்திரனோட ராசியோ என்னவோ, நிறைய லேடீஸ் பிளவுஸ் தான் வந்தது. லேடீஸ் பிளவுஸ் தச்சா பெரிசா மிச்சம் பிடிக்கமுடியாது. விழற பிட்டுல எதுவும் செய்யமுடியாது, தலையாணிக்குள்ள பஞ்சு மாதிரி சேர்ந்தா, அடைக்கத்தான் லாயக்கு.

சி.எம். டெய்லர்ஸ் பேரப்பாத்துட்டு கொள்ளப்பேருக்கு, சந்திரன், முருகன் தான் சி.எம். நினைச்சிக்கிறது உண்டு.  இவரு வம்பாடுபட்டு முதலப்போட்டு, கடையத் தொறக்க, இந்தப் பயலுக்கு பேரு.  இவரு தான் அவனுக்கு கொஞ்சம் கொஞ்சமா தைக்கச் சொல்லிக் கொடுத்தாரு. ஒழுங்கா பெடல மிதிக்க வராது.  மரகதந்தான் போனாப் போகுது கத்துக் கொடுங்க மாமான்னு! சொன்ன வார்த்தைக்காக அவனுக்கு கத்துக் கொடுத்தாரு. அவன் என்னடான்னா, கொஞ்சம் தலையெடுத்தவுடனே, முதலாளி கணக்கா திரிய ஆரம்பிச்சுட்டான்.
 
கோன வாத்தியார் மகனுக்கு பேண்ட் தைக்கணும்னு எங்கேயோ இருந்து ஒரு நீலக்கலர் டெரிக்காட்டன் துணி கொண்டு வந்தார். பய நல்லா வெடவெடன்னு உயரமா இருப்பான், ஒரு மீட்டர் வேணும்னு சொல்ல, அவரு எம்பது பாயிண்ட கொண்டு வந்துட்டு ’தை தை’ ந்னு குதிச்சாரு! முடியாதுன்னு அணுப்பங்குள்ளேயும், முருகன் முந்திக் கிட்டு கொடுங்க அண்ணாச்சி! தச்சுப்புடலாம்னு! வாங்கிகிட்டான்.  கோன வாத்தியாருக்கு வெவரம் புரியாம, என்னப்பா டெய்லரே தைக்கிறேண்ட்டாரு! துணி வெட்டற உனக்கு எப்படிப்பா தெரியும்? அப்படின்னாரு. போயா நீயுமாச்சு! உன் வேலையுமாச்சு, அந்த துணிய அந்தாளுட்டேயே கொடுத்து போகச் சொல்லியாச்சு. அடுத்த நாளு பாத்தா, முருகன் அத தைச்சுட்டு இருக்கான்.

ஆருடே வெட்டினா? என்ற சந்திரனின் அதட்டலுக்கு,
”என்ன பெரிய கம்பசூத்திரம், தெரியாதா எங்களுக்கு? இம்புட்டு நாளா பாத்துட்டு இருக்கோம், கண்ணு பாத்தா கை செய்யுது?” ன்னு எதிர்கேள்வி கேக்குறான். போடா உன் சங்காத்தமே வேணாம்னு அவனை வெளியே போகச் சொல்லிட்டார்.  போனவன், மூணு மாசா கூலியே தரலை, மெசினத்தூக்குறேன்னு, தூக்கிட்டான்.  அப்பதான் தெரிஞ்சது, அவன் சரியானா காவாலிப்பயலா இருப்பான் போலன்னு… போய்த் தொலையறான்னு விட்டுட்டார்.  தையலு மெஷினும், ஓவர்லாக்கு மெஷினும் போதும் நமக்கு சனியன் விட்டதுன்னு இருக்கலாம்னு இருந்துட்டார்.

’ஊக்கு அடிக்க அக்காட்ட கொடுத்த பிளவுஸை எல்லாம் வாங்கிட்டு வந்துடுறா’ என்று காஜா பையனிடம் சொல்ல, போனவன் சும்மா வந்தான். என்னடா? பிளவுஸ் என்னாச்சு?
”அக்கா நீங்க சாப்பிட வாரயிலே தாரேன்னு சொல்லிச்சு!” என்று போய் மூலையில் உட்கார்ந்து கொண்டான். திருதிருன்னு முழிச்சிட்டு, ஸ்கேலை ஓங்கினார் அவனை நோக்கி, ஏண்டா கிராக்கி வந்திருக்குன்னு சொல்லியிருக்க வேண்டியது தானேடா? முழிக்கிற ஆடு களவாண்டவன் கணக்கா? என்ற போது அப்படியே சுவரோடு பம்மினான்.

அவருக்கு வயிறு பசிப்பது போலிருந்தது, ஒண்ணுக்கும் முட்டிக்கிட்டு வந்தது. டவுசர் பைக்குள் தடவிப்பார்த்ததில், ரெண்டு மூணு பீடி சிக்கியது. இது போதும் இன்னைக்கு பொழுதுக்கு, ரவிக்கைக்கு ஊக்கு வச்சிருந்தால், போய் கோமதியக்காக்கிட்ட கொடுத்துட்டு காசு வாங்கிவரலாம். ”என்ன தான் செய்வாளோ? ரவிக்கைக்கு ஊக்கு கூட வைக்காம? எப்பப்பார்த்தாலும், கண்ணாடி முன்னாடி நின்னுக்கிட்டு, பவுடர் அடிக்கிறதும், மையிழுவறதுமா இருப்பா? இப்படி சிங்காரிச்சிட்டு எங்கயோ சீமைக்குப் போறமாதிரி! கேட்டுட்டா அம்புட்டுத்தான், குரல்வளை அந்து போகிறமாதிரி கத்துவா! என்று மரகதத்தைப் பற்றி நினைத்தவர், தலையை ஒரு மாதிரி உதறிவிட்டு. காஜா பையன் பக்கம் திரும்பினார்.


சாப்பாடு கொண்டு வந்திருக்கியாடே? என்று இவர் கேட்டவுடன், ஷோ கேஸ் கீழ்ப்பகுதியில் வைத்திருந்த தூக்குப்போனியைக் காட்ட, அவருக்கு உடனே கண்ணு மண்ணு தெரியாம கோபம் வந்துவிட்டது. ’எத்தனை கஷ்டப்பட்டு, முத்தையாவ உருவு உருவுன்னு உருவி, இந்த ஷோ கேஸை செஞ்சிருக்கோம்?’ ’இந்த பயலுக்கு அதோட அருமை தெரியாம, அதுல போயி தூக்குப்போனிய வச்சிருக்கானே?’ என்று கையில் இருந்த அடிக்குச்சியால், அவனை படீரென்று அடித்தார். அடித்ததோடு நிற்காமல், அவனை கையை அவனை நோக்கி நீட்டிக் கொண்டு வையவும் ஆரம்பித்துவிட்டார்.

“தாயோளி! கூறுபாடு இருக்கா? எத்தனை வாட்டி சொல்லியிருக்கேன், ஷோ கேஸ்ல எதுவும் வைக்கக்கூடாதுண்டு! ஒரு தடவை சொன்னா தெரியாது மடசாம்பிராணி!” என் உசிர வாங்கண்டே உங்க அப்பன், ஆத்தா பெத்து போட்ருப்பாய்ங்க போல்ருக்கு. அவன் கத்தியபடியே அவருக்குத் தெரியாமல், வாய்க்குள்ளேயே கெட்ட வார்த்தையில் பதிலுக்குத் திட்டிக்கொண்டே அங்கிருந்து எடுத்து ஓவர்லாக் மெஷினடியில் வைத்தான்.
   
இவரு தான் காஜா எடுக்க ஆளில்லன்னு படிச்சிட்டு இருந்த பயலை, அவங்கப்பன் கிட்ட நைச்சியமா பேசி, கையில கொஞ்சம் காசக்கொடுத்து இங்க கொண்டு வந்து வச்சிருக்கார். அது அவனுக்குந்தெரியும், இருந்தாலும், கூலி கொடுக்குறவன் இதெல்லாம் கேட்க மாட்டானா? என்று தனக்குத்தானே  சமாதானம் சொல்லிக் கொண்டார். அவன் பதிலுக்கு ஏதும் சொல்லிவிடுவதற்குள், கடையப்பாத்துக்கோ, வீடுவரைக்கும் போயிட்டு வர்றேன்! என்று வேஷ்டியை உதறிக் கட்டிக்கொண்டார். பிள்ளையார் கோயிலை ஒட்டி விட்டிருந்த சைக்கிளை எடுத்துக் கொண்டு ஒரு அழுத்து அழுத்தினார்.

எம்.கே.புரம் தாண்டும் போது, சிங் கடைல கடனுக்குக் கொஞ்சம் காராச்சேவு வாங்கிக்கொண்டார்.  பொட்டலத்தை எடுத்து டவுசர் பைக்குள் போட்டுக் கொண்டு, கொஞ்சம் வேகமாக அழுத்தினார் பெடலை.  இன்னைக்கு ரொம்ப சீக்கிரமா போறதால, வெஞ்சனம் செய்ய லேட்டாகலாம் என்று தான், அவர் காராச்சேவு வாங்கிக்கொண்டதற்கு காரணமே!  வெறும் ரசஞ்சாதம் இருந்தாக்கூட போதும், காராச்சேவ வச்சு சமாளிச்சிக்கலாம். போகும்போதெ கோமதி அக்காவின் ஞாபகம் வந்தது, என்ன ஒரு எடுப்பான உடம்பு? அதுவும் அவர் தைச்சுக் கொடுத்த ரவிக்கையப் போட்டபடி வந்து நின்னா, சும்மா கின்னுன்னுல்ல இருக்கும்? என்று நினைத்த போதே அவருக்கு ஒரே கிளுகிளுப்பாய் இருந்தது. மரகதத்துட்ட சொல்லி, ஊக்குத் தைக்கச்சொல்லி கையோட எடுத்துட்டுப் போய், கோமதியக்காளையும் ஒரு பார்வை பார்த்துட்டு வந்துடணும் என்று கள்ளமாய் சிரித்துக் கொண்டார். பார்த்து பார்த்து என்னத்தக் கண்டோம்? என்று தனக்குள்ளே ஒரு பெருமூச்சை விட்டுக்கொண்டார்.

வீட்டுக்கு வந்தவர், வீட்டின் முன்புறத்திலேயே சைக்கிளை விட்டுவிட்டு முன் நடைக்கதவைத் திறந்த போது, முருகனின் சத்தம் கேட்டது.  ஏதோ அவன் சொல்ல, அவள் சிரிப்பது அவருக்கு விரசமாய் கேட்டது. ஜன்னல் வழியாக எட்டிப் பார்க்க நினைத்தவர், என்னவோ நினைத்துக் கொண்டு ஓசைப்படாமல், திரும்பவும் சைக்கிளை எடுத்துக் கொண்டு கடைக்குத் திரும்பினார். டேய்! சாப்பிட்டியா? என்றார். அவன் உதடு பிதுக்கியதும், இந்தா! என்று காராச்சேவு பொட்டலத்தை அவனிடம் கொடுத்தார். ’அண்ணன் எவ்வளவு நல்லவரு!” இவரப் போயி கெட்டவார்த்தையிலே திட்டிட்டமேன்னு அவனுக்கு வருத்தமாய் இருந்தது. அவன் காராச்சேவு பொட்டலத்தை விரித்து சாப்பிட, அவர் கடைவாசலில் உட்கார்ந்து பீடி பிடிக்க ஆரம்பித்தார்.

 


19 comments:

ரிஷபன் said...

உணர்வுகளை விவரிக்கிற உங்கள் எழுத்து நடையில் பாத்திரங்களுக்கு ஏற்ப உருமாறும் தண்ணீரின் வடிவம் போல மனசு குதி போட்டு, உறுமி, தகதகக்கும் ஜாலம்.. சொல்லாமல் சொல்லிப் போகிற அற்புத வடிவத்திற்கு ஒரு சபாஷ்.

ராகவன் said...

அன்பு ரிஷபன்,

சந்தோஷம் ரிஷபன்... நீண்ட நாட்களுக்கு பிறகு உங்கள் கருத்து... வாசிப்புக்கு அன்பும் நன்றியும்...

அன்புடன்
ராகவன்

மதுரை சரவணன் said...

அருமையான நடை.... கதை அருமையாக வந்திருக்கிறது.. வாழ்த்துக்கள்

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

ரொம்ப நாளாச்சு ராகவன்!எப்படி இருக்கீங்க?

அற்றது பற்றெனின் என்ற தலைப்பே அற்றுப்போன வாழ்வைச் சொல்வதாகவும் அதில் தோயும் மனதைச் சொல்வதாகவும் எண்ணியபடியே கதைக்குள் போக முடிந்தது.

சந்திரன் போன்றவர்கள் கோமதியக்கா குறித்த கற்பனையில் மிதக்க நேரிடுகையில் மரகதமும் முருகனும் அதை அனுபவித்துக் கடந்து விடுகிறார்கள்.

இவர்கள் இருவருக்கும் நடுவில்தான் நேர்மை உண்மை நியாயம் குறித்த போலியான வாழ்வுன் சுழன்றபடி இருக்கிறது.

துவக்கத்தில் சந்திரனின் யாருமற்ற தனிமையும் கதையை செல்லச் செல்ல யூகிக்க வைத்துவிடுகிறது.

ஆக மனது வாழ்க்கையில் இருவரோடேயே வாழ்கிறதாய் முடிந்து தொடர்கிறது.

ஜீவனுள்ள கதை ராகவன்.

ராகவன் said...

அன்பு சரவணன்,

நீங்களும் வந்து ரொம்ப நாளாச்சு...! எப்படி இருக்கீங்க? உங்கள் வாசிப்புக்கும் கருத்துக்கும் ரொம்பவும், அன்பும் நன்றியும்...

அன்புடன்
ராகவன்

Unknown said...

தலைபே கதை சொல்லுதுண்ணா. எப்படி இருக்கீங்க...

ராகவன் said...

அன்பு சுந்தர்ஜி,

சந்தோஷமா இருக்கேன்... நீங்க எப்படி இருக்கீங்க!... உங்க கவிதைகள் தொடர்ந்து படிக்கிறேன்... சுந்தர்ஜி... தினமும் ஒரு கவிதை எழுத முடிகிறது உங்களால்... வாய்க்கப்பெற்றவர் நீங்கள்!

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் அன்பும் நன்றியும்... சுந்தர்ஜி...

அன்புடன்
ராகவன்

ராகவன் said...

அன்பு ராம்,

எப்படி இருக்க? எல்லாம் பழைய ஆளுங்கள்லா திரும்ப வர்றது சந்தோஷம்தேன்...

ஆனா எல்லாரையும் கேக்கணும்னு தோணுது... எங்க போனீங்க எல்லாரும்...

உன்னோட கருத்துக்கும், வாசிப்புக்கும் என் அன்பு ராம்... வீட்ல எப்படி இருக்காங்க?

அன்புடன்
ராகவன்

Unknown said...

நாங்கள் நலம்னா.. இங்கதாண்ணா சுத்திட்டு இருக்கேன்.. டைம் கிடைக்கறப்ப என்னோட பதிவுகளயும் படிச்சிட்டு கருத்து சொல்லுங்க :)

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...
This comment has been removed by the author.
சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

என்னோட தளத்துல உங்க பின்னூட்டம் ரொம்ப நாள் ட்யூ ராகவன். இன்னிக்கு என்னோட சமீபத்து பதிவுக்கு உங்க கருத்தை எதிர்பார்க்கிறேன் ராகவன்.

காமராஜ் said...

அருமை ராகவன்.
நல்லா இருக்கிங்களா ?
கூப்பிட்டுவிட்டு கட் பண்ணிட்டீங்க ?

மாதவராஜ் said...

கூர்மையான விவரிப்புகள், இயல்பான உரையாடல்கள், சொல்லாமல் சொல்லும் விஷயங்கள் என நிரம்பி, ததும்பும் கதை இது. நாம் ஏற்கனவே பேசிக்கொண்டதுபோல, இதுவும் ஆண் பெண் உறவின் புதிர்கள் சொல்லும் கதையாக இருக்கிறது. அருமை ராகவன். தொகுப்பு கொண்டு வந்துவிட வேண்டியதுதான்.

இராஜராஜேஸ்வரி said...

அற்றது பற்றெனின் வாழ்வும் அற்றுப்போனது ...

rajasundararajan said...

கவிஞர் பிரம்மராஜன், பசுவய்யா (சுந்தரராமசாமி) எழுதிய கவிதைகளில் ஒன்றை ஆங்கிலப் படுத்தி, 'Encounter' இதழுக்கு (லண்டனில் இருந்து வெளிவருகிறது என்று நினைக்கிறேன்) அனுப்பியிருந்தார். /Integrity is there, but the subject matter is thin/ என்னும் குறிப்புடன் அம் மொழிபெயர்ப்பு திரும்பி வந்திருந்தது.

'அற்றது பற்றெனின்' கதை அல்லது உங்கள் எந்த ஒரு கதையின் integrity பற்றியும் குறை சொல்வதற்கில்லை, ஆனால் subject matter?

'கண்ணாடித் தேர்' கதைக்கு அம்பை கூறிய விமர்சனத்தை என்னோடு பகிர்ந்துகொண்டீர்கள். "அம்பை சொல்வதும் சரிதான், ஆனால் பெண் தகைமையைப் பொருத்தமட்டில் அது நம் அறியாமையே; உங்கள் அளவுக்குக் கூடப் பெண் தகைமை அறிந்திராத நான் இக் கதையை இன்னும் உள்ளீடற்றதாய் எழுதியிருப்பேன்," என்றேன் அப்போது.

'அற்றது பற்றெனின்' கதையும் மரகதம் திக்கத்துச் 'சரி-தவறு'களுக்குள் போகாமல், சந்திரனின் பார்வைக் கோணத்திலிருந்து எழுதப்பட்டு இருப்பதால்...

தப்பித்துவிட்டோமா?

எனக்கொன்றும் சொல்லத் தெரியவில்லை. சந்திரிகா சோப் கரைந்துபோனால் பார் சோப் என்றுதான் எனது சொந்த வாழ்க்கையும் கூட அமைந்துவிட்டது.

ஆனால், மாற்று ஏற்பாட்டிற்கும் நேரிடுவதற்கும் நிறைய வேறுபாடு உண்டு. நேரிடுவது, கிரேக்கத் துன்பியல் போல இக்கட்டுச் செறிவான ஒன்று. என் நெஞ்சைத் தொட்டுச் சொல்வேன், 'அது என்னைப் போன்ற - சந்திரனைப் போன்ற - ஆட்களுக்கு ஏலக் கூடியது இல்லை' என்று. எனது வாழ்க்கைக் குறிப்பின் 'நாடாடித் தடம்', அதனால்தான், அதன் நாயகனை 'neither concrete nor abstract' என்ற நிலையில் வைத்துக் காட்டுகிறது (வாசித்திருக்க மாட்டீர்கள், sorry!).

உங்கள் மொழிநடையில் சற்றுக் கவனம் செலுத்த வேண்டும். பேச்சு வழக்கில் எழுதுகிறீர்கள் சரி, ஆனால் குழப்பம் வராமல் எழுத முயலுங்கள்.

சிறு குறைகள்தாம், என்றாலும் உங்கள் வளர்ச்சிக்காக:

//வேலை முடிந்து வீடு திரும்பியதும், சந்திரனுக்கு போய் குளிக்கணும்.//

எப்படி ஆம்ஸ்ட்ராங் போனது போலவா?

//முன்னாடி சின்னதா ஒரு கடை வச்சிருந்தார், ராமையா வீதியில்//

இவ் வாக்கியத் தொடக்கம் ஒரு தனிப் பத்தியாகத் தொடங்கவேண்டும், ஏனென்றால் இங்கே flash back தொடங்குகிறது.

காஜா பையனை அடிக்கிற காட்சியை, அவர் தன் வீட்டுக்குப் போய்த் திரும்பிய பின் அமைத்திருந்தால் நன்றாக இருக்கும் என்பது என் கருத்து. ஆனாலும் பிறகும் அவனுக்கு அவர் தான் வாங்கிய காராச்சேவைக் கொடுத்துச் சாப்பிடச் செய்ய வேண்டும் என்பது, மக்ஸீம் கோர்க்கி சாட்சியாக, என் ஒப்புதல்.

நல்ல கதை. வாழ்க!

ராகவன் said...

அன்பு காமராஜ்,

உங்கள் கருத்துக்கும் அன்புக்கும் என் அன்பும் நன்றிகளும்...

அன்புடன்
ராகவன்

ராகவன் said...

அன்பு மாதவராஜ்,

சந்தோஷம் மாதவராஜ்... உங்கள் கருத்து எப்போதும் என்னை உற்சாகப்படுத்தும்... “என் நோற்றான்” என்கிற பதம் உங்களைத் தான் சேரணும்... அதற்காக நிறைய உழைக்கணும், செய்கிறேன்...

உங்கள் வாசிப்புக்கும், கருத்துக்கும் என் அன்பும் நன்றிகளும் மாதவராஜ்!

அன்புடன்
ராகவன்

ராகவன் said...

அன்பு ராஜராஜேஸ்வரி,

உங்கள் வாசிப்புக்கும், கருத்துக்கும் அன்பும் நன்றிகளும்...

அன்புடன்
ராகவன்

ராகவன் said...

அன்பு அண்ணனுக்கு,

சப்ஜெக்ட் மேட்டர் தின் - ஆ இருக்கு என்பது எனக்கும் உடண்பாடே... அண்ணே...

உங்களோட அன்பும் என் மேலுள்ள அக்கறையும் எனக்கு கிடைக்கப்பெற்றது பாக்கியமே...

படிச்சு முடிச்சுட்டு நிறைய சிரிச்சேன்... சந்திரனுக்கு போய் குளிக்கணும்...

பார் சோப் பற்றி நீங்கள் ஒருவர் தான் கவனித்து இருக்கிறீர்கள்... இத்தனை நுணுக்கமாய் எந்த ஒரு படைப்பையும் அணுகுவது அதை எழுதுபவனுக்கு எத்தனை சந்தோஷத்தையும், திருப்தியையும் தரும் என்பது என்னைக் கேட்டால் தெரியும்...

அதனூடே ஒற்றை இழையாய் பின்னி பின்னி வரும் அக்கறை, எழுத்தை இன்னும் ஸ்திரப்படுத்தும், உறுதி ஆக்கும் என்பதை சொல்லவே வேண்டியதில்லை...

வந்தனங்கள் அண்ணே!

அன்புடன்
ராகவன்