Friday, July 08, 2011

பழுத்த இலைக்காடு...

அம்மா இறந்தவிட்டதாய், அதிகாலை நாலு மணிக்கு அந்த முதியோர் இல்லத்தில் இருந்து தகவல் வந்ததும் பாலாவின் மனசுக்கு கொஞ்சம் நிம்மதியாய் இருந்தது.  ஒரேயடியாய் தன்னை வேதனையில் இருந்தும், பிணியில் இருந்தும் விடுவித்துக் கொண்டு விட்டாள் என்று நினைத்துக் கொண்டான்.  இந்த தகவலை தன் அப்பாவிடம் எப்படி சொல்வது என்று மட்டும் யோசனையாய் இருந்தது அவனுக்கு.  எங்கேயோ கொண்டு போய் விட்டு கொண்ணுட்டீங்களேடா என் பொண்டாட்டிய? என்று கேட்டு விட்டால் என்ன பதில் வைத்திருக்கிறோம்? என்று அவனால் யோசிக்கமுடியவில்லை. 

தீபா அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள்.  நேற்று இரவு அப்பாவுக்கு சாப்பிட்டது ஏதோ சேராமல், படுக்கையை ஒட்டியே வாந்தி எடுத்துவிட்டார்.  பலமான ஓங்கரிப்பு சத்தம் கேட்க எழுந்து போய் பார்த்த போது படுக்கைக்கும் தரைக்குமாய் வாயில் எடுத்தது பரவியிருந்தது.  அப்பாவுக்கென்று பிரத்யேக உணவு முறை, சர்க்கரை வியாதியில் வலது காலை இழந்தவர். சர்க்கரை கண்ட்ரோலில் இல்லை என்றால், அடுத்த காலும், கண்ணும் போய்விடும் என்று பயமுறுத்தியதில் கொஞ்சம் திருந்தி தனது உணவு பழக்கத்தை மாற்றிக் கொண்டார். இடது காலில் எப்போதோ அடிபட்டது ஆறாமல் புரையோடிப் போய் இருந்தது. அதை சுத்தம் செய்வதும், மருந்திடுவதும் எப்போதும் தீபா தான். அவனுடைய அப்பா வாந்தி எடுத்ததை தீபா சுத்தம் செய்து படுக்கையை சரி செய்யவே நேரமாகிவிட்டது. நள்ளிரவுக்கு மேல் தான் தீபா தூங்க ஆரம்பித்திருப்பாள்.

தீபாவை ஒட்டியபடி, விரலை வாயில் போட்டபடி பவித்ராவும் தூங்கிக் கொண்டிருந்தாள். அடுத்த கையில் தீபாவின் முந்தானையை கெட்டியாய் பிடித்திருந்தாள். தீபாவை எழுப்பி தகவலைச் சொல்லத் தயக்கமாக இருந்தது. தீபாவின் பொறுமையும், அன்பும் மெச்சக்கூடியது, இவனுக்கு தான் ஏதோ பெரிய புன்னியம் செய்திருக்கவேண்டும் என்று தோன்றும். தீபாவுக்கு இந்த செய்தி தாங்கமுடியாத வேதனையாய் இருக்கும்.  பாலாவின் காதல் திருமணத்திற்கு, யாரும் தடையாய் இல்லை என்றாலும்,  திருமணம் செய்த பிறகும் மருமகளை இப்படி கொண்டாடுவார்கள் இருவரும், என்று பாலாவுக்கு நம்பிக்கையே இல்லாமல் இருந்தது.  ஆனால் நேர்மாறாய், பாலாவின் அம்மா தீபாவைத் தாங்கு தாங்கு எனத் தாங்கினாள்.

அவனுடைய அம்மாவுக்கு லோவர் இண்டஸ்டைனல் கான்சர் வந்து ஏறக்குறைய நான்கு வருஷம் உயிர் வாழ்ந்திருக்கிறாள். கீமோதெரபியின் தயவிலும், மருந்துகளின் தயவிலும் ஏதேதோ நம்பிக்கைகளின் முள்முனைகளில் படுத்திருந்தாள் இத்தனை நாளும். அவளின் புற-அகத்தோற்றம் முற்றிலும் மாறிவிட்டது, அம்மா அத்தனை அழகில்லை என்றாலும், அவளுடைய சாந்தமும், கனிவும் அவளை அழகாய்க் காட்டும்.  தன்னை முன் துருத்திய பற்களுடனும், சிகிச்சைகளில் கொட்டிப் போன தலை மயிருடனும் பார்க்கிற ஒவ்வொரு தருணத்திலும், அவளின் மீது அவளுக்கு சுயவெறுப்பும், சுயபச்சாதாபமும் வளர்ந்து கொண்டே இருந்தது. அது அவளை மேலும் முடக்கியது. எல்லோர் மீதிலும் வெறுப்பும், துவேஷமும் அதிகமாகிக் கொண்டே இருந்தது. யாருக்கும் தன்னைப் பிடிக்கவில்லை என்ற அவளின் அழுத்தமான எண்ணம் அவளை மன அழுத்தத்திற்குள் தள்ளியிருக்க வேண்டும் என்று அவனுக்குத் தோன்றும்.  ஆனால் அதை எப்படி சரிசெய்வது என்று தெரியவில்லை.

அம்மாவுக்கு முதலில் சாதாரண வயிற்றுவலியாகத் தோன்றியது, மலத்தில் ரத்தம் கலக்க அல்சர் அல்லது மூலம் என்று தான் நினைத்தார்கள்.    அவனுடைய அம்மாவின் அப்பா, அம்மா என்று எல்லோருக்கும் மூலம் இருந்தது. பரம்பரை வியாதியாய் இருக்கும் என்று ஆளுக்காள் சொல்ல, குளுமையாக சாப்பிட்டால், நார்ச்சத்து உணவு அதிகம் சாப்பிட்டால், எல்லாம் சரியாகிவிடும் என்றது சரியாகவில்லை.  இரண்டு வருடங்களுக்கு மேலாக இது தொடர, சோகை பிடித்தது போல ஆனாள் அவனுடைய அம்மா. ஹோமியோபதி மருத்துவக்குளிகைகளில் குறையாமல் மேலும் முற்றி, மலத்தில் சீழும், ரத்தமும் மட்டுமே வர ஆரம்பித்தது. சிலசமயம், தார் போல மலம் வருகிறது என்று அம்மா சொன்னபோது பாலாவுக்குக் கொஞ்சம் பயம் வந்தது.

ஒருமுறை இவனுடைய அம்மாவைப் பார்க்க வீட்டுக்கு வந்த சேதுமாமா, “மூலம்னா இப்படி இருக்காதுலே! எப்போதும் போல பசிக்கும்லே! போய் நாஞ்சொல்ற டாக்டரப்பாரு!”  அக்காவ இப்படி பாக்கவே சகிக்கலை! என்று ஒரு மருத்துவரின் விலாசத்தையும் கொடுத்திருந்தார். வேலைப்பளுவின் காரணமாக தள்ளிப்போய் கொண்டே இருந்தது இரண்டு வருஷத்துக் முன்னால் தான் அவளுக்கு கான்சர் இருப்பது கண்டுபிடிக்க நேர்ந்தது. அதுவும் ரொம்பவும் முற்றிய நிலைக்குப் பிறகே.

சாப்பாடு சரியாக சாப்பிட முடியாமல், வயிற்றில் கல்லைக் கட்டியது போல உணர்ந்ததாய் சொல்லியிருக்கிறாள். உறுப்புகள் செயலிழக்க ஆரம்பித்து, முற்றிலும் படுத்த படுக்கையானாள்.  உயிரெல்லாம் கரைந்து வாயிலும் கையிலும் சேர்ந்து விட்டது போல பேசமுடியும், வலதுகையை அசைக்கவோ, ஆட்டவோ முடியும் அவ்வளவே.

அவன் வருமானம் போதவில்லை, இருக்கிற வீடு வசதியில்லை.  இருவரின் மருத்துவச் செலவும், இதர செலவுகளும் அவனுக்கு சுமக்கமுடியாத பாரமாய் அழுத்தியது. வேலைக்கு போவதினூடே அவர்களை கவனித்துக் கொள்ளவோ அன்பாய் பேசவோ, அவர்களுடன் நேரம் செலவிடவோ அவனால் முடிந்ததில்லை.  தீபா தான் பார்த்துக் கொண்டாள். அவர்களின் எல்லா விஷயங்களிலும் உடன் இருந்து, சலிப்பில்லாது கவனித்து வந்தாள்.

போனமாதம் ஒரு முறை பேச்சு வாக்கில், இவனிடம் தீபா இருவரையும் பார்த்துக் கொள்வது சிரமமாய் இருப்பதாகச் சொல்லப்போக, ஒரு வாரத்தில் முதியோர் இல்லத்தில் சேர்த்துவிடலாம் என்று இவன் நின்றபோது முற்றிலும் மறுத்தாள் தீபா.  என்றாலும், தொடர்ந்து ஒருவாரத்திற்கும் மேலாக அவளிடம் பேசி அவளை சம்மதிக்க வைத்தான். அவனுடைய அப்பாவுக்கும் அது நல்ல முடிவாகத்தான் பட்டது.  தீபா, இரண்டு பேரையும் பார்த்துக் கொள்வதிலேயே நேரம் செலவிடுவதால், குழந்தையை பார்த்துக் கொள்ளமுடியாமல் போவதை அவர் உணர்ந்து இருந்தார். தீபா படும் சிரமங்களும், அவளுடைய முகம் கோணாத சிசுருஷைகளும் அவருக்கு தெரிந்து தான் இருந்தது.

அவனுடைய நண்பர் ஒருவர் சொன்ன பிறகு தான் இப்படி ஒரு முதியோர் இல்லம் இருப்பது தெரிய வந்தது. ரோட்டரி சங்கம் எடுத்து நடத்தும் இந்த முதியோர் இல்லத்தில் வயதானவர்கள் மட்டுமல்லாது, இறுதி முடிவில் இருந்த வயதானவர்களையும் பார்த்துக் கொண்டார்கள். பெரிய நிறுவனங்களின் அன்பளிப்பிலும், செக்கோஸ்லேவியாவின் பென்ஷன் பண்ட் நிறுவனத்தின் உதவிப் பணத்திலும் இயங்குகிறது. தீபா அவனுடன் ஒருமுறை அங்கு சென்று வந்தாள். மதுரை, வளையங்குளம் தாண்டி விலக்கில் இருக்கும் அந்த வசதியான முதியோர் இல்லத்தை பார்த்த பிறகே ஒருவாறு சமாதானம் அடைந்தாள். 

அங்கு சிறப்பு மருத்துவரோ அல்லது சிறப்பான மருத்துவ சிகிச்சையோ ஏதும் கிடையாது. ஒரு மருத்துவர் அங்கேயே பணியில் இருப்பார், சில தாதிகளும் இருப்பார்கள். உணவளிப்பது, மருத்துவரின் ஆலோசனைப்படி வலி நிவாரணிகளும், தேவைப்பட்டால், தூக்க மாத்திரை  கொடுக்கப்படும்.  பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள் கொடுத்துவிட்டுப் போனால் வேளாவேளைக்கு கொடுப்பார்கள். காற்றோட்டமான இடம், அன்பான பணியாளர்கள். மருத்துவர்களால் கைவிடப்பட்டவர்கள், வலியின்றி இறக்க ஒரு வழி, ஏற்பாடு இது என்று அவர்கள் சொல்ல, அவனுக்கு அதுவே திருப்தியாய் இருந்தது.

அம்மாவை சேர்க்க டாக்ஸி அமர்த்தி, அந்த முதியோர் இல்லத்துக்கு வரும்போது, அவர்கள் கேட்டிருந்த அத்தனை மருத்துவ சான்றிதழ்களும், இவன் வருமான சம்பந்தமான சான்றிதழும் எடுத்துக் கொண்டான்.

முன் சீட்டில் பாலா உட்கார்ந்திருக்க, அம்மாவை, பின் சீட்டில் கிடத்தினான்.   தீபா நிறைய அழுதாள். பாலாவின் அப்பா வெளியே வரவே இல்லை. பாலாவின் அப்பாவால் வெளியே வந்து வழி அணுப்பி வைத்திருக்க முடியும், அவர் அதை தவிர்த்ததன் காரணம் புரியவில்லை. இத்தனை நாட்கள் உடனிருந்தவளை இப்போதே வாரிக் கொடுத்தது போல அவருக்குத் தோன்றியிருக்க வேண்டும்.  டாக்ஸியின் பின் சீட்டில் கிடத்தியவுடன், பாலாவின் அம்மா, அவனை தன் ஒளி மங்கிய கண்களால் தீர்க்கமாய்ப் பார்த்தாள். அம்மாவின் வார்த்தைகளும், மனசும் அவள் பார்வையிலும், கடையோரம் வழிகிற கண்ணீரிலும் இருந்தது போலத் தோன்றியது. காணச்சகியாது டிரைவருடன் பேச்சு கொடுத்துக் கொண்டே இறுக்கமாய் அமர்ந்து கொண்டான்.

அந்த இல்லத்தை அடைந்த போது, ஸ்ட்ரெச்சருடன் இரண்டு பேர் வந்தார்கள். டாக்ஸியின் பின் கதவைத் திறந்து அவனுடைய அம்மாவை தூக்கினார்கள் பாலாவின் அம்மா இன்னும் அவன் மீதிருந்த பார்வையை அகற்றாமல், அவனை நோக்கிய மாதிரியே இருந்தது.  டிக்கியில் இருந்த துணிமணிகளையும் அம்மாவிற்கு கொடுக்கவேண்டிய மருந்துகள், பிளாஸ்க் போன்ற சாமான்களை எடுத்துக் கொண்டான்.

உள் நுழைந்தவுடன் பெஞ்சில் அம்மா இருந்த ஸ்ட்ரச்சரை வைத்தார்கள். வரவேற்பறையில் இருந்த பெண் சிரித்தபடியே பனிவாய்ப் பேசினாள்.   அந்த அறை பேரமைதியாய் இருந்தது. சுவர்களில் வயதானவர்களின் உடல் நலம், மருத்துவக்குறிப்புகள், எளிய உடற்பயிற்சிகள், வயதானவர்களை கொண்டாட வேண்டும் எனும் போஸ்டர்கள் நிரம்பியிருந்தது. வரவேற்பறையின் கடைக்கோடியில் ஒரு அறிவிப்புப் பலகையும், சில அறிவிப்புகளும், குறுந்தகவல் அட்டைகளும் ஒட்டப்பட்டிருந்தது.  அறிவிப்பு பலகைக்கு அடுத்து ஒரு வாட்டர் கூலர் வைக்கப்பட்டு இருந்தது.  அவனுக்கு தண்ணீர் குடிக்க வேண்டும் போல இருந்தது.

கொண்டு வந்திருந்த சான்றிதழ்களையும், இதர பேப்பர்களையும் வரவேற்பறையில் இருந்த பெண் வாங்கிக் கொண்டாள். ஒரு படிவம் கொடுத்து அதை பூர்த்தி செய்யச் சொன்னாள். சகல விபரங்களும் கேட்டிருந்தார்கள், அதில் நிறைய ’ஏன்’ கள் இருந்தன. பூர்த்தி செய்ததும், அவனிடம் இருந்து வாங்கி, அதில் ரூபாய். ஐந்தாயிரம் என்று எழுதி வட்டமிட்டாள். வலது பக்கம் இருந்த கேஷ் கவுண்டரை கைகாட்டினாள்.  பாலா ஒரு இயந்திரம் போல கேஷ் கவுண்டரை நோக்கி நகர்ந்தான்.  அவனுடைய அம்மாவை இப்போது ஒரு அறைக்குக் கொண்டு சென்றார்கள். அம்மாவுக்கு ஒரு படுக்கையும் ஒரு நம்பரும் தரப்பட்டது. 

அம்மாவை அறையில் விட்டுவிட்டு வெளியே வரமுடியவில்லை. அவள் படுக்கைக்கு அருகே இருந்த சின்ன கப் போர்டில், அவளுடைய துணிமணிகளை வைத்த பிறகு, அவள் படுக்கையின் ஓரத்தில் உட்கார்ந்து கொண்டான். அவனுடைய கைகளை அம்மா பிடித்தபடி ஒன்றும் பேசாமல், கண்ணீரின் ஊடே பார்த்தாள். பாலாவுக்கு என்னவோ போல் இருந்தது.

“வாரத்திற்கு ஒரு தடவை உன்னை வந்து பாக்குறேம்மா!” என்றான். அங்கிருந்த தாதியிடம், நன்றாக கவனித்துக் கொள்ளும்படி சொன்னபோது, ‘கவலைப்படாதீங்க சார், நாங்க  நல்லாப் பாத்துக்குறோம்!” இங்க நூறு பேருக்கும் மேல இதே மாதிரி வயசானவங்க இருக்காங்க!” என்று ஒரு தகவலையும் சொன்னாள்.  

இன்றோடு ஆறு நாட்களாகிவிட்டது, அம்மாவை விட்டு வந்து. அம்மாவை அட்மிட் செய்யும்போதே, அம்மாவின் இறுதி காரியங்களுக்கும், கிரியைகளுக்கும் சேர்த்து பணம் கட்டிவிட்டிருந்தான். ரசீது எங்கே இருக்கும் என்று யோசனை வந்தது அவனுக்கு.  முன் நடையில் இருக்கும் கப்போர்டில் இருக்க வேண்டும், அங்கு வைத்த ஞாபகம் இருந்தது அவனுக்கு.

முன் நடையை ஒட்டிய அறையில் அவனுடைய அப்பா அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார். அவனுடைய அம்மாவும் அதே அறையில் தான் இருந்தாள், அம்மா வீட்டில் இருந்தவரை அந்த அறையில் ஒருவிதமான துர்நாற்றம் இருந்து கொண்டே இருந்தது. வலியும், வேதனையும், சளியும், மூத்திரமும், மலமும் சூழ்ந்த அவர்களின் படுக்கை அறையில் அமைதியின்மையும் ஒரு துர் நாற்றமாய் வீசிக்கொண்டே இருக்கும். அவனுடைய அப்பா, அம்மாவை முதியோர் இல்லத்தில் விட்டு வந்த பிறகும், படுக்கையை எடுக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.

அம்மா உடனிருந்த வரை, அப்பாவுடன் எப்போதும் ஏதாவது விஷயத்தில் சண்டை போட்டுக் கொண்டே இருப்பாள்.  தீபாவை மட்டும் எழுப்பி விஷயத்தை சொன்னான்.
’நம்ம தான் கொண்ணுட்டோம்ப்பா என்றாள்! அழுதுகொண்டே!’. அவளை சமாதானப்படுத்த வழி தெரியாமல், “ நான் போய் அம்மாவைக் கொண்டு வந்துடறேன்! நீ அப்பா எழுந்த பின்னால விஷயத்தைச் சொல்லிடு, உங்க அப்பா, அம்மாவுக்கும் தகவல் சொல்லிடு” என்று கிளம்பிவிட்டான்.

இவன் போய்ச் சேர்வதற்குள், அந்த இல்லத்தில் அம்மாவை சுத்தம் செய்து, குளிக்க வைத்திருந்தார்கள். வீட்டிற்கு அணுப்புவதற்காய், ஒரு அமரர் ஊர்தியும் தயாராய் வைத்திருந்தார்கள். பாலாவுக்கு அம்மாவைப் பார்த்ததும், அடக்கமுடியாமல் கண்ணீர் வந்தது.  வீட்டிலேயே இருந்திருந்தால், இன்னும் கொஞ்ச நாள் இருந்திருப்பாளோ என்று நினைத்தான். இறப்பதற்கு முன்னால் என்னென்ன சொல்ல நினைத்தாளோ, அப்பாவை பார்க்க, தீபா, பவித்ராவைப் பார்க்க நினைத்திருப்பாளோ? அம்மாவை விட்டு வரும்போது, இவனுடனேயே வந்த பார்வை, இவனுக்கு ஏனோ ஞாபகம் வந்தது. 

அம்மாவை அமரர் ஊர்தியில் ஏற்றிய பிறகு, இல்லத்தில் இருந்த பணியாளர்களிடம் விடைபெறும் போது, காலையில் தகவல் சொன்ன தாதி வந்து தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள்.

“உங்க அம்மா தற்கொலை செய்துகிட்டாங்க! சார்! என்றாள்.  அதனை பாலாவால் சரியாக புரிந்து கொள்ளமுடியவில்லை.

என்ன சொல்றீங்க? அம்மா எப்படி தற்கொலை செய்து கொள்வாள்? என்றான்.

“சரியா தூக்கம் வரலேன்னு இங்க இருக்கிற  நைட் டூட்டி நர்ஸ்ட்ட, ரெண்டு ரெண்டு தூக்க மாத்திரை வாங்கியிருக்காங்க தினமும்! சேர்த்து வச்சு, மொத்தமா நேத்து ராத்திரி முழுங்கியிருக்காங்க!

“நீங்க இங்க கொண்டாந்து விட்டிருக்க வேண்டாம் சார்!” என்றாள்.

38 comments:

Yaathoramani.blogspot.com said...

இறுதி வரிகளைப் படித்ததும் அதிர்ந்து போனேன்
கதையும் கதை சொல்லிச் செல்லும் விதமும்
மிக மிக அருமை .
கதையாக எடுத்துக் கொள்ள முடியவில்லை
மனம் கனக்கச் செய்து போகும் பதிவு
நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்

விஜயராகவன் said...

உங்க பாணியில் இருந்து விலகிய கதை மாதிரி பட்டது ராகவன்..வாழ்வியல் நிர்பந்தங்களில் எல்லா பாத்திரங்களும் சிக்கி இருப்பதை வலியோடு விவரிக்கிறது உங்க எழுத்தின் வலிமை..நல்ல கதை படித்த ஒரு கனத்த திருப்தி தருகிறது.. வாழ்த்துக்கள்

Raji said...

ரொம்ப அருமையான கதை ராகவன்.......என்ன சொல்லன்னே தெரியல...பேசவே வார்த்தை வரல....அந்த ஹோம் ரன் பண்றதுக்கான பணம் எங்கேர்ந்து வருதுன்னு விளக்கும்போது உங்களோட characterisitc "attention to தேடைல்ஸ்" தெரிஞ்சுது.... தொடர்ந்து எழுதுங்க.....அது நீங்க எங்களுக்கு பண்ற பெரிய favour ....

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

ராகவன்!என்ன சொல்லன்னு தெரியல.ஒரு வித மன அழுத்தத்துல இருக்கேன் படிச்சபிறகு.

உங்க எல்லாக் கதைகளுமே வாழ்வின் இயலாதவர்களின் அனுபவங்களையே பேசுவதாய் உணர்கிறேன். இப்படி எழுதவும் ஒருத்தர் வேண்டித்தான் இருக்கு.

ஆனாலும் உங்கள் மொழியில் வெளிச்சம் பரவி உற்சாகம் தொனிக்கும் ஒரு கதையைப் படிக்கவும் ஆவலாகிறது மனம்.

க ரா said...

அப்படியே கைய உள்ளுக்குள்ள விட்டு நெஞ்ச பிடுங்கி வெளில எறிஞ்ச மாதிரி இருந்துச்சுன்னா படிச்சு முடிச்சப்புறம்... ரொம்ப நல்ல கதைதான்.. இருந்தாலும் குலுங்கி குலுங்கி சிரிக்கற மாதிரியும் உங்களால கதை எழுத முடியும்னு நம்பறேன்.. ஒரு விதமான சோகங்களேயே பேசுதோன்னு தோணுது உங்க கதைகள்... இது என்னோட எண்ணம்தான்... தப்பா எடுத்துகிடாதீங்க.. எழுத்து மோனோடோனஸா போயிட கூடாதுன்னு நினைக்கிறேன்...

Rathnavel Natarajan said...

நல்ல கதை.
வேதனையாக இருக்கிறது.

வெங்கட் நாகராஜ் said...

என்ன சொல்வது நண்பரே.... மனம் ஒரே அழுத்தி விட்டது போல இருக்கிறது.... கடைசி வரிகளைப் படித்தவுடன் நெஞ்சில் ஒரே சோகம் அப்பிக்கொண்டது போன்றதோர் உணர்வு....

இளங்கோ said...

இரண்டு துளி கண்ணீர் மட்டும்
அந்த தாய்க்கும்.. மகனுக்கும்...

Mahi_Granny said...

'' உங்கள் மொழியில் வெளிச்சம் பரவி உற்சாகம் தொனிக்கும் ஒரு கதையைப் படிக்கவும் ஆவலாகிறது மனம்.''

சுந்தர் G பின்னூட்டம் தான் என்னுடையதும் ஆனாலும் இத்தனை datails உங்களுக்கு மட்டுமே முடியும் , தலைப்பும் படமும் கனத்தை இன்னும் கூட்டுகிறது.

நெல்லி. மூர்த்தி said...

கதையின் இறுதி வரிகள் மனதைப் பிசைந்தது. மகனுக்கு இனி பாரம் வேண்டாம் என்றோ அல்லது தன்னைப் புறந்தள்ளிவிட்டனரே என்றோ தற்கொலைக்கு முயன்றிருக்கலாம். ஆனால், முடிவு... கண்களைப் பனிக்க வைத்து விட்டது.

sakthi said...

மனசை அப்படியே கதற வெச்ச கதை ஆனால் எத்தனை பேர் வாழ்கையில் நிஜமா இப்படி நடக்குது என என் அனுபவத்தில் பார்த்திருக்கேன் சொல்லியிருக்கும் விதம் எப்பவும் போல உங்கள் வழக்கமான பாணியில்

rajasundararajan said...

இக் கதையில், நுவலுநர் (narrator) பற்றிய குணவார்ப்பு நன்றாக வந்திருப்பதாகக் கருதுகிறேன். தீபாவை அவ்வளவு நல்ல குணவதியாகப் படைக்கையில், பொதுவாக, இவனை அவளுக்கு மறுதுருவத்துக்கு நகர்த்த முயலுவார்கள் நம் எழுத்தாளர்கள். இதில், நொம்பலப் படுபவனைப் பற்றிய இச் சித்திரம் மிகையுறுத்தப் படாமல் எழுதப் பட்டிருக்கிறது. //ஒரு வாட்டர் கூலர் வைக்கப்பட்டு இருந்தது. அவனுக்கு தண்ணீர் குடிக்க வேண்டும் போல இருந்தது.//

இன்று, கதை வாசிப்பதற்கோ அதன் மீது கருத்துக் கூறுவதற்கோ உரிய மனநிலயில் நான் இல்லை.

தூத்துக்குடியில் உள்ள வீடுகளிலேயே மிக அழகானது, ஒரு ஆர்க்கிடெக்ட்டை வைத்து எனக்கென நான் கட்டிய அந்த வீடு. என் அம்மாவின் பாம்படம் போல் எத்திசை இருந்து பார்த்தாலும் அவ்வளவு அழகாக இருக்கும் என்று, அந்த வீட்டைப் பற்றி, எனது 'நாடோடித் தடம்' நூலில் பேசியிருக்கிறேன். அந்த வீட்டை இன்னொருவருக்குப் பத்திரம் மாற்றித் தர, சென்னையில் இருந்து நாளைக்கு நான் புறப்படுகிறேன்.

எனக்கொரு பணத்தேவையும் இல்லை. அதை விற்று வரும் பணத்தையும் - என் வயது, வாழ்க்கைநெறி காரணம் - இன்னொரு சொத்தில் முதலிடுகிற ஆர்வமும் இல்லை. பிறகு ஏன் விற்கிறேன்?

தொலைவில் இருந்து, அந்த வீட்டை என்னால் பராமரிக்க - நிர்வகிக்க - முடியவில்லை. ஐந்து ஆண்டுகளுக்கு முன் ஒருமுறை விலைக்குக் கேட்ட அதே ஆள் இப்பொழுதும் வந்து கேட்டார். சரி, அவராவது அதைப் பேணிக்கொள்வார் என்று எழுதிக் கொடுக்கப் போகிறேன்.

தாயோ, வீடோ, வீட்டில் கட்டி வளர்த்த பசுவோ (அப்படியும் ஓர் அனுபவம் எனக்கு இருக்கிறது) வேறு வேறு அல்ல என்றே உணர்கிறேன்.

ஒரு சுமையும் சிக்கலும் இல்லாத வரை அறவாழ்வு வாழ்தல் யாருக்கும் எளிது. ஆனால் வாழ்க்கையோ அப்படி இல்லை. தீபா போன்ற தோல்ஸ்தோய்ப் பெண்கள் (அன்னா கரேனினா தவிர்த்து) அமைவதும் அரிது. இந் நிலைமையில், நம் உணர்வுகளையும் விஞ்சிய சிக்கல்களை நேர்கொள்ளும் திறனாளிகளாக நம் வழித்தோன்றல்களை வளர்த்தெடுக்க வேண்டியதே நம் கடன்.

//“நீங்க இங்க கொண்டாந்து விட்டிருக்க வேண்டாம் சார்!” என்றாள்.// என்பது நுவலுநரின் குற்றஉணர்வுதானே ஒழிய, தாதியின் குரல் என்றது - அவள் அந்த அமைப்பின் ஓர் அங்கம் என்பதால் - உள்முரண் ஆவதால் பொருந்தவில்லை, அவ்வளவுதான்.

ஓலை said...

Oru irukkamaana pathivu. Vaazhvin nijaththai unga pathivila unara mudiyuthu.

'பரிவை' சே.குமார் said...

இறுதி வரிகளைப் படித்ததும் அதிர்ந்து போனேன். நல்ல கதை படித்த ஒரு கனத்த திருப்தி.

ராகவன் said...

அன்பு ரமணி அவர்களுக்கு,

உங்கள் வாசிப்புக்கும், கருத்துக்கும் என் அன்பும் நன்றியும்...

வாழ்க்கை என்பதே ஒரு அதிர்வான விஷ்யம் தான் என்று தோன்றுகிறது.

அன்புடன்
ராகவன்

ராகவன் said...

அன்பு விஜய்,

என் பாணியில் இருந்து விலகிய கதையா என்று எனக்குத் தெரியவில்லை. எனக்கென்று ஒரு பாணி வந்து விடும் அளவு எழுதிவிட்டேனா என்பதும் தெரியவில்லை. என் எல்லாக் கதைகளிலும் இருப்பது வேதனையும், கண்ணீரும், வலியும் தான் என்பது நிஜமாய் இருக்கலாம்.

சந்தோஷமாய் துள்ளிக் குதிக்க ஒரு கதை எப்படி எழுதுவது என்று தெரியவில்லை. முயன்றபோது வலிய திணிக்கும் விஷயம் போல தோன்றியது. நீ சொன்னது போல, வாழ்வியல் நிர்ப்பந்தங்கள் எல்லாருக்கும் பொதுவானதே... வாழ்க்கையே ஒரு கம்பெல்லிங் சாய்ஸ் என்று தான் தோன்றுகிறது... உன் கருத்து எனக்கு பிடித்திருந்தது.

அன்புடன்
ராகவன்

ராகவன் said...

அன்பு ராஜி,

உங்களுக்கு இந்தக் கதை பிடித்திருந்தது எனக்கு மகிழ்ச்சியே... உங்களின் தொடர்ந்த வாசிப்பும், கருத்தும் எனக்கு உற்சாகமான விஷயம். தொடர்ந்து வாசித்து உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்.

அன்புடன்
ராகவன்

ராகவன் said...

அன்பு சுந்தர்ஜி,

எல்லாருக்கும் விருப்பமான விஷயமாய் ஒன்று இருந்தால், அது எளிதில் வாய்க்கப்பெறாத விஷயமாய் இருக்கலாம், அல்லது என்னால் முடியாததாய் இருக்கலாம். நான் இதுவரை பார்க்காததை எழுதவே இல்லை.

எனக்கு துள்ளலாய் கதை எழுத வராது என்றே நினைக்கிறேன். என் அணுபவத்தில் அது ரொம்பக் குறைவு. இரண்டு மூன்று அணுபவங்கள் மாத்திரமே, அதைக் கூட எழுதியாயிற்று... பார்க்கலாம், காலப்போக்கில் என்னென்ன கற்றுக்கொள்ளமுடிகிறதோ வாழ்க்கையிடம் இருந்து... துள்ளலான விஷயம் கிடைக்கும் போது அவசியம் பதிகிறேன்.

உங்கள் அன்புக்கும், கருத்துக்கும் என் அன்பும் நன்றிகளும்.

அன்புடன்
ராகவன்

ராகவன் said...

அன்பு ராம்,

தெரிஞ்சதை எழுதுறேன் அப்படின்னு தான் சொல்லத் தோணுது...வராததை இழுத்துட்டு அது வரலேன்னு சொல்றத விட...

என் மனைவியே சொல்வாள்... யூ ஆர் வெரி டிரை (வறண்டவன்)... சென்ஸ் ஆஃப் ஹூயுமரே கிடையாது என்பாள். உற்சாகமான ஒரு நகைச்சுவை என்னிடம் இல்லவே இல்லை.

இருந்தாலும் முயல்கிறேன்... அவசியம் படித்துவிட்டு சொல்லுங்கள் ராம்.

அன்புடன்
ராகவன்

ராகவன் said...

அன்பு ரத்னவேல் அய்யா அவர்களுக்கு,

உங்கள் கருத்துக்கும், அன்புக்கும் என் அன்பும் நன்றிகளும்.

அன்புடன்
ராகவன்

ராகவன் said...

அன்பு இளங்கோ,
அன்பு வெங்கட் நாகராஜ்,
அன்புத் தங்கை சக்தி,
அன்பு ப்ரோட்டோ அம்மா,

உங்கள் எல்லோருக்கும் என் அன்பும் நன்றிகளும்.

தொடர்ந்து நீங்கள் எல்லோரும் வாசித்து வருவது என்னை ஊக்கப்படுத்துகிறது.

அன்புடன்
ராகவன்

ராகவன் said...

அன்பு நெல்லிமூர்த்தி,

உங்கள் வாசிப்புக்கும், கருத்துக்கும் என் அன்பும் நன்றிகளும்...

தொடர்ந்து வந்து உங்கள் மேலான கருத்தைச் சொல்லுங்கள் மூர்த்தி!

அன்புடன்
ராகவன்

ராகவன் said...

அன்பு அண்ணனுக்கு,

எப்படி இருக்கீங்க? மனசு ரொம்ப கனத்துக் கிடக்கு அண்ணே!

வளர்த்த காத்துளையில் ஆடும் பாம்படம் மனசுக்குள் உராயும்போதெல்லாம் ரணமாய் இருக்கிறது.

வீட்டைப்பற்றி நீங்க சொல்ல சொல்ல எனக்கு மனசுக்கு என்னவோ போல இருந்தது. வீடு ஒரு மெட்டஃபார் மாதிரி...ஆத்தாவும் சிக்கலான பாம்படமும், வீடும், அடிவயிற்றை எக்கிக் கொண்டு ப்பே...எனும் பசுவும்... எல்லாமும்... கதையைப் பற்றிய உங்கள் கருத்தை அழகாய் சொல்கிறது.

முரணான விஷயம் நானும் அறிந்திருந்தேன்.. அந்தத் தாதியை புதிதாய் வேலைக்கு சேர்ந்தவள் என்று தான் காட்ட எத்தனித்தேன்... கொஞ்சம் துருத்தியதாய் இருக்க வெளியே எடுத்தேன்... இருந்தாலும்,

கடைசி வரியில் “ நான் வந்து பார்த்த முதல் சாவு இது” என்று எழுதியதை எடுத்துவிட்டேன். இப்போது உங்கள் கருத்தைப் பார்த்ததும், இதை எழுதியிருக்கலாம் என்று தோன்றியது. யாரும் கதையை இப்படி அணுகவில்லை...

அன்புடன்
ராகவன்

ராகவன் said...

அன்பு ஓலை,
அன்பு சே.குமார்,

உங்கள் கருத்துக்கும் வாசிப்புக்கும் என் அன்பும் நன்றிகளும்...

அன்புடன்
ராகவன்

க ரா said...

அன்பு ராகவன் அண்ணே

//அவசியம் படித்துவிட்டு சொல்லுங்கள் ராம்.//
இது எனக்கு ரொம்ப அந்நியமா படுது அண்ணே...

எதானும் தப்பா சொல்லிருந்தா தப்பா நினச்சுகாதீங்க.

ஒரு எழுத்தாளன யாரும் நீ அப்படி எழுது, இப்படி எழுதுன்னு நிர்பந்திக்கமுடியாதுதான். இருந்தாலும் ஏதோ சொல்லனுன்னு தோணிச்சி.. நம்ம அண்ணன் தானேன்னு ஒரு நினைப்பு.. அதுனால சொல்லிட்டேன்.

இனிமே சொல்லுங்கள்னுலாம் விளிக்க வேண்டானே...

எனக்கு ரொம்ப சங்கடமாயிருச்சு.

அன்புடன்,

இராமசாமி.

ராகவன் said...

அன்பு ராம்,

சொல்லுங்க என்பது தெரியாம வந்துடுச்சு... ராம் மற்றபடி நீ என்ன வேணுன்னாலும் சொல்லாம் ராம்... ஒண்ணா தானே எழுத ஆரம்பிச்சோம்... ராம்... என்னோட சகபயணி நீ எல்லாவிதத்திலும்... அதனால... நீ சொன்னது எனக்கு தவறாகவே படவில்லை...

நிஜமாகவே எனக்கு நகைச்சுவை உணர்வு கம்மி என்பது தான் சத்தியம்... அதை தான் சொல்லியிருக்கேன்... ராம்... அன்பு ராம்... ப்ரிய ராம்... ஹேராம்...

அன்புடன்
ராகவன்

சாந்தி மாரியப்பன் said...

கடைசிவரி, கதை மாந்தர்களின் மனக்குரலின் எதிரொலியாகவே எனக்கு படுகிறது.. வலியோடு கூடிய வலிமையான கதை.

சாந்தி மாரியப்பன் said...
This comment has been removed by the author.
iniyavan said...

ராகவன், காலைதான் இந்த கதையை படித்தேன். என்ன சொல்றதுனு தெரியலை. அம்மாவை இப்பத்தான் பார்த்துட்டு மலேசியா வந்தேன். ஒரு வாரம்தான் ஆகுது. பயமா இருக்கு ராகவன். நிறைய எழுதுங்க. என்றும் அன்புடன், என்.உலகநாதன்

திண்டுக்கல் தனபாலன் said...

வணக்கம்...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது...

வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/08/blog-post_12.html) சென்று பார்க்கவும். நன்றி..

Rasan said...
This comment has been removed by the author.
Rasan said...
This comment has been removed by the author.
Rasan said...

கதை எதார்த்தமாகவுள்ளது. கதையில் வரும் பாத்திரங்கள் தற்கால வாழ்வியலின் நிர்பந்தத்தில் சிக்கிவுள்ளதைத் தெள்ள தெளிவாக விளக்கியுள்ளீர்கள். நல்ல பதிவு தொடருங்கள்.

Rasan said...

கதை எதார்த்தமாகவுள்ளது. கதையில் வரும் பாத்திரங்கள் தற்கால வாழ்வியலின் நிர்பந்தத்தில் சிக்கிவுள்ளதைத் தெள்ள தெளிவாக விளக்கியுள்ளீர்கள். நல்ல பதிவு தொடருங்கள்.

Rasan said...

கதை எதார்த்தமாகவுள்ளது. கதையில் வரும் பாத்திரங்கள் தற்கால வாழ்வியலின் நிர்பந்தத்தில் சிக்கிவுள்ளதைத் தெள்ள தெளிவாக விளக்கியுள்ளீர்கள். நல்ல பதிவு தொடருங்கள்.

Rasan said...

கதை எதார்த்தமாகவுள்ளது. கதையில் வரும் பாத்திரங்கள் தற்கால வாழ்வியலின் நிர்பந்தத்தில் சிக்கிவுள்ளதைத் தெள்ள தெளிவாக விளக்கியுள்ளீர்கள். நல்ல பதிவு தொடருங்கள்.

Rasan said...

கதை எதார்த்தமாகவுள்ளது. கதையில் வரும் பாத்திரங்கள் தற்கால வாழ்வியலின் நிர்பந்தத்தில் சிக்கிவுள்ளதைத் தெள்ள தெளிவாக விளக்கியுள்ளீர்கள். நல்ல பதிவு தொடருங்கள்.

Rasan said...

மன்னித்து விடுங்கள் நண்பரே.ஒரு கருத்துரை 7 முறை வந்துள்ளது. சுட்டியினால் ஏற்பட்ட பிழை நண்பரே. முதன்முறையாக வந்து இவ்வாறு நடந்து விட்டதே நண்பரே. வருத்தமாகவுள்ளது.