பரிசு பொட்டலம்
என்று தான் தோன்றுகிறது
அடர் நீல வானத்தை
மடித்துக் கட்டியது போல்
நட்சத்திரங்கள் உதிர்ந்து
கொண்டே இருந்தது
மூடியிருந்த பொட்டலத்தின்
நட்சத்திர முனைகளின்
கூர் கிழிக்கும் பயம்
பிரிப்பதை ஒத்தி வைத்தது
மயில்கண்சுடரென மினுக்கி
போர்த்திய அழகு
மர்ம முடிச்சாய் இறுகுகிறது
பொட்டலத்தின் உள்ளீடு
எதிர்பார்ப்பின் அவயங்களை
தின்று வளருது கல்யாளியென
பேசாத வார்த்தைகள்
மூடத்துவங்குகிறது என்னை
கூர் அலகால் துழாவி கொத்தி
எடுக்கிறது மந்திரச்சொல்லை
சினேகத்தின் பீலிப்பறவை
மந்திரச்சொல்லை
தவறவிட உடைந்து
நறுமணம் பரவுகிறது
நறுமணத்தின் தைலங்களில்
வரைந்த அரூவ சித்திரங்களுக்கு
பெயரிடுகிறேன் அது இதுவென்று
கனவுகளின் படுக்கை உதற
விழுந்த முகங்களை
அரூவங்களுடன் பொருத்த
முனைகிறேன்
பொருந்தா முனைகளை
சிதைக்கவும், முறிக்கவும்
தொடங்கியபோது
என் விரல்கள் உதிரத்தொடங்கியிருந்தது...
9 comments:
நல்ல கவிதை.
வாழ்த்துக்கள்..
வாழ்த்துக்கள் நண்பா
விஜய்
அண்ணா...
கல்யாழி என்ற தலைப்பைப் பார்த்ததும் நீண்ட நாட்களுக்குப் பிறகு கதை படிக்கலாம் என்று வந்தால் இங்கே கல்யாழி கவிதையாய் பேசுகிறது... அந்த ஈர்க்கும் எழுத்து கவிதையின் கனம் கூட்டுகிறது.
அருமையான வரிகள்.... வாழ்த்துக்கள் அண்ணா.
'யாழ்' என்றால் ஓர் இசைக்கருவி. 'யாழ' என்றால் ஒரு முன்னிலைச் சொல். 'யாழி' என்றால் என்ன?
பண்டைக் காலத்தில் இருந்ததாகச் சொல்லி, கோவில் தூண்களில் ஒரு விலங்கு வடிவத்தைச் செதுக்கி வைத்து இருக்கிறார்களே, அதுவா? என்றால் அது 'யாளி'.
ஒருவேளை, பின்நவினத்துவக் கவிதையாக இருக்குமானால் எனக்குப் புரிவதற்கு வாய்ப்பில்லை.
//நட்சத்திரங்கள் உதிர்ந்துகொண்டே இருந்தது// என்பது, என்னைப்போல் (நவீனத்துவ காலத்து) ஆட்களுக்கு, 'கனவுகள் கலைந்து, யதார்த்த வற்புலத்தில் விழுவதாக' பொருள் தரும். அதுபோலவே, //விரல்கள் உதிரத் தொடங்கியிருந்தது// என்பது செயல்பாட்டின் அல்லது படைப்புத் திறனின் ஏலாமைப் பொருள் உணர்த்தும்.
கொடுப்பினை (பரிசுப் பொருள்) - கனவு, கற்பனை (வானம், நட்சத்திரம்) - மறைபொருள் (பேசாத வார்த்தைகள்) - திறவுகோல் (மந்திரச்சொல்) - விபத்து (தவறவிட உடைந்து) என்றெல்லாம் வருவதால் இது படைப்பின் accidental occurrence பற்றியும், //பொருந்தா முனைகளைச் சிதைக்கவும், முறிக்கவும்// என்பதால் அதில் நமது தலையீடு விளைவிக்கும் ஊறு பற்றியும் பேசுவதாகப் புரிந்து கொண்டேன்.
அப்படித்தானா? இல்லையென்றாலும், 'once created, the author is no more' என்பதால் என் புரிதல் வரம்புதான் கவிதை.
'கல்யாளி' என்றாலே அது 100% கலை வடிவம்தானே? நல்ல தலைப்பு.
அன்பு ரத்னவேல் அய்யா அவர்களுக்கு,
உங்கள் வாழ்த்துக்கு என் அன்பும், நன்றிகளும்... ஸ்ரீவில்லிபுத்தூர்... ஆண்டாள் கோயில் கொடி ஏத்திருப்பாங்கன்னு நினைக்கிறேன்...
அன்புடன்
ராகவன்
அன்பு ஓலை,
அன்பும், நன்றிகளும்...
அன்புடன்
ராகவன்
அன்பு விஜய்,
உங்கள் வாழ்த்துக்கும், அன்புக்கும் என் அன்பும் நன்றிகளும் விஜய்.
அன்புடன்
ராகவன்
அன்பு குமார்,
கதை எழுத நேரமே இல்லாததால், சுருக்க ஒரு கவிதையாவது எழுதலாமே என்று எழுதியது...
உங்கள் வாசிப்புக்கும், கருத்துக்கும் என் அன்பும் நன்றிகளும்
அன்புடன்
ராகவன்
அன்பு அண்ணனுக்கு,
நீங்க சொன்னது தானே அதோட கருத்து... எனக்கும் பின் நவீனத்துவம் எல்லாம் தெரியாது...
அடிப்படையே தெரியாது அண்ணே...
யாளி தான்ணே! எனக்கு எழுத்துப்பிழை அதிகம் வரும்...சரிசெய்ய முயற்சிகள் எடுத்துக் கொண்டிருக்கிறேன்...
உங்களின் நவீனத்துவ விளக்கத்துக்கும், அதற்கடுத்த பகுதியில் எடுத்துக் கொண்ட விளக்கம் தான்ணே என்னோட கவிதையும்...
ஆனால் இது ஒரு மனசு சமீபத்தில் சந்தித்த அல்லது சந்திக்க நேர்ந்த ஒரு சில சம்பவங்களை மனசில் கொண்டு எழுதியது அண்ணே! ஆனா காண்டெக்ஸ்ட் நீங்க சொன்னது தான்ணே!
உங்கள் அன்புக்கும், உங்கள் கருத்துக்கும் என் அன்பும் நன்றிகளும் அண்ணே...
அன்புடன்
ராகவன்
Post a Comment