Wednesday, December 07, 2011

தொட்டி விருட்சம்...


யாரையோ தேடிக் கொண்டிருப்பது போலத் தோன்றியது, திண்ணையில் அமர்ந்து கொண்டு ஒரே திசையில் பார்த்துக் கொண்டிருந்த பொன்னுத்தாயைப் பார்த்துக் கொண்டிருந்த போதுஇது போல ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டிருப்பவள் அல்ல, இவள். எப்போதும் பம்பரமாய் சுற்றிக்கொண்டு இருப்பவளுக்கு என்ன ஆகிவிட்டது இப்போதெல்லாம். என்னவாய் இருக்கும் என்று பட்டாசாலில் இருந்த கோனேரிக்குத் தெரியவில்லைகூப்பிடலாமா என்று யோசித்தவர், வேண்டாமென்று தனக்குத்தானே தலையை பலமாய் ஆட்டிக் கொண்டார். கடையிலிருந்து வந்ததில் இருந்து அவள், அவரை கண்டு கொண்டதாகவே தெரியவில்லை. கொஞ்சம் உற்று நோக்கியதில் அவள் யாருடனோ பேசுவது போலவும் தோன்றியதுகைகளை அசைத்தவாறே அவள் பேசும்போது, மொழி பரிச்சயம் இல்லாதவனுக்கும் புரிந்துவிடும். ஆனால் கைகளை திண்ணையில் ஊன்றியபடியே அவள் வாய் மட்டும் ஏதோ முனுமுனுத்துக் கொண்டிருந்தது.

பட்டாசாலில் இருந்து எழுந்து வந்தவர், வாசலில் வந்து நின்று தெரு முழுக்க நோட்டமிட்டார். யாரும் தட்டுப்படவில்லை. எதிர் வீட்டு ஜன்னலும் மூடியிருந்தது. இப்போது அவள் பேசுவது போலவும் இருந்தது, ஆனால் என்ன பேசுகிறாள் என்று புரியவில்லை. அப்போதும் பொன்னுத்தாய் கவனித்ததாய் தெரியவில்லை. வாசக்காலிலேயே நின்றவர், அவளைக் கவனிக்காதது போல, தொண்டையைச் செருமினார். பொன்னுத்தாயிடம் இருந்து ஒரு அசைவில்லை, ஏதோ திக்கில் பார்த்துக் கொண்டே பேசிக் கொண்டு இருந்தாள். யசோதை என்று அவளுடைய அக்காவின் பெயர் அவளின் ஏகாந்த சம்பாஷனையின் ஊடே காதில் விழுந்தமாதிரி இருந்தது. யசோதையைப் பற்றியே இன்னும் நினைத்துக் கொண்டிருக்கிறாள்.  சுபத்ரா இங்கு வந்துவிட்டால், ஓரளவு சரியாகிவிடுவாள் என்று தோன்றியது.  எப்போதும் இப்படி இருப்பவள் இல்லை, கடையில் இருந்து வந்ததும், என்ன வேலையில் இருந்தாலும், அதன் மிச்சத்துடனே வந்து என்ன ஆச்சு, வியாபாரம் எப்படி என்று கேட்பவள், இப்படி இருப்பது ஏன் என்று தெரியவில்லை.

கோனேரி பித்தளை பாத்திரம் வியாபாரம் செய்து வருகிறார். அவரின் பாத்திரக்கடை, புதுமண்டபத்தில் இருக்கிறது.  மதுரையை சுற்றியிருக்கும் பட்டறைகளில் இருந்து பித்தளைப் பாத்திரங்களும், எவர்சில்வர் பாத்திரங்களும், மொத்தமாய் கொள்முதல் செய்து விற்பனை செய்து கொண்டிருந்தார்.  பித்தளை விளக்குகள் நாச்சியார் கோயிலில் இருந்தும், அரியக்குடியில் இருந்து யானை விளக்குகள் மற்றும் சிறு உலோகச்சிலைகளும் வாங்கி விற்பனை செய்வதும் உண்டு.  மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வரும் சுற்றுலாப்பயணிகள், விளக்குகளிலும், சின்ன உலோகச்சிலைகளிலும் அதிகம் வாங்கிச் செல்வது உண்டு.  எவர்சில்வர் சும்மா பேருக்கு தான், பெரும்பாலும், அண்டாக்களும், சருவச்சட்டிகளும், சொம்புகளும், தாம்பாளங்களும் அடுக்கியது அடுக்கிய படியே இருக்கும்.  அவருடைய அப்பா காலத்தில் இருந்து இதே வியாபாரம் தான். அவர்களின் உறவுக்காரர்களில் கடை வைத்து வியாபாரம் செய்பவர்கள் ரொம்பவும் கம்மி.


பொன்னுத்தாயி, கோனேரியின் தாய்மாமன் மகள். கோனேரியை விட பத்து வயது சின்னவள். கோனேரியின் உயர்ததிற்கும், உடம்பிற்கும், அவள் சித்துப் பெண் போல இருப்பாள்.  மாநிறமாய் இருந்தாலும், அவளின் மூக்குத்திப் பொட்டும், கண்களும் அவள் முகத்தில் அத்தனை கவர்ச்சியைக் கொடுத்திருந்தது. வாசலில் உட்கார்ந்திருந்தவள் சரியாக தலைவாராது, புடவைத்தலைப்பையும் சரியாகப் போடாது உட்கார்ந்திருப்பது கோனேரிக்கு ஒரு பயத்தைக் கொடுத்தது.  எங்கோ ஒரு திசையில் வெறித்தபடி, ஏதோ சிந்தனை வசப்பட்டது மாதிரி, எதையோ பறிகொடுத்தவள் மாதிரி, தனக்குத் தானே பேசிக்கொள்வது எல்லாம் மிகச்சமீபத்தில் தான்.    யசோதை இறந்த இந்த இரண்டு மாதங்களில் தான் இது போல இருக்கிறாளோ என்று யோசித்த போது, அப்படித்தான் இருக்கும் என்று நினைத்துக் கொண்டார்.

யசோதை பொன்னுத்தாயின் மூத்த சகோதரி. யசோதையிடம் அத்தனை ப்ரியமாய், ஒட்டுதலாய் இருப்பவள். அக்கா, தங்கை என்பது போலவே இருக்காது. சிநேகிதக்காரிகள் போலதான் இருக்கும் அவர்கள் பேசுகிறதும், எதற்கெடுத்தாலும் சிரிக்கிறதும். யசோதை, பொன்னுத்தாயியை விட நிறமாய், உயரமாய் இருப்பாள். கோனேரியின் தோளைத்தாண்டி காதுவரை வளர்த்தி அவள்.


யசோதை மதுரைக்கு வந்து தங்கும் போதெல்லாம் சிங்காரித்துக் கொண்டு கிளம்பிவிடுவார்கள் இருவரும், கோயிலுக்கும், பஜாருக்கும். அப்படியே கடைப்பக்கமும் வந்துவிட்டு, கோனேரியுடனே கிளம்பி, மாடர்ன் ரெஸ்டாரண்டில் தோசை காபி என்று டிபன் வாங்கிக் கொடுத்து அனுப்பி விடுவார். 

யசோதை இல்லாத சமயங்களில், பொன்னுத்தாய் தனியாக எங்கும் போவது இல்லை.  அவள் இறந்தது பெரிய இழப்பு தான் என்றாலும், அது பொன்னுத்தாயிக்கு இவ்வளவு பெரிய மனச்சிக்கலைக் கொடுக்கும் என்று அவர் நினைத்துக் கூட பார்த்ததில்லை. பொதுவாகவே மனதில் தோன்றுவதை பேசிவிடுபவள் தான். சின்ன சின்ன பொய்களுக்குக் கூட அதிகமாய் கோவித்து கொள்வாள்.  இது போல மனதுக்குள்ளேயே சந்தோஷத்தையோ, துக்கத்தையோ வைத்துக் கொண்டிருப்பவள் அல்ல. குழந்தையில்லை என்ற பெருங்கவலை ஒன்று தான் அவள் மனதை அழுத்தும் விஷயம் கோனேரிக்கு தெரிந்து.

கல்யாணம் ஆகி பத்து வருடங்களுக்கு மேலாக குழந்தைகளில்லாத கோனேரி, பொன்னுத்தாய் தம்பதிகளுக்கு, யசோதையின் குழந்தைகளே, அவர்கள் குழந்தைகள். நிறைய இடங்களில் குழந்தைப் பேற்றுக்காக மருத்துவ சிகிச்சை எடுத்தும் பலனில்லை. அதிலும் கோனேரிக்கு பிரச்னை இல்லை கோயம்புத்தூர் டாக்டர் சொல்லிவிட, அதுவே பொன்னுத்தாயிக்கு பெரிய கவலையாய் இருந்தது. இருந்தாலும், யசோதையின் குழந்தைகளை பார்த்துக் கொள்வதில் அந்த கவலைகளை கொஞ்சம் கொஞ்சமாய் மறந்திருந்தாள்.

பண்டிகைக் காலங்களில் எல்லோரையும் மதுரைக்கு வரச்சொல்லி அவர்களுடன் விசேஷ நாட்களைக் கொண்டாடுவதில் தான் விருப்பம் அவளுக்கு. கோனேரியிடம் வற்புறுத்தி அவர்களுக்கு புதுத்துணிகள் வாங்கிக் கொடுப்பாள்.  அதிலும் அவளுக்கு, கடைசியாய் பிறந்த பெண் குழந்தை சுபத்ரா என்றால் அத்தனைப் ப்ரியம் அவளுக்கு.


சுபத்ராவும் சிறு குழந்தையாய் இருந்ததில் இருந்து ஒட்டிக் கொண்டாள் இருவரிடமும். ஜென்ம ஜென்மமாய் உறவில் இருந்தவள் மாதிரி உருகுவாள் பொன்னுத்தாய். கோனேரிக்கும் சுபத்ராவின் மீது தனியான வாஞ்சை உண்டு, ஆனால் பொன்னுத்தாயிடம் பிரத்யேகமாக அதைப்பற்றி சொல்வதோ அல்லது பேசுவதோ இல்லை, அவளை அது காயப்படுத்திவிடலாம் என்று நினைத்துக் கொள்வார்.

சுபத்ரா பிறந்து கொஞ்ச நாட்களிலேயே, யசோதையின் கணவர் இறந்துவிட்டார்.  அவர் கொட்டாம்பட்டியிலேயே சிலம்பம் சொல்லிக் கொடுக்கும் பள்ளிக்கூடம் வைத்திருந்தார் அப்போது.  அது போக கறவை மாடுகளும், சொந்த வீடும்.  வருமானத்துக்கொன்றும் குறைவில்லை.  

முதல் இரண்டும் ஆண் குழந்தைகளாய் போய்விட, பெண் குழந்தை ஆசை யசோதைக்கு ரொம்ப காலத்திற்கு இருந்தது. பத்து வருஷங்களுக்கு பிறகு சுபத்ரா பிறந்ததில் அத்தனை சந்தோஷம்.

“இப்பதான் பவுனு, வீடே நிறஞ்ச மாதிரி இருக்கு!” என்று யசோதா பொன்னுத்தாயிடம் சொன்னாள். அப்படிச்சொன்னவள் தான், அவளுடைய கணவர் இறந்து ஒரு வருஷத்திற்குள்ளாகவே சுபத்ராவை கொண்டு வந்து பொன்னுத்தாயிடம் கொடுத்துவிட்டாள்.

“வளர்ற குழந்தைக்கு அப்பாவும் அம்மாவும் வேணும் பவுனு!, நீங்க ரெண்டு பேரும் இருக்கையில, அவ இங்க வளரட்டும், அது தான் சரி!” என்று சுபத்ராவை இடுப்பில் இருந்து, கோனேரியின் தோளுக்கு மாற்றினாள். 

யசோதை, பொன்னுத்தாயின் கண்களுக்கு ஒரு தேவதையாய் தெரிந்தாள். யசோதையின் மேல் அவளுக்கு பிரியமும், மதிப்பும் பன்மடங்கானது. அது அவளை விழுந்து விழுந்து உபசரிப்பதிலேயே தெரியும்.  கோனேரிக்கு, பொன்னுத்தாய் முழுக்கவும் மாறிவிட்டதாய்த் தோன்றும். சித்துப் பெண்ணாய் இருந்தவள் திடீரென்று பெரியவளாய் ஆகிவிட்டது போல.  அப்படி அவளைப் பார்ப்பதில் அவருக்கு அத்தனை சந்தோஷமாய் இருந்தது. 

சுபத்ராவுக்கு ஆறுவயதிருக்கும் போது பொன்னுத்தாயிக்கு அக்குளிலும், இடது மார்பிலும் கட்டிகள் மாதிரி வந்ததும், என்ன என்று புரியாமல், பக்கத்தில் இருந்த டாக்டரம்மாவிடம் காட்டிய போது, மார்பு புற்றுநோய் என்று தெரியவந்ததும், அவளுக்கு எல்லாவற்றையும் இழந்தது போலத் தோன்றியது.  கோனேரிக்கு அவளைத்தேற்ற வழியே தெரியவில்லை.  தகவல் தெரிந்ததும் யசோதையும் வந்துவிட்டாள்.  கூடவே இருந்தாள், யசோதை இருந்ததால், கோனேரியால் நிம்மதியாய் கடைக்கு போய் வியாபாரத்தையும் கவனிக்க முடிந்தது. பொன்னுத்தாயிக்கும் அந்த அதிர்வுகளில் இருந்து மீண்டு வர யசோதையின் அருகாமையும், கவனிப்பும் தேவையாய் இருந்தது. சுபத்ரா, பொன்னுத்தாயை ஒட்டிக் கொண்டே இருந்தாள் எப்போதும்போல். பொன்னுத்தாயின் மருத்துவ சிகிச்சையின் போது யசோதையால் ஆஸ்பத்திரியில் உடனிருக்க முடியவில்லை.   சுபத்ராவை வீட்டில் வைத்து பார்த்துக் கொள்வதுடன் மற்ற வேலைகளையும் அவளே செய்ய வேண்டியதாயிருந்தது. கோனேரி ஆஸ்பத்திரிக்கும் வீட்டுக்கும் போகவர பார்த்துக் கொண்டார்.   கடையில் இருக்கும் நம்பிக்கையான வேலையாட்களால், அது ஒரு பிரச்னையாய் இல்லை.

பொன்னுத்தாய்க்கு இடது மார்பை எடுக்க வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள். ஒரு நாளிலேயே ஒற்றை மார்பை இழந்துவிட்டு அழுதபடியே இருந்தாள். கட்டிலின் முனையில் அமர்ந்து அவளின் வலது கையை எடுத்து தனது இரு கரங்களுக்குள்ளும் வைத்துக் கொண்டார் கோனேரி. அழுது கண் ரப்பைகள் வீங்கி, கண்கள் சிவந்திருந்தது. கண்ணீர் இருபக்கமும் வழிந்து தலையணையை நனைத்து இருந்தது. அவளுடைய நிலைமையைப் பார்த்த போது கோனேரிக்கும் தாங்க முடியாமல் அழுகை வந்தது.

‘நமக்கு மட்டும் ஏங்க இத்தனைக் கஷ்டம்? நாம யாருக்கு என்ன கெடுதல் செஞ்சோம்?’ என்று அவள் அழுது புலம்பும்போது, கோனேரிக்கு பார்க்க சகிக்கவில்லை.  ஒரு வாரத்தில் ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்துவிட்டார்கள்.

வீடு திரும்பியதும் முதல் காரியமாய், சுபத்ராவை இனி வளர்ப்பது தன்னால் இயலாது என்ற முடிவுக்கு வந்தாள் பொன்னுத்தாய். கோனேரியிடம் அதைப் பற்றி ஏதும் யோசனை கேட்கவில்லை.  கோனேரி எத்தனை சொல்லியும்,  அவள் மறுத்தபடியே இருந்தாள். கோனேரிக்கு என்ன சொல்வது என்று தெரியாமல் சம்மதித்தார்.  யசோதைக்கு இந்த முடிவில் சம்மதமில்லை.

“ஒரு வருஷம் வேணுன்னா என்ட்ட இருக்கட்டும் பவுனு, அப்புறமா இங்க கொண்டாந்து விட்டுடறேன், அதுக்குள்ள நீ சுகமாயிடுவ! அதுக்கு சரின்னு சொல்லு, இப்பவே கூட்டிட்டுப் போறேன்! அத விட்டுட்டு, ஒரேடியா கூட்டிட்டு போயிடுன்னா என்னால முடியாது பவுனு!”

“உன்ட்ட இருந்தும், அவர்ட்ட இருந்தும் குழந்தையப் பிரிக்கிற பாவத்தை நான் செய்யமாட்டேன் பவுனு! அந்த மனுஷனும், குழந்தை மேல உசுரையே வச்சிருக்காரு! உசுரைப்புடுங்குறது போல தூக்கிட்டு போங்கியே! உனக்கே சரின்னு படுதா? கொடுத்துட்டு புடுங்கச் சொல்றியேடீ!” என்று அதற்குமேல் ஏதும் சொல்லாமல் பெரிதாய் அழத்தொடங்கினாள்.

பொன்னுத்தாய் கேட்பதாய் இல்லை, ரொம்பவும் வைராக்கியமாய் முடியாது என்றிருந்தாள். யசோதைக்கு  வேறு வழி தெரியவில்லை, கோனேரியின் முகத்தை பார்த்தாள், அவர் ஒன்றும் சொல்லாமல் சுபத்ராவையே பார்த்துக் கொண்டிருந்தார். சுபத்ராவை அழைத்துக் கொண்டு போவதாய் சொல்லிவிட்டாள். பொன்னுத்தாய் லேசாய் சிரித்தாள், வலியினூடே. 

சுபத்ரா தன்னைப் பற்றி தான் இத்தனை பேச்சும் நடக்கிறது என்று தெரியாமல், செப்புகளை வைத்து விளையாடிக் கொண்டிருந்தாள். சுபத்ராவைப் பொறுத்தவரையில், பொன்னுத்தாயும், கோனேரியும் தான் அவளின் அம்மா, அப்பா. அவளின் துணிமணிகளையும், விளையாடிக் கொண்டிருந்த செப்புகளையும் எடுத்து தான் கொண்டு வந்திருந்த பையில் திணித்துக் கொண்டாள். கொஞ்ச நாளில் திரும்பவும் கொண்டு வந்து விட்டுவிடலாம் என்று நம்பிக்கையில், கையில் அகப்பட்டதை மட்டுமே எடுத்துக் கொண்டாள்.

சுபத்ரா, எதற்காக அம்மா, அப்பாவை விட்டுட்டு பெரியம்மா வீட்டிற்கு போகிறோம் என்று புரியாமல் தான் கொட்டாம்பட்டிக்கு கொண்டு செல்லப்பட்டாள். அதன் பிறகு, யசோதை ஒவ்வொரு முறை வரும்போதும், குழந்தையை அழைத்துக் கொண்டு வரத்தவறியதில்லை. அவளுக்கு விபரம் தெரிந்த பிறகும் கூட, யசோதையை பெரியம்மா என்று தான் அழைத்து வந்தாள். அதைத்தான் யசோதையும் விரும்பினாள்.

அதன் பிறகு நேரம் கிடைக்கும் போதெல்லாம், சுபத்ராவை மதுரைக்கு அழைத்து வந்து கொண்டிருந்தாள் யசோதை.  சுபத்ரா மதுரை வந்திருந்து ஒரு நாளில் வயதுக்கு வந்துவிட, ஊரையே அழைத்து விமரிசையாக பூப்புனித நீராட்டு விழா நடத்தினார், கோனேரி. அத்தனை பெருமிதமாய் அதைச் செய்தார். அப்போதும் சுபத்ராவை மதுரையில் இருந்து படிக்க வைக்கலாம் என்ற யசோதையின் முயற்சி வீனானது. 

பொன்னுத்தாயிக்கு நோய் தீவிரமடைந்து வலது மார்பிலும் பரவி, வலது மார்பையும் எடுக்க வேண்டியதாயிற்று.

யசோதைக்கு, பெரிய மகனின் திருமணம் ஆனபிறகு, சுபத்ராவை அந்த வீட்டிலேயே வைத்துக்கொள்வது சிரமமாய் இருந்தது. இருந்த கறவை மாடுகள் எல்லாம் விற்றாயிற்று, தன் கணவருடனேயே, சிலம்பமும் போய்விட்டது.  பெரியவனின் வருமானம் போதவில்லை. சின்னவனுக்கு இன்னும் வேலை ஏதும் அமையாததால், சுபத்ராவின் தேவைகளை பூர்த்தி செய்ய, பெரியவனை எதிர்பார்க்க வேண்டியதாயிருந்தது.

இவற்றையெல்லாம் பொன்னுத்தாயிடம் சொல்லி, மதுரையில் விடுவதே சரி என்று தோன்றியது. அவள் மதுரையில் இருந்தால், கோனேரிக்கு சிரமம் குறையும். ஆனால் அதை பொன்னுத்தாய் ஏன் புரிந்து கொள்ள மறுக்கிறாள் என்று தெரியவில்லை. இந்த முறை அதை தீர்மானமாய் பேசி ஒரு முடிவு எடுக்க வேண்டும் என்று தான் மதுரைக்கு தனியாக வந்திருந்தாள். சுபத்ராவுக்கு, மதுரைக்கல்லூரி ஒன்றில் இடம் வாங்கிக் கொடுப்பது பற்றியும் கோனேரியிடம் பேசினாள். பொன்னுத்தாயிக்கு இந்த ஏற்பாட்டில் இஷ்டமில்லை.

‘இருப்பனா, சாவனாண்ணு தெரியாம, பத்து வருஷத்துக்கு மேல இழுத்துக்கிட்டு இருக்கேன்! ரெண்டையும் ஒண்ணு மாத்தி ஒண்ணா அறுத்துப் போட்டாச்சு!, இதுல அவளைக் கொண்டாந்து இங்க விட்டாக்க, நான் லோல்படறதப் பாத்து அவளும் கஷ்டப்படணுமா?’

‘எனக்கு பீ,முத்திரம் அள்ளவா  நீ பெத்துப்போட்ட? இல்ல, அதுக்குத்தான் எனக்குச் செய்யணும்னு என்ன தலையெழுத்து? கொஞ்சமாவது கூரோட பேசு’ என்று மூச்சு இரைக்க இரைக்க விடாமல் பேசினாள்.  பொன்னுத்தாயிக்கு உள்ளூர சுபத்ராவை தன்னோடு வைத்துக் கொள்ள வேண்டும் என்று  ஆசை இருந்தாலும் அதைக்காட்டிக் கொள்ளவில்லை. 

முதல் நாள் மாறி மாறி விவாதிக்கவே சரியாய் இருந்தது. பொன்னுத்தாயி  ஒத்துக்கொள்ளாது போகவே, மேலும் ஒரு நாள் தங்கி, அவளை எப்படியும் சம்மதிக்க வைத்துவிட வேண்டும் என்ற முடிவுக்கு வந்தாள். அடுத்த நாளில் என்ன பேசினாளோ, பொன்னுத்தாயி சம்மதித்து விட்டாள்.  கோனேரிக்கே ஆச்சரியமாய் இருந்தது, அப்படி என்ன சொல்லியிருப்பாள் என்று. 

யசோதைக்கு பொன்னுத்தாயி, சுபத்ராவை வைத்துக் கொள்ள சம்மதித்த பிறகு தான் நிம்மதியாய் இருந்தது.  பொன்னுத்தாயிக்கு பிடித்தது எல்லாம் செய்து கொடுத்தாள்.  ஆனால் பொன்னுத்தாய் ஏனோ பெயருக்கு சிரிப்பது போலத் தோன்றியது கோனேரிக்கு, ஆனாலும் உடல்நிலை காரணமாய் இருக்கலாம் என்று நினைத்துக் கொண்டார். யசோதையிடமும் பேச சந்தர்ப்பம் கிடைக்கவில்லை, பேசியிருந்தால், என்ன சொல்லி பொன்னுத்தாயை சம்மதிக்க வைத்தாள் என்று தெரிந்து கொண்டிருக்கலாம். ஆனால் அதற்குள் துரதிர்ஷடவசமாக இறந்தும் போனாள். 

பொன்னுத்தாய் யசோதை இறந்த போதும் அழவே இல்லை. பிரமை பிடித்தவள் போல ஒரே திசையைப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள்.  அழுதால் மனப்பாரம் குறைந்திருக்கலாம், இத்தனை இறுகிப் போயிருக்கமாட்டாள் என்று யோசனையாகவே இருந்தது பல நாட்களாய்.  இப்போது இது போல பொன்னுத்தாய், தனக்குத்தானே பேசவும் தொடங்கிவிட்டாள். பதிமூணாம் நாள் காரியத்தின் போதும் அவள் வரவில்லை. கோனேரி மட்டுமே போய் விட்டு வந்தார்.

சுபத்ராவை இங்கே கொண்டு வந்தால், இவளின் நிலைமை மாறலாம் என்ற நினைப்பில், அவளருகே போய் அவள் தோளைத் தொட்டு அசக்கினார்.  உட்கார்ந்திருந்தபடியே திரும்பியவள், ஒன்றுமே பேசாமல் இவரைப் பார்த்தாள்.

“சுபத்ராவை கூட்டிட்டு வந்துடலாம்னு இருக்கேன் இன்னைக்கு! நீ என்ன சொல்ற?” என்றார் கோனேரி.

‘உங்க பொண்ணை கூட்டிட்டு வர என்னை ஏன் கேக்குறீங்க?’ என்றவள் அங்கிருந்து எழுந்து போனாள். 
27 comments:

இராஜராஜேஸ்வரி said...

கோனேரிக்கு திடுக்கென்றது, யசோதை ஒருவேளை சொல்லியிருப்பாளோ? சுபத்ரா, தனக்கும் யசோதைக்கு பிறந்தவள் என்பதை என்று நினைத்த போது அவருக்கு பயம் வரத் தொடங்கியது.


திடுக் என்று தான் முடிவு..

Rathnavel Natarajan said...

அருமை.

shri Prajna said...

ம்ம்..நல்லா இருக்குங்க ராகவன்..யூகிக்கவே முடியலையே..திடீர் திருப்பம் தான்..

Unknown said...

கதைல ஏதோ ஒன்னு மிஸ் ஆன மாதிரி இருந்துச்சு. ஒரு வேல எனக்கு மட்டுந்தான் தோணுதோ ?

ராகவன் said...

அன்பு ராஜராஜேஸ்வரி,

உங்கள் வாசிப்புக்கும், கருத்திற்கும் என் அன்பும் நன்றியும்...

அன்புடன்
ராகவன்

ராகவன் said...

அன்பு ரத்னவேல் அவர்களுக்கு,

வாசிப்புக்கு என் அன்பும் நன்றிகளும்.

ராகவன்

ராகவன் said...

அன்பு ஸ்ரீபிரஜ்னா,

உங்கள் கருத்திற்கும் வாசிப்புக்கும் என் அன்பும் நன்றிகளும்...

அன்புடன்
ராகவன்

ராகவன் said...

அன்பு ராம்,

என்னவோ குறையுதுன்னு நீ சொல்லலாமா... பஸ்...ல போட்டு தாக்குற...இங்க சொல்றதுக்கு என்ன..?

என்ன குறையுதுண்னு கண்டு பிடிச்சு சொல்லு ராம்...

அன்புடன்
ராகவன்

ஷஹி said...

மொதல்ல இது தான் கேக்கணும்னு நெனச்சேன் ராகவன் - பேரெல்லாம் யதார்த்தமா அமையிறதா இல்ல..ம்ம் ?யசோதா , சுபத்ரா எல்லாம் எப்புடி யதார்த்தமா அமையும் ? நாயகி மனசுப்படி அவ பேரும் பொன்னுத்தாயி இல்லையா? அவ ஆனா தாயில்ல! நானா தான் இப்புடி எல்லாம் கண்டுபிடிச்சிக்குறேனா இல்ல எப்டின்னு தெரியல ! எனக்கு யசோதை , பொன்னுத்தாயி பற்றின வர்ணனையிலையே கதை புரிஞ்சு போச்சு . ஆனா கொஞ்சம் கூட யார் மேலயும் கோவம் வராதபடிக்கு எப்புடி இந்த மாதிரியான கதை சொல்றீங்க? இது தகும் , இது தகாதுன்னு சொல்ல நான் யாரும்பீங்க ? இல்ல யார் தான் யாரும்பீங்க இல்லையா ? அதுவும் சரி தான் .

"சிலசமயம், யசோதை வந்திருப்பது, கோனேரிக்கு வீட்டிற்குள் அடிக்கும் ஒருவித வாசனையில் தெரிந்துவிடும்" இதுலயே தான் புரியிதே முன்னாடியே புரியாட்டியும் ..அப்பறம் ஏன் கடைசி வரி "சுபத்ரா, தனக்கும் யசோதைக்கு பிறந்தவள் என்பதை" இவ்ளோ விளக்கமா ? வேண்டியதில்லை இல்லையா ? தெரியல எனக்கும் ..எங்களுக்கெல்லாம் இப்புடி வளச்சு வளச்சு கதை சொல்லத்தெரியாட்டாலும் நல்லா கொற சொல்லுவோம் !

வழக்கமா ஸைக்கோ அனாலிஸிஸ் பண்ணி இருப்பீங்க ..இதுல எங்கள்ட்ட விட்டாச்சு அத..ரொம்ப அழுத்தமா இருக்கு கதை .."யாரையோ தேடிக் கொண்டிருப்பது போலத் தோன்றியது " இங்க ஆரம்பிக்கிற அழுத்தம் கடைசி வரை அதே கனத்தோட போகுது..ம்..வழக்கம் போல ரொம்ப நல்லாவும் ...வாழ்த்துக்கள் புத்தகவெளியீட்டுக்கும்.

rajasundararajan said...

//யசோதை ஒருவேளை பொன்னுத்தாயிடம் சொல்லியிருப்பாளோ? சுபத்ரா, தனக்கும் யசோதைக்கு பிறந்தவள் என்பதை என்று நினைத்த போது அவருக்கு பயம் வரத் தொடங்கியது.//

இது மிகை.

நிலாமகள் said...

தொட்டி விருட்ச‌ம் (போன்சாய்)முத‌லில் த‌ரும் பிர‌ம்மிப்பு முடிவில் நீர்த்து விடுவ‌தேனோ... ஏதோவொரு செய‌ற்கையின் சாய‌ல் இலேசாய் பிடிப‌டுவ‌து போல‌...
ஆனாலும், பொன்னுத்தாயின் ம‌ன‌க்கிலேச‌ம் உண‌ர்ந்து அனுதாப‌மெழ‌ச் செய்யும் க‌தைப் போக்கு. உட‌னிருந்தே கொல்லும் நோயாய் சில‌ உட‌ன்பிற‌ந்தோர்... எவ‌ளும் யாரிட‌மும் எதை வேண்டுமாயினும் ப‌கிர்ந்து கொள்ள‌லாம்... சில‌வ‌ற்றைத் த‌விர‌.

ராகவன் said...

அன்பு ஷஹி,

உங்கள் வாசிப்புக்கும், கருத்திற்கும் அன்பும் நன்றிகளும்...

மனக்கூறுகளை சொல்ல முற்பட்டிருக்கேன்... சரியா சொல்லலைண்ணு நினைக்கிறேன்...

அன்புடன்
ராகவன்

ராகவன் said...

அன்பு அண்ணனுக்கு,

என்ன மிகைண்ணு எனக்கு புரியலை அண்ணே!

வார்த்தைகளா அல்லது அந்த விஷயமா? விஷயமென்றால்...?

வார்த்தைகள் என்றால்... அதை நீக்கி இருக்க வேண்டும்... என்பது சரி தான்...

ஆனா மற்றபடி வேறு குறைகள் எதுவும் சொல்லவில்லை... நீங்கள்...

நீங்கள் ஒரிரு வார்த்தைகளில் சொல்வதில் இருந்து கதை ஒரு தரத்தில் இல்லை என்று புரிகிறது... விளங்கப்பண்ணினால், கொஞ்சம் மாற்றிக் கொள்ள ஏதுவாய் இருக்கும்...

வாத்தியார் நீங்க எனக்கு!

அன்பும், நன்றிகளும்
ராகவன்

ராகவன் said...

அன்பு நிலாமகள்,

உங்கள் வாசிப்புக்கும், கருத்திற்கும் என் அன்பும் நன்றிகளும்...

இதில் குற்றம் எங்க இருக்கு, யாரிடம் இருக்கு என்பதெல்லாம் எனக்குத் தெரியாது...

வாசிப்பவர்கள் ஒவ்வொருவரின் அனுபவத்தை பொறுத்தே கதை மாந்தர்களின் சாதக பாதகங்கள் நிறுவப்படும்... என்று நினைக்கிறேன்...

அன்பும், நன்றிகளும்
ராகவன்

rajasundararajan said...

ஷஹி சொன்னதை நான் வழிமொழிந்திருக்கிறேன், அவ்வளவுதான். இவ்வளவுக்கும் ஷஹி எழுதிக்காட்டி இருப்பதை இப்போதுதான் வாசித்தேன். இரவு இக் கதையை வாசித்து முடிக்கையில் எனக்கு உறக்கம் கிறக்கியதால் எனக்குத் தோன்றியதைச் சுருக்கமாகப் பதிந்துவிட்டு உறங்கிப் போனேன்.

ஷஹி விரிவாக எழுதி இருக்கிறார். அவரைப் பாராட்ட வேண்டும்.

எனக்கு என்ன தோன்றுகிறது என்றால், //யசோதை வந்திருப்பது, கோனேரிக்கு வீட்டிற்குள் அடிக்கும் ஒருவித வாசனையில் தெரிந்துவிடும்.//, //கோனேரிக்கும் அந்த ஏற்பாடு பிடித்திருந்தது.// என வரும் இந்தக் கூற்றுகள் எல்லாம் கதையைக் காட்டிக் கொடுக்கின்றன. அவை தேவை இல்லை.

அப்படியே, //சுபத்ரா பிறந்ததில் அத்தனை சந்தோஷம். “இப்பதான் பவுனு, வீடே நிறஞ்ச மாதிரி இருக்கு!” என்று பொன்னுத்தாயிடம் சொல்வதை கோனேரி கேட்டதுண்டு.// என்னும் இந்தக் கூற்றில், //கோனேரி கேட்டதுண்டு// வந்திருக்கக் வேண்டாம். //..." என்று பொன்னுத்தாயிடம் சொன்னாள்.// என்று முடிக்கப்பட்டிருக்க வேண்டும்.

//பொன்னுத்தாயிக்கு உள்ளூர சுபத்ராவை தன்னோடு வைத்துக் கொள்ள வேண்டும் என்று ஆசை இருந்தாலும் அதைக்காட்டிக் கொள்ளவில்லை.// இது மிக அருமை - அவசியமும் கூட.

//எழுந்து வீட்டிற்குள் நுழைந்தாள்.// இதில் 'வீட்ட்ற்குள்' என்பது அழகுநோக்கில் (aesthetically) பொருந்தி வரவில்லை. இவ்வளவுக்கு அப்புறமும் அதென்ன வீடு?

முடிவாக, முந்திய எனது (& ஷஹியினது) பின்னூட்டத்தில் எடுத்துக் காட்டிய இறுதி வரிகள் தேவையே இல்லாத மிகை விளக்கம்.

சாரு நிவேதிதாவின் 'எக்ஸைல்' நாவல் வந்திருக்கிற காலகட்டத்தில், அதற்கிடையில் இதையும் வாசிக்க நேர்ந்ததில் எனக்குச் சிரிப்பாணி பொங்கியது.

அம்புட்டுதேன்.

ராகவன் said...

அன்பு அண்ணனுக்கு,

நீங்கள் சொல்லியது எல்லாமே தனித்து தொங்குவது உங்களுக்கே தெரியும்... எல்லாமே பிற்பாடு சேர்த்தது... அது தேவையில்லை என்று புரிகிறது.

சொன்ன மாற்றங்களை செய்துவிட்டேன். ஆனால் எக்சைல் படிக்கும் காலகட்டத்தில் இதையும் படிக்க நேர்ந்ததில் சிரிப்பாணி பொங்கியது என்று சொன்னதன் அர்த்தம் புரியவில்லை...

அன்புடன்
ராகவன்

Unknown said...

அண்ணே வழக்கமா மன ரீதியா நிறைய பேசும் உங்க கதைகள். இந்த கதை சட்டுன்னு ஆரம்பிச்சு பட்டுன்னு முடிச்ச மாதிரி இருந்தது. முடிவு முன்னாடியே தெரிஞ்சுருச்சுன்ணே ...

நிலாமகள் said...

அன்பு ச‌கோ...

உங்க‌ க‌தைக‌ளை விரும்பி உன்னிப்பாக‌ ப‌டிப்ப‌வ‌ள் நான். அத‌ற்கான‌ கூறுக‌ளும் அதில் நிர‌ம்பியிருக்கும். ப‌ல‌ சிந்த‌னைத் திற‌ப்புக‌ள், ம‌னித‌ர்க‌ளைப் ப‌ற்றிய‌ அவ‌தானிப்புக‌ளுக்கு ப‌ஞ்ச‌மிருக்காது. இக்க‌தையிலும் அப்ப‌டியே. நீங்க‌ள் சொன்ன‌து போல் என‌க்கென்ன‌வோ பொன்னுத்தாயி பாத்திர‌ம் க‌ன‌க‌ச்சித‌மாக‌ மிக‌ நெருக்க‌த்தில். ச‌ம்ப‌வ‌ங்க‌ளுக்கான‌ சூழ‌லையும் கார‌ண‌காரிய‌ங்க‌ளையும் கோடி காட்டி விட்டு ஒதுங்கிக் கொண்டு வாசிப்ப‌வ‌ர்க‌ளை சுத‌ந்திர‌மாக‌ யோசிக்க‌ வைத்து விடுவ‌து வெகு நேர்த்தி.

க‌தைத் த‌லைப்பு பொன்னுத்தாயிக்கு ந‌ல்ல‌ பொருத்த‌ம். குறையொன்றுமில்லை. சொல்ல‌ வ‌ந்த‌தை நான் தான் ச‌ரிவ‌ர‌ சொல்லாம‌ல் குறைப‌ட்டேன்.

க‌டைசி வ‌ரியில் பொன்னுத்தாயின் ம‌ன‌ப்புழுக்க‌மெல்லாம் சேர்ந்து ஒரே சாட்டை சொடுக்க‌ல். கோனேரியோடு நாங்க‌ளும் துடித்தும் த‌வித்தும் போக‌ச் செய்யுமாறு.

rajasundararajan said...

ஓவியர்களுக்கு இந்த அனுபவங்கள் வாய்த்திருக்கும்: (1) வரையப்பட்ட ஒன்றைப் பார்த்து அப்படியே வரைதல், (2) தன் மனத்துள் ஒரு காட்சியை உருவாக்கி அதை வரைந்து வெளிப்படுத்தல், (3) ஒரு முப்பரிமாணக் காட்சியைக் கண்-உள்-வாங்கிப் படமாக்குதல்.

எடுத்துக்காட்டு இரண்டாவது போன்றது ராகவனது எழுத்து; மூன்றாவது, சாரு நிவேதிதாவினுடையது.

'மணவரம்பு மீறிய கலவி' பற்றிய "தொட்டி விருட்சம்" வாசிக்கையில் அப்போதுதான் வாசித்துக்கொண்டு இருந்த "எக்ஸைல்" நாவலின் ஒரு மணவரம்பு-மீறிய-கலவி நினைவுக்கு வந்ததால் சிரிப்பாணி பொங்கியது என்றேன்.

உபதேசம் செய்வதல்ல எழுத்தாளனின் அலுவல். அதனால் ராகவனின் கதைகள் எனக்குப் பிடிக்கும். உபதேசம் செய்வதல்ல என்றாலும், வாசித்து முடிக்கையில், வாழ்க்கையில் நமக்குப் புலப்படாமற் போகும் ஒரு சிக்கலோ தீர்வோ புலப்படவும் கூடும்.

"தொட்டி விருட்சம்" பொன்னுத்தாய், தான் முந்திச் செத்துவிடுவோம் என்று நம்புகிறாள். ஆனால் அக்காகாரி - ஆரோக்யமானவள் - முந்திவிடுகிறாள். பொன்னுத்தாய் ஒரு பித்தநிலைக்கு ஆளாவதில் (1) அக்கா சாவு, (2) அக்கா தனக்குச் செய்த துரோகம், (3) தன் கணவன் தனக்குச் செய்த துரோகம் என இத்தனையும் உண்டு.

'கழுத்தறுப்பு' உலகம் இது. 'அன்பு', 'அறம்' போதித்து இவ்வுலகைத் திருத்தி, பால்மடியில் மீளச் சேர்ப்பதா? அல்லது நிலவரம் இதுதான் (மேற்கொண்டு சூதானமாப் போ) என்பதா? எது சாத்தியம்? எதைச் செய்பவன் கலைஞன்?

கம்பராமாயணம் அயோத்தியா காண்டம் சித்திரகூடப் படலம் 43 ~ 49, இலக்குவன் ஒரு குடிசை போடுவதின் நேர்த்தியைப் பேசுகிறது. பின், அது கண்டு இராமன் வினவுதலும் இலக்குவன் மறுமொழிதலும்:

...
தா இல் எம்பி கை சாலை சமைத்தன -
யாவை, யாதும் இலார்க்கு இயையாதவே?

என்று சிந்தித்து, இளையவற் பார்த்து, "இரு
குன்று போலக் குவவிய தோளினாய்,
என்று கற்றனை நீ இதுபோல்?" என்றான் -
துன்று தாமரைக் கண் பனி சோர்கின்றான்.

அந்த வாய்மொழி ஐயன் இயம்பலும்
நொந்த சிந்தை இளையவன் நோக்கினான்,
"எந்தை காண்டி, இடரினுக்கு அங்குரம்
முந்தி வந்து முளைத்தது அன்றோ?" என்றான்.

(அங்குரம் = முளை)

இடரினுக்கு அங்குரம் முந்தி வந்து முளைத்தது போன்றதே இலக்கியமும் - இலக்குவன் நமக்கு உணரத் தருகிற அதே புலப்பாட்டில் (sense).

Mahi_Granny said...

வழக்கம் போல் கடைசி வரியில் ராகவனின் punch.ஏன் இத்தனை பெரிய இடைவெளி . அடிக்கடி எழுதுங்கள்

Anonymous said...

Hi Raghavan,

Vaalthukal.
Book ellam release panreenga pola. Who is that luckiest publisher who collect money from the author for publishing his stories.
Story title & character name all amature. Please give some realistic name.

அப்பாதுரை said...

தாமதமாக வருகிறேனோ? விவாதத்துக்கான வரிகளை கதையிலிருந்து நீக்கி விட்டீர்களோ? சற்றே குழப்பிய கதையை பின்னூட்டங்களினால் புரிந்து கொள்ள முடிந்தது. நடையும் விவரங்களும் பிரமாதம்.

ராகவன் said...

அன்பு அனானி,

உங்கள் கருத்துக்கும், புரிதலுக்கும் என் அன்பும் நன்றியும்...

நான் ஃப்ரொபஷனல் கிடையாது அனானி... நான் அமெச்சூர் தான் இன்னமும்... ஒரு பதிப்பகத்தை இது போல சிறுமைப் படுத்துவது சரியா என்று எனக்குத் தெரியவில்லை.

நல்லா எழுத முயற்சி பண்றேன்... உங்கள் கருத்துக்கு என் அன்பும் நன்றியும்...

அன்புடன்
ராகவன்

ராகவன் said...

அன்பு ப்ரோட்டோ அம்மா அவர்கக்ளுக்கு,

உங்களின் தொடர்ந்த வாசிப்புக்கும் கருத்திற்கும் என் அன்பும் நன்றியும்.

அன்புடன்
ராகவன்

ராகவன் said...

அன்பு அப்பாதுரை,

கதையில் விவாதத்துக்குரிய வரிகள் என்று எதுவும் இல்லை...

ராஜசுந்தரராஜன் அண்ணன் அவர்கள் சில தவறுகளைச் சுட்டிக் காட்டியிருந்தார், அதை திருத்தினேன் அவ்வளவே. பின்னூட்டங்கள் பார்த்து புரிந்தது கதை என்பது நான் சரியாக சொல்லாததால் இருக்கலாம்.

மேலும் இந்த கதையின் தண்மையே கொஞ்சம் முன்னே பின்னே நகருவது போல தான் செய்யப்பட்டிருக்கு... விசுப்பலகையின் அசைவு முன்னே பின்னே என்ற குழப்பத்தினால் இல்லை எனக்குத் தோன்றுகிறது.

அன்புடன்
ராகவன்

ராகவன் said...

அன்பு அனானி,

இது உங்கள் கருத்துக்கு நான் எழுதும் இரண்டாம் பின்னூட்டம்.

என் எழுத்தில் இருக்கும் குறைகளைச் சுட்டிக் காட்டியதற்கு நன்றிகள் பல. பதிப்பகத்தாரை சிறுமைப் படுத்துவது எந்தவிதத்திலும் சரியில்லை அல்லது கண்டிக்கத்தக்கது.

கதைத் தலைப்பிலும், கதாபாத்திரங்களின் பெயர்களிலும் என்ன ரியலிசம் கெட்டுப் போச்சு என்று எனக்குத் தெரியவில்லை.

சுபத்ரா, கோனேரி,பொன்னுத்தாய், யசோதை நீங்க கேள்விப்பட்டது இல்லையா... இல்லை அது கதையோடு பொருந்தி வரவில்லை என்று நினைக்கிறீர்களா? ஏன் அப்படி சொன்னீர்கள் என்று எனக்கு சத்தியமாய் விளங்கவில்லை.

கதைத் தலைப்பில் என்ன பிரச்னை... தொட்டி விருட்சம் என்று நீங்கள் கேள்விப்பட்டதில்லையா... அதன் குணாதியங்கள் (characteristics) பாருங்கள்... அது இந்த கதை மாந்தர்களுடன் பொருந்துதா பாருங்கள். அவ்வளவே... என்னோட பட்டறிவும், அனுபவமும் இதை சரியென்றே சொல்கிறது. உங்க கருத்தைப் படித்த போது, நீங்க விபரமுள்ளவர் போல தான் தெரிகிறது... இன்னுமொரு முறை படித்தால் புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்...

எல்லாத்துக்கும் மேல எனக்கு என்ன தெரியுமோ அது தாங்க நான் செய்ய முடியும்!

ரொம்ப நன்றியும் அன்பும்...

ராகவன்

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

ஒரு வட்டத்தைத் தாண்டும்போது ஆணுக்கும் பெண்ணுக்குமான நியாயங்கள் மாறுபடுகின்றன.

இக்கதையில் பொன்னுத்தாய் மீது கோனேரி கொண்டிருந்த அன்பும் யசோதாவிடம் கொண்ட காமமும் வெவ்வேறு புள்ளிகளில் ஒரே நேர்க்கோட்டில் அமைகின்றன.யசோதாவுக்கும் அப்படியே.

சில சூழ்நிலைகளை நாம் உருவாக்குவதில்லை. காலம் ஒவ்வொரு குழப்பமான சூழ்நிலையை ஒவ்வொருவர் மேலும் திணிக்கும்போதும் சிலர் அந்த வலையிலிருந்து தப்பிவிடுகிறார்கள்.சிலர் சிக்கிக் கொள்கிறார்கள்.

பொன்னுத்தாய் இப்படித்தான் இதைப் பார்க்கிறாள்.பார்ப்பாள்.இந்தப் ப்ரபஞ்சம் சுழலத் துவங்கிய காலம் முதல் இத்தகைய மயக்கங்களும் அதற்கான போதனைகளும் உதிர்ந்தபடியேதான் இருக்கின்றன.

தொட்டி விருட்சம் மூடியிருக்கும் ஒரு வீட்டின் ஜன்னலைத் திறந்து காட்டுகிறது.அதனுள்ளே எட்டிப் பார்ப்பவர்களும் கவனியாது செல்பவர்களும் இருக்கத்தான் செய்வார்கள்.

அருமை ராகவன்.