கதவை யாரோ பிறாண்டுவது கேட்டது. எழுந்திரிக்கமுடியவில்லை, இரவு சரியாகத் தூங்காதது உடலை அழுத்தியது டாரதிக்கு. அப்போது தான் ஞாபகம் வந்தது, அதிகாலை தூக்கத்திலேயே சார்லியை வெளியே விட்டது. சார்லி தனது காலைக்கடன்களை முடித்துவிட்டான் போல. இத்தனை வயதில் தனக்கு ஏன் இந்த கஷ்டம் என்று டாரதிக்கு வெறுப்பாய் இருந்தது. கர்த்தர் தன்னை ஏன் இத்தனை சிரமப்படுத்துகிறார் இத்தனை பிரார்த்தித்தும், உபவாச ஜெபங்கள் இருந்தும் என்று நினைத்து கொள்வாள்.
டாரதிக்கு மே மாதம் வந்தால், எழுபது வயது. வயதானதோடு, உடல் பருமன் வேறு. அதனால் அவளால், முன்போல எந்த வேலையையும் செய்ய முடிவதில்லை. உடலில் அத்தனை எலும்பும், மூட்டு இணைப்பும் அத்தனை வலிக்கும், யாரோ அருவ டிரில்லரைக் கொண்டு துளையிடுவது போல. இத்தனை உடல் சிரமத்திலும், நாய்களையும், பூனைகளையும் வைத்துக் கொண்டு சமாளிப்பதற்கு முடிவதில்லை. நாய்களாவது பரவாயில்லை எண்ணிக்கையில் குறைவு. பூனைகள் எப்போதுமே கர்ப்பமாய் இருப்பது போலவும், குட்டிகள் இட்டுக் கொண்டே இருப்பது போலவும் தோன்றும் அவளுக்கு. எங்கு பார்த்தாலும், பெருத்த வயிற்றுடன் பூனைகள் அல்லது பூனைக்குட்டிகள். சோபாவிற்கு பின்னால், ஷோகேஸின் மீது, டிவிக்கு பின்னால், பாத்ரூமில், கட்டிலடியில் என்று எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கிறது. பூனைகள், நாய்களுக்கும் பெரிதாய் பயப்படுவது இல்லை, ஜெர்ரி ஒருவனைத்தவிர. அனேகமாய் இப்போது ஒரு நாற்பது பூனைகளாவது இருக்கும். எல்லாவற்றையும் விஷம் வைத்து கொன்றுவிடலாமா என்று கூட சிலசமயம் தோன்றும் அவளுக்கு.
இப்போது கதவை பிறாண்டுவதுடன், அவன் குரைப்பதும் கேட்டது. குரைப்பது கேட்டால், அவருடைய அறையில் இருந்து கத்துவார். ஏதோ நாய்களால் நிற்க முடியாது என்பது போல. மனிதர்களின் அவஸ்தை தெரியாது, மிருகங்களை கொண்டாடுபவர். சார்லியை, உடனே கதவைத் திறந்து உள்ளே விடவும் முடியாது. அவனை உள்ளே விடுவதற்குள் அவளது படுக்கையறையில் இருக்கும் ஜெர்ரியை ஹாலில் விடவேண்டும். அவனை ஹாலில் விடுவதற்கு முன், அங்கு இருக்கும் சீசரை அவருடைய பெட்ரூமில் போட்டு அடைக்க வேண்டும். நினைக்கும் போது அச்சலாத்தியாய் வந்தது. இந்த மூன்றுக்கும் ஒருத்தருக்கொருத்தர் ஆகாது, முன் உதடுகளை தூக்கிக் கொண்டு பற்களைக் காட்டி உறுமுவதை பார்க்கையில், ஆத்திரம் ஆத்திரமாய் வரும். அப்படி தப்பித்தவறி அவர்களை வெளியே, உள்ளே விடுவதில் சிறு தவறு ஏற்பட்டாலும் போதும், அவர்கள் போடும் சண்டையில் எவனாவது எவனிடமாவது கடி வாங்கி ரத்தம் வழிய கொஞ்சம் அயர்வார்கள். அதிலும் சீசர் மாட்டிக் கொண்டால், தொலைந்தான். அவனை யாருக்கும் பிடிக்காது, இத்தனைக்கும் அத்தனை சாது, லாப்ரடார் வகை அவன். சொகுசாய் மாஸ்டரின் அறையிலேயே பெரும்பாலும் இருப்பதாலும், அவரின் ப்ரியத்துக்கு ஆளானவன் என்பதாலும், ஒருவன் அவனுடன் சண்டையிட்டால் போதும், சண்டைக்கே போகாத டிட்டூ, டினா, ப்ளாக்கி எல்லோரும் அவனை புரட்ட ஆரம்பித்துவிடுவார்கள்.
கட்டிலின் முனையைப் பிடித்தபடி எழுந்து, சைட் டேபிளில் இருந்த எல்ட்ராக்சின் இரண்டை வெறும் வயிற்றில் எடுத்துக் கொண்டாள். கையில் சுவறோரம் சாய்த்து வைத்திருந்த ஒரு குச்சியை எடுத்துக் கொண்டு, தனது அறையில் தற்காலிகமாய் வந்திருக்கும் ஜெர்ரியின் புட்டத்தில் வைத்து குத்தினாள். அவன் உர்றென்று உறுமிக் கொண்டே கதவை நோக்கி நடந்தான். இதே பொழப்பாப் போச்சுடா உங்களுக்கு என்று நினைத்துக் கொண்டவன் மாதிரி, நிதானமாய் சோம்பல் முறித்து கதவருகே வந்து நின்றான். அவனை விடும் முன், கதவை லேசாய் திறந்த போது, அங்கே சீசர், கிஷ்மோ என்ற பூனையுடன் விளையாடிக் கொண்டிருந்தான். தடக்கென்று கதவை மூடி, ஜெர்ரியை உள்பக்கமாய் தள்ளிவிட்டு, கதவைத்திறந்து தான் மட்டும் வெளியே வந்து, சீசரின் காலரை பிடித்து அதிக சிரமத்துடன் குனிந்தபடியே அவனை இழுத்து, அவருடைய அறையில் விட்டாள். இடுப்பு பிடித்துக் கொண்டது போல இருந்தது, நிதானமாய் நிமிர்ந்து சுவரைப் பிடித்து, ‘பெத்தன்னா!’ என்று அழைத்தாள். சத்தம் ஏதும் பதிலுக்கு வராமல் போகவே, திரும்பவும் படுக்கையறைக்கு வந்து ஜெர்ரியை ஹாலில் விட்டு, படுக்கையறை கதவைச் சாத்தினாள். வெளியே கத்தி, குதித்துக் கொண்டிருந்த சார்லியை உள்ளே விட்டாள். வந்தவன் நேராய், தண்ணீர் இருந்த கப்பை அடைந்து, சளப் சளப்பென்று தண்ணீர் குடித்து மூச்சு வாங்கினான். டாரதியை தண்ணீர் போதும் என்பது போல பார்த்தான்.
ஜன்னல் கதவருகே சில பூனைகள் நின்று கொண்டு கத்த ஆரம்பித்துவிட்டன. விடிந்து விட்டது எல்லோருக்கும் என்று நினைத்துக் கொண்டே, ஜன்னல் அருகே இருந்த தட்டுகளில் பூனைகளுக்கான உணவை கொட்டினாள். அதன் பிறகு, வெளியே வந்து பிரிட்ஜில் இருந்த பாலை எடுத்து அதற்கான தட்டில் ஊற்றினாள். சில பூனைகள் எவ்வளவு பழகினாலும், அவள் அங்கே இருக்கும் வரை வருவதில்லை. அதற்கான உணவுகளை வைத்து விட்டு, அங்கிருந்து நகர்ந்து விட வேண்டும். மூத்திரம் முட்டிக் கொண்டு வந்தது, சர்க்கரை படுத்துகிறது. பாத்ரூமின் கதவைத் திறந்த போது, பூனைப்பீயின் வாடை முகத்தில் அடித்தது. ஆத்திரம் ஆத்திரமாய் வந்தது, குச்சியைக் கொண்டு ஏதோ பூனையின் மீது எறிந்தாள். பீ போனது அந்த பூனையாய் இருக்க வேண்டிய அவசியமில்லை என்று தெரிந்தாலும், பூனையைப் பார்த்தவுடன் குச்சியை தூக்கி எறியத் தான் தோன்றியது. அடுத்து பாத்ரூமிற்குள் எங்கு பீ போயிருக்கிறது என்று தேட வேண்டும். பூனைகள் வெளியே சென்று பீ போய்விட்டு மண்ணைப் போட்டு மூடுவது தான் வழக்கம். இவைகள் எல்லாம் வழக்கத்திற்கு விரோதமாய், கிரானைட் தரையை கீறி அங்கேயே பீ போய் விட்டு, மூட திடத்தரையை தோண்ட முற்படும்.
இங்கிருக்கும் பூனைகள் எல்லாம் வித்யாசமானவை. கண்ட இடத்தில் பீ போய்விடுகிறதுகள் சனியன்கள்! என்று வாய்விட்டு புலம்பியபடியே தேடினாள். பாத்ரூம் முழுக்க நாற்றமெடுப்பதில், தீவிரமாய் நுகர்ந்து இடத்தை அறியமுடியவில்லை. நாய் நுகர்வுத்திறன் இருந்தால் எளிதாய் கண்டுபிடித்துவிடலாம் என்று தோன்றும் டாரதிக்கு. திரும்பவும், வலியுடனே குனிந்து தேடத் துவங்கினாள்.
வாஷ் பேசினில், பாத் டப்பில், சில சமயம் அழுக்குக் கூடைக்குள் என்று. அதை கண்டு பிடித்து, பெத்தன்னாவை பத்துமுறை அழைத்த பின்னால், ஒரு முறை வந்து சுத்தம் செய்து விட்டுப் போவான். இந்த பீ நாத்தமும், பூனையின் மூத்தர நாத்தமும், குமட்டிக் கொண்டு வரும். எப்போதும் தின்று கொண்டும், பேண்டு கொண்டும் இருக்க பழகி விட்டது இந்த பூனைகள். நாய்களும் அப்படியே, நாய்களுக்கு ஓரளவுக்கு டாய்லெட் டிரெயினிங்க் இருப்பதால் பரவாயில்லை. இல்லை அவை தின்னுமளவுக்கு பேள ஆரம்பித்தால், ரோட்டில் படுக்க வேண்டியது தான். நல்லவேளை, நாய்களுக்கெல்லாம் கருத்தடை ஆப்பரஷேசன் (ந்யுட்டரிங்க், ஸ்டெரிலைஷேசன்) செய்துவிட்டார், ப்ளு கிராஸின் மூலமாய். இது மிருகவதையில்லையோ என்று சிலசமயம் டாரதிக்குத் தோன்றும்.
கடந்தமுறை கூஃபி இறந்து போனது ஒபிசிட்டியினால் தான் என்று டாக்டர் ஜேகே சொன்னது இவர் காதில் விழுந்தாலும் அதை புரிந்து கொண்டது மாதிரி தெரியவில்லை. அவருக்கு தெரிந்த ஒரே காரணம் அவை கத்தினால், பசிக்குது என்று தான் நினைத்துக் கொள்வார். பூனையின் குரல் குழைவு கூட புரிந்து கொள்ள மறுக்கிறார் என்ன செய்வது என்று தெரியவில்லை டாரதிக்கு. இந்த வயதுக்கு மேல் அவரை மாற்றவா முடியும். பூனைகள் பெருக வீட்டிற்கு வந்து போகும் உறவுகளின் எண்ணிக்கை சிறுத்துப் போனது.
எப்போதாவது மகள் வந்து விட்டால், இந்த கஷ்டத்தில் தான் இருக்க வேண்டும். அவளும் வருவது குறைந்து விட்டது.
அதுவும் கடந்த முறை மகள் வந்திருந்த போது, பூனை, நாய்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தில் ஒரு சதவிகிதம் கூட அவருடைய அப்பா கொடுக்கவில்லை. அவள் இருந்த அறையில் நாயை விடவில்லை என்பதால், டாரதியைத் திட்டி கோபப்பட்டிருக்கிறார். இதை டாரதி, தன் மகளிடம் சொல்ல, அவள் பெட்டியை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டாள், ஹோட்டலில் தங்குவதற்கு. அதுவும் அப்போது சார்லி எதையோ வெளியே போய் தின்று விட்டு, வாந்தி எடுத்துக் கொண்டே இருந்ததில், அவளுக்கும் குமட்டிக் கொண்டே இருந்திருக்கும். அந்த துர்நாற்றத்தை சகித்துக் கொண்டு அந்த ஏஸி அறையிலேயே இருக்க முடியாது யாராலும். அதனால் நாயை வெளியே விடவேண்டியாதாயிருந்திருக்கும். அதை அவளுடைய அப்பா பொறுக்கமுடியாமல் டாரதியிடம் சண்டையிட்டதாய் கேள்விப்பட்டதும் புறப்பட்டவள் தான் அதன் பின் நாலைந்து வருடங்களாய் ஒரு தகவலில்லை. அதைப்பற்றி நினைக்க டாரதிக்கு நேரமும் இருந்ததில்லை, அவளுடைய கணவரும் மகளைப் பற்றி பேசி ஞாபகம் இல்லை.
அவர்கள் கல்கத்தாவில் இருந்த போது, டாரதியின் மகளுக்கும் பக்கத்து வீட்டில் குடியிருந்த ஸ்வீட் ஷாப் தாஸின் இளையமகன் அபினவ்விற்கும் பழக்கம் ஏற்பட்டு இருவரும் ஓடிசென்று திருமணம் செய்து கொண்டார்கள். அவன் ஒரு நாடகக்காரன், மேல் நோக்கிய கண்களும், தூக்கிய புருவமும் அவனை வயதானவனாய்க் காட்டும். வீட்டில் அவன் ஒருத்தன் தான் சோம்பேறி, மற்றவர்கள் ஸ்வீட் ஷாப்பில் வேலை செய்து, விற்பனையை கவனித்துக் கொள்ள, அவன் மட்டும் எதுவுமே செய்யாது புத்தகங்கள், நாடகம் என்று எப்போதும் சுற்றிக் கொண்டு இருப்பது மாதிரி இருக்கும். அவன் மேல் இவளுக்கு எப்படி ஆசை வந்தது என்று டாரதிக்கு ஆச்சரியமாய் இருக்கும். டாரதியின் கணவருக்கு அது சுத்தமாய் பிடிக்கவில்லை. அதன்பிறகு நான்கு வருடத்தில் அவனுடன் வாழமுடியாது என்று திரும்பி வந்துவிட்டாள். திருமணத்திற்கு பிறகு மகளுடன் பேசுவதை நிறுத்திக் கொண்டார் டாரதியின் கணவர். இரண்டு வருடங்களுக்கு முன்னால், அவள் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் கழிவறையில் விஷம் குடித்து இறந்து கிடந்ததாய் தகவல் வந்த போதும் அவர் பெரிதாய் கலங்கியதாய் டாரதிக்கு ஞாபகம் இல்லை. டாரதிக்குத் தான் ரொம்பவும் வேதனையாய் இருந்தது. டாரதிக்கு, ஏனோ வீட்டில் வளர்த்த கீரிப்பிள்ளை (லாரா) ஒன்று மோட்டார் பம்ப்பில் மாட்டிக் கொண்டு இறந்த போனது ஞாபகம் வந்தது.
வீட்டில் யாரும் அவரை மீறி பேசமுடியாது. இதுவரை அவரை யாரும் எதிர்த்து பேசியதே இல்லை டாரதிக்கு நினைவிருக்கும் வரை. அவர் உடன் பிறந்தவர்கள் கூட அவரிடம் எதிர்த்துப் பேசுவதோ, மறுத்துப் பேசுவதோ கண்டதில்லை. அவருடைய அண்ணனும், அக்காவும் கூட. ஜான் பிரகாசம், இந்தியாவின் மிகப்பெரிய தனியார் நிறுவனத்தில், தலைமைப்பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்றவர். அவர் பணியில் இருந்த போது கொடுத்த பெரிய டவுன்ஷிப் இடத்தில், அவரே ஒரு பங்களாவைக் கட்டிக் கொண்டார். பெரிய புல்வெளிகளையும் தோட்டங்களையும் தாண்டி, ஒரு பெரிய அடர் பசுமரம் போலத் தோன்றும் வீடு. அதனுள்ளே நிறைய மிருகங்களை வளர்த்து வந்தார்.
பூனை, நாய், கீரிப்பிள்ளை, எறும்புதின்னி, மான்கள், குரங்குகள், ஸ்வான் எனப்படும் வெண்ணிற வாத்துக்கள் என்று என்னென்னவோ. அந்தப் பகுதியில் இருக்கும் மக்களும், உடன் வேலை செய்பவர்களும், இவரிடம் காரியம் ஆவதற்காகவும், அவர் ப்ரியத்தை சம்பாதிக்கவும், கண்ணில் படுகிற மிருகங்களை எல்லாம் கொண்டு வந்து, பரிதாபமாய் ஒரு கதை சொல்வார்கள். மிருகங்களுக்காய் உடனே மனம் இரங்கி, வாங்கி வைத்துக் கொள்வார். எறும்பு தின்னிக்கு என்ன கொடுப்பது என்று தெரியாமல், பாலும், முட்டையும் கொடுத்து அது கொஞ்ச நாளில் இறந்தும் போனது. அந்தக் கதையை ரொம்பவும் பரிதாபத்துடனும், கவலையுடனும், வருவோர் போவோரிடமெல்லாம் பகிர்ந்து கொண்டிருப்பார். மான் இது போன்ற வீடுகளில் வளர்க்கக்கூடாது என்பதற்காக அப்போது ஆந்திராவில் வனத்துறை அமைச்சராய் இருந்தவரை நேரில் கண்டு, அவருக்கு கொடுக்க வேண்டியதைக் கொடுத்து சிறப்பு அனுமதி பெற்றிருந்தார்.
மோண்டுக்கும், மோனிக்கும் மாரி பிஸ்கட் கொடுத்தியா என்று அவைகளுக்கு பழக்கமில்லாத உணவு வகைகளைக் கொடுத்து அவற்றை கவனித்து வந்தார். அல்லது அதற்கான ஆட்களை வைத்திருந்தார். ஓய்வு பெற்ற பிறகு தான் டாரதிக்கான பிரச்னைகள் ஆரம்பமானது. அவர் பணியில் இருந்த போது இருந்த வீட்டின் மினியேச்சர் வீட்டை சென்னை நகர்த்தின் புறநகர் பகுதியில் வாங்கிக் கட்டினார். நிறைய நிழற்மரக்கன்றுகளையும், பழமரக்கன்றுகளையும் வீட்டைச் சுத்தி நட்டார். அதில் சில்வர் ஓக் என்ற மரங்கள் மலைப்பிரதேசங்களில் மட்டுமே வளரக்கூடியவை, அவற்றையும் இங்கே நட்டு வளர்க்க முயன்றார். ஓரளவு வளர்ந்த பிறகு வேர் சரியாய்ப் பிடிக்காமல், தண்டின் கனம் தாங்காது சாய்ந்துவிடும். ஆனாலும் விடாமல் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருந்தார். அப்புறம் ஒரு ஐந்து வருடங்களுக்கு பிறகு அதை நிறுத்தி விட்டார்.
ஓய்வு பெற்ற பிறகு அவருடைய பண்ணை வீட்டுக்கு குடி வந்த போது, அவர் பணியில் இருந்தது மாதிரியே நிறைய வேலையாட்கள் இருந்தார்கள். தனியாய் அவர்களுக்கென்று அவுட் ஹவுஸ் இருந்தது. மான்களைக் கொண்டு வர அரசாங்கம் அனுமதி தரவில்லை. வெறும் குரங்குகளும், நாய்களும், கீரிப்பிள்ளைகளும், வாத்துக்கள் மட்டுமே அவரால் இங்கு கொண்டு வர முடிந்த்து. வாத்துக்கள் நீந்துவதற்கும், விளையாடுவதற்கும் குளம் போல ஏற்பாடு செய்து வைத்திருந்தார். அவற்றை நாய்களும், பூனைகளும் போய் கடித்து விடாத படி, வேலியெல்லாம் கட்டி வைத்திருந்தார். ஆனாலும் வாத்துக்கள் குஞ்சுகள் பொரித்து கொஞ்ச நாட்களில் காணாமல் போய்விட்டன. பூனைகளாய் இருக்கலாம், இல்லாவிட்டால் பெத்தன்னாவாய் இருக்கலாம், யார் வாய்க்குள் போனது என்று ஆராயவில்லை. அதன் பிறகு வாத்துக்களை தனக்குத்தெரிந்த இன்னொரு பண்ணை வீட்டாரிடம் கொடுத்து விட்டார். இது போல ஒவ்வொன்றாய் குறைய, அதற்கான பிரத்யேக வேலையாட்களும் குறைய ஆரம்பித்துவிட்டார்கள். டாரதிக்கு எல்லாமே சலிப்பாய் இருந்தது, இதை வேண்டாமென்று அவரிடம் சொல்ல முடிவதில்லை ஒருபோதும். எப்போதாவது, வரும் மகளும் வீட்டிற்கு வராமல் இருப்பதே இந்த பிராணிகளாலும் அதனுடனேயே இருக்கும் துர்நாற்றத்தினாலும் தான் என்று சொல்ல முடிவதில்லை.
எல்லாவற்றிலும் பெரிய அலுப்பான விஷயம் இந்த நாய்களைக் குளிப்பாட்டுவது தான், அதுவும் உன்னிகளுக்கென்று டிக் ஷாம்பூவும், கோட் மெத்தென இருப்பதற்கு மற்ற ஷாம்பூவும் இட்டு அவைகளை குளிக்க ஊற்றி, உணர்த்துவதற்குள், ஒரு ஜென்மம் தீர்ந்துவிடுவது போல இருக்கும். நல்லவேளை பூனைகள் குளிப்பதில்லை, அதன் எண்ணிக்கைக்கு அதையும் குளிக்க ஊற்ற வேண்டியிருந்தால், அவள் எப்போதோ கர்த்தரிடம் போய்ச் சேர்ந்திருக்கவேண்டியது தான் என்று நினைத்துக் கொள்வாள். அதன்பிறகு, குளித்து முடித்ததும், அவைகளுக்கு டிக் பவுடர் போட்டு, கோம்ப் செய்ய வேண்டும். இது போக வாரத்திற்கு ஒருமுறை அவைகளுக்கு நகம் வெட்டுவதும், உண்ணி களைவதும் கூடுதல் வேலைகள். நாய்களை குளிப்பாட்டுவதை டாரதியின் கணவர் தான் செய்து கொண்டிருந்தார். அப்புறம் அவராக எல்லாவற்றையும் நிறுத்திவிட்டு, தன் அறையோடு தங்கிவிட்டார். டாரதிக்கு தான் படுக்கை அறைக்கும், கொள்ளைக்கும், கிணற்றடிக்கும் அலைவதே முழு நேரவேலையாகி விட்டது .
இத்தனை உடல் அலுப்பு இருந்தாலும், நேரம் போய்விடுகிறது இவைகள் இருப்பதால், படுத்ததும் உடலை அழுத்தும் உறக்கம் வந்து விடுகிறது. முழங்கால் வலியும், இடுப்பு வலியும் இருந்தாலும் ஒரு மாதிரி டாரதிக்கு பழகிவிட்டது.
தினமும் காலையில் கேழ்வரகு கஞ்சியில் கொஞ்சம் பாலை ஊற்றி உப்பு போட்டு குடித்துவிட்டு உட்கார்ந்து விடுவாள். பெத்தன்னா சமையலைப் பார்த்துக் கொள்வான். அதனால் அடுப்படிக்கு போக வேண்டியிருக்காது டாரதிக்கு. பதினோரு மணிவரை நாய்கள், பூனைகளின் பராமரிப்பு வேலைகளைப் பார்த்துவிட்டு, அன்றன்றைக்கான அப்பத்தை எடுத்துக் கொண்டு படிக்க உட்கார்ந்து விடுவாள். நாய்களுக்கு வைத்த உணவு அப்படியே இருக்கும். பூனைகள் மட்டுமே அடிக்கடி வந்து தட்டை காலி செய்து விட்டுப் போகும். சார்லி, ஜெர்ரி, சீசர் எல்லோரும் அங்கங்கே திரிந்து கொண்டே இருந்தாலும், உணவை உண்ணுவது போல இருந்தாலும், உணவு என்னவோ காலி ஆவதே இல்லை. டாரதிக்கு பல நேரங்களில் அது ஆச்சரியமாய் இருக்கும். பாலை டாரதியே பலமுறை எடுத்து கீழே கொட்டியிருக்கிறாள். நாய்களுக்கு வைத்ததை ஏனோ பூனைகள் குடிப்பதில்லை. எப்போதாவது நாய்களுக்கென்று வைத்திருக்கும், கோழியின் ஈரல்களை, ருசி பார்ப்பதோடு சரி.
பெத்தன்னா கதவைத்தட்டுவது போல இருந்தது. டாரதி அன்றன்றைக்கான அப்பத்தை அப்படியே ஒரு புக் மார்க் வைத்து கட்டிலிலேயே வைத்து விட்டு, கையிலே கட்டில் முனையில் சாத்தி வைத்திருந்த குச்சியை எடுத்துக் கொண்டாள். சீசரோ, ஜெர்ரியோ வாசலில் இருந்தால், உள்ளே வர முயலலாம், அதன் பிறகு சார்லியுடன் சண்டையிடுவதை தடுக்க முடியாது. கதவைத் திறக்கும் போதே சார்லி, சங்கிலியுடன் இழுத்துக் கொண்டு, குரைத்தான். குச்சியை ஓங்கி ஒரு சத்தமிட்டாள், அடங்கிவிட்டான். அவளுக்கு, குச்சியில்லையென்றால், யாரும் சொல்வதை கேட்கமாட்டார்கள், குச்சி அவர்களுக்கு புரிகிற மொழி என்று நினைத்துக் கொண்டே லேசாய் சிரித்தாள். பெத்தன்னா மறுபடி கதவைத் தட்டினான். மதியம் சாப்பாடு நேரமே ஆகவில்லை, அதற்குள்ளே என்ன அவசரம் அவனுக்கு என்று யோசித்துக் கொண்டே கதவைத் திறந்தாள்
பெத்தன்னா அழுது கொண்டிருந்தான். அவளுக்கு கேள்வியாய் இருந்தது, மறுபடி ஏதாவது பூனையை, ஜெர்ரி கடித்து விட்டானோ என்று தோன்றியது. வாசலில் பெத்தன்னாவின் பின்னால், சீசர் நின்று கொண்டிருந்தான். அவசர அவசரமாய் ஒருச்சாய்த்தபடி வெளியே வந்து கதவைச் சாத்தினாள். பெத்தன்னா அழுது கொண்டே இருந்தான்.
‘என்னடா அளுதுட்டு இருக்க?’
“அய்யா போயிட்டாரும்மா?”
‘என்னடா உளர்ற? காலையில நல்லாதானே இருந்தாரு? சீசருக்கு காது வலின்னு சொல்லிட்டு எங்கிட்ட வந்தாரு, நான் வெளிய வந்து மருந்து ஊத்தினேனே? நீயும் தானே இருந்த, அவன் தலைய அமுக்கிக்கிட்டு?’
“அய்யா என்னைக்கும்மா வந்தாரு வெளியிலே, ரெண்டு வருஷமாச்சு! சின்னம்மா இறந்ததில இருந்து படுத்த படுக்கையாத்தான இருக்காரும்மா!, ஆனா, இல்லாத நாய்களை இருக்கிறதா நினைக்கிறீங்க” என்று மேலும் அழுதான்.
டாரதி அவனை வினோதமாய் பார்த்தாள்.
11 comments:
நல்லா இருக்கீங்களா ராகவன்?
என்ன ஜோரா எழுதி இருக்கீங்க போங்க! நாமெல்லாம் எழுதறத நிறுத்திடலாமான்னு தோணற மாதிரி?
முதுமையின் இயலாமையும், ஊசலாட்டமும் உறைந்துபோன வாழ்க்கையின் இயக்கமாக வீட்டுப் பிராணிகளும்.
ஒரு ஓவியம் போல வரைந்து இருக்கிறீர்கள்.
இந்தக் கதை வாசித்து முடிக்கும்போது எனக்கு மிகவும் பழக்கமான பாளையங்கோட்டை லாசரஸ் வாத்தியார் வீட்டில், ஒரு நசநசப்பான மழைக்கால நாளில் பூனை மூத்திர நாற்றமடிக்க அவருடன் இருப்பது போல உணர்ந்தேன்.
ரொம்ப நல்லாயிருக்குங்க. . .
என்ன சொல்றது ராகவன் ? மொதல்ல வெல்கம் பாக் ...( பாக் வித் எ பாங் ! )
படிச்சதும் எனக்கு தோணினது இது தான் ...ஒரு படம் மாதிரி வரஞ்சிருக்காரு ராகவன்னு .. சுந்தர்ஜி முந்திக்கிட்டாரு ! கருப்பும் சாம்பலுமா வர்ணம் தீட்டி இருக்கீங்க ..
உங்க வழக்கமான டீடெய்லிங் இருக்குனாலும் அங்கயே உக்காந்து அத ரசிக்க விடல நீங்க .. மேல மேலன்னு முடிவ நோக்கி நகத்துற டீடெய்ல்ஸ் ..
பூனையின் கழிவு வாடை ... அப்பாடா .. இப்பமும் எனக்கு நெனப்பிருக்கு .. அது நல்ல , மகிழ்ச்சியான சந்தர்ப்பங்கள்ல நெனப்பு வர மாதிரியான வாடையேயில்ல .. ஆடு கோழியெல்லாம் பூன நாய் மாதிரி மனுஷனோட ஒன்றி வாழ்ந்தது தான் ஆனா அந்த கழிவு வாடை துக்கம் , பயத்தோட அசோஸியேட் ஆகாது .. பட் பூனை கழிவு !!!... கண் , நாசின்னு பல புலன்கள் வழியாவும் கதைய உள்வாங்கிக்க முடியிது ..
டாரதி தன் மகள நெனச்சு கொழம்பற எடம் , "கதவைத் திறக்கும் போதே சார்லி சங்கிலியுடன் இழுத்துக்கொண்டு குதித்தான்" , "நாய்களுக்கான உணவு அப்படியே இருக்கும்"னு வர எடம் எல்லாம் பிரமாதமான புத்திசாலித்தனத்தோட எழுதி இருக்கீங்க .. முடிவு ரொம்ப சங்கடமா இருக்கு ... அதிர்ச்சியா துக்கமானு சொல்ல தெரியல ... அப்பா , அம்மாவ தனியா விட்டு வச்சிருக்கவங்களுக்கு எல்லாம் பயம் வந்திரும் ... i can almost picturize the entire story ... இந்த மாதிரியான சந்தர்ப்பங்களில் ஏற்படக் கூடிய மனோரீதியிலான மற்றும் உடல் பாதிப்புகள் எல்லாத்தையும் கதையோட சேத்து கொழச்சு ஸ்ட்ரோக் பண்ணியிருக்கீங்க ஒரு டார்க் பெய்ண்டிங் ..
எழுபதை தாண்டி யமனுக்குக் காத்திருக்கும் யாரேனும் இக்கதையை படித்தால் நெஞ்சுவெடித்து சாகக் கூடும். கொடிது கொடிது முதுமை கொடிது என்றிருப்பாள் அவ்வைப் பாட்டியும். வாசிக்கும் நடுத்தர வயதினருக்கோ வயிற்றில் புளியைக் கரைக்கும்படி பீதி கிளம்பியிருக்கும். நம் பாடு எப்படிப்போகுமோவென... அலுவலக ஓய்வுக்கான வயது போல் ஆயுள் ஓய்வுக்கான வரம்பிருந்தால் தேவலை.
வீர்யமிக்க எழுத்துத் தூரிகையால் டாரதியின் சித்திரத்தை ஆழமாய் அடிமனசில் பதிவிட்டு விட்டீர்கள். இன்னுமிரு மாதமானாலும் ஜீரணிக்கவியலாது மனசழுத்திக் கிடக்கும் கல்லாய் இக்கதைப்பதிவு.
பாசம் காட்ட சக மனிதஜீவன் அற்றுப்போன பரிதாபத்துக்குரியோர் வளர்ப்புப் பிராணிகளை எத்துணை அசெளகர்யங்களோடும் வைத்து மேய்க்கிறார்கள்...! சகிக்க முடியாத பூனை வீச்சமாய் கதை நெடுக தொடர்ந்த பூடகங்கள் முடிப்பில் பளார் என வெடித்துச் சிதறின பருத்திப் பஞ்சாய்...காற்றின் போக்கில் பிரியும் அதன் இழைகள் பறந்தும் உருண்டும் ஒட்டியும்... அமிழ்ந்து போக அழிந்து போக ஆகும் பல காலம்.
remba nallaayirukku..
vaazhthukal
அன்பு சுந்தர்ஜி,
எப்படி இருக்கிறீர்கள்? உடல்நிலை சரியில்லை என்று கேள்விப்பட்டேன்...தேவலையா? ஏற்க்குறைய நான்கு மாதங்களுக்கு பிறகு எழுத நேரம் வாய்த்தது... இந்தக் கதை... நிதானமாய் அனிமல் ஹோர்டிங்க் பற்றி எழுத நினைத்து... அது அப்படியே எனக்குத் தெரிந்தவர்களின் கதையாய் மாறிப்போனது... எழுதி செல்லும் விதியின் கை... உங்கள் வார்த்தைகள் ஊக்கம் அளிக்கின்றன... சுந்தர்ஜி... கதை சரியா வரலை... அலுப்பாய் இருக்கிறது என்று சில நண்பர்கள் கூறினார்கள்... அதை எல்லாம் எடுத்துக் கொண்டாலும், உங்கள் கருத்து கொஞ்சம் ஆசுவாசமாய் இருக்கிறது... உங்கள் கவிதைகள் தொடர்ந்து ஆவியில் வருவதாய் என்னுடைய தோழி ஒருவர் சொன்னார். நிறைய படிக்க வாய்ப்பில்லை...எனக்கு... அதிக வேலை... பொறுப்புகள் கூடிப்போய்விட்டதா இல்லை இப்போது தான் வேலையில் பொறுப்பு வந்திருக்கா என்று தெரியவில்லை. நேரம் கிடைக்கும் எழுத வேண்டும்.. நிறைய படிக்கவும் வேண்டும்...
அன்பும் நன்றிகளும்
சுந்தர்
அன்பு ஹேமா, அன்பு இரசிகை அவர்களுக்கு,
என் அன்பும் நன்றிகளும்... தொடர்ந்த உங்களின் வாசிப்பிற்கும் கருத்திற்கும் அன்புடன் நன்றிகளும்
ராகவன்
அன்பு அனானி,
நீதான் அந்த அனானி என்று எனக்குத் தெரியும்... கதை உனக்கு பிடித்திருப்பது மகிழ்ச்சி... நீ தொலைபேசிய போது சொன்னது எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கு... உன்னுடைய பழைய கதைகள் போலில்லை... அதில் இருக்கும் நுட்பமான பார்வை இதில் இல்லை, அதில் இருக்கும் உணர்வு நிலைகள் இதில் இல்லை... அதில் இருக்கும் அழகியல் இதில் இல்லை... ஆனாலும் நல்லாயிருக்கு என்று சொல்வதற்கு அர்த்தம் புரியாமலில்லை... வளர்கிறேனோ வீங்குகிறேனோ தெரியவில்லை... உன் கருத்திற்கும், அன்பிற்கும்... அன்பும் நன்றிகளும்...
அன்புடன்
ராகவன்
அன்பு நிலாமகள்,
எப்போது எழுதினாலும், எத்தனை இடைவெளி விட்டு எழுதினாலும், நீங்கள் வந்து படித்து கருத்து சொல்வது கொஞ்சம் நிம்மதியைக் கொடுக்கிறது...இன்னும் எழுதுகிறோமே என்று நம்பிக்கை வருகிறது உற்சாகமும் வருகிறது... உங்கள் வாசிப்பிற்கும் உங்கள் கருத்திற்கும்... ரொம்பவும் அன்பும் நன்றிகளும்...
ராகவன்
என்ன சரளமான நடை. டாரதி கதாபாத்திரம் வெளிப்படுத்தும் உணர்வுகள் வலியை விதைக்கின்றன.
///இத்தனை உடல் அலுப்பு இருந்தாலும், நேரம் போய்விடுகிறது இவைகள் இருப்பதால், படுத்ததும் உடலை அழுத்தும் உறக்கம் வந்து விடுகிறது. முழங்கால் வலியும், இடுப்பு வலியும் இருந்தாலும் ஒரு மாதிரி டாரதிக்கு பழகிவிட்டது.
///
இதிலிருந்து வெளிவர சிலநாட்களாகலாம்.
தொடர்ந்து எழுதுங்கள் ராகவன்.
ரொம்ப நாட்களுக்குப்பிறகு கீரிப்பிள்ளையின் படம் பார்க்க வேண்டுமென்று தோன்றுகிறது.
உங்க லிங்க் கொடுத்த ரத்னவேல் அவர்களுக்கு நன்றி
அன்பு மதுமிதா,
உங்கள் வாசிப்பிற்கும் கருத்திற்கும் என் அன்பும் நன்றிகளும்...
அன்புடன்
ராகவன்
Post a Comment