Wednesday, July 24, 2013

சுஜாதாவிற்கு நண்பன்:


சுஜாதாவை பார்ப்பதற்காய் ராதாகிருஷ்ணன் கல்யாணமண்டபம் வரை போயிருந்தேன் அவள் வீடு அங்கு தான் இருந்தது. ராதாகிருஷ்ணன் கல்யாண மண்டபத்திற்கும், ராஜாராம் பலசரக்கு கடைக்கும் நடுவில். நூலகத்தில் இருந்து வரும் போது அடுத்த பக்கத்தில் இருந்து நுழைய வேண்டி வரும்.  தெருவுக்குள் நுழையும் போது மின்சாரப்பழுது எல்லோர் கண்களையும் மூடியது. தடவி வீட்டைத் தட்டியதில் மெழுகுவர்த்தியை நெஞ்சுக்கு நேராய்ப் பிடித்திருந்தாள். அடையாளம் வெகுவாய் உறுதியானது அழிக்கதவின் மேல்த்தாளை நீக்கி உள்ளே வர்றியா? என்றாள் எதற்கு வரச்சொன்னாள் அல்லது எதற்கு ஆர்வமாய் வந்தேன் என்று அவளுக்கு தெரிந்திருக்கும் நுழைந்ததும் கதவைச் சாத்தினாள் திரையை இழுத்து மூடினாள். என்ன புத்தகம் கொண்டு வந்த? என்றாள்.

மெழுகுவர்த்தி எங்களுக்கு இடையே எரிந்து கொண்டிருந்தது புத்தகங்களை எடுத்து முன்னே வைத்தேன் அப்புறமா பார்க்கிறேன் என்று தள்ளி வைத்தாள். புடவை முந்தியை காட்டி இதில் பள்ளு டிசைன் பார்த்தியா? உனக்கு இது போன்ற டிசைன் பிடிக்கும் தானே என்றாள். 

கோபியர்கள் சுற்றியிருக்க கண்ணன் புல்லாங்குழல் வாசித்துக் கொண்டிருந்தான். அவர்கள் கண்களை மூடிக் கொண்டு தளர்ந்த தாவனிகளுடன் இருந்தார்கள். மார்புப்பிளவுகளையும் நெசவுக்காரன் அழகாய் நெய்திருந்தான். சுஜாதாவும் கண்களை மூடியது போல இருந்தது முந்தியை பிடித்து இழுத்தேன், இது யார் நெசவு? யாராவது வரலாம்? என்று சொல்லிக்கொண்டே ரவிக்கையின் முன்பட்டனை கழட்டினாள். மரு மூன்றாம் முலையாய் இருந்தது. முழுக்க விடுவித்ததில் நுனி கருக்கிய திரிக்களாய் முலைகள் பற்றி எரியத் தொடங்கியது. கதவை யாரோ தட்டுகிறார்கள் விலகிய வேஷ்டியை சரிசெய்து எழுந்தேன். என் தங்கை உன் செருப்பை பார்த்திருப்பாள். பரவாயில்லை உட்கார் என்றாள். விளக்கு வர அவசரமாய் விலகி வீடு நோக்கி நடந்தேன் சுஜாதா அதன் பிறகு என்னுடன் பேசவில்லை. இது நடந்து இரண்டு மாதங்கள் இருக்கும்.

அன்று நூலகம் செல்வதற்காய் சென்று கொண்டிருந்த யோசனையின் நடுவே ஒற்றை கொலுசொலியாய் கினுங்கிப் போனாள், சுஜாதாவின் தங்கை. மார்க்கட்டில் பார்த்தேன்.  மார்கட்டில் அவள் அக்காவாய்த் தெரிந்தாள், அவளும் என்னுடைய கல்லூரியில் தான் இளநிலை ஆங்கில இலக்கியமும் படித்துக் கொண்டிருந்தாள்.  சுஜாதா பிஜி படிக்கவில்லை, வீட்டில் தான் இருக்கிறாள் பிபிஏ முடித்ததும்.  சத்யாவை கல்லூரியில் பார்த்து சிரிப்பதோடு சரி, சுஜாதாவை பார்க்க வீட்டிற்கு செல்லும் போது இருந்தால், பேசுவாள்.

சுப்பிரமணியபுரம் பூங்காவைக் கடக்கையில் என்னை தற்செயலாய் கவனித்து விட்டாள்.   என்னை நோக்கி வேகமாய் வந்தாள், வயர்க்கூடையில் பளபளப்பாய் தக்காளிகளும் பிளந்து சீவிய ஒரு பூசணிக் கீற்றும் இருந்தது. வேகமாய் வந்தாள், இறைத்தாள். இறைத்து வாரிக் கொட்டியபடி என் தோள் உரசி நடந்தபடியே பேசினாள். மார்பு இடது முழங்கை மீது தன் மெத்தென்ற உதடுகளை ஒத்தியது. சுழித்தபடியே கோணிச் சிரித்தபடி பேசினாள். உறுத்து நோக்கினாள். வீட்டிற்கு ஏன் வருவதில்லை, அக்காவுடன், சண்டையா? என்றாள்.  அவள் பேசுவதில்லை என்றேன்.  என்னைப்பார்க்க வரலாமே? நானும் உன்னுடைய தோழி தானே என்றாள்.  என் பலகீனத்தினை கடக்கென்று, சேனைக்கிழங்கு வாங்க குனிந்த படியே வெட்டினாள். கிழங்கு பிளந்து இளஞ்சிவப்பில் பொறுபொறுவென மணல் மேனியாய் இருந்தது.  வாயேன் வீட்டுக்கு என்னோட, அக்காவும் இருப்பாள் என்றாள்.  சுஜாதா இருந்தால் வருவதாய் இல்லை என்றேன். அவள் ஏன் என்று கேட்கவில்லை. ஒரு ரூபாய் காயின் இருக்கா என்றாள். துழாவிக் கொடுத்தேன். சுப்பிரமணியபுரம் நூலகத்தை கடந்து கொண்டிருந்தேன், படிக்காத புத்தகங்கள் இன்னும் இருக்கு என்று தோன்றியது.  பைக்கட்டில் இருந்த புத்தகங்களை எடுத்து பார்த்தேன் நாட்கள் இருக்கிறது இன்னும்.  என்ன புத்தகம் என்று வாங்கும் போது, என்னை வேண்டுமென்றே உரசினதாய் எனக்குத் தோன்றியது.

நூலகத்தை கடந்து, நீயூ ஸ்கூல் ஆஃப் காம்ர்ஸ் எதிரே இருந்த இரண்டாம் தெருவில் நுழைந்தோம். அவளுடைய வீடு ராஜாராம் மளிகைக்கடை அடுத்து இருக்கும் காம்பவுண்டில் இருந்தது.  நீயூ ஸ்கூல் ஆப் காமர்ஸ் என்றிருந்த டைப் ரைட்டிங்க் இன்ஸ்ட்டியூட் இப்போது டெக்னோ காமர்ஸ் என்ற பெயரில் கம்ப்யூட்டர் சென்டராய் மாறியிருந்தது. வர்ணம் மாறியிருந்தது, பழைய நீலமும் வெள்ளையுமான எழுத்துள்ள போர்டு மாறியிருந்தது.  நூலகம் வரும்போது இத்தனையும் கவனிக்காத்து ஆச்சரியமாய் இருந்தது.  வேப்பமரம் மறுமுனை எதிர்வீட்டில் இருந்து வளைந்து வளர்ந்தது மறைத்திருக்கலாம்.

ராஜாராம் மளிகைக்கடையை கடக்க வேண்டும் சுஜாதா வீட்டை அடைய. பொன்ராஜ் அவசியம் பார்ப்பான். அவன் பொட்டலம் மடிப்பதை விட அதிக கவனம் தெருவில் இருக்கும். அவன் பார்வையில் இருந்து நான் எப்படியும் தப்பமுடியாது. பொன்ராஜ் பள்ளித்தோழன். என்னையும் சுஜாதாவையும் இனைத்து பிரதாபமாய் பேசுபவன் எங்கள் பழைய பள்ளி நண்பர்களிடம்.  மாப்ள, காலேஜ் படிக்குறான்ல, அதான் பொட்டலம் போட்டுட்டான் என்பான். பலசரக்குக்கடை உரிமையாளரின் முதல் மகன், பொன்ராஜ் சரக்கு கொடுக்கும் சுஜாதாவின் கைகளை வேண்டுமென்றே தொடுவதாய் சொல்லியிருக்கிறாள் இவனிடம் சொல்லியிருக்கிறாள்.  கைகளையா? என்று மிகப்பிரதானமாய் தொடத்தூண்டும் வஸ்து அவளிடம் இருப்பதை அவன் கவனித்திருக்காமல் இருக்க மாட்டான். வாய்த்திருக்காது என்று தோன்றியது. இன்றைக்கு அவன் கண்ணில் பட்டுவிடக்கூடாது, பட்டால் தொலைந்தோம்.

சுஜாதாவின் தங்கை முன் நடக்க, அவளின் ஜடை விலகி விலகி புட்டத்தில் பட, முதுகுக் குழித்தண்டில் ஒரு மச்சம் இருப்பது தெரிந்தது.  ஒவ்வொரு நேரத்திலும் ஒவ்வொரு விஷயம் தெரிகிறது.  ராஜாராமின் கடையைக் கடந்த போது பொன்ராஜ் என் கண்ணில் படவில்லை. கடையைக் கடந்து அவள், காம்பவுண்டை அடைந்தாள்.  அழிக்கதவு வெளியே பூட்டியிருந்தது, முன்னால் ஒரு பழைய பெஞ்ச் கிடந்தது, அதில் கொஞ்சம் நீர் சிந்தி பலகையின் மேல் ஊறியது போலவும் கொஞ்சம் பாதரச மினுக்குடனும் கிடந்தது. 

இரு வரேன், அக்கா இல்ல போல, தப்பிச்ச என்றாள். சிரித்தாள். பக்கத்துவீட்டு வாசலில் இருந்து அக்கா, என்று யாரையோ அழைத்தாள். வெளிச்சமிருக்கும் முன்பகல், மெழுகுவர்த்தியோ, இருட்டோ பயமில்லை என்று தோன்றியது. கடக் முடக்கென்று, அரைக்கதவையும் முழுதாய் திறந்து ஒரு பெரிய அக்காள் வந்தாள்.  என்னை பார்த்தபடியே அவளிடம் பேசினாள்.  அக்கா சாவி கொடுத்திட்டுப் போனாளா? என்று கேட்டுக் கொண்டிருந்தாள். இரு வாரேன் என்று தயங்கியபடியே உள்ளே போனவள், கையில் திறவுகோலுடன் வந்தாள். தாங்க்யூக்கா, என்றவளை நிறுத்தி, ஆரு? என்றாள். அக்காவின் நண்பன் என்றாள்.

கதவைத்திறந்து திரையை விலக்கினாள். மெழுகுவர்த்தி தேவைதான் போல இருட்டாய் இருந்தது.  சிறிது நின்று இருட்டுக்கு கொஞ்சம் பழகி, உள்ளே நுழைந்து சமையலறை புகுந்து ஜன்னலைத் திறக்க வெளிச்சம் இருட்டில் கரைந்து ஊர்ந்தது, குறுகுறுவென இடது தொடையில். இடது தோளில் கிடந்த ஜோல்னாப்பையில் உள்ளே கைவிட்டு, என்ன புத்தகங்கள் வச்சிருக்க என்றாள். புத்தகங்களை தொடையில் உரசியபடியே வெளியே எடுத்தாள் கட்டியிருந்த வேஷ்டி லேசாய் உயர்ந்தது. பையோடு சேர்ந்து.  மின் விசிறியின் வேகத்தில் தாள்கள் படபடத்தது தளர்வாய் பிடித்திருந்த புத்தகம் ஒன்றிலிருந்து.  இது யாரு, புதுசா ராஜேந்திர சோழன் என்றாள். இது புத்தகம் பற்றிய கேள்வியா என்று தோன்றியது. 

இருட்டோடு சமைந்து போன ஒரு நிழல் மர பீரோவின் அருகில் கிடந்த வயர்க்கூடையை இழுத்து போட்டு உட்காரச் சொன்னாள்.  உயரம் குறைவாய் இருந்தது. உட்கார்ந்ததும், இடது பக்க வேஷ்டி விலகி தொடை தெரிந்ததை அவசரமாய் மூடிக்கொண்டேன்.  அவள் சிரித்திருக்க வேண்டும். ஒரு குன்றிமணி கிலுங்கியது. அதற்கும் உயரம் குறைவான ஒரு மரஸ்டூலை சமையலறையில் இருந்து எடுத்து வந்து எதிரில் போட்டு உட்கார்ந்து கொண்டாள். தொடைகளுக்கிடையே சங்கடமாய் இருந்தது. சுஜாதா வந்துவிட வேண்டும் என்று ஏனோ தோன்றியது.

புத்தகங்களை மடியில் வைத்துக் கொண்டு, ஏதோ புரட்டியவுடன் படித்துவிட்டவள் போல அடுத்த புத்தகத்திற்கு நகர்ந்தாள்.  திடீரென்று நிமிர்ந்தவளின் கண்கள் என் கண்கள் அவள் மார்பில் இருந்த்தை கவனித்து விட்டு திரும்பவும் புத்தகத்திற்கு போனது. நான் அவள் கண்களுக்கு பார்வையை உயர்த்தியபோது அவள் பார்வை ஒரு முறுவலுடன் நகர்ந்ததை கவனிக்க முடிந்தது. அவள் பார்வை நேராய் பார்த்தால், எங்கு பார்க்க வேண்டியிருக்கும் என்று தோன்றிய போது இடது பக்கமாய் கிடந்த ஜோல்னாப்பையை மடி மீது வைத்துக் கொண்டேன்.  வாசலில் செருப்பு சத்தம், சுஜாதாவாய் இருக்க வேண்டும் என்று தோன்றியது பெண்களின் செருப்பு, பேட்டாவின் ரப்பர் சாண்டல், ஒரு வெற்று டப்பாவின் தேய்ச்சத்தம் போன்ற சத்தம்.  சுஜாதா இல்லை.  சின்னதாய் சத்தம் செய்த, கதவும், திரையும் விலக, சுஜாதாவின் அம்மா. எங்கே போயிருந்தார்கள், அடுத்து யார் வரப்போகிறார்கள். இவள் போஸ்ட் ஆஃபீஸில் வேலை செய்கிறாளே, இவள் ஆஃபீஸிலுமா ஸ்டிரைக்? என்று யோசித்தபடியே சிரித்து வைத்தேன். 

வா சீனு! ஏதாவது கொடுத்தாளா? இல்ல ஏதாவது வம்பளத்துட்டே இருக்காளா? பெரியவ எங்கடி போயிருக்கா?

எனக்குத்தெரியாதும்மா? சாவியை நான் பூமாக்காகிட்ட தான் வாங்கினேன், இப்போ தான் வந்து உட்கார்ந்தோம், அதுக்குள்ள நீயே வந்துட்ட? என்ன இன்னைக்கு இத்தனை சீக்கிரம்? வேலையில்ல?

உன் மாமன் வந்து நிக்கிறான் ஆஃபீஸ்ல, அவனுக்கு பணம் வேணுமாம், அவனோட போஸ்ட் ஆஃபீஸ் சேவிங்க்ஸ் புக் என்ட்ட தான் இருக்கு, வீட்டுக்கு வர மாட்டானாம், கடங்காரன் என்னைய அலைய விடுறான்.  நல்லது கெட்டதுன்னா அவெ ஒருத்தன் தானே ஆம்பளன்னு சகிச்சுக்க வேண்டியிருக்கு!

அப்ப போயிடுவியா இப்போ? குரலில் ஒரு கொட்டிய மணலை கண்ட குழந்தையின் குதி இருந்தது.

ஆமா, என்றவள் மரபீரோவை குடைந்து ஒரு புத்தகத்தை எடுத்தாள், பிரவுன் அட்டை போட்டு, ஏதோ மேலே எழுதியிருந்ததை சரிபார்த்து, தனக்குத்தானே தலையாட்டிக் கொண்டு, என்னைப் பார்த்து சாப்ட்டு போ, அவ வந்திடுவா, இங்க தான் எங்கயாவது பொயிருப்பா!, சத்யா, அவனுக்கு ஜவ்வரிசி வடாம் பொரிச்சுக் கொடு, சாதமும், உருளையும், கத்தரிக்கா குழம்பும் இருக்கு, என்று அவசர அவசரமாய் கிளம்பிப் போனாள்.
லீவ் போட்டு வந்துட்டாளோன்னு நினைச்சிட்டியா என்று என்னைப் பார்த்து சிமிட்டினாள். 

எனக்கு அவசரமாய் ஒன்னுக்கு வந்தது, பாத்ரூம் எங்கயிருக்கு என்றேன்.

ஏய்! என்னாச்சு? என்றாள். என்னாகணும் என்றேன்.  சிரித்துக் கொண்டே வெளியே அழைத்து, கடைசியில் மாடி படிக்கட்டுக்கு முன்னாடி என்று கைக்காட்டினாள்.  எத்தனை வீட்டைக் கடக்க வேண்டும், எத்தனை பார்வைகளை? வேகமாய் செருப்பை மாட்டிக் கொண்டு, பாத்ரூம் தேடிச் சென்று முடித்து விட்டு வந்தேன். 

நைட்டிக்கு மாறியிருந்தாள்.  ஒன்னுக்கு போய்விட்டு வருவதற்குள் என்னென்ன மாற்றங்கள், உள்ளறையில் ஒரு குண்டு பல்பு எரிந்து கொண்டிருந்த்து, கட்டிலின் மீது அவளின் புடவையும், பாவாடையும், ரவிக்கையும் கிடந்திருக்க வேண்டும். அவளின் உடலை கழட்டி எறிந்திருந்தது போல இருந்தது. நிறங்களை வைத்து அதுவெல்லாம் இல்லாமல் நைட்டிக்குள் இருக்கிறாள் என்று தோன்றியது.

இரு வடாம் பொறிச்சுட்டு வரேன் சாப்பிடலாம்!

பதினொரு மணிக்கு சாப்பாடா? காலையில் சாப்பிட்ட இட்லியும் உளுந்து சட்னியும் இன்னும் இருக்கு, அதுவும் இவளை பார்க்கையில் ஜீரனமாகாது போல, உறைந்திருக்க வேண்டும் போல சங்கடம் பண்ணியது வயிறு. இதில் எங்கிருந்து கத்தரிக்கா குழம்பும் சாதமும்.  ஜவ்வரிசி வடாம் பொரிந்து, கொஞ்சம் சாப்பிட வயிற்றில் இடம் பண்ணியது. சரி சாப்பிடலாம் என்று முடிவு செய்து விட்டேன். லீவு நாள் தானே பார்த்துக் கொள்ளலாம், இத்தனை தூரமில்லை நம் வீட்டில் டாய்லெட் என்று கொஞ்சம் பாதகமில்லை என்று தோன்றியது.

கூடைய, நகத்தி போட்டு ஒக்காரு, கைய கழுவுறியா, இல்ல மொத்தமா கழுவிக்கிறியா என்று சிரித்தாள்.

அய்யோ எதற்கெடுத்தாலும் சிரிக்கிறாளே?  அனர்த்தமாய் ஏதோ பேசுகிறாளோ, நமக்குத்தான் புரியலையோ? என்று தலையைச் சொறிந்த்தில், கையைக் கழுவிடலாம் என்று தோன்றியது.

இங்க வா இந்தக்குழிக்குள்ள கழுவு, என்று ஒரு யேனத்தில் தண்ணீரை கொண்டு வந்து கையை பிடித்து இழுத்து குழிக்கு நேராய் நீட்ட வைத்தாள். சமையலறை இல்லை, அடுப்படி, ஒரு ரெண்டு மூன்று அடி நீள அகலம் இருக்கலாம், ஒரு சமையல் மேடை, கேஸ் அடுப்பு, அங்கங்கே தொங்கும் கரண்டிகள், பாத்திரங்கள், மசாலா வகையறாக்கள் அடுக்கடுக்காய் சின்ன சின்ன பானைகள் என்ன வைத்திருப்பார்களோ, புதையலாய் இருக்கவேண்டும், சுவற்றில் கரி படிந்து பூதமென பானைகள் காத்தது போல இருந்தது. உரசிக்கொண்ட படியே நின்று கழுவச்செய்து வெளியே விட்டாள்.

வந்து கூடைச்சேரை நகர்த்திவிட்டு, தரையில் காலியான ஜோல்னாப்பையை விரித்து உட்கார்ந்து கொண்டேன்.  தட்டைக் கையிலேயே கொடுத்தாள். சட்டியில் இருந்த குழைந்த பச்சரிசி சாதம் வாசனையாய் இருந்தது. வரிசையாய் ஒவ்வொன்றாய் வந்தது, குழம்பு, உருளை.  ஒவ்வொரு முறையும் குனிந்தாள்.  அடுக்கிய ஜவ்வரிசி வடாத்தை ஒரு தட்டில் வைத்து சர்க்கஸ்காரியாய் விழாம கொண்டு வரும் ஜாக்கிரதையுடன் வந்து என் தட்டில் விழச்செய்தாள்.  நைட்டியோடு திரும்பவும் குனிந்தாள்.  அவள் மாம்பழம் நறுக்கவா என்று கேட்டது போல இருந்தது என் பிரமையா என்று தோன்றியது.

சீனூஊஊ! எங்க இருக்க? மாம்பழம் நறுக்கவா, எங்க அம்மாவோட கத்தரிக்கா குழம்புக்கு நல்லாயிருக்கும் என்றாள்.  சரியென்றேன்.

தோல் சீவி, நறுக்கி பிளந்து கீற்றுகளாய் வைத்தாள். அவளும் ஒரு மனையை இழுத்துப் போட்டுக் கொண்டு அருகில் சாப்பிட உட்கார்ந்தாள்.  சுஜாதா இதற்கு முன் பரிமாறியிருக்கிறாள், விதவிதமாய்.  இப்போது சத்யா.

கத்தரிக்கா குழம்பு கொஞ்சம் கசப்பாய் இருந்தது, வெந்தயம் கூடிவிட்டது என்றாள் என்னை புரிந்து கொண்டது போல.

வடாம் எடுத்துக்கோ, என் மடங்கிய முழங்காலிட்டு உட்கார்ந்திருந்தவள் வடாம் எடுக்கும் போது என் மேலே பட்டாள். இப்போது வேண்டுமென்றேபட்டாள் என்று உறுதியானது.
சாப்பிட்டபடியே, அவளைப் பார்த்தேன்.  சாப்பிடச் சொன்னாள். மாம்பழம் எடுத்துக்கோ என்று தட்டோடு நீட்டினாள். சாப்பிட்டதும் சாப்பிடுவதாய் சொன்னேன்.

எதை? என்று சிரித்தாள். 

வாசலில் யாரோ வருவது போல சத்தம் கேட்டது. சுஜாதாவாய் இருக்கமாட்டாள் என்று ஏனோ தோன்றியது. அழுத்தமான உரசலான மற்றும் வெறுங்கால் நடை. இரண்டு பேர்! அவள் அம்மா போயி மாமனை கூட்டி வருகிறாளோ?

கதவைத்தட்டும் சத்தம், அரிசிமூட்டக் கொண்டு வந்திருக்கேன்! இந்த வீடு தான் பாத்துக்கோ, அவுக வந்ததும், உள்ள கொண்டு போய் வைய்யி! என்று யாரையோ ஏவியது பொன்ராஜின் குரல்.


8 comments:

Unknown said...

உங்களின் வழக்கமான எழுத்து இல்லை எனினும் இன்னுமொரு முறை வாசிக்கவேண்டும்.. ரொம்ப நாள் ஆச்சு உங்கள இங்க பார்த்து.

Balakumar Vijayaraman said...

சுப்ரமணியபுரம் நூலகம், ராஜாராம் கடை, நியூ ஸ்கூல் ஆஃப் காமர்ஸ், காம்பவுண்ட் வீடுகள் என்று நேரில் பார்த்த சித்திரங்களை கதையில் அழகாக கொண்டு வந்துள்ளீர்கள்.

'பரிவை' சே.குமார் said...

அண்ணா...
நீண்ட நாட்களுக்குப் பிறகு தங்களின் கதை வாசிக்கக் கிடைத்தது. முந்தைய கதைகளில் இருந்த தாக்கம் இதில் குறைவுதான் என்றாலும் எழுத்து இழுத்துச் செல்கிறது...

வாழ்த்துக்கள் அண்ணா.

Anonymous said...

நல்லா இருக்கு ராகவன் இந்த கதை :))))

இந்த பெண் சுஜாதாவின் தங்கை இவ்வளவு டாமினேட் பண்ணுவது எனக்கு பிடித்திருக்கிறது . சுஜாதாவின் செய்கையில் போல் இதில் அசூயை வரவில்லை .. ஒரு அதிகமான ஈர்ப்பு , பிடித்தம் இதெல்லாம் தான் தெரிகிறது . தி ஜா எழுதுவாரே நாயகியர் வந்து இவன் மேலே விழுந்து பூசிக்கொள்கிறதும் தலைவர் அப்படியே உத்தமர் என்பது போலவும் இல்லாமல் இவனுக்கும் பிடிக்கிறது ஆனால் பெண்கள் டாமினன்ட்டாக ஆகிவிடும் போது ஆண்களுக்கு ஏற்படும் ஒரு சின்னதான பயம் , தயக்கம் :)))) ..இதெல்லாம் ரொம்ப இயல்பாக வந்திருக்கிறது ..

இரட்டை அர்த்தம் தொனிக்கும் இடங்கள் எல்லாம் கூட :))) .. ஐய என்று சொல்லிக்கொண்டே யாரும் அறியாமல் சிரித்துக் கொள்ள தான் வைக்கிறது , ரொம்ப எக்ஸ்ப்ளிசிட்டாக இல்லாமல் அழகாக சொல்லியிருப்பது காரணம்..

ஏகப்பட்ட கேள்விகள் தோன்றியது படித்ததும் ..என்ன மாதிரியான கேரக்டர் இந்தப் பெண் ? how can she dare this much ? what drives her ? அப்பா இல்லாத வீடு என்பதால் வறுமையா ? அதே காரணத்தால் பிடித்தமான ஆணை தன் வசம் வைத்துக்கொண்டு விட வேண்டும் என்பதா ? இல்லை இயல்பாகவே அந்த வயது , அழகான பெண்களுக்கே உரிய திமிரா ? எதுவானாலும் இந்த காரெக்டரை ரொம்ப அட்டகாசமாக கொண்டு வந்திருக்கிறீர்கள் ..ஹீரோவும் தான் .. சின்ன சின்ன விஷயங்களில் காட்டியிருக்கும் கவனம் வழக்கம் போல் நச்.. (ஆனால் இவ்வளவு கொழுப்பாக பேசும் பெண்களை நான் பார்த்ததே இல்லை ! :) )

எல்லோரும் சொல்வது போல் உங்கள் வழக்கமான கதை இல்லை என்று சொல்ல முடியாது , எப்பவும் போல் ஆண் பெண் உறவு , அதில் சைக்கோ அனாலஸிஸ் எல்லாம் இதிலும் இருக்கிறது , அப்படியே வழக்கம் போல் இல்லை என்று தான் சொல்ல வேண்டும் என்றாலும் அதுவும் நல்லது தான் ..ஒரு கனமான கருவையே எப்பொழுதும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று என்ன கட்டாயம் ? ஒரு சின்ன சம்பவத்தை எடுத்துக் கொண்டு அழகாக அதை பிரசண்ட் செய்திருப்பதை வரவேற்கிறேன் ..

ஷஹி

rajasundararajan said...

//சுஜாதாவை பார்ப்பதற்காய் ராதாகிருஷ்ணன் கல்யாணமண்டபம் வரை போயிருந்தேன்// என்பதை நான், ‘ஒரு நல்லபிறவியைப் perceive பண்ணுவதற்காய்க் காதல் லீலையர்கள் உவப்பக்கூடுமிடம் வரை போயிருந்தேன்.’ என்றும்; //அரிசிமூட்டக் கொண்டு வந்திருக்கேன்! இந்த வீடு தான் பாத்துக்கோ, அவுக வந்ததும், உள்ள கொண்டு போய் வைய்யி!// என்பதை, ‘வயிற்றுப்பாட்டுக்குத் தீர்வோடு வந்திருக்கிறேன், இருந்தாலும் உங்கள் கசமுசாவுக்கு இடைஞ்சலா இருக்க மாட்டேன்.’ என்றும் வாசிப்பேன். எல்லார் எழுத்தையும் இப்படி வாசிக்க மாட்டேன். ராகவன் தன் எழுத்தில் ஓர் உள்ளுறை கட்டாயம் இருக்கும் என்று நம்மைப் பழக்கி வைத்திருப்பதால் இப்படி. அம்மாவுக்குத் தபால் ஆபீஸ் வேலை என்பது ராகவன் எழுத்தில் என்ன அர்த்தம் தரும் என்றறிந்து கொள்க!

“உறவு, பந்தம், பாசம்” என்றொரு கதை மௌனி எழுதியது இருக்கிறது. எனக்கு முதலில் வாசிக்கக் கிட்டிய அவரது கதை அதுதான். நாயகன் ஒரு வீட்டுக்குள் போவான். அந்த வீட்டுக்குள் ஓர் இருட்டு தேங்கியிருப்பது நமக்கு உணரக் கிட்டும். ராகவனின் இக் கதையின் இந்த வீட்டிலும் அது கிட்டுகிறது.

எனக்கு முன் இக் கதையை வாசித்தவர்கள் சொல்வது போல, அவ்வளவு ஈர்ப்பு இல்லைதான். நாடகவழக்கு (drama) உருவாகத் தோதான குணவார்ப்புகள் இல்லை. ‘இதுவும் பன்றி அதுவும் பன்றி; இரண்டும் சேர்ந்து மகுளிக்குள்ளார விழுந்தா, இப்ப என்ன மோசம்?’ என்று தோன்றுகிறது. “கரம்ஸோவ் சகோதரர்கள்” நாவலில், பன்றியென உணர்த்தும் திமித்ரியை அன்னமென உணர்த்தும் கேத்தரீனா சந்திக்க வரும் கட்டத்தில், திமித்ரி ஒற்றைக்கொம்புப் புரவியாய் மாறுதல் கொள்ள கேத்தரீனா மகுளிக்குள் தள்ளப்பட்டவளாய் மானபங்கப் படுவதை நினைக்கிறேன்!

தஸ்தொயேவ்ஸ்கி அல்லது வான்கோ அளவுக்குக் கொந்தளிப்புகளை உருவாக்க முடியாவிட்டாலும் பரவாயில்லை, சு.வேணுகோபாலின் பெண்பாத்திரங்கள் அளவுக்காவது முயலுங்கள் என்று கெஞ்சினால், இல்லையில்லை எங்களுக்குத் திருநெல்வேலி........... பாவம் அவர்கள், சீண்டி என்னாகப் போகிறது?

ராகவன் said...

அன்பு நண்பர்கள்,

வாசித்து கருத்தளித்த ராம், பாலகுமார் மற்றும் சே.குமாருக்கு என் அன்பும் நன்றிகளும்.

இது ஒரு லைட் ரீடிங்க் மாதிரி லைட் ரைட்டிங்க் ஆ தான் எழுத நினைத்தேன்... எழுத்து வருதா ஒரு ஒன்றரை மாதத்துக்கு பிறகு என்பதான ஒரு பரீட்சார்த்தம்.

ஒன்றரை மாதமாக... ஸ்லிப் டிஸ்க் பிராப்ளத்தினால், ஆஸ்பத்திரியில் இருந்து மீண்டு, எத்தனை பிஸியோதெரபி செஷன் களுக்கு பிறகும் இன்னும் வலிக்கிறது, மாறி மாறி இரண்டு பக்கங்களும்... இந்த வலி கொஞ்சம் நடையை மாற்றி விட்டது... மீள வேண்டும்.. நடக்கும் போது எப்போதும் போல ஒரு ஸ்திரமான எட்டுகளுக்கு பதில், கொஞ்சம் இலகுவாய் வீசி வீசி நடக்கப்பழகுகிறேன்... கொஞ்சம் ஆசுவாசம் வந்ததும்... திரும்பவும் பழையபடி நடந்து விடுவேன்...

நடை எப்படி இருந்தால் என்ன, பார்வையும், சிரிப்பும், கேட்பும் பழுதில்லை... சீராகும் நடை பார்க்கலாம்... காலம் தான் நிறைய கிடக்குதே... ஒரு பரந்த மைதானம் மாதிரி... நடை பழகலாம் இன்னும் கொஞ்ச நாள்...

அன்புடன்
ராகவன்

ராகவன் said...

அன்பு ஷஹி,

ரொம்பவும் நன்றிகளும், அன்பும்...

இது போன்ற வார்த்தைகள் ஊக்கம் அளிக்கிறது... (ராஜா அண்ணனுக்கு ... நான் மீளவே மாட்டேன் இது போன்ற எழுத்துமுறையில் இருந்து என்று தோன்றுகிறது)

உங்களுக்கு பிடித்த பிரதானமான விஷயங்களாய் தெரிகிற... விஷயங்கள் நிறைய பேர் கடந்து செல்லக்கூடிய விஷயங்களாய் இருக்கிறது...

இடம், பொருள், மனிதர்கள், தொழில் பற்றிய குறிப்புகள் ஏதாவதொன்றை உணர்த்தவே சேர்க்கப்பட்டன என்பது அதற்கான பின்னணி அறிந்திருந்தால் அது இன்னும் இலகுவாய் இருந்திருக்கும்... பொதுவாகவே மனக்கூறுகளில் ஈடுபாடு அதிகமுள்ள பணியில் இருப்பதால், எல்லாரையும் உற்று பார்க்க தோன்றுகிறது உளவியில் ரீதியாக...

அதன் வெளிப்பாடு, பெண்களைப் பற்றியே ஆனாலும் வெவ்வேறு முறையில், தளத்தில் இருந்தே சொல்ல முற்படுகிறேன்... எனக்கு ஓரளவு தெரிந்தவகையிலேயே அனுகுகிறேன்... கற்பிக்கப்பட்டவையை விட அகற்பிதம் செய்து கொண்டதே என் புரிதலை ஆழப்படுத்தியது...

அன்பும் நன்றிகளும்

ஷஹி...
ராகவன் said...

அன்பு அண்ணனுக்கு,

உள்ளுறை இல்லாமல் நான் எழுதுவது இல்லை என்ற உங்கள் நம்பிக்கைக்கு அன்பும் நன்றிகளும்...

தபால் துறை பற்றியும் தெளிவாய் புரிந்து கொண்டது நீங்க மட்டும் தான்... இதில் இருக்கும் அரசியல், ஜாதிக்கூறுகள் உங்களுக்கு மட்டுமே புரியும் என்று தோன்றுகிறது...

தஸ்தாயெவ்ஸ்கி அளவோ வான்கோ மாதிரியான தீற்றல்களின் அளவோ என்னிடம் வர நாட்களாகலாம்... அல்லது வராமல் போகலாம். ஆனால் ஒரு குறைந்த பட்ச அளவாவது அடுத்து எழுதப்போகும் படைப்புகளில் கொண்டு வர முயல்வேன்... அல்லது அதற்கடுத்தாவது...

அன்புடன்
ராகவன்