Sunday, October 25, 2009

கால(ன்) மயக்கம்

உயிர்ச்சன்னலின்
அருகில் ஒட்டிக்கொண்டிருக்கும்
மரணப்பல்லி
தனது இருப்பை
அவ்வப்போது சத்தமிட்டு
கட்டியம் சொல்லும்

இடைவெளி சந்தில்
வழியும்
வெளிச்ச ரேகைகள்
உடலெங்கும்  வலைபின்னி
உயிர்நிலையை
சிலந்தியில் நிறுத்தும்

பல்லி நெருங்க
தூரம்
நடுங்கி கொண்டே
சுருங்கும்
வாய் பிளந்த
பல்லி,
சிலந்தியை
விழுங்க எத்தனிக்கும்

அறுந்து
துடிப்படங்கும் வால்
பல்லி மீதம்
இருக்கும் சிலந்தியின் கடைவாயில்.

7 comments:

காமராஜ் said...

//பல்லி நெருங்க
தூரம்
நடுங்கி கொண்டே
சுருங்கும்
வாய் பிளந்த
பல்லி,
சிலந்தியை
விழுங்க எத்தனிக்கும்

அறுந்து
துடிப்படங்கும் வால்
பல்லி மீதம்
இருக்கும் சிலந்தியின் கடைவாயில்.//

நல்லா இருக்கு கவிதை ட்விஸ்ட்.

velji said...

கொலையாளி சிலந்தி மேல் கவனம் கொண்டு ,வலையாகவே உணர்ந்தது அருமை.
அப்புறம் காலனின் கயிறு மாறி விழுந்த்தோ..
நன்றாயிருக்கிறது. தொடருங்கள்.

பா.ராஜாராம் said...

ப்ரியங்கள் நிறைந்த என் ராகவன்,

நல்லா இருக்கீங்களா மக்கா?உங்கள் கவிதை,எழுத்து பார்த்து பிரமித்து போகிறேன்.போலவே,பின்னூட்டங்களில் தெறிக்கும் உங்கள் சிநேகம்!அலை,எண் கேட்டு இருந்தீர்கள் என் தளத்தில்.நான் சவுதியில் இருக்கேன்.உண்மையில் நானே உங்கள் குரல் தேடி அடைய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன்.அவ்வளவு ப்ரியம் தளும்புகிறது உங்கள் எழுத்துக்களில்.உங்கள் அலை எண்ணும் கிடைத்தால் குதியாட்டம் போடும் இந்த குழந்தை மனசை சமன் செய்ய உதவியாகவும் இருக்கும்.

இனி,உங்களின் கடைசி இரண்டு கவிதைகள் பற்றி பேசலாம்.

ஒரு க(வி)தை...

காமராஜ் போலவே நேற்று தொடங்கி,இக்கவிதையை சுற்றி சுற்றி வந்து கொண்டிருக்கிறேன்.இதன்,வெளிப்படை என்னை வேறு தளங்களுக்கு இட்டு செல்கிறது.நிறங்களின் படிமங்கள் கைக்கொள்ள இயலவில்லை.மேலும்,

// இரண்டாய் பிளக்கிறாள்
இரு வேறு நிறங்களில்
நீலம் எனக்கென்றாய்
வெளிர் மஞ்சள்
நீ எடுத்துக்கொண்டாய்!//

இப்பகுதில் குறிப்பிடும் "நீலம் எனக்கென்றாய்" உங்களை குறிப்பிடுகிறதா,குறிப்பிடுபவரை குறிக்கிறதா என்கிற குழப்ப மயக்கத்தில் கவிதையும் இரண்டாக பிளக்கிறது.அழகிய பிளவாக!

சொல்ல போனால்,இதுதான் உங்கள் பார்வை எனில்,..

உங்களுக்கு என் ராயல் சல்யுட்!

கால(ன்) மயக்கம்...

மிக அருமையான காட்சியாக்கமும்,கவிதைக்கான கடைசி திருப்பமும் ராகவன்.அற்புதமாய் வந்திருக்கு.கவிதை தரும் வாசிப்பு சுகம் அலாதியானது.இது,எனக்கு இந்த ரெண்டு கவிதையிலும் வாய்த்தது,ராகவன்.

என் அலை எண்:00966502089705.


e-mail:rajaram.b.krishnan

அன்புக்கு மிக அன்பு ராகவன்.உங்களை தொடர்பு படுத்திக்கொள்ளவும் எனக்கு வழி ஏற்படுத்தி தாருங்கள்
. .

ராகவன் said...

அன்பு காமராஜ்,

நெருக்கமாய் உடன் நடப்பது போன்றே உணர்வேன் உங்கள் பின்னூட்டத்தை/பதிவை படிக்கும் போது. உங்கள் வாழ்த்துக்கு நன்றி நன்பரே!

நான் கொஞ்சம் அதிகமாய் எழுதுகிறேனோ என்று தோன்றுகிறது பின்னூட்டங்களில், ரத்தினசுருக்கம் வாய்க்கவே மறுக்கிறது. எதையுமே நீட்டி முழக்கி, சில சமயம் சம்பந்தமே இல்லாமல் எழுதுவதையும் நீங்கள் பாராட்டுவது கூச்சமாய் இருக்கிறது. அருவியாய் வீழும் அன்பில் நனையக்கூட திரானியற்று தள்ளி நின்று வேடிக்கை மட்டுமே பார்க்கிறேன், கிடுகிடு என்று பல் நடுக்கத்துடன்.

மனம் கூப்பி நன்றிகள்!

அன்புடன்,
ராகவன்

ராகவன் said...

அன்பு வேல்ஜி,

உங்கள் உற்சாக தோள் தட்டலுக்கு நன்றிகள் பல! உங்களைப் போல எழுதுபவர்களை பார்த்து வியப்பில் இருக்கிறேன், மீளாது. தொடர்ந்து நீங்கள் வரவும், வாசிக்கவும், வசிக்கவும் ஏதுவாய் இருந்தால் இன்னும் நிழல் பரப்பி காத்திருக்கிறேன்.

அன்புடன்,
ராகவன்

ராகவன் said...

அன்பு பாரா,

எழுத்துவழி, குரல் வழி உங்கள் முகம் பார்க்கிறேன் பாரா! எப்படி வாய்க்கிறது உங்களைப் போன்ற உணர்வும், புத்தியும் கூடிய ஒரு குவி ஈர்ப்பு. நிஜமாகவே உங்களின் பின்னூட்டம் தான் எனக்கு இதுவரை வந்ததிலேயே பெரிய பின்னூட்டம் என்று நினைக்கிறேன். உங்கள் பாராட்டிற்கும், அன்பிற்கும் ஆயிரம் நன்றிகள் பாரா!

எவ்வளவு தாமதமாய் வந்திருக்கிறேன், இந்த பதிவுலகத்திற்குள்.
ஆனால தாமதத்திற்கான வருத்தம் கொஞ்சமும் இல்லை, உங்களை எல்லாம் பார்த்த பிறகு.

என் அப்பா ரொம்ப பிரியமானவர் பாரா, ரொம்ப நல்லவர், ரொம்ப வெள்ளந்தி மனுஷன் அதெல்லாத்திலயும் கொஞ்சம் இருக்கிறது எனக்கு என்று நினைக்கிறேன், இந்த அன்பே எனக்கு இத்தனை நண்பர்களை கொடுக்கும்போது அவர் போல இருந்தால் உலகத்தையே கட்டி நேசிக்கலாம் பாரா!

அன்புடன்
ராகவன்

மாதவராஜ் said...

பசித்த சிலந்தியின் வலையில் அழகிய வண்ணத்துப் பூச்சி, நீங்கள் யார் பக்கம் என ஒருவர் (மறந்து விட்டது) எழுதிய கவிதை இப்போது ஞாபகத்துக்கு வருகிறது. இங்குமே பசிதானே நண்பா நெருங்கவும், விழுங்கவும், துடிப்படங்கவும் வைக்கிறது.
//தூரம்
நடுங்கி கொண்டே
சுருங்கும்//
இந்த இடம் பிரமாதமாக வந்திருக்கிறது எனத் தோன்றுகிறது. காட்சிப்படுத்தலையும் தாண்டி ஒரு கவிமனதின் உணர்வுகள் இயல்பாக வெளிப்பட்டு இருக்கிறது. பாராட்டுக்கள் நண்பரே!