Tuesday, October 06, 2009

காமராஜுக்கு சில கடிதங்கள் (பின்னூட்டங்கள்)

மண்மாதிரிகள் என்ற பதிவிற்கு என்னுடைய பின்னூட்டம்


அன்பு காமராஜ்,

மனிதர்களுக்கு ஐம்பூதங்களையும் அடக்கி ஆள ஆசை. வான், நீர், நெருப்பு, காற்று, மண் என்று தனது ராஜ்ஜியங்களை விரிவு படுத்த பிரயாசைப்படும் ஒரு விபரீத கோட்பாடு எல்லாரிடத்திலும், நான் உட்பட இருக்கிறது. ஆள ஆசைப்படும் எதைப்பற்றியும் அறிவு இல்லை நமக்கு.

எத்தனை அறைகூவல்கள் கிரீன் எர்த், மதர் எர்த்,க்ளோபல் வார்மிங், ஓசோன், மாசில்லா காற்று, மாசற்ற நீர், வருங்காலத்திற்கு மிச்சம் இருக்கட்டும் நீ அனுபவித்தது, அனுபவிப்பது என்று சமண்பாடில்லாத இரைச்சல்கள்.

மலைகளின் முலைகளில் வடிகிறது விஷப்பேரருவி, வருங்காலம் நுழைய மறுக்கும் பூமியின் யோனி பெருங்கதவுகள், மரங்களின் நுரையீரல்கள் திரட்டும் கரியமிலப் பைகள், விந்தின்றி தொங்குகிறது மேகத்தின் விரைப்பைகள், வன்புணர்ச்சியில் லயிக்கிறது ஒரு எழும்பாத, நித்ய மரண இசை எல்லோர் எழவிலும். உன், என் உடல் கருகுகிறது நெருப்பில்லாமல், புகைதானே என்ற அலட்சியம் எல்லோரிடத்திலும்.

மண் மாத்திரம் இல்லை காமராஜ், எல்லா பூதங்களையும் சீசாவில் அடைக்கும் செப்படி வித்தைக்காரர்களாய் உலவ ஆசைப்படுகிறோம்.
உனக்கு ரேடியோ ஒக்குடத் தெரியுமா? தெரியும், ரேடியோ புதுசா செய்யத்தெரியுமா? தெரியாது, இதன் நீட்சிதான் நாம் எல்லாவற்றையும் பிரித்துப் போட்டுவிட்டு என்ன செய்வது என்று தெரியாமல் கை பிசைந்து நிற்பது எல்லாம்.

அறியாமையின் குழந்தைகள் தான் நாம் இன்னும், மாற்றங்கள் பற்றி பேசுவோரின் மார்தட்டல்கள் தொப்பு, தொப்பென்று வெறும் காற்றுக் குடுவையில் அறைகிறது, போர் பிரகடனங்கள் என வேஷம் கட்டிக்கொண்டு.

 அழகு வேலைப்பாடுள்ள கல்லறைகளுக்குள்ளே தானே நீங்களும், நானும். கல்லறைக்குள் இருந்து கொண்டே கல்லறையை பார்க்கிறோம் நாம். நரகலில் வாழும் நமக்கு பீ வாசம் தனியாக தெரிகிறதா என்ன? அகண்ட காவிரி அகத்திய கமண்டலத்தில் நிறுத்தியதைப்போல ஒரு மூட்டை மண்ணில் நமது தேசம், தூக்கிக் கொண்டு அலைகிறார் பிரகதீசுவரன், தோள் கொடுக்க ஆட்கள் உண்டு நம்மிடையே.

என்னை எங்கெங்கோ கொண்டு சென்று விட்டது உங்களின் இந்த பதிவு. கொஞ்சம் அதிகமாக எழுதிவிட்டதற்கு வருந்துகிறேன், உள்ள இருக்கிறது வெளியே.

அன்புடன்

ராகவன்.

ரசனை வித்தியாசமானது, அறிவு விசாலமானது என்ற பதிவின் பின்னூட்டம்

அன்பு காமராஜ்,

அகமிளிரும் அழகு மிகுந்த ரசனைக்குண்டானது. எனக்கு சுசீலா என்றொரு தோழி இருந்தாள். சிவந்த நீள் முகத்தில் பருக்கள் அடர்ந்து, முன் துருத்திய பற்களும், சமணில்லா உடம்புடனும், யாருக்கும் ஈர்ப்பில்லாமலே அழகாய் இருந்தாள், கொஞ்சம் மெனக்கெட்டால், அவளை சில பென்சில் திருத்தங்களுடன் புறத்தோற்றத்தில் மாற்றங்களுடன் ஓரளவு அழகாய் காட்ட முடியும், ஆனால் அவள் அதுபோன்ற எந்தவித பிரயத்தனங்களும் நான் பழகிய நாட்கள் வரை செய்ததில்லை.

என் தங்கை (உடன் பிறவா) ஐஏஎஸ் கோச்சிங் படிப்பதற்காக, மதுரை காமராஜ் யூனிவர்சிட்டி வளாகத்தில் தங்கி பயிற்சி வகுப்புகளில் ஈடுபட்டு இருந்த போது, அவளின் அறைத்தோழியாக சுசீலா எனக்கு அறிமுகமானாள், என் தங்கை அவளை அறிமுகம் செய்யும்போதே, உன் போன்ற ரசனைகள் உள்ள பெண் என்ற போது எனக்கு அவளுடன் பேசுவதற்கான ஈடுபாடு எந்தவித முஸ்தீபுகளும் இல்லாமல் ஏற்பட்டது. பேச, பேச கடல் போல விரிந்த அவளுடைய நாலேட்ஜ் பேஸ் என்னை வியக்க வைத்தது. ராம கிருஷ்னர், விவேகானந்தர், பிங்பாங்க் தியரி, குவாண்டம் தியரி, ராமானுஜர், ஜேகே என்ற என்னுடைய எல்லா வாசல்களையும் திறந்துவிட்டாள் அவள்.

எனக்கு அதிகபட்சமாக 68 பக்கங்களில் கடிதம் எழுதியிருக்கிறாள், வரிக்கு வரி சீனு, சீனு என்று. ஒரு முறை என்னை பார்க்க வீட்டிற்கு வந்தாள், வழக்கத்திற்கு விரோதமாய் ஒரு சரசரக்கும் பனாரஸ், ஆரஞ்சு கலர் புடவையில் தகதகவென்று ஒரு பெரிய சுடர் போல, சுடருக்கு முகமுண்டா,இல்லை அவளின் புறத்தோற்றத்தை பொசுக்கிய ஒரு பெரிய ஜுவாலாமுகியாய் அகப்பிரகாசத்துடன், சீனு என்று உள் நுழைந்தாள். என் அம்மாவுக்கு அவளின் புறத்தோற்றம் ஒரு முகசுழிப்பைத் தந்தது, என்னடா இப்படி இருக்கா, என்று கேட்டாள். அம்மாவை அடக்கி உள் அனுப்பினேன், அவள் என்னுடன் பேசாமலே, விஷயப் பகிர்வு இல்லாமல் இருந்திருந்தால் எனக்கும் அவளுடைய புறத்தோற்றம் கவலை கொள்ளச் செய்திருக்கும். என்னுடன் வெளியே போக வேண்டும் என்றாள், நான் அவளை அழைத்துக் கொண்டு கூடலழகர் பெருமாள் கோயிலுக்கு சென்றேன், இரண்டு பேரின் பெயருக்கும் அர்ச்சனை செய்தாள், மணிக்கணக்காய் பேசினாள், நான் பேசாமல் கேட்டுக்கொண்டிருந்தேன், என்னை நோக்கி நீயும் பெருமாள் மாதிரி என்ன சொன்னாலும் இடைமறிக்காமல் கேட்டுக்கொண்டே இருப்பாய், அதனால் தான் எனக்கு கடவுள் என்கிற கேட்பாளரை ரொம்ப பிடிக்கும், he is a good listener, like you. என்ற அவளின் சின்ன சின்ன சித்தாந்தங்கள் என்னை வியப்பில் ஆழ்த்தும்.

உடன் நடக்க ஆசைப்பட்டு இங்கே இருந்து பழங்கா நத்தத்திற்கு நடக்கலாமா, உன் கைய பிடிச்சுக்கவா? என்று என்னை கேட்கும்போதே கையை பிடித்துக் கொண்டாள். அங்கே இருந்து திரும்பவும் பேசிக்கொண்டே நடந்தாள் என்னை வழி நடத்தி. சீனு கொஞ்சம் பூ வாங்கித் தரயா? எனக்கு கனகாம்பரம் ரொம்ப பிடிக்கும், தோற்றப்பொலிவோ, வாசனையோ இல்லாமல் எளிமையாய் பூ என்கின்ற அடையாளத்துடன் மட்டும் என்று ஞாபக அடுக்குகளில் மலர்களை செருகிக் கொண்டே நடந்தாள். அவள் காதலிக்கும் எதிர்வீட்டு மரக்கடைக்காரன் மகனைப்பற்றி முதல் முறையாக பேச ஆரம்பித்தாள், தன் ஒரு பக்கக் காதலை இன்னும் அவனிடம் சொல்லவில்லை என்றும், அவன் பார்க்க கருப்பா அழகா இருப்பவன் என்றும் கூறினாள், அவன் பார்க்காத போது இவள் அவனைப்பார்க்கும் தருனங்களை அவள் விவரித்தது எந்தவித வரையறைக்குள்ளும் அடங்காமல், காற்றில் பறக்கும் முன் நெற்றி மயிராய் வாளிப்பாய் இருந்தது.

நீண்ட நாட்களுக்குப் பிறகு அவளிடம் இருந்து கடிதம் வந்தது. அவளுடைய கணவன் மெடிக்கல் ரெப் வேலை செய்வதாகவும், அபினயா என்று ஒரு பெண் குழந்தை இருப்பதாகவும், அது அவரைப்போலவே அழகாய் இருக்கிறது என்றும் கூறினாள். அவளின் மிகப்பெரிய அழகு அவள் மற்றவரை நேசிக்கும் விதம், எந்தவித நிஷ்களங்கமும் இல்லாமல் தெளிந்த நீரோடையாய் நகர்கிறது அவளின் காதற் பெருவாழ்வு.

you kindled me...

அன்புடன்

ராகவன்


புதுவிசை வாசகர் சந்திப்பும் பதிவுகளும், ஒரு பின்னூட்டம்

அன்பு காமராஜ்,

உங்களின் கோபம் அழகாய் இருக்கிறது. இது போன்ற அனுபவங்கள் எனக்கு இல்லை. எழுத்தில் இவ்வளவு தீவிரமாக இயங்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள்.

உங்கள் கோபத்திற்கான காரணங்கள்...
புதுவிசையின் இலக்கிய முகம் பற்றிய கேள்விகள்,
உங்களின் குறுக்கீட்டை கண்டு கொள்ளாமல் போனது
உங்கள் பதிவைப் பற்றிய சிலாகிப்பு இல்லாதது
பிரபலமானவர்களின் ஒளியில் மற்ற படைப்பாளிகள் மங்கிப் போவது
பேச்சு சுகம், கேட்பாளர்கள் இல்லாதது

மேற்கூறிய எல்லாமே உங்கள் கோபத்திற்கு காரணமா அல்லது வேறு ஏதாவது காரணம் இருக்கிறதா?

எனக்குப் புரிய வேண்டும் என்ற அவசியம் இல்லை, ஆனால் ஒன்று நிச்சயம், உங்கள் கோபம் அழகாய் இருக்கிறது.

அன்புடன்,

ராகவன்

கமல் ஒரு காமன் மேன் இல்லை பதிவின் பின்னூட்டம்.

அன்பு காமராஜ்,
உன்னைப் போல் ஒருவனை எல்லோரும் பேசுகிறார்கள் பதிவுலகில், அவரவர் வசதிக்கேற்ப தங்கள் மறுதலிப்புகளை, ஒவ்வாமையை தங்களால் இயன்றவரை பதிவிட நினைக்கிறார்கள். நீங்களும் உங்கள் பங்குக்கு, உங்கள் கருத்தை முன் வைக்கிறீர்கள். கமலின் தவிர்க்கமுடியாத ஒரு குணக்கேடுகளில் ஒன்று தன்னை முன்னிறுத்திக் கொள்ளமுயல்வது, என் அடையாளங்கள் தெரியாவிட்டால் என்னை படைப்பாளி என்று யார் சொல்வார்கள் என்கிற தன்முனைப்பு. ஒரு சிறந்த நடிகன், தன்னை பல்கலை வித்தகனாய், எல்லாவற்றிலும் தன் முத்திரைகளை இட்டு நிரப்பும் ஒரு இடைநிரவியாய் காண முற்படும்போது நிகழும் அவஸ்தைகளில் ஒன்று, ஒரு தேர்ந்த நடிகன் தொலந்து போவது. காமன் மேன் இல்லாமல் போனது கமலின் ஸ்டார் அந்தஸ்து காரணம் என்று நினைக்கிறேன், எந்த படத்தில் நீங்கள் கமலைப் பார்க்காமல், கதாபாத்திரத்தை பார்த்தீர்கள் சமீபமாய். நாம் கமலுக்கு கொடுத்திருக்கும் ஒரு தண்டனை இது, ஒரு நசுரூதின் ஷா, ஓம்புரி போல பொது ஜனமாய் வருவது கமலால் முடியாது, நாமும் ஏற்றுக்கொள்வோமா என்பது தெரியாது.

துரோக்கால், குருதிப்புனல் ஆனபோது ஒரிஜினல விட நல்லா இருந்தது என்று கோவிந்த் நிஹ்லானியே சொன்னார் என்று கமல் ஏதோ பேட்டியில் சொன்னார், ஆனால் துரோக்காலில் ஓம்புரியின் நடிப்பு ஒப்பிடமுடியாததாய் இருக்கும்.

தமிழில் உள்ள இரண்டு பெரிய ஸ்டார்களில் ஒருவர் இது போன்ற பரீட்சார்த்த முயற்சிகளில் ஈடுபடும்போது, கமலால் தன் கவசகுண்டலங்களை கழட்டி வைக்க முடியாமல் போய் விடுகிறது. கதை புதிது, களம் புதிது, இசை, தொழில் நுட்பம் எல்லாம் புதிது, மொந்தை பழைய கள்ளாய் கமல் என்ன செய்வது எல்லாக் கோனங்களிலும் கமல் தெரிகிறார். நதாசா புகைபிடிப்பது போல காட்டுவதால் என்ன கெட்டு விட்டது, நீங்கள் புகைபிடிக்கும் பெண்களைப் பார்த்தது இல்லையா, இது எனக்கு தெரிந்து ஒரு கலாச்சார அதிர்ச்சிக்காக சேர்த்த மாதிரி தெரியவில்லை, அது ஒரு கதாபாத்திரம் அது மாத்திரமே, எதையும் எதாவது என்று நினைத்து எப்போதும் ஏமாந்து கொண்டு இருக்கிறோம் எல்லோருமே.

காமராஜ் எனக்கு இந்த படத்தை நீங்கள் முழுமையாக அனுகவில்லை என்றே தோன்றுகிறது ஒரு அரைகுறையான முயற்சி என்று படுகிறது.

என் கருத்து என் கருத்து மாத்திரமே, நான் யாரையும் பிரதிநிதித்துவப்படுத்த இதை எழுதவில்லை.

அன்புடன்

ராகவன்

சம்பாரி மேளத்தின் உச்சமும், சில இழப்புகளின் மிச்சமும் – ஒரு பின்னூட்டம்

அன்புள்ள காமராஜ்,

நலமா, நீங்கள் தந்தித்தெரு ராகவனா என்ற உங்கள் கேள்விக்குப் பிறகு உங்களை காணோம், உங்களின் பதிவுகளிலும். மீண்டும் உங்களைப் பார்த்ததில் சந்தோஷம். மீண்டு வந்ததற்கு வந்தனங்கள் பல. உங்களின் இதற்கு முந்திய இரு பதிவுகளில் எனக்கு ஏனோ நீங்கள் இல்லாதது போல இருந்தது. சம்பாரி மேளத்தின் சத்தத்தை மீறி உங்கள் குரல் கேட்கிறது.

”பகலின் ஒப்பனைகள் கலைந்துபோய் நிஜ முகங்களோடு பயணப்படுகிற இரவு” ரொம்ப நிஜமான வார்த்தைகள்.

திருப்பத்தூரில் இருந்து காரைக்குடி வருவதற்குள் சில இடங்களில் கதை நொண்டி அடிப்பதாகத் தோன்றுகிறது.

”ஓவியர்களின் .... கேட்கலாம்” இந்த வரிகள் எனக்கு ஏதோ தொடர்பில்லாமல் ஒரு கன்னி (Link) தொலைந்தது போல் தோன்றுகிறது.

”பிரியமானவர்களின் பரிகசிப்பும் கேலியும்கூட மனிதர்களின் சந்தோசங்களை ஆழ வேர்விடச் செய்கிறது". நெகிழ்வான, செரிவான வார்த்தைகள், பிரியமுள்ளவர்கள் எது செய்தாலும் அழகாய் இருக்கிறது, வசைமொழிந்தாலும் வாழ்த்துகள் தான்.

உங்கள் எழுத்து நடை உங்களின் மிகப்பெரிய பலம் காமராஜ், அதுவும் அதன் ஒய்யாரம், அழகர் கோயில் மலைக்கோயிலில் இருந்து விறகு சுமந்து இறங்கும் பெண்ணின் ஒரே தாளகதி நடை.

வாழ்த்துக்கள்... நம்ம பக்கமும் வந்து ஏதாவது சொல்லிட்டு போறது!!

அன்புடன்ராகவன்

5 comments:

ஈரோடு கதிர் said...

பின்னூட்டம் இல்லீங்க...
பின் இடுகைனு சொல்லுங்க

இஃகிஃகி

நன்றாக எழுதியிருக்கிறீர்கள்

ராகவன் said...

அன்பு கதிர்,

நன்றி தங்கள் வாழ்த்துக்கு. இஃகிஃகி என்றால் என்ன அர்த்தம் என்று எனக்கு விளங்கவில்லை, தெளிவு படுத்தவும். பின்னூட்டம், பின் இடுகை எனக்கு பெரிதாக வித்யாசம் தெரியவில்லை!

அன்புடன்
ராகவன்

மாதவராஜ் said...

காமராஜின் வலைப்பக்கத்தில் உங்கள் பின்னூட்டங்களைப் பார்த்து ரசிப்பேன். முக்கியமானவற்றை தொகுத்து இருக்கிறீர்கள். அருமையாக இருக்கிறது. உங்கள் எழுத்துக்கள் இயல்பானவை.உண்மையானவை. அத்னால் வலிமையும், அழகும் நிறைந்தவை. வாழ்த்துக்கள்.

KAMARAJ said...

அன்பினிய ராகவன்....
இது எனக்குப்பெரிய்ய விருது, பெரிய சங்கோஜம்.
எல்லாமே என்னைப்பற்றி என்பதால்,
அதற்குள் நிறய்ய வீணடிக்கவேண்டாம்.

0

காரைக்குடியிலிருந்து திருப்பத்தூர் செல்லும் வரையில் கதை நொண்டியடிக்கவில்லை.
செய்தி அப்படி. ஏனென்றால் இந்த செயற்குழுக்கூட்டங்கள். இது சுமார் 20 ஆண்டுகள்
புழங்கிய எனக்கே இன்னும் விளங்கா விவாதமாக இருக்கிறது.
அதை முழுமையாகப்பொது வாசகர்களிடம் சேர்க்க முடியாமல் போனதுதான் நொண்டி.
எனக்கு அது ஒரு சவாலாகவும், ஒரு எதிர்கால வேலை ஒப்பந்தமாகவும் முன்நிற்கிறது.

0

அப்புறம் உன்னைப்போல் ஒருவன்,
நேற்றுத்தான் " A WEDNES DAY " பார்த்தேன்.
உண்மையில் அந்தப்படத்தில் எந்த பில்டப்பும் இல்லை. காரணம் ஒரு சாமன்யனாக நிலை நிறுத்த அவர்கள்
எடுத்துக்கொண்ட காட்சிகள், வசனங்கள் அலாதியானவை. இங்கே' உலக நாயகனே 'என்னும் துதிப்பாடல்
மட்டும் இல்லை மற்றபடி எல்லாமெ பட்டை தீட்டப்பட்ட பில்டப்புகள். ஆரம்பக் காட்சிகள் என்னமோ
கமல் தும்பா ஏவுதளத்தில் இருந்து ராக்கெட் ஏவப்போகிற மாதிரி பின்னணி இசையும் துண்டுக் காட்சிகளும்.
அண்ணா நகர் சப் இன்ஸ்பெக்டர் வந்து அவனை எனக்குத்தெரியும் என்று சொல்லுகிற போது எ வெட்னெஸ்டே யில் 'ஒரு அம்பது அம்பத்தைந்து வயது மதிக்கத்தக்கவர்' என்று சொல்லுவார். இங்கே அது ரொம்ப தெளிவா கழட்டிவிடப் பட்டிருக்கிறது. நஸ்ருதீன், அனுபம்கேர் ரெண்டு பேருமே பாத்திரம் அறிந்த பாத்திரம். ஒரு போலீஸ் உயர் அதிகாரிக்கு உண்டான மேக்கப்.

அதில் வருகிற செய்தியாளர் சிகரெட் குடிக்கவில்லை. இது எனக்கிருக்கும் மிக அழுத்தமான கருத்து முரண்பாடு. ஒரு பாத்திரத்தை சிதைக்க வைக்கும் காட்சிகள் அவை. அதைப் பிறகு விரிவாகப் பேசலாம். உங்களை ஓரளவு என்னால் ஊகிக்க முடிகிறது. பெண்ணியம், பெண்விடுதலைகளில் நமது ரெண்டுபேருக்குமே ஒரே கருத்தே இருக்கும்.

இறுதியில் வரும் வாய்ஸ் ஓவரில் " அவன் என்னிடம் தனது பெயர் சொன்னான் நான் இங்கே அதைச் சொல்லவிரும்பவில்லை" என்று வரும். ஆனால் கமல் பாத்திரத்தில் காட்சிகள் அவரைத் தெளிவாக அடையாளப்படுத்தும்.

ராகவன் சொன்ன சுசீலா கதையில் இருக்கிற ஈர்ப்பு ஒரு சத்வீதம் கூட உபோஒ வில் இல்லை.
காரணம் அது படைப்பு. இது இமிடேட்.
ஒரு ரீமேக்குக்கு இவ்வளவு குதியும், துதியும் தேவையில்லை. அவ்ளோதான்.

ராகவன் said...

அன்பு மாதவராஜ், காமராஜ்,
நான் பதிவுலகில் வந்து கொஞ்ச நாட்களிலேயே, உங்கள் இருவரின் மேல் (காமராஜும்)ஒரு விதமான காதலே வந்துவிட்டது. நீங்கள் தொடும் இடங்கள் எனக்கு வியப்பாய் இருக்கும். எனக்கும் உங்கள் இருவருக்குமான ரசனைத் தெரிவுகளில் பெரிதாக வித்யாசம் இருக்க வாய்ப்பில்லை. ஆனாலும் என்னுடைய அனுபவங்கள் ஒரு சின்ன உலகத்துக்குள்ளே முடங்கி விடுவது போல்படும். அதற்குள்ளாகவே ஒரு repetition இருப்பதாக படுகிறது. உங்கள் இருவரின் எழுத்தும் எனக்கு புதிய கதவுகளையும், ஜன்னல்களில் வானத்தையும் திறந்துவிட்டது.
மாதவராஜுக்கும், காமராஜுக்கும் ஒரே கடிதத்தில் பேச முடிவது தான் இதன் பலம். ஒரேவிதமான சிந்தனை, அலைவரிசை உள்ளவர்கள் எல்லோருக்குமே ஒரு கடிதம் எழுதி பங்கிட்டு கொள்ளமுடியும் என்று நினைக்கிறேன். என் நட்பு வட்டம் ஆரம் பெரிதாகிறது.
ஆயிரம் நன்றிகள் உங்கள் இருவருக்கும்.

அன்புடன்,
ராகவன்