நான் எழுதிய திணைமயக்கத்திற்கான பதிலாய் அல்லது ஒரு பதிலியாய் வந்தது எனலாம், இந்த மறுசீரமைப்பு கதை. எழுதியவர் யாரோ ஒரு அனானி, நான் பின்னூட்டம் எழுதுவது போல மிகப்பெரிதாக, நான் கதை என்று எழுதியதற்கு இப்படி ஒரு கதை எழுதியது என்னை வியப்பில் ஆழ்த்தியது, இது நான் எழுதியதை விட இன்னும் அழகாக, கமலாவையும், ஸ்ரீனிவாசராகவனையும் மேலும் ஒரு படி உயர்த்தி இருக்கிறது என்று தோன்றுகிறது, எந்தவித ஜோடனைகளும் இல்லாமல், நேரடியாக கதை சொல்லும் முறை எனக்கு இன்று வரை வாய்க்கவில்லை... எழுதியவர் பெயரை குறிப்பிடாததால், நான் யார் இதை எழுதியது என்று சொல்ல முடியவில்லை. ஒரு அனானியை எப்படி அறிமுகப்படுத்துவது என்று தெரியவில்லை... அவரின் இந்த கதையை நான் என் பதிவில் போடுவது அவர்களுக்கும் உடன்பாடே என்று நம்புகிறேன்.
- ராகவன்
நான் முதல் முறை கமலாவை பார்த்தபொழுது எனக்கு அவளை பிடிக்கவில்லை. சுரேஷ் வீட்டில் அவனோடு பேசிகொண்டிருந்தாள். "அவர் அசோகமித்திரன் இல்லை சோகமித்திரன் " என்று அவன் அடித்த ஜோக்கிற்கு கண்ணில் நீர் வர அவள் சிரித்தது கொஞ்சம் அபத்தமாக இருந்தது. பின்னர் சுஜாதா, கணையாழி பற்றி பேசுகையில், கொஞ்சம் புத்தகம் படிப்பவள் என்று புரிந்தது கூட என் அபிப்ராயத்தை அவ்வளவாக மாற்றவில்லை.
அவள் சென்றபின், இதோ பாருடா கல்கில கமலா எழுதின கதை என்று சுரேஷ் புத்தகத்தை நீட்டவும், ஒரு விதமாக என்ன எழுதி கிழித்திருக்கபோகிறாள் என்று தான் படித்தேன். . ராமேஸ்வரத்தை சொந்த ஊராய் கொண்டவன்... அமெரிக்காவில் பல வருடம் படித்து முடித்து வேலை பார்த்து விட்டு வந்தவன் ராமேஸ்வரம் மாறி விட்டதை பார்த்து மனம் கனத்து அமெரிக்க திரும்புவதாய் இருக்கும்... அந்த முடிவு பற்றி இன்டர்நெட் இல்லாத அந்த காலத்தில் வரிந்து கட்டி என்னால் பின்னூட்டம் எழுத முடியாதபோதும், ஒரு முழு தாள் நிறைய தோன்றியதையெல்லாம் எழுதத்தான் செய்தேன்.
அவள் வீட்டு மாடிப்படியில் உட்கார்ந்து கொண்டு அவள் வருவதற்காக காத்திருக்கும் போதெல்லாம் எப்பொழுது முதல் முறையாக கமலாவை பிடித்தது என்று யோசித்திருக்கிறேன் . தியாகராஜரையே பாடும் எங்கள் காலனியின் ராமர் கோவில் ஊஞ்சலில் அவள் புரந்தரதாசரின் ஒரு கிருதியை பாடிவிட்டு, என்னை பார்த்தவுடன் சிரித்தவாறே "தணல் மேல் நெய் மாதிரியான உருக்கம் இல்ல ?" என்று இயல்பாக மெழுகை உவமையாய் சொல்லாமல் நெருப்பாக பற்றி கொள்ளும் மணமான நெய்யை சொல்லி கேட்டபொழுதோ? இல்லை, சுரேஷ் வீட்டில் அடுத்த முறை சந்தித்தபோது இந்த தென்னங்கீத்துக்கு ஊடால தெரியற வானம் எவ்வளவு அழகு என்று அவள் சொன்னவுடன், சுரேஷ் முழு நிலா என்று என்னவோ சொல்ல வந்தபோது, முழு நிலா திகட்டும், எனக்கு தென்னங்கீத்தினூடே தெரியற பிறை நிலாதான் வேணும் என்று நான் சொன்னதும் ஒரு விதமான பிரமிப்பு கலந்த ரசனையோடு என்னை பார்த்தபொழுதோ தெரியவில்லை.
காலை மாலை என்று எப்போதெல்லாமோ தோன்றுகிறதோ அப்போதெல்லாம் அவள் வீட்டிற்க்கு போவேன். ஸ்ரீனிவாச ராகவன் என்று நீட்டி முழக்கி தான் என்னை கூப்பிடுவாள் . எவ்வளவு அழகான உன் பெயரை சுருக்குவது பெரிய குற்றம் என்பாள்.
கமலாவின் பல பரிமாணங்கள் எனக்கு கொஞ்சம் கொஞ்சமாக தெரிய வந்தது.
பக்கத்துக்கு வீட்டில் சொர்ணக்கா என்று அவள் அழைக்கும் காதில் பாம்படம் போட்டிருக்கும் ஒரு அறுவது வயதான பெண்மணியிடம் பார்ப்பன பாஷையே தென்படாமல் சுவாரஸ்யமாக பேசிகொன்டிருப்பாள்.
காலையில் ஒரு நாள் சைக்கிளில் நான் அந்த தெருவில் போகும்பொழுது, தரையில் விழுந்திருந்த பூக்களை அவள் பொறுக்கி கொண்டிருப்பதை பார்த்து நிறுத்தி "என்ன பண்ற" என்றேன் ஆச்சரியத்துடன்.
"கிள்ளி பறிக்கவேண்டாம், அழுத்தமா நார் போட்டு கட்ட வேண்டாம், ஊசில குத்த வேண்டாம் பவளமல்லி மட்டும் தான் நான் மாலை கட்டறதுக்கு எடுப்பேன்" என்ற போது நிச்சயம் அவள் என் தோழி தான் என்று தோன்றியது.
"மதுரைல இன்னிக்கு நான் புதுசா ஒரு கோவில் பத்தி கண்டு பிடிச்சேன், அதாவது அந்த கோவில் கண்ணகி மாதிரி ஒரு பெண் தெய்வம் சம்பந்தப்பட்ட கோவில், அந்த பெண் எப்படி தெய்வமானாள் அப்படிங்கறத அக்கு வேறா ஆணி வேறா அலசி அதுல ஒரு தீசிஸ் எழுதபோறேன் " என்றாள் ஒருநாள் .
"உன்னை பத்தி ஸ்ரீனிவாச ராகவனும் சில பெண்களும்னு கதை எழுதபோறேன்" என்றாள் மற்றொருநாள் .
"நீ சரியான ஒரு காதலன் தான் இல்ல?" என்று நான் ஒரு பக்கத்து வீட்டு பெண்மணியை பற்றி சொன்னபோதும் , அவளின் இன்னொரு தோழி இடம் நான் சற்றே வழிந்தபோதும் கலாட்டா செய்தாள் .
"இந்த orion belt இருக்கு பாரு இது என்னோட நட்சத்திர கூட்டம் . ஒரு திண்ணை, அதிர்ஷ்ட வசமா எதிர்ல காலி மனை எல்லாத்தையும் விட equator க்கு பக்கத்தில இருக்கற ஊரு , வருஷம் பூரா என்னால இந்த நட்சதிரங்கள பாக்க முடியுது தெரியுமா"ன்னு அவள் கேட்டதிலேந்து இப்பொழுது கூட அந்த மூன்று நட்சத்திரங்களையும் ஒரு கோடாக பார்த்தால் அவளைத்தான் நினைத்துகொள்கிறேன்.
ஒரு மழை நாள் பிற்பகல் , சாரலை ரசித்தவாறே திடீரென "எனக்கு வரன் வந்திருக்காம், யூ.எஸ், ல இருக்கானாம் சாப்ட் வேர்ல இருக்கானாம், ஜாதகம் எல்லாம் பொருந்தி போறதாம்" என்று நாளைக்கு நம்ப சினிமா போகலாம் என்பது போல சொன்னாள் . அமெரிக்க போவது கொல்லைபுறம போவது போன்று இல்லாத அந்த எண்பதுக்களில் எனக்கு அது மெலிதான அதிர்ச்சியை கொடுத்தது . "அமேரிக்காவா?" என்றேன் .
அவள் கண்கள் என்னை முதல் முதலாக பேசும்போது சந்திக்காதது அவளுக்கு அதில் இருக்கும் குழப்பத்தை தெரிவித்தது .
"உனக்கு பிடிக்கலன்னா வற்புறுத்துவாங்களா என்ன?" என்றேன் .
"மாட்டாங்க! என் முடிவுக்கு மதிப்பு கொடுப்பாங்க! என்றாள் "
"sanfrancisco equator க்கு பக்கத்திலையா இருக்கு? " என்றேன் யோசனையாக .
"இங்கே இருக்கும் வெள்ளை கலர் பாண்டியன் பஸ் , அவிங்க இவிங்க தமிழ் , கஞ்சி போட்ட பருத்தி புடவை , ரோட்டோர இட்லி என்று மாயும் கமலாவிற்கு அமெரிக்க வரன் " என்றேன் - குரலில் தாக்கமும் ஆதங்கமும் தெரிந்ததோ? .
நேர் பார்வையில் புன்னகை தெரித்தது.
"திணை மயக்கம் எனக்கா உனக்கா ?" என்றாள் கமலா
5 comments:
இதுவும் நல்லா இருக்கு ராகவன். உங்களுக்கு டைம் கிடைக்கிறப்ப http://satturmaikan.blogspot.com வந்து படிச்சு உங்களோட கருத்துகள சொல்லுங்க ராகவன். நன்றி.
இரண்டு மயக்கங்களுமே நன்றாய் இருந்தன.
ஆனாலும்,
\\நான் எழுதியதை விட இன்னும் அழகாக, கமலாவையும், ஸ்ரீனிவாசராகவனையும் மேலும் ஒரு படி உயர்த்தி இருக்கிறது என்று தோன்றுகிறது, எந்தவித ஜோடனைகளும் இல்லாமல், நேரடியாக கதை சொல்லும் முறை எனக்கு இன்று வரை வாய்க்கவில்லை.\\
இதுதான் ராகவன்.
மீண்டும் நண்பர்களின் பதிவுகளை படிக ஆரம்பித்திருக்கிறேன். நான் இந்தப் பதிவில் ராகவனின் ரசனை, பாராட்டும் பாங்கினையே பார்த்தேன்.
அழகு.
போலீசு வன்முறையை எதிர்த்தால் ரவுடிகளின் வன்முறையா? கண்டனக் கூட்டம்!
நேரம்: 29.05.2010, வியாழன், மாலை 5 மணி
இடம்: ஒய்.எம்.சி.ஏ அரங்கம், என்.எஸ்.சி போஸ் சாலை, உயர்நீதி மன்றம் எதிரில் (ஹாட் சிப்ஸ் அருகில்), சென்னை.
நிகழ்ச்சி நிரல்:
தலைமை: தோழர் சி. ராஜூ, மாநில ஒருங்கிணைப்பாளர், HRPC, தமிழ்நாடு
கண்டன உரை:
தோழர். வாஞ்சிநாதன், வழக்குரைஞர், HRPC – மதுரை.
திரு. சங்கரசுப்பு, வழக்குரைஞர், சென்னை.
திரு. இராதகிருஷ்ணன், வழக்குரைஞர், சென்னை.
திரு. திருமலைராஜன், வழக்குரைஞர், ஈரோடு, முன்னாள் தலைவர், தமிழக கீழமை நீதிமன்ற வழக்குரைஞர் கூட்டமைப்பு.
ஏப்.25 அன்று உயர்நீதிமன்றத்தில் தாக்கப்பட்ட வழக்குரைஞர்களின் நேருரைகள்!
அனைவரும் வருக! நீதிக்கான போரில் தோள் தருக!
"திணைமயக்கம் - 1" - யதார்த்தம்...
"திணைமயக்கம் - 2" - யதார்த்தம் போன்ற கற்பனை...
Post a Comment