Saturday, April 03, 2010

மரணத்தின் களிநடனம்...

மறக்க முடியாத
தினங்களின் பசையில்
ஒட்டி உயிர் விடும்
பால்யம்

யயாதியாய் புணர்ந்த
கதைகளை
பக்கத்திற்கு பக்கம்
புரட்ட தினவெடுக்கும்
தோள்வலி

மென் அம்புகள்
துளைத்த பெருநாழியில்
உதிரும் மணித்துளிகள்
பெரிதாகி
துளைக்குள் புக மறுக்கும்

யவ்வனம் பால் கட்டி
நிற்கும் முலைச்சுவட்டில்
வறண்ட இதழ்கள்
வானம் பார்த்து கிடக்கும்

பிறிதொரு முறை
உதறிய படுக்கையில்
கெட்டித்து சிந்தும்
நரை மயிர்கள்
தூர்ந்த வடத்தை ஒக்கும்

கொடிய வாள்களின் வீச்சில்
முதலில்
உள்ளங்கை ரேகையென
கோடுகள் எழுதிய உடம்பில்
தொட, நகர
ஏய்ப்பு காட்டும் மரணம்

8 comments:

விஜய் said...

மிகவும் பிடித்தது

வாழ்த்துக்கள்

விஜய்

நேசமித்ரன் said...

களி நடனம் !!!

உங்கள் கூத்தன் கவிதையின் பின்னூட்டத்தில் உரையாடல் தொடர்ந்திருக்கிறேன் நேரம் இருப்பின் வாசியுங்கள்

:)

பத்மா said...

இப்போது தான் ஒரு ஒரு மரண படுக்கையில் உள்ள மூதாட்டியை பார்த்து விட்டு வந்தேன் .அவரை கொஞ்சம் முதுமையில் தெரியும் ,பாடிய குரல் தெரியும் .நீங்கள் சொன்னதுபோல் உதறிய படுக்கையில் நரைமுடி எங்கும் அலைந்தது ....அங்கும்
ஏய்ப்பு தான் காட்டிக்கொண்டிருக்கிறது மரணம் .அனால் ஒருவருக்கும் வா என சொல்ல வார்த்தை இல்லை.மரணம் வருவது தெரியாமல் வர வேண்டும் ..பால்யம் தொலைதல் இயல்பெனினும் சாபம் .காத்திருத்தல் அதனினும் கொடுமை

பத்மா said...

மறக்க முடியாத
தினங்களின் பசையில்
ஒட்டி உயிர் விடும்
பால்யம்

இந்த வரிகள் பயமுறுத்துகின்றன
நானும் பால்யம் தொலைப்பேன் ..இல்லை தொலைத்தாயிட்றா?:)

Ashok D said...

:)

காமராஜ் said...

கிறங்கடிக்கும் உவமை வரிகள்

மறக்க முடியாத
தினங்களின் பசையில்
ஒட்டி உயிர் விடும்
பால்யம்

ரிஷபன் said...

நரை மயிர்கள்
தூர்ந்த வடத்தை ஒக்கும்

வாவ்..
உங்கள் பார்வையில் எதுவுமே தப்புவதில்லை

INDIA 2121 said...

NALLA KAVITHAI

VISIT
www.vaalpaiyyan.blogspot.com
JUNIOR VAALPAIYYAN