Sunday, April 11, 2010

நரைத்த இரவுகள்...

சுவர்களின் பக்கவாட்டைப்
பிடித்துக் கொண்டும்
இரண்டு படிகளை கடக்கிறேன்
வாசலில் கிடந்த
பால் பாக்கெட்டை
நடுங்கும் விரல்களில் எடுக்கிறேன்
பாக்கெட்டின் குளிர்ச்சியை
உணர முடியவில்லை
ரத்தம் சுண்டி ஸ்மரனை இன்றி
ஒரு இடுக்கியைப் போல
எடுக்கிறது விரல்கள்
அயர்ந்து உறங்குபவளின்
மூப்பு அறையெங்கும்
எடுக்காத நூலாம்படையாய்
கயிறு கட்டிய மூக்கு கண்ணாடி
மருந்து புட்டிகள், மஃப்ளர்
இடது பக்கம் அவளுக்கானது
வலது பக்கம் எனக்கானது
சுவரெங்கும் பிடித்து நகரும்
கைகளின் உராய்வில்
உதிர்ந்து தொங்கும் காரை
கண்ணாடி, பீங்கான் தவிர்த்து
வருஷங்கள் ஆகி விட்டது
பாலில் நிறைய தண்ணீர் விட்டு
செய்த தேனீரும்
இதமான சூட்டில் வெண்ணீரும் செய்து
அவளை எழுப்பினேன்
எழுந்தவள் முட்டி வலிக்குதுப்பா
என்றாள் ஹாட்பேக் குடுங்களேன்
என்றவளிடம்
அலையடிக்கும் தேனீர் குவளையை
நீட்டினேன், சப்திக்க வாங்கியவளின்
தேனீரின் மிச்சம்
கண்ணத்தில் பச்சை படர்த்தி
குளிர் நிழலை விரித்தது

குழந்தைகள் பெருகி வளர்கிறது
மரநிழலில்

15 comments:

பா.ராஜாராம் said...

அருமை ராகவன்!

கடைசி ரெண்டு வரிகளில் கண்ணில் நீர் கட்டியது...

இருப்பவர்கள்/இல்லாதவர்கள்(பொருளை சொல்லவில்லை)எல்லோருக்கும் இதுதான் சாஸ்வதம் மக்கா.

எப்பவுமே குழந்தைகளாக இருக்க தெரிந்து கொண்டால் போதும்தான்.இல்லையா?

pavithrabalu said...

கண்ணீர் பெருகியது தோழர்

முதுமையின் கணங்கள் ஒவ்வொன்றும் கண்ணீரில் தோன்றியவையே.. ஆறுதல் வார்த்தை இல்லாத முதுமை உண்மையிலேயே கொடுமை.. அவர்களுடைய கண்களில் அன்பின் தேடுதலை உணர முடியும்...
அருமையான படைப்பு

Unknown said...

நல்லாருக்கு ராகவன்.

பத்மா said...

ராகவன் முதுமையை சேர்ந்து அடைகிறீர்களே .அதுவே வரம் .
வழக்கம் போல் மனதை கலங்கடிக்கும் கவிதை .

Unknown said...

மிக அருமையான கவிதை. வயதானதிற்குப்பின் தான் பிள்ளைகள் அதிகம் வேலை எதிர்பார்கிறார்கள். மூப்பின் கொடுமையால் வேலை செய்ய முடியாமல் போகும் பொது அவர்களிடம் ஒரு பாரச் சுமை ஆகி விடுகிறார்கள். என்ன கொடுமை அப்பா!

ரிஷபன் said...

கவிதையை வாசித்து முடிக்கும்போது அந்த காட்சி மனசுக்குள் என்னவோ செய்கிறது..

காமராஜ் said...

மழைகாலங்களில் நீரையும்,
சித்திரை காலத்தில் கத்திரி வெயிலையும் சபித்தபடி
காலம் நகர்ந்து கொண்டே இருக்கும்.
குழந்தைகள் மட்டும் அதில் கப்பல் விட்டு ஊஞ்சல் கட்டி கொண்டாடும்.

பாரா வை வழிமொழிகிறேன். கடைசிவரி கணத்துக்கிடக்குது தோழா.

காமராஜ் said...
This comment has been removed by the author.
உயிரோடை said...

ந‌ல்ல‌ க‌விதை ராக‌வ‌ன்

விஜய் said...

வாழ்த்துக்கள்

விஜய்

Vidhoosh said...

ராகவா!
//குழந்தைகள் பெருகி வளர்கிறது
மரநிழலில்// இங்க படிக்கும்போது ரொம்ப பயமாயிருக்குங்க கவிதையை படித்தால். பெண்களுக்கு எப்போதும் எதிர்கால பயம் உண்டுன்னு சொல்வது நிஜம்தான் போலருக்கு. கொஞ்சம் தலை சுத்தறாப்போல இருக்கு, கண்ணு தண்ணி முட்டி மறைக்குது. கொஞ்ச எழுத்து பிழை இருந்தாகூட சமாளிச்சு படிச்சுக்குங்க என் பின்னூட்டத்தை. :(

ரோகிணிசிவா said...

//அவளை எழுப்பினேன்
எழுந்தவள் முட்டி வலிக்குதுப்பா
என்றாள் ஹாட்பேக் குடுங்களேன்
என்றவளிடம்
அலையடிக்கும் தேனீர் குவளையை
நீட்டினேன், சப்திக்க வாங்கியவளின்
தேனீரின் மிச்சம்
கண்ணத்தில் பச்சை படர்த்தி
குளிர் நிழலை விரித்தது//-superb

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

முதுமை என்ன அவ்வளவு கொடுமையா?

அன்புடன் அருணா said...

வெந்நீர்....கன்னம்..திருத்தி விடுங்களேன்....மென்மையான கவிதையைக் கரடு முரடாக்கி விடுகிறது.

அப்புறம் கவிதை எப்பவும் போல பூங்கொத்துக்குரியது!

இரசிகை said...

yellaarukkumaanathu....!