கடந்த காலத்தின் அதிர்வுகளில் நகரும் ஒரு ஸ்திர சிற்பமென ஆகிறது இது போன்ற அசை போடுதல்கள். வாயெல்லாம் நுரை தள்ளி உண்டு மயங்கும் ஒரு மலைபாம்பென புரண்டு முறுக்கும் நினைவுகள் செரிக்காமல் துப்புகின்றது மாணிக்க கற்களையும் சில சமயம் கழிவையும். பிட்டு திங்கும் பக்குவம் இல்லாமல் எல்லாவற்றையும் விழுங்கும் பழம்பசி மனசு, சும்மாவும் கிடக்கிறது உயிரற்ற சவத்தை ஒத்து. சேகரித்து வைத்திருந்த தினவு பொடிபொடியாகும். நிகழ்தகவினை தகர்த்து ஒரு மாற்றும் குறையாமல், திரும்ப தர முயற்ச்சிக்கும் அற்ப சந்தோசங்களின் பிரதிகளாய் இருக்கும் பட்ச்சத்தில் இது ஒரு சமரில்லா வெளியாய் பரந்து விரியும். விரல்களில் முளைத்திருக்கும் இந்த அகவிழிகள் திரும்ப திரும்ப காட்சிக்கு பரத்தும் ஓவியங்களில் இருந்து வழிந்த மசியின் வர்ண கலவையில் பிரிக்க முடியாத வர்ணங்கள் புரியாத சில கேள்விகளை தக்க வைத்து கொண்டிருக்கும் எப்போதும்.
தீபாவின் தொடர் அழைப்புக்கு நான் என்ன எழுதுவது என்று தெரியவில்லை... அதன் புலம் என்ன என்பது எனக்கு புரியவில்லை. ஆனாலும் அதில் கடவுளும்... உளன் அலது இலன் மற்றும் என் நம்பிக்கை, குழப்பங்கள், அனுபவங்கள் என்கிற விஷயம் தான் அதன் அடிநாதம் என்று நான் அர்த்தம் செய்து கொண்டு இந்த தொடர் பதிவுக்கு எழுத ஆரம்பிக்கிறேன்...
ஒரு வைணவ நம்பிக்கை உள்ள அப்பாவுக்கு நான் மகனாக பிறந்தேன், ஆண்டாளின் நட்சத்ரத்தில், பெருமாளுக்கு உகந்த புரட்டாசி மாதம் கடைசி சனிக்கிழமை என்று வைணவ உஞ்சவிருத்தி தினத்தில் பிறந்ததாலும் அப்பாவுக்கும் , தாத்தாவுக்குமான நம்பிக்கையில் ஏழு வருஷம் ஏழு மாசம் கழிச்சு பிறந்த நான் பெருமாளாய் தோன்றியதாக சொல்லும் போது யாருக்கும் பெரிதாக கேள்வியில்லை. நிறம் வேறு பெருமாளின் நிறம், கருப்பு... கேக்க வேணுமா... வைணவ சம்பிரதாயத்தில் துளசி, விஷ்ணு, ஜடாரி, புளியோதரை மற்றும் சனிக்கிழமை தவறாது பெருமாள் கோவில் விண்ணை முட்டும் விஸ்வரூப தரிசனமென வளர்ந்தேன்... எனக்கு இன்னும் கூடலழகர் பெருமாள் கோயிலின் ஒவ்வொரு தூனும் மனனம்... சப்த்திக்க சுவரங்களை தேக்கி வைத்திருக்கும் தூண்களில் எல்லாம் விஷ்ணு சஹஸ்ரநாமம், நாலாயிர திவ்ய பிரபந்தங்கள் கேட்கும் பஜகோவிந்தங்கள் எனக்கு...
என் சொந்த ஊரும் ஸ்ரீவில்லிபுத்தூர் என்பதால் வடபத்ரசயனர் எனக்குள்ளே புகுந்து கால் நீட்டி படுத்திருந்தார் நீண்ட காலங்களுக்கு... நாராயண என்னும் நாமம் குலம் தரும் செல்வம் தரும் என்றெல்லாம் யோசித்தது இல்லை... மகாபாரதமும், கிருஷ்ண லீலைகளும் எனக்குள்ளே என்னை கண்ணனாகவே நினைத்து கொள்ள வைத்தது. கிருஷ்ணனுக்கு பிடித்தது எல்லாம் எனக்கும் பிடிக்க ஆரம்பித்தது... வெண்ணையில் இருந்து கோபியர் வரை... பக்த பிரஹலாத பார்த்த பாதிப்பில் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்று எல்லோருக்கும் பெரிய வியாக்யானங்கள் கொடுத்து கொண்டிருப்பேன். என்னை சுத்தி எப்போதும் ஒரு கூட்டம் இருக்கும் வாய் பிளந்து கதை கேட்க... அப்பவே நல்லா கதை விடுவேனென்று அம்மா சொல்ல கேட்டிருக்கேன்... தொட்டில் பழக்கம்... ஸ்ரீவில்லிபுத்தூர் திருவண்ணாமலையில் உள்ள பெருமாள் கோயில் நிழல் மண்டபங்களில் நான் ஒரு பிரசங்கியை போல கதை சொல்லி இருக்கிறேன் ... இது மத சார்புடைய விஷயமா அல்லது கடவுள் நம்பிக்கை சார்ந்த விஷயமா என்றால் இல்லை என்றே தோன்றுகிறது... நம்மை எப்போதும் வியப்பாய் பார்க்க வேண்டும் என்ற ஒரு அன்கீஹாரத் தேடலின் தொடர்ச்சி தான் வாழ்க்கை முழுதும் வருகிறது என்று நினைக்கிறேன்.
அம்மா ஒரு தீவிரமான முருக பக்தி... சோம வார நோன்புகளும், சஷ்டி விரதமும், கிருத்திகை விரதங்களும் அம்மாவை எனக்கு முருகக்கடவுள் மேல் ஆர்வம் மேலிட செய்தது. அதுவும் புராண படங்களில் அதிகபிரசன்கியாய் பேசும் முருக கடவுள் (அநேக படங்களில் ஸ்ரீதேவியின் வசீகரமே...) ஒரு ஈர்ப்பை இருந்ததுண்டு. திருப்புகழும், கந்தர் சஷ்டி கவசமும், கந்தர் அனுபூதியும், கந்த குரு கவசமும் பாரயனமானது பக்தி என்று சொல்லிவிட முடியாது... என் இசை ஆர்வம் வளர்ந்ததுக்கு அம்மாவின் இது போன்ற பாடல்கள் தான் காரணம் என்று தைரியமாய் கூறலாம்... நாத விந்து கலாதியும், உல்லாச நிராகுலவும், தண்டையணி வேண்டியும்... என்னை காலில் தண்டைகள் அணிந்து குதிக்க வைத்ததும் உண்டு... இப்படி ஒரு பின்னணியில் இருந்து வந்தவன் நான். மேலும் என்னுடைய இருபத்தி ஐந்து வயது வரை... நான் தேடி தேடி அலைந்திருக்கிறேன் கோயில்களை... திருச்சியில் ஆரம்பித்து, முக்கா காலுக்கு ஒரு வேஷ்டியும், ஜோல்னா பையுமாய் நானே கடவுளாய் எது என் இடம் என்று அலைந்ததுண்டு...
இடையில் சத்தியநாதன் வந்தான் என் பள்ளித் தோழனாய் இருந்தவன்... மறுபடியும் மீண்டு வந்தான் ஒரு சைவ சித்தாந்தவாதியாய்... திருநீறு, சுடலை பொடி பூசி, கல்லின் புடையமர்ந்து, தக்ஷின மூர்த்தியாய், குருவுக்கு குருவாய் வந்தான் சிவதாண்டவமாடி... இம்மையில் நன்மை தருவார் கோயிலும், சொமாச்கந்தரும், லின்கோத்பவரும் பற்றி கதை சொல்லி வில்வ மரமென குளிர்ந்து நின்றான் அருட்ப்ரகாசி... காதல், உருகுதல், கண்ணனின் வாயமுதம் என்று மீரா, வள்ளி, தெயவானைகளில் லயித்திருந்த காலத்தில் சிவபுராணம், பத்திரகிரியார், சிவவாக்கியர் என்று சித்தர் பாடல்களில் இருந்த தத்துவக்கொக்கிகளை எனக்கும் மாட்டி விட்டு நட்ட கல்லும் பேசுமோ என்கிற கேள்வியில் நிறுத்திவிட்டு போய்விட்டான். பாண்டியனுக்காக கால் மாற்றி ஆடியவன், ஒற்றை காலில் நின்று கொண்டு அடம் பிடித்தான் சில நாட்கள் என்னுள் ஊன்றி கொண்டு...
அதற்க்கு பின்னான சில புத்தகங்களின் அறிமுகம், எவல்யூஷன் பற்றிய பட்டறிவு, கடவுள் என்கிற ஒன்றை தூக்கி ஓரமாய் வைத்தது... இது எல்லாமே பெண்களை கவருவதற்கு என்று தான் இருந்திருக்கிறது எனக்கு... நாங்கள் சிறுவயதில் குடியிருந்த காம்பௌண்டில் எங்க வீட்டில் மட்டும் தான் ஆன் பிள்ளைகள்... வைகுண்ட எகாதஷி அன்று... பரம பதம் ஏகினால் வைகுண்டம் தான் என்ற நம்பிக்கைகளின் விளைவு தான் வீசி விழுந்த விருத்தங்கள். குழைத்து குழைத்து பூசிய ஸ்ரிசூர்ணமும், நாமமும் என் அடையாளங்கள் அப்போது. இப்போது என் நாமங்களும் அடையாளங்களும் வேறு என்பது எல்லோருக்கும் தெரியும்.
இன்றளவும் கோயிலுக்கு செல்கிறேன், சர்ச்சுக்கு செல்கிறேன் கிடைக்கிற அனுபவங்களை எடுத்து வைத்து கொள்கிறேன்...
நான் அப்போது MSW இரண்டாம் ஆண்டு படித்து வந்தேன்... இரண்டாம் வருஷத்தில் எங்களுக்கு 'பப்ளிக் ஸ்பீகிங்' என்று ஒரு பாடம் உண்டு... எப்படி கூச்சமில்லாமல் பேசுவது சபை நடுவில்? நமக்கு தான் கூச்சமே கிடையாதே... அது வேற விஷயம்... அப்போ பாடத்திட்டத்தின் ஒரு அங்கமாக எங்களுக்கு ஒரு OBT (out bound training) புரோக்ராம் நடந்தது... நகரத்தை விட்டு தள்ளி இருந்த ஒரு கடற்கரையில்... அப்போது எல்லோரும் ஒவ்வொரு தலைப்பில் இருபது நிமிஷம் பேச வேண்டும்... இருபது நிமிஷம் பேச என் முறை வந்த போது, நானும் பேசினேன்...
கடவுள் யார் அது... இருக்கிறாரா இல்லையா... என்னுடைய சில கேள்விகள் - இது தான் என்னுடைய நீண்ட தலைப்பு... பேச ஆரம்பித்தேன்... நிறைய பேர் கவனித்தார்கள் நிறைய பேர் எதிர் வாதம் இட்டார்கள்... ஒருவர் மட்டும் என்னை உத்து கவனித்திருக்கிறார்... என் பேச்சில் மயங்கி, என் கேள்விகளில் கிறங்கி நானும் உங்கள போல தான் என்ற அறிமுகத்துடன் நுனி நாக்கு ஆங்கிலத்தில் பேசும் அவரை பார்த்தவுடன் எனக்கு பிடித்து விட்டது... இதற்க்கு இடையில் கல்கி பகவான், தினகரன், சிவசங்கர பாபா, ஷிர்டி என்று எல்லா சாமியார்களும் அல்லது கடவுநிலை மனிதர்களைப் பற்றியும் யாரோ பேசினார்கள்... கல்கி போட்டோவை துடைக்க துடைக்க குங்குமம் கொட்டிக் கொண்டே இருந்ததாக கூறினார்... பாபாக்களின் இது போன்ற புரட்டு காரியங்களும், ஊமைகள் பேசினார்கள், குருடர்கள் பார்க்கிறார்கள் என்று சுவிசேஷ அழைப்புகளும், கடற்கரை கூட்டங்களும் என் பேச்சில் இருந்ததை ஒருவர் காரசாரமாக கண்டித்தார்... ஒரு பாடத்தின் பகுதியான இந்த பயிற்ச்சியில் எனக்கு ஒன்று புரிந்து போனது... குருடர்கள் முறைத்து பார்த்தார்கள், ஊமைகள் வசை பாடினார்கள், முடவர்கள் எழுந்து வந்து அடிக்க வந்தார்கள் .. என் பேச்சை கேட்டு. நான் கடவுளானேன்... ஒளிவட்டம் சுற்றியது எனக்கு...
என் பேச்சை சிலாஹித்த SANDRA , கொஞ்ச நாட்களில் என் ஏமாற்று வேலையில் மயங்கி என்னை கல்யாணம் செய்து கொள்ள ஒப்புக் கொண்டாள்... ஒரு வழியாக... ஒளிவட்டம் கழற்றி வைத்தேன்...
அவளுடைய அப்பா என்னை பார்க்க வேண்டும் என்று கூறினாராம், அப்போது அவர் ஒரு பெரிய தனியார் நிறுவனத்தின் கண்ட்ரி ஹெட், எனக்கு அவரை பார்க்க கொடுத்த நேரம் சரியாக காலை ஒன்பது மணி, நான் ஒரு ஐந்து நிமிஷம் முன்னாடியே சென்று விட்டேன்... ஐந்து நிமிடம் காத்திருக்க சொல்லி ஒன்பது மணிக்கு தான் பார்த்தார். நிறைய பேசினார்... அவருடைய குடும்பத்தை பற்றி, உறவினர் வட்டத்தை பற்றி... நானும் என் பின் புலம் பற்றி பேசினேன்... நான் சார்ந்து இருக்கும் மதத்தை பற்றி, என் பெற்றோர்களின் ஒப்புதல் பற்றி எல்லாவற்றையும் பேசி விட்டார்... என்னை அவருக்கு ஏனோ பிடித்து விட்டது... அங்கிருந்து ஒரு காரில் என்னை அவர்களின் வீட்டுக்கு, நல்ல சீருடையில் இருந்த டிரைவரிடம் சொல்லி அனுப்பி வைத்தார். மில்ஸ் அண்ட் பூன் கதைகளில் வருவது மாதிரி நான் ஒரு ஏழை வீட்டு பையன், அவர்களோ பெரிய இடம்... அவர்கள் வீட்டுக்குள் நுழைந்த போது என்னை சிறிதாய் உணர்ந்தேன்... என் மாமியாருக்கு என்னை பார்த்தவுடன், என் பேச்சை கேட்டவுடன் பிடித்திருக்க வேண்டும்... முகம் மலர பேசினார், அவர்கள் வீட்டில் தான் சாப்பிட்டேன்...
அவர்கள் வீட்டிற்குள் நுழைந்ததும் வரவேற்பு ஒலிகள் குரைத்தல்களும், மியாவ்க்களுமாய் இருந்தன... இன்னும் பெயரிட முடியா உயிரினங்கள் ( ஒரு எறும்பு தின்னி உட்பட...) என்று ஒரு விலங்கியல் பூங்கா போல இருந்தது. மாடிபடியோரம் ஒரு சங்கிலி எதன் கழுத்திலும் கட்டாமல் சும்மா கிடந்தது... அதன் வார்ப்பட்டை என் கழுத்துக்கு சரியாய் இருப்பது போல தோன்றியது... கொஞ்சம் பயம் வந்தது... உதறலை மறைக்க உங்க வீட்டுல எத்தனை நாய் இருக்கு என்றேன்... இப்போ பன்னிரண்டு தான் இருக்கு...(என்னைய சேர்த்த பதிமூனோன்னு...!!)
என் மாமியாரும், மாமனாரும் அன்பானவர்கள்... அவர்கள் பெண்ணை எனக்கு கொடுப்பதற்கான முடிவு அன்று மாலையே எடுக்கப்பட்டது, நான் பாம்பே மெயிலில் ஏறும் போது சொன்னாள் என் மனைவி... அவங்க ஒகே சொல்லிட்டாங்க... . என்றாள்...
இதுவா இருந்தா என்ன அதுவா இருந்தா என்ன என்றேன்...இது தான் என் மதம் மற்றும் கடவுள் சார்ந்த பார்வை... கடவுள் பற்றிய போதனைகளில், கதைகளில் வளர்ந்தவன் என்பதை தவிர கடவுளுக்கும் எனக்கும் ஸ்நான சம்பந்தம் கூட கிடையாது, நிறைய இடங்களில் கடவுள் பற்றிய பேச்சு எழும்போது, உங்களுக்கு நம்பிக்கை இருக்கா என்பார்கள்... தெரியலை என்பேன்... இது தான் பதில்னு எப்படி சொல்றதுன்னு தெரியலை எப்போதும்...எந்த ஒரு விஷயத்தையும் முழுதாய் தெரிந்தவன் அதைப்பற்றி பேச மாட்டான்... அவன் கேட்கும் போது பார்த்துக் கொள்ளலாம்...
ஒரு ரயில் மட்டுமே நிற்கும் அந்த ஸ்டேஷனில் எங்களைத் தவிர யாரும் இல்லை... காரோட்டியும் பக்கத்தில் இல்லை...அவள் என்ன கையை பிடித்து லேசாக அனைத்து தாங்க யூ என்றாள்... மழை பெய்ய ஆரம்பித்தது... பூவரசம் பூக்கள் ஒலிபெருக்கிகளாய்... எங்கள் உறவைப்பாடியது...
கல்யாணம்... நாதஸ்வரத்தின் ஓசையில் வெட்டிங் பெல்களின் சத்தம் விடாமல் கேட்டது... அப்பாவிற்கு என் மனைவியை பார்த்தவுடன் பிடித்தது... நிறைய நெருங்கி விட்டார்... என் அம்மாவின் அரற்றல்கள் யாருக்கும் கேட்கவில்லை... இரு பழங்கடவுளர்களும் கூட அலுப்பில் தூங்க போய் விட்டனர்...
10 comments:
சுத்திவளைச்சு பாத்தா கடவுள் கொடுத்த கொடை உங்கள் வாழ்க்கை
அற்புதம் ராகவன்!
படிக்க சிரமமாக இருக்கிறது..பாராவாக அடுக்கியிருக்கவேண்டும் ராகவன்...நம்பிக்கைகளும் வாழ்கையும் ஆரம்பமும் பின்னிப்பிணைந்து கிடக்கின்றனவல்லவா...
பிற ..பிறகு.
ஹ்ம்ம், அப்படியா சேதி! வாழ்த்துகள். கடவுளர்களைப் பொறுத்த வரையில் சேம் பின்ச் :)
அனுஜன்யா
ராகவன்,
உங்களை அனுஜன்யா குறிப்பிட்டிருக்கிறார்.
ஓடுங்கள்,ஓடிபோய் பாருங்கள்.
http://anujanya.blogspot.com/2010/04/blog-post_13.ஹ்த்ம்ல்
ராகவன்,
சுற்றும் பூமிச் சுழற்சியில்,
அதது அதனிடத்தில்.
விலகி இருந்தாலும்,
வலிந்து இழுத்தாலும்.
படிக்க சுவாரசியமா இருந்தது ராகவன்..
ராகவன்
கையைக்கொடுங்கள் முதல் பத்தி அல்லது பாரா ஒரு மிரட்டலோடு கூட்டிக்கொண்டுபோய் அடி விளாசு விளாசு விளாசுன்னு எழுத்து இழுத்துக்கொண்டே போகிறது. ஒரு பேஸ் சுதியில் ஆரம்பிக்கிற பாடலைப்போல,ஒரு பலாப்பழ போர்வை போல கூட்டிக்கொண்டு போய் தித்திப்பாய் முடிகிறது சாண்ட் ரா அம்மையாரின் கைபிடித்தபடிது.ஒரு அதிவேகச் சிறுகதைபோல உங்கள்எழுத்தில் கிறங்கிப்போயிருக்கிறேன்.
அழகு.
வாவ்!
ஒரு ரோலர் கோஸ்டர் ரைட் சென்று இறங்கியதைப் போல் இருந்தது ராகவன். மிகவும் வெளிப்படையான, தெளிவடைந்த மனத்திலிருந்து அப்படியே வெளிப்பட்டிருக்கும் எழுத்து.
உங்களது சுவாரசியமான இன்னொரு பரிமாணத்தையும் தரிசிக்க முடிந்தது.
(பேசிப் பேசியே ஆளக் கவுத்திருக்கீங்க!)
//குருடர்கள் முறைத்து பார்த்தார்கள், ஊமைகள் வசை பாடினார்கள், முடவர்கள் எழுந்து வந்து அடிக்க வந்தார்கள் .. என் பேச்சை கேட்டு. நான் கடவுளானேன்... ஒளிவட்டம் சுற்றியது எனக்கு...
என் பேச்சை சிலாஹித்த SANDRA , கொஞ்ச நாட்களில் என் ஏமாற்று வேலையில் மயங்கி என்னை கல்யாணம் செய்து கொள்ள ஒப்புக் கொண்டாள்... ஒரு வழியாக... ஒளிவட்டம் கழற்றி வைத்தேன்... //
:))))
கடைசி பாரா...அற்புதமான கவிதை. மிகவும் ரசித்தேன்.
Post a Comment