Wednesday, April 14, 2010

கண்டதை சொல்கிறேன்...

அன்பு நிறை எல்லோருக்கும்...

அடிக்கடி கரண்ட் போய்விடுகிறது இப்போது... குறைந்தது ஐந்து மணிநேரம்... பெங்களூரும் முன் போல இல்லை... வியர்க்கிறது... 37 டிகிரி வெயில் மிக இயல்பானதாக விடுகிறது... தினமும் தினசரிகளில் பொசுங்கும் வெப்பமானிகள் தவறாமல் தொடுகிறது மேற்சொன்ன டெம்பரேச்சரை.  மின் காத்தாடிகளில் சிக்கி கொள்ளும் வெப்பம் சுழன்று சுழன்று அறையும் காற்றில் ஈரப்பதம் இருப்பதே இல்லை.  வறண்டு போகிறது மூளையும் உடம்பும்... தொய்வாய் விழுகிறது தண்ணீரை இழந்த காற்று ஒரு காலரா நோயாளியை போல.  

உடலெங்கும் பூத்து கொப்பளிக்கும் அமிலங்களில் கருகி போகிறது வறட்சியற்ற வார்த்தைகள்... பூங்கா நகரம் என்று அழைக்கப்பட்ட பெங்களூருவில் பூக்களில் அரும்பி இருப்பது பனித்துளிகளாய் சத்தியமாய் இருக்காது... வியர்வை துளிகளாய் இருக்க வேண்டும்... ஏழு மணிவரை வெளிச்சம் இருக்கிறது... சீக்கிரமே விடிகிறது... பெங்களூரு வழக்கத்தின் முரணாய் அதிகாலையிலேயே விழித்து விடுகிறது... எல்லோரும் குளித்து விட்டு தங்கள் அலுவலை கவனிக்கிறார்கள்.   

மின்சாரம் பழுதுபட்ட நேரங்களில் தெருக்களில் கூடுபவர்களின் கதைகளில் வீட்டை விட்டு வெளியே வராதவர்கள் தப்பாமல் இடம் பெறுவார்கள்.   உளவியல் ரீதியாக மனிதன் என்ற சமூக விலங்கு நாக்கை தொங்க போட்டு அலைகிறது சிக்குபவர்களை  குதறி கிழிக்க... திண்ணையில் இருந்து இடம்பெயர்ந்து ரோட்டுக்கும் பிறகு படுக்கை அரை கணினியில் புறம் பேசி அலைகிறது.  எல்லா வருடங்களும் போனா வருடம் இது போல வெயில், மழை இன்ன பிற இல்லைகளை தங்களுக்கு தெரிந்தோ தெரியாமலோ பேசிக்கொண்டே இருக்கிறார்கள்.  வீட்டை பெருசா கட்டியாச்சு, ஒரு இன்வேர்ட்டர் போட்டா, குறைந்த பட்சம் இரண்டு அறைகளில் மின் காத்தாடியை குச்சி வச்சு சுத்துவது முடியும்... காற்றே வராது எல்லா ஜன்னல்களையும் திறந்து வைத்து கிராஸ் வெண்டிலேஷனுக்கு வசதியா இருக்கும்னு கட்டும் போதே சொன்னேன் என்பவளுக்கு... முப்பதுக்கு இருபது வீட்டில் இதுக்கு மேல முடியாதுன்னு சொல்ல முயற்சித்தால் அவளுக்கு புரியாது... பேசாமல் கேட்டுக் கொண்டிருப்பதோடு சரி... வழியும் வியர்வைகளில் கரையும் இது போன்ற கேள்விகள்.

மூடிய மேகங்கள் ( ஒரு காட்சி பொருளாய் போகிறது) கண்டால் மொட்டை மாடிக்கு சென்று மழை வேண்டுமே என்று ஒரு கடும் பிரார்த்தனை ஒரு கேவலாய் வருகிறது.  இந்த முறை சன் ந்யுசில் சொன்ன தகவல் மனதுக்கு வேதனையை இருந்தது... மதுரையில் அழகர் ஆத்தில இறங்க தண்ணீர் இல்லை என்ன செய்வது என்று அரசு கைய பிசைந்து கொண்டு நிற்கிறது என்றும், அதனால் போர்வெல் போட்டும், லாரி தண்ணீர் கொண்டு வந்தும் ஆத்தில அழகரை இறங்க வைப்பது என்று முடிவானது... அழகருக்கு இதில் உடன்பாடா என்று தெரியவில்லை...

பக்தர்கள் கூட்டத்தின் தண்ணீர் தேவைகளுக்காக நிறைய சின்டெக்ஸ் டாங்குகளில் தண்ணீர் கொண்டு வந்து வைக்க போவதாகவும் சொல்லப்பட்டது... அங்கங்கே தூர்வாருவதாய் தோண்டிஎடுத்த மணல் வியாபாரம் ஆவதை தடுக்க முடியவில்லை யாராலும்.  சொம்பு தண்ணீரில் என்னால் குளிக்க முடியும் போது, அழகர் என் போர்வெல் தண்ணீரில் குளிக்க கூடாது... நியாயம் தானே... கள்ளழகர் வெண்பட்டில் வருவாரா... பச்சை பட்டில் வருவாரா இந்த வருஷம் தெரியவில்லை... அழகர் ஆற்றில் இறங்குவது ஒரு புறம் இருந்தாலும்... இதற்காக செலவழிக்க படும் தண்ணீர் மதுரை மக்களுக்கு ஒரு வாரத்திற்கு மேலான குடிநீரை கொட்டி கவிழ்க்கும் ஒரு விரயம் தான் இப்போதுள்ள நிலைமையில்... ஆற்றில் அழகர் இறங்கும் போதும் மழை பெய்யும் என்பது ஐதீகம், ஆனால் எனக்கு தெரிந்து இப்போதெல்லாம் அழகர் ஆற்றில் இறங்கும் போது, மழை வாசனை கூட அடிப்பதில்லை...

ஆற்றில் ஓடுவது தண்ணீர் என்பது மாறி ஆற்றில் நிற்பது தண்ணீரென ஆகி இப்போது ஆற்றில் இல்லாதது தண்ணீர் என்றாகி விட்டது... கரை புரண்டோடும் தென்னக நதிகள் கனவாகி விட்டது எல்லோருக்கும்...                              

ஏ. கே.ராமனுஜம் எழுதிய வைகை பற்றிய கவிதை ஞாபகம் வருகிறது...

People everywhere talked
of the inches rising,
of the precise number of cobbled steps
run over by the water, rising
on the bathing places,

இது ராமானுஜத்தின் வேறு ஒரு பார்வையை பற்றி பேசினாலும்... இந்த கவிதை எனக்கு மீனாக்ஷி கல்லூரி பாலத்தை ஒட்டி ஓடும் வையையை ஞாபக மினுக்கில் தேய்த்து சுடர்கிறது.  ஏழாயிரம் சதுர கிலோமீட்டரில் பரவி இருக்கும் இந்த ஆறு... ஆற்று படுகையாய் போனதற்கு என்ன காரணம்...

அம்மா மண்டபத்தில் அகண்டு ஓடும் காவிரி இப்போது மணலை மட்டுமே விரித்து சூம்பி போனா வறட்டு முளைகளாய் போனது வேதனையான விஷயம்... கை பிசைந்து நிற்கிறோம் ஒன்றும் செய்ய ஒட்டாது கையாலாகாத தனம், செயலற்று கிடப்பவனின் உடலை கொத்தி திண்ணும் வல்லூறுகளாய். ஆறுகள் வற்றி போனதற்கு பொய்த்து போனா பருவமழையே காரணம் என்றால் பருவமழை பொய்த்து போனதற்கு என்னென்ன காரணங்கள் வைத்திருக்கிறோம் நாம், deforestation மரம் இல்லை மழை இல்லை... ஆற்றை ஒட்டி நடக்கும் திருவிழாக்களும், ஆற்றுப் பாசானங்களும் திரும்ப வருமா என்றால் எப்போது, இன்னும் இரண்டாயிரம் மூன்றாயிரம் வருஷங்களுக்கு பிறகு... இது ஒரு சுழற்சி... அவசியம் திரும்பவும் சுபிட்சமாகும்...

இப்போது யாரும் ஓசோன் ஓட்டை பற்றி பேசுவதில்லை... கரியமில சுவடுகள் பற்றி பேசுகிறோம்... கிரீன் ஹவுஸ் வாயுக்கள் என்கிறோம்... குளோபல் வார்மிங் என்கிறோம்... மீதேன், கரியமில வாயு, நைட்ரஸ் ஆக்சைட், ஓசோன் என்ற பாதுகாப்பு வளையங்களின் அடர்த்தி அதிகமாகி பூமியின் வெப்பம் அதிகமாகி கொண்டே போகிறது... முப்பத்தி மூணு டிகிரி இருக்க வேண்டியது ஐம்பது டிகிரிவரை எகிறப்போவது பூமியை வாழ்தலுக்கு முடியாத இடமாய் மாற்றி விடும் ஆபாயம் இருக்கிறது... ஆனாலும் புலிகளை போல அல்லாது கரப்பான்களாய் மாற தயாராய் இருக்கிறோம்

அழியாதிருத்தல், நீட்டித்து இருத்தல் என்பது நமக்குள் மாற்றங்களை கூட ஏற்படுத்தலாம் தான்... ஆனால் அத்தனையும் குறைவான சாத்தியகூறுகள் உள்ள விஷயங்கள்.  யாரும் அறுதியிட்டு கூற முடியாது  இது தான் என்று... ஆனால் படுக்கையில் அழுகி கொண்டு இருக்கும் ஒரு வயோதிக பெரியவராய் கவனிப்பாரற்று கிடக்கிறது... பூமியும் இன்ன பிறவும்...

மேலும் விபரங்கள் உங்கள் கடிதம் கண்டு...

அன்புடன்
ராகவன்

11 comments:

காமராஜ் said...

பெங்களூர் அடுக்குமாடி வீட்டில் காற்று வராமல் புலம்பிக்கொண்டிருக்கும் ஒரு விசிறிக்கை வீசி வீசி வைகைக்கு வந்து அழகரை அதகளப்படுத்துகிறது. go ahead.

பத்மா said...

ஆக நீங்க உஜாலாவுக்கு மாறிடீங்க .நானும் மாறணும் .அதான் என் புது வருட resolution.

அன்புடன் அருணா said...

/ஆனால் படுக்கையில் அழுகி கொண்டு இருக்கும் ஒரு வயோதிக பெரியவராய் கவனிப்பாரற்று கிடக்கிறது... பூமியும் இன்ன பிறவும்.../
ம்ம்ம்...கனத்த மனதுடனும் அனல்காற்றின் தகிப்பினை அனுபவித்துக் கொண்டும்.

ரிஷபன் said...

குமுறித் தீர்த்து விட்டீர்கள்..
ஏதாவது ஒரு வகையில் நாமும் ஒரு காரணமாய்..
நாம் அற்புதங்களை ஏசினாலும் உள்ளூர அப்படி ஒரு நிகழ்விற்குக் காத்திருக்கிறோம்..

அம்பிகா said...

ராகவன்,

நிஜமான நியாயமான ஆதங்கம். பெங்களூரு இப்படியென்றால், இங்கேயெல்லாம் கேட்கவேவேண்டாம்.

உங்கள் வழக்கமான பதிவிலிருந்து மாறுபட்ட பகிர்வு.
நல்லாயிருக்கு ராகவன்.

Unknown said...

//உடலெங்கும் பூத்து கொப்பளிக்கும் அமிலங்களில் கருகி போகிறது வறட்சியற்ற வார்த்தைகள்...\\
வறண்டு போகிறது மூளையும் உடம்பும்.
எப்படிங்க இப்படி. இதுவும் கடந்து போகும்.
அன்புடன்
சந்துரு

வல்லிசிம்ஹன் said...

மதுரையை ,வைகையை நினைத்து அழுவது இப்போது பழகிய வேலையாகிவிட்டது. என்ன,, வேறு வேறு இடங்களிலிருந்து வருந்துகிறோம்.

Vidhoosh said...

வந்தேன். இன்னும் படிக்கலை. நாளைக்கு வரேன்.

விஜய் said...

ஆல், அத்தி, வில்வம், அரசு மற்றும் அசோகா மரங்கள் "பஞ்சவடி" என்று அழைப்பார்கள். பால் உள்ள மரங்களான இவற்றை பெருக்கினால் மட்டுமே மழைப் பொழிவை அதிகப்படுத்த முடியும்.

வாழ்த்துக்கள்

மணிஜி said...

நலம்..நலம் அறிந்தேன்...

இரசிகை said...

aathangam......