உலர்ந்த நதிகளின்
மணற்படுகைகள்
இரண்டு கரைக்கும் நீண்டு கிடக்கும்
காற்று எழுதிய வரிகளின்
அர்த்தம் புரியாமல் முதுகை
சுழித்து கொண்டு கிடக்கிறது நதிவழி
கடந்து போகும் வண்டிகள்
சக்கரங்களில் பிளந்து கொஞ்சம்
தனுப்பு காட்டும் ஈர நினைவில்
மிச்சமிருக்கும் சுழித்தோடிய துளிகள்
கால் உதறி நடக்கும் குழந்தைகளின்
பாதம் பொசுங்காதிருக்க
தாரைகளாய் கசியும்
ஈரத்தில் பால் பிசுக்கு
மினுக்கும் மணல்துகள்களில்
தொன்மங்கள் சுமந்து தெரியும்
மூதாதையரின் பிண்ட பருக்கைகள்
கொத்தி தின்ன வரும் காகங்கள்
இடம் வலமென குழம்பி கரையும்
வரை செழிக்கும் மீன்களின்
ஞாபக பொதியின்
கணம் தாங்காமல் தாழ்ந்து பறக்கும்
கொக்குகளும் நாரைகளும்
மணற்சூட்டில் வண்ணம் மாற்றி
இருள் நிரப்பும்
கரையோர மரங்களின்
வேர்க்கால்கள் அமிலத்தரையில்
கால்பதியாமல் உடல் கிடத்தும்
நதியில் விழுந்த நான்
முழுகி கொண்டே இருக்கிறேன்...
9 comments:
வழக்கம் போல அற்புதம் ராகவன்.
தனுப்பு ?
நகர்ந்து கொண்டே இருக்கிறீர்கள் ராகவன் காகப் பொன் மீதம் வைத்து
குறு மணல் பெயர்க்கும் காற்றாக
வாழ்த்துகள்
காற்று எழுதிய வரிகளின்
அர்த்தம் புரியாமல் முதுகை
சுழித்து கொண்டு கிடக்கிறது நதிவழி
மணற்சூட்டில் வண்ணம் மாற்றி
இருள் நிரப்பும்
அற்புதம்..
எழுதித்தீராத வரிகளும்
பேசித்தீராத சொற்களும்,
உருகித்தீராத நினைவுகளுமாய்,
படுத்துக்கிடக்கிறது
பெருமூச்சோடு.
நடந்தாய்... என்பது கடந்தகாலம் தானே ராகவன் ?.
பாலைக் காற்று முகத்திலடிக்கிறது, கண் கலக்கும் துகளோடு.
கவிதை நன்றாக இருக்கின்றது ராகவன்
அண்ணா , நேற்றுதான் நாலைந்து நாள்களாய் எதுவும் எழுதவில்லையென பேசிக்கொண்டிருந்தீர்கள் ..அதற்குள் இப்படி ஒன்றா !!
நன்றாக இருக்கிறது , இக்கவிதை காற்றில் அலையவிடும் எண்ணங்களை , நேரம் கிடைக்கும் பொழுது அலைபேசியின் வழி பிடித்துக்கொள்வோம் ;-)
வாழ்த்துக்கள் !
//மினுக்கும் மணல்துகள்களில்
தொன்மங்கள் சுமந்து தெரியும்
மூதாதையரின் பிண்ட பருக்கைகள்
கொத்தி தின்ன வரும் காகங்கள்//
நல்ல வரிகள்.அருமையா இருக்கு.
ரேகா ராகவன்
(சிகாகோவிலிருந்து)
அன்பு நண்பர்கள்,
இராமசாமி கண்ணன்,
நேசமித்ரன்,
ரிஷபன்,
காமராஜ்,
பாலகுமார்,
லாவண்யா,
ஜோ,
மற்றும் ரேகா ராகவன்
எல்லோருக்கும் என் அன்பும் நன்றியும்... நிறைய நாட்களுக்கு பிறகு எழுதினேன். எனக்கு அத்தனை திருப்தியாக இல்லாதபோதும் ஏதாவது போடலாம், இல்லேன்னா தமிழ் கூறும் நல்லுலகம் மறந்து போயிடும்னு பயம் வந்துட்டது...
மீண்டும் அன்பும் நன்றியும்
ராகவன்
Post a Comment