Saturday, July 03, 2010

கழுத்துப்புண்...

கழுத்து புண்ணின்
வழி உயிர் உறிஞ்சும்
ஈக்களை விரட்ட
திராணியில்லாமல் வீசும்
குஞ்சலம் முளைத்த வால்

அசைந்து கடக்கும்
பள்ளங்களில் அழுத்தும்
நுகத்தடி பிதுக்கிய
சீழ் வழிந்து தரை விழும்
மண் எரிந்து கரியாகும்

கழுத்து மணிப்பட்டை
சாவுப்பட்டைஎன இறுக்கும்
ஆடும் மணிச்சத்தம்
சிதறிச்சொருகும்  
காதுக்குள் சயனைடு ஊசிகள்

மருந்தென தடவும்
களிம்பும் வழுக்கும்
நுகத்தடி
நகராது கிடக்கும் வண்டி
கடக்கவேண்டிய தூரம்
எட்டாப்புள்ளியாகும்

சொடுக்கும் சவுக்கின்
நுனி 
அரவங்கள் என  தீண்டும்
உடலெங்கும் விடமேறி
நுரை தள்ளும்

களைத்த கால்கள்
உறைந்து நிற்கும்
வருத்தி துளைக்கும் 
தார்க்குச்சியின் முனையில்
பொலபொலவென உதிரும்
கையில் பிடித்த குறுமணல்

8 comments:

ரிஷபன் said...

அப்படியே அந்த வண்டியின் பின் அதன் உபாதையை உணர்ந்து போன அழுத்தம் மனசுள் கவிதை வாசித்ததும்.
நாம் மனிதரின் வேதனைகளையே உணர்வதில்லை.. மாடுகளின்??

க ரா said...

அடுத்த மனிதனின் வேதனையே மக்கள் உணராத இந்த காலத்தில் .. நீங்கள் கிரேட் ராகவன். உயிர்களிடத்தில் அன்பு செய்.. எல்லாருக்கும் புரியனும் இது.

மாதவராஜ் said...

மாடு மட்டுமா கழுத்துப் புண்களோடு. நாம் எல்லோருமே எதோ ஒரு வதையுடனும், வலியுடனும்தானே பயணிக்கிறோம். நிறைய சொல்கிறது கவிதை!

உயிரோடை said...

சொல்லப்பட்டது மாட்டினை அல்ல என்பது புரிகின்றது. நல்ல கவிதை ராகவன்

அன்புடன் அருணா said...

"கழுத்துப்புண்..."வலிக்கிறது.

கே. பி. ஜனா... said...

வலிக்கிறது, கழுத்தும் மனசும்!

'பரிவை' சே.குமார் said...

//களைத்த கால்கள்
உறைந்து நிற்கும்
வருத்தி துளைக்கும்
தார்க்குச்சியின் முனையில்
பொலபொலவென உதிரும்
கையில் பிடித்த குறுமணல் //

வலிக்கிறது மனசு.

சாந்தி மாரியப்பன் said...

அவஸ்தை மாட்டுக்கு மட்டுமல்ல.