Friday, July 23, 2010

கொடுக்கில் புணரும் மிருகம்...

துக்கங்களின் குவிமையத்தில்
இருந்து விலகாமல் இருக்கிறது
லௌகீகம்
குவிந்த வெளிச்சத்தில்
பொசுங்கி கருகுகிறது
நீ பட்டியலிடும்
தேவைகள் நிரப்பிய காகிதம்
விலகாமல் ஓடிக்கொண்டிருக்கும்
புவி ஈர்ப்பின் கதியில்
சுழன்று கொண்டிருக்கும்
இசைத்தட்டு திரும்ப திரும்ப
முள் கீறி கீறி பாடுகிறது
ஒற்றை வரியிலான துயரப்பாடல்,
குருதிகளால் ஆனது
காற்புள்ளிகளும், முற்றுப்புள்ளிகளும்.
***
மூடியிருக்கும் கதவுகளை கண்டால்
பயம்பிடித்துக் கொள்கிறது
நான்கு பக்கமும் இறுக்கும்
சுவர்களை
இரண்டு கால்களையும்
இரண்டு கைகளையும்
கொண்டு நிறுத்துகிறேன்
உத்தரம் இறங்குகிறது
தலையைக் கொண்டு தாங்குகிறேன்
 கீழே நழுவும் பூமியை
என்ன செய்வது என்று தெரியாமல்
பிடி தளர்த்துகிறேன்
ஒரு பள்ளத்தாக்கு என்னை
விழுங்குகிறது
வெளி விழுந்து துடிக்கிறது
என் வால் மாத்திரம்
***

2 comments:

பத்மா said...

பாரம் அழுத்துவது போலத்தான் இருக்கும் , ஆயின் சுமந்து விடுவீர்கள்..

கவிதை கலங்கவும் ,யோசிக்கவும் வைக்கிறது நண்பரே

'பரிவை' சே.குமார் said...

பாரம் அழுத்தினாலும் கவிதை கலக்கல்.