Thursday, December 16, 2010

சாலமிகுத்துப் பெயின்...

தொடர்ந்து இருமிக்கொண்டே இருந்தாள், ராமதிலகம். மழைக்காலங்களிலும், குளிர்காலங்களிலும் இது ஒரு பேரவஸ்தை எனத் தோன்றும் எல்லோருக்கும். உறக்கம் வராது தொண்டைக்குள் குறுகுறுவென்று இருமல் வந்து கொண்டே இருக்கும், அதிலும் தலைக்கு ஒரு சொம்பு ஊத்திட்டா போச்சு, அன்னைக்கு பூரா நெஞ்சு கனத்துப் போயி எளப்பு எடுக்க ஆரம்பிச்சுடும்.  கொஞ்ச நாளாவே சுடு தண்ணீ தான் குடிக்கிறது, பச்சத்தண்ணீ பல்லுல படாமத் தான் இருக்கு, ஆனாலும் விடமாட்டிங்கு இந்த சளியும், எளப்பு சனியனும்.  இவ கூட வேல பாக்குறவளுக எல்லாம், குளுந்த தண்ணீ குடிக்குறப்போ, பாக்க பாக்க இவளுக்கும் குடிக்க ஆசையா இருக்கும், ஆனாலும் முடியாது. வெய்யக்காலம்னாக்கூட அவளுக்கு சுடுதண்ணீ தான். தாகம் தீந்தாமாதிரியே இருக்காது.  அதுவும் விக்கல் வந்துட்டா தாங்க முடியாது, சூடு பண்ணிவச்ச தண்ணியவும் தாராளமாக் குடிக்க முடியாது. தீந்து போயிட்டா, டார்மெட்ரிக்கு போகணும், அந்த எழவுக்கு இங்கனயே இருந்துட்டு, மூச்சப்பிடிச்சு நிப்பாட்டிடறது தான் வசதி. தூக்கம் வரல, காத்தும் இல்லாம எல்லாம், நின்னு சிலையாப்போனது போல இருக்கு மரமெல்லாம். எந்துரிச்சு உலாத்தவும் முடியாது, வார்டனக்கா ஏன் வந்த எதுக்கு வந்தன்னு உசுர வாங்கிடும்.


சுமதி எந்திரிச்சு பாத்தா! என்ன புள்ள தூங்கலையா? இருமலா இருக்கு சுமதி என்ன பண்றதுன்னு தெரியலை, படுத்தா இன்னும் கஷ்டமா இருக்கு! என்றாள்.  வாசுகி ஒரு இருமல் மருந்து வச்சிருக்கா, அத எடுத்துக் குடி! காலைல சொல்லிக்கிடலாம்! வேணாம்த்தா, அவ காலைல எந்திரிச்சு பேய்மாரி கத்துவா... என்றாள். 

முதலுதவி பெட்டி வச்சிருப்பாங்க கம்பெனில, அதுல ஒண்ணும் இருக்காது, துடைச்சு வச்சா மாதிரி. ஏதாவது இருந்தாலும், மருந்து மாத்திரை இருக்காது... டெட்டால், பஞ்சு, சல்லடைத்துணியும், ஒரு ஆயின்மெண்டும் இருக்கும், அம்புட்டுதான். உடம்புக்கு சொகமில்லாதப்போ, நர்ஸக்காவத் தான் பாக்கணும், ஆனா அதுவும், காலைல தான் வரும், ராத்திரி டார்மெட்ரில தங்கியிருக்கிறவுகளுக்காக ஒரு நைட் டூட்டி நர்ஸ் போடணும்னு சொல்லி இதோட ஒரு வருஷம் ஆகிப்போச்சு, இன்னும் எதுவும் நடக்கக் காணோம்.  இங்க டைம் ஆபீஸ்ல இருக்கிற ராஜேஷு அண்ணன்கிட்ட சொல்லி மேனேஜர்கிட்ட ஒரு லெட்டரும் கொடுத்தாச்சு, ஒண்ணும் நடக்கிற மாதிரி தெரியலை. கம்பெனியும் முன்ன மாதிரி இல்லை, முன்னெல்லாம், நிறைய ஆர்டர் இருக்கும், நிறைய நேரம் வேலை பார்க்க, நிறைய ஓ.டி. காசும் தாராளமா கிடைக்கும், இப்போ ஆர்டர் குறைஞ்சு போயி, தனியாக் கிடைக்கிற காசு எதுவும் கிடைக்கிறதில்லை. சம்பளமே தள்ளி தள்ளிப் போகுது இப்பெல்லாம்.


கரூர்ல, எல்லா கம்பெனியவும் கடைண்டு தான் சொல்லுவாங்க, அது என்ன கணக்கோ, இவளும் புதுசா உசிலம்பட்டில இருந்து வந்தப்போ, கடை, கடைன்னு சொல்லக்கண்டு, ஏதோ பெரிய துணிக்கடையாட்டம் இருக்கும்னு தான் நினைச்சா, ஆனா வந்து பாத்தப்போதான் தெரிஞ்சது, இது எத்தாம்பெரிய கம்பெனியிண்டு. இந்த கடைல இரண்டாயிரத்துக்கு மேல ஆளுக்க வேலை செய்யிறாங்க, இதுல பொம்பிளய்ங்க தான் ஜாஸ்தி, கிட்டத்தட்ட ஆயிரத்து   ஐந்நூறுக்கும் மேல இருக்கும், இதுல பாதிக்கு மேல வெளியூர்ல இருந்து வாரவுக தான். இவளப்போல உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி, தேனி, சின்னாளம்பட்டி, பேரையூரு, பெரியகுளம், கோட்டயம், இடுக்கி  பக்கத்தில இருந்து தான் கொள்ளப்பேரு, இவ ஊர்க்காரிக மட்டுமே அம்பது பேருக்கும் மேல இருக்கும்.

இவ உசிலம்பட்டில இதுக்கு முன்னாடி பிஸ்கட் கம்பெனில தான் வேலை பாத்தா, அங்க பேக்கிங் டிபார்ட்மெண்டில் தான் இவளுக்கு வேலை.  பாக்டரிக்குள்ள நுழைஞ்சாலே ஜம்முன்னு வாசமடிக்கும், மணக்க மணக்க வேலை செய்யலாம், போனவுடனே, டிரஸ்ஸ மாத்திடணும், அவுக கொடுக்குற டிரஸ் தான் போடணும், தலைக்கு குல்லா, கையில கிளவுஸ்ஸு, மூஞ்சில முகமுடி எல்லாம். கண்ணாடில பாத்தா யாரோ மாதிரி இருக்கும்.  ஆனா இங்க மாதிரி அங்க நிறைய சம்பளம் கிடையாது, இங்கு டார்மெட்ரி எல்லாத்துக்கும் வசதி, சாப்பாடு போக வீட்டுக்கு ஐந்நூறு ரூவா அனுப்பமுடியும்.

கூடப்படிச்சவள்ல ரெண்டு பேரு, கரூர்ல இந்த கம்பெனி பத்தி சொன்னவுடனே, அப்பா, ஆத்தா, நமக்கு நல்ல காலம் புறந்துடுச்சு ஆத்தா, நீ போயி சம்பாதிச்சுதான் தாயி... உந்தம்பி, தங்கச்சிய படிக்கவைக்கணும்னு சொல்லியதும், அவளுக்கு ஒரு கிரீடம் ஏறியது போல இருந்தது. அம்மாவுக்கு திலகத்தை அனுப்பவே பிடிக்கலை, இவளுக்கு சிநேகிதக்காரிகளோட போறோம்னு ஆசை வந்து, அம்மாவ நச்சரிச்சு, ஒரு வழியா சமாளிச்சு இங்க வந்துட்டா. இவ சம்பாதிச்சா வீட்டுக்கு உதவியா இருக்கும், அப்பாவால இப்போ எந்த பிரயோசனமும் இல்லை.

அப்பாவுக்கு வேலையில்லை இப்போ, கிடைக்கிற வேலையவும் ஒழுங்கா பாக்குறது இல்லை. முன்னாடி தேனில சாயப்பட்டறைல தான் வேலைப் பாத்தாரு, அவருக்கு உடம்புக்கு முடியாம, டிபி வந்து ஒல்லியாப் போயிட்டாரு, அவருக்கு ஒடம்புல தெம்பே இல்லாமப் போச்சு, தொசுக்கு தொசுக்குன்னு எங்க போனாலும் ஒக்காந்துருவாரு... இதுல அப்பாவுக்கு குடிப்பழக்கமும் இருக்கு, அம்மா காட்டு வேலைக்கு கூப்பிட்டாலும் போக மாட்டாரு. இந்த வேலைக்குப் போனா மூணு வருஷத்துல கை மேல முப்பத்தைஞ்சாயிரம் கொடுப்பாங்கன்னும், மாசாமாசம், தொள்ளாயிரம் ரூவா சம்பளமுன்னும் சொன்னவுடனே, திலகத்தை மூட்டை கட்டி அனுப்புறதிலேயே குறியா இருந்தாரு அவ அப்பா. போட்டும்டி, அவ கல்யாண செலவுக்கு ஆகும், ஒரு வேளை கஞ்சி குடிக்கலாம் உருப்படியா என்று அப்பா அவளை விருமாண்டி மாமாகூட அனுப்பி வைச்சிட்டாரு. வந்த புதுசுல சாப்பாடு பிடிக்காம, தம்பி, தங்கச்சி, அம்மாவ விட்டு வந்தது கஷ்டமா இருந்ததால, அழுகையா வரும், அப்புறம் பழகிப் போச்சு, இராமதிலகத்துக்கு.

இங்க ஒரு ரூம்ல பத்து பிள்ளைக,எல்லாருக்கும் பாயி தலைகாணி ஒரு பேனு. காத்து நல்லாத்தான் வரும், ஜன்னல் ரெண்டையும் திறந்து வச்சா, மத்தவளுக பூச்சி வருதுன்னு பயப்படுவாளுக. மூணு வேளை சாப்பாடுக்கு, நானூத்தி சொச்சம் பிடிச்சது போக ஓ.டி. பார்த்த காசு எல்லாம் சேர்த்து     எழுநூறு ரூவா வரும், அதில் இவ இருநூறு ரூவா எடுத்துக்கிட்டு, மீதிய மணியார்டர் அனுப்பிடுவா.  பிள்ளைகளுக்கு தேவையான சோப், சீப்பு, பவுடர், பொட்டு, எண்ணெய்ன்னு தேவையான எல்லாப்பொருளையும் வார்டனக்கா வாங்கி வந்துரும், அதுக்கு ஒரு கமிஷன் வச்சு இங்க இருக்கிற எல்லாப்பிள்ளைகளுக்கும் வித்திரும், இதுல ஆபீஸ்ல இருக்கிற ஒரு ஆளுக்கும் கூட்டு. கேரளால இருக்கிற பிள்ளைக கேர்பிரீயும் வாங்குவாளுக, ஆனா நம்ம ஊரு பிள்ளைக வெறுக் கட்பீஸத் தான் வச்சுக்கிடுறதே.  வாரத்துல ஒரு நாளு படம், மாசத்துல ஒரு நாளு டவுனுக்குன்னு ஒரு அட்டவண இருக்கு, அதுபடி தான் எல்லாம்.  துணி தொவைக்கிறது தான் பெரிய வேலையே, காயப்போட எடம் இருக்காது பாதி நேரம், அதுவும் ஓடி எல்லாம் இருந்துட்டு எப்படா வந்து படுப்போம்னு இருக்கும், ரவைக்கு கொள்ள நாளு சாப்பிடுறதே இல்லை. மிஞ்சிப்போன சாப்பாட எல்லாம், மய்க்கா நாளு காண்டின்கார பொம்பள தண்ணி ஊத்தி வச்சு, மத்யான சாப்பாட்டு தயிர்சாதமா ஆக்கிடும்.  கறி சாப்பாடு போடுற அன்னைக்கு மாத்திரம் சாப்பாடு மிஞ்சாது.

ராமதிலகம் வேலை பாக்குற கம்பெனி தான் இந்த ஊரிலேயே பெரிசு, இது கரூருக்கு பக்கத்துல ஒரு சின்ன கிராமத்துல இருக்கு. தலகாணி உற, திரைத்துணியெல்லாம் தச்சு, வெளி நாட்டுக்கு ஏற்றுமதி செய்யிற கம்பெனி.  முதலாளி சிந்திக்காரருன்னு சொல்வாங்க, அது எங்கேயோ வடக்க இருக்கு போல. இங்கன வேலைக்கு வந்து ரெண்டு வருஷம் ஆகிப்போச்சு, தீபாவளிக்கு மாத்திரம் தான் ஊருக்கு போகமுடியும். பொங்கல் இல்லேன்னா தீவாளி, இவளுக்கு தீவாளிக்கு போவது தான் சரின்னு பட்டுது, இவ ஊர்க்காரிக கூட தீவாளிக்கு தான் போவாளுக. சில பிள்ளைக பங்குனிப் பொங்கலுக்கும், தைப்பொங்க்லுக்கும் ஊருக்கு போறது தான் வாடிக்கை.  பொங்கலன்னிக்கு, புதுசா உடுத்தத் தேவையில்லை, பட்டாசு கிடையாது, பலகாரம் கிடையாது, பொங்கல் மட்டும் தான். வீட்ல மாடு கண்ணு இருந்தா அதுக்காகவாவது பொங்கலுக்கு போகத்தோனும், இவ வீட்ல எதுவும் இல்லாததால தீவாளி தான் பெரிய பண்டியலு இவளுக்கு.

போன தடவை தீவாளிக்கு போனப்ப, ராமதிலகத்தின் அம்மாவிற்கு பிள்ளைய பாக்க பாக்க அழுகயா வந்துடுச்சு, தோலு வெளுத்தமாதிரி சோகைபிடிச்சாப்ல இருக்கு, உடம்பும் வத்துனாப்புல இருக்கேன்னு கவலை வந்துடுச்சி... இந்த மனுஷன் எம்பிள்ளைய இப்படி வதைக்கிறானேன்னு புலம்பி தீத்துடுச்சி... ராமதிலகம், அதெல்லாம் ஒண்ணுமில்லம்மா, கொஞ்சம் கலராயிருக்கேன், உடம்ப குறைச்சிருக்கேன், இங்க இருக்கிறப்ப திண்ணுட்டு திண்ணுட்டு தூங்குறன்னு நீ தானே சொல்வ! அதான் இப்ப வேலைப்பாக்குறதால வத்துனாப்புல தெரியுது... அதுவும் இத்தனை நாளு நீ என்ன பாக்கல... அதான் என்று சமாளித்தாள் ராமதிலகம். ஆனா வாஸ்தவமாப் பாத்தா இந்த இருமல் சளியெல்லாம் இங்கன வந்து தான் வந்துச்சு, அது பெறகால தான் ஒடம்பு வத்துனது எல்லாம், இதச்சொன்னா அம்மா இன்னும் அழுவுமென்று சொல்லாமல் விட்டுவிட்டாள். 

தீவாளிக்கு கம்பெனிக்காரங்க கொடுத்த ஸ்வீட் பாக்கெட்டும், அப்புறம் டார்மெட்ரிக்குள்ளயே போட்ட சீட்டுல வந்த பணத்துல பட்டாசு பொட்டலமும் வாங்கியதை தம்பி தங்கைகளுக்கு கொடுத்ததும் சந்தோஷப்பட்டார்கள். போனஸ் கொடுத்த காசுல அம்மாவுக்கு சேலையும், அப்பாவுக்கு வேட்டி சட்டையும், இவளுக்கு ஒரு பாவாடை தாவணியும் வாங்கிக் கொண்டாள், பாண்டிக்கு பிடிச்ச கலரு. தம்பி தங்கச்சிக்கு அம்மா ஏற்கனவே வாங்கி வச்சிருந்தது இவளுக்கு வசதியாப் போயிட்டது, கொஞ்சம் காச அம்மாட்ட கொடுத்ததும், ரொம்பவும் சந்தோஷப்பட்டாள் அம்மா, ராமதிலகத்துக்கு பெரிய மனுசி ஆயிட்டது போல தோன்றியது அப்போது தான்.

பாண்டி கட்டிங்குல கட்டரா வேலை பாக்குறான், உயரமா, உயரமா இருப்பான். பாக்குறத்துக்கு கொஞ்சம் கடலோரக்கவிதைகள் ராஜா மாதிரி...லேசா வளஞ்ச முதுகு, கழுத்துல ஒரு கயிறு, அதுல திருச்செந்தூர் முருகன் டாலர் போட்டிருப்பான். முன்னால மட்டும் சுருள் முடி பாக்கவே அழகா இருக்கும். இவ கட்டிங்கிலருந்து கட் பீஸெல்லாம் எடுத்துட்டுப் போயி, லைனுக்கு கொடுக்குற பீடிங் ஹெல்பர் வேலை பாக்குறதால, பீஸ் எடுக்க போகும்போது அவன பார்ப்பா.   அப்போ, லே போட்டு அடுக்கி வச்சிருக்கிற துணியில கட்டிங் மெஷினகொண்டு, மேல வச்சிருக்கிற பேட்டர்னுக்கு தகுந்த மாதிரி வளைச்சு வளைச்சு வெட்டும்போது, பாக்கவே அழகா இருக்கும். வெய்யக்காலத்துல சட்டைய கழட்டிட்டு, வெறும் முண்டா பணியனோடு இருக்கும் பாண்டி, இவளை குனிஞ்ச மாதிரி சைடா பாக்குறது, இவளுக்கு ஒரு மாதிரி குறுகுறுன்னு இருக்கும்.

என்ன அண்ணே! என்னயவே முறைச்சு பார்க்குறீங்க! என்று கட் பீஸு பண்டில (bundle) லேசா உரசிட்டு கடந்து போவா...  ஏ புள்ள! அண்ணே கிண்ணேன்ன அம்புட்டுத்தான்... பேரச்சொல்லிக் கூப்பிடு இல்லாட்டி, போங்க வாங்கன்னு கூப்பிடு... எனக்கு இருக்கிற தங்காச்சிங்க போதும் என்று இவளை நாக்கு துருத்தி விரட்டுவான். இவளுக்கு சிரிப்பா வரும், ஒருமுறை அவனை கடந்து போகும் போது பாண்டி மச்சான், என்று கிசுகிசுப்பாய் சொல்ல, பாண்டிக்கு கொள்ள சந்தோசம். அவள் கடக்கும்போது பாவாடையோடு இடது புறங்கைய தொடையில உரச, படக்கென்று விலகினாள்.

எல்லாரும் இருக்கும்போதும் அவளுக்கு, பாண்டியை சீண்டத் தோன்றும், கட்டிங் ஹெல்பரா இருக்கிற பாப்பாத்தி அக்காவுக்கும், ஸ்டிக்கர் அடிக்கிற அம்பிலிக்கும், இவங்களோட சாவகாசம் தெரிந்த பிறகு, இவள் வரும்போதெல்லாம் கிண்டல் பண்ணுவார்கள். மற்றவர்களிடம் பாண்டியைப் பற்றி பேசுகையில் பாச்சா... என்று குறிப்பிடுவாள். யாராவது கேட்டா, அது ஒல்லியா பாச்சா மாதிரி இருக்குல்ல அதனால தான் என்று சமாளிப்பாள். ஆனா அவளுக்கும் பாண்டிக்கும் மட்டும் தான் தெரியும், பாச்சான்னா... பாண்டி மச்சானின் சுருக்கம் என்பது.

ராத்திரி மூச்சூடும் தூங்காம விடியக்காலம்பற அவளுக்கு தூக்கம் அசத்து, உறங்கிப் போனாள், சுமதி வந்து உசுப்ப எழுந்தவள், ஏழு மணி ஆனது தெரிந்தவுடன், அவசர அவசரமாய் கிளம்ப ஆயத்தமானாள்.  இப்போ போனா, பாத்ரூமெல்லாம் கூட்டம் இருக்கும், இன்னிக்கு ஒருநா குளிக்காம போயிடலாம், சாயங்காலம் வந்தவுடனே குளிச்சிக்கலாம், உடம்புக்கும் கொஞ்ச குதுகுதுன்னு வந்ததால, முகத்தை மட்டும் கழுவிட்டு, சுமதியிடம் இருந்து கொஞ்சம் பாண்ட்ஸ் பவுடர் வாங்கி தடவிட்டு, சாப்பாடு தட்டெடுத்துட்டு, காண்டீனுக்கு விரைந்தாள்.  அம்பிலியும், ஷாலுவும் முன்னால் நின்று கொண்டிருந்தார்கள், அவர்களை பார்த்து சிரித்து விட்டு, லேட்டாயிடுச்சுல்ல.. என்றாள். எதுக்கு, பாச்சாவ பாக்கவா என்றாள் அம்பிலி கண் சிமிட்டியபடி, ஆருடி அது பாச்சா என்ற ஷாலுவின் கேள்விக்கு சொல்லவா, சொல்லவா என்று மிரட்டினாள் அம்பிலி.  என்ன சொல்லப்போற... ஒண்ணுமில்ல, இவ சும்மா... பகடி பண்ணுறா என்றாள் ராமதிலகம், ஆனாலும் மனசுக்குள் சொல்ல வேண்டும் என்று ஆசையா இருந்தது.  எல்லோருக்கும், இவள் பாண்டியோட ஆளு என்ற பேச்சு, ஜாடைமாடையா கேட்டா நல்லாயிருக்கும் தான்னு தோன்றியது. குறிப்பா இவ ரூம்ல இருக்கிற வாசுகிக்கு தெரியணும், பெரிய பந்தாவிட்டுட்டு இருப்பா எப்பப் பாத்தாலும், அவ மூஞ்சியும், மொகரையும். எவளாவது அவகிட்ட வருவானா என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள்.

வரிசை நகர தன்முறை வந்ததும், தட்டை நீட்ட, ரவா கிச்சடியும், தேங்காசட்னியும் விழுந்தது.  ஒரு கரண்டிக்கு மேல இதத் திங்க முடியாது, நாக்கெல்லாம் வறச்சியா இருக்கும் மத்யானம் சாப்பாடு முடிக்கிறவரை, என்று நிறுத்தினாள். சாப்டுட்டு கம்பெனிக்குள்ள நுழையவும் மணி அடிக்கவும் சரியா இருந்தது.  நேத்துக் கொடுத்த பீஸுகளின் கணக்கை பீடிங் சிலிப் பார்த்து எழுதிவிட்டு, பண்டில் இல்லாத லைனுக்கு பீஸு கொடுக்க கிளம்பியவளை நிறுத்தி, இன்னையில இருந்து நீ டிரிம்மிங் மட்டும் பாரு, பீடிங்குக்கு வேற ஆளப்போட்டாச்சு, டிரிம்மிங்குல ஆள் குறைவா இருக்காம் என்று அவளுடைய லைன் சூப்பர்வைசர் சொல்ல, இவளுக்கு மனசுக்கு கஷ்டமா இருந்தது, டிரிம்மிங்,செக்கிங்கும் பேக்கிங்கும் வேற ஒரு ஷெட்டுல இருக்கு, அதனால் பாச்சாவ அடிக்கடி பார்க்கமுடியாது என்பதை நினைக்கும்போதே அவளுக்கு அழுகை வர மாதிரி இருந்தது.  வேற ஒன்னும் செய்யமுடியாதா, வேற யாராவது அனுப்புங்கண்ணே என்று இவள் எவ்வளவு சொல்லியும் கேட்கவில்லை அவளோட சூப்பர்வைசர்.

இரவு ஏழு மணிக்கு டார்மெட்ரிக்கு திரும்பியவள், சுமதியிடம் சொல்லி சொல்லி அழுதாள்.  பகவதி அம்மனையும், பாண்டி சாமியையும் தீவிரமாக வேண்டினாள். மூணு ரோடு முனுசாமிக்கு கெடா வெட்டுவதாகவும் வேண்டியவள் சாப்பிடாமல் உறங்கிப் போனாள், எட்டு மணியிருக்கும் போது பேக் பண்ண ஆள் கம்மியாயிருக்கு, அதனால டார்மெட்ரில இருக்கிற பிள்ளைகள எல்லாம் வேலைக்கு கூப்பிடுறாரு, மேனேஜரு என்று தகவல், வர எல்லா பிள்ளைகளுக்கும் எரிச்சலுடன், கோபமும் வந்தது எல்லோருக்கும்.

இதே பொழப்பா போச்சு, இவனுங்களுக்கு, எப்பப் பார்த்தாலும் வந்து படுக்குறதுக்குள்ள திரும்பக்கூப்பிடுறது! மனுஷங்களா இல்லா மாடுங்களா நம்மெல்லாம், ஒரு நாளைக்கு இருவது மணி நேரமா, அதுவும் ஒரு நாளு கிழமை கிடையாது, ஓய்வு ஒழிச்சல் கிடையாது என்ன நாறப்பொழப்பு இது... பேசாம ஊருப்பக்கம் போயி காட்டு வேலப்பார்க்கலாம், வீட்டு மனுஷங்களோடவாவது இருக்கலாம், என்று புலம்பித் தள்ளினாள், டார்மெட்ரில இருக்கும் மரகதமணியக்கா.  மரகதமணியக்கா ரொம்ப பக்தியான ஆளு, வேலையில்லாத நேரமெல்லாம், பூசையும், கோயிலுமாத்தான் இருக்கும்.  மரகதமணியக்காவுக்கு குழந்தையெல்லாம் கிடையாது, புருஷனும் வேற கல்யாணம் பண்னிக்கிட்டானாம்,  டார்மெட்ரில தான் இருக்கும் எப்போதும், லீவுக்கு மட்டும், நத்தத்தில இருக்க அவங்க அம்மா வீட்டுக்குப் போயிடும்.  எல்லார் மேலயும் ரொம்ப பிரியமா, கரிசனையா இருக்கும் மரகதமணியக்கா. ஏழுமணிக்கு டார்மெட்ரிக்கு திரும்ப வந்ததே நூறு பேருதான், அத்தனைபேரையும் வரச்சொன்னா என்ன அர்த்தம்னே தெரியலை.

எல்லோரும் இரவு சாப்பாடை முடித்துக் கொண்டு எட்டரை மணிக்கே திரும்பவும் கம்பெனி  நோக்கி போக ஆரம்பித்தார்கள். டார்மெட்ரியும், கம்பெனியும் ஒரே காம்பவுண்டில் இருந்தாலும், ஒரு பத்து நிமிஷம் நடக்க வேண்டும். வேலை மும்முரமாக நடக்க ஆரம்பித்தது, கம்பெனி முழுதும் விளக்குகள் எரிய பகல் போல இருந்தது. பன்னிரெண்டு மணி இருக்கும் போது புரடக்‌ஷன் புளோரில் இருந்து ஏதோ சத்தம் வந்தது.  மரகதமணியக்காவுக்கு சாமி வந்துவிட்டது... அக்கா குதித்துக் கொண்டே வெளியே வர, வேடிக்கை பார்க்க எல்லோரும் வெளியே வர ஆரம்பித்தார்கள்... வேலை நின்று போனது முழுதுமாக... மரகதமணியக்காவைத் தொடர்ந்து இன்னும் சில பேருக்கு சாமி வர... என்ன வேண்டும் என்று ஒவ்வொரு சூப்பர்வைசரும், புரடக்‌ஷன் மேனேஜரும் கேட்க, போன பங்குனிக்கு கெடா வெட்டுனயா... ரத்தபலி வேணும்டா என்று கேட்க... கம்பெனிக்கு வெளியே திருவிழா ஆனது.  குடம்குடமாய் தண்ணீர், திருநீறு, மஞ்சள் குங்குமம், அல்லோல கல்லோலமானது.  இப்போது நூறு பேருக்குமேல் சாமியாட ஆரம்பிக்க... கட்டுப்படுத்த முடியாமல், சூப்பர்வைசர்களும், மேனேஜரும் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தார்கள்.  அப்போது ராமதிலகமும் ஆடத்தொடங்கியிருந்தாள். 

24 comments:

'பரிவை' சே.குமார் said...

romba arumaiya irukku raagavan sir... oru kathapaththiraththtai maiyappaduththi neengal ezhuththum kathaigal mika arumai. vazhththukkal.

sakthi said...

அங்காடித்தெரு படக்கதையின் சாயல் அடிக்குது ராகவன் அண்ணா :)

நல்லாயிருக்குங்க

sakthi said...

இது போன்ற வேலைகளுக்கு சென்ற பெண்கள் தங்களின் மனக்குமறல்களை சொல்லக்கேட்டிருக்கிறேன் ....

யதார்தம்

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

சுந்தரராமசாமியின் வார்த்தைகளில் சொல்லத் தோன்றுகிறது ராகவன்.

ராமதிலகத்தின் உருவத்துக்காக உங்களின் எல்லா வண்ணங்களையும் சிறப்பாகப் பயன்படுத்திவிட்டீர்கள்.

நாளெல்லாம் பகிர்வுக்காக ஏங்கும் மனம் மனதுக்கு வருத்தமளிப்பதாக இருக்கிறது ராகவன்.

பிழைகள் இருந்தபோது சொல்லத் தோன்றவில்லை.

பிழைகளே இல்லாதபோது சொல்லாமல் இருக்க முடியவில்லை.

ராகவன் said...

அன்பு குமார்,

உங்களின் வாழ்த்துக்களுக்கும், கருத்துக்கும் என் அன்பும் நன்றிகளும் வழக்கம் போல. உங்களின் தொடர் வாசிப்பு எனக்கு உத்சாகம்...

அன்புடன்
ராகவன்

ராகவன் said...

அன்பு சக்தி,

அங்காடித் தெருவின் சாயல் இதில் இருந்தால் அது என் தவறு தான்... இது நிஜமாகவே நடந்த கதை... உன் அன்புக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றியும் அன்பும்...

இதில் நிறைய விஷயங்கள் சொல்ல முயன்றிருக்கேன்... நீ அதைப் பற்றி எங்கும் குறிப்பிடவில்லை... வேறு யாரும். எங்கோ தவறு செய்கிறேன்... சொல்ல முனைவதில்.

அன்புடன்
ராகவன்

ராகவன் said...

அன்பு சுந்தர்ஜி,

உங்களின் பின்னூட்டம் எனக்கு சரியாக புரியவில்லை. கொஞ்சம் மந்தம் நான்... இன்னும் கொஞ்சம் விளக்கமாக அல்லது எனக்கு புரிகிற மாதிரி.

\\நாளெல்லாம் பகிர்வுக்கு ஏங்குகிற மனம், வருத்தமளிப்பதாய் இருக்கிறது// இதன் அர்த்தமும் புரியவில்லை எனக்கு.

ஆனாலும் உங்களின் தொடர்ந்த வாசிப்பு... மகிழ்ச்சியே... தக்கவைக்கிறேன்\.

அன்புடன்
ராகவன்

காமராஜ் said...

இது போன்று வாய் பிளந்து நிற்கும் நரக கொடவுன்கள் தான் இந்தியாவின் தொழில்வளர்ச்சியின் சின்னங்கள்.இவர்கள் உயிரை உருக்கி சம்பாதித்த காசுதான் இன்னொரு நரகத்தை உருவாக்கும்.சமீபத்தில் படித்த கட்டுரையில் உலகத்தின் எல்லா மூலைகளுக்கும் உழைப்பாளிகளை இங்கிருந்து தான் அள்ளிக்கொண்டு போயிருக்கிறார்கள் என்றுதெரிந்த போது கூனிக்குறுகிப்போனேன்.

தென்னாப்ரிகாவில் தண்டவாளம்போடும்போது அடிக்கடி புலிகள் வந்து மனிதர்களை இழுத்துக்கொண்டு போகுமாம். செத்த உயிர்கள் பீகாரிகளின் உயிர்களும் தமிழனினதுதும் தானாம்.கஜினி பதினாறு முறைதான் அள்ளிக்கொண்டு போனான்.அதைத்தொடர்ந்து வந்த எல்லா எமகாதகர்களும் மனிதர்களை அள்ளிக்கொண்டு போனார்கள்.

இதை எவனும் பேசுவதில்லை. இங்கே அடிமையாயிருக்கிறவர்கள் எங்கே அடிமையாய் போனால் இவனுகளுக்கென்ன வந்தது.அடிமைகளுக்கு நாடு ஏது.ஆனால் இவர்களுக்கு நகையும் சிலைகளும் போனது பெரிதாகத்தான் தெரியும்.

அதுதானே ராகவன் நமது பாரம்பரியப்பெருமை.

இந்தக்கதை அதுபோலொரு மிக அதிர்ச்சியான தகவலை உலகுக்குச்஦ சால்லுகிறது. அது பத்தியாக இருப்பதைக்க ஡ட்டிலும்.சிறுகதையாக இருப்பது தான் மிகச்சரி. அதிக வாசகர்களை சென்றடையும்.உங்களின் நுனுக்கமான பார்வை அசாத்தியமான விவரணைகள் கதைகளுக்கு வலு.ஆனால் இந்தக்கதை
அவள் ஒரு சூப்பர்வைசரை அடிப்பது மாதிரி,பெட்டிசட்டியைத் தூக்கிகொண்டு கிளம்புகிற மாதிரி அல்லது இதே போன்ற வேறு ஒரு முடிவை நோக்கி நகர்கிற மாதிரி இருக்கிறது.

அடக்கி அடக்கி வைக்கிற அழுத்தம் உடையும் போது எழுகின்ற பேரோசையை தனக்குள் வைத்திருக்கிற இந்த முடிவு சத்தமில்லாமல் முடிந்து போனது போல இருக்கிறது.

முடிவை நோக்கி விவரணைகளை அல்லது சம்பவங்களை குவிக்கவில்லையோ என்கிற சந்தேகம் வருகிறது.இருக்கட்டுமே இது ராகவனின் தனித்தனமை.சிலருக்கு டமீர்னு குதிச்சு நீம்ந்தப்பிடிக்கும்,சிலர் உள்ளே மெது மெதுவாக சிலிர்த்துக்கொண்டு இறங்கிப் போய் சத்தமில்லாமல் நீந்தப்பிடிக்கும் எல்லாமே நீச்சல்தான்.

எனினும் ஒரு சிறுகதை வெளிவந்துவிட்டால் வெளிவந்ததுதான்.அது ஒரு படைப்பு,அததற்கான இடம் அலாதியாக இருக்கும். நான் அதன் மீதிருக்கும் எதிர்பார்ப்பை மட்டும் தான் முன் வைக்கிறேன் இது விமர்சனமல்ல.

அசத்துங்க ராகவன்.

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

என்ன ராகவன் மந்தம்னுல்லாம் குண்டப் போடறீங்க?

எனக்கு அவசரமாய் மற்றொரு வேலை வந்துவிட்டதால் கொஞ்சம் பரபரப்பாய் எழுதும்படி வாய்த்தது கொஞ்சம் குழம்பக் காரணமாய் அமைந்திருக்கலாம்.

ராமதிலகம் விருமாண்டி மாமாவுடன் வேலைக்காக அனுப்பப்படும் இடம் என்னை வதைத்தது.

அவள் உலகம் அவள் பகிர்வு எல்லாம் இடம் மாறும்போது ஏக்கத்தை உண்டு பண்ணும் நாளெல்லாம்.அது வருத்தம்தானே ராகவன்.

அது சரி. காமராஜ் அசத்திட்டார்ல.நல்ல பார்வையும் எத்தனை அன்பும் எத்தனை நாசூக்கும்.

இந்த பரிபூர்ண அன்புக்குத்தான் உலகம் ஏங்குகிறது.நன்றி காமராஜ்.

அப்றம் ராகவன்!ஒங்களவு எழுதமுடியாட்டாலும் நானும் கொஞ்சம் சுமாரா எழுதுவேன்.கைகள் அள்ளிய நீருக்கும் வாங்க எப்பவாச்சும்.

ராகவன் said...

அன்பு காமராஜ்,

உங்களுக்கு என் அன்பும் நன்றியும். உங்கள் பின்னூட்டம் எனக்கு உடன்பாடில்லை... நீங்கள் சொல்ல வந்ததை சரியாக சொல்லவில்லை... பூசி மெழுகுவது மாதிரி இருக்கிறது... உடைத்து எறிய ஏதோ தயக்கம் மாதிரி தெரிகிறது. விமரிசனம் செய்யக்கூடாது என்று கைகட்டி வேடிக்கை பார்ப்பது, நல்லாவா இருக்கு...

அப்புறம் கதை... உங்களுக்கு கடைசிப் பத்தியில் இருக்கும் பேரோசை எப்படித் தெரியும்... ராமதிலகத்தின் கண்கள் வழியாக விஷயங்களை பார்க்கிறேனே ஒழிய... அவளுடைய மனசில் இருந்து பார்க்கவில்லை... ஒரு குருடனின் தொட்டுணர்தலில் தெரியும் விஷயங்கள் இவை... வரிகளின் ஊடாக பயணித்துப் பாருங்களேன் காமராஜ்... சொல்லாமல் விட்ட விஷயங்கள்.. அல்லது வாய்ட்ஸ்(voids)எங்கும் விரவியிருக்கும் கதையாடலில்... வெடிக்கும் குமிழ்கள் அமிலத்துடன் இருப்பதை பாருங்கள் காமராஜ்... கதையை எதை நோக்கி நகர்த்த வேண்டும்...முடிவு நோக்கி நகர்த்த வேண்டும் என்று ஏன் நினைக்கிறீர்கள்? உங்களுக்கு நூறு பேர் சாமியாடியது, ஒரு சென்சேஷனல் செய்தியாய் இருக்கிறது... அய்யோ... எவ்வளவு பெரிய அநியாயம்... முதலாளித்துவம், தொழிலாளர்கள் என்ற கோபம் வருகிறது... எனக்கும் உங்கள் போல கோபம் உண்டு... சொட்டு சொட்டாய் வழிந்து நிரம்புகிற கோபம்... உங்களுக்கு அடித்துக் கொண்டு ஓடும் வெள்ளப்பெருக்கு கோபம்... இது தான் வித்யாசம்...

ஒரு விஷயம் நடக்கிறவரை அதைப்பற்றிய அக்கறையில்லாத அல்லது அதைப்பற்றிய அவேர்னஸ் இல்லாத ஒரு பார்வையாளன் சொல்கிற கதை... படிப்பவர்களுக்கு இது ஒரு அனுபவம்... என்ற கோனத்தில் தான் இதை எழுதினேன்... இன்னும் கதையெங்கும் கோபமுடிச்சுக்கள் இல்லை தான்... நான் எழுத்தாளன் இல்லை... ஒரு பார்வையாளன் மட்டுமே...காமராஜ்... ஆனா மனசெங்கும் ஆசை இருக்கு... நிறைய எழுதணும்னு...

அன்புடன்
ராகவன்

ராகவன் said...

அன்பு சுந்தர்ஜி,

மந்தபுத்தி என்று சொன்னதற்கு காரணம் எனக்கு நிஜமாகவே புரியாதது தான்... இன்னும் ஒருமுறை வாசிக்கும் போதும், உங்கள் பின்னூட்டம் எனக்கு புரியவில்லை சுந்தர்ஜி...

காமராஜின் பின்னூட்டத்தில் எனக்கு உடண்பாடில்லை... எதற்கு நாசூக்குத் தனம் எல்லாம், எனக்குப் புரியவில்லை... சொல்ல வந்ததை ஏன் சொல்லாமல் தயங்குகிறார் என்று புரியவில்லை. நான் இதை காமராஜிற்கே ஒரு பின்னூட்டமாய் எழுதியிருந்தாலும், திரும்பவும் வலியுறுத்துகிறேன். காமராஜ், மாதவராஜின் அன்பு எனக்கு வரம்... அதில் எப்போதும் குறைவில்லை... ஆனால்... இடித்துக்கூறுவதில் தான் குறையே...

உங்கள் கைகள் அள்ளிய நீர் வாசித்துள்ளேன். இனி பின்னூட்டமும் இடுகிறேன்...

அன்புடன்
ராகவன்

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

மு.மேத்தாவின் கண்ணீர்ப்பூக்கள் முன்னுரையில் வெங்கட்சாமிநாதன் சொல்லியிருப்பார்:”இவர் என்றாவது ஒருநாள் கவிஞராகலாம்-இந்தியாவில் 35வயதுக்கு மேலுள்ள எல்லோரும் ஜனாதிபதியாகலாம் என்பது போல்”.

அந்த முன்னுரையை வெளியிட்ட மேத்தாவின் தைரியம் எனக்குப் பிடித்திருந்தது.இதே போல் சொல்ல எனக்கு வராது.

ஒரு பந்தியில் சாம்பாரில் உப்பு அதிகமாய்விட்டதை தனியே சமையல் காரரின் கையப் பிடித்து நாசூக்காய் சொல்வதைத்தான் நான் விரும்புவேன். அதுதான் காமராஜின் கமெண்ட்டிலும் எனக்குப்பட்டது.

நான் சொல்ல வந்தது புரியாது போய் விட்டால்தான் என்ன ராகவன்? விட்டுத் தள்ளுங்கள்.

எனக்குப் புரியாத விஷயங்களில் அதிக நேரம் செலவிட விரும்பமாட்டேன்.

அம்பிகா said...

ராகவன், நிஜத்தில் இதைப் போல நிறைய அங்காடிதெருக்கள் இருக்கத்தான் செய்கின்றன. ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்த பெண் , அதுவும் மூத்தப் பெண்ணாய், பாரம் சுமப்பதன் வலிகள், ஒரு இளைப்பு நோயாளியின் அவஸ்தைகள், அவர்களது சின்ன சின்ன உணர்வுகள் அத்தனையையும் படம் பிடித்துக் காட்டியிருக்கிறீர்கள், உங்கள் வழக்கமான எழுத்துநடையில்.
நல்லாயிருக்கு ராகவன்.

ராகவன் said...

அன்பு சுந்தர்ஜி,

நமது கடிதங்கள் இவ்வாறாகத் தொடர்கின்றன.

காமராஜ் என்னுடன் இது பற்றி பேசும்போது இன்னும் நிறைய பேசினார், அதைச் சொல்லவில்லை... நான் வலுக்கட்டாயமாக புடுங்க வேண்டியிருக்கிறதை அதையும்... வேண்டி தானே கேட்கிறேன்... பூக்களானாலும், கற்களானாலும். சுந்தர்ஜி... உங்கள் கருத்தும் எனக்கு உடண்பாடே... நாசூக்காய் சொல்வது... எனக்கு இன்னும் சொல்ல நினைத்ததை சொல்லாமல் விட்டது தான் குறையே... என்று தான் தோன்றுகிறது...

மேலும் உங்கள் கருத்து எனக்கு புரியாமல் போனதற்காய் நான் வருந்துவது, உங்களிடம் வந்து திரும்பவும் கேட்பதன் காரணம்... நான் எனக்குச் சொன்ன விஷயங்களை நான் இழந்துவிடக்கூடாதே என்ற ஆதங்கம். எனக்கென எழுதிய வார்த்தைகள் எனக்கு புரியவேண்டும் என்று தான் கேட்கிறேன்... சுந்தர்ஜி! என்னை தவறாக எடுத்துக் கொள்ளவேண்டும்... என் கேட்கும் தொனியில் தவறிருந்தால்...

அன்புடன்
ராகவன்

ராகவன் said...

அன்பு சுந்தர்ஜி,

உங்கள் அலைபேசி எண் கொடுங்கள்... பேசுகிறேன்... குரல்வழி தொடர்பு தேவை என்று படுகிறது.

எனக்கு அம்மிணி மாதிரி... எல்லாரையும் தொட்டுப் பேச ரொம்ப பிடிக்கும்... உள்ளங்கை வெப்பத்தில் ஆயிரம் சொல்ல முடியும்... என்பதும்... தொட நீட்டுகிறேன்... சுந்தர்ஜி!

அன்புடன்
ராகவன்

kashyapan said...

டெல்லியிலிருந்து வரும்போது உசிலம்பட்டி இளைஞன் தாய் தங்கை, மனைவி குழந்தயுடன் வ்ந்து கொண்டிருந்தார். அமிர்தசரஸ் அருகில் பிஸ்கட் கம்பெனி வைத்திருக்கிறார்.குடும்பமே உழைத்து சாப்பிடுகிறது. முறுக்கு போன்ற எண்ணப்பலகாரம் செய்பவர்கள் போபல், லக்னௌவில் உள்ளார்கள். ,விளாத்திகுளம் என்று வந்தவர்கள். அம்பை, ஆழ்வார்குரிச்சி,கரர்கள் கை வண்டியில் தோசை சுடச்சுட விற்கிறார்கள்.அவர்களிடம் பெச்சுக்கொடுப்பேன். அவர்களிடையே ஏராளமான ராமதிலகம்,பாண்டி மச்சான் கள் உள்ளனர்.புதிய மனிதர்களை காட்டுகிறீர்கள்.எழுதுங்கள். எழுத எழுத மெருகேரும்---காஸ்யபன்

sakthi said...

நீ அதைப் பற்றி எங்கும் குறிப்பிடவில்லை... வேறு யாரும். எங்கோ தவறு செய்கிறேன்... சொல்ல முனைவதில்.

ரொம்ப பின்னூட்டங்களை பற்றி யோசிக்காமல் அடுத்த கதையை எழுத ஆரம்பியுங்கள் ரொம்ப கேள்வி கேட்டால் எனக்கு பதில் சொல்லத் தெரியாது :))))))

sakthi said...
This comment has been removed by the author.
சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

நாம் தொலைபேசியில் பேசியதன் தொடர்ச்சி இது ராகவன்.

இது உங்களுக்கான பிரத்யேகக் கடிதம்.

நாம் இனி மாற்று குறித்து சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் ராகவன்.

யாரின் பின்னும் இனிச் செல்லாது நாம் முன்நின்று அடிப்படையிலிருந்து எல்லாவற்றிலும் மாற்றத்தைத் தொடங்குவது மிக அத்தியாவசியம்.

எல்லாக் கட்சிகளும் அவரவர் பங்குக்கு அவரவர் ஆட்சிக் காலங்களிலோ ஆளும் மாநிலங்களிலோ பல வகையான வீழ்ச்சிக்கும் காரணமாக இருந்திருக்கிறார்கள்.

அடிப்படைக் கட்டமைப்பிலிருந்து தெளிவான சிந்தனையும் லாப நோக்கற்ற நெடுந்தூரப் பயணத்துக்கு நம்மைத் தயார் படுத்திக் கொள்வோம்.

மதம் மொழி இனம் ஜாதி இவையெல்லாம் நான்கு சுவர்களுக்குள் அடைபடட்டும்.

நம் கவனம் இனி திசைதிருப்புதல்களுக்கு ஆட்படாது யார் பெரியவர் சிறியவர் என்ற அகங்காரம் தொலைத்து ஒரு பெரும் இயக்கத்துக்கான நம்பிக்கையுடன் தமிழகத்திலிருந்து இந்தச் சுடரை ஏற்றுவோம்.

பிற மாநிலங்களுக்கும் பின் இந்தியா முழுமைக்குமான வெளிச்சமாயும் விடியலாயும் இது சுடர் விடட்டும்.

முதலடி எடுத்து வைக்க முனைவோம்.நாட்டை நேசிப்பவர்களை இணைப்போம்.அடுத்த தலைமுறைக்கான விடுதலைப் போராட்டமாக இது இருக்கட்டும்.

காத்திருக்கிறேன் அருமை ராகவன்.

பாலா said...

பார்வை மனத்துக்கு மனம் மாறிக்கொண்டே போகிறது அண்ணா .
இந்த நாயகி இயங்கும் தளம் பற்றி சிறிதளவும் அற சிந்தனையே இல்லாமல் அவளையே சுற்றிக்கொண்டு நிற்கிறேன் ...
திறக்கவே தேவை இல்லாத திறந்து கிடக்கும் களம் , திறவுகோல் தேடிக்கொண்டு நிற்கிறேன் .

மாதவராஜ் said...

அங்காடித்தெருவின் சாயல் இருப்பினும், அதைத் தாண்டிச்செல்லும் இடங்கள் இருக்கின்றன.முக்கியமாக கேர்ஃபிரீ. ஒரு பெண்ணுள்ளம் பேசுகிற கதையாக வந்திருக்கிறது. இன்னும் இந்தக் கதையை ராகவனால் அழுத்தமாகச் சொல்ல முடியும் என்று தோன்றுகிறது. இந்த மனிதனுக்குள் வாழ்க்கை எப்படியெல்லாம் கொட்டிக்கிடக்கிறது!

எழுதித் தாருங்கள் ராகவன்!

ராகவன் said...

அன்பு மாதவராஜ்,

மனசும், புத்தியும் ஒரு சேர காத்திருக்கும் தருணங்கள்... உறவு ரீதியான பகுப்பில் மனசும், உணர்வுகளும், டெக்னிகல் பார்வைக்காக புத்தியும் உட்கார்ந்திருக்கிறது ஒவ்வொரு சமயமும்... குளத்தில் கல்லை எறிந்து விட்டு சலனத்திற்காய்...

இன்னும் அழுத்தமாக சொல்லியிருக்கலாம்... அல்லது சொல்லவேண்டும் என்ற கருத்துக்கள் எனக்கு திரும்ப திரும்ப வருகின்றன... மேம்போக்காய் சொல்லிவிட்டு போகும் சில விஷயங்கள் எவ்வளவு தீவிரமானவையாக இருந்தாலும் அது போய் சேருவதில்ல்லை... நீங்கள் கவனித்த கேர்பிரீ போல... இன்னும் நிறைய விஷயங்கள் சம்பாஷனைகளல்லாது விவரிப்பிலும் சொல்லிக் கொண்டே நகர்கிறேன்...

இதில் occupational diseases, புலம் பெயர்தல், பணிச்சூழல், கட்டாயத் தொழிலாள்ர்கள், exploitation, மருத்துவவசதியிண்மை, மனஇறுக்கம், எக்ஸ்ப்ளோசிவ் அட்மாஸ்பியர்... என்று தொட முயற்சித்த விஷயங்கள் சரியாக சொல்லப்படவில்லை என்பது எனக்கு வருத்தமாக இருக்கிறது... முயல்கிறேன் மாதவராஜ்... கண்டிப்பாக... ஆனாலும் ஒவ்வொரு படியாய் ஏறிக்கொண்டே தான் இருக்கிறேன். வாழ்த்துக்கும் அன்புக்கும் ஆயிரம் நன்றிகள்!

அன்புடன்
ராகவன்

ராகவன் said...

அன்பு பாலா,

எப்படி இருக்கிறே? உனக்கும் எனக்குமான பெண்கள் பற்றிய புரிதல்கள் அனேகமான இடங்களில் ஒத்துப்போகிறது... உன் கருத்துக்கும், வாழ்த்துக்கும்

அன்பும் நன்றியும்
ராகவன்

Anonymous said...

கதை ரொம்ப நல்லா இருந்துது....ஒரு சின்ன correction.
"பெரிய பந்தாவிட்டுட்டு இருப்பா எப்பப் பாத்தாலும், அவ மூஞ்சியும், மொகரையும். எவளாவது அவகிட்ட வருவானா என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள்.".......
இதுல எவனாவதுன்னு தான் வரும் இல்ல......