Thursday, January 06, 2011

சுனை நீர்...

அங்கணக்குழிக்குள்ள கிடந்த சாமானெல்லாம் ஒருவழியா தேய்ச்சுட்டு நிமிரும் போது அப்படியே குறுக்கு பிடிச்சுக்கிறா மாதிரி இருந்தது, தாள மாட்டாம வலி.  இந்தப் பலக வேற ஒரு பக்கம் ஆணி புடுங்கிட்டு, ஒருசாய்ச்சு உக்காந்து பாத்திரம் தேய்ச்சதில ஒரு பக்கம் பின்னாடியெல்லாம் கடுத்துப் போச்சு, தேய்ச்ச பாத்திரத்த எல்லாம் கவுத்திப் போட்டுட்டு, மெதுவாக நிமிர்ந்த பூஞ்சோலைக்கு நாளைக்கு காலைல நல்ல தண்ணிக்கு எழும்பணுமேன்னு இப்பவே அச்சலாத்தியா இருந்தது.  என்ன ஒரு நாறப் பொழப்பு இது?  மதுரையில பொறந்து இங்க வந்தா வாக்கப்படணும், எல்லாம் எந்தலையெழுத்து? பூஞ்சோலை புருஷனுக்கு மதுரையா இருந்தாலும், பொழப்பு இங்க தான். இங்க வந்து தான் மெஷின் கட்டிங் பட்டறை வச்சிருக்காரு, மதுரையிலேயே இருந்தா, போட்டி அதிகமாம், சல்லி சேக்க முடியாதாம். எல்லாத்துக்கும் காரணம் இருக்கு இந்த உலகத்தில.

பூஞ்சோலைக்கு இந்த வருஷம் தான் கல்யாணமாச்சு, அவ இந்த ஊருக்கு வந்ததில இருந்து இதே தண்ணிப் பிரச்னை தான். மதுரையிலே என்னமோ வெய்யக்காலத்துல தான் வரும் தண்ணீப்பிரச்னை. மதுரைல இருக்கிற தண்ணீ பிரச்னையே வேறமாதிரி, சமைஞ்சு வீட்டுக்குள்ளேயே கிடக்கிறவளுக்கு, தண்ணீ வரநாளுக்க தான் திருவிழா.  நாலுமணிக்கே கீழ் வீட்டு மாமா, மாதுவையும், கோபாலையும் எழுப்பி விட்டுடுவாரு. எல்லோரும் சேந்தே தண்ணீக்கு போய் வரிச போட்டு காத்திட்டிருப்பது ஒரு மாதிரி நல்லாயிருக்கும். இங்க அந்த மாதிரி எந்தவிதமான சந்தோசமும் இல்லை. இங்க வெளியூரில் இருந்து வாக்கப்பட்டு வந்த யாருக்கும் இது ஒரு பெரிய குறையாவே இருக்கு. இந்த ஊருக்கே இது ஒரு சாபம் மாதிரி, எப்பவுமே தண்ணிக்கு லோல்பட்டுத்தான் ஆகணும்  என்று நினைத்துக் கொண்டே மெதுவா பட்டாசாலுக்கு வந்து, நிலைக்கண்ணாடியில முடிய ஒதுக்கிட்டு, ஸ்டிக்கர் பொட்ட திருத்தினாள்.

வயிறு ரொம்ப பெருசா ஆயிடுச்சு, வெளிச்சம் பட்டா வயித்துக்குள்ளே அசையறது தெரியுது.  கை வைத்து அசைவை கவனிக்க அவளுக்கு சந்தோஷமாயும் இருந்தது, அழுகையும் வந்தது. அவருக்கு இதிலெல்லாம் கவனம் இல்லை. வேலை முடிஞ்சிட்டு வீட்டுக்கு வர பத்து, பதினோரு மணி ஆயிடும். முக்கால்வாசி நேரம் வீட்ல சாப்பிடுறது இல்லை, சரக்கடிச்சிட்டு வர்ற வழியிலேயே புரோட்டா திண்ணுட்டு வந்து படுத்துடறது, பெரிசா எதிலும் ஈடுபாடு கிடையாது. இவ உண்டான விஷயம் கூட அவருக்கு பெரிய சந்தோசத்தை கொடுத்துடலைன்னு இவளுக்கு தோணியது. ரெண்டு மாசம் தள்ளிப்போன பின்னாடி தான் டாக்டர் கிட்டவே போனா பூஞ்சோலை. டாக்டர் சரோஜா பாத்துட்டு எத்தனை நாளாச்சு பீரியட்ஸ் வந்து என்ற போது ரெண்டு வாரம் ஆச்சுன்னு பொய் சொல்லிட்டா, அவங்க ஏன் முன்னாடியே வரலைண்ணு சத்தம் போடுவாங்களோன்னு பயம்.  ஆனாலும் அவங்களுக்கு ஏதோ சந்தேகம் இருந்தா மாதிரி தான் இருந்தது, ஒண்ணும் கேட்டுக்கிடலை.

பாவாடைய இறுக்கிக் கட்டமுடியலை, பாவாடையே கட்டாம, பேசாம நல்ல பருத்திச்சேலை மட்டுமெ கட்டிக்கிட்டா சுகமா இருக்கும். அதும் பழம்புடவைன்னா வயித்த யாரோ பிரியமானவங்க பிடிச்சுக்குற மாதிரி இருக்கும்னு தோன்றியது அவளுக்கு.  கண்ணாடிய விட்டு நகன்று, நேற்று வாங்கி வந்த வாழைப்பூவ எடுத்து சொளகுல போட்டுக்கிட்டு முன்நடை திண்டில் வந்து உட்கார்ந்தாள்.  பட்டாசால், முன் நடையவிட உயரமா இருக்கிறதால, காலக் கொஞ்சம் அகலமா விரிச்சு உட்கார வசதியா இருக்கும். முன் நடையிலேயே சிமெண்ட் தொட்டில தண்ணீ இருக்கிறதால, வெறுங்கால வைக்கும்போது குளுகுளுன்னு இருக்கும். வாழப்பூவை ஆய்ந்து, ஒவ்வொரு பூவிலேயும் இருக்கிற நரம்ப பிடுங்கிக் கொண்டிருந்த போது அவளுக்கு மாதுவின் ஞாபகம் வந்தது. இன்னைக்கு காமாட்சிஅம்மன் கோயில் பொங்கலுனால மாது ஸ்ரீவில்லிபுத்தூருக்கு வரும்னு பிரபா அண்ணே சொல்லிட்டுப் போச்சு. மாது பொங்கலுக்கா வருது, இவளுக்காகத்தான் வருதுங்கிறது பிரபா அண்ணனுக்குத் தெரியாது.

மாது மதுரையில் இவர்கள் குடியிருந்த வீட்டு மாமாவோட முதப்பையன்.  கருப்பா, உயரமா, களையா இருக்கும். அவங்க வீடு இவங்க வீட்டு காம்பவுண்டிலேயே இருந்தது. இவளுக்கு கல்யாணம் ஆகும்போது அது காலேஜுல ரெண்டாவது வருஷம் பி.காம் படிச்சுட்டு இருந்தது, மதுரை வெள்ளைச்சாமி நாடார் காலேஜுல.  நல்லாப் படிக்கும், இவளுக்குக்கூட பத்தாவது படிக்கும்போது கணக்கெல்லாம் சொல்லித்தரும். அது சொல்லிக்குடுக்குறது புரியலேண்ணா கோபம் பயங்கரமா வரும், மண்டையிலே குட்டும். ஆனாலும் இவ மேல தனிப்பிரியம் அதுக்கு.  அதுக்கு வாழப்பூவுக்குள்ள இருக்கிற மொக்குன்னா ரொம்ப பிடிக்கும்.  அதுக்காகவே இவளின் அம்மாவும், மாதுவின் அம்மாவும் வாழப்பூ ஆயும்போதெல்லாம் மாதுவைத் தேடுவாங்க.  மாதுவை எல்லாருக்கும் பிடிக்கும், ஸ்ரீவில்லிபுத்தூர்ல கூட நிறைய பிரண்ட்ஸ் அதுக்கு. அது எல்லார்கிட்டயும் பிரியமாப் பேசும், அதோட குரலே ஒருமாதிரி கேட்க சுகமா இருக்கும். மாதுவுக்கு ஜேசுதாஸ் பாட்டுன்னா உயிரு, கொஞ்சம் கொஞ்சம் ஏசுதாஸ் மாதிரியே பாடும் கூட.  வருஷம் 16 பாத்துட்டு அதே மாதிரி பாடிக்கிட்டு இருக்கும், கண்மணியே ராதையெனும்...னு.

வாழப்பூவை ஆய்ந்து முடித்து, வாழப்பூ மொக்கை தனியாக எடுத்து மாடத்தில் வைக்க எழுந்த போது, ஒரு மாதிரி கண்ணைக்கட்ட சுவற்றைப் பிடித்துக் கொண்டாள். மெதுவாய் தொட்டிப்பக்கம் நகர்ந்து, சில்லென்ற தண்னீரை முகத்தில அடித்துக் கொண்டு, கொஞ்ச சுதாரித்தவள், வாழப்பூ பொறியல் பண்ணுவதை கொஞ்சம் தள்ளி வைத்துவிட்டு, கட்டிலிலே சாய்ந்தாள்.  அப்போதான் ஃபேனைப் போடாம படுத்துட்டமேன்னு தோன்றியது, எழுந்திரிக்க சோம்பல் பட்டு அப்படியே படுத்தவள், உறங்கியும் விட்டாள்.  யாரோ கதவைத் தட்ட எழுந்தவள் மணி ரெண்டானது தெரிந்ததும், ஒண்ணுமே செய்யலையே இன்னும், அவரு சாப்பிட வந்துடுவாரே என்று நினைத்துக்கொண்டே வாசலில் யாரென்று பார்க்க கதவைத் திறந்தவள், பக்கத்து விட்டு ஈஸ்வரி இருப்பதை பார்த்துவிட்டு,
என்னடி! பள்ளிக்கூடம் போகலையே வீட்ல இருக்க? இன்னைக்கு காமாச்சியம்மன் கோயில் பொங்கல்னு மத்தியானமே லீவு விட்டுட்டாங்க! என்றவள், அக்கா! செம்மண் உருண்டை இருக்காக்கா, வாசல்லா பெரிசா தேர்க் கோலம் போடச் சொல்லுச்சு அம்மா!
தாரேன், அப்படியே என் வீட்டு முன்னாடியும் போட்டுடறியா? தேர்க்கோலம் வேண்டாம், மயில் கோலம் போட்டுடு! எனக்கு மயில்கோலம் தெரியாதே! என்றவளிடம், ஒரு கோலப்புத்தகத்தையும், பாத்ரூம் பக்கத்துல இருந்த இரண்டு செம்மண் உருண்டைகளையும் கொடுத்தவள், ஏடி! வெயில் தாழப் போடுடி..இப்பப் போட்டா, சின்னப்புள்ளைக விளையாடுறேன்னு அழிச்சுப்புடுவாங்க என்று வீட்டுக்குள்ளே திரும்பினாள்.

வேக வேகமா பாசிப்பருப்பை கொஞ்சம் நல்லெண்ணெய் ஊத்தி வேகப்போட்டுட்டு, பருப்பு வேகறதுக்குள்ள அரிசி களைஞ்சு உலையும் ஏத்திவிட்டு வந்தவள், அதிகம் வேர்த்து ரவிக்கையோரமெல்லாம் தொப்பலாய் நனைந்து விட அதை மாற்றும் போது தான் கவனித்தாள். வழக்கத்திற்கு அதிகமாய் மாரு இப்போ பஞ்சுபோல இருப்பதை, மாருல பால் வர்றதுக்கு முன்னால இதுபோல ஆகுமோ, யாரைக்கேக்கலாம் என்று நினைத்தவள், சரி டாக்டர்கிட்டயே செக்கப்புக்கு போகும்போது கேட்டுக்கலாம் என்று நினைத்துக் கொண்டாள்.  நிறைய மாற்றங்களுடன், உடல் அவஸ்தையும் வேதனையும், உதவிக்கு ஆளில்லாத தனிமையும் அவளுக்கு மேலும் சிரமமாய் இருந்தது. தனியாய் இருக்கும் போதெல்லாம், பழைய நினைப்புகள் மட்டும் தான் அவளுக்குத் துணைஎன்று தோன்றியது.

அவரு சாப்பாட்டுக்கு வர நேரமாச்சு, அவரு வருவதற்குள் சமைக்கணும் வரும்போதே வெண்ணித்தண்ணியை கால்ல ஊத்திட்டு தான் வருவாரு என்று நினைத்துக் கொண்டே பருப்பையும் சோறையும் வைத்தவள், வாழப்பூ வைச்சா நேரமாகும்ணு, மிச்சம் இருக்கிற ரெண்டு உருளைக்கிழங்கப் பொடிப்பொடியா நறுக்கி எண்ணெயில் வதக்கினாள், உப்பு, மஞ்சள் கொஞ்சம் மிளகாய்த்தூளும் போட்டு. மத்யானச் சாப்பாடு ஒண்ணு தான் அவரு உருப்படியா சாப்பிடற சாப்பாடு. சாப்பாட்டுக்கு வரும்போது பெரிசா பேசறதில்லே. இது வேணும், இது வேண்டாம்னு சொல்றது கிடையாது. எத செஞ்சு போட்டாலும், ஒண்ணுமே சொல்லாம சாப்பிட்டுட்டு போயிடுவாரு.  ஏதாவது வாங்க வேண்டியது இருந்தா, பட்டறப்பையன அணுப்பி வைக்கப் பேசுவதோடு சரி, மற்றபடி அவங்க் வீட்ல இருந்து யாராவது வந்தா நல்லா பேசுவாரு, அவங்க போனவுடனே திரும்பவும் அதே மாதிரி. பூஞ்சோலையின் அப்பா, அம்மா வருவதில்லை பெரும்பாலும். கல்யாணமாகி உண்டாகியிருக்கிற தகவல் சொல்லும்போது அம்மாவும், மாதுவின் அம்மாவும் வந்தது அவ்வளவுதான்.

காமாட்சியம்மன் கோயில் பொங்கல் அத்தனை விசேஷமானது என்பது ஒருமுறை கல்யாணம் ஆவதற்கு முன்னால் பிரபா அண்ணனின் வீட்டிற்கு வந்த போது தான் தெரிந்தது.  ஏறக்குறைய இரு நூறு, முன்னூறு வீட்டார்களும் சேர்ந்து வரிசையா பொங்கப்பானை வச்சு பொங்கல் வைப்பது. ஒரே புகையா இருக்கும், பனை ஓலைகளுக்கும், கருவ மரங்களுக்கும் தான் கிராக்கி அன்னைக்கு. யாரு வீட்டு பொங்கப்பானை முதல்ல பொங்குதோ அவங்க வீட்டுக்கு தான் பூஜையில முன்னுரிமை. இவ வந்திருந்தபோது பிரபா அண்ணன் வீட்டு பொங்கப்பானை தான் முதல்ல பொங்கியது.  பொங்கல் பானை வைக்க அடுப்புக்கல்லே தினுசுதினுசா இருந்தது.  சிலபேரு குத்துப்போனி அச்சுல செஞ்சிருப்பாங்க சில பேரு, எண்ணெய் டின் அச்சுல கொஞ்சம் வசதியான ஆட்கள்லாம், இரும்பு உருக்குல ரெடிமேடா செஞ்ச அடுப்புக்கல்லா வச்சிருப்பாங்க. 

பிரபா அண்ணன் வீட்ல இருப்பது குத்துப்போனி அச்சு, செம்மண்ணை குழைச்சு, அச்சுல போட்டு காய வச்சு, அதுல நல்லா செம்மன் பூசி மொழுகி, அதற்கு மேல சுண்ணாம்பை ஒழுகவிட்டு சுத்தி கோடுகளப்போட்டு, சுட்டு செய்றதே ஒரு பெரிய வேலை, பொங்கலுக்கு முன்னால. பிரபா அண்ணன் வீட்டுது குத்துப்போனி அச்சு, மத்த அடுப்புக்கல்ல விட சின்னதா இருக்குங்கிறதால, பொங்கப்பானை சீக்கிரம் பொங்கிடுச்சுப் போல.  எல்லாம் பூஞ்சோலை வந்த யோகம் தான்னு பேசிக்கிட்டது, இவளுக்கு கொஞ்சம் பெருமையாவே இருந்துச்சு, மாது அந்த வருஷம் பொங்கலுக்கு வரலை ஏதோ பரீச்சை இருக்குண்ணு சொல்லிட்டது.  இந்த வருஷம் மாது வரும்போது இவளுக்கு பொங்கல் வைக்க ஆசையா இருந்தது, ஆனா பூஞ்சோலையோட மாமியார் தான் அதெல்லாம் வேண்டாம்னு இந்த நேரத்துல, அடுத்த வருஷம் குழந்தையோட வந்து பொங்க வைக்குதேன்னு வேண்டிக்கோ! என்று சொல்லிவிட்டார்கள். இவரு அவங்க அம்மா சொன்னா மறுபேச்சு பேசமாட்டார். 

மாதுவுக்கு வீடு தெரியுமான்னு தெரியலை, பிரபா அண்ணனை கூட கூட்டிட்டு வரும்னு தோன்றியது இவளுக்கு. பிரபா அண்ணன் இருந்தா நல்லா பேசமுடியாது. அது மட்டுந்தான் பேசிக்கிட்டு இருக்கும். பிரபா அண்ணனையும் பார்த்து நாளாச்சுதான் என்றாலும், இப்ப வேண்டாமென்று மனசுக்குள் காமாட்சி அம்மனை வேண்டிக் கொண்டாள்.  அவரு வந்துட்டாரு போல, கதவு சத்தம் போட்டது, அப்ப தான் தெரிஞ்சது, ஈஸ்வரி போகும்போது சரியா கதவ சாத்தாம போயிட்டா போல என்று. அவரு தான் வந்துட்டாரு! வந்தவர் நேரா பாத்ரூமுக்கு போயிட்டாரு. தண்ணி விழற சத்தம் கேட்டது, முன் நடையிலேயே கழுவலாம், சிமெண்டு தொட்டி தண்னிய எடுத்து, ஆனா எப்பவும் உள்ள போயி தான் கழுவுவாரு.  எதுவும் சொல்லமுடியாது, கோபத்தில மூஞ்சிய பாக்கமுடியாது, பேசாம இருக்கிறது தான் உத்தமம் என்று நினைத்து கொண்டாள். 

கைகால் முகம் கழுவிட்டு வெளியே வந்தவன்,  பச்சைத்துண்ட எங்க காணோம்? மேலையும் கீழையும் பார்த்துட்டு, இங்க தான் போட்டுட்டுப் போனேன்? என்றான். இல்லேங்க! கஞ்சி போட்டா மாதிரி மொடமொடன்னு இருந்துச்சுன்னு துவைச்சுப் போட்டேன், இருங்க எடுத்துட்டு வரேன்!  மடித்த துணிகளுக்கு மத்தியில் இருந்த துண்டு, இப்போ மெத்தென இருந்தது. எடுத்து வந்து கையில் கொடுக்க, இந்த கொடியிலே போடு எடுத்துக்குறேன் என்றவன், திரும்பவும் சிமெண்டு தொட்டியில் இருந்து ஒரு சொம்புத் தண்னிய எடுத்து காலில் ஊத்திக் கொண்டான். பாத்ரூமிற்குள் இருந்து வந்தவுடன், காலில் ஏதோ அழுக்கு ஒட்டிக் கொண்டது போல. துண்ட கையில வாங்கமாட்டாரு, துண்டுன்னு இல்லை எதையுமே, தண்னியோ, காப்பியோ அல்லது பலகாரத்தட்டோ கீழே வச்சாப் போதும் கையில வாங்கமாட்டாரு, அது என்னவிதமான பழக்கமோ எங்கேயிருந்து கத்துக்கிட்டாரோ, எதுலயுமே ஒட்டில்லாம இருக்க என்று தோன்றியது அவளுக்கு. துண்ட எடுத்து துடைச்சிட்டு, சாப்பாட்டுக்கு உட்காந்த பத்து நிமிஷத்துல சாப்பிட்டு முடித்தான்.  


உடனே கிளம்பியவனிடம், பட்டறப்பையன அணுப்புறீங்களா? கொஞ்சம் சாமான் வாங்க வேண்டியிருக்கு! எத்தனை மணிக்கு, ஒரு நாலு மணிக்கு அணுப்புனா போதுமா? என்று பதிலை எதிர்பாராமல் செருப்பை மாட்டிக் கொண்டு கிளம்பிவிட்டான் பூஞ்சோலையின் கணவன்.  அவன் சென்றவுடன், அவளும் ஒரு தட்டில் சோறைப்போட்டுக் கொண்டு நேத்து வாங்கிய வெங்காய பக்கோடாவையும் எடுத்துக் கொண்டு சாப்பிட்டு முடித்தவள், மாது வர்றதுக்குள்ள வாழப்பூ வடைக்கு ஆட்டி வச்சுடணும் என்று கடலைப்பருப்பை எடுத்து ஊறப்போட்டாள். ஃபேனை போட்டுவிட்டு கட்டிலில் தலகாணியை நிமிர்த்தி வைத்து சாய்ந்த மாதிரி உட்கார்ந்து கொண்டாள், மடித்து வைத்த துணிகள் நீட்டிய காலில் பட்டதும், ஒதுக்கி வைத்தவள், துணிகளுக்கு அடியே இருந்த குமுதம் கண்ணில் பட எடுத்து படிக்க ஆரம்பித்தாள். கொஞ்ச நேரத்திலேயே ஒண்ணுக்கு வருவது போல இருந்தது, அதுவும் முட்டிக் கொண்டு. இந்த மாதிரி நேரத்துல உடம்புல சர்க்கரை கூட கூடிப்போயிடுமாம், அதுனால கூட யூரின் அடிக்கடி வரலாம். அதுவும் முனுக்கென்று பாத்ரூம் போவதற்குள் வந்துவிடுவது போல எப்போதும். இன்னும் என்னவெல்லாம் இருக்கோ, இவளை பெத்து எடுக்குறதுக்குள்ள! என்று நினைத்துக் கொண்டாள்.

மாது இருந்தா ஏதாவது கதையில் வர்ற நாயகியோ அல்லது ஒரு கதாபாத்திரத்தையோ பற்றி சூழ்நிலைக்கு ஏற்ற மாதிரி சொல்லும். மாதுவுக்கு கதைப்புத்தகம்னா உயிரு ஒரு புத்தகம் விடாது, குமுதம், விகடன், சுபமங்களா அப்புறம் இன்னும் என்னென்னவோ புத்தகங்கள் பேரு படிக்கமுடிஞ்சாலும், அர்த்தம் புரியாது.  மாதுவுக்கு பாலகுமாரன்னா அவ்வளோ பிடிக்கும், இவளையும் படிக்கச் சொல்லி வற்புறுத்தும். ஆனா இவளுக்கு கொஞ்சம் படிக்குறதுக்குள்ளயே அலுப்பாயிடும், தூக்கி வச்சுடுவா. மாதுவால தான் இந்த குமுதம், விகடன் படிக்கிற பழக்கம் வந்ததே. அவளுக்கு பிறக்கப்போகிற பெண்ணை எல்லா புத்தகங்களையும் படிக்கச் சொல்லணும், மாது மாதிரி நிறைய்ய படிக்கணும், படிக்க வைக்கணும். மாது இந்த ஊருக்கு வந்தாலும் லைப்ரரியிலும், ஆண்டாள் கோயிலிலும் தான் கிடக்கும்.  பென்னிங்டன் லைப்ரரி அதுக்கு ரொம்ப பிடிக்கும்.  ரொம்ப கஷ்டப்பட்டு, சந்திரன் வக்கீல் சிபாரிசு எல்லாம் பிடிச்சு மெம்பர் ஆச்சு அதில்.  இவளோட கல்யாணத்தின் போது பார்த்தது, ஆறேழு மாசத்துல எப்படியிருக்கும் என்று நினைப்பு வந்தது. நினைக்கும்போதே அது கட்டியிருக்கிற வேஷ்டியும், நெத்தியில சின்ன கீற்றுப் போல சந்தனமும் தான் ஞாபகம் வந்தது. 

மாது வரும்போது நிலைல இடிச்சுக்கக்கூடாது, மறக்காம தலை குனிஞ்சு வரச்சொல்லணும்.  இந்தத் தெரு பூரா இது போல குட்ட நில வாசலுதான். அந்தக் காலத்து வீடுகள் எல்லாமே. வாசல்ல இருந்து கொல்லப்புறம் வரை ஒரே அடுக்கடுக்கா இருக்கும், அய்யமாருங்க வீடு மாதிரி. இது மாதிரி வீடெல்லாம் மாதுவுக்கு பிடிக்கும், துளசி தீர்த்தம், பெருமாளு, ஆண்டாள் கோயில் யானை, பூசு மஞ்சள், ஆண்டாள் கோயில் வெங்கட்டய்யர் கடை அல்வா என்று யோசிக்கும் போதெ அவளுக்கு பட்டறைப்பையன வரச்சொன்னது ஞாபகம் வந்தது. பாலும் வாங்கச்சொல்லணும், சுடச்சுட அல்வாவும். மாதுவுக்கு ஏனோ பால்கோவா பிடிக்காது, அல்வான்னு பொண்டாட்டியவே வித்துடுவான்னு மாதுவோட அம்மா சொல்லி நிறையமுறை கேட்டிருக்கிறாள். 

கொஞ்சம் கொஞ்சமாக பின் வாசலில் இருந்து வெளிச்சம் நுழைய ஆரம்பித்தது.  நாலு மணியாயிட்டிருக்கும், பட்டறப்பையன் வர்ற நேரமாயிடுச்சு, கதவைத் திறந்து வைக்கலாம் என்று கதவைத் திறந்தவள், வாசலில் ஈஸ்வரி போட்ட மயில்கோலமும் செம்மண் பூசிய வாசப்படியும் பார்த்ததும், இன்றைக்குத் தான் திருவிழா என்பதை உறுதி செய்தது போல இருந்தது அவளுக்கு. கோலத்தையே பார்த்துக் கொண்டிருந்தவள் நிழலாட, நிமிர்ந்தபோது பட்டறைப்பையன் சைக்கிளை கோலத்தின் ஓரத்தில் ஸ்டாண்ட் போட்டு நிறுத்திவிட்டு.. அக்கா கோலம் நீங்களா போட்டீங்க? சூப்பரா இருக்குக்கா? என்றபோது ஒன்றும் சொல்லாமல் சிரித்துக்கொண்டாள்.  அக்கா கடைக்குப் போகணும்னு அண்ணே சொன்னாருக்கா, என்ன வாங்கணுக்கா? என்று வார்த்தைக்கு வார்த்தை அக்கா. கேசவன் பால் பண்ணையில போயி ஒரு லிட்டர் பால் வாங்கிக்கோ, ஆண்டாள் கோயில் வெங்கட்டய்யர் கடையில் அல்வாவும் ஓமப்பொடியும் வாங்கிட்டு வந்துடு...என்று அவன் கையில் நூறு ரூபாயைக் கொடுத்தாள். சைக்கிளை எடுத்துக் கொண்டு கிளம்பியவன், அக்கா சீவல் வாங்கியாறவாக்கா நல்லாயிருக்கும் என்றான். அவனுக்கு சீவல் பிடிக்கும் போல என்று நினைத்துக் கொண்டு சரியென்றாள்.

அவன் தெருமுக்குக்கு போகும்வரை பாத்துக் கொண்டு திரும்ப நினைத்தவள், ராசக்கா மகனிடம் விசாரித்துக் கொண்டு நின்ற மாதுவைப் பார்த்தாள்.  எந்தவித மாற்றங்களும் இல்லை, அதே மாதிரி மடித்துக் கட்டிய வேஷ்டி, ஒரு பெரிய சட்டை அப்புறம் ஒரு ஜோல்னாப்பை புதுசா! பிரபா அண்ணன் உடனில்லாதது அவளுக்கு நிம்மதியாய் இருந்தது.  கையாட்டி கூப்பிட நினைத்து, கூப்பிடாமல் வேடிக்கை பார்த்தாள் என்ன செய்யிறான்னு பார்க்க. ராசக்கா மகன் கையைக்காட்ட திரும்பிய மாது, இவளைக்கண்டதும் மேலும் எதுவும் விசாரிக்காமல், ஏதொ சொல்லிவிட்டு வீடு நோக்கி வரத்தொடங்கினான். அங்கிருந்தே மாது சிரிப்பது அவளுக்குத் தெரிந்தது, சரக்கென்று உள்ளே நுழைந்து, பட்டாசாலில் கண்ணாடியை நோக்கிப்போனாள்.  உள்ளே கீச்சு கீச்சென்ற கத்திய படியே கண்ணாடி சட்டத்தில் அமர்ந்திருந்த குருவி ஒன்று விர்ரென்று பின்கதவு வழி பறந்தது.  முகம் பார்க்க பரவாயில்லை, கண்ணின் கீழே லேசாய் இழுவிய மையை சரி செய்தவள், முந்தானையை திரும்பவும் இழுத்து சரியாய் சொருகிக்கொண்டாள். 

வாசலில் கதவை தட்டியவன், செருப்பை சிமெண்ட் தொட்டியின் எதிர்புறம் தண்ணி கொட்டாத இடத்தில் விட்டான். நிமிர்ந்து பார்த்தவனின் கண்கள் பளீரென்று மிதந்து சிரித்தது மாதிரி பட்டது அவளுக்கு.  படபடப்பு கூடியது போல இருந்தது.  எப்படி இருக்க! என்றவள், அவன் உட்கார கூடைச்சேரை அவனுக்கு எடுத்துப் போட்டாள்.  பரவாயில்ல இங்கேயே உட்கார்ந்துக்கிடலாம்... என்று ஜோல்னாப் பையைக் கீழேயே விட்டு, பட்டாசாலின் முகப்பில் உட்கார்ந்து கொண்டான். கோலம் யாரு போட்டா, உனக்கு கோலம் போடவே வராதே... என்று சிரித்தவன், பையில் வைத்திருந்த வெள்ளரிப்பிஞ்சுகளையும், கிருஷ்ணன்கோயில் மலைக்கொய்யாக்களையும் அவளிடம் கொடுத்தான். இதுக்குத்தான் பை போல, ஒன்றிரண்டு புத்தகங்களும் இருப்பது போலத் தெரிந்தது. கையில் வாங்கியவள், அவனுக்கே அருகிலேயே உட்கார்ந்து கொண்டு, அவன் கொடுத்ததை அருகில் வைத்துக் கொண்டாள். பேச பெரிதாய் ஒன்றும் தோன்றவில்லை, அவன் தான் பேசிக்கொண்டே இருந்தான். பஸ்ஸில் வந்தது பற்றி, வீட்டில் நடந்த விஷயங்கள் பற்றி, அவன் காலேஜ் நண்பர்கள் பற்றி என்று.   நிலாயதாக்‌ஷி, நெட்டிபொம்மைகள் என்று பாலகுமாரனின் சிறுகதை பற்றியும் பேசினான். ஒன்றும் பதில் பேசாது கேட்டுக்கொண்டே இருந்தாள், அவனைப் பார்த்துக் கொண்டே.

உம்பொண்ணு என்ன சொல்றா? என்று அவள் உப்பிய வயிரைப்பார்த்தான். ஏனோ எழுந்து போய் முன் கதவை சாத்திவிட்டு திரும்பவும் அமர்ந்து கொண்டாள்.  பட்டறப்பையன் பால் வாங்க போயிருக்கான், வந்ததும் காப்பி போட்டுத்தாரேன்... கொஞ்ச நேரம் இருப்பதானே? என்றவள் வாழப்பூ மொக்கு அருகிலேயே கிடக்க எடுத்துத் துடைத்துக் கொடுத்தாள். உனக்கு ரொம்ப பிடிக்குமே இது! அல்வாவும் வாங்க சொல்லியிருக்கேன்! வேற எதாவது வேணுமா? பூஞ்சோலை கேட்க, எனக்கு உன் வயிறை தான் தொட்டுப் பார்க்கணும் என்ற போது, ஒன்றுமே பேசாது மெதுவாய் அவன் பக்கம் நகர்ந்து, புடவையைத் தளர்த்தி அவன் கையை எடுத்து வயிறின் மீது வைத்தாள். தடக்கென்று எதுவோ தொட, ஓவ்! என்று கையை படக்கென்று எடுத்தவன், சிரித்தான்.  பூஞ்சோலை அழத்தொடங்கியிருந்தாள். 

67 comments:

Raju said...

முடிவு கொஞ்சம் புரியலை ராகவன் அண்ணே..
அப்பறம், வெள்ளைச்சாமி நாடார் காலேஜ் விருதுநகர்லதானே இருக்கு!
:-‍‍)

க ரா said...

மாசமா இருக்கற பொம்பளைக்கு புருசன் இதல்லாம் பண்நுண்ணு நினைப்பா இல்லையா... இம்ம.. அபாரம் ராகவன்.. தலைப்பு எங்கேந்து புடிக்கிறிங்க ராகவன்..

Mahi_Granny said...

அருமையாக சொல்லிக் கொண்டே வந்த கதையின் முடிவு எனக்கு எப்போதும் போல ஷாக் தான்.

மதுரை சரவணன் said...

கதை அசத்தல்.. வாழ்த்துக்கள்.

பா.ராஜாராம் said...

கண்கள் கலங்கி சிறுகதை வாசித்து நாளாச்சு ராகவன்!

இன்று வாய்த்தது! பாலகுமாரன் நினைவு வந்தாலும் உங்கள் தனித்த மொழியும் இருக்கிறது. பூஞ்சோலை- மாதுவின் நட்பையும் மனசால் தடவி உணர்ந்தது போல இருந்தது. மனசால் தடவி உணர்ந்தால்தான் தடவியது மாதிரி. கையெல்லாம் சும்மா ஒரு தோதுக்குதான். வேறு வழி இல்லாமல்தான்.

பூஞ்சோலை மாதிரி அழுவது கூட எவ்வளவு சந்தோசம்! இங்கு அழாவிட்டால், அப்புறம் அழுகைக்கு ஏது அர்த்தமும்? இல்லையா ராகவன்?

so, தொகுப்பு சீக்கிரம்! good!

வினோ said...

முடிவில் ஒரு தொடக்கம் வைத்துவிட்டீர்கள் அண்ணா.....

HVL said...

நீங்க சொன்ன விதம் நல்லாயிருக்கு.

Unknown said...

அண்ணே தலைப்பு புரியல .ஆனா கதை புரியுது . ஒரு புள்ளத்தாச்சி பெண்ணுடைய ஏக்கம் எதிர்ப்பார்ப்புகள் ஆனா தன் கணவனின் பாராமுகம் பற்றிய கதைதான் .என்ன முடிவுதான் கொஞ்சம் ' அப்படி இருக்குமோ ' யோசிக்கவைக்குதுனே . ஒரு வேளை வாசிப்பானுபவத்தின் ஆரம்பத்திலிருக்கும் நான் புரிந்து கொண்டது தவறாக இருக்கலாம்

ராகவன் said...

அன்பு ராஜு,

முடிவு புரியலையா? கொஞ்ச நாள் கழிச்சு புரியலாம் ராஜு! வெள்ளைச்சாமி நாடார் காலேஜ், நாகமலையில யூனிவர்சிட்டி போற வழில இருக்கு... நீங்க மதுரைன்னு சொல்றீங்க, எனக்கு ஆச்சரியமா இருக்கு!

உங்கள் வாசிப்புக்கும், அன்புக்கும் நன்றிகள் பல... தொடர்ந்து வாருங்கள்!

அன்புடன்
ராகவன்

ராகவன் said...

அன்பு இராமசாமி கண்ணன்,

ரொம்ப சந்தோஷமாய் இருக்கு கண்ணன். புள்ளத்தாச்சி ஒரு உன்னதமான நிலை... சர்க்கரை கூடும், மனஅழுத்தம் வரும், ரத்தஅழுத்தம் கூடும், உடல் அவஸ்தைகள் கூடும், குழப்பமாய் இருக்கும்... இத்தனை அவஸ்தையில் புருஷன்காரன் அல்லது அதுக்கு காரணமானவன் ஆதுரமாய், அனுசரனையாய், அன்பாய், காதலாய் இல்லேன்னா எவ்வளவு வேதனை?

அறுத்து, சுட்டு, துளையிட்டு அவஸ்தைப் படுத்தினாலும் நாதஸ்வரம் தருவது இசை தானே கண்ணன்?

தலைப்பு? தெரியலை கண்ணன், எழுதி முடித்தபிறகு தான் யோசிக்கிறேன், அது உங்களுக்கு பிடித்திருந்தால், மகிழ்ச்சி.

வாழ்த்துக்கும், உங்கள் தொடர் வாசிப்புக்கும் அன்பும், நன்றிகளும்.

அன்புடன்
ராகவன்

ராகவன் said...

அன்பு ப்ரோட்டோ அம்மா,

எப்படி இருக்கீங்க? கதையின் முடிவு ஷாக்காய் இருக்கிறதா? கதையின் முடிவு இப்படித் தான் இருக்கும் என்று யூகித்து விட்டதாக என் நண்பன் சொன்னான்...

யூகிக்க முடியாத முடிவுகள் வைக்கணும்னு எழுதல இந்தக் கதையை... ப்ரோட்டோ அம்மா! இதுக்கு முந்துன கதையை நீங்க வந்து படிக்கலையே யோசிச்சுட்டு இருந்தேன்!

உங்கள் தொடர் வாசிப்புக்கும், அன்புக்கும், என் அன்பும் நன்றிகளும்.

ராகவன்

ராகவன் said...

அன்பு சரவணன்,

எப்படி இருக்கீங்க!...ரொம்ப நாளா நீங்க வரவே இல்லை... இந்தப் பக்கம்... பாரா பொண்ணு கல்யாணத்துக்கு போயிருந்ததா நண்பர்கள் சொன்னாங்க!
சந்தோஷம்...

தொடர்ந்து வந்து ஏதாவது சொல்லிட்டுப் போங்க சரவணன்... மதுர எப்படி இருக்கு?

அன்பும், நன்றிகளும்,
ராகவன்

ராகவன் said...

அன்பு பாரா,

சந்தோஷம் பாரா... பாலகுமாரனின் சாயலா... என் கதையிலா... தெரியலையே... ஒரு வேளை பாலகுமாரனைப்பற்றி பேசியதால் இருக்கலாமோ? பரவாயில்லை...

யாருடையோ சம்பந்தமில்லாதவரின் கண்கள், கழுத்து சாய்த்து பார்க்கும் விதம், நடந்து செல்பவரின் முதுகு... அது மாதிரி... ஏதாவது நேர்ந்து விடுகிறது அறியாமல்.

வாழ்த்துக்கு அன்பு பாரா. எழுதி முடிச்சுட்டு எனக்கு அழுகை வந்துச்சு பாரா, உங்க கருத்தை படிக்கும்போதே முட்டிக் கொண்டு வருகிறது...

அதுவும் இப்பெல்லாம் எதுக்கெடுத்தாலும் அழுதுவிடுகிறேன்... தாமிரபரணி சினிமா பார்த்து அப்படி அழுதேன்... கலங்கடித்து விடுகிறது சில சம்பவங்கள், சில மனிதர்கள், சில உறவுகள்...

அன்புடன்
ராகவன்

ராகவன் said...

அன்பு வினோ,

உங்கள் கருத்துக்கும், அன்பிற்கும் ஆயிரம் நன்றிகள் வினோ...

முடிவுன்னு என்ன இருக்கு வினோ?

அன்புடன்
ராகவன்

ராகவன் said...

அன்பு நண்பருக்கு,

உங்கள் கருத்துக்கும், வாசிப்புக்கும் அன்பும், நன்றியும்.

அன்புடன்
ராகவன்

ராகவன் said...

அன்பு மணிவண்ணன்,

உங்கள் கருத்துக்கு நன்றிகள் பல...

இதுல கணவனின் பாராமுகம் மட்டுமே இல்லை மணிவண்ணன்! திரும்ப வாசியுங்களேன்...

தொடர்ந்த வாசிப்புக்கு, அன்பு

ராகவன்

பாலா said...

கடைசி ஒரே வரின்னே எல்லாத்தையும் அடிச்சு தொவைச்சு போட்டுடுச்சு , பெரிய கதைல இன்னம் சுவாரஸ்யமும் , வலியையும் கூட்டியிருக்கலாம். இதை படிக்கும்போது எனக்கு " சாரு" வோட "முள் " ஞாபகத்துக்கு வருது. காரணம் என்னனு புரில .சரியான்னும் தெரில . ஆனா கடைசியா சிலிர்த்துடுச்சு இது மட்டும் உண்மை

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

அற்புதம் ராகவன்.

ஒரு கர்ப்பிணிப் பெண்ணின் உலகத்தை யாருமற்ற ஒரு நாள்த் தனிமையை இதைப் போல் படித்த ஞாபகமில்லை.

வாழைப்பூவிலிருந்து அடுப்பு வரைக்கும் பாத்திரம் தேய்ப்பதிலிருந்து பெண்ணின் பார்வையிலிருந்து ஒரு ஆணைப் பார்ப்பது வரையிலும் எல்லாவற்றையும் பார்க்க ரெண்டு கண் மட்டுமில்லை காரணம். மனசு அதுதான் கருவி.

ஒரு பெண் வெவ்வேறு ஆண்களின் உறவுகளுக்குக் குழப்பமில்லாத வடிவம் கொடுக்கிறாள். ஆணால் அப்படி முடிவதில்லை.

ஒரு ஆணுக்காக எல்லாவற்றையும் விட்டுவந்து ஆனால் எல்லாவற்றையும் சுமந்து திரியும் ஒரு பிள்ளைத்தாய்ச்சியின் மிக நேர்த்தியான ஓவியம் ராகவன்.

கொஞ்சம் உடல்நலக் குறைவு.உடனே வாசிக்கமுடியாமைக்கு வருந்துகிறேன்.

பழசையெல்லாம் சீக்கிரம் வாசித்துவிடுகிறேன்.

நலம்தானே?

ராகவன் said...

அன்பு பாலா,

உன்னுடன் நிறைய பேசிவிட்டேன்... உன் கருத்தைப் பற்றி... கடைசி வரி உன்னை புரட்டிப் போட்டதை நினைக்கும் போது எனக்கு என் ஞாபகம் தான் வந்தது... பெரிய வித்யாசம் இல்லை உனக்கும் எனக்கும்... வயசைத் தவிர... உன்னுடன் செலவழித்த அந்த பதினைந்து நிமிடங்கள் அற்புதமான பிம்பதரிசனமாய் இருந்தது.

அன்புடன்
ராகவன்

ராகவன் said...

அன்பு சுந்தர்ஜி,

உடல் நிலை சரியில்லை என்றதும், உடனே பேசத்தோன்றியது... நிறைய நேரம் என்று இல்லாவிட்டாலும்... பேசியது திருப்தியான விஷயம்.

என் மனைவிக்கும் எனக்குமான காதல் அல்லது பரஸ்பர ஈர்ப்பு வளர்ந்து விஸ்வரூபம் எடுத்தது பாண்டிச்சேரி... மனக்குளவினாயகர் கோயிலில் தான். அவளுக்கு அப்போது கையில் லிகமெண்ட் டியர்... நான் தான் அவளை முழுவதும் கவனித்துக் கொண்டேன்... அது கல்லூரியில் இருந்து வந்த சுற்றுலாக்காலம்.

உங்கள் பிரதிபலிப்பு, எனக்கு ஆச்சரியமாய் இருந்தது. அட சரியாத்தான் சொல்லியிருக்கோம் என்ற திருப்தி வந்தது. பெண்களின் உலகம் அலாதியானது... மிகப்பெரிய ஆச்சரியம் பெண்கள்... எனக்கு. பெண்கள் நீர்ப்பரப்பு... முழுதும் சூழ்ந்த நீர்பரப்பு... நான்கில் ஒரு பங்காய் சுருக்கும் நீர்பரப்பு...

அன்புடன்
ராகவன்

அம்பிகா said...

சுனைநீரின் தித்திப்பு எழுத்து நடையில்...
முடிக்கையில் கண்கள் கலங்கியது நிஜம்.

kashyapan said...

முன் கதவைச்சாத்திவிட்டு வந்தாள்............. அவன் கையை எடுத்து......ராகவன் மிகமிக நுணுக்கமான சித்தரிப்பு வாழ்த்துக்கள்.---காஸ்யபன்

காமராஜ் said...

மாது வருவதற்காகமட்டுமே இந்த பொழுது,நீளமான விவரணை,அப்புறம் பூஞ்சோலை எல்லாம் கத்துக்கிடக்கிறார்கள்.அவன் வரும்போது மெலிதாக ஆரம்பிக்கிற இளையராஜாவின் புல்லாங்குழல் இறுதிவரிகளில் வயலின் நரம்புகளின் அடிநாதத்தோடு முடிகிறது.

மாதவராஜ் said...

கண்கள் பெருக கணிணியின் எழுத்துக்கள் மங்கலாய்.... அற்புதம் ராகவன்!

Unknown said...

அண்ணே ஒரு கதை எழுத முயச்சித்திருக்கிறேன் .உங்களின் மேலான விமர்சனங்களை எதிர்பார்க்கிறேன் . ஒரு கதை சொல்லி உடன் பேசுவது எனக்கு வியப்பளிக்கிறது . உங்களைபோன்ற மூத்த கதை சொல்லி என் கன்னி முயற்ச்சியை விமர்சித்தால் அது எழுத்தை செம்மைபடுத்த உதவும் என கருதுகிறேன்

அன்புடன் நா.மணிவண்ணன்

venu's pathivukal said...

தனது மனைவிக்கு கொஞ்சம் அச்சமளிக்கும் அளவு உடல் நலம் குன்றியிருந்த நேரத்தில், அந்த நண்பருடைய வீட்டுப் பிரச்சனை ஒன்றும் எழுந்து அதன் மீது வழக்கையும் சந்திக்க நேர்ந்தது. அப்படியான துயரங்கள் அடுத்தடுத்துப் பெருகிய ஒரு கணத்தில் ஆலோசனை கலக்க என்னிடம் வந்தவர், அந்த வீட்டைப் பற்றிய பேச்சினூடே, ஏய், வேணு சாதாரண ஹவுசிங் போர்டு வீடு மாதிரித்தாம்பா அது, பெரிய சொகுசு எதுவுமில்ல, ஆனா, ஜன்னல் வழியா பவுர்ணமி வெளிச்சம் படுத்திருக்கிற ஏன் கண்ணுக்கு நேர வந்து விழும் பாரேன், அவ எப்போதும் ஏன் வலது கையைத் தலைகாணியா வச்சுத் தான் படுத்திருப்பா...டேய் அது வெறும் வீடு இல்லடா எனக்கு...." என்றார். நல்ல வேளையாக மனைவி குணமடைந்து மீதி பிரச்சனைகளையும் புன்னகையோடு போராடிக் கொண்டிருக்கிறார், அந்த வீடு இன்னும் அவர் வசம் இருக்கிறது.
தாம்பத்தியத்தில், பரஸ்பரம் ஸ்பரிச சந்தோஷம் என்பது உடலைத் தாண்டி மனத்தைத் தீண்டுவது. மனது ஒன்றாத உடல்கள் இயந்திரகதியில் இயங்கலாம் ஒன்றாய் - ஒருமித்து அல்ல!
மதுரையை விட்டு வந்த ஏக்கத்தில் துவங்குகிற பூஞ்சோலையின் கதை, ராகவன், மதுரையில் பாதி எழுத்தாக மறைந்திருக்கும் மாதுவை விட்டு வந்ததில் இருப்பது சீக்கிரமே வெளிப்பட்டு விடுகிறது. தனக்குப் பெண் தான் பிறக்கும் என்று அவள் தனக்குள் புரிந்து வைத்திருப்பதும், கடைசி காட்சியில், என்ன சொல்றா உன் பொண்ணு என்று மாது கேட்பதும் கருத்தொருமிப்பின் கவிதை நயம்.
நல்ல கணவன் அவன். மனைவிக்கு அவன் உதவத் தயார். அவளை தேவையில்லாமல் கஷ்டப் படுத்துவது பாவம் என்று கூடப் புரிந்து அவள் வழிக்கு வராது விலகி வாழப் பழகிக் கொள்கிற சித்தன் போல கடக்கிறது அவன் வாழ்வு. பூஞ்சோலை கோருவது மனத்துக்கு இதமான பேச்சு. கொஞ்சம் இலக்கிய வாசனை. தங்களுக்குள் நிகழ்ந்த உறவின் இரசாயன பிரதிபலிப்பின் பரவசத்தைப் பருகும் மோகம், இலேசாக மோவாய் தொட்டு, தலையை இதமாக வருடி, என்னடா கண்ணு என்ற ஒரு சின்ன பதில் எதிர்பாராத ஆதுரக் கேள்வி...
யாரும் சொல்லாத ஏக்கத்தை இந்தக் கதை புதிதாக அடையாளப்படுத்திவிடவில்லை....
ஆனால், ஒரு பெண்ணின் பார்வையிலேயே நகர்கிறது ராகவனின் காமிரா. அவளது முதல் குழந்தை உருவாவதன் பரிச்சயமற்ற நாட்களை இத்தனை துலக்கமாகப் பார்க்கத் தெரிகிற பெண் மனது...தவறு, புரிந்து கொண்டிருக்கிற ஆண் பார்வை..அது புதிது ராகவன். நிச்சயம் புதிது. சுஜாதாவின் கதையில் ஏங்கும் பேசப்படாத ஒரு வாலிபனின் பாத்திரம் தங்களது சென்னை வீடு விற்கப்படுகிறது என்று கேள்விப்பட்டு தில்லியில் இருந்து வந்திறங்கி ஓடி வந்து மொட்டை மாடிக்குப் பதட்டத்தோடு ஏறிப் போய்ப் பார்த்து அங்கே சுவரொன்றில் எழுதியிருக்கும் தனது பெயரினருகே இருக்கும் பெயரைத் தொட்டுப் பார்த்து அந்தத் திருமணமான பெண் ஓவென்று அழத்தொடங்கும்போது மட்டுமே வரும்...
இங்கேயும் அழத் தொடங்குகிறாள் பூஞ்சோலை, ஆனால், வயிற்றைத் தொட்டுப் பார்க்க வைத்துவிட்டு! அங்கே இருக்கிறது, புதிய தடம்.
கதையின் தொடுப்பு, முடிப்பு, முன்சுருக்கம் எல்லாமே அழகிய களிமண் சிற்பம் ராகவன்....வாழ்த்துக்கள்.


எஸ் வி வேணுகோபாலன்

Anonymous said...

அற்புதம். வேற ஒண்ணும் சொல்லத் தோணலை.

Deepa said...

Can you hear my applause?
:)

Sriakila said...

படித்து முடித்தபிறகு சுனைநீர் மனதை விட்டு அகல மறுக்கிறது. கதை ரொம்ப நீளமாக இருக்கிறதே என்று யோசித்துக்கொண்டே தான் படிக்க ஆரம்பித்தேன்.

ஆனால் எப்படி முழுக்கதையையும் படித்து முடித்தேன் என்றேத் தெரியவில்லை. ஒரு பெண்ணின் உணர்வுகளை இதைவிட விலாவாரியாக எழுத முடியுமா?

Hats Off Ragavan Sir!

Sugirtha said...

ராகவன்....

என்ன சொல்ல? மனத்தை என்னவோ செய்கிறது இந்த கதை... எப்படி ஒரு கர்ப்பிணி பெண்ணின் சின்ன சின்ன details கூட அப்டியே பதிவு செய்திருக்கீங்க? அருமை...

//அதும் பழம்புடவைன்னா வயித்த யாரோ பிரியமானவங்க பிடிச்சுக்குற மாதிரி இருக்கும்னு தோன்றியது அவளுக்கு.//

பிரியத்துக்கு ஏங்கும் மனது...

//வேற எதாவது வேணுமா? பூஞ்சோலை கேட்க, எனக்கு உன் வயிறை தான் தொட்டுப் பார்க்கணும் என்ற போது, ஒன்றுமே பேசாது மெதுவாய் அவன் பக்கம் நகர்ந்து, புடவையைத் தளர்த்தி அவன் கையை எடுத்து வயிறின் மீது வைத்தாள். தடக்கென்று எதுவோ தொட, ஓவ்! என்று கையை படக்கென்று எடுத்தவன், சிரித்தான். பூஞ்சோலை அழத்தொடங்கியிருந்தாள். //

ராகவன், ராகவன், ராகவன்... வேற ஒண்ணும் சொல்ல முடியல..

'பரிவை' சே.குமார் said...

அண்ணா... அழகாய் கதையை நகர்த்தியிருக்கிறீர்கள்...
முடிவும் ரொம்ப நல்லா இருக்கு.

மாதவராஜ் said...

ராகவன்!

வேணு எவ்வளவு அழகாகச் சொல்கிறார்! சந்தோஷமாக இருக்கிறது.

இளங்கோ said...

கதையை படித்து விட்டு வெறுமை சூழ்ந்ததை தவிர வேறொன்றும் சொல்ல முடியவில்லை.

பா.ராஜாராம் said...

மாது தளத்தில் இருந்து மற்றொருமுறை வந்து வாசிக்கிறேன் ராகவன்,

கதையையும், பின்னூட்டங்களையும்!

வேணு சார், hats off!

தீபா, கவிதை! :-)

சுகிர்தா, மிக முக்கியமான பகுதிகளை உள் வாங்கி, வெளிபடுத்த,.. 'ராகவன் ராகவன் ராகவன்' தளும்பல், அழகு!

எழுதுபவன் இதுக்குதானே ஏங்குகிறான்!

congrats ragavan! :-)

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

மிகப் பிரமாதமான கதை படித்த திருப்தி மனத்துள்.....

இனியா said...

//அதும் பழம்புடவைன்னா வயித்த யாரோ பிரியமானவங்க பிடிச்சுக்குற மாதிரி இருக்கும்னு தோன்றியது அவளுக்கு.//
அம்மா மடியில் படுத்துறங்கும் சுகம் அண்ணா அது......கிடைக்கபெறாதவர்கள் நிறையபேர் இருக்கிறார்கள் என்னையும் சேர்த்து ...........அருமையான பதிவு....... தேங்க்ஸ் பாலா......

ராகவன் said...

அன்பு அம்பிகா,

சந்தோஷமாய் இருக்கிறது உங்கள் வருகையும்... கருத்தும்.

நிறைய பெண்களே வரலைண்ணு தோணுச்சு முதல்ல... அப்புறம் ஒவ்வொருத்தரா உள் நுழைய... திரும்பவும் பெண்களால் சூழப்பட்டேன்...

அன்பும் நன்றிகளும்
ராகவன்

ராகவன் said...

அன்பு காஸ்யபன் அய்யா அவர்களுக்கு,

உங்கள் தொடர்ந்த வருகைக்கும், கருத்துக்கும் ஆயிரம் நன்றிகளய்யா...

அன்புடன்
ராகவன்

ராகவன் said...

அன்பு காமராஜ்,

உங்களுடைய வாசிப்புக்கும், கருத்துக்கும் என் அன்பும் நன்றிகளும் காமராஜ்...

அன்புடன்
ராகவன்

ராகவன் said...

அன்பு மாதவராஜ்,

என்ன சொல்றது ஆசான்...? சுக்ரீவனாய் தழுவுகிறேன்...
அளப்பறியா அன்பு இது... வேணு அவர்கள் சொல்வது போல இது போல ஒரு அன்பு கொண்டாடி இருக்கும் போது எனக்கென்ன கவலை...

அன்புடன்
ராகவன்

ராகவன் said...

அன்பு மணிவண்ணன்,

உங்கள் அன்புக்கு நன்றிகள் பல... உங்கள் கதையை அவசியம் படித்து கருத்திடுகிறேன்...

அன்புடன்
ராகவன்

ராகவன் said...

அன்பு வேணு அவர்களுக்கு,

என்ன சொல்றதுன்னே தெரியலை? அழகான உங்களின் பார்வை என்னை மறுபடி அழவைக்கிறது.

”தனக்குள் புரிந்து வைத்திருப்பதும், கடைசி காட்சியில், என்ன சொல்றா உன் பொண்ணு என்று மாது கேட்பதும் கருத்தொருமிப்பின் கவிதை நயம். ”











நிறைய இடம் விடுகிறேன்... என்ன சொல்வது என்று தெரியாமல்...

அன்புடன்
ராகவன்

ராகவன் said...

அன்பு மிஸ்டர் நைஸ் கை,

உங்கள் வாசிப்புக்கும், கருத்துக்கும் என் அன்பும் நன்றிகளும்...

அன்புடன்
ராகவன்

ராகவன் said...

அன்பு தீபா,

கேட்டது தீபா... உங்கள் கைதட்டல்கள்.

பாரா சொன்னது போல இது ரொம்ப அழகா இருக்கு...

அன்புடன்
ராகவன்

ராகவன் said...

அன்பு ஸ்ரீஅகிலா,

உங்கள் கருத்துக்களுக்கு நன்றிகள் பல...

தொடர்ந்து வாசியுங்கள் அகிலா,

அன்புடன்
ராகவன்

ராகவன் said...

அன்பு சுகிர்தா,

ரொம்பவும் நெகிழ்ச்சியாய் இருந்தது... உங்கள் கருத்தைப் படித்தவுடன்...

பழஞ்சீலையில் இருக்கும் ஒரு மெத்து, பிரியமான கைகளுள் இருக்கும் அணைப்பு, மிகச்சிலருக்கே கிடைக்கும் என்பது ரொம்ப வருத்தமான விஷயம்... சுகிர்தா...

பெங்களூரை ரொம்ப மிஸ் பண்றோம்... நானும் என் மணைவியும்... ஒரு வருஷத்தில் திரும்ப வந்துவிட வேண்டும் என்பது... ஆசை பார்க்கலாம்.

உங்கள் அன்புக்கு என் அன்பும்... சுகிர்தா...

அன்புடன்
ராகவன்

ராகவன் said...

அன்பு குமார்,
அன்பு இளங்கோ,
அன்பு ராமமூர்த்தி,

உங்கள் அணைவரின் கருத்துக்களுக்கும், அன்பிற்க்கும் பதிலாய் என் அன்பும், நன்றிகளும்

அன்புடன்
ராகவன்

ராகவன் said...

அன்பு பாரா, அன்பு மாதவராஜ்,

உங்க ரெண்டு பேருக்கும்... என் அன்பு...

எவ்வளவு சந்தோஷம் உங்க ரெண்டு பேருக்கும்... நம்ம பயடா என்பதில் எத்தனை உரிமை...

மாதராஜ், காமராஜ், பாரா ஒரே அர்த்தம் தான் எல்லாமும்...

அன்புடன்
ராகவன்

Sugirtha said...

பெங்களூர் ஏழு வருட பந்தம், எனக்கும் தாய் பூமி ஆயிடுச்சு :) சீக்கிரம் வாங்க...

உங்கள் மற்ற பதிவுகளையும் படிக்கணும், எத்தனை அருமையாய் எழுதறீங்க ராகவன்!

நன்றி பா.ரா. மனதால் தடவி பார்க்கும் உங்கள் பின்னூட்டமும் அபாரம்!

Sugirtha said...
This comment has been removed by the author.
kalyaani.si said...

நான் பூஞ்சோலையின் கணவன் மாதிரியும் இருக்கு. மாது மாதிரியும் இருக்கு. செம்மண் கோலம் போட்ட செல்வி மாதிரியும், அந்த பட்டறைப் பையன் மாதிரியும் இருக்கு. அந்த மயில் கோலம் கூட நானாகத் தான் இருக்கும்.இவ்வளவு பேரும் நானாக இருக்கிறபோது பூஞ்சோலை மட்டும் வேறு யாராக இருக்க முடியும். அவளும் நான் தான்.
கதவை எல்லாம் சாத்த வேண்டாம் ராகவன். சும்மா அப்படியே திறந்தே இருக்கட்டும். கொஞ்சம் வந்து என்
வயிற்றைத் தொட்டுப் பாருங்க. போதும்.

ராகவன் said...

அன்பு வண்ணதாசன் அவர்களுக்கு,

அய்யோ! எனக்கு அழுகையா வருது...

ரொம்ப சந்தோஷம்... கை நடுங்குகிறது... பற்றிய கையின் வெம்மை கொஞ்சம் ஆசுவாசப்படுத்துகிறது... இது போதும் எனக்கு.

அன்புடன்
ராகவன்

எம்.ஏ.சுசீலா said...

நானும் எப்போதும் மதுரைதான்.இப்போதைக்கு தில்லி..
உங்கள் சிறுகதை பெண்பார்வையை பெண் உபாதையை பெண்மன வலியை அபாரமாக..துல்லியமாகச் சித்தரித்ததன் வழி படைப்பாளியின் கூடு விட்டுக்கூடு பாயும் மாய வித்தையை உறுதிப்படுத்தியிருக்கிறது.
பாராட்டுக்கள்.
உங்கள் கதைகள் தொகுப்பாக வந்துள்ளனவா.

செ.சரவணக்குமார் said...

அன்பு ராகவன்..

என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இரண்டு நாட்களாக வந்து வந்து போய்க்கொண்டிருக்கிறேன். துல்லியமான விவரணைகள் அசரடிக்கின்றன. பூஞ்சோலை, மாது, பூஞ்சோலையின் கணவன் மூவரும் வில்லிபுத்தூர் வீதிகளில் நடிமாடிக்கொண்டிருப்பதாக ஒரு சித்திரம் மனக்கண்ணில் தோன்றி மறைந்தது கதையை வாசித்த இரு முறையும்.

நேற்று பா.ரா அலைபேசியபோது பத்து நிமிடங்களுக்கும் மேலாக சுனைநீர் பற்றியே பேசிக்கொண்டிருந்தோம். கதையை சிலாகித்தும் சில குறைகளைச் சுட்டிக்காட்டியும் தொடர்ந்துகொண்டிருந்தது பேச்சு.

இங்கே மாது, காமு, மணிஜீ, வாசு, பா.ரா, நேசமித்ரன், ராகவன் போன்ற ஜாம்பவான்களுடன் கைகோர்த்திருப்பதை நினைத்தால் பெருமையாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறது ராகவன். விரைவில் இந்தக் கதைகள் தொகுப்பாக வேண்டும் எனும் எனது விருப்பத்தையும் பகிர்கிறேன். ராகவன்.

செ.சரவணக்குமார் said...

//மாதராஜ், காமராஜ், பாரா ஒரே அர்த்தம் தான் எல்லாமும்...//

மிகச் சரியாக சொன்னீர்கள். மாது, காமு, பா.ரா பெயர்கள் மட்டும் தான் வேறு வேறு. மூவரும் ஒரே உருவம் தான் ஒரே அர்த்தம்தான்.

மின்னஞ்சல் முகவரி தெரியப்படுத்துங்கள் ராகவன்.

ராகவன் said...

அன்பு சுசீலா அவர்களுக்கு,

உங்கள் வாசிப்புக்கும், கருத்துக்கும் நிறைய அன்பும், நன்றியும்.

என் கதைகள் தொகுப்பாய் வந்ததில்லை. டில்லி ரொம்ப குளிருதாமே?

அன்புடன்
ராகவன்

ராகவன் said...

அன்பு செ.சரவணக்குமார்,

உங்கள் கருத்துக்கும் அன்புக்கும் நன்றிகளும், என் அன்பும்.

உங்கள் தளத்தையும் தொடர்ந்து வாசிக்கிறேன்... உங்கள் பயணம் சிறுகதை நல்லாயிருந்தது. தொடர்ந்து வாசியுங்கள், நானும் செய்கிறேன்.

ragavansam@gmail.com

அன்புடன்
ராகவன்

Anonymous said...

ரொம்பவும் சுவாரஸ்யமா இருந்தது பா.ரா. இவ்வளோ அழகா ஒரு கர்ப்பிணிப்பெண்ணின் வேலை ,உணர்ச்சி&வலியைஎழுதறதுக்கு உங்களுக்கு முருகன் கிருபை இருக்கிறது என்றுதான் ...தோன்றிற்று.
. பொங்கல் வாழ்த்து
யோகியார்

கார்த்திக் பாலசுப்ரமணியன் said...

மிகவும் நெகிழ்ச்சியான கதை. ஆனால் முடிவை ஜீரணித்துக் கொள்ளும் பக்குவம் வரவில்லை என்று நினைக்கிறேன். ஏதோ நெருடுகிறது. நான் பார்த்த ஸ்ரீவியை கண்முன் நிறுத்திவிட்டீர்கள். அருமை ராகவன்.

rkm said...

அற்புதம் ராகவன். கதையின் முடிவு மனதில் ஒரு சின்ன நெருடல். ஆனால் தாங்கள் எழதிய நடை அபாரம. நான்கு சுவர்களே எல்லையாய் வாழும் ஒரு பெண்ணின் உணர்வுகளுக்கு வேலியில்லை என்பதை சித்தரித்த விதம் பிடித்தது. தங்களின் மற்ற படைப்புகளை தேடுகிறேன்...விரைவில் நிறைய படிக்க ஆசை..நன்றி.

rkm said...

அற்புதம் ராகவன். கதையின் முடிவு மனதில் ஒரு சின்ன நெருடல். ஆனால் தாங்கள் எழதிய நடை அபாரம. நான்கு சுவர்களே எல்லையாய் வாழும் ஒரு பெண்ணின் உணர்வுகளுக்கு வேலியில்லை என்பதை சித்தரித்த விதம் பிடித்தது. தங்களின் மற்ற படைப்புகளை தேடுகிறேன்...விரைவில் நிறைய படிக்க ஆசை..நன்றி.

PPattian said...

ரசித்துப் படித்தேன் கதையை. அருமையான நடை. வாழ்த்துகள்.

கே.ஜே.அசோக்குமார் said...

வம்சி போட்டியில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள்!!

அப்பாதுரை said...

விவரங்கள் மட்டுமல்ல கருவும் சங்கடப்படுத்தியது. எப்படி அனுபவித்து எழுதியிருக்கிறீர்கள் என்று நினைத்தபடி பின்னூட்டமிட வந்தபோது திரு.வேணுவின் பின்னூட்டம் படித்தேன். சற்று நிலைகுலைந்தேன் என்றே சொல்லலாம். அருமையாகச் சொல்லப்பட்டக் கதைக்கு அருமையான பின்னூட்டம்.

பாராட்டுக்கள் ராகவன்!

அப்பாதுரை said...

சுனை நீர் தலைப்பும் அபாரம்.

எஸ் சம்பத் said...

தோழர் மாதவராஜ் நல்ல கதையைத்தான் அவர் தளத்தில் லிங்க் கொடுத்துள்ளார். நானும் மதுரைதான் நண்பரே. இயல்பான பேச்சு நடை. கர்ப்பிணி பெண் புருஷ‌னிடம் எதிர்பார்க்கும் அன்பு, நட்பிடமிருந்து வந்த போது அழுகை இயல்பாய் வரும். இதில் வேறெதுவும் விகல்பமாய் பார்க்க வேண்டியதில்லை. உண்மையிலேயே வெகு நேரம் நீரின்றி நடந்து சென்று தாகம் எடுக்கையில் கிடைக்கும் சொட்டு நீர் என்ன சுகமோ அந்த சுகம்தான் நட்பின் ஆதரவு //சுனை நீர் // வாழ்த்துக்கள்

சம்பத்.எஸ்

பாலு said...

ராகவன் சார்! தீராத பக்கங்கள் வாசிக்கும் போது மாதவராஜ் உங்கள் சுனை நீரைச் சிலாகித்து எழுதியிருந்தார். படிப்போமேயென்று முதன் முதலாக உள்ளே வந்தேன். Impressed! என் மனைவியின் ஞாபகங்கள் வந்து உலுக்கி எடுத்து விட்டன. அவளும் என் மகளைச் சுமந்து கொண்டிருக்கும் போது இதே போல் தனிமையைத் துணையாகக் கொண்டிருந்தாள் . கதைக் கணவன் போல் நான் இருக்கவில்லை என்றாலும், இன்னும் கொஞ்சம் நன்றாகப் பார்த்துக் கொண்டிருந்திருக்கலாம் என்று இப்போது தோன்றுகிறது. வாழ்த்துக்கள்.