Thursday, March 03, 2011

வாய்ப்பச் செயல்...

சுந்தரி அம்மாவிற்கு இடுப்பெல்லாம் குடைந்தது. கெண்டைக்கால் சதையும் பிடித்துக் கொண்டது போல ஒரு வலி.  நேற்று வேலை அதிகமாகி விட்டது, தையலுக்கு உடம்புக்கு முடியாமல் போனதால், நேற்று சுட்ட முறுக்கையும், அதிரசத்தையும், சுந்தரி அம்மாவே எடுத்துக் கொண்டு போய் விற்க வேண்டியிருந்தது.  அவர் இருக்கும் போது, சீடையும், தட்டையும் சேர்த்துப் போட முடிந்தது, சைக்கிளில் வைத்துக் கொண்டு வியாபாரம் செய்து விட்டு வருவார்.  அவர் இறந்தபிறகு வயதுக்கு வந்த பிள்ளையைத் தான் அணுப்ப வேண்டியிருக்கிறது. 

என்னன்னே தெரியவில்லை, ரெண்டு நாளாக தையலுக்கு கடுமையான காய்ச்சலும், தடுமமும் பிடித்துக் கொண்டு, அடித்துப் போட்ட மாதிரி கிடக்கிறாள். ரவைக்கெல்லாம் தூங்காம சொரிஞ்சிகிட்டு கிடக்கா சில சமயம். முகமெல்லாம் வாடிப்போய் இருந்தது. அதோடு முந்தாநாள், அவளே மீனாட்சி அம்மன் கோயில் ஆடிவீதியில் முறுக்கும் அதிரசமும் எடுத்துப் போய் விற்று விட்டு வந்தாள்.  முறுக்கு மட்டும் கொஞ்சம் அதிகமாய் விற்றது, அதிரசம் அவ்வளவாக விற்கவில்லை. அதிரசம் விற்கவில்லை என்றாலும் பாதகமில்லை, ஒரு வாரத்துப்புறம் மாவு இடிச்சா போதும் என்று நினைத்துக் கொண்டாள் சுந்தரி அம்மா.


முன்பெல்லாம் தெருவே மணப்பதாக எல்லோரும் சொல்வதுண்டு. இவர்கள் இப்போது இருக்கும் இந்த காம்பவுண்ட் இவர்களுக்கு சொந்தமாக இருந்தது. கிணற்றடிக்கு மேற்கே மண்ணிலேயே பெரிய அடுப்பு போட்டு, விதவிதமாய் பலகாரம் செய்யமுடிந்தது.  கல்யாணம், வளைகாப்பு என்று விசேஷங்களுக்கென தனியாக ஆர்டர் பிடித்து வருவார். மூன்று, நான்கு பேர் அப்போது அவர்களிடம் வேலை பார்த்து வந்தார்கள். தினமும் திருவிழா போல அடுப்பு எரிந்து கொண்டே இருக்கும்.  சுட்டுக்கொண்டே இருப்பது மாதிரியும் இருக்கும், அருவாகிக் கொண்டு இருப்பது மாதிரியும் இருக்கும்.  இப்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது என்று தோன்றியது சுந்தரி அம்மாவிற்கு. 

பெரியவள் தில்லைக்கு கல்யாணம் முடிவானதும், தையல் அப்பாவை பிடிக்க முடியவில்லை.  நல்ல சம்பந்தம் என்று பெருமையாய் இருந்தார்.  தில்லையின் கல்யாணத்திற்கென்று பிரத்யேக சேமிப்பு இல்லையென்றாலும், கையில் இருந்ததையும், சுந்தரி அம்மாவின் நகைகளில் பெரும்பாலானவற்றையும் விற்று, பெருஞ்சீர் கொடுத்து கல்யாணம் செய்து வைத்தார், திருநெல்வேலி டவுனில் ஹோட்டல் வைத்திருக்கும் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவனுக்கு. இதே போல வியாபாரமும், விருத்தியும் எப்போதும் இருக்கும் போது என்ன கவலை என்ற எண்ணம் அவருக்கு. ரொம்ப நல்ல மனுஷன், கெட்ட பழக்கம்னு ஏதுமில்லை, பொடி போடுறதத் தவிர. தில்லைக்கு கல்யாணம் ஆகி முதல் பொண்ணு பிறந்து, வருஷம் ஒண்ணு ஆகுறதுக்குள்ள, மஞ்சள் காமாலை வந்து பத்து நாளு கூட இருக்காது போயிச் சேர்ந்துட்டார்.

அவர் இறந்த பிறகு நிறைய நடந்துவிட்டது. முன் போல வியாபாரம் செய்ய ஆளில்லை.  கூலிக்கு ஆள்வைத்து பலகாரம் செய்ய முடியவில்லை. வேற வழியேதும் தோன்றாமல், வீட்டை விற்க முடிவு செய்தாள். 

தில்லை வீட்டில் இப்போது பழைய மாதிரி வசதியாக இல்லையென்றாலும், இவர்கள் போல கஷ்டப்படவில்லை.  கொடுத்து உதவமுடியாது தான், அவர்களுக்கு இரண்டு குழந்தைகள், மாமியார், மாமனார், தம்பி குடும்பம் எல்லாம் ஒன்றாக இருக்கிறார்கள். அவர்களுக்கு அந்த ஹோட்டல் தான் ஒரே வருமானம்.  குடும்பம் பெருத்த அளவு, வருமானம் பெருக்கவில்லை அவர்களுக்கு.  முன்னாடி இருந்த போக்குவரத்து இப்போது சுத்தமாய் இல்லை. அதுவும், சுந்தரி அம்மா ஆறு வீடுகள் இருக்கும் காம்ப்வுண்டை விற்ற போது, தன் பங்கு கேட்டு சண்டையிட்ட தில்லையிடம், அதோடு அறுந்துவிட்டது எல்லாம்.  வீட்டில் குடியிருந்த வீராச்சாமியே வாங்கிக் கொள்வதாய் சொல்ல, பெரிசா பேரம் பேச முடியலை.  தில்லையோட புருஷன் வந்து விற்றதில் பாதியை சரியா வாங்கிட்டு போயிட்டான்.

விற்ற பணத்தில் இருந்த கொஞ்ச நஞ்ச கடனை அடைத்த பிறகு, போஸ்டாபீஸில் போட்ட பணமும், பேங்கில் போட்ட மிச்ச பணமும் இவர்களின் துணையான துணை.  சொந்த வீடு வாடகை வீடாகிவிட்டது.  காம்பவுண்டிலேயே போட்டிருந்த மண் அடுப்புக்களை எடுக்க வேண்டும் என்று வீராச்சாமி சொல்லியதும் தட்டமுடியவில்லை. அதனால், வீட்டிற்குள்ளேயே அடுப்புகள் வைத்து, பலகாரம் செய்ய வேண்டியதாயிருந்தது.

சுந்தரி அம்மாவால் தனியாக இந்தத் தொழிலை நடத்த முடியவில்லை.  முழுக்க விட்டுவிடுவதாய் இருந்ததை, தையல் கொடுத்த தைரியத்தில், சின்ன அளவில் நடத்த முடிந்தது.  கையில் எடுத்துப் போய் விற்பதை விட, கடைகளுக்குப் போட்டால், நிரந்தர வருமானம் வர வாய்ப்பிருக்கிறது என்று தான் தோன்றியது. அதையும் செய்து பார்த்தாள்.  ஆர்டர் கொடுத்ததை விட குறைவாகவே எடுத்துக் கொண்டார்கள்.  அதுவும் சரக்கு போட்டுவிட்டு பணம் வர ஒரு மாதத்திற்கு மேலாய் காத்திருக்க வேண்டியிருக்கிறது. சில சமயம் பணமே வராது.  கல்யாணத்திற்கும், விசேஷங்களுக்கும் செய்ய முடியவில்லை. கூலியாட்கள் வேலைக்கு வரமாட்டார்கள், வந்தாலும் அவர்கள் போக்கிலேயே வேலை செய்வதால், தரமாய் செய்ய முடியவில்லை.

அதிரசமாவு வைச்சிருந்த சட்டியை நகர்த்தமுடியவில்லை.  தரையில் ஏதோ பாகு கொட்டிப் போச்சு போல, தரையோடு ஒட்டிக் கொண்டது. வேறு வழியில்லாமல், எழுந்து அசைத்து அசைத்து தூக்கினாள். அதிரசம் சரியாக விற்காததால், நேற்று சுட்டதே போதுமென்று நினைத்தாள்.  மாவுச்சட்டியின் மீது மெலிதான துணியைக் கட்டி, எரவானத்தில் இருந்து தொங்கு பலகை மீது வைத்தாள். தையல் குளிர் தாங்காம முனகுவதைப் பார்க்கையில முசு முசுன்னு அழுகையா வந்தது சுந்தரி அம்மாவிற்கு.  லேசுப்பட்ட குடும்பம் இல்ல, சுந்தரி அம்மாவினுடையது.  பாளையங்கோட்டையில் பெரிய வீடு, அவர்களுடையது, பெரிய திண்ணை வைத்து, அழிக்கம்பி போட்ட வீடு.  முன்னாடி பெரிய தோட்டம் போல எலுமிச்சையும், செவ்வரளியும் சேர்ந்து கிறங்கவைக்கிற மாதிரியான வீடு.  பரம்பரை பரம்பரையா சமையல் தொழில் செய்யிற குடும்பம்.  ஆறுமுகம்பிள்ளைன்னு சொன்னா தெரியாத ஆட்களே கிடையாது அப்போ.  தையலோட அப்பாவுக்கு வாக்கப்பட்டு மதுரை வந்தும் நல்லாதான் இருந்தார்கள், அவர் இருக்கிறவரை.

தையலு... மேலுக்குத் தான் முடியலையே அதோட, எதுக்கு போயி தண்ணி எடுக்கணும்? வாடக்காத்துல வெளிய போனது தான் வெனையே! இன்னைக்கு ஒரு பொழுது சுதாரனமா புழங்கிக்கிட்டா போகுது! என்று அவள் நெற்றியைத் தொட்டுப் பார்த்தாள்.  அவளிடம் இருந்து பதிலே இல்லை. லேசான காய்ச்சல் மாதிரி தான் தெரியுது, ஆனாலும் இந்த முனக்கம் நிக்கலையே! கம்பவுண்டர்ட்டயாவது போனா தேவலை. 

தையலை லேசாக அசக்கி, தையலு! வாறியா? கம்பவுண்டர்கிட்ட போயிட்ட வரலாம்! அவரு ஒரு ஊசி போட்டா சரியாப்போயிடும்! என்று கேட்டாள். கேட்டவாறே இடுப்பில் சொருகியிருந்த சுருக்கப்பையில், இருந்த காசை எண்ணிப் பார்த்தாள். காசைத்தேடும், அங்காளம்மன் கோயில் திருநீறும், குங்குமப்பொட்டல்மும் கையில் அகப்பட்டது. அதை எடுத்தவள், பயபக்தியாய் மேலே பார்த்து கும்பிட்டு விட்டு, தன் தலையிலும் கொஞ்சம் போட்டுக் கொண்டு, தையலுக்கு பூசியும் விட்டாள். அங்காளம்மா, பரமேஸ்வரி தாயே, எம்புள்ளக்கு நல்ல தேக ஆரோக்கியத்த கொடு தாயீ என்று உடம்பெல்லாம் திருநீற்றை பூசி விட்டாள்.  இவள் மேலுக்கு சரியாயிட்டா, அவ பாத்துப்பா, நம்ம போக வேண்டியதிருக்காது என்று நினைத்துக் கொண்டாள். மொத்தமாய் எண்ணிப்பார்த்ததில் பனிரெண்டு ரூபாய் இருந்தது. போதும், அவரு ஆறு ரூபாய் தான் வாங்கிக்குவார் என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டாள்.

தையல் இன்னும் எழுந்தபாடாய் தெரியவில்லை. கண்ணில் இருந்து கண்ணீர் வடிந்து தலையணையை நனைத்திருந்தது.  அழுதிருப்பாளோ? என்று நினைத்தாள்.  சுக்குத் தண்ணீ கொடுத்து பாக்கலாமா? என்று தனக்குத்தானே கேட்டுக்கொண்டாள்.  எருவாட்டிய எடுத்து நாலுபங்கா உடைத்து ஒன்றில் சீமத்தண்ணியக் கொஞ்சம் ஊத்தி பற்ற வைத்த பிறகு ரெண்டு கருவ மரக்குச்சிகளை மேலே வைத்தாள். கருவமரம் வெரசா எரியாது. பொகையாத் தள்ளியது.  அப்படியே விட்டு வெளியே வந்து தொட்டிப் பக்கத்துல இருந்த காய்ந்த பனைஓலைகளையும், கொட்டாங்குச்சியையும் எடுத்தாள். அடுப்பில் பனை ஓலையை ஒடித்துப் போட்டு, மேலே கொட்டாங்குச்சிகளை, உதாங்குளையால் உடைத்து உள்ளே போட்டாள். புசு புசுவென்று எரிந்தது அடுப்பு. புகை கொஞ்சம் குறைஞ்சா மாதிரி தெரிந்தது.

கருப்பட்டியும், சுக்கையும், கொத்தமல்லியையும் அம்மியில் வைத்து நகட்டிய பிறகு, கொதிக்கிற தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்தாள். மணமாய் பெருகியது.  பால் இல்லை, கோமதிக்கு முப்பது ரூபாய்க்கு மேல பாக்கி, போக சங்கடமா இருந்தது.  கோமதி குடுக்கும்தான் ஆனாலும் வேண்டாம், காய்ச்சகாரிக்கு, பாலப்போட்டு சுக்கு காஃபி கொடுத்தா வாந்தி வந்துடப்போகுது என்று நினைத்துக்கொண்டாள்.  காஃபி கொதித்ததும், இறக்கி, இட்லிக் கொப்பரையில இருந்து துணிய எடுத்து வடிகட்டினாள்.  நுனி நாக்கில் டம்ளரை சாய்த்து, இனிப்பு சரியா இருக்கான்னு பார்த்ததும், மீண்டும் தையலை உசுப்பினாள். எழுந்திரிக்க முடியாமல் முனகிக் கொண்டே படுத்திருந்தவளைப் பார்க்க வேதனையாகவும், பயமாகவும் இருந்தது, சுந்தரி அம்மாவிற்கு.

ஆசுபத்திரிக்கு கூட்டிட்டு போனா தேவலை. கம்பவுண்டர் நல்லா கைராசிக்காரரு, தில்லைய பெத்தப்போ, இவளுக்கு டைபாயிடு வந்த போது காப்பாற்றிய நன்றி பக்தியாய் போனது அவளுக்கு.  காமாலையில் புருஷன் இறந்த போதும் இவர் தானே பார்த்தார் என்பது மறந்துவிட்டது அவளுக்கு, வேற யாரு இவ்வள கம்மியா காசு வாங்குறா என்று கேட்டுக் கொள்வாள். கம்பவுண்டரிடம் போவது அவளுக்கு கோயிலுக்கு போயி வேண்டிக்கொள்வது போல ஒரு சடங்கு.  சுக்குத்தண்ணீ காப்பியை அவளை எழுப்பி புகட்டிவிட்டு, தானும் ஒரு மடக்கு குடித்துவிட்டு, ரிக்‌ஷா பிடித்து வர ஓடினாள். வீட்டுக்கார வீராச்சாமிக்கு சொந்தமாய் ஆட்டோ இருக்கு, அவசரத்துக்கு கேட்டாலும் தரமாட்டான்.

வேறு வழியில்லாமல், நாகரத்தினம் புருஷனப்போயி கூட்டிட்டு வந்து, அவன் ரிக்‌ஷால தூக்கிப் போட்டு ஓடினாள் பயத்தில்.  அந்த ஆசுபத்திரியை அடைந்த போது, கம்பவுண்டர் வந்திருக்கவில்லை.

தையல் வெடவெடவென நடுங்கிக்கொண்டே, கண்கள் செருகிக் கிடந்தாள்.  ஆசுபத்திரி படியேறும் போது சிரமப்பட்டுக் கொண்டே ஏறிவிட்டாள். இப்போது ஆசுபத்திரி பெஞ்சில், காலை தூக்கி வைத்துக் கொண்டு முகத்தை விட்டு முழுதாய் போர்த்தியிருந்தாள். ஆசுபத்திரியில், பெரிய பெரிய வெங்கடாசலபதி படங்கள் நிறைந்திருந்தது. சுப்ரபாதமோ என்னமோ பாடிக் கொண்டிருந்தது, பத்தி வாசனையும், தசாங்க வாசனையும் கலந்து பெருமாள் கோவிலுக்குள்ள போனது போல ஒரு பிரமிப்பு இருந்தது சுந்தரி அம்மாவிற்கு.  கம்பவுண்டர்கிட்ட வேலைப்பார்க்குற பொண்ணு தான் இருந்துச்சு. என்னம்மா காய்ச்சலா? என்று கேட்டுக்கொண்டே வந்தவள், தையலின் வாயத்தொறக்கச் சொன்னாள்.

அவளுக்கு ரெண்டு உதடுகளும் ஒட்டிக் கொண்டு இருப்பது போல சிரமபட்டு தான் வாயைத் திறந்தாள்.  நாக்கு வெள்ளையா இருந்தது. நாக்கின் அடியில் தர்மாமீட்டரைச் சொருகியவள்.  வாட்சை பார்த்துக் கொண்டாள்.  அந்த நிமிடத்தை வீனாக்க வேண்டாம் என்று நினைத்தாளோ என்னவோ? எத்தனை நாளா இருக்கு? என்ன சாப்பிட கொடுத்தீங்க? என்று கேட்டுக் கொண்டே இருந்தாள். இவ எதுக்கு இம்புட்டு கேள்வி கேக்கா? பெரிய டாக்டர் கணக்கா? என்று நினைத்துக் கொண்டாள். 

வந்து சேர்ந்தார் கம்பவுண்டர். கம்பவுண்டர் ஒரு வயர் கூடையும், சின்ன சாக்குப் பையும் கொண்டு வந்தார்.  வந்தவுடன், பைகளை அந்தப் பெண்ணிடம் கொடுத்தார்.  அவள் வாங்கி வைக்கும் போது, பாட்டில் கிளங் என்று சத்தம் வந்தது.  பெரியாஸ்பத்திரில இருந்து கொண்டு வாராரு போல, நல்ல மருந்தாத்தான் இருக்கும் என்று நினைத்துக் கொண்டாள்.

வந்தவர் காய்ச்சல் எவ்வளவு இருக்கு? என்று தையலின் கையை எடுத்துக் கொண்டு  நாடி பார்த்தார். கழுத்தில் போட்டிருந்த ஸ்டெத்தை எடுத்து நெஞ்சிலும், முதுகிலும் வைத்து, வழக்கம் போல இழுத்து மூச்சு விடச் சொன்னார். தையலால் இழுத்து மூச்சுவிடவே முடியலை. 

சரி மருந்து எழுதித் தரேன்! மூணு நாள்ல சரியாயிடும், இல்லேன்னா, திரும்பவும் வாங்க, என்னன்னு பார்க்கலாம்! என்று ஏதோ எழுதி மெடிக்கல் ஷாப்பில் வாங்கிக்கச் சொன்னார். மாத்திரை ஏதாவது நீங்களே சாப்பிட்டிங்களா? தையல் மெதுவாக இப்போது தான் பேசினாள்.

ஆமா சார், லேசா காய்ச்சலும், மண்டையடிமா இருந்துச்சு முந்தா நாள்! அதான், போன தடவை நீங்க கொடுத்த மாத்திரை இருந்துச்சு அத சாப்ப்ட்டேன் என்றாள்.  அத சாப்பிட்டதில இருந்து தான் ரொம்ப ஜாஸ்தியான மாதிரி இருக்கு!

என்ன மருந்து தெரியுமா? என்றார்.
ஒண்ணு வெள்ளை மாத்திரை, இன்னொன்னு டீயூப் மாத்திரை, மஞ்சளும், சிவப்புமா! இது பேசுவதற்குள் அவளுக்கு மூச்சு வாங்கியது.  சுந்தரி அம்மா, தையலையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

இந்த முறை வேற மாத்திரை தர்றேன்! வெள்ளை மாத்திரையும், மஞ்ள் மாத்திரையுமாய் இருந்தது இந்த பொட்டலத்தில். மூணு வேளை சாப்பாடுக்கு அப்புறமா? என்று பொட்டலத்தை மடித்துக் கொடுத்தார்.  அவர் கொண்டு வந்த மருந்து பாட்டிலில் இருந்து ஒன்றை எடுத்து, தண்ணீரில் கலந்து கொடுக்கச் சொன்னார். 

நல்லா ரோஸ் கலரில், கிளாஸ் டம்ளரில் பாக்கவே அழகாய் இருந்தது.   தொடையிலும், அக்குளிலும் ரெண்டு நாளாய் படை மாதிரி வந்திருப்பதை தையலுக்கு சொல்ல சங்கடமாக இருந்தது. கண்களிலும் நமைச்சலும், சிவந்தும் இருந்தது, வாய் முழுக்க புண்ணா இருப்பது பற்றியும், சாப்பாடு சாப்பிட முடியாததையும் தையல் சொல்லவில்லை. இவரு முதல்ல கொடுத்த மருந்து சாப்பிட்ட பிறகு தான் ஆச்சு, என்று சொன்னால், கம்பவுண்டர் சத்தம் போடுவாரோ என்று பேசாமல் விட்டு விட்டாள். வீட்டுக்கு வருவதற்குள் உடம்பெல்லாம்  நமச்சல் எடுக்க ஆரம்பித்து விட்டது.  மேல்தோல் (ம்யூகஸ்) சொரியும் போது நகத்தில் உரிந்து கொண்டு வருவது அவளுக்கு தெரியவில்லை.

கம்பவுண்டருக்கும் ஸ்டீவன் ஜான்சன் சிண்ட்ரோம் பற்றி தெரிந்திருக்க நியாயமில்லை.

20 comments:

HVL said...

உங்க விவரணைகள் நல்லாயிருக்கு. அவங்க கூடவே இருக்கற ஒரு feeling வருது.

Unknown said...

கதை மனதை அதிர்வுற செய்கிறது முடிவில்.. சுந்தரி அம்மாவை நினைத்தால் பாவமா இருக்கு .. நல்ல எழுத்து அண்ணா.. சீக்கிரம் புத்தகம் கொண்டு வாங்க ...

Unknown said...

நிழல் கதவு கதையை ஏன் தூக்கிட்டீங்க...

இளங்கோ said...

சிலரால் தலைவலிக்கு கூட மிக அதிக பரிசோதனைகளும், பெரிய டாக்டர்களையும் வைத்து பார்க்க முடிகிறது.
ஏழை மக்கள் என்ன செய்வார்கள்.. .

வாய்ப்பச் செயல் கதை நடை, இனி எங்கேனும் சாலைகளில் முறுக்கு அதிரசம் விற்பவரைப் பார்த்தால் நினைவுக்கு வரும்.

ஜீவன்சிவம் said...

கதை நடை அருமை. வாழ்த்துகள்

rajasundararajan said...

சம்பவ-அனுபவங்களில் இருந்து ஒரு கதைக்கரு கிட்டினால், எழுதுவதற்கு வாகாக இருக்கும். கரு (concept) கிட்டி, அதற்கு ஒரு கதையைக் கட்டினால் எழுதுவதற்கு அவ்வளவாகத் தொளிந்து வராது.

1. Self medication is wrong.
2. It's wrong to consult unqualified persons.

இருந்தும் இப்படிச் செய்து சீரழிகிறவர்கள் யார்? வசதி இல்லாதவர்கள். (மருந்துக் கடையில் நோயைச் சொல்லி மருந்துவாங்கிச் சாப்பிடுபவர்களே முக்கால் பாதிக்கும் மேல்).

இது கூடாது. இதைப் பற்றி ஒரு கதை எழுதியே ஆகவேண்டும். என்ன செய்வது?

எண்ணிப் பன்னிரண்டு ரூபாய் அளவே வைத்திருக்கும் ஓர் நிலைமையைக் கொண்டுவர வேண்டும். ஒரு வெட்டியான் அல்லது தோட்டியின் குடும்பம் என்று இருந்தால் - அவர்கள் பரம்பரை நிலைமையே அதுதான் என்பதால் - அதில் ஒரு நாடக வழக்கைத் தோற்றுவிக்க முடியாது. அதனால் வாழ்ந்துகெட்டதொரு குடும்பம் வேண்டும். திருநெல்வேலிச் சைவப் பிள்ளைமார்களை விட வாழ்ந்துகெட்டவர் யார் இருக்கிறார்கள்?

rajasundararajan said...

கச்சாப்பொருள் எல்லாம் சரிதான், ஆனால் புரிமுறை (process) சரிவரவில்லை.

//முறுக்கு மட்டும் கொஞ்சம் அதிகமாய் விற்றது, அதிரசம் அவ்வளவாக விற்கவில்லை.//

//தரையில் ஏதோ பாகு கொட்டிப் போச்சு போல, தரையோடு ஒட்டிக் கொண்டது.//

//எருவாட்டிய எடுத்து நாலுபங்கா உடைத்து ஒன்றில் சீமத்தண்ணியக் கொஞ்சம் ஊத்தி பற்ற வைத்த பிறகு ரெண்டு கருவ மரக்குச்சிகளை மேலே வைத்தாள். கருவமரம் வெரசா எரியாது. பொகையாத் தள்ளியது. அப்படியே விட்டு வெளியே வந்து தொட்டிப் பக்கத்துல இருந்த காய்ந்த பனைஓலைகளையும், கொட்டாங்குச்சியையும் எடுத்தாள். அடுப்பில் பனை ஓலையை ஒடித்துப் போட்டு, மேலே கொட்டாங்குச்சிகளை, உதாங்குளையால் உடைத்து உள்ளே போட்டாள். புசு புசுவென்று எரிந்தது அடுப்பு.//

இந்த நுணுக்கங்களைப் பாராட்ட வேண்டுமா, தெரியவில்லை. பிள்ளைமார் எழுத்தாளர்கள் (இப்படியெல்லாம் சொல்லக் கூடாதுதான், என்ன செய்ய?) கதைகளில் வரும் இதுபோன்ற நுணுக்க வர்ணனைகளைக் கண்டு நான் மிரண்டதே மிச்சம். ராகவனும் தன் (மிகப் பல அல்ல, இகச் சில) கதைகளில் இப்படி இறங்கி விடுகிறார்.

'பனை ஓலை, கொட்டாங் குச்சி = கம்பவுண்டர்' என்று சமன்பாடு காணவும் முடியவில்லை. ஏனென்றால், முன்னதில் தீப்பிடித்துக் கொள்வது நிச்சயம்; பின்னதில் சுகப்படுவது நிச்சயம் இல்லை.

Nothing wrong in fabricating a story, but even a fabrication demands integrity.

sathishsangkavi.blogspot.com said...

கதையும் சொல்லிய விதமும் அழகு...

ராகவன் said...

அன்பு நண்பர்கள் எல்லோருக்கும்,

உங்கள் கருத்தும், அன்பும் எனக்கு வாய்க்கப்பெற்றவை.

ரொம்பவும் சந்தோஷமாய் இருக்கிறது... இது போல கருத்துக்கள்.. மேலும் உற்சாகப்படுத்துகிறது.

உங்கள் எல்லோருக்கும் என் அன்பும் நன்றியும்.

அன்புடன்
ராகவன்

ராகவன் said...

அன்பு ராஜசுந்தரராஜன் அண்ணே,

ரொம்ப சந்தோஷம்ணே! கச்சாபொருள் நல்லாயிருந்தாலும், புரிமுறை சரியா வரலை என்பது வாஸ்தவம் தான்.

Even Fabrication demands integrity...

என் செய்முறையில் தவறு இருக்கலாம்... கொட்டாங்குச்சி எரிவதும்... கம்பவுண்டரின் சிகிச்சைமுறையும்... ஒப்பிட்டது... நீங்கள் சொன்னது போன்ற ஒரு எண்ணத்தில் தான்...

கொட்டாங்குச்சியும், பனைஓலையும்... சுகப்படுறா மாதிரி தெரிந்தாலும்... permanent fix... கிடையாது... கொட்டாங்குச்சியும், பனைஓலையும், அப்போதைக்கு உலையை பொங்க வைத்தாலும், நிண்ணு எரியாது, நிண்ணு எரிவதற்கு ஒரு அடர்த்தி... தேவையாயிருக்கு.

கொட்டாங்குச்சியும், பனைஓலையும்... காற்றுக்குமிழ்கள்... நின்று எரியாது... இது தான் இதில் இருக்கும் இண்டெகிரிடி...

இதில் எனக்கு integrity குறைவு இருப்பதாய் தெரியவில்லை. மாறாக புரிமுறை அல்லத் செய்முறையில்... கொஞ்சம் கோளாறு இருக்கலாம். நான் fabrication ஐயும் process ஐ வேறென்று அர்த்தம் கொள்கிறேன்.

சர்க்கரை பாகு ஒட்டிய சட்டி கூட ஒரு அடையாளம் தான்... ஏதோ சொல்ல முற்படும் விஷயம் தான். இது சொல்லப்போன புனைவு கூட கிடையாது... எனக்கு தெரிந்த குடும்பம்... இது தான் நடந்தது... அந்த பெண் இறந்து விட்டாள்... ரொம்ப கொடுமையாய் பார்க்க சகியாமல்...

அண்ணே இது தான்ணே என்னோட தாழ்மையான கருத்து... உங்களின் மறுமொழிக்கு காத்திருக்கேன்.

அன்புடன்
ராகவன்

sakthi said...

ஏழை மக்கள் இது போன்ற வியாதிகளுக்கு கம்பவுண்டர்களின் மருந்தையும்.... கலர் கலராய் ஏதோ கையில் கிடைத்த மாத்திரையும் தானே இன்று வரை உபயோகப்படுத்திட்டு இருக்காங்க.... எத்தனை பேரின் வாழ்கை இதனால முடிஞ்சி போயிருக்கு யார் அதை பற்றி எல்லாம் கவலைப்படறாங்க....
வெந்ததை சாப்பிட்டு விதி வந்தால் சாகறதும் தான் அவுங்க வாழ்கைன்னு ஆகிடுச்சு...

sakthi said...

எப்பவும் உங்க கதைகளின் முடிவு எல்லோருடைய யூகத்தையும் தவிடு பொடியாக்கும்....
உங்க ஸ்டைல் தனி
மனதை நெகிழ வைத்த கதை.....
தொடருங்கள் .....

rajasundararajan said...

நல்லது, தம்பி, வழக்காடி வெல்வதில் எனக்கும் மகிழ்ச்சி இல்லை. ஊருநாட்டுல இப்படியெல்லாம் நடந்துக்கிட்டு இருக்கு; அப்படியெல்லாம் நீங்களும் இறங்கியிறக் கூடாதுங்கிற கவலையில சொன்னேன்னு எடுத்துக்கணும்.

ஒரு கதைக்களம் (set) உருவாக்கப்படுகையில் வர்ணனைகள், அவற்றுள்ளும் நுணுக்கங்கள், கதைக்கு ஒப்புரவாகி (support) அமைபவை. ஆதலால் கதையின் ஊடுபாவுகளுக்கு இசைய அவை அமைக்கப்பட வேண்டும்; 'எனக்கு இம்பூட்டுத் தகவல் தெரியுமாக்கும்' என்றிருக்கக் கூடாது என்பதே நான் சொல்ல வந்தது.

"சொன்னதைப் புரிஞ்சுக்காம என்னத்தெச் சொல்ல வந்தே?" என்று (எழுதியவர் கூட இல்லை) யாராவது விளக்கிக் கூறினால், "ஓ, இதுதானா அது!" என்று விளங்கி மகிழவே விருப்பப் படுகிறேன். புரியா வினாக்களும் விளக்கங்களும் பிற எழுத்தாளர்களுக்கும் உதவும்தானே?

//கொட்டாங்குச்சியும், பனைஓலையும்... காற்றுக்குமிழ்கள்... நின்று எரியாது... இது தான் இதில் இருக்கும் இண்டெகிரிடி...//

உண்மைதான். முதலில் இதைக் கருதிக் கணக்கில் எடுதுத்தான் நீங்கள் எழுதியிருக்கிறீர்கள் (தகவல் விளம்பரத்துக்காக அல்ல) என்று அறிய மகிழ்ச்சி.

'கவிதை எழுத்துக் கலை' பற்றிய எனது பழையதொரு கட்டுரையில் சொன்னது (அப்பாஸ் கவிதைகளுக்கு எழுதியது என்று நினைக்கிறேன்): சொல்-மட்டப் பொருள் (verbal level meaning) என்றும் உள்-மட்டப் பொருள் (sub-textual level meaning) என்றும் இருக்கின்றன. உள்-மட்டப் பொருள் அமைந்தால் சிறப்பு. அமையாவிட்டாலும் பருவரல் இல்லை. அதற்காக, சொல்-மட்டப் பொருள் தோன்றாமல், தொடர்பின்றி எழுதுதல் ஏற்புடையதில்லை.

கொட்டாங் குச்சியும் பனை ஓலையும் நின்று எரியாது, ஆனல் நின்று எரியக்கூடிய கருவேல விறகைப் பற்றவைத்து விடும். இந்த உறழ்வு (logic) கம்பவுண்டர் வைத்தியத்தில் வருகிறதா?

என்றால், கம்பவுண்டர் வைத்தியத்தின் வேலைக்கு ஆகாத் தன்மையை உணர்த்த, காஃபி கொதித்து வர முடியாத அவலத்தை எழுதிக்காட்ட வேண்டும்.

நீங்கள் காண உங்களைக் குட்டுவதில் எனக்கொரு வருத்தமும் இல்லை. http://azhutham.blogspot.com/2011/03/mughal-e-azam-pyar-kiya-to-darna-kya.html இங்கே சென்று என் பின்னூட்டத்தில் உங்களைப் பற்றி என்ன சொல்லியிருக்கிறேன் என்று பாருங்கள்.

ஜெயமோகன் எழுத்துக்கலைத் தேர்ச்சியின் ஓர் உழைப்பாளி. அவரே விமலாதித்த மாமல்லன் கையில் என்னவாகிறார் பாருங்கள். இலக்கியச் சண்டையே ஆனாலும் வாசிக்கிற நமக்கு, அந்தப் பக்கமா இந்தப் பக்கமா என்று சீர்தூக்கிக் கற்றுக்கொள்ளவும் வாய்ப்பு வருகிறதே. பேசப்படாமலே விட்டிருந்தால் புதுமைப்பித்தன் கூடக் காணாமற் போயிருப்பார்.

சோர்வடையாமல் எழுதுங்கள். எழுந்து விழுந்து இல்லாமல் ஒரு பிள்ளையும் நடக்கக் கற்றதில்லை. எழமுடியாச் சோர்வில் உங்களைத் தூக்கிவிடவும் ஓடி வருவேன்.

ராகவன் said...

அன்பு அண்ணனுக்கு,

நல்லாவே குட்டுங்க... அண்ணே... எனக்கு வருத்தம் இல்லை... உங்கள் கவலை எனக்கு புரியுது... வைரம் பாய்ச்ச முயலும் உங்கள் அக்கறை எனக்கு வரம்ணே... நான் என்ன புரிஞ்சுக்கிட்டேன்னு தான் சொன்னேன் அண்ணே!

போக போக இன்னும் கத்துக்கறேன்ணே!

அன்புடன்
ராகவன்

காமராஜ் said...

இந்தக்கதை சுழன்று சுழன்று வருவது அழகாக இருக்கிறது. எழுத்துப்பிடித்துப்போனதிலா இல்லை ஆள் பிடித்துப்போனதிலா என்று இனம்காண முடியல.தையலின் ஏழ்மை வியாதியையும்.அந்த சிண்ட்ரோமையும் இணைக்கிற இடம் அருமை.அண்ணா உங்களைக்குட்டியபோது எனக்கும் லேசா உறைக்கிறது.எட்டத்திலிருந்து ம்ம் இன்னும் கொஞ்சம் அழுத்திப்பிடி,ஒடச்சிராத என்று சொல்லிக்கொடுக்கிற வார்த்தைகள் இருக்கு.அண்ணா வணக்கம்.

அம்பிகா said...

ராகவன்,

படித்து முடிக்கையில் பகீரென்றது. ஏனெனில், இதைப் போன்ற ஓர் உண்மை சம்பவம் நானும் அறிந்திருக்கிறேன்.
இரண்டு, மூன்று மருத்துவர்களிடம் மாற்றி, மாற்றி பார்த்ததில், எந்த மருத்துவருடைய தவறு? எதில் ஒவ்வாமை ஏற்பட்டது என்று தெரியவில்லை, நீங்கள் கடைசியில் குறிப்பிட்டிருப்பதைப் போல் தான் நிகழ்ந்தது. 40 வயது இருக்கும் அந்த பெண்மணிக்கு, வாழையிலையில் படுக்க வைத்திருந்ததாக தான் சொன்னார்கள்.
சம்பவத்தை கண்முன் கொணர்கிறது உங்கள் எழுத்து. அடுத்த கதை வரும்வரை முதல் கதையை அசை போடவைக்கும் நடை, உங்கள் சிறப்பு.

ஓலை said...

Ithu maathiri nadappathai kelvip paduvathu varuththamaa irukku. Nallaa yezhuthiyirukkeenga.

'பரிவை' சே.குமார் said...

கதையோடு ஒன்றிப் படிக்க வைக்கும் எழுத்து அண்ணா உங்களுக்கு...
இன்னும் நிறைய களங்களை கையில் எடுங்கள்.

ராகவன் said...

அன்பு நண்பர்கள் எல்லோருக்கும்

என் அன்பும் நன்றிகளும்... நேரம் போதாமை காரணமாக என்னால்... உங்களுக்கு தனித்தனியாக எழுத முடியவில்லை.

ஆனாலும் தொடர்ந்து வாசிக்கும் உங்களுக்கு என் வந்தனங்கள்.

அன்புடன்
ராகவன்

Pranavam Ravikumar said...

நல்லாயிருக்கு!வாழ்த்துகள்.