Tuesday, March 15, 2011

பலுகே பங்காரமாயனா...


வக்ரபேதங்கள் துளைத்த இரவின் சல்லடைக்கண்களென பிரதிபலிக்கும் நீர்த்துளிகள் நில்லாது ஆடும் தாமரை இலைகளில் பளிங்கு தளும்புகள் வைரமணி கோர்த்த தடாகங்கள் கொப்பளித்த பூக்களின் மகரந்தப்பொடிகளை விரவிக் கடத்தும் கால்களின் தடங்களில் முளைத்த அந்நியச் சுவடுகளில் அப்பியிருக்கும் வர்ணங்கள் பிழிந்து கரைத்து கிறுக்கிய திரைச்சீலை ஓவியங்களின்  நிலைப்பாடற்ற குழப்ப ரேகைகள் படர்ந்து பரத்தும் முகங்களில் தீர்க்கம் குறைந்த ஆயுள் நிஷாதத்தில் நில்லாமல் பறக்கும் பறவையின் இறகுகளை ஒத்து, வானத்தில் வரையும் அரூப ஒலிகள் மிதக்கும் வெளியை கடந்து நுழைந்ததில் அந்தகாரமென ப்ரதிஷ்டையாகும் குறி தொழுதவனை வரக்கேட்டவன் பிறந்த நெற்களஞ்சிய பூமியின் வெடிப்பில் முளைவிட்ட விழுதுகள் தாங்கிய விருட்சங்கள் நிறுத்தும் பறவைகளின் சுருதிபிசகா கீச்சுக்களில், துண்டு துண்டாகும் இசையின் நரம்புகள் இழுத்துக் கட்டிய வாத்தியங்களின் குரல்வளைகள், பழகும் காலப்புழுதி அப்பிய கண்ணாடி மீட்டுத்தரும் ஒளி பட்டுத் துலங்கும் பிம்பங்களில் அம்மையையும், அப்பனையும், மன்னனையும் தொழும் கரங்கள், பற்றியிருந்த சாகித்யங்களின் வரிசை மாறிய ஸ்வரங்கள் பேரண்டம் சிதற இடம் மாறியது கால் மாற்றி ஆடியவனின் லயத்திற்கேற்ப.

நடக்கும்போது குடை, உட்கார இருக்கை, நின்றால் செருப்பு, படுக்கையில் தெப்பம், இரவில் போர்வை, தலையணை, இரவின் முனையில் வாயின் முன்குதப்பும் ரத்தின ஒளி என்று சயனத்தின் விழுதுகளில் விசுப்பலகையென ஆட்டும் வாசுகியின் மினுக்கும் தோலின் வெளிச்சம் திறந்த பாற்கடல் அலைகள் நெருக்கி  அழைத்த கரிக்குரல் அழுத்தி திறந்த நாதங்கியினுள்ளே பேரருள் கடற்படுக்கை மேல் சயனித்தவனின் வாயமுதம் தெறித்து விழுந்த கிண்ணங்கள் நிரம்பி வழியும் சங்கம் உற்பவிக்கும் இசை ஆனந்தபைரவியை ஒத்திருக்கிறது.  கற்பகவிருட்சம் வளர்த்த கருத்தகுழல்காரியின் பொற்பதங்களில் இட்ட மருதாணியின் பிசுக்கு ஒட்டும் விரல்கள் மீட்ட முழவும், துந்துபியும் அதிரும் ஒலிப்பிரவாகம் நணைக்கும் பூமியில் கரும்பு விளையும் நற்சாற்றுக்களி, சுமக்கும் ஜடையும், முடியும், காஷாயமும் வேஷமென அழுது, தொழுத செஞ்சாந்து குழைத்து பூசியவளின் கண்களின் கசிந்த மையின் தெள்ளிய ஊற்றுக்கண் ஜலதாரைகளாய் குமிழியிடும் அந்தரகாந்தாரமும், காகளி நிஷாதமும், சதுஸ்ருதி தைவதமும். முக்காலத்திலும் ஓடும் நித்யகன்னியாய் ஆனந்தபைரவி ஒரு வக்ரபிரயோக ராகம்.  தெத்துப்பல் சிரிப்பென காற்றுடன் கலந்த இசை, கதிர மரங்களை, மூங்கில் மரங்களை, ஒதிய மரங்களை ரணமாக்கி சுககளிம்பு பூசும்.

அந்நிய ஸ்வரங்கள் ஊறும் பாஷாங்கம், 20வது அல்லது 22வது மேளகர்த்தா ராகங்களான நடபைரவி அல்லது கரகரப்பிரியாவில் ஜன்யமான ஒரு சம்பூர்ணராகம்.  ரீதிகௌளையின் சாயலில் இருக்கும் சில இடங்கள், உருமாறி பாவனை காட்டும் ஆனந்தபைரவி.  உச்சரிக்கும் போதே வந்து தொற்றிக் கொள்ளும் இதன் தண்மை, ஸ்வாதி திருநாள் மஹாராஜாவின் ப்ரியராகம். எத்தனையோ கிருதிகள், ஸ்வரஜதிகள் என்று ஆனந்தபைரவியில் நெய்தவை நிறைய.  தியாகராஜர் அதிகம் ஆனந்தபைரவியை தொடவில்லை, இரண்டு, மூன்று கிருதிகள் இருக்கலாம். ஆனால் ஷ்யாமா சாஸ்திரிகளும், முத்துசாமி தீட்சிதரும் ஆனந்தபைரவியில் களிநடனம் ஆடியிருக்கிறார்கள்.

மிகக்குறைந்த இசையமைப்பாளர்கள் மாத்திரமே இதை சினிமாவிலும் பயன்படுத்தினார்கள், அத்தனை பரவலான ராகம் இல்லை இது. ஆனால் அதன் காரண்ம் தான் தெரியவில்லை.  கே.வி.மஹாதேவன், விஸ்வநாதன், இளையராஜா, தேவா (காப்பி அடித்த மூலம் மணிசித்திரதாழ்..ரவீந்திரன் பழந்தமிழ் பாட்டிழையும்), ரவீந்திரன், ராஜேஸ்வரராவ், ரஹ்மான் என்று மிகக்குறைந்த பேர்களே ஆனந்தபைரவியை கையாண்டிருக்கிறார்கள்.  எனக்கு பிடித்தபாடல் இது, பத்ராசலம் ராமதாசரின் கீர்த்தனை, தெலுங்கில் சங்கராபரணம் படத்தில் வரும் இந்தப்பாடலைப் பாடியது வாணிஜெயராம்.  அருமையான குரலாளுமை உள்ள ஒரு பாடகர், ஒருமுறை அவரை ராதாகிருஷ்ணன் சாலையில் இருக்கும் ஒரு கடையில் பார்த்த போது கொஞ்சம் பேசினார் இசைபற்றி.  இத்தனை பேசுவாரா என்பதே எனக்கு ஆச்சரியமாய் இருந்தது.  பேசுவதற்கும், பாடுவதற்குமான குரலில் வார்த்தை உச்சரிப்பில் எத்தனை வித்யாசம்.   

“பலுகே பங்காரமாயனா..., கோதண்டபானி  ராமனை பேச அழைக்கும் பத்ராசலம் ராமதாசர் கூட இத்தனை மயக்கத்துடன் பக்தியுடன் அழைத்திருக்க மாட்டார்.  பாடல் முடிந்த பிறகு ராமன் மணிகணக்காய் பேசியிருப்பான் என்பதில் சந்தேகமே இல்லை.  அற்புதமான பாடல் இது. ராமன் மீது ஏன் வாக்கேயக்காரர்கள் இத்தனைப் பக்தியாய், காதலாய் இருந்தார்கள் என்பது ஆச்சரியமான விஷயம்.  ராமா... அட்சரசுத்தமாக ஸ்வரவிகுதிகள் மீது உட்காருவது காரணமாய் இருக்கலாம். எதுவாய் இருந்தாலும் “இறைவனை வழிபடவே முன்னோர்கள் இசையே சிறந்ததென கண்டார்கள்என்பது உண்மையான வாக்கு.  ஒருவிதமான நெறிபடுத்தப்பட்ட மயக்கம் தேவைப்பட பற்றிக் கொண்டார்கள் எல்லோரும் பற்றற்றான் பற்றையும், இசையையும். 

8 comments:

Pranavam Ravikumar said...

வணக்கம்...!

நல்லாருக்கு.பாராட்டுக்கள்!

சக்தி கல்வி மையம் said...

கவனிப்புத்தன்மை அபாரம் அதை எழுத்தில் கச்சிதமாக கொண்டு வந்ததற்கு பாராட்டுக்கள் ...

சமுத்ரா said...

அருமை..ஆனந்த பைரவியில் சினிமாப் பாட்டு சொல்லலையே? :):)

http://samudrasukhi.blogspot.com/2010/10/blog-post_5309.html

'பரிவை' சே.குமார் said...

நல்லாருக்கு...

rajasundararajan said...

//கற்பகவிருட்சம் வளர்த்த கருத்தகுழல்காரியின் பொற்பதங்களில் இட்ட மருதாணியின் பிசுக்கு ஒட்டும்//

இந்த இடத்தில் எனக்கு, 'கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பணிந்தேன், நற்கதி அருள்வாய் அம்மா' என்னும் டி.எம்.எஸ். குரலை நினைவுக்குக் கொண்டுவந்துவிட்டீர்கள்.

வாணி ஜெய்ராம் 'பலுக்கே பங்காரமாயேனா' பாடலை அனுபல்லவி வரை பாடிய அளவிலேயே வலைத்தளத்தில் கிட்டுகிறது. அவ்வளவுதான் பாடினாரோ?

பலரும் பாடியிருக்கிறார்கள். பாலமுரளிகிருஷ்ணாதான் பெஸ்ட் என்றும் கருத்துச் சொல்கிறார்கள். எனக்கென்னவோ வாணி தன் குரலில் கொண்டுதந்த பாவம்தான் சிறப்பாகப் படுகிறது.

இந்த ராகத்துக்கு ஏன் 'ஆனந்த பைரவி' என்று பெயர்? உருக்கமான பாடல்களையே கேட்டிருக்கிறேன். //தெத்துப்பல் சிரிப்பென காற்றுடன் கலந்த// ஆனந்தமான யாப்பு ஏதும் இருந்தால் சொல்லுங்களேன்.

பா.ராஜாராம் said...

//வக்ரபேதங்கள் துளைத்த இரவின் சல்லடைக்கண்களென பிரதிபலிக்கும் நீர்த்துளிகள் நில்லாது ஆடும் தாமரை இலைகளில் பளிங்கு தளும்புகள் வைரமணி கோர்த்த தடாகங்கள் கொப்பளித்த பூக்களின் மகரந்தப்பொடிகளை விரவிக் கடத்தும் கால்களின் தடங்களில் முளைத்த அந்நியச் சுவடுகளில் அப்பியிருக்கும் வர்ணங்கள் பிழிந்து கரைத்து கிறுக்கிய திரைச்சீலை ஓவியங்களின் நிலைப்பாடற்ற குழப்ப ரேகைகள் படர்ந்து பரத்தும் முகங்களில் தீர்க்கம் குறைந்த ஆயுள் நிஷாதத்தில் நில்லாமல் பறக்கும் பறவையின் இறகுகளை ஒத்து, வானத்தில் வரையும் அரூப ஒலிகள் மிதக்கும் வெளியை கடந்து நுழைந்ததில் அந்தகாரமென ப்ரதிஷ்டையாகும் குறி தொழுதவனை வரக்கேட்டவன் பிறந்த நெற்களஞ்சிய பூமியின் வெடிப்பில் முளைவிட்ட விழுதுகள் தாங்கிய விருட்சங்கள் நிறுத்தும் பறவைகளின் சுருதிபிசகா கீச்சுக்களில், துண்டு துண்டாகும் இசையின் நரம்புகள் இழுத்துக் கட்டிய வாத்தியங்களின் குரல்வளைகள், பழகும் காலப்புழுதி அப்பிய கண்ணாடி மீட்டுத்தரும் ஒளி பட்டுத் துலங்கும் பிம்பங்களில் அம்மையையும், அப்பனையும், மன்னனையும் தொழும் கரங்கள், பற்றியிருந்த சாகித்யங்களின் வரிசை மாறிய ஸ்வரங்கள் பேரண்டம் சிதற இடம் மாறியது கால் மாற்றி ஆடியவனின் லயத்திற்கேற்ப//

ரெண்டு மூணு தடவை படிச்சேன். இன்னும் கூட படிப்பேன் போல. கடைசி மூணு வரி மட்டும் புரிஞ்சது. அல்லது அப்படி ஒரு மாயை. கடைசியில் லேபிளை பார்த்தேன். 'இசை, இன்ன பிற'...

இன்னும் கூட படிப்பேன் போல என்கிற மனசை மாற்றிக் கொண்டேன். நான் சரியாத்தான் பேசுறனா?

ராகவன் said...

அன்பு ராஜசுந்தரராஜன் அண்ணன் அவர்களுக்கு,

வாணி ஜெயராம் அத்தனை தான் பாடினார்... அந்தப் படத்தில்... சரணங்கள் தொடவே இல்லை...

வாணி ஜெயராம் தான் சிறப்பு, எந்த சேஷ்டைகளும் இல்லாமல் இயல்பான பாவத்துடனும், பிசிறில்லாத சுருதியுடனும் பாடுவதற்கு அவரை விட்டால் ஆளில்லை.

பாலமுரளிகிருஷ்ணா... தன் முத்திரையை வைக்கவும், தன் திறமைகளை காட்டவும் எப்போதும் மெனக்கெடுவது அதன் எளிமையை தகர்த்துவிடுகிறது.

ஒருமுறை கேவிஎம் பேசியபோது சொன்னார், “எனக்குத் தெரிந்து, வாணி ஜெயராமும், எஸ்.பி.பியும் மிக உன்னதமான வாய்ப்பாட்டு கலைஞர்கள், உண்மையான வாய்ப்பாட்டு கலைஞர்கள் கூட. அவர்களின் பாவமும் உச்சரிப்பு சுத்தமும், எந்த பெரிய கலைஞனுக்கும் வாய்த்தது இல்லை” இது கொஞ்சம் அதிகமான வாஞ்சையில் சொல்லியிருந்தாலும் இதில் உண்மை இல்லாமல் இல்லை.

தியாகராஜரோ, தீட்சிதரோ, ஸ்யாமா சாஸ்திரிகளோ, கச்சேரி பாடுபவர்களைப் போல பிர்க்கா,கமகங்கள் என்று அங்கவஸ்திர அலங்காரத்துடன் பக்தியை பாடியிருப்பார்களா? எனக்குத் தெரியவில்லை.

ஆகாயப்பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா... ஆனந்தபைரவி...
கொஞ்ச நாள் பொறு தலைவா...

சோகத்துக்கும் சந்தோஷத்துக்கும் பெரிதாக வித்யாசம் இல்லை என்றே தோன்றுகிறது. முகாரியில் அமைந்த மங்களகரமான பாடல்கள் இருக்கு. சில ஸ்வர வித்யாசத்தில் மாறிவிடும் ரசம்.

ஸ்வாதித்திருநாள் அவர்களின் கிருதிகள், பெரும்பாலும் பக்தியும், களிப்பும் மட்டுமே இருக்கும், சில விலக்குகள் உண்டு. எனக்குத் தெரிந்து எல்லா ராகங்களிலும் ஒரு சோகரசம் கொண்டு வந்து விட முடியும். நாட்டையை ஒப்பாரியாக்கவும் முடியுமென்றே தோன்றுகிறது.

விளம்பமாய் இழுக்கும்போது இது எளிதில் சாத்தியப்படுகிறது. இதற்கு ஏன் ஆனந்தபைரவி என்று பெயர் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் ஸ்யாமா சாஸ்திரிகள் காமாட்சி அம்மன் மேல் நிறைய கிருதிகள் பாடியிருக்கிறார்.

நினை மனமே ஸ்கந்தனை... ரூபக தாளத்தில் அமைந்த ஆனந்தபைரவி... உருக்கமான பாடல் என்று சொல்லமுடியாது. அதே போல முருகன் மேல் பாடிய எல்லாப்பாடல்களும் அப்படியே... சிங்கார வேலவன் வந்தான்...

கிருஷ்ண கருணா கதானுதே... க்ருபா நிதே... ஆனந்தபைரவி... ஸ்வாதி திருநாள்... உற்சாகமான பாடல்.

அன்புடன்
ராகவன்

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

நன்றாகப் பாடத் தெரிந்த வாணி தன் குரலில் அத்தனை எளிமையான அலங்காரமற்ற பாவத்தை(பா அழுத்தமாக) பலுகே பங்காரமாயனாவில் கொடுத்திருப்பார்.மதுரை தங்கத்தில் பார்த்தது.

மறக்க முடியாத ராகம். தொலைபேசியில் பேசியது போல நீங்கள் முந்திக் கொண்டுவிட்டீர்கள் ராகவன்.