Wednesday, April 27, 2011

மருதாணி சித்திரங்கள் - 3


மாதவி ரகுவோட வழக்கமான ஹிரோயின்கள்லேர்ந்து மாறுபட்டவள்ங்கறது எனக்கு கொஞ்சம் குதூகலத்தை கொடுத்தது.  'உன்ன மாதிரி ஒரு குழந்தை வேணும்'னு, சொல்றது, இவனுக்காக கோயில்ல பாட்டு பாடறதுஇந்த வேலை எல்லாம் மாதவி செய்ய மாட்டான்னு எனக்கு ரொம்பவே நம்பிக்கை இருந்தது.
மாதவி என்னோட கல்லூரித்தோழி. இளங்கலை இருவரும் ஒரே வகுப்பு. அப்போ எனக்கு ரகுவைத் தெரியாது. அதனால் மாதவிக்கு, ரகு சமீபத்திய அறிமுகம். சனிக்கிழமை காலைகளில் ரகு வந்த கொஞ்ச நேரத்திற்குள் மாதவி வருவதும் வழக்கமானது.
வழக்கம் போல அவன் தான் முதலில் வந்தான். எப்போதும் போல ஏதாவது எழுதி எடுத்து வந்திருப்பான், உடனே கொடுக்க மாட்டான். மாதவி வரும்வரை காத்திருந்து, அப்புறம் என் கையில் படிக்கக் கொடுப்பான்.  இன்றைக்கும் அதுமாதிரி ஏதாவது இருக்கலாம். நினைத்ததில் எந்தவித மாற்றங்களும் இல்லாமல், அவள் வந்து சேர்ந்தவுடன், அப்போது தான் ஞாபகம் வந்தது போல, ஜோல்னாப்பையில் இருந்து ஒரு காகிதத்தை, அரிய கண்ணாடிப் பாத்திரத்தைப் போல சர்வஜாக்கிரதையாய் எடுத்தான். நினைத்தபடியே என் கையில் கொடுத்தான். ஏதோ எண்ண சிதறலுடன் படித்ததால், ரகு எழுதிக் கொண்டு வந்திருந்தது மனதில் பதியாமல் திரும்பவும் ஆரம்பத்திலிருந்து படிக்கத் திருப்பினேன்.
போ வித்யா, ஒரு தடவையில புரியலேன்னா வேஸ்ட் திரும்பவும் படிக்க ஆரம்பித்தால், அதோட சார்ம் போயிடும், என்று என்னிடம் இருந்து பிடுங்கி மாதவியிடம் பேப்பரை கொடுத்தான்.  அவள் மெல்ல விரிந்த புன்னகையுடன் வாங்கி படித்துவிட்டு, “ம்ம்... பெருமாள் கோயில் யானையப்பத்தி எழுதியிருக்கீங்க, என்றவுடன், “அசத்திட்டீங்க மாதவி, என்றான் வெற்றி சிரிப்புடன்.
ரகுவின் பேச்சில் சாதாரணமாகவே ஒரு லயம் தெறிக்கும்.  பெரும்பாலோர் ஒரே மாதிரி மோனோடோனில் பேசுவது போலில்லாமல், நிறைய ஸ்ருதி மாறுபாடு இருக்கும், இவன் பேச்சில்.  லெட்டர் கிடைச்சுதா வித்யா? வில் வித்யா கொஞ்சம் ஏற்றத்தில் முடியும். இப்பொழுது ராகத்துடன் ஒரு குழைவும் இருந்தது. ரகுவிடம் ஒன்றும் மாதவி வரும் வழி மேல் விழி வைக்கும் ஒரு பதற்றமோ தென்படாது சாதாரணமாகத்தான் பேசிக் கொண்டிருப்பான். ஆனால் மாதவி வந்த பின் அவளிடம் பேசும்போது நிச்சயம் எனக்கு வித்யாசம் தெரியும். ஒரு உறுத்தாத, ரசிக்கக்கூடிய வித்யாசம்.
சில சாயங்கால வேளை திண்ணையில் மங்கும் வெளிச்சத்தில் புத்தகம் படித்துக் கொண்டிருக்கும்போது என் பாட்டி, ‘ஏற்கனவே கண்ணாடி, என்று முணுமுணுத்தவாறே விளக்கை போட்டவுடன் பக்கங்கள் பளிச்சென்றாகுமே அது மாதிரி இருந்தது எனக்கு.  ரகு மற்ற பெண்களுடன் பேசுவதை பற்றியெல்லாம் விலாவாரியாக சொல்லியிருக்கிறான் தான். ஆனால் மாதவியிடம் பேசும்போது, ஏதோ சிரத்தையாக வேறு எதிலுமே முக்கியத்துவம் இல்லாமல் பேசுவதை  நேரடியாக பார்த்தபோது அதன் முழு வீச்சும் பளிச்சென்று புரிந்தது.
இ.பா. புதுமைப்பித்தன் என்று பேச விழையும் என்னை, மழை, செம்பருத்திப்பூ என்று இழுத்துவிடுவார்கள் இருவரும். தாமரை இலை அணுகுமுறை அவர்களிடம் செல்லுபடி ஆகாது.  சனிக்கிழமை தவிர அவர்கள் அதிகம் தனியே சந்தித்த மாதிரி தெரியவில்லை.  நிச்சயம் ரகு முயற்சி செய்திருப்பான் என்று எனக்குத் தோன்றியது.  ஒருமுறை இருவரும் ஒரு வாரம் நான் இல்லாமல் சந்தித்ததை அவள் இருவரியிலும், அவன் அவள் அணிந்திருந்த புடவை நிறத்திலிருந்து, பஸ் ஏறியவுடன் அவனுக்கு மட்டுமாய் கையசைத்தது வரை ரெண்டு பக்கங்களும் எழுதியிருந்தான். மாதவியை எனக்குத் தெரியும் என்பதால், அவள் எழுதாமல் விட்டதில் கனம் அதிகமாக இருந்தது. 
மாதவியின் மெண்மையான மனம், அற்புதமான நகைச்சுவை உணர்ச்சி, கவித்துவமான சிந்தனை, யோசித்து பேசும் தண்மை இதெல்லாம் அவள் எழுதுவதிலும், மெல்ல பேசுவதிலும் ரகுவிற்கு புரிந்திருக்கும். அதனால் பெரிதாக ஏதாவது தாக்கமோ, விளைவோ வருமா என்று சந்தேகம் தான், ஆனாலும் எனக்கு ரொம்பவே ஆர்வமாக இருந்தது.
மாதவியிடம் அவன் கரிசனத்துடன், “வெயில்ல நிக்காதீங்க, என்று சொல்வதை கேட்டுக்கொண்டிருந்துவிட்டு, அவளை பஸ் ஏத்திவிட்டு திரும்பும்போது, “ரொம்ப முயற்சி பன்ற போல? என்றேன் புன்னகையுடன்.
ம்ம்? என்று புருவத்தை சுருக்கினான்.
"மத்தவங்க மாதிரி அவளையும் உன்கிட்ட பைத்தியமா ஆக்குறதுக்கு, என்றேன். மாதவி அப்படில்லாம் சுலமாக மடங்கிட மாட்டா,” என்று முடித்தேன்.
அவனுடைய பதில் சிரிப்பில் கொஞ்சம் அதையும் தான் பார்க்கலாமே என்ற தொனி இருந்தது.  ரகு, ரசிக்கக்கூடிய ரோக்.
ரகு மாதவியை விழுந்து விழுந்து சிலாகிப்பதும், அவளைப் பற்றி என்னிடம் பேசுவதும் தொடர்ந்தது.
"அவளுக்கு நெத்தில ரவுண்ட் பொட்ட விட திலகம் மாதிரி வச்சா நல்லா இருக்கும்னு சொன்னேன். அதுலேந்து கவனிச்சியா வித்யா? இப்போல்லாம் திலகம் தான்."
நீ ஒண்ணு கவனிச்சயா?, இன்னும் நாங்க மரியாதையா பண்மைல தான் பேசிக்கறோம். 
அவங்க வீட்டு வேப்ப மரத்த வெட்டினதப்பத்தி, அவ எழுதின கவிதை படிச்சேன் வித்யா, அபாரம்!”.
ரகுவின் தொடர் குறிப்புகளை விட அவனை பற்றிய என் மெலிதான கிண்டல்களை அவள் சிரித்து மழுப்பியது இன்னுமே சுவாரசியம்.
வேலை விஷயமாக டெல்லி போக வேண்டி வந்ததில் ஒரு மூன்று வாரம், விட்டுப்போய் அவள் வீட்டுக்குச் சென்றபோது அவளுடைய ஐந்து வயது, அக்க மகள் தான், சித்திக்கு கல்யாணம், என்று போட்டுடைத்தாள்.  மாதவி வருவதற்குள், மணமகனைப் பற்றி அவள் அம்மா என்னிடம் எல்லாமே சொல்லிவிட்டதால், அவள் வந்த பின்னர் எனக்கு மேலே கேட்க ஒன்றும் இல்லை போல தோன்றியது.  நல்ல வேலை, சம்பளம், நல்ல குடும்பம் இதைத் தவிர வேற எதுவும் ரெலவண்டா என்ன?
ரகுவைப் பற்றி அவளுக்கு பேச ஒன்றும் இருக்காது என்று எனக்கு தெரிந்து தான் இருந்தது. நானும் அபத்தமாக எதுவும் கேட்கவில்லை, அவளும் சொல்லவில்லை.
ஏதோ கோவிலுக்கு போகவேண்டிருந்ததால் அடுத்த சனிக்கிழமை மாதவி வரவில்லை.
அவளுக்கு பார்த்திருக்கிற மாப்பிள்ளைய போய் பார்த்தேன் வித்யா,” என்றான் ரகு வந்ததும் வராததுமாய்.
எப்படி? என்றேன் ஆச்சரியத்துடன்.
ஒரு பொது நண்பன் மூலமா, மாதவியைத் தெரியும்னு காமிச்சுக்காம பேசினேன்,” என்றான்.  அதற்கு இவன் எவ்வளவு முயற்சி செய்திருக்க வேண்டும் என்று நினைக்கையில் கொஞ்சம் அவன் அக்கறை இதமாகவே இருந்தது. இது தான் ரகு என்றும் தோன்றியது. ஆனால் அவன் குரலில் சுரத்தில்லாதது, அதைவிட பாதித்தது.
சற்று நேர அமைதிக்குப் பிறகு, “என்னைவிட அஞ்சு பங்கு சம்பளம் வாங்குறான், அதை அஞ்சு நிமிசத்துக்கு ஒருதரம் சொல்லிக்கறான்.  மனுஷங்கள பண பலத்தை வச்சு எடை போடறவன்னு நல்லாவே தெரிஞ்சது.  இலக்கிய பேசுறவன்லாம், மூளை வளர்ச்சி கொறைஞ்சவன் மாதிரி நினைப்பான் போல,” என்று அவன் மேலும், மேலும் சொல்ல எனக்கு மனசு பாரமானது. 
"மாதவியோட மென்மையான மனச கொஞ்சமாவது புரிஞ்சுப்பானான்னு ரொம்பவே கஷ்டமா இருக்கு வித்யா, என்று அவன் முடிப்பதற்குள்,
மண்ணாங்கட்டி! என்ற என் குத்தல் சிரிப்புக்கு புருவம் சுருக்கி பேச்சை நிறுத்தினான்.
"கஷ்டமாவது, கிஷ்டமாவது, நடந்த நாடகங்கள்’, மரப்பசு’, அப்படின்னு ஜோல்னா பையில புஸ்தகம் எடுத்திட்டு வரது, ‘இருட்டிடுச்சே, உன் வீட்டு வரைக்கும் கொண்டு வந்து விடறேன்னு வந்துட்டு திரும்பி மழைல நனைஞ்சுட்டே போறது, ‘நீ சிரிக்கும்போது தெரியுதே அந்த வரிசை தப்பின ஒரு பல்லு, அதான் உனக்கு அழகுன்னு சொல்லறது... அப்றம், அப்றம்... அவ புருஷன் அவள புரிஞ்சுப்பானோ? என்னவோ?ன்னு பெருமூச்சு விட்டுட்டு அடுத்த பொண்ண புரிஞ்சிக்க நீயும் கிளம்பிடவேண்டியது, நானும் சனிக்கிழமை ஆனா ஹிந்து பேப்பர மடிச்சு வச்சிட்டு, பில்டர் காப்பியோட அந்த அடுத்த கதை கேட்க வேண்டியது  We are all self centered bastards!, என்றேன்.
மெலிதான ஏளனத்துடனான இடக்குப் பேச்சு தான் பேச விழைந்தேன், ஆனால் உண்மையில் சுயவெறுப்பு என் குரலில் கொஞ்சம் தோணித்தோ?
சற்று நேர அமைதிக்கு பிறகு, “உண்மைதான் வித்யா, என்ற கரகரத்த குரலுக்கு திரும்பிய பொழுது தென்பட்டது, ரகுவின், என் நண்பன் ரகுவின் கண்களில், என் கண்களில் கூட இல்லாத மெலிதான் நீர்த்திரை.
ஞாயிறு இரவு பெங்களூர் டிரெய்னில் அரிதாய் கிடைத்த லோயர் பெர்த்தில் படுத்தவாறே, நட்சத்திரங்களை வெறிக்கையில், எளிதாக ரகுவும், மாதவியும் காதலித்திருக்க கூடாதோ? என்று நினைத்துக் கொண்டேன்.

7 comments:

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

இதேபோல் நிறையக் கதைகள் எழுதப்பட்டுவிட்டன ராகவன்.ஆனாலும் நீங்கள் எழுதியுள்ள எதனால் என்று வித்யா விசாரணைக்குட்படுத்தும் இறுதிக் கட்டம் உங்களை மற்ற எழுத்துக்களில் இருந்து வித்யாசப்படுத்துகிறது.

தன்னிலையிலிருந்து பிறரைப் பார்ப்பதும் சின்னச் சின்னதாய் அலைவரிசை ஒத்துப்போவதையெல்லாம் ஒரு இனக்கவர்ச்சியால் காதல் என நினைத்து மறுகுவதும் எல்லா நாட்களிலும் நிகழ்ந்தபடியேதான் இருக்கிறது ராகவன்.

ராகவன் said...

அன்பு சுந்தர்ஜி,

இது நான் எழுதிய கதை அல்ல... இது என்னுடைய தோழி எழுதியது...

இது ஒரு தொடராய் எழுதவேண்டும் என்ற எங்கள் ஆசையில், அவள் எழுதியதை... நான் பதிவிடுகிறேன்...

அவளின் எழுத்து நடையின் வீச்சும், சட்டிலிட்டியும் எனக்கு சுட்டுப் போட்டாலும் வராது...

அன்புடன்
ராகவன்

ராகவன் said...

அன்பு சமுத்ரா,

உங்கள் கருத்துக்கு என் நன்றியும் அன்பும்.

அன்புடன்
ராகவன்

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

இது என்ன கண்ணாமூச்சி ராகவன்?

உங்கள் கதை என்றுதான் நினைக்கமுடிந்தது.

rajasundararajan said...

முந்திய இரண்டு பகுதிகளை ஒப்பிட இது நன்றாக வந்திருக்கிறது. ஆனால் இன்னும் சில குழப்பங்களைத் தவிர்த்தல் நல்லது. எ.டு: ஒரே ஆள் பேசும் ஒரு நேரத்துப் பேச்சு, தனித் தனிப் பத்திகளாய்ப் பிரிக்கப் படுவதைத் தவிர்த்தல்.

//"அவளுக்கு நெத்தில ரவுண்ட் பொட்ட விட திலகம் மாதிரி வச்சா...// etc.,

இவை, "அவளுக்கு நெத்தில ரவுண்ட் பொட்ட விட, திலகம் மாதிரி வச்சா நல்லா இருக்கும்னு சொன்னேன். அதுலேந்து கவனிச்சியா, வித்யா, இப்போல்லாம் திலகம் தான்," என்றவன், "நீ ஒண்ணு கவனிச்சயா, இன்னும் நாங்க மரியாதையா, பன்மைலதான் பேசிக்கறோம்," என்றான். "அவங்க வீட்டு வேப்ப மரத்த வெட்டினதப் பத்தி அவ எழுதின கவிதை படிச்சேன், வித்யா, அபாரம்!"

என்றிப்படி. மற்றபடி, வாசிப்புத் தடங்கல் ஒன்றுமில்லை.

//சில சாயங்கால வேளை திண்ணையில் மங்கும் வெளிச்சத்தில் புத்தகம் படித்துக் கொண்டிருக்கும்போது என் பாட்டி, ‘ஏற்கனவே கண்ணாடி,’ என்று முணுமுணுத்தவாறே விளக்கைப் போட்டவுடன் பக்கங்கள் பளிச்சென்றாகுமே அது மாதிரி...//

இதுதான் ஒரிஜினாலிட்டி என்பது. பாராட்டப்பெறவேண்டியது. இதற்குள் உறைந்து உள்ள பொருட்தொடர்பும் என்னை வியப்பில் ஆழ்த்துகிறது.(தன் முயற்சிப் பிடிவாதத்தால் விளங்காதது, புற வெளிச்சத்தால் விளங்குவது). இதில், 'ஏற்கெனவே கண்ணாடி', 'என் பாட்டி' என வரும் சொல்லீடு இரண்டும் இன்னும் அருமை! //லோயர் பெர்த்தில் படுத்தவாறே, நட்சத்திரங்களை வெறிக்கையில், எளிதாக, 'ரகுவும் மாதவியும் காதலித்திருக்க கூடாதோ?' என்று நினைத்துக் கொண்டேன்.// என்கிற இறுதி வாக்கியத்தில் வருகிற, 'லோயர் பெர்த்', 'நட்சத்திரங்களை வெறிக்கையில்' ஆகிய இவ்விரண்டோடு வந்து முடிச்சு விழுகிறது!

//ஒருமுறை இருவரும் ஒரு வாரம் நான் இல்லாமல் சந்தித்ததை அவள் இருவரியிலும், அவன் அவள் அணிந்திருந்த புடவை நிறத்திலிருந்து, பஸ் ஏறியவுடன் அவனுக்கு மட்டுமாய் கையசைத்தது வரை ரெண்டு பக்கங்களும் எழுதியிருந்தான்.// என்னும் தகவல், இக் கதைப்பகுதியின் ரகு x மாதவி சமன்பாட்டை மிகச் சிறப்பாக நிறுவுகிறது.

அப்புறம், இக் கதை இப்படித் தொடங்கி வளர்ந்து இருக்கலாமே? (ஒரு கருத்துதான்):

// வழக்கம் போல அவன் தான் முதலில் வந்தான். எப்போதும் போல... படிக்கத் திருப்பினேன்.

//“போ வித்யா, ஒரு தடவையில புரியலேன்னா... வெற்றி சிரிப்புடன்.

//மாதவி ரகுவோட... நம்பிக்கை இருந்தது.

//மாதவி என்னோட கல்லூரித்தோழி. இளங்கலை... வருவதும் வழக்கமானது.

//ரகுவின் பேச்சில் சாதாரணமாகவே ஒரு லயம்... //

ராகவன் said...

அன்பு ராஜசுந்தரராஜன் அண்ணன் அவர்களுக்கு,

இந்தக் கதையை நானும் இதே மாதிரி தான் பார்த்தேன்...

நீங்கள் குறிப்பிட்ட இடங்கள் எனக்கும் பிடித்திருந்தது.

ஆனால் நீங்கள் குறிப்பிட்டது போல வரிசையில் அடுக்கிய போது கதையில் ஒரு அழகான ஒழுக்கு இருந்தது. எழுதியவர் இந்த கருத்தை எடுத்துக் கொள்வார்.

அன்புடன்
ராகவன்

devi.s said...

marupadiyum padikka poren. . . so casual and full of life. . . superb boss. . . !