Tuesday, August 02, 2011

இருத்தல் சமன்பாடு...



பலுவனம்மாவும்
கோட்டைமுனியும்
செய்வது எல்லாம்
பெரிய காரியங்கள் இல்லை
காத்து கருப்பு அண்டாமல்
பார்த்துக் கொள்வதும்
காய்ச்சல் கண்டால்
பிணி தீர்ப்பதும் தவிர
வேறு ஒன்றும் தெரியாது
சந்தான சம்பத்து என்று
பாலிக்க, வரங்கள் நல்க
பெருந்தெய்வங்கள்
தேவையாயிருக்கு
ஒரு புட்டி சாராயமும்
சுருட்டும், ஒரு கோழியோ
கிடாயோ கொடுத்து தீராது
பெருந்தெய்வங்களின் பசி
பசியோடு அலையும்
பெருந்தெய்வங்கள் விழுங்க
எண்ணிக்கையில் குறையுது
சிறுதெய்வங்கள்

6 comments:

'பரிவை' சே.குமார் said...

Nalla Kavithai Anna...

Rathnavel Natarajan said...

அருமை.

க ரா said...

நல்லா இருக்குண்ணா....

நிலாமகள் said...

காத்து கருப்பு அண்டாமல் //
:-))

rajasundararajan said...

'பெருந்தெய்வங்கள்', 'சிறுதெய்வங்கள்' என்னும் சொல்லாட்சியே ஒரு புரட்டு. அரசர்கள், தேவைக்காக, சில தெய்வங்களைப் promote செய்தார்கள். அதுகளுக்கு மட்டும் பெரிய பெரிய ஆலயங்கள் கட்டினார்கள். அதுகளை வழிபட்டால்தான் தமக்கும் மதிப்பு என்று கீழ்நிலை மக்களும், நாளடைவில், ஆலயங்களுக்குச் சென்று மாறிப் போனார்கள்.

இன்னும் சரியாகச் சொன்னால், குடும்பத்தில் ஒருவராக இருந்த கடவுள், எல்லாருக்கும் பொது என்றாகி அந்நியப்பட்டுப் போனது.

மற்றபடி, குலதெய்வங்களுக்கு உள்ள சக்திக்கு மேல் சிவா, விஷ்ணுவுக்கு சக்தி உண்டா என்றால் ஒருவருக்கும் சொல்லத் தெரியாது. (அப்படி ஒரு வினா எழுப்புவதும் அபத்தம் என்பது தத்துவம் அறிந்தவர்களுக்குத் தெரியும்.)

நிறையப்பேர் வழிபடுவதால் அவை பெருந்தெய்வம் என்றால், இயேசு, அல்லாஹ் என்ன?

புராணங்களுக்குள் போன பிறகே முருகனுக்கும் பேராலயங்கள் கிட்டின என்பதால், பொதுவாக, 'புராண இதிகாச தெய்வங்கள்' என்று சொல்லப்படுவதே சரி.

//சந்தான சம்பத்து என்றுபாலிக்க, வரங்கள் நல்க, பெருந்தெய்வங்கள் தேவையாயிருக்கு//

இது பொய்.

தாமிரபரணிக் கரை ஏரல் என்னும் ஊரில், 'சேர்மன்' என்றொரு சாமி கோவில்கொண்டு இருக்கிறார். முன்பு அங்கு பஞ்சாயத்துச் சேர்மனாக இருந்து மாண்டவர்தான் அவர். சந்தான சம்பத்து என்றுபாலிக்க, வரங்கள் நல்க, அவரை நாட வேண்டுமா, திருச்செந்தூர் முருகனை நாடவேண்டுமா, ஸ்ரீவைகுண்டம் பெருமாளை நாடவேண்டுமா என்று அத் திக்கத்து மக்களைக் கேட்டுப் பாருங்கள்: 'சேர்மன்சாமி'தான் ஜெயிப்பார்.

கவிதையில் உள்ள சோகம் புரிகிறது. ஆனால் அது 'ஆண்டைகள் சாமி x ஆளப்படுபவர்கள் சாமி' சம்பத்தப் பட்டது என்பதே சரியான வரலாற்றுப் பார்வை.

ராகவன் said...

அன்பு அண்ணனுக்கு,

சிறுதெய்வங்கள் பெருந்தெய்வங்கள் என்பது ஒரு புறத்தோற்றம் தான், இது சிம்பாலிஸம் மட்டுமே...

உங்கள் கருத்திற்கும் என் கருத்திற்கும் எந்தவிதத்திலும் வித்யாசம் கிடையாது...

ஆண்டைகள் சாமி x ஆளப்படுபவர்கள் சாமி என்றும் இருக்கலாம்...

திரும்பவும் இது பற்றி எழுதுகிறேன் அண்ணே!

அன்புடன்
ராகவன்