நீரில்லா குவளையில்
நிரம்பிக்கிடக்குது தாகம்...
தூக்கில் தொங்கியதன் காரணங்களை
அவன் கடைசியாய் படித்த புத்தகத்தில்
தேடிக்கொண்டிருக்கிறது மேசைக்காத்தாடி...
தவிப்புகளின் மத்தியில்
சுழலும் புத்தியில் சிக்குகிறது
யாரோ தவற விட்ட ஒற்றைக் கொலுசு...
துளையிடப்பட்ட குழல்
நெய்த நெசவில் பழுதில்லை
போர்த்திக் கொண்டதில் உறங்கிப்போனேன்...
மணல் வீடு கட்டியவளின்
விரல் அடையாளங்கள் அழிக்கும்
அலையை என்ன செய்வது?
***
உதிர்ந்த இறகின்
தனிமையை அறியாதிருக்கும்
உதிர்த்த பறவை...
***
சருகுகள் அடைத்திருந்த வாய்க்காலில்
முளைத்திருக்கிறது
தளிர் இதழ்ப்பூ ஒன்று...
***
உறங்காத இரவுகளின்
மத்தியில் உருளும் பகடைகளில்
ஒற்றைப்படை விருத்தம்...
***
சலனமற்ற குளம் ஒன்று
கல்லெறிந்ததில்
கலங்குகிறது என் உள்...
***
தனித்த இரவுகளின் வாசனை
எண்ணெய் விளக்கின்
கருகிய திரியில் பிறக்கிறது...
***
மழை ஒரே சாயலில் பெய்கிறது
நனைபவர்கள் தான் வெவ்வேறு...
***
மழையில் நனைந்த
சிறுகதைத் தொகுப்பின்
பக்கங்களை பிரிக்கமுடியாமல்
கதைகள் எல்லாம் ஒரே கதையானது...
கல் பட்டு
சிதறிய இலைகளுடன்
சில பறவைகளும்...
படித்துறையின் வெம்மையில்
பிளந்து கிடக்கும் தெப்பம்
தெய்வங்களின் கருத்த உதடுகள்...
இரவுப்பூச்சிகளின்
சத்தத்தில் சலசலத்துக் கொண்டிருக்கிறது
கால் நணைக்கமுடியாத குளம் ஒன்று...
***
17 comments:
இப்படியான முரன் தொடர் எப்போதும் வசீகரிக்கிறது.
நன்றி அன்ணே !
அருமை ராகவன்.
வாழ்த்துக்கள்.
துகள் துகளாக காற்றில் பறக்கும் காய்ந்த மணல் வீடு
நல்ல வரிசை ராகவன்
அண்ணா... அனைத்தும் அருமை.
வாழ்த்துக்கள்.
தனித்த இரவுகளின் வாசனை எண்ணெய் விளக்கின் கருகிய திரியில் பிறக்கிறது
மிக பிடித்திருக்கின்றது ::))
எல்லாம் அருமை என்றாலும் கருகிய திரி சற்று மனதை கனக்க வைக்கிறது
வாழ்த்துக்கள் நண்பா
விஜய்
Arumai Raghavan.
முரண்பட்டவைகளை கவிதையாக எளிதில் வருகிறது அனைவருக்கும். ரசிக்கக் கூடியதே. வாழ்க்கையில் கிடைக்கும் சந்தோஷங்களை எத்தனை பேர் எளிதாக கவிதையாக படைத்திருக்கின்றனர் என்று தெரியவில்லை.
அருமை ராகவன்.
வாழ்த்துக்கள் :)
எல்லாம் அருமை !கூழாங்கற்களின் வழுவழுப்பு அவற்றின் திட்பமான காலக்கடத்தலை அறிவிக்கிறது.
சின்ன சின்ன மலரெடுத்து
தோரணம் தொடுப்பது போல்,
வார்தைகளால் தொடுக்கப்பட்டு..
”உதிர்ந்த இறகின்
தனிமையை அறியாதிருக்கும்
உதிர்த்த பறவை...”
மிக அருமை ராகவன்...
//நேசமித்ரன் said...
துகள் துகளாக காற்றில் பறக்கும் காய்ந்த மணல் வீடு
//
saavadikkiraaha...:)
//மழையில் நனைந்த
சிறுகதைத் தொகுப்பின்
பக்கங்களை பிரிக்கமுடியாமல்
கதைகள் எல்லாம் ஒரே கதையானது//
என்னென்னவோ தோணுது குரு..
முரளி, ராகவனெல்லாம் ஒண்ணுதான். இந்தக்கதைகளை சேத்துவைத்த மழைக்கு நன்றி.
அருமை....
அருமை...
வாழ்த்துக்கள்...என் முதல் வருகை..சுற்றிப்பார்த்து வருகிறேன்...
""சலனமற்ற குளம் ஒன்று
கல்லெறிந்ததில்
கலங்குகிறது என் உள்."""
வாவ் வரிசை ஹைககுகள் அண்ணே .
வண்ணதாசனின் கவிதை ஒன்றும் ஞாபகத்துக்கு வந்து தொலைக்கிறது இதை படிக்கும் நாழிகை.
பறப்பதற்கும் , வளைப்பதற்கும் ஏது வாகத்தான் இருக்கிறது , பறவையையும் , நீர்நிலையையும் பாடுபொருளாக கொண்ட கவிதைகளுக்கு.
காலில் குத்திய முள்ளை எடுக்கும் கணம் நேரம் தோன்றும் வலியோடான சுகம் . வயலின் கம்பி அதிர்வுறும் சப்தம்.
ஒரு கல்லெறிதலில் கலங்கும் குளம். உள் .
தொவைச்சு எறியுது வெளியே.
நன்றிண்ணே
ஆஹாஹா! அருமை எப்படித் தவறவிட்டேன் தெரியவில்லை....பூங்கொத்து!
Post a Comment