Thursday, September 08, 2011

தேன்கூட்டு மெழுகு...


கங்கம்மா வீட்டிற்கு செல்லும்போது செல்வத்தையும் பார்த்து  வர வேண்டும் என்று தோன்றியது பிச்சம் நாயுடுவுக்கு.  இந்நேரம் வீட்டுக்கு வந்திருக்க வேண்டும். ரொம்ப நாட்களாகி விட்டது என்றாலும், போய் பார்த்து வர காரணமும் வேண்டியிருக்கிறது. மேலுக்கு ஒரு காரணம் சொல்லலாம், அவனுக்கு ரெண்டொரு நாளாய் உடல் நிலை சரியில்லை என்று. பிரத்யேக காரணம் ஏதும் இல்லாமல் இல்லை, ஆனால் அது ஒரு மறைவான காரணம், வெளிக்கு கொண்டு வரமுடியாது உள்ளுக்குள்ளேயே வைத்துக் கொண்டிருக்கிறார் பிச்சம் நாயுடு.  சுகந்தி இன்னும் சிறிது நேரத்தில் வந்து விடுவாள், அவள் வந்ததும் சொல்லிக் கொண்டு கிளம்ப வேண்டும்.

பிச்சம் நாயுடு வெள்ளைக்காரன் ஆரம்பித்த தந்தி ஆபீஸில் பணிக்கு சேர்ந்தவர்.  பரம்பரையிலேயே அதிகம் படித்தவரும், அரசாங்க உத்யோகத்தில் இருந்தவரும் அவர் தான். தந்தி ஆபீஸ் நைனா என்றால் எல்லாருக்கும் தெரியும், அவரின் சிவந்த தோலும், நெத்தியை பிளந்தது போன்ற நாமமும் ஒரு கூடுதல் அடையாளம் அவருக்கு. இன்னும் முழுதும் கருக்காத மீசையின் ஊடே அங்கங்கே இருக்கும் வெள்ளிக்கம்பிகளென மின்னும் நரைமயிர்கள் அவரின் கவர்ச்சி அம்சம். கழுத்துக்கு கீழே சிறிது தளர்ந்த சதையும், தோலும் அவரின் வயசை அனுமானிக்க உதவினாலும், அவரின் சரியான வயதை பெரும்பாலானவர்களுக்கு யூகிக்கமுடிவதில்லை.


செல்வத்துக்கு உடல் நிலை சரியில்லை என்று கங்கம்மா வந்து சொன்னபோது, அதையே ஒரு சாக்காய் வைத்துக்கொண்டு, போய் பார்த்துவிட்டு வரத்தோன்றியது. கங்கம்மாவின் வீட்டுக்கு அடுத்த வீடுதான் செல்வத்தின் வீடு.

செல்வம், ஸ்ரீவில்லிபுத்தூருக்கு மாற்றலாகி வந்து ஒரு இரண்டு வருஷம் இருக்கும்.  வந்ததில் இருந்து, மாதாங்கோவில் தெருவில் தான் இருந்து வருகிறான்.  மருமகளுடன் ஒரே ஆபீஸில் வேலை செய்வது தெரிந்தவுடன், அவருக்கு மேலும் ஒட்டுதல் வந்து விட்டது செல்வத்தின் மீது.  நாகர்கோயில் தான் சொந்த ஊர் என்பது மட்டுமே தெரிந்திருந்தார். அவனுக்கு இரண்டு தங்கைகளும், ஒரு தம்பியும் இருப்பதாகவும், இவன் தான் மூத்தபிள்ளை, அப்பா இல்லை என்பதும் கங்கம்மா சொல்லித்தான் தெரியும். கங்கம்மா வீட்டில் இருக்கும் போது, இரண்டுமுறை வந்தவனுடன் பேசிய போது தான், மருமகள் வேலை பார்க்கும் ஆபீஸில் அக்கவுண்ட்ஸ் செக்‌ஷனில் வேலை பார்க்கிறான் என்று மேற்படி விபரங்களும் தெரியவந்தது.

பிச்சம் நாயுடுவின் ஒரே மகன், சுப்புராஜு மின்வாரியத்தில் வயர்மேனாக பணியில் இருந்தான். செல்வம் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு மாற்றலாகி வருவதற்கு ஒன்றிரண்டு மாதங்களுக்கு முன்பாக, வாழைக்குலத்தெருவில் டிரான்ஸ்பார்மர் பழுதை நீக்க ஏறியவன், மின் விபத்து ஏற்பட்டு இறந்துவிட்டான்.  கம்பாஷனேட்டரி கிரவுண்ட்டில் வாரிசுக்கு வேலை வாய்ப்பிருந்ததால், மருமகள் சுகந்திக்கு அங்கேயே வேலை கிடைத்தது.  பிச்சம் நாயுடுவின் பென்ஷன் பணம், டிஏ ரிவிஷனில் அதிகமாகிக் கொண்டே வந்ததில், அவர் ஓய்வு பெறும் நேரத்தைய சம்பளத்தை விட அதிகமாகிவிட்டது.  பென்ஷன் பணம் போதுமென்றாலும், சுகந்தி வீட்டில் சும்மா இருப்பதை விட வேலைக்குப் போவது அவளுக்கு ஆறுதலாய் இருக்கும் என்று தோன்றியதால், சுகந்தி வேலைக்கு போவதற்கு அவர் தடையேதும் சொல்லவில்லை.

பியூசி வரை படித்திருந்தவளுக்கு, பே பில் செக்‌ஷனில் எழுத்தராய் உத்யோகம். நாசுக்கான வேலை தான். அதிக வேலைப் பளு கிடையாது. இந்த பிரிவில்  நிரந்தரப்பணியில் இருப்பவர்கள், இருபத்தைந்து பேர். அது போக தினக்கூலியாக இருக்கும், என்.எம்.ஆர்கள் தான் அதிகம்.   மாதக்கடைசியில் என்.எம்.ஆர்களின் சம்பளக்கணக்கு பார்க்கும் போது மட்டும் கொஞ்சம் அதிக நேரம் ஆபீஸில் இருக்க வேண்டி வரும்.  மற்ற நாட்களில் ஐந்து மணிக்கே வீட்டுக்கு வந்து விடுவாள். தாமதமாய் வரும் காலங்களில் செல்வம் தன் ஏரியாவிலேயே இருப்பதால், அவனுடன் வருவது வழக்கமாய் இருந்தது, அதன் பின் அவன் மொபட் வாங்கியதும், தொடர்ந்து அவனுடன் வருவது வாடிக்கையாகிவிட்டது.  மதுரை ரோட்டில் இருந்து இவர்கள் குடியிருக்கும் தெருவின் முனை திரும்பி, வீட்டு வாசல் வரை வந்து, அவன் வீடு இருக்கும் தெருவுக்குள் நுழைவது என்று ஆகிவிட்டது, ஆறேழு மாதங்களாய். செல்வம் வீட்டிற்கு போவதற்கு அது கொஞ்சம் சுற்று வழியாய் இருந்தாலும். கங்கம்மாவின் வீட்டிற்கு அருகில் இருப்பவன் என்பதால், சுகந்திக்கும் அவனின் மேல் ஒரு ப்ரியம் வளர்ந்திருப்பது போலத் தோன்றியது பிச்சம் நாயுடுவுக்கு.

தனது அறையில் இருந்த மர அலமாரியில் மடித்து வைத்திருந்த சந்தனக்கலர் சட்டையை எடுத்துப் போட்டுக் கொண்டார்.  அலமாரியைத் திறக்கும் போதே அந்துருண்டையின் மணம் அவருக்கு தூக்கலாய் அடித்தது.  சுகந்தி, இவரின் துணிகளை எல்லாம் இது போல வெளுத்து, மடித்து வைத்திருப்பாள். துணி விஷயத்தில் என்றில்லை. எந்த விஷயத்திலும் ஒரு பாந்தமும், அக்கறையும் இருக்கும் அவளிடம்.  ஒரு சனிக்கிழமை சாப்பிட்டு முடித்த மதியம் ஒரு பொழுது போதும் அவளுக்கு, வீட்டை ஒழுங்கு படுத்த.  தன் பையனுக்கு கல்யாணம் ஆவதற்கு முன்னால், இது போன்ற ஒரு ஒழுங்கு கிடையாது. கங்கம்மா சமைப்பது, மேல் வேலை பார்ப்பதோடு சரி. துணிமணிகள் அடுக்கி வைப்பதிலும், வீட்டுப் பொருட்களை அடுக்கி வைப்பதிலும், அத்தனை  நாசுக்கு இருக்காது கங்கம்மாவிடம்.

சுகந்தி திருமணமாகி வந்த பிறகு எல்லாம் மாறிப்போனது. மகனின் திருமணத்திற்கு பிறகு, கங்கம்மாவும் பிச்சம் நாயுடுவின் வீட்டுக்கு வருவதை நிறுத்திக் கொண்டாள். புது மருமகளுக்குப் பிடிக்காமல் போய்விடும் என்று நினைத்ததாலோ என்னவோ? நிஜக்காரணம் அவருக்கு இன்று வரை தெரியாது, கங்கம்மாவும் சொல்லவில்லை. அவர் கங்கம்மா வீட்டுக்குப் போய் வருவது  அவருடைய மகனுக்கும், மருமகளுக்கும் தெரிந்து தான் இருந்தது. ஆனால் அவரை யாரும் தடுத்ததோ அல்லது அதைப் பற்றி கேட்டதோ இன்று வரை இல்லை. வார்த்தைகளிலும், பேச்சினிலும் இல்லாத பந்தம், சில காரியங்களிலும், மௌனத்திலும் அதிகமாய்த் தெரிகிறது போலத் தோன்றும் பிச்சம் நாயுடுவுக்கு. கங்கம்மாவுடனான உறவை அவரால் வகைப்படுத்தமுடிந்ததில்லை.  கங்கம்மா எந்த வெற்றிடத்தை நிரப்பினாள், எவ்வாறு நிரப்பினாள் என்பது அவருக்கு இன்னும் பிடிபடாதவிஷயம். இத்தனைக்கும் உடல் ரீதியான பரிமாற்றங்கள் இல்லை இருவருக்கும் எப்போதும்.  மணிக்கணக்காய் அருகில் உட்கார்ந்து கொண்டிருப்பதும், கைகளை பிடித்துக் கொள்வதும், தோளில் சாய்ந்து கொள்வதும், ஒரு சில வார்த்தைகளையும் தவிர வேறு ஏதும் அவர்களிடையே இருந்ததில்லை.

பிச்சம் நாயுடுவின் மகன் இறந்தபிறகு துக்கத்தில் பங்கு கொள்ளவும், கூடமாட ஒத்தாசைக்கும் வந்த கங்கம்மா, அதன் பிறகு பிச்சம் நாயுடுவின் வீட்டுக்கு தொடர்ந்து வர ஆரம்பித்தாள். சுகந்தியும் கங்கம்மாவின் மேல் ஒரு என்னவென்று புரியாத ஒரு பிரியத்துடன் இருந்தாள்.  இது அவர்கள் இருவரும் பேசிக்கொள்ளும் போது பார்க்கிற யாருக்கும் தெரிந்து விடும். அத்தனை வாஞ்சையாய் கைகளை வாங்கி உள்ளங்கைக்குள் பொத்தி வைத்துக் கொண்டே பேசிக் கொண்டிருப்பார்கள். பரஸ்பர வாஞ்சையில் இருவரின் அழகும் கூடிவிட்டது போலத் தோன்றும் பிச்சம் நாயுடுவுக்கு.

ஏதேதோ யோசித்துக் கொண்டே பிச்சம் நாயுடு மேல் சட்டைக்குள் கைகளை நுழைத்தவர், பொத்தான்களை போடும் போது, கதவை யாரோ தட்டுவது கேட்டது.  அனேகமாய் சுகந்தியாய் இருக்கும், வேலையில் இருந்து வரும் நேரம் தான்.  இன்றைக்கு செல்வம் வேலைக்கு வந்திருப்பானோ என்று தோன்றியது. செல்வம் உடன் வரும் நேரம் தான் கொஞ்சம் சீக்கிரமாகவே வீடு வந்துவிடுவாள் சுகந்தி.  அறையை விட்டு வெளியே வந்து கதவினை திறந்தார்.  சுகந்தி தான் வந்திருந்தாள், மொபட் சத்தம் ஏதும் கேட்கவில்லை. செல்வம் அவளை இறக்கிவிட்டு உடனே போய்விடுவான்.  எல்லா நாட்களிலும் வீட்டிற்குள் வருவதில்லை.  வாசலுக்கு வெளியே வந்து பார்த்தார், அவன் வந்ததற்கான அடையாளங்கள் ஏதுமில்லை. 

”செல்வம் வரலையா தாயீ?” என்றார்

’இன்னைக்கு வரலை மாமா! இன்னும் மேலுக்கு சரியாவலை போல!’ என்றபடியே செருப்பை ஓரமாய் விட்டு உள்ளே வந்தாள்.

’வெளியே கிளம்பிட்டீங்களா? கங்கம்மா அத்தை வீட்டுப் பக்கம் போனால், அவுஹ வீட்டு தூக்கு ஒண்ணு இருக்கு, கொடுத்திடுறீகளா?’ என்றாள்.

சரியென்றவர், பட்டாசாலில் ஈசிசேரை விரித்தவர், அதில் படுக்க எத்தனித்தார்.  ”ஏதாவது வாங்கணுமா தாயீ!”

’ஏதும் வேணாம் மாமா! எல்லாம் இருக்கு, நீங்க சட்டையை கழட்டிக்கிடுங்க! அதோட படுத்தீஹன்னா, கசங்கி போயிடும்!’  சுகந்திக்கு தன்னுடைய மாமனாரின் சட்டை கசங்குவதில் பிடித்தம் இல்லை.  அப்படியே துவைச்சு மடிச்ச சட்டைக்குள் அவர் தன்னை புகுத்திக் கொள்வார் என்று தோன்றும் அவளுக்கு. அந்த நேர்த்திக்காகவே ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்யத் தோன்றும் சுகந்திக்கு.

’மாமா! நிமிஷத்துல பால் கொழக்கட்டை செஞ்சு தாரேன், அத்தை அவுஹளுக்கும் எடுத்துட்டு போங்க! வெறுந்தூக்கா எப்படி கொடுக்குறது? அவுஹ சொன்ன பக்குவப்பிரகாரம் செஞ்சிருக்கேன், எப்படி இருக்குண்ணும் கேட்டு சொல்லுங்க!’ என்றாள்.

”நீயும் வாயேந்தாயீ! போய் ஒரு நடை பார்த்துட்டு வரலாம்! செல்வத்துக்கும் மூணு நாளா மேலுக்கு முடியலைன்னு சொல்லுத? போய் என்னான்னு விசாரிச்சுட்டு வரலாமே!” என்றார்.
சுகந்தியிடம் இருந்து பதில் வரவில்லை, சமையலறைக்குள் சத்தம் வர, கவனிக்கவில்லை போல என்று நினைத்துக் கொண்டார்.

சட்டையை கழட்டி, உள்ளறைக்கதவில் மாட்டினார்.  எரவாணத்தில் சொருகியிருந்த பனைவிசிறியை எடுத்துக் கொண்டு, ஈசி சேரில் சாய்ந்து கொண்டார்.  பட்டாசால் உத்தரத்தில், நூலாம்படை ஏதும் படியாமல் சுத்தமாய் இருந்தது.  தூக்கம் வருவது போலவும் இருந்தது, அப்படியே விசிறிக் கொண்டே இருந்தவருக்கு என்னென்னவோ ஞாபகம் வந்தது.

சுகந்தி சமீபகாலமாகத்தான் கங்கம்மாவை ’அத்தை’ என்று அழைக்க ஆரம்பித்திருக்கிறாள் என்று தோன்றியது. இதில் யாருக்கும் மறுப்பில்லை. கங்கம்மாவும், சுகந்தியை தன்னுடைய பெரிய மகளாகவே வரித்துக் கொண்டாள் என்று தோன்றும்.

கங்கம்மாவுக்கு இரண்டு குழந்தைகள், இரண்டும் வயதுக்கு வந்த பெண்கள். கங்கம்மாவின் புருஷன் இறந்த பிறகு, பிச்சம் நாயுடுவின் மனைவிக்கு  தூரத்து சொந்தமான கங்கம்மா, பிச்சம் நாயுடுவிடம் வீட்டு வேலை செய்ய கேட்க வந்தாள்.  அப்பாவும், பிள்ளையும் மட்டுமே இருந்த வீட்டில் வேலைக்கு வந்த போது சம்பளம் ஏதும் பேசவில்லை.  கொடுக்குறதக் கொடுங்க! என்று வேலை செய்ய ஆரம்பித்துவிட்டாள்.  மேல் வேலையும், சமையல் வேலையும் செய்ய ஆரம்பித்தாள். பிச்சம் நாயுடு தான் அவளை அங்கேயே சாப்பிடச் சொல்லி விட்டார்.  முதல் மாதம் முடிந்தபிறகு பணமாய் கையில் கொடுத்த போது வேண்டாம் என்று மறுத்துவிட்டாள்.  வீட்டுக்கு கொஞ்சமா பலசரக்கு வாங்கிப் போட்டா போதுமென்றும், சொந்தவீடு இருப்பதால், பெரிதாக செலவு இல்லை என்றும் சொல்லிவிட்டாள். வேறு ஏதாவது தேவைப்பட்டாலும், பொருளாய் தரச் சொல்வாள். சிலசமயம், பிச்சம் நாயுடுவே தேவையறிந்து வாங்கித்தருவதும் உண்டு.

கங்கம்மாவின் இரண்டு பெண்களும் வேலை பார்க்கிறார்கள் இப்போது. ஒருத்தி ஸ்டார் தீப்பெட்டி ஆபீஸிலும், இன்னொருத்தி ராஜபாளையத்தில், ஆடிட்டர் சுரேஷிடமும் வேலை பார்க்கிறார்கள். இவர் தான் சுரேஷிடம் பேசி வேலைக்கு சேர்த்து விட்டார்.  குடும்பம் நடத்துவதற்கு போதுமான வருமானம் வந்தபிறகும், ஏனோ கங்கம்மா வேலைக்கு வருவதை நிறுத்தாமல் வந்து கொண்டிருந்தாள், மகனுக்கு திருமணம் ஆகும்வரை. கங்கம்மா பற்றி யோசித்துக் கொண்டிருக்கும் போதே அவருக்கு தன்னுடைய மருமகளின் நினைப்பு வந்தது. 

சுகந்திக்கு முப்பத்து ஆறு வயசிருக்கும், அதிகமாப் போனா! இவள் தனியாய் நிற்பது, பிச்சம் நாயுடுவின் மனசுக்குள் வேதனையாய் இருக்கும்.  தன் மகனுடன் அத்தனை ப்ரியமாய், பாந்தமாய் குடும்பம் நடத்தினவள்.  அவன் இருக்கும் வரை வீட்டை விட்டு எங்கும் போனதில்லை.  கடைக்கு போய் ஏதாவது வாங்க வேண்டும் என்றாலும், பிச்சம் நாயுடு தான் போவது வழக்கம். அக்கம் பக்கம் வீடுகளில் உள்ளவர்களிடமும் எந்த நெருக்கமும் இல்லை அவளுக்கு. மகன் இறந்த ஆறேழு மாதங்களில் எல்லாம் மாறிப் போனது. அவளுடைய வீட்டார் வந்து அழைத்த போதும், வரவில்லை என்று சொல்லிவிட்டாள்.  வீட்டை, நிர்வாகத்தை, தன்னை எல்லோரையும் அவள் கையில் எடுத்துக் கொண்டதாய்த் தோன்றும்.  இதுமாதிரியான வளர்ச்சி, ஒரு ஆணுக்கு வருமா என்று யோசித்து போது, அவருக்கு பதில் கிடைக்கவில்லை. 

சமையலறையில் இருந்து எட்டிப் பார்த்தவள். கையில் இருந்த பொட்டலத்தைக் கொடுத்து, ‘மாமா! இந்த மண்டை வெல்லத்தை கொஞ்சம் பொடிச்சு தர்றீங்களா?' என்றாள்.

ஈசிசேரில் இருந்து எழுந்தவர், சுகந்தியிடம் மண்டவெல்லத்தையும், சின்ன சுத்தியலையும் வாங்கிக் கொண்டார். பழைய பேப்பரை விரித்து, அதன் மேல் மண்ட வெல்லத்தை போட்டு உடைக்க ஆரம்பித்தார். வெல்லம் கொஞ்சம் கடினமாய் இருந்தது உடைப்பதற்கு. உடைந்த துண்டு பேப்பரை விட்டு வெளியே விழ, சமையலறை பக்கம் பார்த்தவர், எடுத்து லபக் கென்று வாயில் போட்டுக் கொண்டார். 

பச்சரிசி மாவின் மணம் மண்டைவெல்லத்தின் வெல்லத்தை தாண்டி அவருக்கு அடித்தது. மண்டைவெல்லத்தைப் பொடித்ததும் எடுத்துக் கொண்டு சமையலறைக்குச் சென்றார்.  அம்மியில், கொஞ்சம் சுக்கையும், ஏலக்காயையும் பொடித்துக் கொண்டிருந்தவள், மாவு இருக்கிற சொளகுக்கு பக்கத்தில், வைக்கச் சொன்னாள்.

“உப்பு போட்டியா தாயீ!” என்றார். 

’போட்டிருக்கேன் மாமா! உப்பு சரியா இருக்கான்னு பாருங்க!’ என்றாள் மாவைக்காட்டியபடியே. மாமாவின் சிறுவயது ஆசைகள் இன்னும் தொடர்கிறது என்று நினைத்துக் கொள்வாள்.  கொழக்கட்டை செய்யும் போது, பூரணத்தை எடுத்து வாயில் போட்டுக்கொள்வது, பிசைந்த சப்பாத்தி மாவு, உலை அரிசி என்று சமயம் கிடைக்கும்போது ஒரு வாய் போட்டுக் கொள்வார்.  அதற்காகவே மாவில் உப்பு பார்ப்பது, அதிரச மாவில் இனிப்பு பார்ப்பது என்று எல்லாவற்றிற்கும், சுகந்தியும் அவரையே அழைப்பதுண்டு. ருசி பார்த்து விட்டு, வார்த்தையாய் சொல்லாமல், பலமாய் தலையை ஆட்டுவார், அதிலேயே தெரிந்து விடும்.

அங்கேயே இடுப்பில் கையை வைத்துக் கொண்டு நின்றுவிட்டார்.  நுனுக்கிய சுக்கையும், ஏலக்காயையும் வழித்து வெஞ்சனத் தட்டில் வைத்தவள், மண்டைவெல்லத்தை எடுத்து தண்ணீரில் கரைத்து, நாக்கில் விட்டுப் பார்த்துக் கொண்டாள். விரல்களின் வழியே வழியும் வெல்லக்கரைசலை, வேண்டுமா என்பது போல தூக்கிக் காட்ட, வேண்டாமென்று மறுத்தவர்,   

“நீ செய் தாயீ! நான் பாக்கேன்!” என்றார்.  இந்த சந்தர்ப்பத்தில் கேட்கலாமா, இவளிடம் என்று தோன்றியது.  ஆனது ஆகட்டும் கேட்டுவிடலாம் என்று முடிவு செய்தவர், எந்த சந்தர்ப்பத்தில் சொல்வது என்பது போல காத்திருந்தார். 

வெல்லைக்கரைசலை ஈயச்சட்டியில் ஏற்றி, ஸ்டவ்வை கொளுத்தினாள்.  மிச்சமிருந்த மாவையும், உருட்டிக் கொண்டு, ஆபீஸில் நடந்த விஷயங்களைப் பற்றியும், ஆபிஸில் தண்ணீர் வைக்கும் சோனையம்மாவின் மகளுக்கு கல்யாணம் எனவும் பேசிக்கொண்டிருந்தாள். இவர் காதில் எதுவும் ஏறியது மாதிரி தெரியவில்லை.  மண்டைக்குள் இருந்த விஷயமா அல்லது பால் கொழக்கட்டையோ அல்லது இரண்டுமோ எதுவோ அவரை சூழ்ந்திருந்தது.

வெல்லைக்கரைசல் பொங்கிவர, பனந்துடுப்பை எடுத்து கிண்டியவள், ஸ்டவ்வின் தீவிரத்தைக் குறைத்தாள். உருட்டி வைத்திருந்த மாவு உருண்டைகளை போட்டாள். உப்பு ஜாடியில் வைத்திருந்த, அரைமுடி தேங்காயை எடுத்து, அவர் கையில் கொடுத்து, கொஞ்சமாய் துருவச் சொன்னாள்.

அங்கேயே உட்கார்ந்து துருவ ஆரம்பித்தார். துருவிக் கொண்டே யோசித்தவர், எப்படி ஆரம்பிப்பது என்று தெரியாமல், கங்கம்மாவிடம் சொல்லி கேக்க சொல்லலாமா? என்றும் யோசித்தார். 

‘போதும் மாமா!’ என்று நிறுத்தி துருவிய தேங்காய்பூக்களை எடுத்துக் கொண்டாள். வெந்த கொழக்கட்டையில் ஒன்றை எடுத்து பதம் பார்த்தாள், திருப்தியாய் இருந்தது. வெல்லக்கரைசலில் வெந்த பச்சரிசிக் கொழக்கட்டையின் மணத்தைப் பார்த்தவள், திரும்பி பிச்சம் நாயுடுவைப் பார்த்து, நல்லாருக்கு என்று சைகை செய்தாள்.

"சுகந்தி!" என்றார் தயங்கியபடியே. ‘என்ன மாமா’! என்றாள்

”நான் ஒண்ணு கேக்குறேன், மனசுல தோண்றத சொல்லு!” என்றார்.

கங்கம்மாவையும் குழந்தைகளையும் இங்கேயே கொண்டுவருவதாய் இருக்குமோ? என்று திடீரென்று அவளுக்கு தோன்றியது. ‘சொல்லுங்க மாமா!’ என்றாள். 

”நீ செல்வத்தை ஏன் கல்யாணம் செய்துக்கக் கூடாது?” என்று சடாரென்று சொல்லி முடித்தார்.
கேட்டவள், அவரைத் திரும்பி அழுத்தமாய் பார்த்து சிரித்தாள். ‘வேணா மாமா, அப்படி எதுவும் இதுவரை யோசிக்கலை, தோணவும் இல்ல!’

வெந்து முடித்திருந்த கொழக்கட்டையில், நுனுக்கிய ஏலக்காய், சுக்கைப் போட்டவள் காய்ச்சிய பாலை ஊற்றி  கிளற ஆரம்பித்தாள்.

தன்னையே பார்த்துக் கொண்டிருந்தவரிடம் ‘கங்கம்மா அத்தை வீட்டுக்கு நானும் வரேன் மாமா, உங்களோடவே!’ என்றாள்.



34 comments:

Rathnavel Natarajan said...

அருமையாக இருக்கிறது.
திரும்பத் திரும்ப படித்து ரசிக்க வேண்டும்.
வாழ்த்துக்கள் ராகவன்.

விஜயராகவன் said...

ரொம்ப நாளைக்கு பிறகு சீரான உறவுகளோட நேர்த்தியான நடைல ஒரு கதை எழுதி இருக்கீங்க ராகவன். உங்களோட தலைப்பு அந்நியப்பட்டு நிற்காம கதைக்குள் வந்து கலந்து கொள்வது கூடுதல் சிறப்பு. நீண்ட இடைவெளிக்கு பிறகு வந்தாலும் சிறந்த கதை தந்து என்ன மாதிரி வாசகனை சந்தோஷப்படுத்தினதுக்கு நன்றிகள் பல.

iniyavan said...

Rahavan,

You have got a excellent writing skill? why you are not sending your stories to weekly magazine? why dont you publish a story book.

Regards
N Ulaganathaan

'பரிவை' சே.குமார் said...

அண்ணா...
உங்களோட நடையில் கதை படித்து ரொம்ப நாட்களாகிவிட்டது. அண்ணா இப்போது எழுத நேரமில்லை போலும் என்று நினைத்திருந்தேன்.
இன்று உங்கள் கதை பார்த்ததும் மிகுந்த சந்தோஷம்... உறவுகளின் உன்னதத்தை அழகாக சொல்லியிருக்கிறீர்கள். அருமை அண்ணா.

வாழ்த்துக்கள் அண்ணா.

Anonymous said...

நேர்த்தியான நடை...
வாழ்த்துக்கள்...

Sundar said...

”பரஸ்பர வாஞ்சையில் இருவரின் அழகும் கூடிவிட்டது போலத் தோன்றும்”... உண்மைதானே... மனதில் வாஞ்சை இருந்தாலே அது அழகுதானே... மனதின் அழகுதானே முகத்தில்!

நிலாமகள் said...

மாமாவின் சிறுவயது ஆசைகள் இன்னும் தொடர்கிறது என்று நினைத்துக் கொள்வாள். கொழக்கட்டை செய்யும் போது, பூரணத்தை எடுத்து வாயில் போட்டுக்கொள்வது, பிசைந்த சப்பாத்தி மாவு, உலை அரிசி என்று சமயம் கிடைக்கும்போது ஒரு வாய் போட்டுக் கொள்வார். அதற்காகவே மாவில் உப்பு பார்ப்பது, அதிரச மாவில் இனிப்பு பார்ப்பது என்று எல்லாவற்றிற்கும்//

வார்த்தைகளிலும், பேச்சினிலும் இல்லாத பந்தம், சில காரியங்களிலும், மௌனத்திலும் அதிகமாய்த் தெரிகிறது//

பால்கொழுக‌ட்டையாய் ருசிக்க‌ ப‌ல‌ இருக்கிற‌து க‌தையினுள்.

rajasundararajan said...

நல்ல கதை - அவள் செய்கிற பால்கொழுக்கட்டை மாதிரி. நல்ல தலைப்பும் கூட. நல்லாத்தான் இருக்கு. அப்படியே இருந்திட்டாக் கூட நல்லா...

தியாகச் செம்மல்கள்ன்னா கொஞ்சம் நடுக்கம் நமக்கு. வெளியே விழுற வெல்லத் துண்டெக் கூட லபக்க முடியாது. சர்க்கரை வியாதி வேறெ.

நல்லா இருங்க! ||பூர்ணாத் பூர்ணம் உதச்யதே||

Mahi_Granny said...

முழு சோகமாய் இல்லாமல் கொஞ்சம் சுகமாய் . இந்த முறை சமையலில் ராகவனின் கலக்கல் கை வரிசை .சரளமான நடை. ரசித்து படித்தேன்.

Unknown said...

ஒருத்தரை `ஒருத்தர் படிக்கவும், தான் விளங்கிகிட்ட மாதிரி இருக்கவும் ஆசைப்படறோம் ஆனால் யதார்த்தம் நம்மை இன்னொருத்தர் படிச்சி அவருக்கு புடிச்ச மாதிரியோ அல்லது நமக்கு புடிக்காத மாதிரியோ விளங்கிக்கிடறதா இருக்கு.

--

Unknown said...

ஒருத்தரை `ஒருத்தர் படிக்கவும், தான் விளங்கிகிட்ட மாதிரி இருக்கவும் ஆசைப்படறோம் ஆனால் யதார்த்தம் நம்மை இன்னொருத்தர் படிச்சி அவருக்கு புடிச்ச மாதிரியோ அல்லது நமக்கு புடிக்காத மாதிரியோ விளங்கிக்கிடறதா இருக்கு.

--

மாதவராஜ் said...

ராகவன், இன்றைக்குத்தான் படித்தேன். யப்பா...! அற்புதமான சிறுகதை.
எவ்வளவு நுட்பமாக பார்க்கிறீர்கள். எவ்வளவு அழகாக சொல்கிறீர்கள்.
கதையைச் சொல்லி நீங்கள் போய்க்கொண்டே இருக்கிறீர்கள். வாசகனுக்குள் வாழ்க்கை விரிந்துகொண்டே இருகிறது.

நீங்கள் சொல்வதை நிறுத்திக்கொண்ட இடமும், விதமும் கதையை ததும்ப வைக்கிறது. வாழ்த்துக்கள்.

ராகவன் said...

அன்பு ரத்னவேல் அய்யா அவர்களுக்கு,

உங்கள் வாசிப்புக்கும் கருத்துக்கும் என் அன்பும் நன்றியும்...

அன்புடன்
ராகவன்

ராகவன் said...

அன்பு விஜய்,

சந்தோஷம் உனக்கு இந்த கதை பிடித்திருந்தது. இதில் குறைகள் சில இருப்பதாக என் எழுத்தின் மீது என் மீது அக்கறை உள்ளவர்கள் சொல்லியிருந்தார்கள்...அதையும் கருத்தில் கொண்டு மேற்கொண்டு எழுதுவேன்.

நீ சொல்வது போல கதையின் தலைப்பும் பொருந்திப் போவது சில சமயம் நேர்ந்துவிடுகிறது.

உன் அன்புக்கும், தொடர்ந்த வாசிப்புக்கும் என் அன்பும் நன்றிகளும்...

அன்புடன்
ராகவன்

ராகவன் said...

அன்பு உலகநாதன்,

உங்கள் கருத்துக்கும், வாசிப்புக்கும் என் அன்பும் நன்றிகளும்...

அன்புடன்
ராகவன்

ராகவன் said...

அன்பு குமார்,

உங்களின் அன்புக்கும், கருத்துக்கும் என் அன்பும் நன்றிகளும்... இது போன்ற வார்த்தைகள் எனக்கு உற்சாகமான விஷயம்.

அன்புடன்
ராகவன்

ராகவன் said...

அன்பு ரெவெரி,

அன்பும், நன்றிகளும்...

ராகவன்

ராகவன் said...

அன்பு சுந்தர்,

சந்தோஷம்டா... ரொம்ப நாளைக்கப்புறம் வந்திருக்கே... தந்தையுமானவன் ஆனதில் இருந்து... பளு தோள் மீறி கனக்கிறது போல.

எழுது.

அன்புடன்
ராகவன்

ராகவன் said...

அன்பு நிலாமகள்,

ரொம்ப சந்தோஷம்... உங்களின் கருத்தும், அன்பும்...

தொடர்ந்து வாசியுங்கள்

அன்புடன்
ராகவன்

ராகவன் said...

அன்பு அண்ணனுக்கு,

நான் நினைச்சத தான் நீங்க சொல்லியிருக்கீங்க... கூடுதலா ஒரு விஷயம் போனில் சொல்லியது போல, இன்னும் கொஞ்சம் ஆழமா இருக்கணும்... ஒரு கூட்டுக்குடும்பம் பற்றிய விபரம்... கலாச்சார பின்புலம்... இதெல்லாம், இப்போது கத்துக் கொண்ட விஷயங்கள்...

தியாகச்செம்மல்கள்னா ஒரு நடுக்கம் என்பது வாஸ்தவம் தான். சில சமயம் இப்படி ஆகிவிடுகிறது... எல்லா இடங்களிலும் நல்லதனமே தெரிகிறது...

எப்போதும் ஒரு பின்னூட்டத்திலோ அல்லது உங்களுடனான சம்பாஷனையிலோ எனக்கு ஏதாவது கிடைக்கும்... ஒரு கொம்பு, கிளை, அல்லது மிதந்து வரும் மரம் பற்றிக் கொள்ளவும், ஆசுவாசப்படுத்திக் கொள்ளவும்... அடுத்த கட்டத்திற்கு நகரவும்... அது எப்போதும் வாய்க்க வேண்டிக் கொள்கிறேன். அவ்வளவு தான்.

அன்புடன்
ராகவன்

ராகவன் said...

அன்பு ப்ரோட்டோ அம்மா,

உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் அன்பும் நன்றிகளும்.

அன்புடன்
ராகவன்

ராகவன் said...

அன்பு பகத்சிங் அவர்களுக்கு,

முதல் வருகை உங்களுடையது. எனக்குஉங்களின் கருத்தும், வாசிப்பும் சந்தோஷமாய் இருந்தது படித்தபோது.

உங்களுக்கு என் அன்பும், நன்றிகளும்

ராகவன்

ராகவன் said...

அன்பு மாதவராஜ்,

ரொம்ப சந்தோஷம் மாதவராஜ்! எத்தனை நாளாச்சு, உங்களை என் தளத்தில் பார்த்து... இது மாதிரியான ஒரு உணர்வு பூர்வமான ஒரு அன்பும் நட்பும், கருத்தும் எவ்வளவு ஏக்கங்களை தருகிறது மாதவராஜ்... அன்பும் அன்பும் மற்றும் அன்பும்.

அன்புடன்
ராகவன்

இரசிகை said...

azhahu...

ரிஷபன் said...

நேர்த்தியான நடை. வாசித்துக் கொண்டே வரும்போது மொழியின் சுகானுபவம்.
மனிதர்கள் அவரவர்க்கான இயல்போடு..
சுகந்தியைப் போலவே.. துவைச்சு மடிச்ச சட்டை.. நூலாம்படை இல்லாத உத்திரம்.. எங்கும் பிசிறு தட்டாத கதை.. சபாஷ் ராகவன்.

Unknown said...

மிக நேர்த்தியான நடை.. அருமையாக வந்துள்ளது.. ஆசை தீர வாசித்தேன்.. மிக்க நன்றி..

Anonymous said...

ADMK ministers amma-vai pugal-ra mathiri enna kodumai sir ithu.
Raghavan, your writing is okay need to improve.

ராகவன் said...

அன்பு அனானி அவர்களுக்கு,

உங்கள் கருத்துக்கு அன்பும் நன்றியும்... நிஜமாகவே என் எழுத்து ஓகே தான்... நிற்கிற இடம் தெரிகிறது எனக்கு... நிறைய போக வேண்டும் என்பதும் அப்பட்டமான விஷயம்...

ஆனால்...படிக்கிறவங்களுக்கு அவங்க மனநிலையில் இருந்து பார்க்கிற உரிமை இருக்கு என்று தான் நினைக்கிறேன்... இது போல கருத்து சொல்றவங்கள... நீங்க அதிமுக மந்திரிகள், அம்மா என்று சொல்வது எந்த அளவுக்கு சரியென்று தெரியவில்லை...

இதில ஒரு எதிர்பார்ப்போ பிரதியுபகாரமோ அல்லது ஆதாயமோ இல்லை படிப்பவர்களுக்கும், பின்னூட்டமிடுபவர்களுக்கும் இல்லை என்றே நினைக்கிறேன்.

நான் என்னை எங்குமே ஒரு படைப்பாளி என்று அடையாளப்படுத்திக் கொள்ளவில்லை. ரொம்ப பெர்சனலா இருந்த ஒரு ப்ளாக்கை இப்போ கொஞ்சம் பேரு படிக்கிறாங்க அவ்வளவு தான்... அம்மா அளவுக்கு என்னை உயர்த்துவது மனசுக்கு சங்கடமாக இருக்கிறது...

அன்புடன்
ராகவன்

ராகவன் said...

அன்பு நந்தா ஆண்டாள்மகன்,

உங்கள் வாசிப்புக்கும், கருத்துக்கும் என் அன்பும் நன்றிகளும்.

அன்புடன்
ராகவன்

ராகவன் said...

அன்பு ரிஷபன்,

ஒரு தேர்ந்த சிறுகதை எழுத்தாளர் நீங்கள்... உங்களுடைய கருத்தும் வாசிப்பும் எனக்கு மகிழ்ச்சியான விஷயம்.

அன்புடன்
ராகவன்

ராகவன் said...

அன்பு இரசிகை,

உங்கள் அன்புக்கும், கருத்துக்கும் என் அன்பும், நன்றிகளும்

அன்புடன்
ராகவன்

chandramohan said...

சமீபத்தில் நான் படித்த அற்புதமான சிறுகதை இது ராகவன். நுணுக்கமான நடை, விவரணை. இழையோடும் உறவுப்பின்னல். வாழ்த்துகள் நண்பரே..

ராகவன் said...

அன்பு சந்திரமோஹன்,

உங்கள் வாசிப்பிற்கும், கருத்திற்கும் என் அன்பும் நன்றியும்...தொடர்ந்து படித்து குறை நிறைகளைச் சொல்லுங்கள் சந்துரு!

அன்புடன்
ராகவன்

ஷைலஜா said...

சொற்களால் பூப்போல நெசவு செய்து நேர்த்தியான கதை உடை ஒன்றை இலக்கியக்கடைக்குக் கொண்டுவந்து இருக்கிறீர்கள். உறவின் அருமையைஅதிலும் மாமனார் மருமகளின் உறவின் மேன்மையை அந்த இரு மனங்களின் தெளிவை ஆர்ப்பாட்டம் இல்லாத வார்த்தைகளில் அருமையாக சொல்லி இருக்கிறீர்கள்..

//’ஏதும் வேணாம் மாமா! எல்லாம் இருக்கு, நீங்க சட்டையை கழட்டிக்கிடுங்க! அதோட படுத்தீஹன்னா, கசங்கி போயிடும்!’ சுகந்திக்கு தன்னுடைய மாமனாரின் சட்டை கசங்குவதில் பிடித்தம் இல்லை///

சட்டை மட்டுமா மனம் கசங்குவதில்கூட அவளுக்குப் பிடித்தம் இல்லை என்று புரிகிறது. நல்ல சிறுகதை என்பது கதாசிரியர் சொல்லாமல் விட்டதை வாசிப்பவர்களிடம் மானசீகமாய் சொல்லிக்கொண்டே இருக்கும்.. உங்கள் கதை அப்படிசொன்னது.

முன்னமே அதாவது ஒருமாதம் முன்பு இங்க வந்து வாசிச்சேன் ..சாலையில் நடக்கும்போது கடந்துபோகும் மல்லிகைப்பூகூடையிலிருந்து வீசும் நறுமணம் போல நீண்ட நாழி கதை மனசில் சுற்றிசுற்றிவந்தது.உடனே கதை அருமை என்று ஒரு சொல்லில் பின்னூட்டமிட மனமில்லை.ஆகவே இவ்வளவுதாமதமாகிவிட்டது.நல்ல பரிசுக்குரிய சிறுகதைஇது...பரிசு கிடைக்கலேன்னாலும் பாதகமில்லை பலபேர் பார்வைக்கு இது வைரமாய் மின்னுகிறது அதுபோதும் நிறைய எழுதுங்கள் சகோதரரே வாழ்த்துகள்!