Tuesday, September 27, 2011

உண்டார்கண் நோக்கு...


”ஏய் கூறுகெட்ட கழுத! ஆம்பளப்பிள்ளைக திரியற வீட்ல இப்படித் தூமத்துணியக் கொண்டாந்து இங்கன போட்டிருக்கறவ?” என்று குப்பை டின்னில்  இருந்த துணியப்பாத்து கத்தினாள், தாயம்மாக்கிழவி. 

பதினோரு வீடுகள் இருக்கும் காம்பவுண்டில், தாயம்மாக்கிழவியின் அரசாங்கம் தான். தாயம்மாக்கிழவியின் இரண்டு மகன்களும் அதே காம்பவுண்டில் முறையே பெரிய வீடு ரெண்டிலும் குடியிருந்தாலும், வீட்டுக்காரம்மா என்ற பெயர் பொருந்துவது தாயம்மாக்கிழவிக்கு மாத்திரமே. வீட்டுப் பத்திரம் அவள் பெயரில் இருப்பது மட்டுமே காரணமில்லை அதற்கு.  அவள் அங்கு குடியிருப்போரிடம் பேசும் தோரணை, அவளுடைய மகன்களுக்கு இல்லை என்பதே உன்மை.

வனஜா, வேறு யாருமில்லை, தாயம்மாக்கிழவியின் ஒரே மகள் வயிற்றுப் பேத்தி. வனஜாவின் உடன்பிறந்தவர்கள், பதினோரு பேர்களில், வனஜா ஏழாவது குழந்தை. பிள்ளைகளற்ற தன் சின்னத் தாய்மாமன் வீட்டில் தங்கி, அவர்களுக்கு வீட்டு வேலை செய்து கொண்டே படித்து வருகிறாள்.

கிழவி கத்திக்கொண்டே இருந்தாள். பக்கத்தில் இருக்கும் போது கத்துவது போலவும், தூரத்தில் இருந்து கேட்டால், ஏதோ புலம்புவது போலவும் இருக்கும் வனஜாவுக்கு.  அதனால் படிக்கூட்டுக்கு அருகில் போய் உட்கார்ந்து கொண்டாள். அதை வேறு எங்கு போடுவது என்று தெரியவில்லை. இத்தனை சங்கடம் இதில் இருப்பது அவளுக்கு முதலில் தெரியாது. அம்மா உடன் இருந்தால், ஏதுவாவது விபரம் சொல்லியிருப்பாள். என்ன செய்யவேண்டும், எப்படி சுத்தம் செய்ய வேண்டும் என்று.  சின்ன அத்தை ஒன்றும் சொல்லித்தருவதில்லை, வேளாவேளைக்கு வேலையும், சாப்பாடும் கொடுப்பதோடு சரி.  பெரிய அத்தை இருந்தாலாவது, ஓரளவு விபரம் சொல்லியிருப்பாள். அவளும் போய் பெரியாஸ்பத்திரியில் படுத்தவள், வருவாளோ வரமாட்டாளோ? என்று தெரியவில்லை வனஜாவுக்கு. 

பெரிய ஆஸ்பத்திரி என்று நினைத்ததும், அங்கு கொடுக்கும் கோதுமை ரொட்டி ஏனோ ஞாபகம் வந்தது.  பெரிய அத்தைக்கு அதை பார்த்தாலே குமட்டல் வரும்போல் இருப்பதால், பெரிய மாமா வீட்டுக்கு வரும்போது அதைக் கொண்டு வந்து விடுவார்.  கொஞ்சம் ஜீனி போட்டு, வெண்ணெய் தடவி தோசைக்கல்லில் வனஜாவுக்கு எப்போதாவது போட்டுத்தருவார் பெரிய மாமா. வனஜாவின் பெரிய மாமா ஆர்.எம்.எஸ்ஸில் வேலை பார்க்கிறார். ஊர் ஊராய் ட்ரெயினில் சுற்றும் வேலை. ஒரு நாள் விட்டு ஒரு நாள் வருவார் வீட்டிற்கு, சில சமயம் இரண்டு மூன்று நாட்களும் ஆகும்.

வனஜாவின் சின்ன மாமாவிற்கு பாங்கில் வேலை என்பதால் கை நிறைய சம்பாத்தியம். ராஜாபார்லியில் வாங்கும் ரொட்டிகள் தான் எப்போதும் சாப்பிடுவார், வனஜாவிற்கும் அவ்வப்போது கொடுப்பார். பெரியாஸ்பத்திரியில் கொடுக்கும் கோதுமை ரொட்டி என்று சொன்னாலே அவருக்கு சுத்தமாக பிடிக்காது. அவர் சாப்பிடும் பொருட்களே வினோதமாய் இருக்கும்.  காலையில் காபி குடிப்பதில்லை, போர்ன்விட்டா தான் குடித்துக் கொண்டிருந்தார், சர்க்கரை வியாதி வந்த பிறகு இப்போதெல்லாம் ப்ரோட்டினக்ஸ் தான்.  சின்ன அத்தை அதை கலக்கும் போதே ஒரு மாதிரி சாக்லேட் வாசனை வரும். 


வனஜாவுக்கு அதை ஒரு நாள் குடித்துப் பார்க்க வேண்டும் என்று ஆசையாய் இருக்கும். ஆனால் சின்ன அத்தையே அதை குடிக்காது. சின்ன அத்தைக்கு வனஜா மேல் அத்தனை பிரியம் கிடையாது, வேலை சொல்லும் போது சோறு வைக்கும் போது மட்டுமே வனஜாவை  அழைப்பது வழக்கம்.  வனஜாவுக்கு உடல் நிலை சரியில்லை என்றாலோ, மனசுக்கு கஷ்டமாக இருந்தாலோ, தாயம்மா கிழவி வீட்டிற்கோ அல்லது எதிர் வீட்டில் குடியிருக்கும் குமாரி அத்தை வீட்டிற்கோ போய் விடுவாள், சின்ன அத்தை கண்டு கொள்வதே இல்லை.  

அன்றைக்கும் பள்ளிக்கூடத்தில் இருக்கும் போது வயிற்று வலி வந்துவிட, பள்ளிக்கூடத்தில் தண்ணீர் பிடித்து வைக்கும் குட்டை ஆயா வந்து சின்னத்தை வீட்டில் விட்டு விபரம் சொல்லிப் போனாள்.  சின்ன அத்தை தன்னுடைய பழைய காட்டன் சீலையைக் கொடுத்து அதை வைத்துக் கொள்ளச் சொன்னாள். ஆனால் எப்படி வைத்துக் கொள்வது? என்ன செய்வது என்று யாரும் சொல்லவில்லை.   குமாரி அத்தை வந்து பாத்ரூமிற்குக் கூட்டிப்போய் எப்படி வைப்பது என்ற விளக்கிச் சொன்னாள்.  “நிதமும் மாத்திடுடி, திரும்ப புதுசா துணி வைக்கிறத்துக்கு முன்னாடி, நல்லா கழுவிடு!” என்று மட்டும் சொல்லியிருந்தாள். கட்டி கட்டியாய் ரத்தமாய் பார்த்த முதல் நாளே அவளுக்கு மயக்கம் வருவது போல இருந்தது. அம்மா உடன் இல்லாததை நினைத்த போது அழுகையும் சேர்ந்து வந்தது.

கிழவி வைது கொண்டே இருக்க, குப்பை டின்னில் இருந்த துணியை எடுத்து, குப்பை டின்னிலேயே இருந்த பொட்டுக்கடலை வாங்கி வந்த பேப்பரையும் சனலையும் எடுத்து, சுருட்டிய மாதிரி கட்டினாள். கட்டிய பொட்டலத்தை கிழவியின் முன்னால், நீட்டிப் பிடித்தபடி “அவ்வா! இத எங்க போட? வெளிவாய்க்கால்ல போட்டுடவா?” என்றாள்.


”கிறுக்குப் பயபுள்ள! மூஞ்சிக்கு முன்னாடி கொண்டாந்து நீட்டுறவ! போய்த் தூர எறி! நாய் ஏதும் வாய் வச்சிடாமா?” என்று தெக்கம்பாக்கை இடித்துக் கொண்டே இரண்டு வெற்றிலைகளை எடுத்துக் காம்பைக்கிள்ளி, நடு நரம்பை ஒடித்தபடி இழுத்தாள். வெற்றிலையின் ஈரம் போக, நீட்டிய தொடையில் துடைத்தபடி, சுண்ணாம்பை ஒரு விரலால் எடுத்த வரைவது போல இழுவினாள். 

வனஜா அதற்குள் வெளிவாய்க்காலில் பொட்டலத்தை எறிந்தாள். அது மிதந்து மிதந்து தெருமுக்கு திரும்பும் வரை பார்த்துக் கொண்டிருந்தவள், நாய் எதுவும் வாய் வைக்க வாய்ப்பில்லை என்று திருப்தியுடன் திரும்பி வந்தாள். கிழவி அவள் பக்கமாய் ஒடித்த காம்புகளை நகர்த்தினாள்.  எடுத்து வாயில் போட்டுக்கொண்டாள். 

மெதுவாய் கிழவியின் அருகே போய் ’அவ்வா! அவ்வா’ என்று தொடையை அசக்கியபடியே ’இன்னைக்காவது கொஞ்சம் வெத்திலை குடுவ்வா!’

“போடீ! பொசகெட்ட சிறுக்கி! வெத்தில வேணுமாம்ல வெத்திலை! சமஞ்சு ரெண்டு நாளாவல, அதுக்குள்ள வெத்திலை போடணுமா உனக்கு!” சின்னவென் வருவான் சொல்லுறேன்!” என்று வெத்திலை உரலை இடிக்கத் தொடங்கினாள். கிழவி இப்படி ஏதாவது வாயில் மென்று கொண்டே இருப்பாள், வார்த்தைகளோ, வெத்திலையோ இரண்டும் ஒன்று தான் அவளுக்கு.  அதென்னமோ, எல்லா பல்லும் திடமா இருந்தாலும், வெத்திலை உரலில் இடித்துப் போடுவது தான் அவளுக்கு பிடிக்கும்.

வனஜாவிற்கு அந்த உரலுக்கென்றே ஒரு வாசனை இருப்பதாய்ப்படும். அந்த வாசனை தான் அவளை இடித்த வெத்திலைக்கு ஏங்க வைக்கிறது என்று நினைத்துக் கொள்வாள்.

ஏதோ பிசுக்கு மாதிரி விரல்கள் ஒட்டிக் கொண்டிருக்க, துணிப் பொட்டலத்தை வைத்திருந்த கையை மோந்து பார்த்தாள். சோறு வடிக்க பாத்திரத்துக்கு இடையில் சொருகும் துணியின் மக்கிய வாடை மாதிரி அவள் கையில் வாசனை இருந்தது. அங்கணக்குழிக்கருகே இருந்த பிளாஸ்டிக் வாளியில் இருந்த தண்ணீரில், அப்படியே சளப்பென்று கையை விட்டுக் கழுவினாள்.

கையைக் கழுவி விட்டு வந்தவள், ’அவ்வா கொஞ்சோண்டு வெத்திலை குடுவ்வா!’ என்று கெஞ்சுவது போல திரும்பவும் கேட்டாள்.

”வாயில போட்டுட்டேன் ஒண்னுமில்லை”. என்று உரலை ஆட்டியபடியே, வாயின் இடது பக்கம், சிவப்பு மணியாய் எச்சில் வழிய பேசினாள். போன தீபாவளிக்கு, சின்ன மாமா, அவளுக்கு இது போல சிவப்பு மணி வைத்து தைத்திருந்த சந்தனக்கலர் பாவாடை வாங்கிக் கொடுத்தது ஏனோ ஞாபகம் வந்தது அவளுக்கு.

சின்ன மாமா என்றால், வனஜாவுக்கு கொஞ்சம் பயம் தான், ஆனாலும் ரொம்ப ப்ரியமும் கூட. அதுவும் இப்போதெல்லாம், அவருக்கும் தன்னை அதிகம் பிடித்திருக்கிறது என்று வனஜாவுக்குத் தோன்றியது.  அடிக்கடி அவருடைய அறைக்கு கூப்பிட்டு பேசிக் கொண்டு இருப்பது அவளுக்கு புதுசாய் இருந்தாலும் பிடித்திருந்தது. அதுவும் சின்ன அத்தை இல்லாத போது கூடுதல் ப்ரியம் காட்டுவார்.  சின்ன அத்தை இல்லாத போது  இவளுக்குத் தேவையானதை எல்லாம் வாங்கிக் கொடுப்பார். சின்ன மாமாவின் மேலிருந்து வரும் செண்ட் வாசம் அவளுக்கு ரொம்பவும் பிடிக்கும்.

ஒருமுறை அவருடைய அண்ணன் வனஜாவை சிகரெட் வாங்க கடைக்கு அணுப்புவதை பார்த்ததும், சின்ன மாமாவுக்கு, கோபம் வந்துவிட்டது.

“சமஞ்ச பிள்ளைய சிகரெட் வாங்க கடைக்கு அணுப்புறயே? உனக்கு ஆளா கிடைக்கலை?” என்று வனஜாவின் முன்னாடியே தன் அண்ணனையே திட்டிவிட்டார். அது அவளுக்கு ரொம்ப பிடித்திருந்தது.  அவளுக்கு சிகரெட் வாங்க கடைக்குப் போகும்போது, தங்கராஜ் அண்ணாச்சியின் மகன் இளிப்பதை பார்க்கையில் ஏகக் கடுப்பாய் இருக்கும், இது சின்ன மாமாவுக்கு தெரிஞ்சிருக்கும் போல என்று நினைத்துக் கொள்வாள்.  

சின்ன மாமாவுக்கு, அத்தையை அவ்வளவாப் பிடிக்காது காம்பவுண்டில் உள்ளவர்களுக்கே அது தெரியும். சின்ன மாமாவுக்கு, அத்தை சரியான ஜோடி இல்லை என்று வனஜா நினைத்துக் கொள்வாள் பல சமயங்களில். அதிலும் அவர் வேலைக்கு கிளம்பும்போது, பேண்ட் சர்ட் எல்லாம் மாட்டிக் கொண்டு ஒரு கூலிங் கிளாஸும் போட்டுக் கொண்டு, ஸ்கூட்டரில் எடுக்கையில், சின்ன மாமா ஜம்மென்று இருப்பது போலத் தோன்றும் வனஜாவுக்கு. எத்துப்பல்லுடன் இருக்கும் அத்தையைப் பார்க்கையில், பொருத்தமே இல்லாத ஜோடி என்று நினைத்துக் கொள்வாள்.

அத்தை சின்ன மாமா இருக்கும் போது ரொம்பவும் பயப்படுவது போல இருந்தாலும், சின்ன மாமா வெளியே போனதும், ரஞ்சிதக்காவிடம் அவரைத் திட்டுவதையும், குறை சொல்வதையும் வனஜா பார்த்திருக்கிறாள். ஏதாவது கோபம் வரும்போது அத்தையை சின்ன மாமா போட்டு அடிப்பதையும், பார்த்திருக்கிறாள். அத்தை இப்படியெல்லாம் செய்யும் என்று தெரிந்து கொண்டு தான் அடிக்கிறார் போல என்று நினைத்துக் கொள்வாள். அப்போதெல்லாம், அத்தையைப் பார்த்தால் வனஜாவிற்கு பாவமாய் இருந்ததில்லை. சின்ன மாமா தான் பெரிய ஹீரோ போலத்தோன்றும் அவளுக்கு.

காம்பவுண்டிலே அவருக்கு கத்திமாமா என்று கூட ஒரு பெயருண்டு.  சின்ன மாமா ரெண்டு கத்தி வச்சிருக்கார் என்று  நல்லு தான் சொல்வான். ஒன்று பட்டனை அமுக்கினால் வெளிவருவது மாதிரியும், ஒன்று தோல்வாரில் சொருகியது மாதிரியும். ரெண்டும் பாண்டி கோயில் போகும்வழியில் இருக்கும் அய்யனார் சாமியின் அருவா மாதிரி பளபளன்னு இருக்கும் என்று நல்லு கதைகதையாய் சொல்வான்.

வனஜா அந்த கத்திகளை பார்த்ததில்லை, ஆனாலும், கத்தி மாமா என்று அழைப்படுபவரிடம், கத்தி இல்லாமல் இருக்குமா? என்று தனக்குத்தானே சமாதானம் சொல்லிக் கொள்வாள், இந்த கதைகளை கேட்கும் போதெல்லாம். சின்ன மாமா குதிரையில் ஏறி கத்திச்சண்டை போடுவதைப் போலவும் , தன்னை பின்னால் ஏற்றிக் கொண்டு எங்கோ மலையை நோக்கி பறப்பதைப் போலவும் தான் கனவு கண்டதை நினைத்தபோது அவளுக்கு சிரிப்பு வந்தது.

”இப்போ என்னத்தக் கண்டுபுட்டன்னு சிரிக்குறவ?” என்றாள், வழியும் வெற்றிலை எச்சிலை துடைத்தபடியே. 

‘இல்லவ்வா! சின்ன மாமாவ நினைச்சு சிரிச்சேன்!’ என்று எங்கோ பார்த்தபடி திரும்பவும் சிரித்தாள். தாயம்மாக் கிழவி கேள்வியாய் பார்த்தாள்.

‘என்னவ்வா பாக்குற, சின்ன மாமாவுக்கு என் மேல எம்புட்டு ப்ரியம் தெரியுமா? எனக்கு என்ன வேணுன்னாலும் இப்பெல்லாம் வாங்கி தாராரு! என்று சிரிப்பு வந்தது அவளுக்கு.

‘அவ்வா! இதெல்லாம் சின்ன அத்தைக்கு தெரியாதுவ்வா!, நீ பாட்டுக்கு சொல்லிப்புடாத!” என்றாள் தன் வனஜா.

அவளின் புது வளையல்களும், செருப்பும் இப்போது ஞாபகத்திற்கு வந்தது தாயம்மாக் கிழவிக்கு.  சின்னவனின் செண்ட் வாசம் அறையெங்கும் பரவுவது போல நடுக்கம் வந்தது தாயம்மாக்கிழவிக்கு.

மகளை வரச்சொல்லி, முதல் காரியமாய் வனஜாவை இங்கிருந்து அழைத்துக் கொண்டு தல்லாகுளத்திலேயே படிக்கப் போட சொல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள்.




32 comments:

Unknown said...

அண்ணே ,மிக அருமை

ஷஹி said...

அம்மாடி என்ன சொல்றது ? மொதல்ல வர நெனப்பு உங்க மகள நீங்க எப்புடி ப்ரியமா பாத்துக்குவீங்ககிறது தான்..இதெல்லாம் எப்டி தெரியும் ராகவன் உங்களுக்கு? ரொம்ப இடியாடிக்கா இருக்கோ என் கேள்வி? ஆனாலும் கேக்காம இருக்க முடியல? அதோட ஒவ்வொரு வீட்லயும் இப்புடி ஒரு கொழந்த இருக்கு..ரொம்ப கனமா இருக்கு கத..துணி கூட வக்க தெரியாத கொழந்தைய..ம்ம்...அப்பறம் , உண்டார் கண் நோக்கு? அந்த சிறுமியோட இன்னொஸன்ஸூக்கும் அந்த கத்தி(!?) மாமா மேல அதுக்கு இருக்குற ஐடியாவுக்கும் சம்பந்தம் இல்லன்னு சொல்றீங்களா? அடுத்த கதை எப்போ?

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

ராகவன்!நல்லா இருக்கீங்களா?

இப்பல்லாம் அதிகம் படிக்கவும் எழுதவும் நேரம் வாய்க்காதிருக்கிறது.

கதையின் தாயம்மாக் கிழவியை அதிகம் வார்த்தை செலவில்லாமலே நிலைநிறுத்திவிட்டீர்கள்.

வழிகாட்ட யாருமற்றவளான வனஜாவுக்கு அவளின் பருவமே தாயம்மாவை அவளுக்கு அருகேயும் அதே நேரத்தில் தொலைவாயும்-ஈக்விடிஸ்டன்ஸ் என்று சொல்லலாமோ-அமர்த்துகிறது.

நன்றாக இருந்தது ராகவ்ன்.மற்றொரு கிழிந்த நாட்காட்டியின் தாளாய் மற்றொரு வாழ்க்கை.

'பரிவை' சே.குமார் said...

ராகவன் அண்ணா...
நீண்ட நாட்களுக்குப் பிறகு வனஜாவாய் வந்திருக்கிறது....
தாயம்மா கிழவியில் ஆரம்பித்த கதை அவரை நிறுத்தி வனஜாவுக்குள் வலம் வந்திருக்கிறது.
அறியாப் பெண் படும் அவஸ்தையை இவ்வளவு துல்லியமாக யாரும் பதிந்திருக்க மாட்டார்கள்.
சின்ன மாமா வாங்கிக் கொடுக்கும் பொருட்களால் ஈர்க்கப்படுகிறாள் குமரியான அந்தச் சிறுமி. இது போல் கதைகள் இன்னும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன்.

க ரா said...

அருமைண்ணே...எப்படியிருக்கீங்க...

வெங்கட் நாகராஜ் said...

மிக அருமையான கதைக்களம் நண்பரே... எத்தனையோ இடங்களில் இப்படித்தான் பல சிறுமிகள் ஏமாந்து கொண்டு/ஏமாற்றப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள்....

rajasundararajan said...

'ரெண்டுங்கெட்டான் பருவம்' என்று சொல்வார்களே அப் பருவத்தில், வனஜா. இது பாதுகாக்கப் படுவதற்கும் பழக்கி விடுவதற்கும் காவல் தேவைப்படும் ஒரு பருவம் என்பது மிகத் தெளிவாக உணர்த்தப்பட்டு இருக்கிறது.

'உண்டார்' என்னும் அனுபவ நிலைக்குத் தாயம்மாக் கிழவி பதிநிதி ஆகிறார். அல்லது கதை எழுதிய ஆசிரியரா?

இங்க்மார் பெர்க்மன் படங்களில் பெண் கேரக்டர்கள் அத்துணை சிறப்பாக அமைவதற்குக் காரணம் அவர் நான்கு (அல்லது ஐந்தா?) பெண்களை மணந்து வாழ்ந்து கண்டவர் என்று சொல்லப்படுகிறது. தூமைத்துணி கைபட்ட வாசனை வரைக்கும் நுணுகி எழுத ராகவன் எத்தனை...?

வில்லங்கமாக அல்ல வியந்துபோய்த்தான் சொல்கிறேன்.

ராகவன் said...

அன்பு மணிவண்ணன்,

உங்கள் வாசிப்புக்கும், கருத்துக்கும் என் அன்பும் நன்றியும்...

அன்புடன்
ராகவன்

ராகவன் said...

அன்பு ஷஹி,

எப்பவோ காட்சியாய் படிந்துவிட்ட விஷயங்கள், இப்போது திரும்ப பார்க்கையில் சில புரிதல்களுடன் எழுதமுடிகிறது...

இதில் உள்ள எல்லா விஷயங்களும் கதைக்கான ஆயத்தங்களாய் இருக்கிறது என்றே நினைக்கிறேன்... பதின் பருவத்தில் இருக்கும் குழப்பம் மாதிரி வேறு எதுவும் இல்லை.

தான் பார்க்கிற, கேட்கிற விஷயங்களை அப்படியே நம்பி அல்லது அதீதமாய் நம்பி விடுகிற பருவம்...

வெற்றிலை இடித்தலில் இருந்து கத்தி வரை எல்லாமே இந்த கதைக்கு தேவையான ஆயத்தங்களை கொண்டிருக்கிறது என்று நினைக்கிறேன்...ஷஹி...

எந்த முடிவும் சொல்லவில்லை... சில கற்பனைகளையும், நம்பிக்கைகளையும், பயத்தை மட்டுமே இது சொல்கிறது... இதில் சத்தியமாய் ஒரு முடிவு என்று எதுவும் இல்லை...

அன்புடன்
ராகவன்

ராகவன் said...

அன்பு சுந்தர்ஜி,

நானும் எழுதுவது குறைந்து விட்டது... முன் போல ரெண்டு நாளைக்கு ஒரு பதிவு, கதையென்றோ கவிதையென்றோ எதையும் எழுத முடிவதில்லை... வேலைப் பளு ஒரு காரணம்.

கதையை தாயம்மாக்கிழவியிடம் ஆரம்பித்து தாயம்மாக்கிழவியிடம் முடித்திருக்கிறேன்... இதில் மிகமுக்கியமான ஆள் தாயம்மாக்கிழவி...முக்கியமான ஆள் நிறைய பேசணுமா என்ன?

உங்கள் வருகை எனக்கு சந்தோஷம் சுந்தர்ஜி.

அன்புடன்
ராகவன்

ராகவன் said...

அன்பு குமார்,

ரொம்பவும் சந்தோஷம்... இந்தக்கதை உங்களுக்கு பிடித்தது குறித்து.

தாயம்மாவிடம் ஆரம்பிப்பது முன்னே சொன்னது போல தாயம்மாவிடமே முடித்திருக்கிறேன்...

மற்றபடி உங்கள் ஆழ்ந்த வாசிப்பு எனக்கு சந்தோஷம்.

அன்புடன்
ராகவன்

ராகவன் said...

அன்பு இராமசாமி,

வந்து அருமை... எப்படி இருக்கீங்க? என்று நலம் விசாரிப்பதோடு சரி...

எப்படி இருக்க நீ?

அன்புடன்
ராகவன்

ராகவன் said...

அன்பு வெங்கட் நாகராஜ்,

உங்கள் அன்புக்கு என் அன்பும் நன்றியும்...

ஒரு சின்ன நூலிழை அளவே வித்யாசம்
உள்ளது... தப்பு செய்ததாக அறியப்படுகிறவர்களுக்கும், அதன் விளிம்பில் இருப்பவர்களுக்கும்... ரொம்ப சாதாரணமாய் நம் கண்முன்னால் காணக்கூடிய விஷயம் இது.

அன்புடன்
ராகவன்

ராகவன் said...

அன்பு அண்ணன் ராஜசுந்தரராஜன் அவர்களுக்கு,

நேற்று எழுதி முடித்ததும், உங்களுக்கு ஃபோன் பன்னணும் என்று நினைத்திருந்தேன்... அப்புறமும்... ரெண்டு மூணு பின்னூட்டம் வந்தபிறகு... உங்களை தொந்தரவு செய்யலாம் என்று இருந்தேன்... கூகுள் சாட்டில் பார்த்ததும், சொல்லிவிட்டேன்..

உங்கள் கருத்துக்கு என் அன்பும் நன்றியும் அண்ணே!

இதுல சில குறைகளை நான் யோசித்து வைத்திருந்தேன் நீங்க அது பற்றி பேசுவீர்கள் என்று... ஆனால் நீங்க அந்த ஏரியா தொடவே இல்லை...

அன்புடன்
ராகவன்

ரிஷபன் said...

அம்மா உடன் இருந்தால், ஏதுவாவது விபரம் சொல்லியிருப்பாள். என்ன செய்யவேண்டும், எப்படி சுத்தம் செய்ய வேண்டும் என்று.

கதையின் பின்புலம் புலப்பட்டு.. உள்ளூர ஒரு பதைபதைப்புடன் நகர்ந்து.. கடைசியில் ..
//சின்னவனின் செண்ட் வாசம் அறையெங்கும் பரவுவது போல நடுக்கம் வந்தது தாயம்மாக்கிழவிக்கு.//
பெண்களின் உலகம் தனி. அவர்கள் பார்வையும் அவதானிப்பும். அனுமதிப்பதும் நிராகரிப்பதும் அவர்கள் இச்சையில்தான். வனஜாவை தாயம்மா சூழல் மாற்ற முனைவது இயல்பாய் வந்து அமர்கிறது..

ராகவன் said...

அன்பு ரிஷபன்,

உங்களின் கருத்துக்கும், தொடர்ந்த வாசிப்புக்கும் என் அன்பும் நன்றியும்.

அன்புடன்
ராகவன்

Mahi_Granny said...

எப்படி இந்த detail எல்லாம் அழகாய் சொல்ல முடிகிறது ராகவன் உங்களால். பாட்டி பாட்டி தான். சொன்ன விதம் அருமை

Rathnavel Natarajan said...

அருமையான கதை.
வாழ்த்துக்கள் ராகவன்.

இளங்கோ said...

உண்மையை சொல்லப் போனால், பெரும்பாலும் பெண்கள் தான் மற்றொரு பெண்ணை 'தீட்டு' என்று ஒதுக்கி வைக்கிறார்கள். அம்மா இல்லாத பெண் குழந்தைகளை நினைத்தால் மிகவும் பாவமாக இருக்கிறது. உங்களின் கதை சொல்லல் மிகவும் அருமை. வாழ்த்துக்கள்.
http://ippadikkuelango.blogspot.com

ராகவன் said...

அன்பு ப்ரொட்டோ அம்மா,

உங்கள் அன்புக்கு என் அன்பும் நன்றியும்.

அன்புடன்
ராகவன்

ராகவன் said...

அன்பு ரத்னவேல் அய்யா அவர்களுக்கு,

உங்கள் வாசிப்புக்கு என் அன்பும், நன்றிகளும் அய்யா.

அன்புடன்
ராகவன்

ராகவன் said...

அன்பு இளங்கோ,

உங்கள் வாசிப்புக்கும் கருத்துக்கும் என் அன்பும் நன்றிகளும்

அன்புடன்
ராகவன்

chandramohan said...

என்ன நுணுக்கம் உங்கள் பார்வையில். பருவம் எய்தும் பெண்களின் அவஸ்தைகளும் வயதுக்கே உரிய மயக்கங்களும் அருமையாய் வெளிப்பட்டிருக்கின்றன கதையில். வாழ்த்துகள் ராகவன்.

இரசிகை said...

nallayirukku ragavan sir...

shri Prajna said...

ரொம்ப detailed ஆக இருக்கு ராகவன்.அந்த வயதில் வெற்றிலை பார்த்தால் அந்த இடிக்கும் உரலை பார்க்கும் போதும் வெற்றிலை போடும் ஆசை வரும்.இந்த பாதுகாப்பின்மை எவ்வளவு கொடுமையான விஷயம்.யதார்த்தை தழுவி அமைந்துள்ளது..

ராகவன் said...

அன்பு சந்திரமோஹன்,

உங்கள் அன்புக்கும் வாசிப்புக்கும் என் அன்பும் நன்றிகளும்...

அன்புடன்
ராகவன்

ராகவன் said...

அன்பு இரசிகை,

நன்றிகளும், அன்பும்

ராகவன்

ராகவன் said...

அன்பு ஸ்ரீபிரஜ்னா,

உங்கள் கருத்துக்கு என் அன்பும், நன்றியும்.

ராகவன்

ஆடுமாடு said...

ராகவன்
அருமையான கதை.
சொற்சிக்கனமும் நேர்த்தியான வடிவமும் உங்களுக்குப் பிடிபட்டிருக்கிறது.

அடிக்கடி ப்ளாக் பக்கம் வரமுடியவில்லை. வேலைப்பளு.
நீங்கள் இவ்வளவு சிறப்பாக எழுதுவீர்கள் என்று நினைக்கவில்லை.

இப்போதுதான் வாசிக்கிறேன். உங்களி்ன் அனைத்து கதைகளையும் படித்துவிட்டு பின்னர் எழுதுகிறேன்.
கவிதையை இப்போது ஓரங்கட்டி விட்டீர்களா?

வாழ்த்துக்கள்.

ராகவன் said...

அன்பு ஆடுமாடு,

உங்கள் வாசிப்புக்கும் கருத்திற்கும் என் அன்பும் நன்றிகளும்... அப்பப்போ இது போல வந்து ஏதாவது சொல்லிட்டு போகலாம்... ஏக்நாத்!

அன்புடன்
ராகவன்

சித்திரவீதிக்காரன் said...

குழந்தைகளை வளர்க்கத்தொடங்கும் போதே சரியான தொடுகை எது? தவறான தொடுகை எது? என்பதை கற்றுக் கொடுத்துவிட வேண்டும். இல்லாவிட்டால் கத்தி மாமா போல யாராவது அதை தவறாக பயன்படுத்தி அக்குழந்தைகளின் மனநிலையை பாதிக்க வைத்து விடுவார்கள். நேற்று எஸ்.ரா'வின் விழித்திருப்பவனின் இரவு வாசித்துக்கொண்டிருந்தேன். வர்ஜினியா வுல்ஃப் எனும் பெண் கவிஞருக்கு அடிக்கடி மனசிதைவு ஏற்படக் காரணம் இளம் வயதில் சொந்தக்கார சகோதரன் ஒருவனின் பாலியல் அத்துமீறல்தான். தல்லாகுளம், பாண்டிகோயில் என்ற வரிகளை வாசித்ததும் கதை இன்னும் நெருக்கமாக தோன்றுகிறது.
அருமையான கதை. பகிர்வுக்கு நன்றி.

ராகவன் said...

அன்பு சித்திரவீதிக்காரன் அவர்களுக்கு,

உங்கள் வாசிப்புக்கும் கருத்துக்கும் என் அன்பும் நன்றிகளும்...

அன்புடன்
ராகவன்