Tuesday, March 15, 2011

பலுகே பங்காரமாயனா...


வக்ரபேதங்கள் துளைத்த இரவின் சல்லடைக்கண்களென பிரதிபலிக்கும் நீர்த்துளிகள் நில்லாது ஆடும் தாமரை இலைகளில் பளிங்கு தளும்புகள் வைரமணி கோர்த்த தடாகங்கள் கொப்பளித்த பூக்களின் மகரந்தப்பொடிகளை விரவிக் கடத்தும் கால்களின் தடங்களில் முளைத்த அந்நியச் சுவடுகளில் அப்பியிருக்கும் வர்ணங்கள் பிழிந்து கரைத்து கிறுக்கிய திரைச்சீலை ஓவியங்களின்  நிலைப்பாடற்ற குழப்ப ரேகைகள் படர்ந்து பரத்தும் முகங்களில் தீர்க்கம் குறைந்த ஆயுள் நிஷாதத்தில் நில்லாமல் பறக்கும் பறவையின் இறகுகளை ஒத்து, வானத்தில் வரையும் அரூப ஒலிகள் மிதக்கும் வெளியை கடந்து நுழைந்ததில் அந்தகாரமென ப்ரதிஷ்டையாகும் குறி தொழுதவனை வரக்கேட்டவன் பிறந்த நெற்களஞ்சிய பூமியின் வெடிப்பில் முளைவிட்ட விழுதுகள் தாங்கிய விருட்சங்கள் நிறுத்தும் பறவைகளின் சுருதிபிசகா கீச்சுக்களில், துண்டு துண்டாகும் இசையின் நரம்புகள் இழுத்துக் கட்டிய வாத்தியங்களின் குரல்வளைகள், பழகும் காலப்புழுதி அப்பிய கண்ணாடி மீட்டுத்தரும் ஒளி பட்டுத் துலங்கும் பிம்பங்களில் அம்மையையும், அப்பனையும், மன்னனையும் தொழும் கரங்கள், பற்றியிருந்த சாகித்யங்களின் வரிசை மாறிய ஸ்வரங்கள் பேரண்டம் சிதற இடம் மாறியது கால் மாற்றி ஆடியவனின் லயத்திற்கேற்ப.

நடக்கும்போது குடை, உட்கார இருக்கை, நின்றால் செருப்பு, படுக்கையில் தெப்பம், இரவில் போர்வை, தலையணை, இரவின் முனையில் வாயின் முன்குதப்பும் ரத்தின ஒளி என்று சயனத்தின் விழுதுகளில் விசுப்பலகையென ஆட்டும் வாசுகியின் மினுக்கும் தோலின் வெளிச்சம் திறந்த பாற்கடல் அலைகள் நெருக்கி  அழைத்த கரிக்குரல் அழுத்தி திறந்த நாதங்கியினுள்ளே பேரருள் கடற்படுக்கை மேல் சயனித்தவனின் வாயமுதம் தெறித்து விழுந்த கிண்ணங்கள் நிரம்பி வழியும் சங்கம் உற்பவிக்கும் இசை ஆனந்தபைரவியை ஒத்திருக்கிறது.  கற்பகவிருட்சம் வளர்த்த கருத்தகுழல்காரியின் பொற்பதங்களில் இட்ட மருதாணியின் பிசுக்கு ஒட்டும் விரல்கள் மீட்ட முழவும், துந்துபியும் அதிரும் ஒலிப்பிரவாகம் நணைக்கும் பூமியில் கரும்பு விளையும் நற்சாற்றுக்களி, சுமக்கும் ஜடையும், முடியும், காஷாயமும் வேஷமென அழுது, தொழுத செஞ்சாந்து குழைத்து பூசியவளின் கண்களின் கசிந்த மையின் தெள்ளிய ஊற்றுக்கண் ஜலதாரைகளாய் குமிழியிடும் அந்தரகாந்தாரமும், காகளி நிஷாதமும், சதுஸ்ருதி தைவதமும். முக்காலத்திலும் ஓடும் நித்யகன்னியாய் ஆனந்தபைரவி ஒரு வக்ரபிரயோக ராகம்.  தெத்துப்பல் சிரிப்பென காற்றுடன் கலந்த இசை, கதிர மரங்களை, மூங்கில் மரங்களை, ஒதிய மரங்களை ரணமாக்கி சுககளிம்பு பூசும்.

அந்நிய ஸ்வரங்கள் ஊறும் பாஷாங்கம், 20வது அல்லது 22வது மேளகர்த்தா ராகங்களான நடபைரவி அல்லது கரகரப்பிரியாவில் ஜன்யமான ஒரு சம்பூர்ணராகம்.  ரீதிகௌளையின் சாயலில் இருக்கும் சில இடங்கள், உருமாறி பாவனை காட்டும் ஆனந்தபைரவி.  உச்சரிக்கும் போதே வந்து தொற்றிக் கொள்ளும் இதன் தண்மை, ஸ்வாதி திருநாள் மஹாராஜாவின் ப்ரியராகம். எத்தனையோ கிருதிகள், ஸ்வரஜதிகள் என்று ஆனந்தபைரவியில் நெய்தவை நிறைய.  தியாகராஜர் அதிகம் ஆனந்தபைரவியை தொடவில்லை, இரண்டு, மூன்று கிருதிகள் இருக்கலாம். ஆனால் ஷ்யாமா சாஸ்திரிகளும், முத்துசாமி தீட்சிதரும் ஆனந்தபைரவியில் களிநடனம் ஆடியிருக்கிறார்கள்.

மிகக்குறைந்த இசையமைப்பாளர்கள் மாத்திரமே இதை சினிமாவிலும் பயன்படுத்தினார்கள், அத்தனை பரவலான ராகம் இல்லை இது. ஆனால் அதன் காரண்ம் தான் தெரியவில்லை.  கே.வி.மஹாதேவன், விஸ்வநாதன், இளையராஜா, தேவா (காப்பி அடித்த மூலம் மணிசித்திரதாழ்..ரவீந்திரன் பழந்தமிழ் பாட்டிழையும்), ரவீந்திரன், ராஜேஸ்வரராவ், ரஹ்மான் என்று மிகக்குறைந்த பேர்களே ஆனந்தபைரவியை கையாண்டிருக்கிறார்கள்.  எனக்கு பிடித்தபாடல் இது, பத்ராசலம் ராமதாசரின் கீர்த்தனை, தெலுங்கில் சங்கராபரணம் படத்தில் வரும் இந்தப்பாடலைப் பாடியது வாணிஜெயராம்.  அருமையான குரலாளுமை உள்ள ஒரு பாடகர், ஒருமுறை அவரை ராதாகிருஷ்ணன் சாலையில் இருக்கும் ஒரு கடையில் பார்த்த போது கொஞ்சம் பேசினார் இசைபற்றி.  இத்தனை பேசுவாரா என்பதே எனக்கு ஆச்சரியமாய் இருந்தது.  பேசுவதற்கும், பாடுவதற்குமான குரலில் வார்த்தை உச்சரிப்பில் எத்தனை வித்யாசம்.   

“பலுகே பங்காரமாயனா..., கோதண்டபானி  ராமனை பேச அழைக்கும் பத்ராசலம் ராமதாசர் கூட இத்தனை மயக்கத்துடன் பக்தியுடன் அழைத்திருக்க மாட்டார்.  பாடல் முடிந்த பிறகு ராமன் மணிகணக்காய் பேசியிருப்பான் என்பதில் சந்தேகமே இல்லை.  அற்புதமான பாடல் இது. ராமன் மீது ஏன் வாக்கேயக்காரர்கள் இத்தனைப் பக்தியாய், காதலாய் இருந்தார்கள் என்பது ஆச்சரியமான விஷயம்.  ராமா... அட்சரசுத்தமாக ஸ்வரவிகுதிகள் மீது உட்காருவது காரணமாய் இருக்கலாம். எதுவாய் இருந்தாலும் “இறைவனை வழிபடவே முன்னோர்கள் இசையே சிறந்ததென கண்டார்கள்என்பது உண்மையான வாக்கு.  ஒருவிதமான நெறிபடுத்தப்பட்ட மயக்கம் தேவைப்பட பற்றிக் கொண்டார்கள் எல்லோரும் பற்றற்றான் பற்றையும், இசையையும்.