Wednesday, February 27, 2013

மழை ஒத்திகை...




"என் முதல் சிறுகதைத் தொகுப்பான சுனை நீர் குறித்தான ஒரு பார்வை... தோழி ஷஹிதா அவர்களிடமிருந்து"

கி. ராஜநாராயணனின் சிறுகதை கனிவு  . கதையென்றால் - எப்பொழுதென்றாலும் நினைவில் வருவது , நாயகனின் பெயர்,அவனைக்கொண்டவளின் பெயர் , எப்படி ஆரம்பிக்கும் , என்ன வாசகத்துடன் முடியும் என்பதெல்லாம் .. சொல்ல வருவது அந்தக் கதையை பற்றி அல்ல..எழுத்தாளர் ராகவனின் சிறுகதைத் தொகுப்பு சுனைநீரின் கதைகளைப் பற்றி . அப்பறம் என்னத்துக்குக் கனிவை பற்றின பேச்சென்றால் - அதில் வரும் சில வரிகளைச் சுட்டத்தான் .

"ஒவ்வொரு சமூகத்திலும் ஒவ்வொரு மாதிரியான பழக்கவழக்கங்கள் நிலவி வருகிறது . இவர்களுடைய சமூக முறைப்படி கல்யாணம் முடிந்தவுடன் ஒருநாள் பார்த்து முதலிரவு என்ற ஏற்பாட்டைப் பெரியவர்கள் செய்விப்பது இல்லை . அதைப்பற்றிக் கேட்டால் சை அது என்னங்க அசிங்கம் பசுமாட்டைக் கொண்டு வந்து நிறுத்தி காளையை அவுத்து விடுகிற மாதரி ..நாம்பள்ளாம் மனுசனில்லையா  என்பார்கள் . கனிந்தவுடன் மணமக்கள் தாங்களாகவே ஏற்பாடு செய்து கொள்ள வேண்டியது தான் . "

ராகவனின் சுனைநீர் சிறுகதைத்தொகுப்பும் வாசகனின் நிலையும் அப்படித்தான் இருக்கிறது . ஆரவாரமோ , பதட்டமோ இல்லாமல் இயல்பாகக் கூடி வந்திருக்கும் , நேர்த்தியான , யதார்த்த தளம் சார்ந்த கதைகள் 21 எண்ணிக்கையில் . எந்தக் கட்டத்தில் கதையும் வாசகனும் கனிந்து கூடிக்கொள்வார்கள் என்பது வாசிப்பவரின் மனப்பக்குவம் சார்ந்தது , ஆனால் இயற்கையில் போல் எங்காவது ஒரு கட்டத்தில் ஒவ்வொரு கதையிலும் அதை நிகழ்த்தி விடுகின்றது ராகவனின் எழுத்து . கதைகளின் தலைப்பு மட்டும் மணமகளின் அழகு போல் அவ்வளவு கவர்ச்சியும் கனமுமாய்  . சிடுக்குகளும் படிமங்களுமான அடர்த்தியான மொழியை தன் கவிதைகளுக்கெனவும் இலகுவான நெகிழ்வுத்தன்மை கூடின மென்மொழியை தன் சிறுகதைகளுக்கெனவும் தெரிவு செய்து பிரயோகிக்கும் ராகவன் , தலைப்புகளுக்குக் கொடுக்கும் கவனம் பிரத்யேகமானது .

மதுரையில் பிறந்து வளர்ந்து தற்பொழுது கென்யாவில் ஒரு தனியார் நிறுவனத்தில் மனித வளத்துறையில் பணியாற்றி வரும் ராகவனின் முதல் சிறுகதைத் தொகுப்புசுனைநீர் . அற்புதமான ஒரு கவிஞரும் கூட . கதைகளை அழகாகத் தொகுத்து , புத்தகத்தை நன்முறையில் வடிவமைத்திருக்கும் அகநாழிகை பொன்வாசுதேவனுக்கு வாழ்த்துக்கள் . சுனைநீரைத் தொடர்ந்து இன்னமும் பல தொகுப்புகள் சிறுகதைகளாகவும் கவிதைகளாகவும் வெளிவர ராகவனுக்கு வாழ்த்துக்கள் .

சிறுகதைகள் - சமூக மதிப்பீடுகளை விமர்சிக்கின்றவை , கட்டுமானங்களைத் தகர்த்து , நெருக்கடிகளைப்  பேசுபவை , தீவிரமாக  நம்பப்பட்டு வந்த அபிப்பிராயங்களை கேள்விக்கு உட்படுத்துபவை , வடிவ நேர்த்தி உடையவை , இறுக்கமான மொழிக்கட்டுடன் படைக்கப்படுபவை இவை தான் என்றால் , சுனைநீரின் பெரும்பாலான படைப்புகள் கலை அம்சத்துடன் கூடிய அருமையான சிறுகதைகள்  .

சமூகக் கட்டுமானங்களை உடைக்கும் விதம் என்றால் திலிப்குமார் எழுதி இருக்கிறாரே , ஜி. நாகராஜன் எழுதவில்லையா , தி.ஜா ? -  என்றால் , எழுதியிருக்கிறார்கள் தான் ! ராகவனும் எழுதியிருக்கிறார் . தன் வாழ்வின் பக்கங்களில் இருந்து , ரத்தமும் சதையுமாகப் பிய்த்துக் கொடுக்கும் போது .. அல்லது அப்படியான ஒரு பாவனையுடன் அவற்றைப் படைக்கும் போது , *அரிசி தின்னும் மயிலிறகு*ம் *வாசனைத்தைலமு*ம் நமக்கு இன்னமும் நெருக்கமாகின்றன , சமகாலத்திய நிகழ்வுகளோடு பொருந்திப் போகும் விபரங்கள் என்பதோடு நியாயப்படுத்தலோ கேள்விக்குள்ளாக்குதலோ இல்லாத இவரின் எழுத்துமுறையும் காரணமாகின்றன . ஒரு நாவலில் , பாத்திரத்தின் கூடவே பல பக்கங்கள் பயணிக்கும் வாசகன் ஒரு கட்டத்தில் தன்னைப் போல ,ஏன் தன்னை விடவுமே இந்த மனிதன் அல்லது மனுஷி சிறந்தவள் தான் என்று புரிந்து கொள்வதை ஒரு சில பத்திகளில் சாதிப்பது அத்தனை எளிதான காரியமா ?

எல்லாக் கதைகளுமே அப்படித்தான் . யாரையும் குற்றவாளியாக்குவதில்லை , கேள்விகள் இல்லை .. வண்ணதாசனே கூட தன் முன்னுரையில் சொல்லி இருப்பது போல் ..அது அது அப்படியப்படியே ! எழுதும் எல்லோருக்கும் இப்படி வாய்த்து விடுவதில்லை தானே ? ஜட்ஜ்மெண்ட்டலாக இல்லாமல் ஒரு கமென்ட்ரியாக மட்டும் எழுதி விட எல்லோருக்கும் முடிகிறதா ? ஏதோ ஒரு இடத்தில் ஆசிரியன் "தான்" என்று முழித்துக் கொண்டுவிடாமல் கதையை அதன் பாட்டிலேயே போக விட்டு , இறுதியையும் அதைப் பற்றியுமே வாசகனை யோசிக்க விடாமல் முடிப்பது எல்லோருக்கும் வாய்ப்பதில்லை தான் .

ராகவன் கதைகளின் இன்னொரு தனித்தன்மை இவற்றில் காணக்கிடைக்கும் துறை சார் விபர நுணுக்கங்கள் . மேலோட்டமான ஒரு வாசகனுக்கு வாசிப்பின்பம் நல்கும் இந்த விபரங்களே நுணுக்கமாக கதைகளை அணுகும் வாசகர்களுக்கு படிமங்களாகவும் , உருவகங்களாகவும் மாறி , கதையோடு அவை எத்தனை இயைந்து , அதன் போக்கில் உதவுகின்றன எனும் ஆச்சர்யத்தையும் உண்டாக்குபவை . மஞ்சல் வெயில் ஜெயந்தி குழந்தைப்பேற்றுக்கான சிகிச்சையில் இருப்பவள் , காலையில் அவள் கோலம் இடுவது ஒரு பத்தியாக விரிகிறது , வீம்பாகப் புள்ளிகள் இட்டு மெனக்கெட்டு வண்ணங்கள் சேர்க்கப்படும் கோலங்களில் ஒரு அசட்டுத்தனம் இருக்கும் என்று நினைக்கிறாள் - இங்கு ஜெயந்தியின் பாத்திரவார்ப்பா நிகழ்வது ? ஆமாம் என்றால் அதோடும் கூட குழந்தைக்காக செய்யப்படும் சிகிச்சைகளில் பரிந்துரைக்கப்படும் நாட்களில் கொண்டாக வேண்டிய உறவு பற்றிய அவளின் அலுப்பும் தானே ? திருப்பதி ஆசாரியின் குடை - படித்த அத்தனை பேரையும் சிலாகிக்க வைத்த கதை - இதிலுமே பையம்மாவைப் பெண் பார்க்க திருப்பதி ஆசாரி போகும் சமயம் அவள் அணிந்திருந்த 'ஒத்தக்கல் மூக்குத்திய பாத்தவுடனே ரொம்ப பிடிச்சுப் போய் எந்த ஊரு ஆசாரி எவன் செய்திருப்பான்' என்று அவர் யோசிக்கும் தருணத்தை , அந்தக் காட்சி ஒரு சித்திரமாக விரிய அந்த அழகை ரசிக்காமல் மேற்கொண்டு நகர முடியுமா ?

உரைகல் மினுக்கின் ஆண்டாளம்மாவும் கழுத்துப்புண் கோமதி அம்மாளும்உண்டார்கண் நோக்கின் தாயம்மாவும் எத்தனை அசலான , உயிர்ப்பான கிழவிகள் ..கடிவாளம் அழகர் அற்றது பற்றெரின் சந்திரன் இருவரும் ராகவனேவா ? இல்லை நாம் தானா ? எத்தனை இயல்பான அக உணர்வுச்சித்தரிப்புகள் ? தேன்கூட்டு மெழுகின்பிச்சம் நாயுடு எவ்வளவு அற்புதமான மாமனாரோ அத்தனைக்கும் அசலான மனித உணர்வுகளும் கொண்ட ஆசாமி தான் -  இறந்து போன மனைவியின் மீது வைத்திருந்த அதே பிரியம் அவருக்கு கங்கம்மாவின் மீதும் உண்டாகலாம் ..இப்படியுமா ? என்றால் .. கேள்வி தான் பாசாங்காக இருக்க முடியுமே தவிர பிச்சம் நாயுடு அல்ல .

வழி மயக்கம் , அம்மா அறிந்த பாத்திரம் போன்று விளிம்புநிலை வேதனைகள் பேசும் கதைகள் , இந்திர தனுசு , ஊஞ்சல் விழுது என்று மரபு மீறல்களை , அவற்றை உண்டாக்கும் - அவற்றால் உண்டாகும் விரிசல்களைச் சொல்லும் கதைகள் .
குறிப்பாக ஊஞ்சல் விழுது முடியும் விதம் "விஜியை அவளுக்கு ரொம்பவும் பிடித்திருந்தது , சாதிக்கை நினைக்கும் போது பாவமாய் இருந்தாலும் அவன் மேல் தனக்கு காதலோ , பிரியமோ வர சாத்தியங்களே இல்லை என்று நம்பத் தொடங்கியிருந்தாள் " - என்ன மாதிரியான முடிவு இது ! பரவலாக இருப்பது போல் ஒரு திருப்பம் வைத்துத்தான் முடித்தாக வேண்டும் எனும் கட்டாயம் ஏதுமில்லாமல் வாசகப் பங்கேற்பை வேண்டி நிற்கும்  கவித்துவமான முடிவு . பெரும்பாலான கதைகளின் முடிவும் இப்படியே இருப்பது எத்தனை ஆறுதல் ! கதையை முடிக்க , ஒரு திடீர் திருப்பம் ,அதிர்ச்சி வேண்டும் வாசகன் இன்னமும் இருக்கிறானா என்ன ?

"தடித்து கறுத்த உதடுகள்
இளைத்த குரல் தகடுகள்
தளர்ந்த தகரக்கூரை
அழுகையில்
டூட்ஸி இனக்கற்பழிப்புக் குழந்தையை
ஒத்திருக்கிறது மழை
கனன்று கொண்டிருந்த
சாம்பல் மேடுகளின் மேல்
நெஞ்சில் அறைந்த மூத்தவளின்
தளர்ந்த மார்புபள்ளங்களின்
ஒலியைக் கிளர்த்தி
தப்தப்பென்று இறங்கும்
மூங்கில் குச்சி மழை
கூரையில் ஓடும் ஹூட்டு
இனத்தவர்களின்
சப்பாத்துகளின் ஒழுங்கற்ற
வரிசையொலி
அடைத்த கழிவுத் தொட்டியின்
எப்போதும் சிவந்த குமிழ்கள்
உடையும் இசைத்தட்டு
புணர்ந்தவன் புரள்கையில்
தளர்ந்த மார்புகளின்
நடுவே சொருகப்பட்டிருந்தது
கறுத்த மின்னல்
விரைத்த குறி!"

தற்பொழுது வசிக்கும் கென்யாவிற்கு அருகிலிருக்கும் ருவாண்டாவில் 1994இல் துட்சி இனத்தவர்களும் ஊட்டு மிதவாதிகளும் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்ட சம்பவம் பற்றி இவ்வளவு உணர்வுபூர்வமாக எழுதும் கவிஞர் ராகவனின் கதைகளில் முடிவு கவித்துவமாயிருப்பதில் கேள்விகளே இல்லை . தன் சிறுகதைகளை எத்தனைக்கெத்தனை யதார்த்த தளத்தில் அமைக்கின்றாரோ அத்தனைக்கும் தன் கவிதைகளில் மீறுகின்றார் . இவருடைய கவிதைகளில் காணப்படும் - சர்ரியலிஸக் கூறுகளும் , கதைகளில் பிரயோக்கித்திருக்கும் மென்மையான அணுகுமுறைகளைக் கட்டுடைக்கும், தீவிரம்கூடிய மொழிப்பிரயோகமும் ஆச்சர்யம் கொள்ளச்செய்வன .

பஷீரின் - மஜீதைப் பிராண்டும் சுகறாவாக , கண்ணாடித்தேரின் சரோஜாவையும்வாசனைத்தைலத்தின் பரிமளத்தையும் படைத்தது என்ன மாதிரியான ( ஆணாதிக்க ) மனோபாவம் என்ற பெண்ணியப் பிராண்டலையும் முன்னவளை சமர்த்தியாக்கி முடித்தும் அடுத்தவளுக்காக வாசகனின் இரக்கத்தை வேண்டி எழுதியும் ஒரு மாதிரியாக ( புத்திசாலித்தனமாக ) நேர் செய்து விடுகிறார் .
ஒரு படைப்பாளியின் பலமாக இருப்பவையே அவனின் எல்லைகளைச் சுருக்கிவிடுவதையும் நேர்வாழ்வில் காண்கிறோம் . கூழாங்கற்கள் நிரம்பின தன் இளமையின் சுனைக்குள்ளிருந்து கைகள் நிரம்ப அள்ளிவந்த குளிர்நீரை வாசகனுக்கு அர்ப்பணிக்கும் ராகவன் மீது , நிகழில் புரண்டோடும் நீரோட்டத்துக்கு ஈடு கொடுத்துக் கரைசேரும் (சேர்க்கும்) பொறுப்பையும் வாசகன் சாட்டுக்கிறான் .
கென்யாவின் பாலியல்தொழிலாளிகளைப் பற்றின அவரின் - இன்னமும் வெளிவராத *ஸ்டீர்ட் கர்ள்ஸ்*எனும் சிறுகதையில் அதிகமும் தன் கதைகளில் புழங்கியிராத மொழி வீச்சு , புதுமையான பாணி என்று பிரமாதப்படுத்தியிருக்கும் ராகவன் , வாசகர்களின் நம்பிக்கையை பொய்க்காமல் செய்யட்டும் . மேலும் துறைசார் நுணுக்கங்களை எழுதவதில் அவருக்கு இருக்கும் ஆவல் மிகுத்து , கதையின் போக்கில் அல்லாமல் தன் போக்கில் அவை சென்று விடாமல் கவனங்கொள்ள வேண்டும்  .

மற்றபடி ஒரு இலக்கியவாதியாய் - அன்பால் ஆன ஓர் நல்லுலகு தான் இவரின் கனவும் என்றால் ..தன்னுடைய தன் வாசகனுடைய பயணத்தை அவ்வழியே தான் நகர்த்திச்செல்கிறார் ராகவன் என்பதில் சந்தேகமில்லை.

எங்கோ ஆகாசத்தில் பூத்துக் கிடக்கும் விண்மீன்களைக் கொய்தல்ல , நாம் அன்றாடம்  நடக்கும் பாதையில் கவனம் பெறாமல் கொட்டிக்கிடக்கும் மலர்களையெல்லாம் அள்ளி வந்து மாலையாகத் தொடுத்திருக்கிறார் ராகவன் , என் வரையில் இது அவ்வளவாக இப்போது பார்க்கக் கிடைக்காத கதம்பமாலை. உங்களுக்கு வெற்று வெள்ளையில் மல்லிகையாகவோ , அல்லாமல் ரோஜாவாகவோ தோன்றலாம் ..வாசம் என்னவோ ஒன்று தான் !
சுனைநீர் என்றால் சுவை மட்டுமா , தெளிவு மட்டுமா - வாசமும் தானே ?

4 comments:

நிலாமகள் said...

நியாயப்படுத்தலோ கேள்விக்குள்ளாக்குதலோ இல்லாத இவரின் எழுத்துமுறையும் காரணமாகின்றன . ஒரு நாவலில் , பாத்திரத்தின் கூடவே பல பக்கங்கள் பயணிக்கும் வாசகன் ஒரு கட்டத்தில் தன்னைப் போல,ஏன் தன்னை விடவுமே இந்த மனிதன் அல்லது மனுஷி சிறந்தவள் தான் என்று புரிந்து கொள்வதை ஒரு சில பத்திகளில் சாதிப்பது அத்தனை எளிதான காரியமா ?//

அனாயசமான எழுத்து ஆளுமைக்கு துல்லியமானதொரு விமர்சனம்!


'பரிவை' சே.குமார் said...

அண்ணா...
அற்புதமான எழுத்தாளனின் படைப்புக்கு அழகானதொரு விமர்சனம்....

shri Prajna said...

”எங்கோ ஆகாசத்தில் பூத்துக் கிடக்கும் விண்மீன்களைக் கொய்தல்ல , நாம் அன்றாடம் நடக்கும் பாதையில் கவனம் பெறாமல் கொட்டிக்கிடக்கும் மலர்களையெல்லாம் அள்ளி வந்து மாலையாகத் தொடுத்திருக்கிறார் ராகவன்

உண்மைதான்..

ஒருமுறை நானும் என் தோழி சுகியும், நடந்து கொண்டே பேசிக்கொண்டிருக்கையில்,“சுனை நீர்” என்ற சொல் வரவும், நான் அவளிடம் இப்ப யார் ஞாயபகத்துக்கு வர்ராங்கன்னு கேட்க. ராகவன்னு சொன்னாங்க,எனக்கும்..
அப்புறம் அரிசி தின்னும் மயிலிறகு.. இப்படி தலைப்புகளே வித்யாசப்படும்..ஒவ்வொன்றுமே கவனம் ஈர்த்த கதைகள்..ஷஹியோட விமர்சனம், அழகாய் தொடுக்கப்பட்ட மாலைக்கு மேலும் மெருகூட்டுகிறது...

ரிஷபன் said...

ஒரு இலக்கியவாதியாய் - அன்பால் ஆன ஓர் நல்லுலகு தான் இவரின் கனவும் என்றால் ..தன்னுடைய தன் வாசகனுடைய பயணத்தை அவ்வழியே தான் நகர்த்திச்செல்கிறார் ராகவன் என்பதில் சந்தேகமில்லை.

நேர்த்தியான விமர்சனம்