Saturday, October 03, 2009

அப்பன் தாலாட்டு

கண்ணுமணி உறங்கு - உங்கப்பன்
கதை கேட்டு நீயுறங்கு
பொன்னுமணி உறங்கு - உங்கப்பன்
பொழ்சாய வருவாக
வின்னுமணி முளைக்க - உங்கப்பன்
வீதியில் வருவாக
கண்ணுமணி உறங்கு - உங்கப்பன்
கதை கேட்டு நீயுறங்கு

வண்டி மணியோசை - உங்கப்பன்
வாராக வெள்ளைத்துர
காளையார் கோயில் ரதம் - உங்கப்பன்
கண்ணு படும் நடையும்
தாயப் போல் பாட்டுபாடி - உங்கப்பனை
தாலாட்டி தூங்க வைப்பேன்
உன்ன போல் ஒரு புள்ள - உங்கப்பன்
ஊருக்கு மகராசன்

ஊஞ்சலில் ஒக்காத்தி - உங்கப்பன்
ஊருக்கத சொல்லுவான்
ஊவுன்னு கொட்டாட்டி - உங்கப்பன்
உச்சந்தலை தட்டுவான்
மெல்ல விடியுதங்கே - உங்கப்பன்
மேலாக்க தேடி தந்தான்
அள்ளி சொருகிடுவேன் - உங்கப்பன்
ஆயுச சேர்த்து இங்கே

ராசாவே கண்ணுறங்கு - உங்கப்பன்
ராவுல வந்துடுவான்
ராத்திரி முழிக்கொனும் - உன்னைப்போல்
ராசாவே பெக்கோனும்
தேனே நீ கண்ணுறங்கு - தெவிட்டா
தெள்ளமுதே உறங்கு
மானே நீ கண்ணுறங்கு  - மாடத்து
மதி போல நீயுறங்கு

ஆராரோ ஆரிராரோ  - ஆராரோ
ஆரிரி ராரிராரோ
ஆரிரி ராரிராரோ - ஆராரோ
ஆராரி ஆரிராரோ

(இருபது வருஷத்துக்கு முன்னாடி எழுதிய ஒரு பாடல், எனக்கு அப்போ பதினெட்டு வயசு இருக்கலாம், தீர்த்தக்கரையினிலே படத்தில் பஞ்சாயத்து சீனில் வரும் ஒரு பாடலின் மெட்டை மட்டும் எடுத்துக் கொண்டு, எழுதிய ஒரு தாலாட்டு பாட்டு. தனது காதற்கணவனைப் பற்றிய ரகசியப் பெருமை செரி நிலைகளை, விபரம் புரியாத குழந்தையிடம், பாடி குதூகலிக்கும் ஒரு காதற்தாய்!! அய்யோ கொல்றானே!)

மன்னிக்கவும் ஒரு தயக்கத்துடன் தான் பதிவிடுகிறேன்...

7 comments:

ஈரோடு கதிர் said...

நல்லாயிருக்குங்க

kamaraj said...

பாடல் ஆரம்பிக்கும் போது இது ஒரு நாடோடித்தாலாட்டு ப்பாடல்தானோ எனும் மயக்கம் இருந்தது.

//அள்ளி சொருகிடுவேன் - உங்கப்பன்
ஆயுச சேர்த்து இங்கே//

இந்தவரிகளில் கொஞ்சம் பிற்சேர்க்கை மிதந்ததை வைத்துச்சந்தேகம் வந்தது. ஆச்சர்யம் தாலாட்டும் கவிதையும் இணைகிற ஃப்யூசன்

ராகவன் said...

அன்பு கதிர்,
வந்தனங்கள் பல. ஒற்றை வார்த்தையாய் இல்லாமல் கொஞ்சம் திறனாய்வாய் இருந்தால் என் வளர்ச்சிக்கு உதவும்.

அன்புடன்
ராகவன்

ராகவன் said...

அன்பு காமராஜ்,

ஆயிரம் நன்றிகள்!
உங்களின் வார்த்தைகள் என்னை தைரியமுறச் செய்கிறது என்னுடைய பழைய கிறுக்கல்களை பதிவிட.

அன்புடன்
ராகவன்

ஆரூரன் விசுவநாதன் said...

சந்தம் தவறுவது போல் உள்ளது..... நீங்கள் சொன்ன திரைப்படப் பாடலின் வரிகள் என் நினைவிற்கு வரவில்லை.

வரிகள் அருமை.

ராகவன் said...

அன்பு ஆரூரன்,

எனக்கு சந்தக்கவிதை தெரியாது, இலக்கிய சுத்தமாய் கவிதை எழுத படித்ததில்லை. இந்த மெட்டு பிடித்த காரணத்தினால் நான் அதன் அமைப்பில் ஒரு பாட்டு எழுதினேன். அவ்வளவே..என் இலக்கிய அறிவு..

நன்றி உங்கள் வாழ்த்துக்களுக்கு,

ராகவன்

கருவை பாலாஜி said...

Its a decent post, but comparing your other creations, some how it failed to capture my imagination. But I do understand that it would have eaten at least one hour of our leisure time.

Sorry, I will try to post my comments in Tamil in future.