Friday, October 30, 2009

பசி





அலுமினியத் தட்டில்
சத்தமெழுப்பி அழும்
சங்கீதத்தில்
ஒற்றை சுவரங்கள்
உயிர் உருக்கி எழும்பும்

இட்ட விதை
தளிராய் பிளக்க
நடுநிசித்
தட்டும் கைகளில்
மகரந்தம் சேர்க்கும்
உலர்ந்த பூ பூப்பெய்தும்

செத்த உடலைத் தின்னும்
செந்நரிக் கூட்டங்களின்
பற்களில் விஞ்சும்
சதைத்துனுக்கை பிட்டு
சாதத்தில் குழைக்கும் அம்மை

அடங்காப்பசிக்கு
அம்மையைத் தின்று
அழும் குழந்தைகள்
அப்பனைக் கழித்து
அம்மையை எதுக்களிக்கும்

5 comments:

காமராஜ் said...

பாதி வரை வேகமாக பின்தொடர்ந்து, கொஞ்சம் நிதானித்து முன்னேறி, மீண்டும் ஆரம்பித்த இடத்தை நோக்கி ஓடவைக்கும் கவிதை.

அன்பு ராகவன் கவிதை மீது கவிந்திருக்கும் கண்ண்ணாமூச்சி விலக விலக எல்லாப்பசியும் விளங்குகிறது.

ராகவன் said...

அன்புள்ள காமராஜ்,

உங்கள் பின்னூட்டம் எனக்கு வியப்பாய் இருக்கிறது, இதில் ஒன்றுமில்லை என்பது என் கருத்து. உங்களிடம் பேசியது போல எனக்கு உடன்பாடில்லாத ஒரு சந்தர்ப்பத்தில் இதை பதிவிட்டேன். கவிதை ஒரு வடிவமின்றி அரூபமாய் இருப்பது போல எனக்குத் தோன்றுகிறது. கவிதை வாய்க்காமல் செய்தது போல் இருக்கிறது, அலுமினிய தட்டு என்று வயிற்றுப் பசி பற்றி ஆரம்பித்து, பின் ஏதேதோ திசைமாறி, முட்டுசந்தில் மாட்டிக்கொண்டு, கடைசி வீட்டுக்குள் நுழைந்து இங்க தான் வந்தேன்னு ஒரு பெரிய சமாளிப்பாக தெரிகிறது எனக்கு.

உங்கள் அன்புக்கு மனம் நிறைய நன்றிகள்!!

அன்புடன்
ராகவன்

க.பாலாசி said...

//அடங்காப்பசிக்கு
அம்மையைத் தின்று
அழும் குழந்தைகள்
அப்பனைக் கழித்து
அம்மையை எதுக்களிக்கும்//

மிக ரசித்த வரிகள்....உங்களின் இந்த கவிதையில்.

சந்தான சங்கர் said...

//அடங்காப்பசிக்கு
அம்மையைத் தின்று
அழும் குழந்தைகள்
அப்பனைக் கழித்து
அம்மையை எதுக்களிக்கும்//

வலி நிறைத்திருக்கின்றது
நிறையாத வயிற்றினில்..

அருமை ராகவா..

பா.ராஜாராம் said...

நேற்றிரவு இந்த கவிதையை வாசித்தது..இப்பவும் பிடிமானம் வாய்க்க காணோம்.என் இழுபறியாக கூட இருக்கலாம்.நிதானமாக வரணும்.வருவேன்.