Saturday, October 31, 2009

பிள்ளைக்கலி....

காத்திருந்த வராண்டாவில்
ஆஸ்பத்திரி வாசம்
என் இருக்கைக்கு அருகே
அமர்ந்திருக்கும் ஒரு
நிறைசூலியாய் நகராமல்

குழந்தைப்பேறு வேண்டி
அரசமரமும் ஆஸ்பத்திரியும்
சுற்றியவர்கள்
அடிவயிற்றைத் தொட்டுக்
கொள்வார்கள்
எதிரில் தொங்கும்
படங்களின் குழந்தைகளை,
சிசுக்களை மானசீகமாய்
சுமந்து, பெற்று…

உடன் வந்த
உறவுகள் மற்றும் ஏனையோர்
தங்கள் பேற்றுக்கான
பிரத்யேகக்கதைகள் பேசி
விரோதம் வளர்ப்பர்
நுழைவாயில் விநாயகரைத்
தொழுது
பூக்களும், திருநீறும் கொடுத்து
அக்கறையாய்
அரிதாரம் பூசுவர் சிலர்

ஏனைய வார்டுகளுக்கு
குழந்தையுடன் வந்தவர்
பெருமூச்சுடன் பரிதாபமாய்
பார்த்து தத்தமது
குழந்தைகளை
கொஞ்ச, கண்டிக்க
என்று வேடிக்கைக் காட்டுவர்

புத்தகத்திலும், மடிக்கனினியிலும்
புதைந்து போய்
பெயர் அழைக்க,
புழுதியுடன் வெளிவருவர்
அவரவர் தாழியிலிருந்து.
ஆஃபிஸ் பெர்மிஷன்
விடுப்பாய் போக
சலித்துக்கொண்டு
மேலதிகாரியை திட்டுவதாய்
பொய் பேசித் திரிவார்கள்
கணவர்கள்

மாமியாரும், கணவரும்
தனியாகப் பேச
பேதலித்து மறுமணம்
பற்றியதாய் இருக்குமோ
என்று உள்ளே அழுவார்கள்
சார்நிலை மனைவிகள்

கலியாணம் ஆகி
எத்தனை வருஷம் ஆச்சும்மா
என்று அன்பாய்
நெருப்பிடுவாள் சிதையில்
மருமகளை டாக்டர் அறையில்
விட்டுத் திரும்பிய
யாரோ மாமியார்க்காரி

செயற்கை முறையில்
கருத்தரிக்க, முட்டைகள் கடன் வாங்க,
என் சிசுவை பிறர் சுமக்க
எதுவும் ஏதுவில்லை

கருப்பை வளர்ந்து
பெரிதானது
கை ஏந்தும், கண் விரியும்,
தெரு நெடுகித் திரியும், எச்சில்
கழுவும், ஏவல் பனியும்,
குழந்தைகள் தூக்கி சுமக்க…..

17 comments:

மணிஜி said...

தஞ்சை குந்தவை நாச்சியார் மருத்துவமனை நினைவுக்கு வந்தது.கர்ப்பிணிகள் மதியம் சினிமாவிற்கு கூட போவார்கள்.கிளி ஜோசியகாரன் வார்டில் உள்ளே வந்து சொல்லி வைத்த மாதிரி ஆண்குழந்தைதான் என்று சொல்லி காசு பறிப்பான்.ஆனால் கூடுதலாக உங்கள் கவிதையில் வலியும் இருந்தது.வாழ்த்துக்கள்

இராகவன் நைஜிரியா said...

// கருப்பை வளர்ந்து
பெரிதானது
கை ஏந்தும், கண் விரியும்,
தெரு நெடுகித் திரியும், எச்சில்
கழுவும், ஏவல் பனியும்,
குழந்தைகள் தூக்கி சுமக்க….. //

கடைசியில் கலங்க அடிச்சுட்டீங்க ராகவன்.

க.பாலாசி said...

இதுவரை தாங்கள் எழுதிய கவிதைகளிலிருந்து இந்த விதை இன்னும் மேம்படுகிறது. நிதர்சனமான விசயங்களை மிக அழகான வார்த்தைக் கோர்வைகளுடன் அழகாய் வடித்துள்ளீர்கள்....படிக்கும்போது அரசு மகப்பேறு மருத்துவனையே கண்முன் நிற்கிறது.

நல்ல கவிதை....

இராகவன் நைஜிரியா said...

அண்ணே உங்களையும் தொடர் இடுகைத் தொட அழைத்துவிட்டேன்.

தயவு செய்து தொட்ருங்கள்.

காமராஜ் said...

இந்தக்கவிதைக்கு பின்னூட்டம் இட கைவரவில்லை.
நான் உங்கள் பக்கத்தில் இருப்பதாய் நினைத்துக் கொள்ளுங்கள்.

பா.ராஜாராம் said...

ஐயோ!...ராகவன்....

வேறு சொல்ல தோணலை மக்கா.மஹா நம் மகள் என்பதை தவிர!

ஈ ரா said...

கலங்க வைத்து விட்டீர்கள் ராகவன்..

காமராஜ் said...

//கிளி ஜோசியகாரன் வார்டில் உள்ளே வந்து சொல்லி வைத்த மாதிரி ஆண்குழந்தைதான் என்று சொல்லி காசு பறிப்பான்.//

அட, இது புது தகவலா இருக்கே!. நன்றி தண்டோரா

ராகவன் said...

அன்பு தண்டோரா,

முதன்முதலில் வருகை தந்திருக்கிறீர்கள் என் பதிவுலகிற்கு, ஆயிரம் நன்றிகள்!

உங்கள் பின்னூட்டம் எனக்கு காமராஜ் போலவே வியப்பாய் இல்லை, எனக்கு தெரிந்து கிளி ஜோசியக்காரர்களும், கைரேகை பார்க்கும் பெண்களும் ஒரு கோலுடன் சுற்றிக்கொண்டிருப்பதை நானும் பார்த்திருக்கிறேன்.

உங்கள் அன்புக்கு நன்றி!

தொடர்ந்து வரவேணும்!

அன்புடன்
ராகவன்

ராகவன் said...

அன்பு இராகவன்,

உங்கள் அன்புக்கு நன்றி! தொடர்ந்து வரவும், வாசிக்கவும்.

சும்மா ஒரு விளையாட்டுக்குத் தான் கேட்டேன். எனக்கு தீபாவளி குறித்தான பகிர்வுகள் நிறைய இருக்கு, ஒரு முறை பதிவாய் எழுதுகிறேன்.

அன்புடன்
ராகவன்

ராகவன் said...

அன்பு பாலாசி,

உங்கள் பின்னூட்டத்திற்கும், அன்புக்கும் நன்றி!

தொடர்ந்து வர அழைக்கிறேன்!

அன்புடன்
ராகவன்

ராகவன் said...

அன்பு ஈ.ரா.,

முதல் வருகைக்கும், அன்புக்கும் நன்றிகள் பல!.

தொடர்ந்து வரவும்.

அன்புடன்
ராகவன்

ராகவன் said...

அன்பு காமராஜ், பா.ரா.,

உங்கள் அன்புக்கு நன்றி!

உங்கள் தோள்களில், மனதில் என்னை தாங்குவதற்கு!

நன்றிகள்!

அன்புடன்
ராகவன்

மாதவராஜ் said...

ராகவன்!

பரந்த உலகம், விரிந்த வாழ்வின் வெளி என எவ்வளவு அறிய முடிந்தாலும்.... சில இடங்கள், தருணங்கள் இப்படி இருக்கத்தானே செய்கின்றன. என் நண்பன் காமராஜ் அன்பினால் நிரஃப்பிய வெற்றிடம் என்னும் சிறுகதைதான் ஞாபகத்துக்கு வருகிறது. நேற்றே படித்துவிட்டேன் அன்பு ராகவன்.....

ஜோதிஜி said...

இன்று பாடல் ஆசிரியர் முத்துக்குமார் தான் படித்த கல்லூரியில் தான் எழுதிய கவிதை அவருக்கே பாடமாக வந்ததாக சொன்னபோது மிகுந்த ஆச்சரியமாக இருந்தது. இதற்கும் உங்களும் அத்தனை தகுதியும் இருக்கிறது. வாழ்த்துக்கள். நன்றி.

ராகவன் said...

அன்பு ஜோதிஜி தேவியர் இல்லம்,

உங்கள் அன்புக்கு, வாழ்த்துக்கும் நன்றிகள் பல. முதன் முதலின் என் பதிவுலகில் உங்களின் வருகை ஒரு பரிபூரன அன்பைக் காட்டுகிறது, தொடர்ந்து வாருங்கள், உங்கள் மதிப்புரைகளை கொடுத்து என்னை மேலும் உரமாக்குங்கள்.

அன்புடன்
ராகவன்

Thenammai Lakshmanan said...

//மாமியாரும், கணவரும்
தனியாகப் பேச
பேதலித்து மறுமணம்
பற்றியதாய் இருக்குமோ
என்று உள்ளே அழுவார்கள்
சார்நிலை மனைவிகள்//

கலங்க அடிச்சுட்டீங்க ராகவன்