Monday, November 16, 2009

கிளி என்பது நானும்

வருவோரை எல்லாம்

வணக்கம் சொல்லி
வரவேற்கும்

மாரி பிஸ்கெட்டும்
சோளக்கருதும் தின்ன
பழகிவிட்டது

தொலைபேசி
மணிச்சத்தத்தையும்
அழைப்பு
மணிச்சத்தத்தையும்
எழுப்பி
ஏமாற்று வேலை பழகும்

கள்ளமாய் சிரிக்கவும்
கற்றுக்கொண்டு விட்டது

வேலைக்காரியை
வீட்டுக்காரியைப் போலவே
திட்டும்

ஹோம்வொர்க்
செய்யாத மகனை
முட்டாப்பய மகனே
என்று ஏசவும் செய்யும்

பூணையைக் கண்டால்
மட்டும்
குரலைப் பூட்டும்

தற்கொலைக்கு
முயன்ற கிளி
கயிற்றுத் தடம்
கழுத்தில்
அடிமை சோகம்
சொல்லும்

வருங்காலம்
சீட்டில் உணர்த்தும்
வகையும் மறந்த கதை

கூண்டு விட்டு கூண்டு
பாயும் குறக்களி வித்தையில்
என்னை ஜெயிக்கும்

வேலைக்காரி மீதான
சபலத்தை
மறைத்து
கிளி பற்றி
பயம் பழகும் என்
பிறன்மனை நோக்கா
பேராண்மை

8 comments:

சந்தான சங்கர் said...

கிளிப்பேச்சு எல்லாம்
கண்டுகொண்டதை
கற்றுகொள்வதே
உங்க வீட்டிலும் அப்படிதானா!!
கடைசி வரிகள் அருமை.



நல்லாருக்கு ராகவன்.

S.A. நவாஸுதீன் said...

நல்லா இருக்கு பாஸ்

காமராஜ் said...

கிளியும் வீடும், கிளியும் மனிதர்களும், கிளியும் அடிமைத்தனமும், கிளியும் கிலியும் இப்படி ஒன்றிலிருந்து ஒன்றுக்கு கூடு விட்டுக்கூடு தாவுகிறது கவிதை. கிளியைக்காணோம். கடைசி வரிபடித்து விட்டு கள்ளத்தனமாகச் சிரிக்கவைக்கிறது யார் ?
அப்புறம் 'குறக்களி' சரிதானா. ரொம்ப நேரம் நிற்க வைக்கிறது கவிதை. ரொம்ப நல்ல கவிதை.

velji said...

ஆஹா..கவிதை அருமை ராகவன்.மொத்தக் கவிதையையும் தலைப்பில் அடக்கியிருக்கிறீர்கள்.
கழுத்து வட்டம்...வேறெங்கும் காணாத காட்சி!

விஜய் said...

நன்றாக இருக்கிறது

வாழ்த்துக்கள்

விஜய்

மாதவராஜ் said...

ராகவன் இரண்டு நாள் அலைச்சல், பணிகளுக்குப் பிறகு இன்று சாயங்காலம்தான் வீடு வந்தேன். இப்போதுதான் உங்கள் வலைப்பக்கம் வந்தேன். கழுத்துவட்டம் போட்ட கிளி என்னக் கொத்திக்கொண்டே இருக்கிறது. வலிக்கிறது. குறுகுறுவென இருக்கிறது.முத்தம் போலவும் இருக்கிறது. எல்லாமும் இந்தக் கவிதைக்குள் இருக்கிறது.

சரி. கூண்டு விட்டு கூண்டு பாய்வதற்கும், கூடு விட்டு கூடு பாய்வதற்கும் வித்தியாசம் உண்டே!

ராகவன் said...

அன்பு சந்தானசங்கர்,
அன்பு நவாஸ்,
அன்பு காமராஜ்,
அன்பு வேல்ஜி,
அன்பு கவிதை(கள்),
அன்பு மாதவராஜ்,

உங்கள் அனைவருக்கும் நன்றியும், அன்பும்

ராகவன்

பா.ராஜாராம் said...

வித்தை கற்று கொண்டு விட்டீர்கள் ராகவன்.எள்ளல் ததும்பும் புது மொழி இது.அருமையாய் இருக்கு.கவிதையை தனி தனியாய் பிரிச்சு பேச வேணாம்.மொத்தமும் அழகு எஜமான கிளி போல..