Friday, December 18, 2009

முடிவிலி..

இந்த முறை
தூக்கில் தொங்குவது
என்று உறுதி செய்து கொண்டேன்

தங்கையா நாடார் கடையில்
இரண்டு வகை கயிற்றில்
விலை அதிகமுள்ள உறுதியான
கயிற்றை வாங்க நினைத்தேன்

என்னத்துக்கு அண்ணாச்சி!
காரணம் சொன்னா
அதுக்கேத்த பொருளா தாரேன்!

என் பளுவைத் தாங்கனும்
அதுக்கேத்த மாதிரி ஒன்னு கொடுங்க!

ஊஞ்சல் கட்டி ஆட போகுதீகளா?
ஆமா! என்று
அவருக்கு காரணம் புரியாததை
நினைத்து சிரித்துக் கொண்டேன்

முடி போடுவது எப்படி என்று
யாரிடம் கேட்பது என்று
யோசித்து ரகசிய பகிர்வு
உசிதம் இல்லை என்று
நானே முயன்றேன், பிடிபட்டு விட்டது

அய்யய்யே! என்ன
பாத்துக்கிட்டு   இருக்கீங்க!
தொட்டில்லையே ஒன்னுக்கு
போய்ட்டான்! தூக்குங்க!
என்று கை வேலையாய் இருந்தவள்
கத்தினாள்

தொட்டிலைத் தாங்கும்
கயிற்றின் இரு நுனிகளும்
முருகனும், வள்ளியுமாய்
என்னை பார்த்து சிரித்தன!
இப்போது தூக்க மாத்திரைகள்
சேர்த்துக் கொண்டு இருக்கிறேன்!

6 comments:

மண்குதிரை said...

nice.......

சங்கர் said...

ரொம்ப நல்லாருக்கு

பா.ராஜாராம் said...

வாங்க ராகவன்..

என்ன வரும் போதே பயமுறுத்துறீங்க.

அழகு நிலையாமை ராகவன்.அல்லது நிலையாமைதான் அழகு.ஆசுவாசமாக கவிதை சிலுப்புகிறது.

உயிரோடை said...

ஒரு தொட்டிலும், கை வேலையாக இருப்பவளும் முருகனும் வள்ளியும் இருக்கும் முடிவிலி முயற்சிகளை வேறு இடம் திருப்பலாமே... ?

கவிதைக்காக கூட தற்கொலை பற்றி எழுத வேண்டாமே...

ராகவன் said...

அன்புடன் எல்லோருக்கும்,

அன்பும், நன்றியும். தற்கொலையை, தற்கொலையாய் பார்ப்பதில் என்ன இருக்கிறது. பா.ரா.வின் பின்னூட்டத்தில் உங்கள் கேள்விக்கு பதில் இல்லையா லாவன்யா?

அது தற்கொலையாகவே இருந்தாலும், அது தவறா அல்லது அதற்கு போதுமான காரணங்கள் இல்லாமலா இருக்கும்? மலை மேலிருந்து பள்ளத்தாக்கிற்குள் விழுபவனின் கண்களில் அதன் அழகு, தற்கொலையை தள்ளிப்போட்டாலோ, அல்லது அதன் காரணங்களை புறந்தள்ளினாலோ நல்லது தான்... ஆனால் நிகழ்கிறதா? அழகிய பள்ளத்தாக்குகள் தானே தற்கொலை தளமாகிறது நிறைய இடங்களில். இது ஒரு கவிதை பார்ப்பதில் இருக்கிற அழகு, தற்கொலையாய் பார்ப்பதில் சிதைந்து விடுகிறது.

புதுவரவு சங்கர் அவர்களுக்கு ஆயிரம் நன்றிகள்!

மண்குதிரையின் ஒற்றை குளம்பொலிக்கு நன்றிகள்!

மீண்டும் வந்திருக்கிறேன், மீண்டு வந்திருக்கிறேனா தெரியவில்லை.. பார்க்கலாம்.

அன்புடன்
ராகவன்

கருவை பாலாஜி said...

திருமணம் என்றாலே கசக்குமோ..

மற்றபடி கவிதை நன்று..