Saturday, January 02, 2010

மழைக்குப்பின்...

மழைக்கு
பின் வரும்
நாட்கள்
விருந்துக்கு பின்னான
கிறக்கமாய்
கால்களில்
பளுக் குண்டுகளை
இணைக்கும்

வெளியெங்கும்
கருவிழி நட்டு
காத்திருக்கும் 
தார்ச்சாலைகளில்
நழுவிக் கழிய
எத்தனிக்கும் 
குளம்புகள் தேய்ந்த
குதிரை  ஒன்று

குடிசை கட்டும்
மாமனை இடுக்கு வழி
பார்க்கும் சமைந்த
குமரியின் பூரிப்பாய்
பச்சை அடர்ந்த மரங்கள்
சிலிர்த்து தெறிக்கும்
துளிகளில் 
பூமியும் மிதக்க 
ஆரம்பிக்கும் 

மிஞ்சிய துளிகளில்
உயிர் நிரப்பும்
வெட்டுக்கிளிகள் 
புணர்ச்சிக்கு
ஒதுங்கும்
குடைக்காளானின் அடியில்
புற்களை 
போர்த்திக்கொண்டு
ரகசியம் சொல்லும் 

மழை காக்க 
தேன்சிட்டு
குஞ்சுகளுக்காய்
கூட்டுக்குள்
பிற பறவைகளின்
இறகுகளில்
செட்டைகளை
அடைக்கும்
வெதுவெதுப்பில்
கண் சொருகிக்கிடக்கும் 
சூல் மேகங்கள் 

வானிலை அறிக்கையின்
பொய்யில் புலர்ந்த
விடுமுறை
நாட்காலையில்
விளையாட்டு 
சண்டையிடும்
கூச்சல் குழந்தைகள்
இழப்பு கதையை 
திரும்ப எழுதும் 

அலுவலகம் கிளம்புகையில்
போய்த்தான் ஆகணுமா என்று
கைபிடித்து  கண்ணில்
கெஞ்சும்
மனைவியின் பார்வையில்
மழை மறுபடி 
பெய்ய ஆரம்பிக்கும்  

10 comments:

ப்ரியமுடன் வசந்த் said...

குளம்புகள் தேய்ந்த குதிரை // அட...!

சந்தான சங்கர் said...

மிஞ்சிய துளிகளில்
உயிர் நிரப்பும்
வெட்டுக்கிளிகள்
புணர்ச்சிக்கு
ஒதுங்கும்
குடைக்காளானின் அடியில்
புற்களை
போர்த்திக்கொண்டு
ரகசியம் சொல்லும் //


மண்புணர்ந்த காளானின்
அடியிற் புணரும்
வெட்டுக்கிளியின் ரகசியம்
மழை புணர்ந்த மண்ணில்...வாழ்த்துக்கள் ராகவன்
(நானும் பெங்களூர் வாசிதான்)

S.A. நவாஸுதீன் said...

///கால்களில்
பளுக் குண்டுகளை///

///குளம்புகள் தேய்ந்த
குதிரை///

///கெஞ்சும்
மனைவியின் பார்வையில்
மழை///

///வெதுவெதுப்பில்
கண் சொருகிக்கிடக்கும்
சூல் மேகங்கள்///

பின்றீங்களே மக்கா. பின்னூட்டமாக முழுக்கவிதையும் போடனும். அப்பதான் என் முழு உணர்ச்சியையும் சொல்லமுடியும். வேறு வார்த்தைகள் கிடைக்கவில்லை.

செ.சரவணக்குமார் said...

ரொம்ப நல்லாயிருக்கு சார்.

பா.ராஜாராம் said...

fantastic ராகவன்!

நல்ல முதிர்வு,வீச்சு!

ராகவன் said...

அன்பு வசந்த்,
அன்பு சந்தான சங்கர்,
அன்பு நவாஸ்,
அன்பு சரவனக்குமார்,
அன்பு பாரா,

உங்கள் அனைவருக்கும் நிறைய அன்பும், நன்றிகளும்.

உங்கள் ஒவ்வொருவரின் வார்த்தைகளிலும், மெல்ல துளிர் விடுகிறது தைரியம்... தொடர்ந்து எழுதலாம் என்று

அன்புடன்
ராகவன்

அன்பு நிறை மாதவராஜ், என் வலைதளத்தை மீண்டும் கொடுத்தார், என் ஆர்வக்கோளாறும், கனிப்பொறி பற்றிய என் தர்க்கரீதியான நியாயங்களும், என் வலைதளத்தை குழியில் தள்ளியது. மாதவராஜின் அன்பும், முயற்சியும், நேரமும் எனக்கு மீட்டுக் கொடுத்தது, நான் எழுதியவைகளையும், சில நல் உறவுகளையும். ஆயிரம் நன்றிகள் மாதவராஜ்!

அன்புடன்
ராகவன்

உயிரோடை said...

ந‌ல்ல‌ க‌விதை. வாழ்த்துக‌ள்

மாதவராஜ் said...

வார்த்தையின் தெறிப்புகளில், அர்த்தங்கள் குமிழ் குமிழாய் வெடிக்கின்றன. வாழ்த்துக்கள்.

அப்புறம் நான் என்ன அப்படி செய்துவிட்டேன் ராகவன்....!

ராகவன் said...

அன்பு சந்தான சங்கர்,

அலைபேசி எண் கொடுத்திருக்கேன், வலைப்பக்கத்தின் முகப்பில்... தொடர்பு கொள்ளவும். சந்திக்கலாம்.

அன்புடன்
ராகவன்

காமராஜ் said...

//அலுவலகம் கிளம்புகையில்
போய்த்தான் ஆகணுமா என்று
கைபிடித்து கண்ணில்
கெஞ்சும்
மனைவியின் பார்வையில்
மழை மறுபடி//

இந்த மழைக்கு அப்படியொரு அங்கலட்ஷணம்.
லயித்துக் கிறங்கி
அங்கு வந்துதான் செட்டிலாகும்.
இந்த அழகிய ஈரம் மணக்கும் கவிதை மாதிரி.
அழகு அழகு ராகவன்.