Friday, January 08, 2010

தம்பிக்கு கல்யாணம்

பொண்ணோட அப்பா
ரொம்ப உதவியா இருக்கிறார்
கல்யாண வேலையில
பாதிக்கு மேல அவருதான் பாத்துக்குறாரு!

மண்டபம் பிடிக்க
நாதஸ்வரக்காரனை முடிவு செய்ய,
பந்தக்காலு, சாப்பாட்டுக்கு
ஆளு பிடிக்கிறதுன்னு
எல்லாமே தம்பிக்கு உதவியா
கூடவே இருந்தாரு
நாங்க இல்லாத குறையே 
தெரியலையாம் அவனுக்கு... 

பத்திரிகை டிசைன்
பார்த்து பார்த்து செலெக்ட் பண்ணாரு
என்ன வேணுமோ கூச்சபடாம
சொல்லுங்க என்று
தலை மேல இழுத்து
போட்டுக்கிட்டு செஞ்சாரு
என் சந்தோஷத்தை
பகிர்ந்துக்கிட்டேன் நானும் அவர்ட்ட

பொண்ணு பிடிச்சு போச்சு
குடும்பமும் நல்லாயிருக்கு
தம்பி கொடுத்து வச்சவன் தான்
என்று மாற்றி மாற்றி
சொல்லி சந்தோசமா இருந்துச்சு
வீடே!

என்ன ஆச்சோ
கொஞ்ச நாளா அவரைக்காணோம்
போன் பண்ணா
எடுக்கிறது இல்லை
வீட்டுக்கு போனாலும்
இருக்கிறது இல்லை
ஒரு குன்ஜானுங்க சத்தத்தையும்
கேட்க முடியலை
முன்ன யாரும் பேசவும் இல்ல

என்ன ஆயிடுச்சின்னு
மயிரப்பிய்க்காத குறை தான்...
திரும்ப ஆரம்பிக்கணும் போலையே
பொண்ணு பாக்குற வேலையன்னு...

தம்பிக்கு அந்த பொண்ண
ரொம்ப பிடிச்சிருச்சு போல
ஒத்த காலிலே நிக்குறான்
அவளைத்தான் கெட்டுவேன்னு...

ரொம்ப ஆடுனாய்ன்கப்பா  இவிங்க!
சொந்தக்காரைங்க எல்லாம்
பேச ஆரம்பிச்சுட்டாய்ங்க!
அம்மாவுக்கும் அழவும் மூக்க
சீந்தவுமே நேரம் சரியாய் இருந்துச்சு!

அவரு இருந்தா இப்படி ஆயிருக்குமா?
சின்ன பசங்க வெள்ளாமை வீடு வந்து சேருமான்னு?
ஒரே அரற்றல்!

வந்தார் சம்பந்தி ஒரு நாளு
தம்பியோட கைய பிடிச்சிக்கிட்டு
மாப்பிள.. கூடபெறந்தவிங்க
எமாத்திட்டாய்ந்க
சொந்தமா
கல்யாண செலவுக்குன்னு
இருந்த ரெண்டு காணி நிலத்தை
எனக்கு தெரியாம
ஏமாத்தி வித்துபுட்டாய்ங்க
நானும் எதுக்கோ
கையெழுத்தும் போட்டிருக்கேன்
மாப்பிள..
ஒத்தப்பிள்ளைய பெத்துட்டு
அவளுக்கு செய்ய
முடியாம போச்சுதேன்னு...
புலம்ப ஆரம்பிச்சுட்டார்...

முப்பத்தஞ்சு பவுனும் மூணு லெட்சமும்
முடியாது போல இருக்கு...
என்று கைய பிடிச்சு கேட்க
ஒன்னும் வேண்டா மாமா..
பாத்துக்கிடலாம்...

தம்பியின் மனசு எனக்கு
ஆச்சரியமாய் இருந்தது...
நம்ம கூட இதெல்லாம்
ஒத்துக்கிட மாட்டோம்
ரொம்ப நல்லவன்...

கல்யாணத்துக்கு முதநாளு
தம்பியவும், அவனோட
மாமனாரையும் காணோம்
சாயங்காலமா வந்தவவுஹல
கேட்டா கல்யாணம்
பதிவு பண்றது சம்பந்தமா
பதிவு ஆபிசுக்கு போனதா
சொன்னான் ஒரு கடையோர சிரிப்புடன்...

தம்பியின் மாமனார் வீடு
முகப்பில் இப்போது வேற
போர்டு தொங்குகிறது...

4 comments:

பா.ராஜாராம் said...

தம்பியும் கவிதையும் மிக அருமை,ராகவன்!

இது கவிதை மட்டுமா?ஏனெனில் கவிதையின் அடர்த்தியை மனதிற்குள் கூட்டிக் கொள்ளத்தான்!..நேரம் வாய்க்கிறபோது மின் மடல் பண்ணுங்கள்.

ப்ரியமுடன் வசந்த் said...

மனிதர்களுக்கு இடையே இருக்கும் புரிதலையும் விட்டுக்கொடுத்துப்போகும் மனப்பான்மையும் அழகா விள்க்குகிறது கவிதை...!

S.A. நவாஸுதீன் said...

ரொம்ப நெகிழ்ச்சியா இருக்கு மக்கா.

Thenammai Lakshmanan said...

excellent Raagavan
nice sharing