Friday, January 15, 2010

பகலில் மிச்சமிருக்கிற இரவு...

அடப்பாவி! மதுரையில அதுவும் ஜெய்ஹிந்த்புரத்தில் எப்படி இவன்!  டேய் மாப்பிளை! என்று நீலம் படர்ந்த சட்டையை அணிந்தவனின் தோளை தொட்டு, கொஞ்சம் அழுத்தமாகவே திருப்புகையில், திரும்பிய முகத்தில் மாப்பிளையின் சாயல் சற்றும் இல்லாமல் இருந்தது... முதுகில், நடையில், ஆடை தெரிவில் மட்டுமே அந்த மாப்பிளையை கொண்டிருந்தவர்... என்ன பாஸ்! என்று என்னை கேலியாய் பார்த்தார்.  ஸாரி என்னுடைய நண்பர் மாதிரி இருந்தது... ஆனால் அது நீங்கள் இல்லை, என்று அசடு வழிந்து திரும்பினேன்.  இதுபோல  தான் ஆகி விடுகிறது அநேக நேரங்களில், ஒருவரின் புன்னகை, முக அமைப்பு, முதுகும், நடையும் நிறைய நண்பர்களை, தருணங்களை கிண்டி விட்டு செல்கிறது.

இன்று காலை நேசமித்ரனிடம் இருந்து போன் வந்தது.  ராகவன் நேசமித்திரன் பேசுறேன்... எப்படி இருக்கீங்க... என்று ஆரம்பித்தார், அலுவலகம் கிளம்பும் நேரம் ஆனால் கூப்பிட்டது நேசமித்திரன் என்பதால் என்னால் எதையும் சொல்ல முடியாமல், என் காலை வேலைகளை பார்த்துக்கொண்டே பேசினேன்... பெரிதாய் சுவாரஸ்யப்பட்டிருக்காது அவருக்கு இருந்தாலும் அவர் சொல்வதை கேட்டுக் கொண்டு இருந்தேன்.  என்னுடைய கவிதைகள் பற்றி அவரின் பேச்சு எனக்கு எங்கேயோ யாரோ ஏற்கனவே சொன்னது போல இருந்தது... ஒரு முறை எஸ்.ரா என் வலைப்பக்கத்தை பார்த்து... உங்கள் கவிதைகள் சுமார் ராகம், ஆனால் உரைநடையின் நடையும் வீச்சும் அழகாய் இருக்கிறது நிறைய படியுங்கள், எழுதுங்கள் என்று மின் மடல் எழுதியிருந்தார்... அதை கொஞ்சம் மாற்று வார்த்தைகளில் நேசமித்ரனும் சொன்னார். 

கவிதை எழுதுவதன் காரணம், நேரமும் அதை படிப்பவர்களின் உடனடி எதிர் ரசனைக்காகவும் தான் என்று தோன்றுகிறது.  சித்திரமும் கை பழக்கம் என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டு, திரும்ப திரும்ப எழுதுகிறேன்.  ஒற்றை வரி, சில சமயம் ஒரு பத்திகளை படித்து விட்டு சிலாஹிக்கும் சில நண்பர்களின் உற்சாகம் தூண்டல்கள் என்னை ஒரு மயக்கத்தில் நிறுத்தி இன்னும் உளற, குழற செய்கிறது.  என்னுடைய கையடக்க கடல் பற்றி அவர் பேசும் போது, மனுஷ்ய புத்திரனின் கவிதை இதே கருத்தை (ஏறக்குறைய) கொண்டு புழக்கத்தில் இருக்கிறது என்றார்.   நானும் படித்திருக்கலாம், சிலரின் பாதிப்பில் எழுதும் போது சிலரின் படைப்புகளையே எழுதிவிடுகிறோம் போல.  கல்யாண்ஜி யின் நீ அமிழ்கிற ஆறு ஏற்கனவே ஓடிக்கொண்டிருக்கிறது... இன்னும் வரப்போகிறார்கள் உன்னைபோலவே அடித்தல் திருத்தல் இன்றி நிறைய பேர்... என்ற கவிதை எல்லாவற்றையும் சொல்லிவிடுகிறது...

மதுரையில் கோலாகல ஸ்ரீநிவாசை பார்த்து பேசும் போது சொன்ன விஷயமும் இது தான்,  தர்ம பாத, கெளட பதா எல்லாம் சொல்லியிருக்கிறார்கள், சித்தர் பாடல்களில் இல்லாத புதுக்கவிதைத்தனம் இல்லை என்ற கருத்துக்கு எனக்கு மாற்று கருத்து இல்லை.  எல்லாம் புதிது போல செய்தாலும், கெட்டித்து போன பழைய வாசனை இல்லாத கவிதைகள் இல்லை என்றே தோன்றுகிறது... எங்கோ மனசுக்குள் உட்கார்ந்த ஒரு விஷயம், என்றோ படிந்து விட்ட அனுபவ செறிவுகள் பிறரின் தாக்கத்தில் அல்லது பிறரின் சாயலில் இருப்பது தவிர்க்க முடியாததாகிறது.  அதுவாய் வந்து விழும் வார்த்தைகள் சில சமயம் ஞாபகத்தின் அலமாரிக்குள் குடையும் போது வந்து விழுகிறது கவிதைகள்  அதன் மேல் படிந்து போன தூசிகளுடன்.  உரைநடை நன்றாக வருகிறது என்ற கருத்துக்கு நேசனுக்கு நன்றிகள் பல.., தொடர்ந்து எழுதுகிறேன் பன்படுமா என்று பார்க்கலாம்...

கால் பதிந்து பதிந்து வழுக்கலான பாறைகளில் ரேகைகள் இன்னும் மிச்சமிருக்கின்றன, ஒரு புதையலாய்...

6 comments:

காமராஜ் said...

நல்லாச் சொன்னீங்க ராகவன். யாரும் பிறவிக் கலைஞன் கிடையாது. ஈர்ப்பும்,ஈடுபாடும்,தேடலும் எல்லாருக்குள்ளும் கவிஞனை,கலைஞனை வெளியே கொண்டு வரும்.
ஆனால் ஊதுகுழல் இல்லாமல் யாரும் பிரபலமாவதில்லை.
அதற்குச் சில சமரசங்கள் பலிகிடா ஆகும்.
அப்படிப் பலி கொடுக்காதவர்கள் மேல்பரப்புக்கு வரமுடிவதில்லை.
என்றாலும் கவிஞன் கவிஞனே.

அம்பிகா said...

//கால் பதிந்து பதிந்து வழுக்கலான பாறைகளில் ரேகைகள் இன்னும் மிச்சமிருக்கின்றன, ஒரு புதையலாய்... //
:))

S.A. நவாஸுதீன் said...

பாதிப்பு நிச்சயம் இருக்கத்தான் செய்யும். அதையும் மிஞ்சி தனக்கென ஒரு பாணியை உருவாக்குவதில் வெற்றிபெற்றவர்கள் தான் அடுத்தவருக்கு உதாரணமாக விளங்க முடியும் ராகவன். அவரை மாதிரியே இருக்கான்னு சொல்றதுக்கும், அவரை மாதிரியே நீயும் வரனும்னு சொல்றதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கில்லையா. உங்களுக்கென்று ஒரு பாணி கொண்டு வரும் ஆற்றல் உங்களிடமுண்டு. வாழ்த்துக்கள் மக்கா.

Thenammai Lakshmanan said...

அருமையான பகிர்வு கவிதை எழுதுதல் பற்றி ...

எனக்கு மிகவும் பிடித்து இருக்கிறது ராகவன்

பா.ராஜாராம் said...

உண்மை ராகவன்.யாரும் பாதிப்பின் சாயலில் இருந்து தப்ப முடியாது.என் எழுத்துக்களில் வண்ணதாசனோ,கவிதைகளில் கல்யான்ஜியோ வரக் கூடாது என விரும்புகிறேன்.

ஒரே மனிதன்தான்.இருவேராக பாதிக்கிறான்.

அப்புறம்,எல்லாம் சரியாகிவிடுகிறது.அதற்க்கு கால இடைவெளிகள் தேவையாகத்தான் இருக்கிறது.யாரையும்,யாரும் நிரந்திரமாக பாதிக்க இயலாது ராகவன்.நாமே விரும்பினாலும் கூட.

இது இவ்வளவுதான்.

எழுதிக் கொண்டிருங்கள்.அது அவ்வளவுதான்.

நேசமித்ரன் said...

ராகவன்

இது கவனிக்காமல் தவறவிட்ட இடுகை
நண்பர்கள் சொல்லியிருப்பது போல்
சாயலற்ற மொழிதான் தவமாக இருக்கிறது

உங்களுக்கு அது வாய்க்கும்