Thursday, May 06, 2010

கல்யாணி...

பெண் பார்க்க வந்தார்கள்
என் உடலுக்கு பொருந்தாத ஒரு பட்டு புடவை
கொஞ்சம் லூசான ரவிக்கையும்
அணிய வேண்டியதாய் இருந்தது
தையற்காரன் சரியான நேரத்தில்
ரவிக்கையை கொடுக்கவில்லை
ஓரளவு பொருந்தி போகிற ரவிக்கையை
போட்டபோது மெலிந்திருப்பது தெரிந்தது
நெருக்கி கட்டிய மல்லிகைப்பூ
பின்னிய சடையில் பாதிவரை தொங்கியது
பட்டாசாலில் சத்தமாய் இருந்தது
சம்பந்தமில்லாமல் சிரித்தார்கள்
என்னை பார்க்க வந்திருந்தவனை
அதற்குள் உறவுமுறை வைத்து சீண்டினார்கள்
யாரோ ஒருவரின் குரல்
என்னை அழைத்து வர சில பேரை அனுப்பியது
நிலைக்கண்ணாடி திருத்தாததை
வந்திருந்தவர்கள் திருத்தினார்கள்
முன் கற்றை முடி ஒதுக்கி,
புடவை முந்தானையை நீவி
பின் பக்கம் சீராக்கினார்கள்
கொஞ்சம் கொஞ்சமாய் அவர்களின்
தோள்களை பிடித்த படி
பட்டாசாலுக்கு போய் சேர்ந்தேன்
நமஸ்கரிக்க சொன்னவுடன் செய்தேன்
பார்த்துக்க தாயீ! பையன..!
நிமிர்ந்து பார்த்தேன் என்ன சொல்வது
என்று தெரியவில்லை
உள்ளே வந்து விட்டேன்
கேட்டவர்களிடம் சம்மதம் என்றேன்
அவன் எடைக்கு கொடுக்க
முடியாக் குறைவில்
கட்டைகால்களில்
வேர் பிடிக்க ஆரம்பித்தது
மறுபடியும் ஜன்னலுக்குள் ஒடுங்கினேன்

19 comments:

தமிழ் மீரான் said...

அருமை.!
ஒவ்வொரு வரியும் படிக்கப் படிக்க மனதில் திரைக்கதையாய் விரிகிறது.
சமூக அக்கறை கொண்ட கவிஞருக்கு நன்றியும் வாழ்த்துக்களும்.

மாதவராஜ் said...

ராகவன், இதைக் கவிதை என்று சொல்ல முடியுமா எனத் தெரியவில்லை. ஆனால் கடைசி வ்ரி, தெரிந்திருந்தாலும் உலுக்குகிறது. வதைக்கிறது. பெண்மனதின் வலியைச் சொல்கிறது.

பொறிக்குள் அகப்பட்டு அங்குமிங்கும் அலைகிற, அலைக்கழிகிற ஒரு ஜீவனின் துடிப்பைச் சொல்கிறது.

தாங்க முடியவிலை. இந்த இரவு அழுகிறது.

பா.ராஜாராம் said...

நாலஞ்சு நாளா ஆளை காணோமேன்னு இருந்தது...

எல்லாவற்றையும் கவிதை ஆக்க முடியாது ராகவன். கூடவும் கூடாது.

பெண் குழந்தை தகப்பனின் வலி இது.

sorry.பிடிக்கலை.

பா.ராஜாராம் said...

வலி என்று சொல்வதற்கும், உணர்வதற்கும் நிறைய வேறுபாடுகள் ராகவன்.

அதன் அடிப்படையில் இது பிடிக்காமல் போனோதோ என்னவோ,எனக்கு.

(எனக்கு என்பது நான் என்பதை விட தனிமை தெரியுமா?)

கமலேஷ் said...

ரொம்ப நல்லா இருக்கு நண்பரே...வாழ்த்துக்கள்...

காமராஜ் said...

விவரணைகள் சொல்லவந்ததைக் காட்சியாக்குகிறது.
கடைசிவரி உலுக்குகிறது.விவரணைகள் சொல்லவந்ததைக் காட்சியாக்குகிறது.
கடைசிவரி உலுக்குகிறது.

'பரிவை' சே.குமார் said...

//அவன் எடைக்கு கொடுக்க
முடியாக் குறைவில்
கட்டைகால்களில்
வேர் பிடிக்க ஆரம்பித்தது
மறுபடியும் ஜன்னலுக்குள் ஒடுங்கினேன்//

ராகவன்,

கதை போல் ஆரம்பித்து கடைசியில் வேதனையை விதைத்துச் செல்கிறது உங்கள் வரிகள்.

எப்படி இப்படியெல்லாம் யோசீப்பீர்களோ தெரியவில்லை.

அருமை நண்பா.

நேசமித்ரன் said...

//கட்டைகால்களில்
வேர் பிடிக்க ஆரம்பித்தது
//

:)

ஈரோடு கதிர் said...

அந்தக் கடைசி வரி மிகக்கனம்

Vidhoosh said...

அப்பா
ராஜாராம்
அப்பா
ராஜாராம்
அப்பா
ராஜாராம்
ராஜாராம் அப்பா.....

அவனுக்கு அவள். பொண்ணு பாக்க வந்தா... போதுமா.. "அவன்" வரவேண்டாம். அவன் தலையெழுத்த யாராலையும் மாத்தவே முடியாது.

கவலைப் படாதீங்க அப்பா... அவன் இனிமேதானா பிறக்கப் போறான்!

Vidhoosh said...

:) சிரிப்பான் விட்டுப் போச்சு. லைட்டா இருங்க.. லைட்டா சாப்டுங்க.

Vidhoosh said...

//அவன் எடைக்கு கொடுக்க
முடியாக் குறைவில் //

இதைச் சொன்னேன் ... லைட்டா இருங்க.. லைட்டா சாப்டுங்க அப்டீன்னு..

அப்போதானே எடைக்கு எடை கேட்டாலும்... கொடுத்தாலும்.. :)

Vidhoosh said...

//எனக்கு என்பது நான் என்பதை விட தனிமை தெரியுமா?///

பா.ரா அண்ணே.. எப்டிண்ணே...

இந்தப் பொண்ணு பேரு உமான்னு வச்சுக்கலாம்.

"எனக்கு உமாவை பிடிச்சிருக்கு" என்று பொண்ணு பாக்க போய் அங்கேயே சொல்வதும்

"நான் உமாவை விரும்புகிறேன்" என்று தனிமையில் சொல்வதும் போலவா...

ரொம்ப நாளா ராகவனுக்கு பின்னூட்டம் இடாமல் இருக்கிறேன் என்று ரொம்ப குறையா இருந்துது....

Vidhoosh said...

முதன் முதலா ஈமெயில் சப்ஸ்க்ரைப் செய்கிறேன். பதில் சொல்லுங்க ராஜாராம் அண்ணே...

நேசன் : அந்தபக்கம் இருக்கீரா?

ரிஷபன் said...

கட்டைகால்களில்
வேர் பிடிக்க ஆரம்பித்தது
மறுபடியும் ஜன்னலுக்குள் ஒடுங்கினேன்

ம்!!!

நேசமித்ரன். said...

விதூஷ்

கும்முறீங்களே ஆஹா !
ரைட்டு !

பத்மா said...

இது மாதிரி நிலைமை யாருக்கும் வரக்கூடாதென்பது எப்போதும் என் பிரார்த்தனை .
உருக்கமா எழுதிருக்கீங்க

பா.ராஜாராம் said...

@வித்யா (எ) கும்மி குல திலகம்

அவசரமாய்,தவறுதலாய் இந்த கவிதையை அனுகிவிட்டேன் வித்யா.அப்படி அணுக வேண்டிய என் தனிப்பட்ட
சூழலும் காரணமாகிப் போனது.:-(

ராகவன்,கவிதைக்கான விளக்கத்தை மின் மடல் செய்த போது பதறிப் போனேன்.மிக வருந்தினேன்.வருந்துகிறேன்...

மன்னிப்பு கேட்டு ராகவனுக்கு மின் மடல் செய்திருக்கிறேன்.

கவிதைக்குள் 'என்னை' திணித்துக் கொண்டதே காரணமோ என்னவோ?

பாருங்கள், 'நான்' வருந்துகிறது.. :-)

(ஐ...நானும் உங்களை போல,அழுது கொண்டே சிரிக்கிற ஸ்மைலி போட கற்றுக் கொண்டேன்.ஆனாலும் இந்த விஷயத்தில் இன்னும் சிவாஜி அளவு professional ஆகலை சகோ-இருவரும்...)

அப்புறம்,மறக்காமல் உமாவை கேட்டேன்னு சொல்லுங்க. :-)

உயிரோடை said...

ராகவன், ஒரு சிறுகதை வாதித்தது போல இருந்தது. இது கவிதையிலிருந்து வேறுபடுவது போல இருக்கின்றது. மொழி காரணமாக இருக்கலாம்.

கல்யாணி பாவம்.