Monday, May 17, 2010

பூதம் வளரும் கிணறு...

புத்தகங்களின் மசியில்
ஒட்டியிருக்கும் கைரேகை
மிச்சங்களின்
மொத்தத்தையும் காட்ட
முற்படுகிறது,
கடைசியாய் நிறுத்திய
முற்றுப்புள்ளி...
ஒரு பரிதாப நிலைக்கண்ணாடி போல

எழுத்துக்களின் இடுக்குகளில்
ஒளிந்திருக்கும்
விசும்பல் ஒலியும் 
துளி கண்ணீரும்
எதிரொலித்து
உருண்டதில் பக்கங்கள் எங்கும்
உப்புக்கடல் பெருகும் 

புத்தகங்கள் விடும்
ஏக்க பெருமூச்சில்
சினையாகும்
இடையே ஒளித்து வைத்த
மயிற்பீலிகள் 
இரண்டாய் பிளந்து
பிரசவிக்கும்
தலை பெருத்த சிசு

அகண்டு திறந்து கிடக்கும்
விரைவு வண்டியில்
அடிபட்ட பசு மாதிரி
கிழிந்த வயிற்று
புத்தகங்களில்,
இரையும் பறவை
இதயத்தில்
உறங்கும் ரகசிய முடிவு 

இரவல் படிந்த
எச்சில் முனை புத்தகங்கள்
உடையும் கண்ணாடி பேழை
கசிந்து வெளியேறும்
கைகட்டி 
கதை சொல்லும்
பூதத்தை கட்டிக்கொண்டு
உறங்கிப்போவேன்
கம்மக்கூட்டில் மணக்கும்
புத்தக வாசனையுடன்

6 comments:

மணிஜி said...

ராகவன்........

பத்மா said...

ராகவன் கோபித்துக் கொள்ள மாட்டீர்கள் என்று நான் இதை சொல்கிறேன்
கவிதை எழுத்து ,எனக்கு பிடித்திருக்கிறது .
ஆனால் புத்தகங்களை அந்த கண்ணோட்டங்களில் பார்க்க மனது ஒப்பவில்லை .என் புத்தகங்களின் பக்கங்கள் விசும்பாது .நீங்கள் முற்றுப்புள்ளியை பரிதாப நிலைக்கண்ணாடி என்று கூறியிருப்பினும் எனக்கு அது புத்தகமாய் படுகிறது .என் புரிந்து கொள்ளுதல் தவறாய் இருக்கலாம் .ஆனால் ரயிலில் அகப்பட்டு கிழிந்த மாடாய் என்னால் புத்தகங்களை உருவகப்படித்திக்கொள்ள இயலவில்லை ராகவன் .நான் தவறாய் எழுதியிருந்தால் திட்ட நண்பனாய் உரிமை உண்டு .சரியானபடி புரிந்து கொள்ளவும் உதவுங்கள் .

ரிஷபன் said...

ம்...

உயிரோடை said...

க‌விதை ந‌ல்லா இருக்கு ராக‌வ‌ன்

Matangi Mawley said...

different take.. naan ippadi yosiththathillai endrathanaalo ennavo.. ithu enakku pidiththirukkirathu...

ஜெயசீலன் said...

கவிதை அருமை...