Monday, July 12, 2010

காலத்திரிபு...

பெருந்திணைக்காமனின்
பொக்கை விழுந்த
சிரிப்பின் இடையூடே 
தடித்த நாவின்
அடியில் கிடக்கிறது
அகங்கார வளைவுகளுடன்
முலை திறந்த
குமருகளின்  காலம்

களியில்  ஊர்ந்து
ஆடியவனின் உன்மத்தத்தில்
கொதித்து அடங்கிய இரவு
இவனுடன் முயங்கி கிடந்த
நாட்கள்
காவி ஏறின பற்கள் 

விரகத்தில் சிவந்து
தாமரைகளை கொப்பளிக்கும்
தடாகம் வளித்து
நீந்தியவனின் கனவில்
முனகி புரண்டு படுத்த
பசலை படர்ந்த கொடிகள்
துவழும் கொம்பின்றி 

கச்சை கழற
கண் கிறங்கி கிடந்தவள் மேல்
உடுப்பென  கிடந்தவனின்
தினவு பொத்தல் விழுந்த
படகாய் கரை கிடக்கும்
இப்போது

இயக்கம் அற்ற கலமென
நினைவு தெப்பத்தில்
தக்கைகளாய் மிதக்கும்
பெருங்காமன்
கதைகளில் நிகழ்கிறது
கலவிக்கான காரியபலிதம்  

6 comments:

மாதவராஜ் said...

அடேயப்பா, அசந்து போய் நிற்கிறேன்.

உறங்கும் பெருங்காமனைப் பார்த்து விழித்துக்கிடக்கும் பெண்ணின் புன்னகை தடாகத்தின் அசைவுகளில் மின்னுகிறது. வற்றாத அதன் தீரத்தில் விரகத்தின் ராகம் கேட்கிறது.

படகுகள் ஒதுங்கலாம். மீன்கள் ராகவன்?

அப்புறம், பெருந்தினையா, பெருந்தினையா? காலதிரிபா அல்லது காலத்திரிபா?

மாதவராஜ் said...

மன்னிக்கவும். பெருந்தினையா அல்லது பெருந்திணையா என்றிருக்க வேண்டும்.

ரிஷபன் said...

கவிதையில் எத்தனை விதமாய் சாதிக்க முடியும் என்பதில் ஒரு பிரமிப்பு.. வாசித்ததும்.

கே. பி. ஜனா... said...

பிரமிக்க வைக்கிற கவிதை!

பா.ராஜாராம் said...

அற்புதம் ராகவன்!

நன்றி மாது. (மாதுதான் இந்த கவிதைக்கான லிங்கை மெயிலில் அனுப்பி தந்தார் ராகவன்)

பனித்துளி சங்கர் said...

/////////களியில் ஊர்ந்து
ஆடியவனின் உன்மத்தத்தில்
கொதித்து அடங்கிய இரவு
இவனுடன் முயங்கி கிடந்த
நாட்கள்
காவி ஏறின பற்கள்
//////

கவிதையின் அழகு வார்த்தைகளில் தெறிக்கிறது . அருமை . பகிர்வுக்கு நன்றி