காலையில் வெயில் வருவதற்கு முன்பே எழுந்துவிடுவது தான் பெருமாள்சாமிக்கு பழக்கம். ராமேஸ்வரம் பாசஞ்சர் சுப்பிரமணியபுரம் ரயில்வே லைனை கடக்கும் போது போடும் சத்தத்தில் எழுந்துவிடுவார் எப்படியும். முன்னெல்லாம் சத்தம் பெருசா இருக்கும், டிரெயின் பக்கத்துலயே ஓடுற மாதிரி கேட்கும். இப்போ வீடு பெருகிப் போயி சத்தம் சன்னமாப் போச்சு. அவருக்கு சில சமயம் சத்தத்தில எந்திரிக்கிறோமா இல்ல பழக்கத்துல எந்திரிக்கிறோமா என்று வகைப்படுத்தத் தெரியாது. பழக்கம் ஒரு நோய்னு சொல்வாரு, அவங்க நாயினா... நல்லதோ கெட்டதோ எந்த ஒரு பழக்கமுமே நோய் தாண்டா என்பார். ஏன்னு விளங்காது அப்போ, ஆனா இப்போ தெரியுது. நேரஞ்செண்டு படுக்கிற நாளு மட்டும் காலைல லேட்டா எந்திரிக்கலாமுன்னா முடியாது. சரியா தூக்கமில்லாததால பகல்ல அப்படியே தள்ளும். அதுவும் அவரு பாக்குற வேலைக்கு தூங்கி வழிஞ்சா எவ்வளவு ஆபத்து.
பெருமாள்சாமி மதுரை கார்ப்பரேஷன் மின் வாரியத்துல வயர்மேனா வேலை பாக்காரு. மதுரை கார்ப்பரேஷன் ஆகுறதுக்கு முன்னாடி முனிசிபாலிடியா இருந்தபோது மின்வாரியம் சம்பந்தப்பட்ட வேலைகள், தனியாக நிர்வாகம் செய்யப்பட்டு வந்தது, அது முனிசிபாலிடியின் பார்வையின் கீழே இயங்கி வந்தது. அந்த மின் ஊழியர்களுக்கும் தமிழ்நாடு மின்வாரியத்திற்கும் தொடர்பில்லாமல் ஒரு தனி அரசு இயந்திரமாய் பழுதில்லாமல் சுற்றிக்கொண்டிருந்தது. மதுரை கார்ப்பரேஷன் ஆனபிறகும், சில ஏரியாக்கள் தமிழ்நாடு மின்வாரியத்துடன் இணையாமல், மாநகராட்சியின் கீழேயே இருந்து வந்தது. அதில் தான் பெருமாள்சாமி வயர்மேனா வேலை செய்து வருகிறார். இவருக்குக் கீழே உதவியாளர்களும், எண்ணமார்களும் இருப்பார்கள், எண்ணமார்கள் பெரும்பாலும், குழி தோண்டுவதற்கும் கேபிள் இழுப்பதற்கும் அல்லது வேறு ஏதாவது கடின வேலைகளுக்கும் பயண்படுத்தப்படுவார்கள். இவர்கள் போஸ்ட் மரத்தில் ஏறி எந்த மின் பழுதுகளையும் சரிசெய்யக்கூடாது. உதவியாளர்கள் ஏறலாம், மின் பழுதை சரிசெய்யலாம், அவர்களின் வயர்மேன் சொல்வது படி.
பெருமாள்சாமியும் எண்ணமாராய் தான் வேலைக்கு சேர்ந்தார், எண்ணமார்ங்க எல்லாம், கார்ப்பரேஷன் ஊழியர்கள் கிடையாது, தினக்கூலியாய் சேர்க்கப்படும் இவர்களுக்கு, காப்பீடு மற்றும் இதர சலுகைகள் கிடையாது. தினக்கூலி மாத்திரமே, அதுவும் அந்த வயர்மேன் தயவிருந்தா தான் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். பெருமாள்சாமியிடம், இரண்டு உதவியாளர்களும், இரண்டு எண்ணமார்களும் இருந்தார்கள், ரொம்ப காலமாக. எண்ணமார்களை பெர்மனெண்ட் செய்ய கார்ப்பரேஷனுக்கு எழுதிக்கொண்டிருக்கிறார், இன்னும் பதில் வரக்காணோம். இதுவே இவருக்கு மேல இருக்கிற லைன் இன்ஸ்பெக்டர் எழுதியிருந்தா ஆகியிருக்கும், இவரு சொல்லி தான் பாக்குறாரு, அந்த ஆளு இன்னம் ஒண்ணும் செய்யக்காணோம். பெருமாள்சாமிக்கு கோபமே வராது எப்போதும். தனக்குக் கீழே இருக்கும் உதவியாளர்கள் ராஜேந்திரனையும், கருணாகரனையும், எண்ணமார்கள் சுப்பிரமணி மற்றும் மாரிமுத்துவையும் தன் உடன்பிறந்தவர்கள் போல பாத்துக் கொள்வார். என்ன வருமானம் வந்தாலும் சமமாக பிரித்துக் கொடுப்பார். அதனாலேயே அவர்கள் யாரும் அவரை விட்டு எங்கும் போகப் பிரியப்படுவதில்லை.
பெருமாள்சாமி எழுந்து குளித்து வேலைக்கு கிளம்ப தயாரானார். எட்டு மணிக்கு வீட்டை விடுவார். ஜவஹர் தெருவில் இருக்கும் அவர் வீட்டிலிருந்து கிளம்பினால், ஜான்சிக்குப் போக எப்படியும் அரைமணி ஆகிவிடும். இங்கிருந்து சுப்பிரமணியபுரம் வழியா போயிட்டு வழியில் கந்தன் ஆஸ்பத்திரி பக்கத்துல இருக்கிற பிள்ளையாருக்கு முதக் கும்பிடு, அப்புறம் அங்காள பரமேஸ்வரி, ரயில்வே லைனைத் தாண்டி கிரைம் பிராஞ்சிலிருந்து, போலீஸ் லைன் வழியா பெருமாள் கோயில்ல ஒரு நிறுத்தம். பெருமாள், அப்படியே அயக்கீரிவர்னு போயி எல்லாரையும் துணைக்கழைத்துக் கொண்டு தான் ஜான்சிக்கு போய் சேருவார்.
பச்சைக்கலர் ராலே சைக்கிள் காரியரில் அவருடைய பைக்கட்டை வைத்திருப்பார், அதில் தான் வேலைக்குத் தேவையான சகல உபகரணங்களும் இருக்கும், கட்டிங் பிளேய்ர், திருப்புளி, ஸ்குரு டிரைவர், ஒரு டெஸ்ட் லாம்ப், சிறிது பெரிதுமாய் ஸ்பானர்கள், கனெக்டர்கள், துண்டு வயர்கள், குத்தூசி, ஒரு சுத்தியல், உதிரி உதிரியா நட்டு, போல்ட் என்று எல்லாமே இருக்கும். ஏதாவது சின்ன ஆணி தேவைப்படும்போது, முழுப்பையையும் தரையில கவுத்தி ஒண்ணொன்னா துழாவி தான் எடுப்பார், அதில தேவையில்லாத சாமானும் இருக்கும், இருந்தாலும் எடுத்துப் போட்டுக்குவார், சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்று எப்போதும் சொல்வார். பெருமாள்சாமி, பிறரிடம் எந்த சாமானும் ஓசி வாங்க மாட்டார், தன் பைக்கட்டிலேயே அத்தனை சாமானும் வைத்திருப்பார். இவர் வைத்திருக்கும் சாமான்கள் போல இவருடன் வேலை செய்பவர்கள் யாரும் வைத்திருக்க மாட்டார்கள், எல்லாமே டப்பாரியா பிராண்ட், நல்ல நயமான சாமான்கள் என்பார், கூடவே ஒரு ஜோடி கிளவுஸையும் மடித்து வைத்திருப்பார் பொத்துனாப்புல.
ஜான்சி தான், அவருடைய பூத் இருக்கும் இடத்திற்கு பேரு. ஜான்சி பூங்கா பக்கத்துல இருக்கிற தான் அந்த ஃப்யூஸ் ஆஃப் கால்ஸ் ஆபீஸ் அது, ஒரு பால் பூத் மாதிரி தான் இருக்கும். இந்த பக்கம் நியூசினிமா தியேட்டர், முன்னாடி கே.ஏ.எஸ். சேகரின் லாட்டரிக் கடை, இடது பக்கம் ஒரு பிள்ளையார் கோயில், அரசமரம் இது தான் ஜான்சி ஆபீஸ். ஒரு மேசை, ஒரு பழைய கருப்பு போன், டயலில் போட்டிருக்கும் பூட்டு, ஒரு ரெஜிஸ்டர், கால்ஸ் எழுதுவதற்கு. அங்கிருந்து வருகிற கால்ஸை பொறுத்து தான் புறப்பாடே. பெரும்பாலான சமயங்களில் மேஜரா ஏதும் இருக்காது, ஏதாவது மைனர் பால்ட் தான் இருக்கும். இந்த ஏரியா வந்தபிறகு வரும்படி ஜாஸ்தி, மதுரையிலேயே எல்லாப் பொருள்களும் கிடைக்கிற ஏரியா இது தான். ஜவுளிக்கடை, பாத்திரக்கடை, நகைக்கடை, எலெக்டிரிகல் சாமான் ஹோட்டல் என்று பணம் ரொம்ப பொழங்குற ஏரியாங்கிறதால பெருமாள்சாமிக்கு இங்க வந்த பிறகு பணத்தட்டுப்பாடு ஏதுமில்லை. செல்லூர் பிரிவுல இருக்கும்போது ரொம்ப கஷ்டப்பட்டாரு. பிள்ளங்க பீஸு கூட கட்ட முடியல, அதுக்குப்பேரே பனிஸ்மெண்ட் ஏரியா. ஒண்ணு ரெண்டு தறிக்கம்பெனி தவிர வேற எதுவும் கிடையாது, அங்க இருந்த ரெண்டு வருஷமும் கஷ்டம் தான்.
பெருமாள்சாமிக்கு ரெண்டும் ஆம்பிளப்புள்ளைங்க, இவரு படிக்காததால படற கஷ்டம், பிள்ளங்க படக்கூடாதுன்னு, ரெண்டு பேரையும் நர்சரி ஸ்கூலில் சேர்த்துவிட்டார். அவனுங்களும் நல்லா படிக்கிறாய்ங்க ஒரு குறைவில்லாம! பிள்ளைங்க என்ன கேட்டாலும், சுணங்காம வாங்கித் தரமுடியுது, அதற்குக் காரணமே, இந்த ஏரியா தான். இங்க மாசமானா வர சம்பளத்த விட மேல்வரும்படி இன்னும் அதிகமா இருக்கும். அதுவும் விசேஷ காலத்துல ஏதாவது மின்சாரக்கோளாறு ஏற்பட்டா வியாபாரம் கெடக்கூடாதுன்னு எவ்வளவு காசு வேண்ணாலும் கொடுப்பானுங்க கடைக்காரனுங்க. கூட இருக்கிற பயக எல்லாம் நைனா... எதையாவது பிடுங்கிவிடலாம் நைனா, இருக்கிறவங்க கொடுக்கட்டும் நைனா என்பார்கள், ஆனால் இவர் ஒரு போதும் ஒத்துக்க மாட்டார், தேவையேற்பட்டா கூப்பிடறாங்க, நாமளும் போய் சரி செய்துட்டு காசு வாங்குறந்தானே... அப்புறமென்ன? அப்படியெல்லாம் சேர்த்தா காசு ஒட்டாது, மணி! என்பார். இது போல தனியாக பணம் வாங்குவதே அரசாங்க உத்தரவுகளின் படி தவறு தான் என்றாலும், இது போல வாங்குறது குத்தமா படுறது இல்லை யாருக்கும். பெரிய வேலையாயிருந்தா இவர்களுக்கு கிடைக்கிற பணத்தில் லைன் இன்ஸ்பெக்டரிலிருந்து அடிஷனல் இஞ்சினியர் வரை பங்கு போகும.
காலையிலே வந்து சேர்ந்தவுடனே, அண்ணே ராணிமஹால்ல போன் பண்ணியிருந்தாய்ங்க, ஏதோ மாடியில புதுசா கட்டியிருந்த ரெண்டாவது மாடி, அதான்னே அந்த ரெடிமெட் டிரஸ்லாம் போட்டிருக்காய்ங்க இல்லை அங்க ஏதோ புகைஞ்சிருச்சாம். காலையிலேயே பவர் இல்லை, கடையில ஆளுங்க ஜாஸ்தி வந்துட்டா கரண்ட் இல்லாம கஷ்டம் சீக்கிரம் வாங்கன்னு, நாமக்காரரே போன் பண்ணாரு, போயிட்டு வந்துடலாமா, என்று கருணாகரன் சொல்ல, மத்த ரெண்டு பயலும் வந்திரட்டும். ராஜேந்திரன் இன்னைக்கு லீவு, அதனால் கூடமாட ரெண்டு பேரு இருந்தாத்தான் சுளுவா முடிக்க முடியும்னு சொன்னார். திரும்பவும் மணி அடித்தது, இப்போது ராணிமஹாலின் முதலாளியே கூப்பிட்டார், வாங்கண்ணே, தீவாளிக்கு கவனிச்சிக்கலாம் என்று அழைக்க, நல்ல காசு கிடைக்கும் என்று எல்லோரும் உசுப்பி விட... சரி, போயிடலாம்...ஆனா மாரிமுத்து வரட்டும்... நாலு பேரு இல்லேன்னா சிரமம்... என்றார் பெருமாள்சாமி, வாஸ்தவம் தான் என்று கருணாகரனும் ஆமோதிக்க, அங்கேயே காத்திருந்தனர்.
மெயின் டிரான்ஸ்பார்மர் இருக்கும் இடத்தில் ராஜேந்திரனை நிற்க வைத்து விட்டு, தேவைப்படும் போது ஆன் ஆஃப் செய்ய சைகை செய்யவேண்டும். அதற்கு மாரிமுத்துவை எஸ் ஆர் எஸ் தங்கமாளிகை கடை மொட்டை மாடியில் நிற்க வைத்தால் நன்றாகத் தெரியும்... ஒரு ’டா’னா வடிவத்தில் இருக்கும் தெருவில் முனையில் இருக்கும் கடை எஸ் ஆர் எஸ் தங்கமாளிகை, ஒரு தெருவில் டிரான்ஸ்பார்மரும், மற்ற தெருவில் இந்த ஜவுளிக்கடையும் இருப்பதால், இவன் நகைக்கடை மாடியில் நின்றால் இரண்டு இடங்களும் தெரியும். பெருமாள்சாமிக்கு தான் வேலை தெரியுன் என்பதால் அவர் கருணாகரனுடன் இருந்து என்ன ஏது என்று சொல்லிக் கொண்டிருக்க வேண்டும். மாரிமுத்து வந்து சேர்ந்தான். பேசியபடியே கருணாகரனும், பெருமாள்சாமியும் ராணி மஹால் கடைக்குள் நுழைந்து என்ன பிரச்னை என்று பார்க்க, ப்யூஸ் போயிருப்பது தெரிந்தது. மாரிமுத்து எஸ் ஆர் எஸ் தங்கமாளிகை மாடிக்குச் செல்ல, ராஜேந்திரனும் டிரான்ஸ்பார்மரை ஆஃப் செய்ய மேலேறி பாதி தூரத்தில் நின்று கொண்டான், மாரிமுத்துவின் சைகைக்காக.
பெருமாள்சாமி ப்யூஸ் போட கரண்டு வந்து உடனே திரும்பவும் போய் விட்டது. வயர் பொசுங்குற வாசமும் வர, இவர்கள் அவசர அவசரமாக கட்டிய ரெடிமேட் பிரிவில், ஏதோ மேஜர் கோளாறு இருப்பது போல் பட்டது பெருமாள்சாமிக்கு. எங்கேயோ இருக்கிற ஓப்பனிங்கில் இருந்து தண்ணீர் வயருக்குள்ளே போய் ஷார்ட் சர்க்யூட் ஆகிறது எப்படி கண்டுபிடிப்பது என்ற யோசனையுடன்... மூன்று ஃபேஸ் லைனில் ஒவ்வொரு ப்யூஸாக டெஸ்ட் லேம்ப் வைத்து எது பிரச்னை என்று கண்டுபிடித்தார். பிறகு வெளியே வந்து மாரிமுத்துவுக்கு சைகை செய்து ஆஃப் செய்யச் சொல்ல, அது ராஜேந்திரனுக்கும் போய், டிரான்ஸ்பார்மர் ஆஃப் செய்யப்பட்டது. நாமக்காரர் கூடவே நின்று கொண்டு என்ன ஆச்சு பெருமாள்சாமி? வெரசா முடிச்சா, உங்களுக்கு புன்ய்மாப் போவும்! என்று கெஞ்சிக்கொண்டிருந்தார். இருங்க அண்ணாச்சி! அவசரப்பட்டா சோலி ஆவாது... கரண்டுல வேலப் பாக்குறப்ப சுதாரணமா இல்லேன்னா... அம்புட்டு தான்... என்று பதில் சொல்லி விட்டு வேலையை கவனிக்க திரும்பினார் பெருமாள்சாமி.
கருணா! இப்ப ஃபால்டா இருக்க லைன மட்டும் கட் பண்ணிட்டு, மத்தத போட்டு விட்டுடலாம், ரெண்டாவது லைன்ல இருந்து ஒரு டெம்பரரி கனெக்ஷன் குடுத்துடலாம்... இந்த தீவாளி அலப்பரயெல்லாம் முடிஞ்ச பின்னாடி மொத்தமா பிரிச்சு சரி பண்ணிடலாம், இது தான் இப்ப இருக்கிற கன்சீல்ட் வயரிங்குல இருக்கிற பிரச்னையே... ஃபால்ட் கண்டுபிடிக்கிறதுக்குள்ள தாவூ தீந்துடும்... சரிங்கண்ணே! அதுவே பண்ணிடலாம் என்றார் கருணாகரன்.
நாமக்காரரிடமும் அதைப்பற்றி சொல்ல, சரி இப்பைக்குள்ள பிரச்னைய சரி பண்ணா போதும், அதும்போல முழுசா சரி பண்ண நிறைய காசாகும், பாத்துக்கலாம். பெரியவர்ட்டயும் ஒரு வார்த்த பேசிப்போட்டு செய்துக்கலாம் என்று நினைத்துக் கொண்டார் நாமக்காரரும். சரிங்க பெருமாள்சாமி, உங்களுக்கு எது சரின்னு படுதோ அதையே பண்ணிப்புடலாம் என்று அங்கிருந்து நகர்ந்தார். என்ன செய்யவேண்டும் என்று கருணாகரனுக்கு யோசனை சொல்லி விட்டு, வெளியே வந்தவர், தங்கமாளிகையில் இருக்கும் மாரிமுத்துவைப் பார்த்து இன்னும் பத்து நிமிஷத்துல முடிஞ்சிடும் என்று தகவலுக்காக மணியைக்காட்ட, பீடி வளித்துக் கொண்டிருந்த மாரிமுத்து சரியாக கவனிக்காமல், ஆன் செய்ய சொல்கிறார் என்று நினைத்து, மொட்டைமாடியின் முனைக்கு நகர்ந்து, ராஜேந்திரனுக்கு ஆன் பண்ணுமாறு சைகை செய்ய... கடைக்குள்ள பெரிய சத்தம் கேட்க உள்ளே ஓடிய பெருமாள்சாமி, கையில் பிடித்திருந்த வயருடன் துடித்துக் கொண்டிருந்த கருணாகரனைப் பார்த்து, பதறிப்போய் அங்கே கிடைத்த உடைந்த ஏணியின் ஒரு முனையை எடுத்து ஓங்கி, கருணாவின் கையோடு அடிக்க அங்கிருந்து கீழே விழுந்தார் கருணாகரன்.
இடது பக்கத்தில் பெரிய காயங்களுடன், கைவழி புகுந்து கால் வழி வெளியேறியது கொலைபழுது மின்சாரம். காது முனை அத்தனையும் கருகி சுயநினைவு இழந்தவரை, உடனே தூக்கிக் கொண்டு பெரிய ஆஸ்பத்திரி எமர்ஜென்சி வார்டில் சேர்த்து விட்டு கையைப் பிசைந்து கொண்டு நின்றார் பெருமாள்சாமி. மாரிமுத்துவை உடன் இருக்க சொல்லிவிட்டு, ராஜேந்திரனை அழைத்து கருணாகரனின் வீட்டில் தகவல் சொல்ல அனுப்பினார். ஆஸ்பத்திரி, அனேக அவஸ்தைகளையும், அழுகைகளையும், துக்கங்களையும் பார்த்துக் கொண்டு ஒரு கனமான சாட்சியாய் நின்று கொண்டிருந்தது. மனசு முழுக்க வேதனை, பிழைத்து விட வேண்டும் என்று கை கூப்பி கண்ணீர் விட்டு பிரார்த்தித்தார், கருணாகரனின் மனைவியும், பெரிய பொண்ணு சாந்தியும் கண் முன்னே வந்து வந்து போனார்கள். என்ன பதில்சொல்வது இவர்களுக்கு, இது மாதிரி கருணாகரனுக்கு ஏற்கனவே ஆனபோது, பூனைக்கண்ணு பாலகிருஷ்ணனிடம் இருந்தார், அப்போது சின்ன அடி தான், இது பெரிதாய் இருக்கிறது, காது முழுதும் அரித்து கருகிப்போயிருந்தது, உள்ளங்கை வழி புகுந்த மின்சாரம், இடது கை முழுதையும், நிறம் மாற்றி இருந்தது, பெருமாள்சாமி கட்டையைக் கொண்டு அடித்ததில், கை விரல்களில் கட்டையில் இருந்த ஆணி இழுத்து சதை கிழிந்திருந்தது, ரத்தம் உறைந்து கருப்பாய் இருந்தது.
குளுக்கோஸ் ஏறிக் கொண்டிருக்க, அசைவில்லாமல் கிடந்த கருணாகரனைப் பார்த்துக் கொண்டே நின்றார். சுவாசம் சீராய் இருந்ததால் டாக்டர்கள் உயிருக்கு ஒன்றும் பாதகமில்லை என்றவுடன் ஆசுவாசமாய் இருந்தது. கருணாகரனுக்கு இனிமேல் வேலைக்கு முடியலேன்னாக்கூட, நம்ம அந்த குடும்பத்தைப் பார்த்துக்கணும் என்று நினைத்துக் கொண்டார். ஒரு இரண்டு மணி நேரம் கழிந்த பிறகு கருணாகரனின் மனைவியும், சின்ன பையனும் வந்தார்கள், அவன் பெயர் சரியா ஞாபகமில்லை, ஏதோ முருகனின் பெயர் என்று மட்டும் தான் ஞாபகம். கருணாகரனின் மனைவி, அண்ணே! இப்படி ஆயிடுச்சே அண்ணே! உங்க கூட இவரு வந்தபிறகு தானே உருப்படியா சாப்பிடுறோம், உடுத்துறோம்... இப்போ தாண்ணே! அவரு ஒழுங்கா இருக்காரு, இந்த நேரத்துல இப்படி ஆயிட்டதே! அவருக்கு ஒண்ணும் ஆகாதில்ல என்று அழுது அரற்றியவளிடம், கலக்கத்துடன் உயிருக்கு ஒரு ஆபத்துமில்லே, கவலைப்படாதேம்மா என்று ஒப்புக்குத் தேற்றிவிட்டு, கையில் இருந்த காசெல்லாம் அவளிடம் கொடுத்துவிட்டு, அவர்களை விட்டு வெளியே வந்தார்.
தகவல் அறிந்த ஏ.இ. பரமானந்தம், ஆஸ்பத்திரிக்கே கருணாகரனைப் பார்க்க வந்துவிட்டார், பெருமாள்சாமி, அப்போது தான் வந்த ராஜேந்திரனிடமும், மாரிமுத்துவிடமும், டாக்டர்கள் சொன்ன தகவலைச் சொல்லிவிட்டு, உள்ளே போகாமல் வாசலில் நின்று கொண்டு இருந்த அவரை முறைத்துவிட்டு உள்ளே போனார் பரமானந்தம். கருணாகரனைப் பார்த்துவிட்டு, அவர் மனைவியிடம் பேசிவிட்டு வெளியே வந்தவர், உடனே பெருமாள்சாமியை தற்காலிக பணி நீக்கம் செய்யப்போவதாகவும், காலையில் அலுவலகத்தில் வந்து பார்க்க வேண்டும் என்று சொல்லிவிட்டு, ஜீப்பில் ஏறிச் சென்று விட்டார், மாரிமுத்துவும், ராஜேந்திரனும் என்ன அண்ணே இப்படி சொல்லிட்டுப் போறான் அந்த ஆளு? நீங்க சொல்ல வேண்டியது தானே அண்ணே... நீங்க இல்லேன்னா, கருணாகரன் போயிச் சேர்ந்திருப்பாருன்னு! ஒரு மண்ணும் விசாரிக்காம, எடுத்தோம் கவுத்தோம்னு, என்னத்த படிச்சாய்ங்களோ? என்று பொருமினான் ராஜேந்திரன்.
மாரிமுத்து செயலற்று நின்று கொண்டிருந்தான். பெருமாள்சாமிக்கு, தற்காலிக பணி நீக்கம், விசாரணை அது இதுன்னு மூணு மாசம் போயிடும் தோராயமா, மூணு மாசமும் சம்பளம் வராது, மேப்படி வருமானமும் கிடையாது. வீட்ட எப்படி கவனிக்கிறது, கருணாகரன் சரியாகுற வரை அவங்குடும்பத்துக்கு என்ன பண்றது என்ற கவலையில் பெருமாள்சாமிக்கு மூக்கெல்லாம் சூடாகி, முட்டிக் கொண்டு அழுகை தான் வந்தது, அவருக்கு மனைவியைப் பார்க்க வேண்டும் போல இருந்தது அப்போது.
சிறிது நேரத்தில் கருணாகரனின் மனைவி வெளியே வந்து அண்ணே, அவரு முழிச்சுக்கிட்டாருண்ணே! என்றவுடன், ஒரு நிம்மதியுடன், கருணாகரனைப் பார்க்க உள்ளே நுழைந்தார். கருணாகரன் ஓரளவு தெளிச்சியாகி இருப்பதாய் பட்டது, காதுப்பகுதியில் நன்கு மருந்திட்டு கட்டியிருந்தது, இடது கை முழுக்க, ஏதோ ஆயில் போல ஒன்றை தடவியிருந்தார்கள், இன்னும் குளுகோஸ் பாட்டில் ஏறிக் கொண்டிருந்தது, அருகே படுக்கை நோக்கிக் குனிந்தவரை, பார்த்து சிரிக்க முயன்ற கருணாகரன், இடதுகையை மெதுவாக அசைத்து, குளுகோஸ் ஏறிக் கொண்டிருக்கும் கையருகே கொண்டு போய் கும்பிடுவது போல செய்து மறுபடி சிரிக்க முயற்சித்தான்.
14 comments:
ரொம்ப டச்சிங்காப் போச்சு..
பாவம் அந்த கருணாகரன்:(
கடைசிவரை இது 'கதை'ன்னு தோணலை!!!!
நல்ல கதை ராகவன்!
90% உண்மையும் 10% கதையும் போலிருக்கு.
ஏதோ நிஜ சம்பவத்தை விவரித்தது போல் இருந்தது சிலரால் மட்டுமே இத்தனை அழகாய் கதை சொல்ல முடியும் ::)))கிரேட்
கதையை விட தலைப்பு எனக்கு பிடித்தது.
உள்ளத்தனைய மலர் நீட்டம் அல்லவா ?
உங்க கூட ஒவ்வொரு ஊருக்கும் வர முடிகிறது . வட்டார வழக்கு அப்படி . உள்ளத்தனையது என்பது மிகவும் பொருத்தமாக உள்ளது. தொடருங்கள்
டேய்... ரொம்ப நல்லா வந்திருக்கு...
உங்க அப்பாவுக்கு நன்றி... நீ அவர்கூட ஊர் சுத்துனதா எனக்கு தெரியல. அவர் இவ்வளவு அழகா தன் தொழில் பற்றி, தன் தொழில் சூழல் பற்றி, உன்கிட்ட விவரிச்சிருக்கிறார்...
அவர் தந்த பட்டு நூலில், நீ இழைத்த சேலை, உன் வழக்கமான/வளமையான் கைதிறனுடன் ...
ஜொலிக்குது!!!
உம்ம்ம்ம்ம்ம்ம்மா...
சுந்தர் சொன்னப்பிறகு தான் புரிந்தது,
இதில் ராகவனின் பங்கு குறைச்சல் என்று.
ஒரு மின்சாரவாரிய ஊழியனை உரித்துவைக்கிற பதிவு.
அண்ணா, ரொம்ப அழகா இருக்கு... போனதே தெரியல... :)
அன்பு நண்பர்கள் எல்லோருக்கும்,
இது கதையல்ல நிஜம் என்பது அப்பட்டமான உணமை. இதற்கு சிறுகதை என்று பெயரிட்டது தவறா என்று தெரியவில்லை...
ஒரு சிறுகதையின் அங்கலட்சனங்கள் ஏதுமில்லை என்பது எனக்குத் தெரிந்தது எழுதி முடித்த போது... ஆனாலும் மேலும் எதுவும் நகாசு செய்யாமல் அப்படியே எழுதிவிட்டேன் ஒரு ரிப்போர்டிங் பாணியில்... இதை ஒரு புனைவா தான் எழுத நினைத்தேன்... ஆனால் சம்பவங்களின் தீவிர தண்மையினால், அது அதன் போக்கிலேயே போய் விட்டது.
சுந்தரைத் தவிர என்னை யாருக்கும் முழுமையாய் தெரியாது, அவனுக்கே தெரியாத விஷயம், நான் என் அப்பாவிடம் கவனித்திருக்கிற விஷயங்கள்... எந்தவித மெனக்கெடலும் இல்லாமல், அதுவாய் படிந்த விஷயங்கள், என் அப்பாவைப் பற்றியது... இன்னும் நிறைய சொல்லியிருக்கலாம்... இதைப் பற்றி தான் எழுதப் போகிறோம் என்று முடிவு செய்த பிறகு... எழுத்து அதன் போக்கில் முடிவு செய்கிறது... அது தான் கதை முகமற்றதாய் இருக்கிறது...
இந்த கற்பிதங்கள் பொல்லாதது... சிறு இழை போல இருக்கும், ஆனால் வலிந்து வலிந்து கட்டும் போது... இறுக்கி இறுக்கி மூச்சு திணற வைத்து விடுகிறது... ஆசுவாசவெளி தேடி விழி பிதுங்குகிறது எப்போதும்... துழாவும் கைகளில் அகப்படும் பிசுபிசுத்த பொழுதுகளின் முனைகளில் என்றோ உருசி பார்த்த உப்புக்கரிக்கும் ரத்தம்.
அன்புடன்
ராகவன்
அன்பு நண்பர்கள் எல்லோருக்கும்,
என் அன்பும், நன்றிகளும்... உங்களின் தொடர் வாசிப்புக்கு என் அன்பும்...
விமரிசனப்பார்வை இல்லாதது எனக்கு வருத்தமாய் இருக்கிறது... என் மனதை நோகடித்துவிடுவீர்களோ என்று நீங்கள் எல்லாம் தயங்குவது, என்னை திருத்திக் கொள்ள வாய்ப்பில்லாமல் செய்து விடுகிறது...
மேற்சென்று இடித்தற்.... செய்யுங்கள் தவறாமல்...
அன்புடன்
ராகவன்
ராகவன்! நீங்கள் விரும்பிக்கேட்டதால் விமர்சிக்கிறென்." எண்ணமார்" என்பதை என்.எம்.ஆர் என்று எழுதியிருக்கலாம். narrative, non-naarrative என்பார்கள். பெருமாள்சாமி மாரிமுத்து ஆகியோர் பெசிக்கொள்வதை பெச்சுவழக்கில் எழுதலாம். பத்தி பிரித்து எழுதவேண்டும்.உதாரணமாக,வீட்டிலிருந்து புறப்படுவது, ஆபீஸ் இருக்குமிடம்,ஜான்சிராணி பூங்கா, என்று ஒவ்வொன்றையும் ஒவ்வொரு பத்தியாக(paragraph) எழுதலாம்.முதலாளிக்கும், லைன்மேனுக்கும் இடையே உள்ள பேச்சை பெச்சுவழக்கிலேயே சொல்லலாம். இந்தக்கதையின் முக்கியமான பகுதி விபத்தில் அவன் இறக்காமல் பிழைப்பது. அதீதமான சோகத்திற்காக அவனை மரணமடையச்செய்யாமலிருந்தது நன்று பத்திரிகைகளுக்கு எழுதலாமே.---காஸ்யபன்.
அன்பு காஷ்யபன் அய்யா அவர்களுக்கு,
உங்கள் அன்புக்கும், கருத்துக்களுக்கும் அன்பும் நன்றியும்.
நீங்கள் சொன்ன கருத்துக்களை... அவசியம் கவனிக்கிறேன்...
அன்புடன்
ராகவன்
raghavan, enakellam vimarisikkath theriyaathu . aanal nalla rasikkath theriyum vimarisikka mattumey comments entraal naan silent readeraakavey irukka mudiyum . arumaiyaaka eluthukireerkal. valththukkal . as said u can write for magazines too.
Post a Comment