"இந்த பதிவு எழுதுவதற்கு முதற்காரணம் ராஜசுந்தரராஜன் அண்ணன்தான், அவர் தான் இசை பற்றி எழுத மீண்டும் தூண்டியது... இந்த பாடல் பற்றி எழுதியது அவருக்காக..., நியாயம் செஞ்சிருக்கேனான்னு தெரியலை..."
வனங்கள் சுழன்றெரியும் தீமழை பெய்யும் மேகங்களின் முலைக்காம்புகளில் இருந்து விஞ்சிய துளிகளில் செரிவு சேர்த்து குழைத்த மசியில், ரேகைகள் வரைந்து வரிகள் போர்த்திய உடல் உய்ய நட்சத்திரங்கள் எறியும் செருகளத்தின் மேற்கில் சிவந்த வானத்தின் அடிவயிற்றில் செருகியிருக்கும் பஞ்சாக்னி. அம்புகள், வேல்களின் கூர்முனைகளை மழுங்கச்செய்த பிட்ட சூரியனின் போர்ப்பரணி, உந்திச்சுழி முளைத்தவனின் ஏடுகள் தவறவிடட இசைக்குறிப்புகள். நாதவிந்துவாய் வெண்கமலத்து விரல்கள் எங்கும் ஓடி, கம்பிகளில் அதிர்ந்து, காற்றின் பையில் துளையிடக் கொட்டிய மத்தள கொட்டு இசையில் நெய்யப்பட்ட முகப்படாமில் தொங்கும் ரத்தினங்கள். பரணியும், பக்தியும் பிசைந்து வனைந்ததில் ஜனித்த நீர்க்குழந்தை சல நாட்டை. மணிகளும் ஒலிகளும் திரண்டு பெருக்கும் சிற்பங்களின் விரைகளில் இருந்து பெருகிய உயிர்களின் நாடித்துடிப்பும், நீர்க்குழந்தை தவழ்ந்த 36வது சப்த மண்டலங்கள் பிளந்து ஜனித்ததில் தெறித்து விழுந்த மகரந்த துளிகளில் எழுந்து நிற்கும் பேருரு இந்த நாட்டை.
வளரவும், தேயவும் சபித்தவனின் முன்செல்லும் துளைவிழுந்த கதிர, மூங்கில் மரங்கள் வீசும் காற்று சுமந்து செல்லும் மல்லாரியில் மிதந்து பயணிக்கும் கரிமுகனின் தண்டைகளில் புகுந்து கொள்ளும் மத்தளம். அவனும் இவனும் என இருவிழி நோக்கில் சங்கமிக்கும் சங்கரநாராயணனைப் போல தோற்றமயக்கம் காட்டும், இந்த ராகம். நாட்டையா அல்லது தைவதத்தை தவறவிட்ட வடக்கத்தியர்களின் ஜோக் ராகமா என்ற குழப்பமும், மயக்கமும் தரும். ரவீந்திரனின் இசை, மலையாள மொழியின் சினேகமான வார்த்தைகளுள் பொதிந்து இருக்கும் இசையை சிரமமில்லாமல் எடுத்தாண்டவர் ரவீந்திரன் மாஸ்டர். வி.தக்ஷினாமூர்த்தி, எம்.பி.ஸ்ரீனிவாஸ் இவர்களுக்குப் பிறகு, கர்நாடக சங்கீதத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து இசையமைத்த பாடல்கள் அனேகம். அதில் குறிப்பாய், தென்னிந்திய ரசிகர்கள் எல்லோருக்கும் பரிச்சயமான பாடல், ஹிஸ் ஹைனெஸ் அப்துல்லாவில் வந்த “பிரமதவனம் வீண்டும்” என்ற ஏசுதாஸின் குரல். பாடலை எழுதியவரும் இசையில் தேர்ச்சி பெற்ற நையாத்திங்கர வாசுதேவன் என்று நினைக்கிறேன்.
ஆலாபனையில் ஹிந்துஸ்தானியின் ஜோக் ராகத்தின் சாயலில் இருக்கும் இந்தப்பாடல், பல்லவியிலும் அப்படியே தொடர்கிறது. அதன் பிறகு சரணங்களில் நம்ம ஊரு நாட்டையின் வேகமும், அடுக்கும் வருகிறது. நாட்டை ஒரு ஜன்ய ராகம், முப்பத்தியாறாவது மேளகர்த்தா ராகமான சல நாட்டையில் இருந்து பிறந்தது. சலநாட்டை ஒரு சம்பூர்ண ராகம், நாட்டையில் தைவதம் கிடையாது. ஆனால் வடக்கத்திய ராகமான ஜோக்கில் ரிஷபமும் கிடையாது. இந்தப் பாடலில் சில இடங்களில் ரிஷபம் இல்லாதது போலத் தெரியும், சில இடங்களில் ரிஷபம் இருப்பது போலவும் தெரியும். இந்த ராகத்தில் ஸ்வரங்களுக்கு இடையேயான இடைவெளிகள் குறைவாய் இருப்பதால், இது பக்திக்கு உகந்ததாகத் தெரிகிறது, மெய்மறக்கச் செய்யும் ஸ்வரக்கட்டு. இதே சுவரக்கட்டு கொஞ்சம் துரித காலத்தில் இருக்கும்போது, மல்லாரியாக நாதஸ்வரத்தில் வாசிக்கப்படுகிறது. கொஞ்சம் மாறுதல்களுடன், கம்பீரநாட்டையாகவும் மாறிவிடும் ராகம் இது.
ஏசுதாஸுக்கு தேசிய விருது வாங்கித்தந்த பாடல்களில் முக்கியமானது இது. அந்த தேவகந்தர்வனின் குரலில் இருக்கும் கனமும், குழைவும், இசை விமர்சகர்களின் நீளும் விரல்களை சிகரெட் துண்டுகள் என நசுக்கி விடுகிறது. ஆலாபனை ஆரம்பிக்கும் போது இருக்கும் அதன் அசைவுகள், உங்களை உள்ளே இழுத்துச் செல்லும். அதன்பின் கொண்டு செல்லும் உயரங்கள் அபாரமானவை. ஏசுதாஸின் குரல் மாறும் உச்சம் அது. பந்துவராளியில் கல்பனாஸ்வரம் பாடும் போது அவரின் குரல் இது போல ஆவதைக் கேட்டிருக்கேன். இந்த பாடலின் ஆலாபனையின் போது அது நாட்டையாய்த் தெரியாது, பல்லவியிலும் அஃதே. சரணங்கள் மட்டுமே நாட்டையின் சாயலில். உருவ ஒற்றுமை இருந்தாலும், இரட்டையர்களிடம் வித்யாசம் உண்டு என்பது போல, மிக உன்னிப்பான வேறுபாடுகள். ரவீந்தரன் மாஸ்டர் ஒரு பெருந்தச்சன், மிகநுணுக்கமான வேலைப்பாடுகள் கொண்ட பறவைகள் அடையும் தேர்கள் செய்யும் தச்சன். மோஹன்லால், இந்த படத்தின் பாடல்கள் பற்றி பேசும் போது, நல்ல பாட்டுகள் உண்டாக வேண்டும் என் ஆக்ரஹம் கொண்டிருந்ததாய்ச் சொல்வார். அது முழுக்க முழுக்க உண்மை. சங்கீதம் அறியுந்தோறும் அகலம் கூடும்ன ஒரு மஹாசமுத்திரம் என்று ஒரு வரி வரும் அது சத்தியம்.
ரவீந்திரன் மாஸ்டரின் இசையில் ஏசுதாஸ் என்ற யட்சகன் பாடிய அனேக பாடல்கள் பிரபலமானவை மட்டுமல்லாது, நல்ல பாடல்களும் கூட... கோபாலக பாஹிமாம், மதுரம் ஜீவாம்ருத பிந்து, ஹரி முரளி ரவம், ஸ்ரீ லதிககள், கோபாங்கனே, ராமகதா கானலயம், அழகே நின் மிழிநீர்மணியில், ஏழு சுவரங்களும் தொழுதுனரும் ஒரு கானம் என்று இது பெரிய பட்டியல் அடங்காப்பட்டியல். இசையை அருந்தி உயிர் வாழ்கிறது சாதகபட்சிகள் என்று யாராவது சொன்னால், சத்தியமென நம்புகிறேன்.
15 comments:
எப்பவுமே எல்லாத்துலயுமே க்ராமர் எனக்கு வராது ராகவன்.
ஆனா எல்லாத்தோட வேரையும் இன்ஸ்டிங்க்டிவ்வா எப்பவுமே என்னால் தொட முடிந்திருக்கிறது.
இது ஒரு ஆச்சர்யமான பயணம் போலவும் எனக்காய் யாரோ விட்டுச் சென்றது போலும் உணர்வேன்.
இந்த ப்ரமத வனமும் அப்படித்தான். ஹிஸ் ஹைனெஸ் அப்துல்லாவைப் பார்த்த நொடியே என்னிடம் கலந்து என்னைக் கரைத்த சங்கீதம் இது.அதில் வரும் கோபிகா வசந்தமும்,தேவ சபாதலமும் அப்படித்தான். என்ன ஒரு சங்கீதம் ராகவன்.
அழகே நின் மிழிநீர்மணியில் அமரத்தில் வந்த அமர கானம்.அந்தச் சினிமா நடிகை மீது இந்தப் பாட்டுக்காக அர்த்தமில்லாமல் மையல் கொண்டேன்.அதை நினைத்தால் சிரிப்பாக வருகிறது.
இன்னொரு அழைப்பு வருகிறது. பின் நேரம் வாய்க்கும்போது.
பை ராகவன்.
நாட்டையின் பேருரு நிஜமாகவே மிரட்டிய ஒரு வர்ணனை. நாட்டையை ஏமாற்றும் ஜோக் பற்றிய குறிப்பிடலும் ஜோர்.நிரம்ப ரசித்தேன்.
//அந்த தேவகந்தர்வனின் குரலில் இருக்கும் கனமும், குழைவும், இசை விமர்சகர்களின் நீளும் விரல்களை சிகரெட் துண்டுகள் என நசுக்கி விடுகிறது//
சபாஷ் ராகவன்.
எழுதியது காய்தப்புரம் தாமோதரன் நம்பூதிரி என்று ஒரு சம்சயம்.
மோஹன்லாலின் இருபது வருஷதுப் பழைய முன்னுரையில் இதைக் கேட்ட ஒரு ஓர்மை.
//இசையை அருந்தி
உயிர் வாழ்கின்றன
சாதகபட்சிகள்
என்று யாராவது
சொன்னால்,
சத்தியமென
நம்புகிறேன்//
ஆமென்.
இசையை அருந்தி உயிர் வாழ்கின்றன
சாதகபட்சிகள் என்று யாராவது சொன்னால், சத்தியமென நம்புகிறேன்//
நானும்... :-)
இன்று இதோ, சீறூர் நின்று மாநகர்ப்பட்ட பழம் நினைவுகளைக் கிளர்த்துவதாய், ஈர நிறத்துடன் முகில்இறக்கிச் சென்னை மீதும் கவிகிறது வானம்.
என்னைப் பின்னாளில் விலக்கிய அவளொடு, அவளை மணப்பதற்கு முந்திய நாட்கள் ஒன்றில், மதுரை அரங்கொன்றில் பார்த்த படம் இது. நீண்ட வராந்தாவில் ஓடி வந்து, பருகுவதன்ன அருகா நோக்கின் கௌதமியின் முகமும் மறந்துபடவில்லை.
கைதப்ரம் தாமோதரன் நம்பூதிரியின் பாடல் இதோ:
ப்ரமதவனம் வீண்டும்
ரிது ராகம் சூடி
:சுபஸாயாஹ்னம் போலே
தெளிதீபம் களிநிழலின் கைக்கும்பில்
நிறையும்போழ் என்...
ஏதேதோ கதயில் -
ஸரயுவில் ஒரு சுடு மிழிநீர்க் கனமாய் ஞான்
கவியுடெ கான ரஸாம்ரித லஹரியில்
ஒரு நவ கனக கிரீடமிதணியும் போழ்
இன்னிதா...
ஏதேதோ கதயில் -
யமுனயில் ஒரு வன மலராய் ஒழுகிய ஞான்
யதுகுல மதுரிம தழுகிய முரளியில்
ஒரு யுக ஸங்க்ரம கீதயுணர்த்தும் போழ்
இன்னிதா...
முன்பு அப்படி, இன்று இதோ (இன்னு + இதா = இன்னிதா) என்று சிறுமையின் உயர்ந்து பெருமையில் முடியும் சரணங்கள்.
//பரணியும், பக்தியும் பிசைந்து வனைந்ததில் ஜனித்த நீர்க்குழந்தை//
புரிகிறது. படத்தில் இது ஒரு situation song. தம்புரானைக் கொல்வதற்காகக் கொண்டுவரப்பட்ட வாடகைக் கொலையாளி, தான் தம்புரானின் பழம் நட்புப் பாடகர் ஒருவரின் தொடர்ச்சி என உணர்த்தும் situation.
//இந்த ராகம். நாட்டையா அல்லது தைவதத்தை தவறவிட்ட வடக்கத்தியர்களின் ஜோக் ராகமா என்ற குழப்பமும், மயக்கமும்//
semi classical என்றுதான் குறிப்பு இருக்கிறது.
இருந்தும் சலநாட்டையில் அமரத் தவிக்கும் புனைவில், எரிதழல் எஃகிறகின் அடிகள் அபாரம்! நன்றி.
Nice.,
இந்தக் கொடுமைக்குத்தான் ரூபமில்லாத இசை உயர்வாக இருக்கிறது ராகவன்.
இன்னிதா என்கிற சரணத்தின் உச்ச ஸ்தாயியில் மோஹன்லால் பரிதாபமாகக் கோட்டைவிடுவதைப் பார்க்கும்போது இது உறுதியாகிறது.
ரசனை ராகவன் ..குட்...
இசை பற்றி அவ்வளவாக ஒன்றும் தெரியாவிட்டாலும் ஏதோ ஒன்று எழுத்துக் கொண்டே இருக்கிறது கண் மூடிக் கேட்கும்பொழுது.
//இசையை அருந்தி உயிர் வாழ்கின்றன சாதகபட்சிகள் என்று யாராவது சொன்னால், சத்தியமென நம்புகிறேன்//
உண்மை.
siruvan nan enna solla.. nandri endra onrai thavirthu ... kodi nandrigal anna pakirnthathuku :)
Nice post and good samarppanam for poet Rajasundararajan sir. Highly deserved.
இசையால் வசம் ஆகா இதயம் எது?
//இசையால் வசம் ஆகா இதயம் எது?//
அதானே... அருமையான இலக்கிய எழுத்தில் இசைப் பகிர்வு அண்ணா.
அன்பு நண்பர்கள்,
சுந்தர்ஜி,
அண்ணன் ராஜசுந்தரராஜன்,
முரளிக்குமார்,
வேடந்தாங்கல்,
மணிஜீ,
இளங்கோ,
இராமசாமி கண்ணன்,
சேது,
குமார்,
சி.பி.செந்தில்குமார் (முதல்முறையாக என் வலைப்பக்கத்திற்கு வந்ததற்கு அன்பும், நன்றிகளும்)
நான் முகப்பிலேயே சொன்னது போல, ராஜசுந்தரராஜன் அண்ணன் சொன்னதன் பேரில் இதை எழுதினேன். திருப்தியாயில்லை இந்தப் பதிவு என்று தோன்றுகிறது. ராஜசுந்தரராஜன் அண்ணனுக்கு என் பிரத்யேக அன்பும் நன்றிகளும்
சுந்தர்ஜியின் அன்பு அலாதியானது. மேலும் மேலும் இறுகிக் கொண்டே வருகிறது இந்த நட்பு.
முரளிக்கும் என் வந்தனங்கள்... என்னை பிறருக்கும் அறிமுகப்படுத்தும், பேரன்பாளன்.
ஏனைய அணைவருக்கும் என் அன்பும் நன்றிகளும்.
ராகவன்
கேபிள் -> ராஜ சுந்தர்ராஜன் வழியாக வந்தேன். சில விஷயங்கள் சொல்லத் தோன்றியது:
1 ராகம் ஜோக் என்றுதான் தோன்றுகிறது. மோகன்லால் வடநாட்டில் வாழ்ந்தவன், தம்புரானுக்கும் மோகன்லாலுக்குமான தொடர்புப் பாடகர் ஹிந்துஸ்தானி விற்பன்னர் என்பதற்கான குறிப்பும் படத்தில் இருந்ததாக ஞாபகம். அதனால், இது வடநாட்டு ஜோக் ஆக இருக்க வாய்ப்புகள் அதிகம்.
2 எழுதியது நிச்சயமாக கைதப்புரம் தாமோதரன் நம்பூதிரி. இந்த படத்தில் நடித்தும் இருந்தார்.
3 இந்த பாடலுக்காக யேசுதாசுக்கு தேசிய விருது கொடுக்கப் படவில்லை. மாறாக இதே படத்தில் பாடிய M B ஸ்ரீகுமாருக்கு கொடுக்கப் பட்டது (கானடா ராகப் பாடலான 'நாத ரூபிணி')
Post a Comment