Wednesday, December 30, 2009

மாயாழிகள்...

இரவு தின்று
மிச்சமான
விளக்கு வெளிச்சம்
போதுமானதாய்
இருக்கிறது...

நீ படுத்திருக்கும்
திசையில் வாகாய்
காலை நீட்டி
உன் கொலுசை
கிளுக்கி எழுப்ப

கொஞ்சம்
சுவரதெரிப்பில்
புரண்டு படுக்கிறாய்
உன் கனவின்
துளையில் நுழைவதற்கு
தோதாய்

கைகளை மட்டும்
அனுப்பி
உன் உடம்பில்
பரத்தியிருக்கும்
வெப்ப பூக்களை
பறிக்கிறேன்
சில அமிலத்துளிகள்
தரையில் சிந்தி
கொப்பளிக்கிறது

மேசைக்காற்றாடி
மகுடிக்க
ஆடிய முடிக்கற்றைகள்
கருத்த நாகங்களுக்கு
ஒப்பாய்
உடலெங்கும் தீண்டி
உயிர் ஒழுக
பொத்தலாக்குகிறது

ஒவ்வொரு
பொத்தல்களில் இருந்தும்
வடிந்த உயிர்த்துளிகளில்
மிதந்து கரையேருகிறது

இரண்டு
புகைக்ச்சிற்பங்களுடன்
ஒரு
பெயரறியாப்படகு

5 comments:

காமராஜ் said...

ராகவன்,
அப்படியே கதகதப்பைக் கூட்டுகிறது.

அப்துல் ரகுமானின் வரிசையில் வைகறைச்சாவி எனும் கவிதை ஒன்னு இருக்கு.
இதை நானும் மாதுவும்
பல நாட்கள் பேசிக்கடந்திருக்கிறோம்.
அதை விடவும் உக்கிரமனது இந்தக்கவிதை.
'கை நீட்டி வெப்பம் பறிக்கிற'
பதம்- உவமை ரொம்ப ரொம்பக் கிலேசமானதும் கவிதையானதும் ராகவனின் கைங்கர்யம்.
அழகு ராகவன்.
அழகு.

காமராஜ் said...

மறந்து போனேன். வார்ப்புரு அழகு.

உயிரோடை said...

க‌விதை ந‌ல்லா இருக்கு இதை ப‌த்தி நிறைய‌ எழுத‌லாம் நேர‌ குறைவு. அழ‌கான‌ மொழி வ‌ச‌ப்ப‌ட்டிருக்கின்ற‌து.

S.A. நவாஸுதீன் said...

////கைகளை மட்டும்
அனுப்பி
உன் உடம்பில்
பரத்தியிருக்கும்
வெப்ப பூக்களை
பறிக்கிறேன்
சில அமிலத்துளிகள்
தரையில் சிந்தி
கொப்பளிக்கிறது///

என்ன மொழியாடல் ராகவன்!!!. வியந்து நிற்கிறேன்.

மாதவராஜ் said...

இந்த வெப்பத்தை எவ்வளவு அழகாய்ச் சொல்ல முடிகிறது! சிலாகித்து சிலாகித்துப் போகிறேன். சிலிர்த்தும் போகிறேன். கவிதை எவ்வளவு அற்புதமானது பாருங்களேன். உன்மத்தமும், பித்தமும் தலைக்கேறுகிறது.