Wednesday, December 30, 2009

தனிமை சமன்பாட்டில்..

தொலை தூர பயணங்களின்
இருக்கைகளில் தனிமை
கால் பரப்பி உட்கார்ந்திருக்கிறது...

இடையில் ஏறியவர்கள்
இருக்கைகளை ஆக்கிரமிக்கிறார்கள்
அது இப்போது
ஒடுங்கிக் கொண்டு
உட்கார்ந்திருக்கிறது
மழையில் நனைந்த
பாதையோர சிறுமி மாதிரி

தன் இடத்தை யாருக்கும்
தராமல் என்னை கொட்டக் கொட்ட
பார்த்து கொண்டிருக்கிறது
ஒரு ஒற்றை விண்மீனாய்..

எந்த இடத்தில் இறங்கும்
அது தெரியவில்லை
 பயண தூரத்தை அது
நீட்டிக் கொண்டே இருக்கிறது

விரட்ட எத்தனிக்கையில்
சுற்றி சுற்றி வந்து 
போக்கு காட்டுகிறது...

பள்ளி நிறுத்தத்தில் ஏறிய
குழந்தையின் புத்தகப்பொதியின்
கணத்தில் இருக்கை நிறைந்தது

தனிமை, பயண ஜன்னலில்
இருந்து குதித்து
தற்கொலை செய்து கொண்டது...

ஒரு கவிதையை பிரசவித்து...

10 comments:

Gowripriya said...

அழகு..:)

அம்பிகா said...

உங்களைப் போல, அழகாய், விவரிப்புகளுடன் பின்னூட்டமிடத் தெரியவில்லை ராகவன்.
கவிதை ரொம்ப அழகாஇருக்கு.

S.A. நவாஸுதீன் said...

///தனிமை, பயண ஜன்னலில்
இருந்து குதித்து
தற்கொலை செய்து கொண்டது...

ஒரு கவிதையை பிரசவித்து...///

ரொம்ப நல்லா இருக்கு ராகவன்.

கருவை பாலாஜி said...

பயணத் தனிமையை அழகாக உணர்த்தியது கவிதை. பயணம் தொடரட்டும்..

மாதவராஜ் said...

ரொம்பநாள் கழித்து இந்தப் பக்கம் வரமுடிந்திருக்கிறது. எந்த இடைவெளியுமின்றி உங்களைத் தொடர்வது போல மிகுந்த சினேகத்துடன் எழுத்துக்கள் ஒட்டிக்கொள்கின்றன. நல்லா வந்திருக்கு. இன்னும் விரிந்திருக்க வேண்டிய கவிதை. கடைசி வரி தேவையில்லையோ....

ராகவன் said...

அன்பு நிறை கௌரிப்பிரியா,

உங்களின் கவிதை படித்தேன் உயிரோசையில், அழகாய் இருந்தது. வாய்க்கிறது உங்களுக்கு கவிதை.

உங்கள் தொடர்வருகைக்கு நன்றியும் அன்பும்

ராகவன்

ராகவன் said...

அன்பு அம்பிகா,

கம்பன் வீட்டு....

உங்கள் அன்புக்கு பதிலாய் மனம் குவித்து நன்றியும் அன்பும்.

தொடருங்கள் உங்கள் வருகையை!

அன்புடன்
ராகவன்

ராகவன் said...

அன்பு நவாஸ்,

மிகப்பெரிய அறிமுகம் எனக்கு நீங்கள் பாராவிடம் இருந்து. நல்ல புத்தகங்கள் மாதிரி ஒவ்வொரு பக்கத்திலும் வாசமும், வாழ்க்கையுமாய். எத்தனை பெரிய மனசு வேனும் நவாஸ், தொடர்ந்து என் கிறுக்கல்களை படித்து ஊக்கப்படுத்தி வருகிறீர்கள். நான் பதில் போடாமல் இருந்தாலும். உங்களையும் குரலில் அடையாளம் காண வேண்டும் நவாஸ். உங்கள் சம்பாஷனைகளை, நேசமித்ரனின் பக்கத்திலும், பாராவின் பக்கத்திலும் படித்து படித்து இந்த ஆளு நம்ம எழுதறதையும் படிச்சுட்டு எழுதுறாரேன்னு ஆச்சரியம், சித்ரகதை படிப்பவர்கள் ஆண்டன் செகாவ் படிப்பதில்லையா என்ன?

உங்கள் கவிதைப்பக்கம் படித்தேன்... என்ன எழுதறதுக்கு பயமாய் இருக்கு நவாஸ்!

உதறலுடன்

அன்பும், நன்றியும்,
ராகவன்

ராகவன் said...

அன்பு பாலாஜி,

அன்பும் நன்றியும், தொடர்கிறாய்...

பாக்கலாம் எவ்வளவு நாளைக்குன்னு!

ராகவன்

ராகவன் said...

அன்பு மாதவராஜ்,

கடைசி வரியைச் சொன்னாலாவது யாராவது கவிதை தான் போலன்னு நம்ப மாட்டாங்களான்னு தான்.

மீண்டும் என் வனத்தில் மழை, நனையாமல் வேடிக்கைப் பார்க்கத் தான் தோன்றுகிறது. சூல் மேகங்கள் நகர்கிறது என்னையும் நோக்கி, ஒதுங்கியிருந்த தாழ்வாரத்திலும் எனக்காக கொஞ்சம் பெய்து விட்டு...

அன்பும் நன்றியும்
ராகவன்