Monday, March 08, 2010

ப்ரியமனுஷிகள்...

உறவுகள் தடாரென்று துளிர்க்கிறது... நேற்று பார்க்கும் போது இந்த மலர் இல்லை, இந்த துளிர் இல்லை இன்னும் எத்தனையோ இல்லைகள்... நாளை மற்றொரு நாளே என்று எப்படி சொல்ல முடியும்...? எல்லாமே புதுசாய் மாறும் போது... தார் ரோட்டில் படம் போடுபவன் மனதுக்குள் வியாபித்திருக்கும் வர்ண கலவைகளில் படர்ந்து பரவும் ஓவியம் அது, எப்படியோ இழைத்து, வளித்து, பொடித்து, அசக்கி கொண்டு தந்து விடுகிறான் ஓவியத்தை அதன் தன்மை மாறாது ... ஒவ்வொரு சமய இடைவெளியிலும் புதியதாய் ஒன்று உருவெடுத்திருக்கும், அவன் வரைவதில். எல்லோர் கைகளிலும் இருக்கிறது காலம் விட்டு சென்ற வர்ணப் பொடிகள் மெனக்கேட்டோ அல்லது அதுவாகவோ வழிந்து விழும், விழுந்த இடத்தை இயன்ற அளவு மாற்றி வேறு வர்ணத்தை கொடுத்திருக்கும், அது போல தான் எனக்கு காலத்தை மீறி உறவுகள் புதுபுது வர்ணங்களில் இந்திர தனுசாய்.

இந்த அன்பும், பிரியமும், நட்பும் உள்ள எல்லா உறவுகளும் இப்படித் தான் போல. ஒரு யீஸ்ட் போல தன்னை பிளந்து பிளந்து புதிய உறவை பரிமளிக்கிறது. வலைப்பக்கங்களின் அன்பில் விளைந்த ஒரு நட்பு காமராஜ்... காமராஜின் பதிவுகளுக்கு பின்னூட்டம் போட, மாதவராஜ் உள்ளே புக... பின்னூட்டங்களில் வளர்ந்தது ஒரு நட்பு. காமராஜின் பின்னூட்டத்தில் என் பின்னூட்டத்தை படித்து ராகவன் எங்கே இருந்தீர்கள் இத்தனை நாள் உங்கள் கைய பிடிச்சிக்க தோணுதுன்னு சொன்ன ஒரு மனுஷனை அடையாளபடுத்தியது கருவேலநிழல். பின்னூட்டங்கள் பின்னிய வலையில் மாட்டிக்கொண்டோம் பரஸ்பரம், பின்னூட்டங்கள் நிர்மாணித்த கம்பிகள் வழி குரல் தொடர்பும் தொடர்ந்து, உறவுகளின் மற்றொரு பரிணாமம் இயல்பாய் வளர்ந்தது. பிள்ளைக்கலி ன்னு ஒரு கவிதை எழுதப்போக, . மஹா நம்ம மகள் ராகவன்னு சொன்ன போது... இது ஒருவிதமான தேறுதலுக்கான வார்த்தைகள் என்று மட்டுமே நினைத்தேன். அது இல்லை என்பது இப்போதைய நிதர்சனம்.

ஒரு நாள் பாரா பேசும் போது, மகாகிட்ட உங்க நம்பரும், மெயில் ஐடியும் கொடுத்திருக்கேன் பேசுவா என்றார். நானும் அப்போதைக்கு அதை கேட்டு அப்புறம் மறந்து விட்டேன். ஒரு வேலைப்பளு அழுத்தும் நாளில் அழைத்தாள் மகா, என்னால் சரியாக பேசமுடியவில்லை அதிலும் அவள் அப்பா என்று அழைத்த போது அபத்தமாக என்னை சித்தப்பா என்று கூப்பிடு எனக்கு அப்பா வயசு வரலை என்று சொல்லி விட்டேன், அது அவளை பாதித்தது என்று பின்னாளில் தெரிந்து கொண்டேன்... அதன் பிறகு அவளிடம் இருந்து எந்த தகவலும் இல்லை. எனக்கு தயக்கமாக இருந்தது... ராஜாராமை வைத்த இடத்தில் நாம் எங்கு இருக்க போகிறோம் என்று தோன்றியது... பிறகு ஒரு நாள் நானே அவளிடம் பேசினேன்... அங்கு தொடங்கியது ஒரு அழகான நட்பு கத்திரிப்பூ மாதிரி... உலகத்தின் அத்தனை விஷயங்களும் பேசினோம்... வார்த்தைக்கு வார்த்தை அப்பா அப்பா என்று உருகுவாள்... நானும் தகப்பனாய் மாறி நிறைய விஷயங்கள் சொல்லி கொடுக்கிறேன் அவளுக்கு, அவளும் எனக்கு சொல்லி கொடுக்கிறாள்.

கடகடவென்று வளர்ந்தேன் எனக்குள், அவளுக்குள் எங்கள் உறவுக்குள்... அதற்குள் அவர்கள் வீட்டு ஆட்களிடம் அறிமுகமானேன்... முகம் தெரியாமலே எல்லோரும் எனக்கு உறவாய் போனார்கள்... அவள் சென்னையில் இருந்து அவளுடைய பெரிய தாத்தா இறந்ததற்காக போயிருந்தாள், ஜோதில்பட்டிக்கு... பாரா ஒரு முறை புரைக்கேறிய மனிதர்களில் என்னைப் பற்றி எழுதும் போது காந்தி பெரியமாவுடன் ஒப்பிட்டிருப்பார்... அதை மகா காந்தி பெரியமாவிடம் சொல்ல, கணவனை இழந்து ரெண்டு நாட்களே ஆன காந்தி பெரியம்மா என்னிடம் பேசினார்... மகா போனில் அழைத்து கொடுக்க... பேசினார் காந்தி பெரியம்மா...

ஒரு மூன்று நிமிடங்கள் மாத்திரமே... பேசிய வார்த்தைகளை ஓர் சின்ன துண்டு காகிதத்தில் எழுதி விடலாம்... ஆனால் அதில் பெருகிய அன்பு, பிரியம் எதிலும் அடங்காது... குரலில் என்னுடன் பேசும் சந்தோசம், கருணை, பிரார்த்தனை, வாழ்த்து எல்லாம் இருந்தது... எனக்கு பேச்சே வரவில்லை... சந்தோசம்மா என்பதைத தவிர...
கணவர் இறந்ததை சொல்லிவிட்டு, எனக்கு எல்லாம் கிடைத்தது, திருப்தியான வாழ்க்கை வாழ்ந்தேன், எனக்கு வாழ்க்கையில எல்லா சம்பத்துக்களும் கிடைச்சது... என்ற பிரகடனம் எல்லாவற்றையும் சொல்ல முடிந்தது அவர்களால் ஒரு சில நிமிடங்களில்... பாரா என்னை ஏன் காந்தி பெரியம்மாவிடம் ஒப்பிட்டார் என்று தெரியவில்லை... அவர்கள் அன்பின் வழி எனக்கு தெரியாத பாதை, தூரத்தில் இருந்து போகலாமா, வேண்டாமா என்று யோசிக்கும் நிலை என்னுடையது... வாழ்க்கையை வாழ்ந்தவளின் வாக்கு எனக்கு வரப்பிரசாதம். பாராவுக்கு ஒரு மிகப்பெரிய நன்றி!

குலம் தரும் செல்வந்தந்திடும்... நிலம் தரம் செயும், நீள் விசும்பு அருளும் உங்களுக்கு பாரா...

தெரிஞ்சோ தெரியாமலோ, நூறு முறை பதிவு செய்தாயிற்று ஒரே விஷயத்தை... நூறு முறையும் படித்து என்னை வலுவாக்கிய என் நண்பர்கள் அனைவருக்கும் வந்தனங்கள்...  குறிப்பாய் என் பிரிய காமராஜ், என் ஆசான் மாதவராஜ் மற்றும் என் சகோ பாராவிற்கும் என் அன்பும், பிரியத்தின் பெயர் சொல்லும் மனோரஞ்சித பூக்களும்...

10 comments:

மாதவராஜ் said...

ராகவன்!
பதிவைத் திரும்ப திரும்ப படித்துக்கொண்டு இருக்கிறேன் பைத்தியக்காரன் போல. கடற்கரை மணலில் அளையும் ஒரு குழந்தையின் கைகளாய் என் கண்கள் இப்போது. மகாவுடன் நிங்கள் பேசியது, காந்தி பெரியம்மாவுடன் சில வார்த்தைகள் பேசியது எல்லாம் அற்புத கணங்களாய் விரிந்து கொண்டே இருக்கின்றன...
பா.ராவையும், உங்களையும் ஒருசேர பார்க்கணும்.

உயிரோடை said...

இந்த‌ ப்ரிய‌ம‌னுஷிக‌ள் ப‌ட்டியலில் கொஞ்ச‌ம் ஓர‌மாக‌ என‌க்கு இட‌ம் வையுங்க‌ள். அன்பு பாச‌ம் நிறைய‌ தேவைப‌டுகிற‌து.

காமராஜ் said...

இந்த வலை கன்னுக்குத்
தெரியாத வேர்களை நீளச்செய்து.
மேல்பரப்பிலுள்ள எல்லைகளைத் தாண்டுகிறது.
எழுத்துக்கள் கணத்து
கண்களில் தடயம் செய்கிறது.

நல்லாருங்க.

Balakumar Vijayaraman said...

மகிழ்வாக இருக்கிறது. :)

அண்ணாமலையான் said...

நல்ல அழுத்தமான பதிவு.... வாழ்த்துக்கள்.

Kumky said...

அன்பின் ராகவன்.,

பேச்சில் சொல்லவியாலாததை எழுத்திலும், எழுத்துக்கள் தடுமாறும் ஒருசிலதை பேச்சிலும் சொல்லி,எழுதி சென்றாலுமே..காலம் பூராவும் மனதுக்குள் வைத்து பூரிக்கும்படியான அன்பை கிடைக்கப்பெற்றிருக்கிறீர்கள்..
தகுதியானவர்களுக்கு தகுதியான எல்லாமும் கிடைக்கத்தான் செய்கிறது ராகவன்..

என்ன நமது கைகளை.,
பதவி அந்தஸ்து சொத்து சுகம் ஊர் உலகம் சுயம் எல்லாவற்றையும் தாண்டி கொஞ்சம் அகலமாக விரித்து வைக்கவேண்டியதிருக்கிறது..


வார்த்தைகளின் வழி உங்களுக்கான அன்பை உணர்வுபூர்வமாக உனர்கின்றேன் ராகவன்..

எதை கொடுக்கின்றீர்களோ அதை அளவு கடந்து திரும்ப பெறுகின்றீர்கள்

எனறும் எனது தோழமைகள்..

ஈரோடு கதிர் said...

மிக அழகான ஆழமான இடுகை... அதுவும் நூறாவது இடுகையாக...

காமராஜ், மாதவராஜ், பாரா... பிரியமாய் வாசிக்க விரும்பும் நண்பர்கள்

அடுத்த முறை பெங்களுரூ வரும் போது முன் கூட்டியே அழைத்துவிட்டு உங்களைச் சந்திக்க முயற்சி செய்கிறேன்

ஈரோடு கதிர் said...

அன்பான வாழ்த்துகள் ராகவன்...

அம்பிகா said...

ராகவன்,

நூறாவது இடுகைக்கு வாழ்த்துக்கள்.
அற்புதமான உறவுகளின் உன்னதத்தை உணர்த்தும் அருமையான இடுகை.

\\கும்க்கி said...
எதை கொடுக்கின்றீர்களோ அதை அளவு கடந்து திரும்ப பெறுகின்றீர்கள்\\

உண்மைதான். நீங்கள், பா.ரா.
எல்லாம் அதைத்தான் சாதித்திருக்கிறீர்கள்.

உங்கள் எழுத்தில் நாங்களும் ப்ரிய மனுஷிகளை நெருக்கமாக உணர்கின்றோம். ப்ரிய மனுஷிகளை அறிமுகம் செய்வித்ததற்கு நன்றிகள் ராகவன்.

பா.ராஜாராம் said...

ராகவன்,

உங்கள் விரல் பற்றிய அன்றே நீங்கள் நான்தான்.அல்லது நான்தான் நீங்கள்!

எனக்கும் சேர்த்து அப்பா பார்த்தது அதிகம் ராகவன்.குழந்தைகளின் சந்தோசம் உட்பட.

ஆக,

மகாவிற்கு மட்டுமில்லை மக்கா.எனக்கும் அப்பா நீங்கதான்.

போக,

வரட்டும் வாங்க.பிறக்கவா போறோம் இனிமேல்? :-)