Sunday, March 28, 2010

கூத்தன்...

கையில் இருந்து
கசிகின்ற ரத்தத்தில்
பெருகி நிறைகிறது
காம்போதி!
உயிர்க்கூடு நொறுங்கும்
பேரோலம்

அழுத்தும்  கனத்தில்
தெறித்த சுவரங்கள்
கழுத்து நாகமாய் இறுக்க
மூச்சு திணறி 
முகிழ்ச்சி உதறி
கரம் பற்றி எழுந்தவன் 
இழுத்தான்
பிழைத்தான் பெருபிழை

அறுந்த இழைகளில்
வாசிக்காத விரக இசை
வினைபபயன்

சொல்வதைச் 
சொல்லாமல் சொல்லி
தோற்றத்தில் உணர்த்தி
சொல்லாமல் விட
ஏதுமில்லை அம்பலத்தில்

பகுத்தறியா வாசனை
பிடரி மயிர்
பிறவிக் கடல்
கிறங்கி விழுந்தான்
பற்றற்ற பற்றில்
மறுபடியும்

கல்யானைக்கு
கரும்பையும்
பிரியாவிடைக்கு 
இடமும்(பாகம்)
கொடுத்து

முகமற்று கிடக்கும்
அர்த்தநாரி
மறுபடி செத்துபோனான்
திரிபுரம் எரித்து!

17 comments:

ரிஷபன் said...

சொல்வதைச்
சொல்லாமல் சொல்லி
தோற்றத்தில் உணர்த்தி
சொல்லாமல் விட
ஏதுமில்லை அம்பலத்தில்
கூத்தனின் திருவிளையாடலோ?!

பத்மா said...

முதலில் படம் கொள்ளை அழகு ராகவன் .
காம்போதி பித்தனை பித்தாக்கிய ராகம்
கவிதையாகி பிச்சியாக்குகிறது என்னை

கிறங்கி விழுந்தான்
பற்றற்ற பற்றில்
மறுபடியும்

அவன் கிறங்க கிறங்க பிரபஞ்சமும் கிறங்குமா ?
பற்றற்ற பற்று என்ன ஒரு அழகு வார்த்தை பிரயோகம்

மதுரை சரவணன் said...

அருமை. வாழ்த்துக்கள்

நேசமித்ரன் said...

அன்பின் ராகவன்

இப்படித்தான் ஆகிபோகிறது கவிஞனுக்கும் அல்லது கவிதைக்கும்

பெருகித் தீராத இடை வெளிகள் அல்லது இறுகிக் கல்லாகும் சொல்முறை

கோபித்துக் கொள்ளாவிட்டால் ஒரு விஷயம்

விரகம் என்ற சொல் மீண்டும் மீண்டும் பயனுறுகிறதே உங்கள் கவிதைகளில் ஒரு texture போல...
காரணம் எதுவும் உண்டா பிரத்தியேகமாக ?

நாகம் என்ற குறியீடும் ...

இந்தக் கவிதையின் கட்டமைப்பு குறித்தும் உள்ளீடு குறித்தும் பேச இருக்கிறது கொஞ்சம்

//முகமற்று கிடக்கும்
அர்த்தநாரி//

பாதிப் பெண் கொண்டவன் முகமற்றுப் போகிறான் ?

வாசிக்காத விரக இசை என்பது இழுத்தான் பிழைத்தான் என்பதற்கு முரண் இல்லையா ?

:)

ராகவன் said...

அன்பு ரிஷபன்,

அன்புக்கு நன்றி ரிஷபன். சில கேள்விகளை அப்படியே கொண்டு வந்ததால், இதில் நேசமித்ரன் கூறியது போல இடைவெளி இருக்கலாம் தான். திருவிளையாடலா என்றால் இருக்கலாம்... தட்சினாமூர்த்தி பற்றிய கேள்வி தான் இது.

அன்புடன்
ராகவன்

ராகவன் said...

அன்பு பத்மா,

நன்றிகள் பத்மா...

படம் எனக்கும் ரொம்ப பிடித்தது. இதில் தட்சினாமூர்த்தி போல தோற்றத்தில் தான் உணர்த்த முயன்றிருக்கிறேன்.

சில இடைவெளிகள் பல பொருள்களை தரும் என்பதால் இடைவெளிகள் வேண்டும் என்றே விட்டேன்.

அன்புக்கு பதிலாய் அன்பு.

ராகவன்

ராகவன் said...

அன்பு சரவணன்,

உங்கள் தொடர் வாசிப்புக்கும், அன்புக்கும் நன்றிகள் பல...

அன்புடன்
ராகவன்

ராகவன் said...

அன்பு நேசன்,

உங்களின் கருத்து எனக்கும் உண்டு...

விரகமும், நாகமும் டெக்ஸ்சர் போல திரும்ப திரும்ப வருகிறது. நமது மித்தாலஜியில் இல்லாத விரகமும், அதன் குறியீடான நாகமும் விரவிக் கிடக்கிறது. அதுவும் சிவனை பற்றி பேச எத்தனிக்கையில், காமமும், நாகமும் தவிர்க்க முடியாமல் சொல்ல வேண்டியிருக்கிறது.

நீங்கள் சொல்வது போல் இடைவெளி இருக்கிறது, தொடர் கண்ணிகளாய் வேண்டாம் என்று இடைவெளி மெனக்கெட்டு விட்டது.

கவிதையின் கட்டமைப்பு பற்றி நீங்கள் பேசவில்லை நேசன், மிக தயக்கமாய் உங்கள் விமர்சனங்களை வைக்கிறீர்கள்,அது வேண்டாம் என்று தோன்றுகிறது. நான் எப்போதும் பூரணக்கவிஞன் கிடையாது, சில முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கிறேன்.

உங்களின் தயக்கமில்லா விமர்சனங்கள், என்னை புடம் போட உதவுமே தவிர, நான் கோவித்துக் கொள்வேன் எப்படி நீங்கள் நினைத்துக் கொள்ளலாம்.

பாதி பெண் முகம் கொண்டவன் முகமற்று போவதில்லையா, நேசன்?

வாசிக்காத விரக இசை மற்றும் இழுத்தான், பிழைத்தான் பெருபிழை எப்படி முரண் என்கிறீர்கள் என்று எனக்கு புரியவில்லை நேசன், விளக்குங்களேன்.

அன்புக்கு ஆயிரம் நன்றிகள்

அன்புடன்
ராகவன்

Ashok D said...

நெய்தல் சிறப்பு
தாள அசைவுகளோடு :)
அருமை

அம்பிகா said...

கவிதையும்,
கவிதைக்கு பொருள் சேர்க்கும் பத்மாவின் பின்னூட்டமும் சிறப்பு.

க ரா said...

அருமை ராகவன்.

நேசமித்ரன் said...

பாதிப்பெண் என்பது ஒரு வடிவ வரைமுறை. பிறகு அது அழிக்கப் பெறுகிறதா ?

காமம் பிழை அதுவும் பெரும் பிழை எனில் அர்த்த நாரித்தத்துவம் (நரன் - நாரி)பொய்த்துப் போகாதா ?

இயற்கைக்கு இது ஏற்புடையது இல்லை எனில் இரண்டொரு உறுப்புகளை கழித்தே படைத்திருக்கும் என்கிறான் சமகாலக் கவிஞன் ஒருவன்

காமாட்சி காமதேனு நாத விந்து கலாதி யாவும் சுடுகாட்டு கபால மாலையின் தூர்ந்த கண்களை இட்டு நிரப்பும் சொற்களா ?

கூடல் கூத்தனின் பொருட்டு உண்டு உயிர்த்து
உற்றுணரும் துய்ப்பை புறந்தள்ளுகிறதா ?

இல்லை யெனில் வாசிக்காத விரகத்தின் பின் பிழைத்தான் என்பது .....? தவிப்பு குற்றமா இல்லை அதை மீறுதல் குற்றமா ?

நீங்கள் தான் சொல்ல வேண்டும்

:)

ராகவன் said...

அன்பு நேசமித்திரன்,

உங்கள் அன்புக்கு நன்றிகள் பல...

திரும்பவும் இந்த கவிதையை படித்து பாருங்கள்... உங்கள் பின்னூட்டங்களையும் ஒரு முறை எனக்காக படியுங்கள் நேசன். நான் சொல்ல வந்த கதைகளை எல்லோருக்கும் புரிகிற மாதிரி எழுதாது என் தவறு அல்லது அதிகப்ரசங்கித்தனம் என்று நினைக்கிறேன்...

உங்கள் கவனத்தை கவர்ந்ததே இந்த கவிதைக்கு வெற்றி தானே நேசன்... நான் மறுபடியும் படித்து பார்க்கிறேன்... இடைவெளிகள் இருப்பது உண்மை தான் வேண்டுமென்றே எடிட் செய்யவில்லை நான்... மிகப்பெரிய விஷயங்களை ஏதும் நான் சொல்ல முற்படவில்லை இதில்... எங்காவது உங்களுக்கு இலங்கேஸ்வரன் தெரிகிறான... தக்ஷினாமூர்த்தி, மேரு மலை, அமிர்தகலசம், மோகினி(விஷ்ணு...?) சிவனின் பள்ளியறை, மயன் இதெல்லாம் தெரியவில்லை என்றாள் அது என் தவறு மாத்திரமே... நான் எழுதும் போது இதை தான் நினைத்து கொண்டு எழுதினேன்... சில சமயம் இது போல நேர்ந்து விடுகிறது நேசன்... ஜென் தத்துவத்தை தக்ஷினாமூர்த்தி தன் தோற்றத்தில் உணர்த்தியது மிகப்பெரிய தேவஉரையாடலாய் இருந்தது... எனக்கு.. திருவிலயடர்புரானத்தில் இருந்து சிலவற்றை தொட்டு காட்டியது தான் அரைவேக்காட்டுத்தனம் என்று நினைக்கிறேன்... தொடர்கிறேன் நேசன் என்னை மெருகேற்றிக் கொள்ள உங்கள் உள்ளீடுகளை கொண்டு.

அன்புடன்
ராகவன்

காமராஜ் said...

ராகவன் படித்தேன். ரசித்தேன்.இன்னும் கூச்சத்துடன் கூடத்திலேயே நிற்கிறேன்.தோழர் பத்மா ரசித்ததை விட குறைவாகவே ரசிக்க முடிந்தது. ஒரே காரணம் எனக்கு திருவிளையாடற்புராணம் அதிகம் பரிச்சயமில்லை.
சிலை நுட்பம் தெரியாமல் சிலை ரசிப்பவன்.சிலை அழகு. நேசன்-ராகவன் உரையாடல் கொஞ்சம் கவிதை உணர்த்துகிறது.நன்றி
நேசன்.

குட்டிப்பையா|Kutipaiya said...

அருமை..

தீபிகா சரவணன் said...

தமது இணையதளத்தினை அனைவருக்கும் அறிமுகப்படுத்தும் விதமாகவும் வலைப்பதிவாளர்களை ஊக்குவிக்கும் முகமாகவும் போட்டியொன்று நடாத்த திட்டமிட்டு உள்ளது. போட்டியில் வெற்றிபெறும் 10 பதிவர்களுக்கு 25 GB's of Space மற்றும் 1 Domain Name இலவசமாக வழங்கப்படும். மேலதிக விபரங்களுக்கு

http://www.tamilarkalblogs.com/page.php?page=அன்னௌன்செமென்ட் இந்த இணைப்பினை பார்க்கவும்.

நேசமித்ரன் said...

அன்பின் ராகவன்

உங்கள் சொற்களில் என் வாசிப்பு அறியத் தருவது
மீண்டும் கட்டமைப்பின் மீதான நிறைவின்மையே...

உள்ளீடு என்பது முற்றுமாய் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை ஆனால் வரலற்றுப்புனைவுகள் புராணங்களில் இருந்து பாத்திரங்களை நிகழ்வுகளை எடுத்தாளுகையில் சிறிதளவு வேர் பின் மண் போல
அவற்றி சாரத்தையும் தொட்டு எழுதுவது உசிதம்
வெறும் குறியீடாக மட்டும் பயன்படுத்துவதாக இருந்தால் செய்திகளை விரித்து இவற்றை பாயாசத்தில் உலர் திராட்சைகளை போல் பயன் படுத்தலாம்

இரண்டு வேறு புராணங்களை சரியாக சொன்னால் யுகங்களை கையாளுகையில் அவதாரங்களின் குணாதிசயங்களை மாண்பை வைத்துபேசுவது சிற்றிவுக்கு எட்டவில்லை :)

இன்னும் கொஞ்சம் பேசி இருக்கலாம் போல ...

மிக்க மகிழ்வு இந்த இடத்தில் பேசுவதற்கான உரிமை பெற்றமைக்கு
ராகவன் :)

நன்றி