Saturday, October 23, 2010

இசையில் தொடங்குதம்மா....

லம்போதர லகுமிகரா...ன்னு இசை ஆர்வம் நுழையவில்லை எனக்குள். என்னுடைய இசை ஆர்வத்தின் முதல்படி அம்மா அப்புறம் அப்பா என்று தைரியமாக சொல்லலாம்.   திருப்புகழும், கந்தர் அனுபூதியும், சஷ்டியும் தான் முதலில் ராகம் போட்டு பாட கற்றுக் கொண்டேன் அம்மாவின் தயவில்.  அம்மா ஒரு தீவிர முருக பக்தை, அப்பா ஒரு பழுத்த வைணவர், ஆனால் அப்பாவிற்கு பிரபந்தங்கள் பாராயணமாய் தெரிந்தாலும்,  ராகம் போட்டு பாடத்தெரியாது.  அதனாலேயே எனக்கு முதலில் முருகனிடம் தான் மிகுந்த பக்தி... முருகன் அருணகிரி நாக்கில் வேலால் எழுதியது போல எனக்கும் எழுத வேண்டும் என்று நாக்கை நீட்டி கொண்டே திரிந்திருக்கிறேன் அனேக காலங்களில்.   என் மூளைக்குள் படிந்த இசை அடுக்குகளில் செருகி இருந்ததெல்லாம் சூலமங்கலம் சகோதரிகள் மற்றும் டி.எம்.எஸ். தான்.  திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்... என்ற பாட்டை கேட்டதில் இருந்து எனக்கு முருகன் சிரிப்பது போலவே இருக்கும்... கொண்டையா ராஜூவின் கைவண்ணத்தில் சிரிக்கும் முருகனின் புராதனம் கலந்த அழகு ஒரு பச்சைய வாசனையை பரப்பும் பூஜை அறை எங்கும்.  

துதிப்போர்க்கு வல்விணை போம் என்று காத்திருந்த நாட்களில், பக்த பிரகலாதா பார்க்க நேர்ந்தது, ரோஜாரமணியின் தத்ரூப பரவச உச்சாடனங்களில் இருந்து எனக்கு நலம் தரும் சொல் நாராயணா என்று கண்டு கொண்டேன்...  தூனிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்று எனக்கும் ஜெயந்திக்கும் வாக்குவாதமே வந்திருக்கிறது.  ஜெயாத்தை இறந்தபோது இதே போல எங்களுக்குள் சண்டை வந்து பந்தலுக்கு முட்டுக் கொடுத்த கட்டிய மூங்கிலில் இருப்பாரா என்று கேட்க நானும் வெளியே வா நாராயணா என்று கண்ணை மூடி ஆட்டிய ஆட்டில் மூங்கில் நகர்ந்து பந்தல் சரிந்து துக்கம் விசாரித்துவிட்டு வாயில் துண்டின் முனையை வைத்திருந்தவர்கள் தலையில் விழுந்தது முழு கொட்டகையும். 

மெதுவாக அம்மாவின் பிரத்யேக ஆத்மசிநேஹிதியான மர்பி ரேடியோ மூலம் இலங்கையின் தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாவனம் ஒலிபரப்பிய பாடல்கள் தான் என் இசை ஊற்றுக்கண்ணை திறந்தது.  ஜிக்கி, பி.லீலா, பி.சுசீலா, மகாலிங்கம், திருச்சி லோகநாதன், சீர்காழி,  ஏ.எம்.ராஜா, கண்டசாலா, ஜெயராமன், ஸ்ரீநிவாஸ், டி.எம்.எஸ் என்று திரை இசை கானகந்தர்வர்கள் புகட்டிய புட்டிப்பால் குடித்து செழித்து வளர்ந்தது இசை ஆர்வம்.   கனவு கண்ட காதல், எனை ஆளும் மேரி மாதா, நீயே கதி ஈஸ்வரி, தன்னை தானே நம்பாதது, மதன மனோகர சுந்தர, சிவசங்கரி, சுந்தரி சௌந்தரி, என்று தணியும், வாராய், நானன்றி யார் வருவார்  என்று பழைய பாடல்களின் மதுரமான குரலிலும்,  மென்மையான இசையிலும் கிறங்கி கிடந்த நாட்களின் இறுதியில் நுழைந்த இளையராஜா, என் இசை ஆர்வத்தை இரட்டிப்பாக்கினார்.

வாடை வாட்டுது, உனக்கென தானே இன்னேரமா என்று புதிதாய் தொனித்த கிராமத்து குரலில் தொடங்கி சங்கத்தில் பாடாத கவிதை மற்றும் சிறு பொன்மணி என்று தொடர்ந்த இசை ராஜாங்கத்தில்  வழங்கிய பொற்கிழிகள் எத்தனை.  பின்னணி இசையும், பாடல்களில் வழியும் இசையும், புதிதாய் கேட்கும் வாத்திய இசையும் திரை இசைக்கு மிகவும் புதிதாய் இருந்தது.  எந்த ஒரு சராசரி ரசிகனும் ஏனையோர் பாடல்களுக்கும், இளையராஜாவின் பாடல்களுக்கும் இசை வித்தியாசங்களை அறிந்து ரசிக்க வைத்த பெருமை அவரையே சாரும்.  ஜெயச்சந்திரன், ஜானகி, தீபன் சக்கரவர்த்தி, சாய்பாபா, கலைவாணன், கிருஷ்ண சந்தர், ஜென்சி, சைலஜா, உமாரமணன், மலேசிய வாசுதேவன் என்ற பாடகர்களை பிரபல்யபடுத்தியதுடன், புது குரல்களையும் அறிமுகபடுத்தினார்.   இது என்னை போன்ற இசை அறிவற்ற ஒரு சாமான்யனுக்கும் இசை பற்றிய அறிவை, தெரிந்து கொள்ளும் ஆர்வத்தை வளர்த்தது. குடும்பத்தில் கொஞ்சம் இசை துளிகள் இருந்தாலும் அதை ஒன்று கூட்டி மேலும் வளர்த்தது இளையராஜாவும் இன்ன பிற விஷயங்களும் தான்...

எனக்கு பிடித்த இளையராஜாவின் பாடல்களை ஒவ்வொன்றாக பேசவேண்டும்...

8 comments:

அருள் சேனாபதி (பவானி நம்பி) said...

Mr.Raghavan,

Sounds like a very interesting series.

Keep it going.

Thanks

ரஹீம் கஸ்ஸாலி said...

இதையும் பாருங்க

காமராஜ் said...

vராகவன் அன்பின் ராகவன்.

இப்படி ஒரு பதிவை ஒவ்வொரு தரமும் நான் எதிர் பார்த்துக்கொண்டே இருந்தேன்.ஆர்வத்தின் முற்றுப்புள்ளியாய் வந்துவிட்டது.

லம்போதர லகுமிகரா... இளையராஜா இது உங்களுக்கு எப்படியோ எனக்கெல்லாம் இளையராஜா அறிமுகப்படுத்தியது தான். அதுவரைக்கும் பாட்டுப்படிப்பது எங்கள் ஊர் பொன்னுச்சாமி மாமாவும் மோட்டார் சுந்தராராஜ் மாமாவும் தெருவில் உட்கர்ந்து பாடுவது போல என்று மானாவாரியாய் நினைத்திருந்தேன்.

சினிமாப்பாடல்கள் படிப்பதற்கும் முறைப்படி சங்கீதம் படிக்கவேண்டும் என்பதை தெரியக்கொடுத்தவர்.

உனக்கெனெத்தானே இன்னேரமா. தமிழ் சினிமா இசைக்கு புதிய புதிய தொண்டைக்காரர்களை அறிமுகப்படுத்தியவர். பாரா வீட்டுகல்யாணத்தில் கும்கி 'ஒரே ஒரு முறையாவாது ஜென்சியைப்பார்த்துவிடவேண்டுமென்று சொன்னார். எனக்கு உள்ளுக்குள் அப்படி ஒரு ஜிலிர்ப்பு.
எனக்குப்பிடித்தது உனக்குப்பிடிக்கும் என்கிற சொல் கேட்கும் போது ஆணோ பெண்ணோ அப்படி ஒரு ஒட்டுதல் நேர்துவிடுகிறது. எழுத்தும் இசையும் இன்னும் கொஞ்சம் கூடுதல் பசை போடும்.

தையரத்தையா தையரத்தையா என்கிற படகு வலிக்கும் குரலோடு ஆரம்பிக்கிறது இந்தப்பதிவு.ம்ம்ம்.. ஜெயச்சந்திரன் பாடுகிற சித்திரச்செவ்வானம் பாட்டும்,கண்டேன் எங்கும் பூமகள் நாட்டியம் ஜானகியம்மாவும்,வாணியம்மாவும் போட்டிபோட்டு குழைத்திருப்பார்கள்.

பாடிவாங்க... ராகவன் காத்திருக்கிறோம்.

Unknown said...

அன்பு ராகவன்.,

அருகிலிருந்த நாட்கள் கடந்து தூரதேசம் போன பின்பு எழுத்துக்களை சங்கடத்துடன் விதைத்திருக்கிறேன்.

ஒரு போனாவது செய்திருக்கலாம் நானாவது அல்லது நீங்களாவது.

பா.ரா சொன்னப்பின்புதான் உங்களைக்குறித்து அறிய முடிந்தது.

வாழ்வு உலகெங்கும் அலைக்கழித்தாலும் இணையம் உங்கள் குரலை எனது வீட்டினுள் சவுகர்யமாய் அடைய வைத்திருப்பது குறித்து இப்போதும் சந்தோஷமே..

ஒரே ஒருமுறையான சந்திப்பிற்க்குப்பின்னான சங்கடங்கள் உங்களுக்கா அல்லது எனக்கா என்பது குறித்து இன்னமும் யோசனையுடனே காத்திருக்கிறேன்..

நட்பின் நேசக்கரங்களைக்கொண்டு நிதமும் மணலை அள்ளிக்கொண்டேயிருக்கிறேன் ராகவன்.
கையில் ஒட்டியதென்னவோ எண்ணிக்கைக்கு அடங்கியவைதான்.

பா.ரா வின் இல்லத்திருமணத்திலும் நீங்கள் வரமுடியாதது குறித்து வருத்தமே இருவருக்கும்.

பிற பிறகு.

எஸ்.கே said...

அருமையான பதிவு!

மணிஜி said...

தொடரட்டும் ஆவர்த்தனம்...அருமை ராகவன்

'பரிவை' சே.குமார் said...

அருமையான பகிர்வு...
இசைராஜாவின் பாடல்கள் பற்றி ஒவ்வொன்றாக பேசுங்கள்... ஆவலுடன் இருக்கிறோம்.

மாதவராஜ் said...

சனிக்கிழமையே படித்துவிட்டேன். எதோ லயம் உள்ளுக்குள் எழும்ப, பரவசமாயிருந்தது. அன்று மாலையே குற்றாலம் கிளம்பி நேற்று இரவுதான் சாத்தூர் வந்தேன். திரும்ப இப்போது படிக்கையிலும், அதே பரவசம். தொடருங்கள். பாடல், ராகம் ஒன்றாய் இருந்தாலும் சில குரல்களில் இந்த பரவசத்தை அனுபவிக்க முடியும் போலிருக்கிறது. பாடுங்கள்.. ராகவன்!